மூங்கில் நிலா -13

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் வசி "வேணி நம்ப எஸ்டேட்ட பார்த்தோம்ம்லே இன்னிக்கு உன் பூவேலிக்கு போகலாமா? ரொம்ப வருஷங்கள் ஆச்சு நான் அங்க வந்து.. பார்க்கணும் போல இருக்கும்மா. போகலாம்மா? " வசி கேட்கவும் வனி முதலில் தயங்கினாலும் பின் சரியென்றாள்.

காலை பசியாறலுக்குப் பின் இருவரும் பூவேலிக்கு பயணமானார்கள்.காலை கதிரவன் ஒளியில் மூடுபனி மெல்ல மெல்ல உருகி ஆவியாக, சாலை மருங்கில் வரிசை பிடித்து நிற்கும் தைல மரங்களின் வாசனை கலந்து பரவி வந்த காற்றை சுவாசித்தவாறு இருவரும் பூவேலியை வந்தடைந்தனர்.

வசிக்கு அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது மனதிற்குள் நிழல் மேகமாய் பழைய நினைவுகள் மன வானில் நழுவி ஓடின.அப்போதைக்கும் இப்போதைக்கும் நிறைய மாற்றங்கள் வனியால் வந்ததுதான். வனி கைக்கு மாறிய இந்த இடத்தை வனி நிறைய விஸ்தரித்திருந்தாள். நேர்த்தியான அவளுடைய சிறு குடிலும் மூலிகைகள் மணமும் வசிக்கு பிடித்துதான் இருந்தது.இவர்களைக் கண்டவுடன் பொன்னியும் ஓடி வந்து வரவேற்றாள். உடன் வசியைக் கண்டதும் வெட்கத்தோடு தலைக் குனிந்து கொண்டாள். முறையாய் வனி வசியை அறிமுகப்படுத்தவே எந்த வித கூச்சமுமின்றி சகஜமாய் பேச ஆரம்பித்தாள்.

வசிக்கு அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அந்த மூங்கில் தோட்டம். அவர்கள் காதலுக்கு வித்திட்ட அந்த மூங்கில் தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. வனியைக் கேட்டான்.
"டேய் கண்ணா அந்த மூங்கில் தோட்டம் இன்னும் இருக்கா? நான் பார்க்கலாமா? " வசி கேட்க,
வனி புன்னகையித்தாள்.

"இருக்கு வசி, வா போய் பார்க்கலாம் "

வசி கையைப் பற்றி அவள் குடிலுக்கு பின்னே சற்றே தள்ளியிருந்த மூங்கில் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.
பச்சை இலைகளை மலர்த்தி காற்றிற்கு ஏற்றாற்போல தலையாட்டும் மூங்கில் மரங்கள் வசியை வரவேற்பது போல இருந்தன.வசி அவன் கையால் நட்டு வைத்த மூங்கில் மரத்தைத் தேடினான்.அதிகம் அலையாமல் அது அவன் கண்களில் அகப்பட்டு விட்டது.வரிசையாய் நின்ற மூங்கில் மரங்களில் நடு நாயகமாய் நின்றிருந்த இரண்டு மூங்கில் மரங்களை வசி எளிதில் கண்டு பிடித்து விட்டான்.வசீகரன் - வனமோகினினு அந்த இரண்டு மரங்களின் மேல் வனி அவர்கள் பெயர்களை எழுதி வைத்திருந்தாள்.மெதுவாய் அம்மரங்களை வருடிக் கொடுத்தான்.

அவனுடைய முதல் காதல், முழுமை பெற முடியாமல் மொட்டில் கருகிப் போன அவனுடைய காதலின் சுவடுகளை சொல்லும் அந்த மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன.வளராமல் போன அவன் காதலின் சாட்சி இதோ அவன் கண் முன்னே. கலவையாய் அவனுள் எழுந்த நினைவுகள்.அவன் உணர்ச்சிகள் அவளுக்கு புரிந்தது போல இருந்தது. மௌனமாய் அவனை பார்த்தவள் முகத்தில் எந்த உணர்வுகளையும் அவனால் படிக்க முடியவில்லை.

அருகே சலசலத்த நீரோடையின் சத்தம் மட்டுமே இருவருக்கும் இடையில் ஒரே இராகமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படியோ சாதிக்கவேண்டியவள், தன் ஒருவனின் தவறான முடிவால் இப்படி நத்தை போல சுருண்டு விட்டாள். மனிதர்களை விட இவள் உணர்வுகளை பகிரும் இடம் இந்த செடி கொடிகள் என்று ஆகிவிட்டதே.உற்று நோக்கி அவைகளை அவள் இரசிக்கும் விதமே வெளிபடையாய் உலா வந்தவளின் குணம் தன்னை போலவே மாறிவிட்டதை வசியால் இப்பொழுது உணர முடிந்தது.
தான் வனி போல மாறிவிட்டத்தையும் வனி தன்னைப் போல பேசா மடந்தையாகி விட்டதும் வசிக்கு புரிந்தது.

யாருமே இல்லாவிட்டாலும் வனி இந்த பூவேலியோடு ஐக்கியமாகி விட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
தன்னால் அல்வா இவள் கனவுகளை தொலைத்து விட்டு அதன் சுவடுகளின் மிச்சங்களை வைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்.வலித்தது அவனுக்கு. அந்த நிலையிலும் தன் வனமோகினியை தனியே அல்லாட விடாமல் கல்யாணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தந்த ஷைலுவுக்கு மனதார நன்றி கூறினான்.

இயற்கைக்கு எதையும் மாற்றி அமைக்கும் வல்லமை உண்டு என்பதை வசி வனி அப்பொழுது புரிந்து கொண்டிருந்தனர். காதலோடு அவர்கள் நட்ட மூங்கில் மரங்களே வேர் விரவி மண்ணில் நிற்க, இவர்களை சேர்த்து வைக்கும் பணியை இயற்கை எப்படி செய்யாமல் போய் விடும்? இருவரும் அங்கிருந்த பெஞ்ச் சில் அமர்ந்தனர். வசிக்கு வனியின் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற வெறியே மனதில் எழுந்து விட்டது
.
அவனுடைய வனமோகினி உயிர்ப்புடன் உலா வர வைப்பது ஒரு துணையாய், தோழனாய் அவன் கடமையல்லவா? தன் வாழ்வினில் வண்ண பொடிகளை தூவி அழகு சித்திரம் செய்தவளின் வாழ்க்கை வெற்றுக் காகிதமாக விடுவானா என்ன? மனதில் எழுந்த எல்லா உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு வசி பேச ஆரம்பித்தான்.

"டேய் கண்ணா உன் பூவேலி ரொம்ப அட்டகாசம், இன்னொரு பிராஞ்ச் தொறக்கலாமா?

நம்ப தேயிலை பேக்டரிக்கு பக்கத்தில் நமக்கு சொந்தமான தேனீர் விடுதியும் இருக்கு.
சுற்றுப் பயணிகள் வந்து போகின்ற இடனாலே நம்ம தேயிலையை மார்க்கெட்டிங் பண்ற விதமாய் இலவசமாய் அங்கேயே தேனீர் கலக்கி குடுப்பாங்க. அங்க உன் பூக்களையும், வாசனைத் தைலங்களையும் விற்கலாம். சின்னதா ஸ்டால் கூட நம்ப கடையில் இருக்குடா.கூடவே நம்ம டீ பேக் பண்ணி அழகா பொக்கே மாதிரி உன் கற்பனைக் கேட்ப நீ செஞ்சி விக்கலாம். புது மாதிரி விஷயங்கள் டூரிஸ்ட்கு ரொம்ப புடிக்கும் கண்ணா " வசி குதூகலமாய் சொல்ல வனி க்கும் அந்த ஐடியா பிடித்திருந்தது.

என்ன பொன்னியோடு சேர்த்து வேலை செய்ய இன்னும் இரண்டு வேலையாட்களை கூட நியமித்துவிட்டால் போயிற்று. அவளுக்குமே அந்த மாற்றம் வேண்டியதாய் இருந்தது. சரியென்று தலையாட்டினாள். அதுவே வசிக்கு முதல் வெற்றி. மள மள வென்று காரியத்திலும் இறங்கினான்.அவன் அலுவலகத்தை ஓட்டினாற்ப் போல இருந்த அவனுடைய தேனீர் விடுதியில் வனிக்காக சின்னதாய் ஸ்டால் அமைத்துக் கொடுத்தான். இலவசமாய் சுவையான தேனீர் கிடைக்கும் இடமென்பதால் சுற்றுப் பயணிகள் இவன் இடத்தை முற்றுகையிட தவறியதே இல்லை. இப்பொழுது கூடுதலாய் வனியின் பூக்கடை சேரவும் அவர்களின் வருகையும் அதிகரித்தது.

விடுதியின் மேஜைகளின் மேல் வனி கண்ணாடி குவளைகளில் அடுக்கி வைக்கும் வண்ண மலர்களின் வாசனையும், குளிருக்கு இதமான தேநீரும் விற்பனையை அதிகரிக்க வைத்தது. தேயிலைகளை சிறு சிறு பொட்டலங்களாய் செய்து பொக்கே போல வனி வடிவமைத்து வைப்பது சகாய விலையில் விற்று தீர்ந்து விடும். பரிசு பொருள்களாய் இம்மாதிரி வித்தியாசமான பொக்கேகள் வாங்க பயணிகள் பெரும் ஆர்வம் காட்டினர். கூடவே அங்கே இங்கே அலைந்து திரியாமல் இயற்கையான மலர்களைக் கொண்டு வனி தயாரிக்கும் வாசனைத் தைலங்களும் கிடைக்க கிப்ட் மாதிரி வாங்கிச் சென்றனர். பல சமயங்களில் வசியே ஆபிஸ்க்கு வரும் முக்கிய தொழில் தொடர்பு புள்ளிகளுக்கு வனி தயாரிக்கும் பொக்கேகளைதான் பரிசளிப்பான்.

நாளுக்கு நாள் வனிக்கும் வியாபாரம் பெருகிக் கொண்டு வந்தது.வனியின் உதவியால் வசிக்கும் வியாபாரத்தில் நல்ல இலாபமே. பண நோக்கமின்றி வெறுமே தேங்கி நின்ற மனதை திசைத் திருப்ப தொடங்கிய தொழில் இப்பொழுது வனிக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி கொடுத்தது. சக மனிதர்களுடன் இயல்பாய் பேசி பழகவும் தொடங்கிய நிலையில் அவள் மனதின் இறுக்கங்களும் தளரத் தொடங்கியிருந்தன. அவள் முன்னேற்றத்தை ரசிக்கும் வசிக்கும் மனம் இப்பொழுது கொஞ்சம் அமைதி அடைந்தது.

வனிதான் வசியின் மனைவி என்று எல்லோருக்கும் தெரியும் என்பதால் ஊழியர்களும் அவளுக்கு விசுவாசமாய் உழைத்தனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN