உன்னுள் என்னைக் காண்கிறேன் 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் – 15

காலையில் எழுந்த தேவ் வழக்கம் போல் சீக்கிரம் கீழே இறங்கி வராமல் மித்ரா ருத்ராவுடன் ஸ்கூலுக்குச் சென்று விட்டாள் என்பதை அறிந்த பிறகே கிழே இறங்கி வந்தவன் அதே வேகத்தில் உணவை முடித்துக் கொண்டு கிளம்பியும் விட்டான்.

பள்ளியிலிருந்து வந்த மித்ரா நேரே வேதாவிடம் வந்தவள் “நான் கொஞ்சம் கோவில் வரை போய்ட்டு வரேன்மா” என்று சொல்ல,

எங்காவது இப்படி அவள் போகும்போது சொல்லிவிட்டு போவது பழக்கம் என்பதால் “சரி மித்ரா! போய்ட்டு வரும் போது ருத்ராவையும் அழைச்சிட்டு வந்திடு” என்றவரிடம் “இல்லமா, நான் கார்ல போகல. நித்திலாவோட ஸ்கூட்டியில தான் போறேன். சீக்கிரமே வந்துடுவன். பிறகுபோய் ருத்ராவ அழைச்சிட்டு வந்திடுவன்மா” சிறு யோசனைக்குப் பிறகு அவர் அனுமதித்தார்.

அன்று மித்ராவின் தாய் தந்தையற்கு திருமண நாள். அதனால் அவர்கள் நினைவாக இந்த நாளில் இவள் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போய் வருவது வழக்கம். அந்தப் பழக்கத்தை மாற்றாமல் இங்குவந்த பிறகும் போக நினைத்தாள். எப்போதும் காரில் போய் வருவது ஒரு மாதிரி மூச்சு முட்ட சற்று சுதந்திரமாக வெளியில் சுற்ற வேண்டும் என்ற ஆசையில் நித்திலாவிடம் அவள் வண்டியை வாங்கிக் கொண்டாள். இவள் இப்படி ஆசைப்பட்டு வண்டி கேட்ட நேரத்திலா அப்படி ஒண்ணு நடக்கணும்?...

அவள் போக விருக்கும் கோவில் ஊருக்குள் இல்லாமல் சற்றே ஊரை விட்டு தூரத்திலிருந்தது.

அந்தக் கோவிலில் ஈசன் தன் உடலில் சரிபாதியாக இடபாகத்தில் தன் உமையாளுக்கு இடம் கொடுத்து என்னுள் சரி பாதி இவள் என்று அனைவருக்கும் எடுத்துக் கூறி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுக்கும் கோலம். அது ஏன் குறிப்பாக அந்தக் கோவில் என்றால் அந்த அர்த்தநாரீஸ்வரரைப் போலவே தன் தாய் தந்தையர் இன்பம் துன்பம் என்று அனைத்திலும் சரி பாதியாகயிருந்து காதல் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதைத் தன் தந்தையின் நண்பர் மூலம் அறிந்தவள் தனக்கு விவரம் தெரியும் வயது வந்த பின் தாய் தந்தையரின் திருமண நாளில் அவள் எங்கிருந்தாலும் இப்படி ஓர் கோவிலைக் கண்டு பிடித்துச் செல்வாள்.

கோவையில் அப்படி ஒரு கோவில் இல்லையென்பதால் கூகுளில் தேட கிணத்துக்கடவு என்னும் ஊரில் அப்படிப்பட்ட கோவிலிருப்பதை அறிந்து அங்கு செல்லவும் முடிவெடுத்தாள். இதில் அவள் செய்த தவறு, அதைப் பற்றி யாரிடமும் விசாரிக்காமல் அங்கு போகிறேன் என்றும் சொல்லாமல் இருந்தது தான். பேச்சு வாக்கில் அந்தக் கோவிலையும் ஊரையும் பற்றி நித்திலாவிடம் கேட்டதோட சரி. நிந்திலாவிடம் ஏதும் சொல்லாமல் வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டாள். போகும் வழியெங்கும் கிராமத்தின் எழிலை ரசித்தவள் கோவில் வந்து விட வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில் மனதில் வலியும் சஞ்சலமும் வந்து சூழ்ந்தது. கருவறையில் இருந்த அர்தநாரீஸ்வரரைப் பார்த்ததில் தன் தாய் தந்தையரே அங்கு நிற்பதாகத் தோன்றியது மித்ராவுக்கு! மனதின் குமுறலில் அவர்கள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஏன் நான் பிறந்தேன்? அப்படியே பிறந்தாலும் ஏன் என்னை விட்டு நீங்க இரண்டு பேர் மட்டும் போனீங்க? என்னையும் கூட கூட்டிட்டுப் போயிருக்கலாம் இல்ல? இன்று நான் யார் யார் கிட்ட எல்லாம் எப்படி எல்லாம் அசிங்கப் படறேன் தெரியுமா? ஆமா…. எதுவுமே தெரியாதது மாதிரி உங்க கிட்ட சொல்றனே?! நீங்க இரண்டு பேரும் நான் படற அசிங்க அவமானத்த எல்லாம் பார்த்துட்டுத் தான இருக்கீங்க? மன சஞ்சலத்தில் மத்தவங்க முன்னாடி கூனிக்குறுகி கேவலப்பட்டு நிக்கறன்.

இவ்வளவு நடந்தும் சாகணும்னுற எண்ணம் மட்டும் வர மாட்டுது. நான் என்ன கோழையா? சாவைத் தேடி போகாம அது என்னைத் தேடி வரணும்னு நினைக்கிறேன்! எனக்கு எதுவும் வேண்டாம் இந்த மனசஞ்சலத்தில் இருந்தும் தேவ்விடம் இருந்தும் விடுதலை கிடைத்தால் போதும். தேவ்வை விட்டு விலகி நான் தூரமா எங்காவது போய்டணும். அதற்குப் பிறகு அவன் முகத்திலோ அவன் சம்பந்தப்பட்ட வேறு யார் முகத்திலும் நான் முழிக்கவே கூடாது. அதற்கு மட்டுமாவது வழி செய்யுங்க’ என்று தன் தாய் தந்தையரிடம் மனதால் கேள்விகள் கேட்டு சண்டைப் போட்டுக் கொண்டு தன் வேண்டுதலை வைத்தாள்.

அவள் கண்ணில் கண்ணீரைக் கண்ட குருக்கள் “ஒண்ணும் வருந்தாதடா கொழந்த! ஸ்வாமிய நன்னா சேவிச்சிட்டியோனோ?

இனிமே உனக்கு நல்லது தான் நடக்கும். ஷேமமா இருப்ப” என்றார்.

“ம்ம்ம்” என்றவள் ருத்ராவை அழைத்து வர வேண்டும் என்பதால் அவரசமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள் மித்ரா.

சற்று தூரம் வரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஊரை விட்டு சிறிது தூரம் தாண்டி குறுகிய தார் ரோடு வந்ததும் சற்று வேகம் எடுத்து இடது பக்கமாக அவள் போய்க் கொண்டிருக்க, பின்னால் ஒரு காரும் அதற்கும் பின்னால் ஒரு அரசுப் பேருந்து ஒட்டுமொத்த ஊரையும் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்தில் அவ்வளவு கூட்டம் என்பதால் வந்தது வினை. பேருந்தின் முன்பக்க இரண்டு சக்கரங்களில் ஒன்று வெடித்து பஞ்சராகிக் கட்டுப்பாட்டை இழந்து டிரைவர் கையில் அடங்காமல் தாறு மாறாக வேகம் எடுத்து ஓடி, அந்தப் பேருந்துக்கு முன்பு சென்று கொண்டிருந்த காரை அதே வேகத்துடன் இடித்தது.

அதே வேகத்தில் அந்த காருக்கும் முன்னால் சென்று கொண்டிருந்த மித்ராவின் வண்டியின் பின் சீட்டை அந்தக் கார் தாக்க, இடது பக்கமுள்ள சாலையோர மண் மேட்டில் தேய்த்துக் கொண்டு போய் விழுந்தாள் மித்ரா. அவளை இடித்துக் கீழே தள்ளிய கார் வலது பக்கமாக ஓடிச் சென்று சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி நின்றது.

இடது பக்கமாகச் சென்ற கார் வலது பக்கமாக உள்ள மரத்தில் மோதி நின்றதால் அதே வலது புறமாக எதிர் திசையில் கொஞ்சம் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி டிரைவர் நிலைமை உணர்ந்து லாரியை நிறுத்துவதற்குள் பேருந்தை ஓர் பலத்த சத்தத்துடன் இடிக்க, அவ்வளவுதான்...

கண்மூடி கண் திறப்பதற்குள் பேருந்து ஓர் குலுக்கலுடன் குப்புற விழுந்து கிடந்தது. பேருந்து தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதே என்னமோ விபரீதம் நடக்கப் போகிறது என்றறிந்த படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிலர் கீழே குதித்தனர். ஆனால் டேங்கர் லாரியை மோதியதில் இன்னும் சிலர் தூக்கி எறியப்பட குப்புற விழுந்ததில் பேருந்தில் இருந்த மொத்த பேரின் நிலையும் முடிந்து விட்டது.

இடித்ததில் தேய்த்துக் கொண்டு பல உருள்கள் உருண்டு மண் மேடையில் விழுந்து கிடந்த மித்ரா, தனக்கு என்ன நடந்தது என்று அறியவே சிறிது நேரம் பிடித்தது. பின் தன்னைச் சுதாரித்து எழுந்து பார்த்தால், அங்கே பெரிய கோர விபத்து!

எங்கும் அழுகையும் கூக்குரலும் முணுங்கல்களும் எதிரொலித்தது. பலர் கை கால் தலை முகம் என்று எல்லா பாகங்களில் அடிபட்டும் இன்னும் சிலர் உறுப்புக்களை இழந்த நிலையிலும் கிடந்தனர். அந்த சாலையே ரத்த ஆறு ஓடுவது போல் இருந்தது. அவளுக்கே கை கால் முகம் எல்லாம் சிராய்ப்பு தான். ஆனால் காலில் மட்டும் சற்று பலத்த அடி. எழுந்து நின்று சற்று அழுத்தி ஊன்றத்தான் முடியவில்லை.

அதற்குள் அந்தச் சாலையில் காரிலும் பைக்கிலும் சென்றவர்கள் போக்குவரத்து தடைப்பட வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு பரபரப்புடன் ஓடி வந்து அனைவருக்கும் உதவினர். சற்றுத் தன்னை நிதானப்படுத்திய மித்ரா அங்குச் சென்று பார்த்ததில் தன்னையும் தன் உடல் நிலையையும் ருத்ராவையும் மறந்தாள்.

தேவ்வுக்குத் தகவல் சொல்லித் தனக்கு விபத்து நடந்து தான் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டேன் என்ற தகவலைச் சொல்லவும் மறந்தாள். அந்த விபத்து நடக்கும் போது மணி மதியம் பன்னிரண்டு முப்பது. அங்கு உதவி செய்பவர்களில் இவளும் ஒருத்தியாக ஓடிச் சென்று உதவி செய்தாள்.

இங்கு இப்படியிருக்க அங்கு தேவ்வின் வீட்டில் ஒன்றும் புரியாத பரபரப்பு அனைவருக்கும். எப்போதும் மித்ராவே வேதாவைத் தேடி வந்து நேரமாகிவிட்டதை உணர்த்தி ருத்ராவை அழைத்து வரச் சென்று விடுவாள். அன்று வேதாவும் ஏதோ வேலை என்று வெளியே சென்று விட எப்போதும் வரும் மித்ரா இல்லாமல் ருத்ராவை எப்படி அழைத்து வருவது என்ற குழப்பத்தில் இருந்த டிரைவரை அந்த வீட்டை நிர்வகிப்பவரே ருத்ராவை அழைத்து வரச் சொல்ல விட்டார். மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்த வேதா, மித்ரா இல்லை ஆனால் ருத்ரா வந்து விட்டாள் என்பதை அறிந்தவர் தேவ்வுக்குத் தகவல் சொல்ல அழைத்தவர், அவன் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்க அழைப்பு எடுக்கப் படவேயில்லை. அவனுடைய தனிப்பட்ட நம்பருக்கு அழைக்க அது அவன் பி.ஏ ஜீவாவிடம் இருந்தது. வேதா என்று பார்த்தவன் தேவ்விடம் மொபைலை நீட்ட.

அதை வாங்கியவனோ “சொல்லுங்க சித்தி என்ன அவசரம்?”

“அப்பு காலையில் வெளியே போன மித்ராவ இன்னும் காணலப்பா. ருத்ராவையே டிரைவர் தான் கூட்டிட்டு வந்தார்”

“என்ன சித்தி என்ன சொல்றிங்க? மித்ராவக் காணோமா?” அவளைக் காணவில்லை என்ற படபடப்பில் அவர் சொன்னதையே திரும்ப கேட்கிறோம் என்பதை அறியாமல் இவன் கத்த அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அவன் முகமே பார்த்தனர்.

தான் இருக்கும் இடம் கருதி சற்றுத் தனிவானக் குரலில், “எக்ஸ் க்யூஸ் மீ ஜெண்டில்மென், ஐ ஹாவ் அன் அர்ஜன்ட் வொர்க். மை அசிஸ்டெண்ட் வில் கண்டினியூ. ப்ளீஸ் யூ கேரி ஆன்” என்றவன் “மீதியை நீ பார்த்துக்க ஜீவா” என்று சொல்லி எழுந்து விட.

அதற்குள் அங்கு எந்த ஒரு சத்தமும் இல்லை என்றவுடன் பல முறை “ஹலோ… ஹலோ… லைன்ல இருக்கியா அப்பு?” என்று அவர் பலமுறை அழைக்க.

தன் அறைக்கு வந்தவன் “சித்தி நான் லைன்ல தான் இருக்கேன். இப்ப சொல்லுங்க” என்று தொடர்ந்தான்.

“என்ன அப்பு சொல்ல சொல்ற? ஐய்யோ… காலையில் இருந்து மித்ராவைக் காணோம்பா” என்றார் படபடப்பாக.

எந்த ஓர் சாதாரண விஷயத்திலும் சற்று பரபரப்பாக இருக்கும் வேதா இப்படிப்பட்ட விஷயத்தில் அதிக படபடப்புடன் இருந்தார். அவனுக்கும் சற்று படபடப்பு தான் என்றாலும் அவரின் படபடப்பைக் குறைக்கும் விதத்தில் பேசத் துவங்கினான்.

“சித்தி! ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… நீங்களா இப்ப எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. முதல்ல பக்கத்துல ஜக்கில் தண்ணி இருந்தா மெதுவா குடிச்சிட்டு வாங்க. நான் லைன்லையே இருக்கேன்” என்றவனிடம்.

“சரி அப்பு” என்றவர் அவன் சொன்னபடியே செய்தவர் “ம்… இப்ப கேளுப்பா”.

“காலையில் எத்தனை மணிக்கு மித்ரா வெளியே போனா?”

“ஒன்பதே முக்கா இல்லனா பத்து மணி இருக்கும். கோவிலுக்குப் போறதா என் கிட்ட தான் சொல்லிட்டுப் போனா”

“சரி. ருத்ராவை யாரு கூட்டிட்டு வந்தா?”

“டிரைவர் ஜெம்ஸ்பா!. நம்ம ஜட்ஜ் வீட்டிலிருந்து அவர் வைஃப் போன் பண்ணி என்ன வரச் சொன்னாங்க. அவங்களால தான் நடக்க முடியாதே. அதான் நான் போய் பார்த்துட்டு வந்தேன். இதுக்கு முன்னாடியும் அந்தப் பொண்ணு போய் இருக்கு. ஆனா கரெக்டா வந்திடும். இப்ப தான் இப்படி ஆகிடுச்சி” என்று அவன் கேட்காத தகவலையும் தந்தார்.

“சரி சரி சித்தி நீங்க டென்ஷன் ஆகாதிங்க. நீங்க வர்ரதுக்குள்ள அவ வீட்டுக்கு வந்துட்டு இருப்பா. அவ ரூம்ல இருக்காளானு பார்த்தீங்களா?”

“இல்லப்பா”

“முதல்ல அங்க பாருங்க. இல்லனா வீட்டில் வேற எங்கனா கூட இருக்கலாம். ஸோ தேடிப் பாருங்க. நான் இதோ வந்திடறேன். அதுக்கு முன்னாடி எந்த டிரைவர் கூட்டிட்டுப் போனானு சொல்லுங்க. நான் என்ன ஆச்சின்னு அவனுக்குக் கால் பண்ணி பேசிப் பார்க்கறேன்”

“அச்சோ… அப்பு அது தானே இல்ல. அந்தப் பொண்ணு நித்திலாவுடைய ஸ்கூட்டிய இல்ல எடுத்துட்டுப் போய் இருக்கு. அதனால் தானே பயப்படறேன்”

“வாட்?…” இருக்கையை விட்டு எழுந்தே விட்டான் தேவ். இவ்வளவு நேரம் அவள் காரில் தான் போய் இருப்பா என்ற தைரியத்தில் இருந்தவன் இப்போது அதை இழந்தான். “என்னது அவ மட்டும் தனியா டூவீலர்ல போய் இருக்காளா? யாரக் கேட்டு அனுப்பினீங்க சித்தி? என் கிட்ட கேட்கணும்னு உங்களுக்குத் தோனவே இல்லயா” என்று அவன் குரல் பதட்டத்தோடு ஒலிக்க…

“இல்ல அப்பு… அது வந்து…” என்று அவர் இழுக்க…

“சரி சரி இதோ நான் கிளம்பிட்டேன். அதற்குள் நீங்க நான் சொன்ன படி தேடிப் பாருங்க” என்றவன் அழைப்பைத் துண்டித்து அவசர அவசரமாக லிஃப்டில் கீழே வந்தவனுக்குத் தன் காரை நெருங்குகையில் ‘தன்னால் காரை ஓட்ட முடியுமா?’ என்ற எண்ணம். காரணம் பதட்டத்தில் அவன் கைகள் அப்படி நடுங்கியது. ‘அவள் எங்கும் போய் இருக்க மாட்டாள். வீட்டில் தான் இருப்பாள்’ என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டான்.

அடித்துப் பிடித்து வீடு வந்து சேர. வாசலிலே நின்றிருந்தவரை பார்த்தவன் “என்ன சித்தி தேடிப் பார்த்தீங்களா? வீட்டில் தானே இருக்கா?” என்று அவன் கேட்கும் போதே ‘ஆமாம் இருக்கா’ என்று சொல்ல மாட்டாறா என்று அவர் முகம் பார்க்க. ஆனால் அவர் “இல்ல அப்பு எங்கேயுமே இல்லப்பா. நான் எல்லா இடத்திலும் தேடிட்டேன்பா” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறியவரிடம்.

“இல்ல சித்தி நீங்க சரியா தேடி இருக்க மாட்டிங்க. இருங்க நான் தேடிப் பார்த்துட்டு வரேன்” என்று சொன்னவன் அவள் அறை மட்டும் இல்லாமல் எல்லா அறையிலும் தேடிப் பார்த்தவன் கடைசியாக மொட்டை மாடியில் இவர்கள் போட்டிருக்கும் கார்டனுக்குச் செல்லவிருக்கும் நேரம் விஸ்வா வர, அவனிடம் அனைத்தும் கூறினார் வேதா. அச்சோ.. அந்தப் பெண்ணுக்கு என்ன ஆச்சோ என்று வருந்தியவன் பின் தேவ்வைத் தேடிப் போக.

அவனோ மேலே செல்ல இருப்பதைப் பார்த்து “இங்க என்னடா செய்ற? ஆமாம் உன் போன் எங்க? கால் பண்ணா ஃபுல் ரிங் போகுது ஏன் எடுக்கல” என்று விஷ்வா கேட்கத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்த தேவ் “ச்சூ… சைலண்ட் மோடில் இருக்குடா”

“முதல்ல அதை மாத்துடா”

அதை மாற்றியவன் மறுபடியும் மேலே செல்ல இருந்தவனைத் தடுத்து “என்ன தேவ் செய்துட்டு இருக்க?”

“மித்ராவக் காணோம்டா... அதான் தேடிட்டு இருக்கேன்”

அவன் சொன்ன பதிலில் ‘இவனுக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறான்? ஏதோ சரியில்லை’ என்று மனதில் நினைத்தவன்.

“ஆன்ட்டி கிட்டப் பேசிட்டுத் தான் வரேன். வெளில போன மித்ரா இன்னும் வரல. ஸோ நாம வீட்டுக்குள் தேடக் கூடாது. வெளியே தான் தேடணும்”

“இல்லடா ஒரு வேளை அவ வீட்டுக்குள்ளயே இருந்தா?” என்று கூறி மறுபடியும் அவன் திரும்ப,

“டேய் மித்ரா வெளியே போனது டூவீலரில ஸோ நான் வெளியே தான் தேடணும். ஆன்ட்டி எல்லா இடத்திலும் தேடிட்டாங்களாம். ஃபர்ஸ்ட் டூவீலர் இருக்கானு பார்த்தியா?” என்று விஷ்வா அதட்ட.

“இல்லடா…” என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே போக.

“இப்ப எங்கடா போற” என்றுமறுபடியும் அதட்டலாகக் கேட்டவனிடம்.

“டூவீலர் இருக்கானு பார்த்துட்டு வரேன்” என்றான் பரிதாபமாக.

“டேய் அதெல்லாம் நானும் ஆன்ட்டியும் பார்த்துட்டோம், வண்டி இல்ல இங்க வா”

‘ஆமாம் இவனுக்கு என்ன ஆச்சி? ஏன் இப்படி ஃபிரீஸ்ஸா இருக்கான்…’ என்று நினைத்துக் கொண்டு அவன் கையைப் பிடித்து இழுத்தவன் அங்கிருந்த வேதாவிடம் “ஆன்ட்டி கொஞ்சம். உள்ள வாங்க” என்றவன் வேதாவின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

“ஆன்ட்டி கொஞ்சம் நல்லா யோசிச்சிப் பார்த்துச் சொல்லுங்க. எந்தக் கோவிலுக்குப் போறனு சொன்னாளா? இன்று இல்லைனாலும் இதுக்கு முன்னாடி எப்பவாது ஏதாவது ஓர் கோவிலைப் பற்றி விசாரித்தாளா? இல்லனா அவ எப்போதும் வழக்கமாப் போகும் கோவிலையாவது சொல்லுங்க” என்று விஷ்வா கேட்க தேவ் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.

விஷ்வா கேட்ட கேள்விக்கு எல்லாம் வேதா ‘இல்லை தெரியாது’ என்று மட்டுமே பதில் சொல்ல..

“என்ன தெரியாது? வீட்டிற்கு வந்த ஒருத்தி எங்க போறா என்ன செய்றா என்ன பேசறானு எதுவும் தெரியாது. ஆனா அவ வெளியே போறனு சொன்ன உடனே அனுப்பி வைக்க மட்டும் தெரியும். மறுபடியும் உங்ககிட்ட அதே கேள்வியைக் கேட்குறேன், யாரைக் கேட்டு அவளை வெளியே அனுப்பினீங்க? அதுவும் டூவீலர்ல” என்று தன் சித்தியிடம் கத்திய தேவ்வின் கண்களில் நீர் கோர்த்துப் பார்வையை மறைத்தது.

அதை உணர்ந்தவன் ‘நானா? நானா இப்போது அழுவது! பல சிக்கல்களைச் சமாளித்து எதையும் எதிர்த்து நின்று ஜெயித்து வாழ்க்கையில் பல வெற்றிகள் கண்ட நானா கலங்குவது? அதுவும் யாரோ ஓர் பெண்ணுக்காக! ஏதோ சிறிது காலம் என் வாழ்வில் இருந்து விட்டுப் போகப் போகும் அவளுக்காகவா? என் தந்தையின் இறப்புக்குப் பிறகு இன்று தானே நான் அழுகிறேன்? அதுவும் மித்ராவுக்காக!

அப்போ அவ என் குடும்பத்தில் ஒருத்தியா? அந்தளவுக்கு அவள் என் மனதில் இடம் பிடித்து விட்டாளா? இது தான் காதலா? நான் அவளைக் காதலிக்கிறேனா? என்னால் மேல் கொண்டு எதையும் யோசிக்க முடியாமல் என் மூளை வேலை நிறுத்தம் செய்ய இப்போது நான் கண்ணீர் விட என்னைத் தூக்கி வளர்த்த என் சித்தியை நான் திட்ட என்று என் இயல்புக்கு மீறி நான் நடந்து கொள்வது எல்லாம் மித்ராவைக் காணவில்லை என்பதற்காகவும் அவளுக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டத்தில் தான்...

நான் ஏன் பதற வேண்டும்? நான் ஏன் துடிக்க வேண்டும்? அப்போ அவள் எனக்கானவள், என் மனைவி! அதான் இந்த துடிதுடிப்பு… எஸ், ஐ லவ் ஹெர்…’ ஏன் ஏன் என்று பலவாறு மனதில் யோசித்துக் காதல் தான் என்ற முடிவுக்கு வந்தான் தேவ்.

பின் அவனே “அவளுக்கு இந்த ஊர்ல யாரையும் எந்த இடமும் தெரியாது சித்தி. இப்ப அவளைப் பற்றி எதுவும் தெரியாம நான் எங்க போய் அவளைத் தேடுவேன்?” என்று ஒண்ணும் புரியாத குழந்தையாக அழுது கொண்டே அவன் கேட்க.

இப்படிப் பட்ட தேவ் புதுசு வேதாவுக்கு! ‘என் மகனா? என் பிள்ளையா இப்படிக் கலங்குவது?’ என்று பதறியவர் ”அப்பு அப்பு ஒண்ணும் இல்லைப்பா. மித்ராவைச் சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்பா. நீ கலங்காதடா ஐயா” என்று தேவ்வை ஒரு குழந்தையைப் போல் தன் மார்போடு அணைத்து ஆறுதல் கூறினார் வேதா.

விஷ்வாவே திகைத்துத் தான் போனான். தேவ்வின் நடவடிக்கையைப் பார்த்ததில் அவனுக்கும் குழப்பம் மற்றும் வியப்புதான்.
எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி உடைந்து அழுவது. ‘தன் எதிரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் தேவ்வா இப்படி சின்னக் குழந்தையைப் போல் தவிப்பது?’ என்று மனதில் யோசித்துக் குழம்பியவன் பின் அவனைத் தேற்றும் முயற்சியில் இறங்கினான்.

“டேய் என்னடா இப்போ எதுவும் தெரியலனாலும் என்னடா? அதான் வண்டி நம்பர் இருக்கில்ல... அதை வைத்துப் போலீசில் சொல்லி இன்னும் நமக்குத் தெரிந்த ஆட்களிடம் சொல்லித் தேடச் சொல்லலாம்.

ஆன்ட்டி அந்த வண்டி சம்பந்தப்பட்ட பேப்பர்ஸ் கொடுங்க”

“அவங்களுக்குத் தெரியாது இரு இதோ நான் எடுத்துட்டு வரேன். ஏதோ இந்த வழியாவது இருக்கே” என்ற தைரியத்தில் அவன் எழுந்தான்.

வேதாவின் அறையிலிருந்து வெளியே வரும் போது “அப்பு” என்று ஓடி வந்து தேவ்வின் காலைக் கட்டிக் கொண்டாள் ருத்ரா. அப்போது தான் தேவ்வுக்கு ருத்ராவின் நினைவே வந்ததது. ஆனால் எப்போதும் மகள் இப்படி ஓடி வந்து காலைக் கட்டினால் தூக்கிக் கொஞ்சி விளையாட்டுக் காட்டுபவன் இன்று எதுவும் செய்யாமல் ஏன் அவளைத் தொடக் கூட இல்லாமல் அவளின் முகம் பார்த்து நின்றவனை விசித்திரமாகப் பார்த்தனர் வேதாவும் விஷ்வாவும். பின் அவன் மனநிலை உணர்ந்து ருத்ராவைத் தூக்கிக் கொண்டார் வேதா.

அந்த பேப்பர்ஸுடன் இருவரும் டி.ஐ.ஜி ஆபீஸ்ஸூக்குச் சென்றனர். அவர்களை அமரவைத்து அனைத்தும் கேட்டறிந்தவர் “சரி அந்தப் பெண் நித்திலாவுடைய வண்டிய தான் எடுத்துப் போய் இருக்கு. அப்ப நித்திலா கிட்ட ஏதாவது சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கு இல்ல? ஸோ நீங்க நித்திலா கிட்ட கேட்டிங்களா?” என்று அவர் கேட்க அப்போது தான் அவர்கள் இருவருக்கும் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லையே என்று உரைத்தது.

“இல்ல அங்கிள்” என்று இருவரும் ஒருசேரக் கூறினர்.

“என்ன ஆச்சி தேவ்? வாட்ஸ் ராங் வித் யூ? இது சாதாரண விஷயம். இதக் கூட ஏன் இன்னும் நீ செய்யாம இருக்க? மனைவி என்ன ஆனாளோ என்ற பயமும் பதட்டமும் இருக்கும் தான். அதற்காக இப்படியா?” என்று அவன் குணமறிந்து கேட்டவருக்கு.

அவன் எதுவும் சொல்லாமல் தலை குனிய,

“இல்ல அங்கிள், மித்ராவக் காணோம்னவுடன் கொஞ்சம் பயந்துட்டான். அவங்க தாத்தாவுக்கு வேற நாளைக்குப் பதில் சொல்லணும். அதான் இந்த விஷயத்த மறந்துட்டான்” என்றான் விஷ்வா அவன் சார்பாக.

“டோன்ட் வொர்ரி தேவ்! நீ நித்திலா கிட்ட கேளு. நானும் இங்க சிக்னல்ல இருக்கற எல்லா போலீஸ்கிட்டையும் மெசேஜ் பாஸ் பண்ணி தேடச் சொல்றேன்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

வெளியே வந்தவர்கள் காரிலமர்ந்து நித்திலாவை அழைக்க அது ரிங் போனதே தவிர எடுக்கவில்லை. பலமுறை முயன்றும் இதுவே நடக்க “சரி வா நாம் காலேஜிக்கே போய் பார்ப்போம்” என்றான் விஷ்வா. காலேஜில் நித்திலாவைப் பார்த்து விவரம் கூற, பதறியவள் தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே என்றவள் பின் சற்று யோசித்து “ஆனா ரெண்டு நாள் முன்னாடி அண்ணி கிணத்துக்கடவு ஊர்ல இருக்கிற ஒரு கோவிலைப் பற்றியும் அதுக்குப் போறதுக்கான வழியும் கேட்டாங்க.

ஆனா அங்க போகப் போறேனு ஒண்ணும் சொல்லலையே. அண்ணி எங்க போய் இருப்பாங்க அண்ணா? எனக்குப் பயமா இருக்கே” என்று அழுதவளை விஷ்வா தான் சமாதானப்படுத்தினான்.

அந்த இடத்தை விட்டு விறு விறு என்று காருக்கு வந்த தேவ். ‘என்ன தான் நினைச்சிட்டு இருக்கா இவ மனசுல? ரெண்டு நாளைக்கு முன்னாடி அந்த இடத்தைப் பற்றி நித்திலாகிட்ட விசாரிச்சி இருக்கா. நேற்று வண்டி கூட கேட்டு இருக்கா. ஆனா என் கிட்ட சொல்லிட்டுப் போகணும்னு மட்டும் அவளுக்குத் தோனல இல்ல...

இங்க ஒருத்தன் தேடுவானே என்று இல்லாமல் ஊர் சுற்றிப் பார்க்கப் போய்ட்டா. இதோ வந்துட்டே இருக்கேன்... இரண்டு அறை விட்டு இவ்வளவு நேரமா உனக்கு? அப்படி என்னடி வேலைனு கேட்கறேன்’ என்று சிந்தனையில் இருக்க விஷ்வா வந்து காரை எடுத்தான்.

“தேவ் ஃபர்ஸ்ட்டு டி.ஐ.ஜி அங்கிள் கிட்ட நித்திலா சொன்ன விவரத்தைச் சொல்லிடு” என்று கூற அவரை அழைத்தவன் விவரம் கூற, அவரோ “தேவ் என்னடா சொல்ற? அந்த ஏரியாவா? இன்று மதியம் அங்க மிகப்பெரிய ஆக்ஸிடென்ட் ஒண்ணு நடந்ததே. அந்த ஆக்ஸிடென்ட்ல நிறைய பேர் இறந்துட்டாங்களே!…”

அவ்வளவு தான் இது மட்டும் தான் தேவ்வின் காதில் விழுந்தது. “இல்ல நோ...” என்ற கத்தலுடன் தன் மொபைலை நழுவவிட்டான் தேவ்.

பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்வா “என்னடா ஆச்சி? அங்கிள் அப்படி என்ன தான்டா சொன்னார்?” என்று அவனை உலுக்க அவன் கேட்டதற்கு பதில் சொல்ல கூடிய நிலைமையில் தேவ் இல்லை “இல்ல என் மித்ராவுக்கு எதுவும் நடந்து இருக்காது. அவ அந்த இடத்துக்கே போய் இருக்க மாட்டா. என்ன விட்டுட்டு அவ போக மாட்டா. அவளுக்கு எதுவும் நடந்திருக்காது. என் மித்ராவுக்கு எதுவும் நடந்திருக்காது. என் மித்ராவுக்கு எதுவும் நடந்திருக்காது...” என்று இதையே உருப்போட.

பிறகு தேவ் மடியிலிருந்த மொபைலை எடுத்த விஷ்வா இன்னும் டி.ஐ.ஜி லைனில் இருப்பதை அறிந்து “அங்கிள், தேவ் கிட்ட இப்போ என்ன சொன்னீங்க? என்ன நடந்தது?” என்று கேட்க.

அனைத்தும் மீண்டும் சொன்னவர் “ஸோ நீங்க ரெண்டு பேரும் உடனே அங்க போங்க. ஃபர்ஸ்ட்டு மித்ரா அங்க போனாளானு நமக்குத் தெரியணும். அதுக்குள்ள நான் விபத்து நடந்தவங்களை எல்லாம் எந்த ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்காங்கனு கேட்டுச் சொல்றேன். ஸோ கோ ஃபாஸ்ட், ஹரி அப் விஷ்வா…” என்று முடுக்கினார்.

“எஸ் அங்கிள்” என்று கூறி போனை வைக்க.

“என் மித்ரா அங்க போய் இருக்க மாட்டா. என் மித்ராவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது” என்று பல முறை இதையே சொல்லிக் கொண்டிருந்த தேவ்வை “இல்லடா மித்ராவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. அவ அங்க போய் இருக்க மாட்டா நான் சொல்றதக் கேள்” என்று அவனைக்கு தைரியம் அளித்தவன் மிகவும் வேகமாக காரை ஓட்ட.

விபத்து நடந்த சாலைக்கு வந்து விட்டார்கள். சற்று தூர இருந்தே பார்த்ததில் சாலையின் ஓரத்தில் லாரியும் பஸ்சும் மிகவும் நசுங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தன. ஆங்காங்கே இன்னும் மக்கள் நின்று கொண்டும் அழுது கொண்டும் சிலர் தகவல்கள் வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் இருந்தனர். ‘மூன்று மணி நேரம் கடந்துமே இப்போது தான் விபத்து நடந்தது போல் இந்த இடம் இருக்குனா மதியம் எப்படி இருந்திருக்கும்…’ என்ற எண்ணம் இருவர் மனதிலும் வந்தது.

வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தி விட்டு விஷ்வா இறங்க தேவ் இறங்கவேயில்லை. ஆனால் என் மித்ரா என் மித்ரா என்ற சொல்லை மட்டும் அவன் நிறுத்தவேயில்லை.

தேவ்வின் பக்கம் வந்த விஷ்வா “இறங்கு தேவ்” என்று சொல்ல,

அப்போதும் அசையாமல் நிலை குத்தியப் பார்வையுடன் அமர்ந்திருந்தான் தேவ்.

“டேய் உன்ன தான்டா... இறங்கு”

“இல்லடா மித்ரா இங்கு வந்திருக்க மாட்டா. நான் வரல... நீ வந்துடு நாம் போய்டலாம். என் மித்ராவுக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று கெஞ்ச.

“அடேய் லூசு... மித்ராவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காதுதான். ஆனா அதை அங்க போய் பார்த்து உறுதிப் படுத்தினா தான மேல் கொண்டு நாம் தேட வசதியா இருக்கும்? ஸோ இறங்கு”

“இல்ல நான் வரல... நீ மட்டும் போ”

“முடியாது நீயும் வா. இல்லனா நான் இப்படியே வேற வண்டி புடிச்சி வீட்டுக்குப் போறேன். இதுக்கு மேல் நீ ஆச்சி உன் மித்ராவாச்சி” என்று அவன் நடையை எட்டிப் போட..

“டேய்.. டேய்… வேணாம்டா. இருடா... நானும் வரேன்” என்று கூறி அவசர அவசரமாகக் காரை விட்டு இறங்கினான் தேவ். பின் இருவரும் நடந்து சென்று பார்க்க அந்த இடமே போர்க்களம் போலிருந்தது. ஒரு இடத்தில் கார் அப்பளமாக நசுங்கியிருக்க. அதன் பக்கத்தில் மித்ராவுடைய வண்டி நிற்பதைப் பார்த்த தேவ் நடுங்கும் விரல்களால் அந்த இடத்தை விஷ்வாவுக்குச் சுட்டிக் காட்ட.

“அது நம்ப வண்டியாடா தேவ்?”

“……’

அந்த வண்டியிடம் சென்று பார்த்ததில் கண்ணாடியும் லைட்டுகளும் நொருங்கி வண்டி பலத்த அடி வாங்கி ரொம்பவும் சேதமைடைந்து இருந்தது. அங்கிருந்த காவல் துறை அதிகாரியிடம் சென்று அந்த வண்டியை ஓட்டி வந்தவர் ஒரு பெண் என்றும் இப்போ அவர் நிலைமை என்ன ஏது என்று விஷ்வா கேட்க அவரோ “என்ன சார் இது கேள்வி? நாங்களே விபத்து நடந்த பிறகு தான் வந்தோம். இங்கு எவ்வளவோ பேர் விபத்தாகி இருக்காங்க. இதுல அந்தப் பொண்ண மட்டும் எப்படித் தனியா சொல்ல?

ரொம்ப பெரிய விபத்து சார் இது. முக்கால் வாசிப் பேர் ஸ்பாட்லையே இறந்துட்டாங்க. கொஞ்ச பேர் தான் பிழைச்சாங்க. அவங்களுடைய நிலமையும் கொஞ்சம் கஷ்டம்தான்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க ஜி.ஹச் போய் பாருங்க” என்று கூறி அவர் கடமையைப் பார்க்க அவர் சென்று விட்டார்.

இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவ் தன் கால்கள் மடிய மண்டியிட்டு அப்படியே தரையில் அமர்ந்து விட்டான்.

அவனிடம் ஓடி வந்து அவன் கையைப் பிடித்து தூக்கிய விஷ்வா “தேவ் எழுந்திருடா... மித்ராவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காதுடா” என்றவன் அவன் உடல் சில்லிட்டுப் போய் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன். அவனைக் காரில் அமர வைத்துக் குடிக்கத் தண்ணி தந்து ஆசுவாசப்படுத்தினான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “என் மித்ராவுக்கு ஒண்ணும் ஆகாது... ஆகியிருக்காது” என்று மறுபடியும் பிதற்ற ஆராம்பிக்க. அதில் கோபமடைந்த விஷ்வா “என்னடா சும்மா சும்மா என் மித்ரா என் மித்ரானு சொல்லிட்டு இருக்க? அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?” என்று அவன் கண்களை உற்றுப் பார்த்துக் கேட்க அவன் பார்வையைச் சளைக்காமல் எதிர் கொண்டவனோ “ஆமாடா... அவ என் மித்ராதான்! எனக்காக பிறந்தவ அவ. இனி என் வாழ்க்கை என் உலகம் எல்லாமே அவதான். ஷி இஸ் மை வைஃப்... மை லவ்... ஐ லவ் ஹெர்…

ஏன்னா நான் அவளக் காதலிக்கிறேன்… போதுமா? ஏன்டி ஏன் ஏன் இப்படி ஒரு காதலை எனக்குக் கொடுத்துட்டு அதை நான் முழுசா உணரும் நேரத்தில ஏன்டி என்ன விட்டுட்டுப் போன? வந்துரு மித்ரா! நீ எங்க இருந்தாலும் என் கிட்ட வந்திடுடி. நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி” என்று முகத்தை மூடிக் கொண்டுக் கதறி அழுதான் தேவ்.

இதைப் பார்த்த விஷ்வாவுக்கோ அதிர்ச்சியுடன் கூடிய சந்தோஷம். இதற்கு மேலாவது இவன் வாழ்வில் ஒரு விடிவு வரப் போகிறதே என்ற சந்தோஷம். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையிலா இவன் இதை உணரனும் என்ற அதிர்ச்சி. “டேய் மடையா முதல்ல அழறத நிறுத்து. பெரிய பிஸினஸ் மேக்னெட் எல்லாரையும் தன் கண் பார்வையில் வெச்சிருப்பவன் நீ, இப்படி அழலாமா? அதை விட நம்பிக்கையை விடலாமா சொல்லு?

உன் காதலை நீ உணரனும் என்றதுக்காகவே இது நடந்ததா நினைச்சிக்கோ. நிச்சயம் மித்ராவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா சந்தோஷமா நூறு வருஷம் வாழத் தான் போறீங்க. ஸோ பீ காம். நாம இப்போ ஜி.ஹச் போவோம்” என்று கூறி வண்டியை எடுத்தான்.

இவர்கள் ஜி.ஹச் வாசலை நெருங்கிய நேரம் நித்திலாவிடமிருந்து போன் வந்தது. அதை ஆன் செய்ய “அண்ணா, அண்ணி கிடைச்சிட்டாங்க, நீங்க உடனே வீட்டுக்கு வாங்க” என்றவளிடம். “நான் விஷ்வா பேசுறேன்மா. இதோ தேவ் கிட்ட கொடுக்கறேன் நீயே என்னன்னு சொல்லு” என்றவன் மொபைலை தேவ் காதில் வைக்க “அண்ணா, அண்ணி வீட்டுக்கு வந்துட்டாங்க. நீ உடனே வீட்டுக்கு வா. இன்ஸ்பெக்டர் உன் கிட்ட ஏதோ ஃபார்மாலிடிஸ் முடிக்கனுமா. ஸோ சீக்கிரம் வாண்ணா” என்றவளிடம்,

“என்னமா சொல்ற நிஜமாவா? அவளே வந்துட்டாளா? அவளுக்கு ஒண்ணும் இல்லை தான... அவ நல்லா தான இருக்கா? இதோ நான் உடனே வரேன்மா” என்று குரல் நடுங்கப் பலமுறை கேட்க.

”ஒண்ணும் இல்லனா நல்லா இருக்காங்க. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் நித்திலா.

“டேய் மச்சான், மித்ராவுக்கு ஒண்ணும் இல்லடா. வீட்டுக்கு வந்துட்டாளாம். ஸோ நித்திலா என்ன சீக்கிரம் வரச் சொல்றா. வண்டியை நீ மெதுவா ஓட்டுவ, நான் ஓட்றேன். நீ தள்ளி உட்கார்ந்து வா” என்று அதட்டினான். தன் தேவதை தன்னைத் தேடி வந்து விட்டாள் என்ற சந்தோஷம் அவனுக்கு. அப்போதும் விஷ்வா அசையாமல் அமர்ந்திருக்க, “என்னடா எரும! எழுந்து போனு சொல்றேன் இல்ல? மனுஷனுடைய நேரம் காலம் தெரியாமல் லேட் பண்ணிகிட்டு... எழுந்து போடா” என்று அதட்ட,

“எல்லாம் என் நேரம்டா. இவ்வளவு நேரம் நான் வண்டி ஓட்டி வந்தது உன் கண்ணுக்குத் தெரியல... பொண்டாட்டி அங்க வந்தாச்சியின்னவுடனே என்ன இப்பவே துறத்தறியா? நீ நடத்து மாப்பிள! நீ நடத்து…” என்று கூறி சீட்டு மாற்றி உட்கார்ந்தான் விஷ்வா. ஆனால் மனதிலோ நிம்மதி. ‘அப்பாடா… மித்ராவுக்கு ஒண்ணும் ஆகவில்லை’
பிறகு ஏதோ ஞாபகம் வந்தவனாக “ஆமாம்... நீ எப்படி மதியம் அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த?” என்று தேவ் கேட்க,

“நீ தானடா புது பிராஜெக்ட் விஷயமா ஏதோ லேண்ட் பார்க்கணும்னு என்ன வரச் சொன்ன. அதான் உனக்கு கால் பண்ணா நீ எடுக்கல. ஸோ ஜீவா கிட்ட கேட்டேன் நீ வீட்டிற்குப் போய் இருக்கறதா சொன்னான். அதான் வீட்டிற்கே கிளம்பி வந்தேன். இங்கு வந்தாதான் தெரியுது நீ அவ்வளவு கூத்து பண்ணி வச்சிருக்க” என்று கூறி சிரிக்க.

“ஹி.. ஹி.. ஹி..” என்று அசடு வழிந்தான் தேவ்.

கொஞ்ச நேரப் பயணத்தில் டி.ஐ.ஜியிடமிருந்து அழைப்பு வர எடுத்துப் பேசினான் தேவ். “தேவ், பை காட்ஸ் கிரேஸ் உன் மனைவிக்கு பெருசா ஒண்ணும் இல்ல. இன்னும் சொல்லணும்னா விபத்தில் பாதிக்கப்பட்டவங்களுக்கு அவங்க உதவிதான் செய்து இருக்காங்க. அவங்களக் கண்டு பிடிச்சி விசாரிச்சி உங்க வீட்டுக்கு அனுப்பச் சொல்லிட்டேன். ஸோ நீ வீட்டுக்குப் போனா அவங்க இருப்பாங்க. சரியா? டோன்ட் வொர்ரி… சீயர் அப் பாய்” என்று கூறியவரிடம்,

“தாங்க்ஸ் அங்கிள்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். ‘என் அழகான ராட்சஸி கொஞ்ச நேரத்தில் என்ன என்னமா பாடாய்ப் படுத்திட்டா…’ என்று நினைத்துத் தன்னுள்ளே சிரித்துக் கொண்டவன்.

வீடு வந்து விட அவசரமாக இறங்கியவன் படி ஏறி ஹாலுக்கு வர அவனின் பார்வை அனைவரிடமும் சென்று இறுதியாக மித்ராவிடம் வந்து நிலைத்தது. உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்ததில் அவளுக்கு ஒண்ணும் இல்லை, தெளிவாகத் தான் இருந்தாள். முகத்திலும் கையிலும் கொஞ்சம் சிராய்ப்புகள், ஆடை முழுக்க ரத்தக் கறை. அவ்வளவு தான்..

இவ்வளவு நேரம் காணாமல் தேடி அலைந்த அவன் தேவதை கண் முன்னே இருக்க, ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொண்டு முகம் முழுக்க முத்தமழை பொழிய அவன் மனம் பரபரத்தது. அந்த உந்துதலில் அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தவனின் வேகத்தையும் மனதையும் புரிந்து அவன் கையைப் பிடித்து நிறுத்திய விஷ்வா, “மாப்பிள கொஞ்சம் அடக்கி வாசி. பப்ளிக்.. பப்ளிக்.. நீ உன் பொண்டாட்டிய ஏதாவது செய்யப் போக அப்பறம் உன் பொண்டாட்டி கோச்சிக்கிட்டு அவங்க தாத்தா வீட்டுக்குப் போய்டப் போகுது” என்று அவன் காதில் கிசுகிசுக்கா.

அவனைப் பார்த்து முறைத்தவனோ, நிதானித்து அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் என்ன ஏது என்று பேசி அனுப்பி வைத்தான். பிறகு சிறிது நேரம் நடந்த விபத்தில் அவள் தப்பித்தது, மற்றவர்களுக்கு உதவி செய்தது, கடைசியாக இங்கு வந்து சேர்ந்தது என அனைத்தும் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

விஷ்வாவைத் தன்னுடன் அழைத்தவன் ஒரு முடிவுடன் தன் தாயின் அறை நோக்கிச் சென்றான் தேவ். அங்குச் சென்று தன் மனதில் இருப்பதை மறைக்காமல் தாயிடம் சொல்லி “இது தான் என் முடிவு” என்று கூறி அதில் உறுதியாக இருக்க, விசாலாட்சிக்கு மிகவும் சந்தோஷம். அதைத் தன் மகனிடம் கூறி மகிழ்ந்தவர் உடனே வேதாவைக் கூப்பிட்டு விவரம் கூறினார்.

அதைக் கேட்டு தேவ்வைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார் வேதா! அனைத்தும் நல்ல படியாக முடிய சந்தோஷத்துடன் தன் அறைக்குச் சென்றான்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
R

Raiza fathima

Guest
All ready read story than analum manam patarutu super yuvani evlo read pannalum alukkata book
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN