உன்னுள் என்னைக் காண்கிறேன் 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 3

இரவு இருந்த கருமேகக்கூட்டங்கள் வானில் எதுவும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது வானம். மன்னவனான சூரியன் தன் பார்வையால் பெண்ணவளான வானத்தைத் தீண்டத் தீண்டப் பெண்ணவளோ அவனின் பார்வையிலும் தீண்டலிலும் வெட்கம் தாங்காமல் தன் மேனி எங்கும் மருதாணியின் சிவப்பைப் பூசிக்கொண்டு நின்றாள்.

இப்படியாக விடிந்த காலை வேளையில் அவரவர் தம் கடமைக்காகவும் உழைப்பிற்காகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இதை எதையும் அறியாமல் படுக்கையில் தன் பிளாங்க்கட்டை தலை முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டு உறக்கத்தில் இருந்தான் தேவ்.

அப்போது அவன் செல்ல மகள் ருத்திரா அறைக்குள் ஓடி வந்து அவனை..

“அப்பு…ஏந்து” என்று எழுப்ப.

அவனிடம் எந்த ஓர் அசைவும் இல்லை.

“அப்பு…ஏந்து”

“-------”

“அப்பு…ஏந்து”

“ ------”

இம்முறை அவன் பிளாங்க்கட்டை ( blanket ) விலக்கி அவன் வயிற்றின் மேல் ஏறி அமர்ந்து தன் பிஞ்சுக் கைகளால் அவன் மார்பைச் சுரண்டி அழுகையில் பிதுங்கும் தன் உதடுகளால் “அப்பு ஏந்து“என்று அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள் அவன் செல்லக்குட்டி ருத்தராஸ்ரீ. இவை அனைத்தையும் அங்கிருந்தபடி பார்த்து கொண்டிருந்தார் முனிபாண்டி.

அவரைத் தவிர வேறு எந்த ஒரு வேலையாளும் கூப்பிடாமலோ அல்லது அனுமதி இல்லாமலோ அங்கு யாருடைய அறைக்கும் வரக்கூடாது என்பது அந்த வீட்டில் எழுதப்படாத சட்டம். ஆனால் இவருக்கு மட்டும் அப்படி எந்த நிபந்தனையுமில்லை. காரணம் அவர் தேவ்வின் தந்தைக் காலத்தில் இருந்து தேவ்வையே வளர்த்தவர் என்பதால் இவருக்கு மட்டும் அனுமதி உண்டு. இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் காலையில் ஐந்துமணிக்கெல்லாம் எழுந்து ஜாகிங்போவது தேவ்வின் பழக்கம். ஆனால் இன்று அவன் ஏழு மணி வரை எழுந்து வராததால் பொருத்துப் பார்த்த முனி அவனுக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற கேள்வியில் மேலே வந்து அவனைத் தொட்டுப் பார்க்க உடலோ மிதமான சூட்டில் இருந்தது. ஜுரம் இல்லை என்றறிந்தவர் ஜன்னல்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டுச் செல்ல நினைத்த நேரம் அந்த வீட்டின் இளவரசி எழுந்து கொண்டாள்.

அவளைக் கொண்டு போய் வள்ளியிடம் விட்டு அவளுக்குத் தேவையானதை பார்க்கச்சொல்ல. சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் தந்தையைத் தேட... தேவ்விடம் அழைத்து வர அவன் இன்னும் உறக்கத்தில் இருப்பதைப் பார்த்தவருக்கு உள்ளம் உருகி விட்டது.

பின்னே அந்த வீட்டின் சக்கரவர்த்தியான அவன் இப்படி நிம்மதியாகத் தன்னை மறந்து காலை ஒன்பது மணி வரை தூங்கி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. அவனை எழுப்பலாமா வேண்டாமா என்று இவர் யோசிக்க அவனோ தன் செல்லமகளின் தீண்டலில் லேசாக உறக்கம் கலைந்தவன் அவளை மார்பில் சாய்த்து இரவு உறக்கத்தில் அவள் எழுந்து சிணுங்கும் போது செய்வது போல் “தூங்கு குட்டி தாட்சிமா” என்று கூறி அவள் முதுகில் தட்ட,

அவளோ “அப்பு, குட்டி சூல் போக ஏந்து, ஏந்து அப்பு ” என்றாள்.

அப்போது தான் அவனுக்கு உறக்கம் முழுமையாகக் கலைய தன் மகளை இடதுகையால் அணைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் வலதுபுற டேபிளிலிருந்த ரிமோட்டைக் கொண்டு அந்த அறையிலிருந்த விளக்குகளுக்கு உயிர் கொடுத்தவன்.

“குட்மார்னிங் குட்டிமா…இன்னைக்கு என் செல்லத்துக்கு ஸ்கூல் இல்லையே லீவ்ஆச்சே” என்க அவளோ “சூல்இல்ல, நான் சூல் போக அப்பு என்குஎன்க ஆஷா வேண்டும் அப்பு.. .நான் விளையாடப் போக அப்பு.”

“போகலாம், போகலாம்டா குட்டி. இன்று இல்ல நாளைக்குப் போகலாம். அப்போ நீங்க உங்க பிரண்ட் ஆஷாவோட விளையாடுங்க. இப்போ அப்புக்கு வெளியில வேலை இருக்குதாம். அதை முடிச்சிட்டு வந்தப்பிறகு நாம ஊருக்குப் போய்டுவோமாம்” என்று கூறிக் கொண்டே அவன் நேரத்தைப் பார்க்க அதுவோ காலை ஒன்பது முப்பது என்று காட்டியது.

உடனே “இவ்வளவு நேரமாவா தூங்கினேன் நீங்களாவது என்னை எழுப்பி இருக்கக்கூடாதா. இன்று எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குனு உங்களுக்குத் தெரியும் தான”?என்று முனியைக் கேட்கவும் அந்த அறையிலிருந்த திரைச்சீலைகளை ரிமோட்டின் மூலம் விலகிக் கொண்டிருந்தவர் “ உங்களுக்கு எப்போ தான் வேலையில்ல எல்லா நாளும் வேலை தான். அதிலும் நேற்று இரவு வேற நீங்க கடல் நீரில நனைஞ்சி வந்திங்க பிறகு படுக்கவும் தாமதம் ஆகிடுச்சி அதான் எழுப்பல தம்பி”.

அப்போதுதான் நேற்று நடந்தது அனைத்தும் அவனுக்கு நினைவு வர,

“அந்தப் பெண் இப்போ எப்படி இருக்காங்க, நினைவு திரும்பிடுச்ச ஏதாவது பேசினாங்களா?”

“இல்லை தம்பி! இன்னும் இல்லை”

“சரி! நீங்க குட்டிமாவை அழைச்சிட்டு கீழே போங்க. நான் ஃபிரஷ் ஆகிட்டு வந்து டீ குடிக்கிறேன்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தவன் அவர்கள் சென்ற பிறகுத் தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க அங்கு முதல் ரிங் போய் அடுத்த ரிங்கில் தான் எடுத்தார்கள்.

“என்ன அங்கிள் எங்க இருக்கீங்க?“

“ ------ “

“இன்று தானேதீர்ப்பு”

“ ------- “

“அப்ப நீங்க வர மாட்டீங்க, அப்படித்தானே.”

“ ------ “

“இங்க விட்டுட்டு நான் ஏன் ஐகோர்ட்டில் பார்க்கணும்?”

“-------- ”

“முடியாது அங்கிள் எனக்குச் சாதகமான தீர்ப்பு இங்கேயே கிடைக்கனும்”

“ ----- “

“கிடைக்கலனா நான் அவரை சும்மா விட மாட்டேன். பிறகு அவர் என்னைப் பழைய தேவேந்திரனாகத்தான் பார்ப்பார்” என்று சிங்கத்தின் கர்ஜனையோடு கூறி கைப்பேசியை கட்டிலில் வீசி எறிந்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சிந்தித்தவன் இறுதியில் தன் கைப்பேசியை எடுத்துயாருக்கோ அழைத்துச் சிலவிவரங்களைக் கூறி எந்த நிமிடம் நான் அழைத்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் கைப்பேசியை துண்டித்தவன்.

பிறகுத் தயாராகிக் கீழே வந்து விருந்தினர் அறையிலிருந்த அப்பெண்ணைப் பார்க்க அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை அறிந்தவன்பின் விஷ்வாவை அழைத்து விவரம் கூறி ஆம்புலன்ஸ் அனுப்பச் சொன்னான்.

அங்கிருந்த வள்ளியிடம் “வள்ளி இப்போ ஆம்புலன்ஸ் வரும். அப்படி வரும் நேரம் குட்டிமாவை கூட்டிட்டு நீ பின்புறம் உள்ள தோட்டத்திற்குப் போய்டு. பழனியும் முனியண்ணாவும் சேர்ந்து இந்தப் பெண்ணத் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி விடச் சொல். சாப்பிட எனக்கு எதுவும் வேண்டாம் மதியமும் வரமாட்டேன். அதனால குட்டிமாவப் பார்த்துக்க. மீதி விவரம் எல்லாத்தையும் நான் விஷ்வாவிடம் சொல்லிக்கிறேன்” என்று அவளுக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டேதன் வேக நடையுடன் வெளியில் வந்து காரில் ஏறிச்சென்று விட்டான் தேவ்.

இந்தியாவின் லீடிங் லாயர்களில் ஒருவரான, தேவ்வின் தந்தைக்கு நண்பரான, அவன் குடும்பத் தொழில்கள் அனைத்துக்கும் தந்தைக் காலம் முதல் சட்ட ஆலோசனைகள் தருபவரான திகிரேட் அட்வகேட் தீனதயாளனின் வீட்டில் அவர் ஆபீஸ் அறையில் அமர்ந்திருந்தான் தேவ். அவன் எதிரில் இப்பொழுது இவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் அமர்ந்திருந்தார் தீனதயாளன்.

“இறுதியா இப்ப என்ன தான் சொல்லவரிங்க அங்கிள் அந்த தர்மசீலன் பிரபுகிட்ட விலை போய்ட்டாருனு சொல்லுறீங்க அப்படித்தானே? அவர்கிட்ட பேரில் மட்டும் தான் தர்மம் இருக்கு. உண்மை நியாயம், தர்மம், நேர்மை எதுவுமே இல்லை அப்படிதானே. முன்பு என் தந்தையுடனான பகையையும், கோபத்தையும் மனசில் வைத்துக் கிட்டு இன்று இந்த கேசிலும் என வாழ்க்கையிலும் விளையாடுறாறு. அதனால எனக்குச் சாதகமானத் தீர்ப்பு இங்கு கிடைக்காதுனுதான சொல்லவரீங்க?! தும்ப விட்டுட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி இந்தக் கோர்ட்ல முடிக்காம நாம ஏன் ஐகோர்ட் போகனும்?”

இவை அனைத்தையும் அவர் நேரெதிரில் இருந்த இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து, நெற்றி சுருங்க, புருவம் நேரிய, தாடை இறுக உடல் விரைக்க கண்களில் எரியும் நெருப்பின் ஜூவாலையோடு டேபிளில் இருந்த பேப்பர் வெய்ட்டைத் தன் வலது கையால் உருட்டிக் கொண்டே கேட்டான் தேவ்.


தீனதயாளன் கண்களுக்கோ அவன் மதம் கொண்ட யானையைப் போல்தெரிய. அப்படி மதம் கொண்ட யானையையாவது கும்கி யானைய வைத்து அடக்கிடலாம். ஆனால் இவனை யார் அடக்குவது?! இவை அனைத்தையும் அவர் தனக்குள்தான் சொல்லிக் கொண்டார். பின்னே வெளியிலா சொல்ல முடியும்?.

“இதற்காகத்தான் நான் முன்பே சொன்னேன். என்னுடைய பணபலத்தையும் ஆள் பலத்தையும் வைத்து நமக்குத் தெரிந்த ஒருவரை ஜட்ஜாக அமர வைக்கிறேனு. நீங்கதான் அதெல்லாம் வேண்டாம் அவர் பழைய பகை எதையும் மனதில் வச்சிக்கல. அதனால் நமக்கு நல்லதே செய்வாருனு சொன்னிங்க.

“அவன் செய்யறேனு தான் சொன்னான் தேவ்” என்றார் மெலிந்து விட்ட குரலில்.

“அப்படிச் சொல்லி அவர் நம்மை ஏமாற்றி இருக்கார் அங்கிள். கடைசி நிமிடம் மாற்றிச் செய்தால் நம்மால் என்ன செய்ய முடியும்னு நினைத்திருக்கார். ஆனால் இந்த தேவ் யாருனும் கடைசி நிமிடத்தில் நான் என்னவேணா செய்வனு அவருக்குத் தெரியவில்லை” என்று அதிரடி குரலில் பதில் தந்தவன்.

பிறகு நிமிர்ந்து அமர்ந்து தயாளனைக் கண்ணோடு கண் பார்த்து, “இப்போது என்னவாகிவிட்டது? நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் பாருங்க” இதை அவன் தன் குரலை உயர்த்தாமல் ஆனால் புலியின் உருமலோடு கூற. அந்தக் குரலிலே அவன் சொன்னால் அது நிச்சயம் செய்வேன் என்றும், எதிரிகளை வீழ்த்தாமல் நான் ஓய மாட்டேன் என்பதையும் சொல்லாமல்சொல்லியது.

“வேண்டாம் தேவ்! அவசரத்தில் எதுவும் செய்து வைக்காத. தீர்ப்புக் கிடைத்தவுடன் நீ எதாவது செய்தால் பிறகு நமக்குத்தான் பிரச்சனை” என்று பதறியவரை“ தீர்ப்பா?! அப்படி ஒன்று கொடுக்க அவர் இருந்தா தானே? மதியம்தானே நமக்குத் தீர்ப்பு வரும்?“ என்று கண்ணில் கூர்மையுடன் தேவ் கேட்க,

அவர் “ஆம்’ என்று தலையசைத்தார்.

“நீங்கள் முன்னே சொன்ன மாதிரி நீங்களோ நானோ போக வேண்டாம். உங்கள் ஜுனியரை அனுப்புங்க இன்று நமக்குத் தீர்ப்பு இல்லை” என்றுஆணித்தரமாகக்கூற.

இவன் என்ன செய்து வைக்கப் போகிறானோ என்று மனதில் கவலையோடு….

“ம்ம்ம்” என்று தலையசைத்தார் தீனதயாளன். பாவம் அவரால் வேறு என்ன செய்ய முடியும்?.

அதே நேரம் தயாளனின் மனைவி கையில் பானகம் நிறைந்த கோப்பைகளுடன் உள்ளே நுழைந்தவர்.

“வாப்பா தேவ்...விசாலாட்சி எப்படி இருக்கா? ஏதாவது முன்னேற்றம் இருக்கா, உன் மகள் ருத்திராஸ்ரீ எப்படி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே கோப்பைகளை நீட்ட.

தேவ் அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு “அம்மா நல்லா இருக்காங்க ஆன்ட்டி, இப்போஅவங்களால பேச முடியலைனாலும் நாம பேசுவதைப் புரிந்து கொள்கிறார்கள், குட்டிமா நல்லா இருக்கா” என்று கூற.

“சந்தோஷம்பா சீக்கிரமே விசாலத்துக்கு சரியாகிடும், எனக்கு என்னப்பா நான் நல்லா இருக்கேன்” என்றார்.

“ஆமாம் ஆன்ட்டி... சீக்கிரமே சரியாகிடுனுதான் நானும் நம்புகிறேன்” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியவன்.

“சரி அங்கிள்...அப்ப நான் கிளம்புகிறேன், வரேன் ஆன்ட்டி” என்று கூறி இருக்கையை விட்டு எழுந்தவனை

“இருந்து சாப்பிட்டு போ தேவ்” தயாளன் மனைவி.

“இல்லை ஆன்ட்டி வேண்டாம் நான் இன்னோர் நாள் வரேன், வரேன் அங்கிள், வரேன் ஆன்ட்டி” என்று கூறிக் கிளம்ப.

அவன் சென்றப் பிறகும் அந்தத் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் தயாளன்.

“என்ன அப்படி வெறுச்சிப் பார்த்துட்டு இருக்கீங்க” என்று அவர் கவனத்தைத் திசை திருப்பினாள் மனைவி.

“இவனைப் பற்றித் தெரியாமல் இவனைச் சும்மா சும்மா சீண்டிப் பார்க்கறான் அந்தப் பிரபு. கடைசியில் என்ன ஆகப் போறானோ?” என்று சொல்லிப் பெருமூச்சுவிட.

“விடுங்க! நல்லது செய்தால் நல்லது நடக்கும். தேவ் எந்த அளவுக்கு நல்லவனோ அதே அளவுக்கு அவன் எதிரிகளுக்கு எமன் இது தெரியாதா நமக்கு” என்று அவர் மனைவி முற்றுப்புள்ளி வைத்தார்.

தயாளனின் வீட்டை விட்டு வெளியில் வந்த தேவ் தன் கைப்பேசியில் யாரையோ அழைத்தவன் அந்தப் பக்கம் எடுத்தவுடன் “ம்ம்... பாட்டில் மணி நான் காலையில் சொன்னபடி முடிச்சிடு, உன் ஆட்கள் யாரும் மாட்டக் கூடாது. அப்படியே மாட்டினாலும் உன் பெயரோ இல்லை என் பெயரோ வெளியில் வரக் கூடாது. ஆமாம் முடிச்சிட்டு வழக்கம்போல் கௌதமிடம் வந்து பணம் வாங்கிக்கோ.

“ம்’ சரி...சரி நான் சொல்லி வைக்கறேன். நான் சொன்ன வேலையை முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணு” என்று கூறி கைப்பேசியை அனைத்தான்.

அடுத்துத் தன் நண்பனான ACP ராஜசேகரை போனில் அழைத்து இன்று அவன் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கச் சொல்லியவன் அவசியம் பார்க்க வேண்டும் என்றும் கூறியவன் பின் விஷ்வாவின் மருத்துவமனைக்குச் சென்றான். சென்னையின் மையப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த “சுபம் மருத்துவமனை” என்ற பெயர் பலகையுடன் கூடிய பத்துமாடிக் கட்டிடம். அக்கட்டிடம் நடுநாயகமாக இருக்க அதன் வலப்புறக் கோடியில் மருத்துவக் கல்லூரியும், இடப்புறக் கோடியில் மருத்துவ ஆராய்ச்சிக்கூடமும் இருந்தது.

இதில் அங்குப் பணிபுரியும் மருத்துவர்களுக்காக என்று தோட்டத்தின் கீழ்க் கட்டப்பட்டிருந்த வாகனங்கள் நிறுத்த என்றிருந்த சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் அதிவேகத்துடன் டயர்கள் கீச்சிடும் சத்தத்துடன் சீறிக்கொண்டு வந்து நின்றது ஒரு BMW கார். அதிலிருந்து இறங்கினான் தேவ்.

அங்கு வாகனங்களை அதன் உரிய இடத்தில் நிறுத்துவற்காகப் பணிபுரியும் மருத்துமனை ஊழியரிடம் தன் கார் சாவியைக் கொடுத்தவன் நுழைவாயிலில் இருந்து தோட்டத்தின் நடைபாதையின் வழியாக மருத்துவமனைக் கட்டிடத்தை அடையப் பயன்படுத்தும் பேட்டரி காரில் ஏறி அமர்ந்து கட்டிடத்தை அடைந்தான் தேவ்..

அங்கு அவன் அனைவருக்கும் பரிச்சயமானவன் என்பதால் இதழில் மட்டும் சிநேகப் புன்னகை. அக்கட்டிடத்தின் உள்ளே நடுநாயகமாக இருந்த லிஃப்டில் ஏறி ஐந்தாவது தளத்தை அடைந்தவன் அங்கு விஸ்வநாதனின் ஓய்வு அறைக்குச் சென்று அமர்ந்து விஷ்வாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்க. அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் வந்த விஷ்வா. “வாடா ஏதாவது சாப்பிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே அந்த அறையின் மூலையில் இருந்த ஃபிரிஜ்ஜில் இருந்து குளிர்பானத்தை எடுத்தவன்.

தேவ்வின் முகம் சோர்வில் இருப்பதையும் மணி மதியம் இரண்டு என்பதையும் பார்த்தவன் “நீ இன்னும் சாப்பிட்டுருக்க மாட்ட, இரு கேன்டீன்ல ஏதாவது வாங்கி வரச் சொல்லுறேன்” என்றவன் இண்டர்காமை எடுத்து உணவு வகைகளைக் கூறி எடுத்து வரச் சொன்னான்.

“என்னடா என்ன ஆச்சு தேவ்...”

அவனுக்குத் தெரியாதா தன் நண்பனைப் பற்றி. அவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான் என்பதை அவன் விடும் வேக மூச்சிலேயே தெரிந்தது. அவன் கேட்டது தான் தாமதம் தேவ் அனைத்தையும் மடை திறந்த வெள்ளம் என கொட்டித் தீர்த்தான். “விடுடா அதான் அவனுக்குத் தகுந்த முறையில பாடம் கற்பிக்கச் சொல்லிட்டியே பிறகு என்ன விஷ்வா.”

அதற்குள் உணவு வர இருவரும் அமைதி காத்தனர்.

பணியாள் சென்றபின் “இல்லடா இதை இப்படியே சும்மாவிட முடியாது. ஏதாவது செய்தே ஆகனும்.”

“யாருடா உன்னைவிடச் சொன்னா?தகுந்த நேரத்தில் நாம் திரும்பிக் கொடுக்கலாம். இப்போ சாப்பிடு” என்று தன் நண்பனை சமாதானப்படுத்த இரு நண்பர்களும் பேசிக் கொண்டே உணவை உண்டு முடிக்க.

“இப்ப சொல், அந்தப் பெண் எப்படி இருக்கா?என்ன நடந்தது அவளுக்கு? ஏதாவது முன்னேற்றம் வந்து இருக்கா?தேவ்.”

“இல்லைடா எந்த முன்னேற்றமும் இல்ல. ஆனால், அவளை முழுவதுமாக பரிசோதனை செய்ததில் நாம் பயந்தபடி எந்தப் பிரச்சனையும் அவளுக்கு இல்ல. ஷீ இஸ் ஆல்ரைட். இன்று முழுக்க ஐ.சி.யூ.வில் இருக்கட்டும். நாள் முழுக்க டிரிப்ஸ் ஏற்றி இன்ஜக்க்ஷனையும் நேரம் தவறாமல் போட்டு வந்தா உடல் தேறி நாளையே கண்விழிக்க வாய்ப்பிருக்கு. இப்போ ஐ.சி.யூவில் தான் இருக்கா. வரியா பார்க்கலாம் விசு.”

“சரி” என்று தேவ் தன் இருக்கையில் இருந்து எழும் நேரம் அவன் கைப்பேசி இசைக்க அதை உயிர்பித்தவன்

“சொல்லுமணி, என்ன நான் சொன்னபடி முடிச்சிட்டியா? வெரிகுட் எந்தப் பிரச்சனையும் இல்லையில்ல?யாரும் மாட்டக்கூடாது? சரி! நாளை நீ வந்து பணம் வாங்கிக்கோ. ஆமாம் கௌதம் கிட்ட தான்” என்று கைப்பேசியைத் துண்டித்தான் தேவ்.



உன்னுள் என்னைக் காண்கிறேன்... 2
 
Last edited:

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

பாலா

Guest
இந்த கதையை முன்னமே படிச்ச நியாபகம் அந்த பெண்ணுக்கு ஆஸ்பிட்டல் செலவை காரணம் காட்டி (பிளாக்மெயில்) ஒரு ஒப்பந்ந கல்யாணம் நடக்கும் அப்புறம் அவங்களுக்கு அதுவே பிடிச்சிரும்(பழகிடும் அல்லது லவ்வாகிடும்) அந்த பெண்ணுக்கு சொந்தம் ஒரு தாத்தா ஊர் பாண்டிச்சேரி இந்த கதை எழுதியது ஞாபகம் வரல ஆனா மல்லிகாமணிவண்ணன் வெப்சைட் அல்லது எஸ்எம் தமிழ்நாவல் வெப்சைட் தமிழ்நாவல்ரைட்டர் வெப்சைட் இது ஏதோ ஒன்னுல படிச்சேன்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN