என்னை தீண்டிவிட்டாய் 8

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீ என்
உணர்வென்று
எண்ணியிருந்தேன்
ஆனால் நீ தான்
என் உயிரென்று
உணர்த்தியது
உன் சிணுங்கல்கள்

தன் உடமைகளுடன் ஞானபண்டிதர் ஒழுங்குபடுத்தியிருந்த வீட்டிற்கு வந்த ஷாகர் தன் உடமைகளை உரிய இடத்தில் அடுக்கிவிட்டு தன் வேலைகளில் இறங்கினான்..
அந்த வீடு கீழ் தளத்தையும் மற்றும் மொட்டைமாடியையும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது...

மொட்டைமாடி எந்தவித உபகரணங்களும் இல்லாதிருக்க ஷாகர் தான் கொண்டு வந்திருந்த டென்டினை அங்கு நிறுத்தியவன் அங்கு அமர்ந்து வேலை செய்வதற்கு ஏற்றபடி அனைத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தான்.. ஷாகருக்கு இந்த கிராமியச்சூழல் புதிதென்பதால் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க வேண்டுமென்று முடிவெடுத்திருந்தான்.. ஆதலால் தன் அன்றாட நடவடிக்கைகளனைத்திலும் இயற்கையின் அற்புதங்கள் இணைந்திருக்க வேண்டுமென நினைத்தான்..

இவ்வாறு டென்ட் அமைத்து தன் லாப்டாப்பில் ஏதோ வேலை செய்திருந்தவனை கலைத்தது பேச்சுக்குரலும் சிரிப்பு சத்தமும்... முதலில் அதை கண்டுகொள்ளாதவன் பின் மனதில் ஒரு விடயம் பளிச்சிட தன் வேலைகளை தற்காலிகமாய் நிறுத்தியவன் சத்தம் வந்த இடம் நோக்கி நகர்ந்தான்...

மொட்டைமாடியிலிருந்து எட்டி பார்த்தவனது கண்களுக்கு மீண்டும் ஆதிராவின் தரிசனம் கிடைத்தது... அங்கு ஆதிரா தன்னைவிட வயதில் சிறிய பிள்ளைகளோடு கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்தாள்... தன் தாவணியை தூக்கி இடுப்பில் சொருகியிருந்தவள் கையில் பேட்டுடன் சத்தமிட்டபடி ரன் ஓடிக்கொண்டிருந்தாள்...
அப்போது அவளது பார்ட்னர் அவுட்டாகிவிட மற்றைய அணி பசங்க அவுட்டு என்று கத்த ஆதிராவோ

“இல்லை.. இல்லை... அவன் அவுட்டு இல்லை... டேய் அவன் விக்கட் எடுக்குறதுக்கு முதல்லயே அவனிடத்துக்கு வந்துட்டான்டா...” என்று ஆதிரா வாதாட அந்த வாண்டுகளில் ஒருத்தன்

“அக்கா இதோடு இது பத்தாவது தடவை.... நீ இப்படி சொல்லுவனு தெரிஞ்சு தான் அண்ணனுக்கு தெரியாமல் அவன் போனை தூக்கிட்டு வந்து வீடியோ போட்டு வச்சிருக்கேன்.. வா அதுகிட்டயே கேட்டுருவோம்... அது எது உண்மைனு சொல்லும்...” என்று கூறிய சிறுவன் அருகிலிருந்த மரத்தின் மீது ஏறிய அங்கு அவன் வைத்திருந்த செல்லை எடுத்து வந்தான்...

அதை வாங்கி ஆதிரா

“டேய் இது உங்க அண்ணனோடதா இது... நல்லா இருக்கே.. தா பார்த்துட்டு தாரேன்...”

“அக்கா... உன்கிட்ட இருக்கதை விடவுமா இது நல்லது??? நீ எதுக்கு கேட்குறனு தெரியும்... மொதல்ல வீடியோவ பார்த்து அவுட்டா இல்லையானு சொல்லிட்டு அதுக்கு பிறகு தர்றேன்... நல்லா சுத்தி சுத்தி பாரு..” என்ற சிறுவன் வீடியோவை சேவ் செய்துவிட்டு மீண்டும் ஓடவிட்டு பார்க்க அது அவுட் என்று உறுதிசெய்தது..

அப்போதும் ஆதிரா ஒத்துக்கொள்ள மறுத்து

“டேய் இது ஏதோ போங்கு பண்ணுது... நான் இதை நம்ப மாட்டேன்.. நீ திரும்ப பாலை போடு நாங்க மறுபடியும் அடிக்கிறோம்..”

“அந்த போங்கு சாங்கு எல்லாம் நீ தான் பண்ணுவ அக்கா.. இதுக்கு அதெல்லாம் தெரியாது... நீ உன் அடுத்த பாட்னரை களத்துலல எறக்கு..”

“என்னடா நான் போங்குனு சொல்லிட்டு இருக்கேன்... நான் சொல்லுறதை மதிக்காமல் நீ அவுட்டு தான்னு சொல்லுற??”

“உன்னை கிளாஸ் நேரத்துல தான் மதிக்க முடியும்... இப்போ இது சொல்லுறத தான் மதிப்போம்...” என்றவன் தன் கையிலிருந்த மொபைலை காட்டிவிட்டு ஆதிராவின் பாட்னர் சிறுவனிடம் பேட்டை வாங்க ஆதிராவோ மீண்டும் அவர்களுடன் வாதாட அதில் கடுப்பான ஒரு வாண்டு

“அக்கா... வரவர உன் அட்டகாசம் தாங்கலை... அவுட்டுனு நிருபிச்ச பிறகும் இப்படி அடம்பிடிச்சிட்டு இருக்க.... இப்போ என்ன நீ அவுட்டில்ல அதானே... சரி.. டேய் பாலை அக்காவுக்கு உருட்டி விடுங்கடா..” என்று அந்த வாண்டு சொல்ல பந்து வீசக்கொண்டிருந்த வாண்டு வேண்டுமென்றே பந்தை நிலத்தில் உருட்டிவிட ஆதிராவோ

“எனக்கேவா... இருங்கடா இன்னைக்கு உங்களுக்கு நான் கச்சேரி நடத்துறேன்..” என்று மனதினுள் நினைத்தபடி உருண்டுவந்த பந்தினை லாவகமாக தட்டி உயர எழும்ப செய்தவள், பந்து உயர எழும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அது தூர சென்று விழும் வகையில் வேகமாக மட்டையால் அடித்தாள்...
அவள் எண்ணப்படியே உயரப்பறந்த பந்து அங்கு நின்றிருந்த ஆலமரத்தின் உச்சியில் மாட்டிக்கொள்ள அதை பார்த்திருந்த சிறார்களோ என்ன செய்வதென்று முழித்துக்கொண்டிருந்தனர்...

அந்த ஆலமரம் மிகப்பெரியது மட்டுமன்றி அங்கு தேனீக்கள் கூடு கட்டியிருந்தது... மரத்தில் ஏறினால் கூட தேனீக்களின் கொட்டுக்கு ஆளாக நேரிடும்... அதை தெரிந்தே ஆதிரா பந்து மேலே மரத்தில் சிக்க வேண்டுமென்றே மட்டையை தூக்கி அடித்தாள்.....

அவளை வாண்டுகள் அனைத்தும் முறைத்து பார்க்க அவளோ எதுவும் தெரியாதது போல்

“பால் எங்கடா போச்சு...?? கண்ணுக்கே தெரியமாட்டேங்குது... அவ்வளோ வேகமாவா அடிச்சேன்..” கேட்க அவளை முறைத்த ஒரு வாண்டு

“அக்கா... தெரிஞ்சி தானே தூக்கி அடிச்ச... இப்போ என்ன தெரியாத மாதிரி கேட்குற???? உன்னை எங்ககூட கூட்டு சேர்த்தோம் பாரு... எங்களுக்கு இது தேவை தான்... இப்போ உனக்கு திருப்தி தானே... டேய் வாங்கடா போகலாம்... இனி எங்க விளையாடுறது..” என்று அந்த வாண்டு கடுப்புடன் கூற ஆதிராவோ

“சரி சரி கோவிச்சிக்காத... இப்போ என்ன உனக்கு அந்த பந்து வேணும்.. அதானே... இரு நான் எடுத்து தாரேன்...” என்றபடி தன் தாவணியை நன்றாக இழுத்து மேலே சொருகியவளை கண்டு பதறிய மற்ற வாண்டுகள்

“ஏ அக்கா... கிறுக்கு பிடிச்சி போச்சா உனக்கு... வா.. போகலாம்...”

“டேய் நான் பாலை எடுத்து தரேன்டா...” என்று மரத்தில் ஏற முயன்றவளை கை பிடித்து தடுத்த வாண்டுகள்

“அக்கா... சொன்னா கேளுக்கா... இன்னொரு பால் வாங்கிக்கலாம்... நீ மரத்துல ஏறாத... தேன்கூடு வேற இருக்கு... நீ ஏறும் போது ஏதாவது நடந்துச்சுனா தேனீ கொட்டிடும்... சொன்னா கேளு...” என்று வாணடுகளனைத்தும் கெஞ்ச அதை சட்டை செய்யாத ஆதிரா மரத்தில் ஏறத்தொடங்கினான்...

இதை பார்த்திருந்த ஷாகருக்கும் பதற்றம் தொற்றிக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்தவன் ஓடிச்சென்று தன் உடமைகளிலிருந்து தான் கொண்டு வந்திருந்த டெனிஸ் பாலை எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தவன் கீழே எட்டிப்பார்த்து அந்த வாண்டுகளை பார்த்தான்...

அவன் கைதட்டி வாண்டுகளின் கவனத்தை தன்புறம் திருப்பியவன்

“தம்பி இது உங்க பாலா..??” என்று கையிலிருந்த பாலை காட்டி கேட்க அந்த வாண்டுகளில் ஒன்று

“ஆமா அண்ணா..” என்றுவிட்டு ஆதிராவை நோக்கி

“அக்கா பால் இங்க இருக்கு. நீ கீழ எறுங்கு...” என்று கூற அவளோ

“இல்லடா.. அது மேல தான் போனிச்சு.. நான் பார்த்தேனே...”

“ஐயோ அக்கா.. பால் அந்த அண்ணா கையில இருக்கு.. நீ தயவு செஞ்சு கீழ எறங்கு... இல்லைனா உங்க அம்மாவ கூட்டிட்டு வருவேன்...” என்று அந்த வாண்டு சொல்ல ஆதிராவும் தன் அன்னை என்ற சொல்லுக்கு அடிபணிந்து கீழே இறங்கினாள்...

கீழே இறங்கிய ஆதிரா கையை தட்டிக்கொண்டே

“எங்கடா பால்???” என்று ஆதிரா கேட்க அந்த வாண்டும்

“அதோ அந்த அண்ணா கையில இருக்கு..” என்று மேல காட்ட தலையுயர்த்தி பார்த்த ஆதிரா மேலே மாடியில் ஷாகரை கண்டாள்...
ஒரு சந்தேகப்பார்வையோடு ஆதிரா தன்னை பார்ப்பதை கவனித்த ஷாகர் தன் கையிலிருந்த பந்தை கீழே வீசினான்...

அவன் வீசிய பந்தை லாவகமாக பிடித்த ஆதிரா அவனுக்கு நன்றி சொல்ல அவனோ எந்த வித பிரதிபலிப்புமின்றி உள்ளே சென்றுவிட்டான். அதை கண்ட ஆதிராவுக்கு ஏதோ நெருடிய போதும் அப்போதைக்கு அதை சிந்தையிலிருந்து களைந்தவள் தன் விளையாட்டை தொடர்ந்தாள்..

அங்கிருந்து வந்த ஷாகருக்கு அப்போது தான் மூச்சே வந்தது... ஆதிராவின் அதிரடிச்செயலில் அதிர்ந்தவன் எங்கே அவளுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அவன் மனம் துடித்ததை இந்த நொடியில் சரியா கவனித்தான்..

அதை ஒரு மனம் மனிதாபிமானம் என்று கூற இன்னொரு மனமோ இல்லை இது அதுவல்ல வோறொன்று என்று புதிர்போட்டது... அது குழப்பமாய் மாற அதற்கு பதில் தேடியவனுக்கு தலைவலி மட்டுமே மிஞ்சியது...

எதிலும் நிதானத்துடன் முடிவெடுப்பவனுக்கு இந்த தடுமாற்றம் பெரும் சவாலாய் மாறியது... ஆனால் இது ஆற அமர யோசிக்கவேண்டிய விஷயமென்று அவன் மனம் அறிவுறுத்த, தன் வேலைகளிலிருந்து சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பியவன் வீட்டு கதவை பூட்டிக்கொண்டு தன் மொபைலையும் ஹெட்செட்டையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்....

ஹெட்செட்டினை காதிற்கு கொடுத்தவன் தன் கால்போன போக்கில் நடக்கத்தொடங்கினான்... அப்போது அவனை யாரோ இடித்துக்கொண்டு அவன் முன்வந்து நிற்க, தன் நடையை இடைநிறுத்தியவன் யாரென்று பார்க்க அவன் முன்னே மூச்சு வாங்க நின்றிருந்தாள் ஆதிரா... சற்று குனிந்து நின்று மூச்சு வாங்கியவள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்...

அந்த கணத்தில் ஷாகர் தன் காதிலிருந்த ஹெட்செட்டினை கழற்றியவன் அவளை என்னவென்று பார்க்க, ஆதிரா தன் கையிலிருந்த பந்தை ஷாகரின் முன் நீட்டினாள்..

“எதுக்கு இது..??”

“இ..து.. உங்களோடது தானே... அதான் உங்களுக்கு கொடுக்க வந்தேன்..” என்று ஆதிரா கூற ஷாகர் அவளை கேள்வியாய் பார்த்தான்...

“என்ன சார் பார்க்கிறீங்க...?? இந்த பால் உங்களோடதுனு எனக்கு தெரியும்.. நான் அடிச்ச பால் இன்னும் அந்த மரத்து மேல தான் இருக்கு... “ என்று ஆதிரா கூற எதுவும் கூறாமல் பாலை வாங்கிக்கொண்டவன் எதுவும் கூறாது அங்கிருந்து நகர்ந்தான்..

ஆதிரா மீண்டும் அவன் முன் சென்று வழிமறித்தவள்

“என்ன சார் எதுவும் சொல்லாமல் போறீங்க??”

“என்ன சொல்லனும்??”

“இல்லை நீங்க திட்டுவீங்கனு எதிர்பார்த்தேன்..”

“உங்களை திட்ட நான் யாருங்க...??”

“இல்லை நீங்க...”

“இங்க பாருங்க... ஒரு விஷயம் மட்டும் சொல்றேன்.... உங்க தைரியத்தை வேற விஷயங்களில் காட்டுங்க... இப்படி உங்களுக்கு மட்டும் இல்லாமல் மத்தவங்களுக்கும் கஷ்டத்தை கொடுக்ககூடிய விஷயங்களில் காட்டாதீங்க.. இன்கேஸ் நீங்க அந்த பாலை எடுக்கப்போகும் போது அந்த தேன்கூடு கலைந்திருந்தா உங்களுக்கு மட்டும் உங்க கூட விளையாடிட்டு இருந்த அந்த சின்ன பசங்களும் தேன் கொட்டிக்கு ஆளாகியிருப்பாங்க... இனிமேலாவது அசட்டு தைரியத்துல எதுவும் செய்யாமல் கொஞ்சம் யோசிச்சி நிதானமாக எதுனாலும் செய்ங்க..” என்றவன் மீண்டும் அங்கிருந்து சென்றான்...

அவன் சொன்ன விஷயம் உண்மை என்று அறிவுக்கு எட்டிய போதும் மனமோ “அவன் சொன்னா நான் கேட்டுறனுமா???? போடா டேய்..?” என்று அவனை வசைபாட ஆதிராவோ மீண்டுமொரு துள்ளலுடன் அங்கிருந்து சென்றாள்..
அதன் பின் ஆதிரா ஷாகரை கண்டுகொள்ளவில்லை.. ஆனால் ஷாகரின் பார்வை ஆதிராவை தொடர்ந்தது... அவளறியாது அவளை சில புகைப்படங்கள் எடுத்தவன் அதை தன் லாப்டொப்பினுள் பத்திரமாய் சேமித்திருந்தான்...

இவ்வாறு ஒரு மாதம் கடந்திருக்க அன்று மாலை ஏழு மணியளவில் தன்னறையிலிருந்த ஷாகர் கதவு தட்டும் ஓசை கேட்டு ஹாலிற்கு வந்தவன், கதவை திறக்க அங்கு அவன் கண்ட காட்சியில் அவன் பாதி உயிர் போய்விட்டது...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN