என்னை தீண்டிவிட்டாய் 9

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் துயரம்
துடைக்கவே
என் ஜீவன்
ஜனித்ததடி

கதவை உடையும் அளவிற்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க ஷாகரோ யாரு இந்த இரவு நேரத்தில் இப்படி தட்டுவதென்று எண்ணியபடி கதவை திறந்தவனுக்கு காட்சி தந்தாள் ஆதிரா... ஷாகர் கதவை திறந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தபடியிருந்தவளை பார்த்த ஷாகர் திகைத்துவிட்டான்...

தலைமுடி கலைந்து, கன்னமிரண்டும் கைத்தடங்கல் பதிந்து, உடையும் ஆங்காங்கே கிழிந்திருக்க, முகத்தில் பயம் அப்பிக்கொண்டிருந்தது...
இரவு நேரத்தில் இவ்வாறு அலங்கோலமாய் நின்றவளை பார்த்தவனது நெஞ்சம் பதறியது...

“ஹேய் என்னாச்சுமா...” என்று ஷாகர் கேட்ட அவன் காலில் விழுந்தவள் கதறத்தொடங்கினாள்...

“சார் ப்ளீஸ் சார்... என்னை காப்பாத்துங்க சார்...” என்று ஆதிரா கதற அதில் பதறியவன் அவள் கைபிடித்து தூக்கியவன்

“இங்க பாரு.. முதல்ல அழுறத நிறுத்து... உள்ள வா...” என்று அவளை உள்ளே அழைத்து சென்றவன் அவளை அமரச்செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தான்.
அவன் கொடுத்த நீரை வாங்கி மடமடவென்று குடித்தவளுக்கு பயம் அடங்கி நிதானத்திற்கு வந்தாள்..

“என்னாச்சு.. ஆதிரா.. என்ன நடந்துச்சு..?”

“சார் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டீங்களா?? யாரும் என்னை தேடி வரமாட்டகளே...”

“யாரும் இங்க வரமாட்டாங்க.. நீ என்ன நடந்ததுனு சொல்லு...”

“சார்... அவன்... அவன்...” என்றவள் மீண்டும் ஆதிரா அழத்தொடங்க அவள் கையை ஆதரவாக தடவிக்கொடுத்தவன்

“ஆது இங்க பாரு... அழறதால எதுவும் மாறப்போறதில்லை... அதோட இப்படி அழுத வடிய நீ சாதாரண பொண்ணு இல்லை... பசங்களுக்கு கூட இல்லாத தைரியம் உனக்கு இருக்கு... தேன் கொட்டும்னு தெரிஞ்சே அன்னைக்கு மரத்து மேல ஏறிய உனக்கு யாரையும் சமாளிக்கும் தைரியமும் திறமையும் இருக்குனு எனக்கு தெரியும்... இப்போ அந்த ஆதிரா எங்க?? உன்னோட பயம் தான் மற்றவங்களோட பலம்... அதுக்கு நீ இடம் கொடுக்கக்கூடாது.. பயப்படாமல் என்ன நடந்ததுனு சொல்லு... என்னால முடிந்த ஹெல்ப்பை நான் பண்ணுறேன்..” என்று ஷாகர் சற்று தெளிந்தவள்

“தாங்க்ஸ் சார்...”

“பரவாயில்லை விடு... ஏதாவது குடிக்கிறியா??” என்று ஷாகர் கேட்க ஆதிராவோ வேண்டாம் என்று மறுக்க

“ஏதாவது சாப்பிட்டியா??” என்று ஷாகர் கேட்க ஆதிரா அதற்கும் இல்லை என்று கூற ஷாகர் எழுந்து உள்ளே சென்றவன் கையில் உணவுத்தட்டோடு வந்தான்..

அதை ஆதிராவிடம் கொடுத்தவன்

“சாப்பிடு.. பசி கூட தைரியத்துக்கு எதிரி தான்.. முதல்ல சாப்பிடு... பிறகு எதுனாலும் பார்த்துக்கலாம்...” என்று ஷாகர் கூற ஆதிராவோ பயத்தில் வாசலை பார்க்க, அவள் உள்ளம் புரிந்தவன்

“எழுந்து என்கூட வா..” என்றவன் மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினான்... ஏதோ ஒரு தைரியத்தில் அவனை பின்தொடர்ந்தாள் ஆதிரா...
இருவரும் மொட்டை மாடிக்கு வந்ததும் கீழ் தள விளக்கை அணைத்தான் ஷாகர்.

மொட்டை மாடியில் ஒரு ஓரமாக பாயொன்றை எடுத்துப்போட்டு அதிலமர்ந்து ஆதிராவை உண்ணச்சொன்னான் ஷாகர். அவளும் கீ கொடுத்த பொம்மை போல் அவன் சொன்னதனைத்தையும் செய்தாள்..

உணவை முடித்துவிட்டு கைகழுவி வந்தவளிடம் தண்ணீர் போத்தலை ஷாகர் நீட்ட அதை வாங்கி குடித்து முடித்தவளிடம்

“ம்.. இப்போ சொல்லு.. என்னாச்சு...”

“எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க சார்.” என்று ஆதிரா கூற ஷாகருக்கோ தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது... இருந்தும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல்

“நல்ல விஷயம் தானே...இதுல என்ன இருக்கு..??”

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை சார்..” என்ற ஆதிரா கூற நொடியில் ஷாகரின் மனமோ குத்தாட்டம் போட்டது.. ஆனாலும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாதவன்

“அப்போ வீட்டுல சொல்ல வேண்டியது தானே..”

“சொன்னதால தான்... அவன்.. அவன்..” என்ற அவள் கண்ணீரில் கரையத்தொடங்க அதை கண்டு பொறுக்காதவன் சற்று குரலை உயர்த்தி

“இப்போ அழுறத நிறுத்த போறியா இல்லை... சும்மா குழந்தை மாதிரி அழுதுகிட்டு... என்ன நடந்துச்சுனா விவரமாக சொன்னால் தான் என்னால ஏதாவது உதவமுடியுமானு சொல்லமுடியும்..” என்று ஷாகர் கூற ஆதிரா தன் கதையை கூறத்தொடங்கினாள்.

“சார் எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டும் தான்.. நான் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா இறந்துட்டாங்க.. அப்பா இறந்ததும் என்னை கூட்டிக்கிட்டு அம்மா பாட்டி வீட்டுக்கு நிரந்தரமாக வந்துட்டாங்க.. அம்மாவுக்கு ஒரு தம்பி இருக்காரு.. பாட்டியும் தாத்தாவும் இருக்கும் வரை எனக்கும் அம்மாவுக்கும் எந்த குறையுமில்லாமல் பார்த்துக்கிட்டாங்க... பாட்டி தாத்தா தவறுனதும் மாமா மட்டும் தான் எங்களுக்கு துணை... ஆனா அவரோ எந்த பொறுப்பும் இல்லாமல் ஊதாரித்தனமாக ஊரை சுத்திட்டு இருந்தாரு.... அவரு பொறுப்பில்லாமல் இருந்ததால அம்மா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க... அம்மா சம்பாதியத்துல ஏதோ எங்க வாழ்க்கை சுமுகமா போனிச்சு.. ஆனா அப்போ கூட மாமா அம்மாவோட உழைப்புல பாதியை குடி, சீட்டாட்டம்னு வீணாக்கினாரு....

இப்போ ரெண்டு நாளைக்கு முதல்ல ஒருத்தனை கூட்டிட்டு வந்து இவன் தான் உன் மருமகன்னு அம்மா முன்னாடி நிறுத்துனாரு.. அம்மா மாமாவை எதிர்த்து சண்டை போட்டாங்க.. ஆனா அவரு அம்மா சொன்னது எதையும் காதுல வாங்கலை... அவரு மாப்பிள்ளைனு கூட்டிட்டு வந்தவன் ஒரு பொறுக்கி.. அவனுக்கு ஏற்கனமே கல்யாணமாகி ஒரு பையனும் இருக்கான்.. அவனுக்கு இரண்டாம் தாரமா என்னை கேட்டானு சொல்லி அவனை கூட்டிட்டு வந்து நடு வீட்டுல உட்கார வச்சிட்டாரு...... அவன் பார்வையே ரொம்ப கேவலமாக இருந்தது... அவன் வந்துட்டு போனதும் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொன்னேன்.. அதுக்கு என் மாமா அவனுக்கு அவ்வளவு சொத்து இருக்கு... உன்னை மகாராணி மாதிரி பார்த்துப்பான்.. அப்படி இப்படினு பணத்தாசையில உளறுனாரு.. நானும் அம்மாவும் அவருக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்.. ஆனா அவரு நாங்க சொன்னதை காதுலயே வாங்கிக்கலை..கடைசியில அம்மா என்னை அழைச்சிட்டு வீட்டை விட்டு வெளியேற தயாரானாங்க... அப்போ மாமா என்னையும் அம்மாவையும் அடிச்சி அங்கயிருந்த ரூமில அடைச்சு வச்சாரு.. நானும் அம்மாவும் எப்படியாவது அங்கயிருந்து தப்பிக்க முயற்சி பண்ணோம்.. ஆனா அந்த பொறுக்கிகிட்ட சொல்லி வீட்டுல காவலுக்கு ஆட்களை போட்டிருந்தாரு.... மூன்று நாள் எங்களை ரூமுல அடைச்சி வச்சிருந்தாங்க... இன்னைக்கு பரிசம் போடணும்னு அதட்டி உருட்டி என்னையும் அம்மாவையும் வெளியில விட்டாங்க... அப்போ கூட காவலுக்கு ஆட்கள் இருந்தாங்க... அம்மாஅவங்களை திசை திருப்பி என்னை அங்கயிருந்து தப்பிக்க வச்சாங்க... நானும் அவங்களை என்கூட வரச்சொன்னேன்.. ஆனா அவங்க நீ முன்னுக்கு போ...நான் இவங்களை ஏமாத்திட்டு வர்றேன்னு சொன்னாங்க... நானும் அம்மா சொன்ன மாதிரி அங்கேயிருந்து தப்பிச்சு பாதிதூரம் வந்ததும் அவனோட ஆட்கள் என்னை வளைச்சி பிடிச்சிட்டாங்க.. என்னை அந்த பொறுக்கியோட குடோன்ல அடைச்சி வச்சிருந்தாங்க....... அப்போ அப்போ..” என்றவளுக்கு மீண்டும் கண்களில் குளம் கட்ட ஷாகர் ஆதரவாக அவள் கையினை பிடித்துக்கொள்ள அது தந்த திடத்தில் சற்று தைரியம் பெற்றவள்

“அங்க அந்த பொறுக்கி வந்து என்கிட்ட உன் உடம்பு..... எனக்கு.... சொந்தமாகிட்டா... என் காலடியில தானேகிடக்கிடக்கனும்னு சொல்லிக்கிட்டு....எ...என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்... உயிரே போனாலும் அவன் நினைச்சது மட்டும் நடக்கவே கூடாதுனு முடிவுபண்ணி பக்கத்துல ஏதாவது இருக்கானு அவனுக்கு தெரியாம தடவிபார்த்தேன்..பக்கத்துல ஏதோ ஒரு பாரமான பொருள் கையில் அகப்பட அதை எடுத்து அவன் அசந்த நேரத்துல அவன் மண்டையை உடைச்சிட்டு தப்பிச்சு வந்துட்டேன்..... அவனோட ஆட்கள் என்னை எல்லா இடத்துலயும் தேடிட்டு இருக்காங்க.. அவங்ககிட்ட இருந்து தப்பிக்க தான் உங்க வீட்டுக்கு வந்தேன்...” என்று ஆதிரா கூற அதுவரை நேரம் அவள் கூறிய கதையை கேட்டு கொதித்துப்போயிருந்த ஷாகர் இந்நேரத்தில் தன் துணை அவளுக்கு நிச்சயம் தேவை என்று உணர்ந்தவன்

“இங்க பாரு ஆதிரா.. இனி உன்னோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு...இனி என்ன செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்க...?”

“தெரியல சார்.. எனக்கு அவன் கையில மாட்டக்கூடாது.. அதுமட்டும் போதும்..” என்று ஆதிரா கூற சற்று யோசித்த ஷாகர் ஏதோ முடிவெடுத்தவன் ஆதிராவிடம்

“ஆதிரா நீ என்கூட வர்றியா??”

“சார்...”

“தப்பா நினைக்காத ஆதிரா... நாளைக்கு காலையில நான் ஊருக்கு கிளம்பிருவேன்... நீயும் என்கூட வர சம்மதிச்சனா அங்கு உனக்கு தேவையான வசதி, பாதுகாப்பு எல்லாம் நான் ரெடி பண்ணுறேன்.. என்ன சொல்லுற??” என்று ஷாகர் கேட்க சற்று நேரம் யோசித்தவள் அவனது யோசனைக்கு சம்மதம் தெரிவித்தாள்.

“ஆனா ஆதிரா நீ இப்பவே ஊருக்கு கிளம்பனும்.. இன்னும் அரைமணித்தியாலத்துல ஒரு ட்ரெயின் இருக்கு... அதுல உன்னை ஏற்றிவிடுறேன்... நீ இறங்குற எடத்துல என் ப்ரெண்டு வந்து உன்னை பிக்கப் பண்ணிக்குவான்.. நானும் மார்னிங் வீட்டு சாவியை அங்கிள் கிட்ட கொடுத்துட்டு ஊருக்கு வந்துர்றேன்... அங்க போனதும் உனக்கு தேவையான மற்றைய எல்லாத்தையும் பார்த்துக்கலாம்.... நான் சொல்லுறது உனக்கு புரியிதா??”என்று கேட்டு உறுதிபடுத்திக்கொண்ட ஷாகர் தன் நண்பனை அழைத்து விவரமனைத்தையும் கூறினான்...

அந்த நண்பனும் தான் பார்த்துக்கொள்வதாக கூற அழைப்பை துண்டித்தவன் ஆதிராவிற்கு மாற்றுடை கொடுக்க அதை கேள்வியாக பார்த்த ஆதிராவிடம்

“வீட்டுக்குக்கு சமையலுக்கு வர்ற ஆண்டிக்கு கொடுக்கலாம்னு வாங்குனேன்.. இப்போ அவங்களை விட உனக்கு தான் இதுக்கான தேவை அதிகம்... இதை நீ போட்டுக்கோ.. நான் அவங்களுக்கு பணமா கொடுத்திடுறேன்...” என்று ஷாகர் கூற மாற்றுடையை எடுத்துசென்றவள் உடைமாற்றி வந்தாள்..
அவள் தயாராகி வந்ததும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தவன் ஒளிந்து மறைந்து ஆதிராவை ரயில் நிலையத்துக்கு அழைத்து சென்றான்...

இரவு நேரமென்பதால் இவர்கள் யார் கண்ணிலும் படவில்லை.... ஒருவாறு பாதுகாப்பாக ரயில்நிலையத்தை வந்தடைந்ததும் ஷாகர் ஆதிராவை பிறர் கண்ணில் படாமல் மறைந்தபடி அமர்ந்திருக்க சொல்ல ஆதிராவும் தான் அணிந்திருந்த சேலையின் முந்த்னையால் முகத்தை மறைத்தபடி அமர்ந்துகொண்டாள்..
சுற்றும் முற்றும் பார்த்து அவள் பாதுகாப்பை உறுதி செய்தவன் டிக்கெட் வாங்கிவிட்டு வரும் போது அந்த சம்பவம் நிகழ்ந்தது.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN