பூச்சரம் 12

மறுநாளே சரண் குணமாகி வந்து விட, அன்றே ஊர் சுத்த கிளம்பி விட்டார்கள் நண்பர்கள் மூவரும். அதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான் வேந்தன்.

முதலில் நெல்லையப்பர் கோவிலுக்குப் போனார்கள். எப்போதும் தென்றலுக்கு அவளின் ஊரையும் அதனின் பெருமைகளையும் ரொம்பவே பிடிக்கும். மஞ்சு வடநாட்டைச் சேர்ந்தவள் (அவளுடைய தாய் வடநாடு) என்பதால் அந்த கோவிலைப் பற்றி தன் தோழிக்குச் சொன்னாள் தென்றல்.

ஒரு ஏழை விவசாயி ஈசனுக்குப் படைக்க நெல்லைக் காயவைத்தவர், அதை மறந்து ஓர் இடத்திற்குச் சென்று விட, அதே சமயம் மழை திடீர் என்று பெய்ய, அந்த விவசாயி நெல்லை நினைத்துப் பதறி அடித்து பிடித்து ஓடி வர... அவர் வணங்கும் ஈசனோ அந்த நெல் மீது நீர் படாமல் வேலியிட்டு காக்க... அதில் மனம் நெகிழ்ந்த விவசாயியோ மன்னனிடம் சொல்ல, இவ்விஷயம் ஊர் எங்கும் பரவியது. அதன் பிறகு நெல்லை ஈசன் வேலியிட்டு காத்ததால் அந்த ஊர் திருநெல்வேலி என்று அழைக்கப் பட்டது. “அப்படி பட்ட எங்கள் ஊர் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தெரியமா?” என்று பெருமை பொங்கச் சொன்னாள் தென்றல்.

பின் சங்கரன் கோவிலுக்குச் சென்றார்கள். மாலை தாமிரபரணி ஆற்றில் ஆட்டம் போட்டார்கள். இங்கும் அதனுடைய பெருமையைத் தன் தோழிக்குச் சொல்ல மறக்கவில்லை தென்றல்.

“இந்நதி மட்டும் தான் தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்தை மட்டும் செழிக்கச் செய்யுது. பின் தமிழக கடல்பரப்பிலேயே கலந்து விடும் ஒரே நதியாம்! வருடத்தின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் ஓடும் மிகச் சில நதிகளில் இதுவும் ஒன்றாம்! இதனுடைய பிறப்பிடம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பூங்குளம்” இடம் என்றாள் தோழியிடம்.

அதே போல் இரவு உணவுக்கு முன் அங்கு பிரபலமான இனிப்பான இருட்டு கடை அல்வாவுக்கு அடித்துக் கொண்டார்கள் நண்பர்கள் மூவரும்.

மறுநாள் குற்றாலம் சென்று மூலிகைத் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட்டவர்களை வேந்தன் தான் சென்று அழைத்து வந்தான். இன்னும் திருநெல்வேலியையும் அதைச் சுற்றி பல இடங்கள் பார்க்க இருந்தாலும், வந்த நண்பர்கள் இருவரும் நாளைக்கு ஊருக்கு கிளம்ப இருக்கிறார்கள். காரை ஓட்டி வந்த வேந்தன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான். “ஒங்களுக்கு மாடலிங்னா ரொம்ப விருப்பம் போல... அப்டியா சரண்?” என்று கேட்க

ஆனால் அவனுக்குப் பதில் தந்தது என்னமோ தென்றல். “ஆமா மாமா... அதுவும் சாதா விருப்பம் இல்லை மாமா... முகம் தெரியாம பேய் பிசாசு மாதிரி உடை போட்டுக்கிட்டு மேடை ஏறச் சொன்னாலும் ஏறுவான் மாமா! எங்களுக்கு எல்லாம் நாங்க வடிவமைக்கிற ஆடையை மாடல் போட்டு வளம் வரணும்னு ஆசைனா இவனுக்கு அந்த மாடல்கள் கூட கை கோர்த்து மாடலிங் செய்யப் பிடிக்கும். பயபுள்ளைக்குத் திறமை இருக்கு. ஆனா ஒண்ணும் தான் கிளிக் ஆக மாட்டுது” நண்பனைப் பற்றி தாறுமாறாய் புகழ, அங்கு ஒரு நிமிடம் அமைதி நிலவியது.

சரணின் நண்பன் ஒருவனுக்கு ஒரு விளம்பரத் துறையில் வாய்ப்பு கிடைத்து விட, அது நேற்று தெரிய வந்ததில் கொஞ்சம் மன சுணக்கத்துடன் தென்றலிடம் சரண் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டான் வேந்தன்.

“ஆமா சார், விருப்பம்” என்று சரண் சின்னக் குரலில் சுரத்தே இல்லாமல் சொல்ல.

“எனக்குத் தெரிந்த சிமெண்ட் கம்பெனி ஓனர் ஒருத்தர் இருக்காக. அவர் கம்பெனி பொருளை வெளம்பரப்படுத்த ஆசப்படுதாக. நீங்க நடிக்கிறீயளா?” வேந்தன் கேட்க

“தெய்வமே! நடிக்கறீங்களானு கேட்கக் கூடாது தெய்வமே. சொல்லுங்க பின்னிடுறேன்.... ஆமா! பிராண்ட் பெயர் என்னங்க?” சரண் வந்த வாய்ப்பைப் பிடித்துக் கொள்ள நினைக்க

“KMT” என்றான் வேந்தன்.

அவ்வளவு தான்! நண்பர்கள் மூவரும் வாயைப் பிளந்தார்கள். “என்னது KMT புராடக்டா? சார்! அவங்க தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகான்னு ரொம்ப பேமஸ் ஆச்சே! சார், உங்களால் வாய்ப்பை வாங்கித் தர முடியுமா சார்?” சந்தோஷத்தில் கண்கள் மின்ன பயத்துடனே கேட்டான் சரண். நண்பர்கள் மூவருக்குமே தெரியும் அது எப்படிப் பட்ட இடம் என்று!

“நிச்சயமா உங்களால் முடியுமா மாமா?” தென்றலும் எங்கே நிராசையாகி விடுமோ என்ற பயத்தில் கேட்க

“முடியும்... இருந்தாலும் அதோட ஓனர் அம்மா என்ன சொல்லுறாகனு பாப்போம்” வேந்தன் பூடகமாய் பதில் தர

‘ஓ! பெண்ணா? இவருக்கு ரொம்ப பழக்கமோ! எவ்வளவு நாளா?’ இப்படி நினைத்தது சாட்சாத் நம் நாயகி பூந்தென்றல் தாங்க!

‘பூந்தென்றல்’ சிமெண்ட் பாக்டரி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பெயர் தாங்கிய கட்டிடத்திற்குள் நுழைந்தது வேந்தனின் கார்.

அதைப் பார்த்ததும் தன்னை மீறி கண்ணை விரித்தாள் தென்றல். முன்பு அவள் தந்தை அவளைப் பார்க்க வரும் போது வேந்தன் வீடுகளுக்கு சிமெண்ட் ஜாலி செய்யும் கூடம் ஒன்றை வைத்திருப்பதாக சொன்னதாக அவளுக்கு ஞாபகம். ஆனால் இன்று...

இவள் பெயரைப் பார்த்ததும், “ஏன் டி உனக்கு இப்படி ஒரு பாக்டரி இருக்கிறதை நீ சொல்லவே இல்ல?” மஞ்சு ஆதங்கமாய் கேட்க

“நீ வேற டி... எனக்கே இன்னைக்கு தான் தெரியும்” இவள் அவள் காதைக் கடித்த நேரம்

“ஒக்காருங்க மொதலாளி அம்மா!,” தன்னவளின் கையைப் பிடித்து முதலாளி சேரில் வேந்தன் அவளை அமர வைக்க.

படபடத்துப் போனவள் “என்ன மாமா... என்ன போய்” என்று எழுந்திரிக்க,

அந்த அறையில் இருந்த KMT சிமெண்ட் கவர் புளோ அப்களைப் பார்க்கும் போது அந்த புகழ் பெற்ற சிமெண்ட் கம்பெனியின் தாயகம் இதுதான் என்பது புரிந்தது அவளுக்கு. கூடவே இவ்வளவு பெரிய கம்பெனிக்கு முதலாளி தன் மாமாவா என்று அவளால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

மறுபடியும் அவள் தோள் பற்றி இருக்கையில் அமரவைத்தவன், “கந்தமாறன், மதி, தென்றல் இதுதேன் அந்த KMT” என்று அவள் காதோரம் இவன் விளக்க, இன்னும் ஸ்தம்பித்துப் போனாள் தென்றல்.

இவர்கள் மெளன பாஷையின் இடையில் புகுந்தது சரணின் குரல். “நீ எல்லாம் ஒரு ஃபிரெண்டா? இவ்வளவு பெரிய கம்பனிக்கு முதலாளியா இருந்துகிட்டு நேற்று என்ன புலம்ப வச்சிட்டியே? பேயே! பிசாசே! ராட்க்ஷஷி!” இன்னும் அவன் வாய்க்கு வந்த படி எல்லாம் திட்டிக் கொண்டு போக

“டேய்... டேய்... டேய்... அடங்குடா.. அவசரக் குடுக்க! புல்லட் ட்ரெயின் மாதிரி ஓடாத டா தவள! காரில் வரும் போது இப்படி ஒரு கம்பெனி கிடைக்குமான்னு உன் எதிர்க்க தானே கேட்டேன்? இது என் மாமாவோடது டா. எனக்கே இப்போ தான் தெரியும்” இவள் அவசரமாய் விளக்க

“அதெல்லாம் முடியாது. உன் மாமாவோடதுனா அப்போ அது உன்னோடதும் தான். அப்போ அவர் சொன்ன மாதிரி, முதலாளி மேடம்! என்ன மாடலா போடுவீங்களா?” சரண் இப்படி ஒரு கேள்வி கேட்டு அவள் வாயை அடைக்க

“சபாஷ் சரண்! இப்டி சொன்னதுக்காண்டி என் சேக்காலி கம்பெனி வெளம்பரத்துக்கும் ஒங்களையே மாடலா போடச் சொல்லுதேன்” வேந்தன் மகிழ்ந்து வாக்கு கொடுக்க, உச்சி குளிர்ந்தான் சரண்.

அதன் பிறகு சரணுக்கு வேந்தன் மேல் முன்பை விட மரியாதை கூடியது என்றால், மஞ்சுவோ அவனைப் பற்றிய எண்ணத்தை மனதிலிருந்து அழித்தாள்.

பின் அவர்கள் சென்றது வேந்தன் தன் தாய் பெயரில் வைத்து நடத்தும் ‘தாமரை இயற்கை உர தொழிற்சாலை’ முன்புறம் அலுவலக அறைகளும் பின்புறம் தோட்டங்களும் கொண்ட அமைப்பு கொண்ட இடம் அது. ஆபீஸ் அறை வரை மூவரும் எதுவும் உணர வில்லை. தோட்டத்தை நெருங்க நெருங்க மூன்று பேருக்கும் குமட்டிக் கொண்டு வந்தது.

இத்தனைக்கும் நால்வரும் காலுக்கு ரப்பர் காலுறை முதற்கொண்டு கையுறை வரை போட்டிருந்தார்கள். கூடவே முகக்கவசமும் அணிந்திருந்தார்கள்.

அங்கு எட்டடி உயரத்திற்கு மரத்தினால் ஆன தளம் ஒன்று கட்டப்பட்டு ஆட்டுப்பட்டியாக இருந்தது. ஆடுகளைத் திறந்தவெளியாய் அதில் அடைத்திருக்க, அது போடும் புழுக்கைகள் எல்லாம் அந்த மர தளத்தின் ஓட்டை வழியே கீழே மண்ணில் விழ, அதில் நீர் தெளித்து நாள் கணக்கில் வைத்துப் பிறகு உரம் ஆக்கினர். ஆட்டுப் புழுக்கை என்பதால் அதன் வாடையில் தென்றலால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை.

பின் ஒரு சிமெண்ட் தொட்டியில் திறந்த வெளியில் காய்கறிகளின் தோள்களும், பழங்களின் தோள்களும் கொட்டியிருக்க, திறந்த வெளியிலிருந்த அதன் இடத்திலும் புழுக்கள் நெளிந்தன. இதில் என்ன வென்றால் கையுறை போட்டிருந்தாலும் அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.

பின்னே, இயற்கை உரம் என்றால் சும்மாவா? இப்படி இயற்கை உரங்களில் விளைந்ததை சாப்பிடலாம். ஆனால் அதிக விளைச்சல் தருவதற்காக என்று இப்போது போடும் செயற்கை உரத்தினால் தான் மண்ணுக்கு மலட்டுத் தன்மையும், நமக்கு பல தீர்க்க முடியாத புதுப்புது நோய்களும் உருவாகிறது. இதை இன்றைய தலைமுறை என்று உணரப் போகிறதோ?

பின் மூவரையும் அலுவலக அறைக்கு அனுப்பிய வேந்தன், தான் மட்டும் சற்று நேரம் கழித்து வர. வந்தவன் பார்க்க குளித்து முடித்து புத்தம் புது வேறு ஆடையில் இருந்தான். அதுவே சரண் மற்றும் மஞ்சு மனதிற்குள் அவனைப் பற்றிய எண்ணத்தை உயர்த்தியது.

வீட்டுக்கு திரும்ப வரும் போது வண்டியில் மெளனம் தான் நிலவியது. காரணம் நண்பர்கள் மூவரும் தூங்கியிருந்தார்கள். வண்டி நின்றதும் சரணும், மஞ்சுவும் இறங்கி விட, இருவரும் வசதியாய் தூங்கட்டும் என்று நினைத்து முன் சீட்டில் வந்து அமர்ந்திருந்த தென்றலும் தூங்கியிருந்தாள். அவர்கள் எழுந்து இறங்கி சென்றாலும் இவள் எழ வில்லை.

இன்னும் தூக்கம் கலையாமல் நித்திரையில் புறா குஞ்சு என ஒரு புறம் தலை சாய்த்திருக்கும் தன்னவளைப் பார்த்து சற்று நேரம் ரசித்தவன் அவள் நெற்றியில் புரண்ட முடியைக் காதோரம் ஒதுக்கி, “ஏட்டி மொதலாளி அம்மா! ஒனக்குப் புருசனா எனக்கு எப்போம் டி சோலி குடுக்கப் போறவ?” என்று கேட்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விலக, அவன் மீசை குறுகுறுப்பில் தூக்கம் கலைந்தாள் அவள்.

அதற்குள் இவன் நல்ல பிள்ளையாய் தள்ளி அமர, “வீடு வந்தாச்சா மாமா?” என்றவள் இறங்க முற்பட

“ஏட்டி மொதலாளி அம்மா! இன்னும் நீ பாக்டரி பத்தி எதுவுஞ் சொல்லலியே…” இவன் ஆர்வமாய் கேட்க

“ஓ! ஆமா இல்ல?” என்று நெற்றிப் பொட்டை வருடியவள் “எல்லாம் நல்லா செய்திருக்க மாமா. சூப்பரா நிர்வகிக்கற. என்ன ஒண்ணு... அது உன் பாக்டரி! அத்தை பெயர் வச்ச சரி… என் பெயரை ஏன் மாமா வச்ச?” இவள் மனத்தாங்கலாய் கேட்க

“அது ஒண்ணும் என் பாக்டரி இல்லை. நம்ப பாக்டரி” இவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல

“ம்ஹும்... அது என்னைக்குமே உன் பாக்டரி தான். எனக்கு என் அப்பா சொத்தே போதும்” இவள் மறுபடியும் அதிலேயே நிற்க

“ஒன்னைய... இரு! மாமாட்ட ஒனக்கு சொத்தே குடுக்க வேணாம்னு சொல்லுதேன்” என்ற படி இவன் அவள் காதைத் திருக வர, சிறு வயதில் செய்வது போல் அவன் கையைத் தட்டி விட்டவள், “போடா!” என்ற சொல்லுடன் இவள் ஓடி விட, ‘எப்போம் டி மாமாவ வாடானு கூப்ட போகுத?’ என்ற எண்ணத்துடன் தானும் இறங்கி வீட்டிற்குள் சென்றான் வேந்தன்.

மஞ்சுவுக்கும் தென்றலுக்கும் ஒரே அறை என்பதால் இவள் படுக்க வர, விட்டத்தை வெறித்த படி படுத்திருந்தாள் மஞ்சு. “என்ன மேடம் தூங்கலையா? கண்ண திறந்துட்டே கலர் கலரா கனவா?” என்று தோழியைச் சீண்டிவள், “என் மாமா பாக்டரியைப் பார்த்த பிறகும் உனக்கு பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” தென்றல் கேட்க

“ப்ச்சு...” என்ற படி தோழி புறம் திரும்பினாள் மஞ்சு.

“என்ன டி... இவ்வளவு சோகம்! நாட்டாமையில வர்ற சரத்குமார் மாதிரி அவர் சரணை அடிக்கிறத பார்த்து கட்டினா அவரைத் தான் கட்டுவேன்னு இரண்டே நாளில் வந்த காதலைப் பற்றி என் கிட்ட அளந்து விட்டுட்டு இருந்த! இப்போ என்ன ஆச்சு? மாமாவும் உன்ன காதலிக்கறதா சொல்லிட்டாரா?” இவள் கேட்க

“உன்னை உதைக்கப் போறேன். வந்ததும் மனசுல உன் மாமா மேல் கிரஷ் இருந்தது என்னமோ உண்மை தான். ஆனா கிராமத்தில் இருந்தாலும் எவ்வளவு பெரிய பிசினஸ் செய்றார் அவர்! உங்க வீட்டு வசதிக்கும் பழக்க வழக்கத்துக்கும் எனக்கு ஒத்து வராது பா. அதுவும் இல்லாம இன்று காரிலே ஏறும் போது கால் சறுக்கிடுச்சு. அதற்கு அவர் பார்த்து வாங்க தங்கச்சி எங்காவது அடியானு கேட்டார். அப்போ நீயும் சரணும் தூரமா வந்துட்டு இருந்தீங்க. இப்படி என்ன கூப்பிடவரைப் போய் எப்படி டி?” என்றவள் அமைதியாகிவிட

“அப்போ என் மாமா உனக்கு வேணாமா? நீ அவர கல்யாணம் செய்துகிட்டா எனக்கு இங்கே ஒரு உறவு இருக்கும், எப்போ வேணா உரிமையா வந்து போகலாம்னு நினைத்தேன். இப்படி ஏமாத்திட்டியே டி...” தென்றல் குறைபட

தலையைத் தன் கையில் தாங்கி தோழியின் முகத்தை நன்கு பார்த்தவள், “உளறாத... உனக்கு இல்லாத உறவா? உனக்காக இங்கு எல்லோரும் துடிக்கிறாங்க உருகுறாங்க. நீ இப்படி சொல்ற! உன் பெயரில் உன் மாமா கம்பனியே வைத்து நடத்துகிறார். அவ்வளவு அன்பு அவருக்கு உன் மேல்!”

அவள் முடிக்கவில்லை “அன்பு மட்டும் இல்லை டி... என் மேலே கொள்ள காதலே இருக்கு மாமாவுக்கு. அதுவும் கட்டினா என்னைத்தான் கட்டுவேன் என்ற அளவுக்கு” தோழியின் ஆச்சர்ய பார்வையைப் பார்த்தவள் “என் மாமா கிட்ட தொட்டு பேசுவேன், உரிமையா சண்டை போடுவேன், ஏன்... எனக்கு வேணும் என்றதை கூட கேட்டு வாங்கிப்பேன். ஆனா அவரைக் காதலிக்கவோ கல்யாணம் செய்துக்கவோ மாட்டேன்...” தென்றல் உறுதியாய் சொல்ல

“ஏன் டி?”

“அது அப்படி தான்! என் கனவு, லட்சியம் எல்லாம் வேற. இவங்க கூட உட்கார்ந்துகிட்டு குலம் ஜாதின்னு அதையே கட்டிட்டு சாக முடியாது” இறுதியாய் உறுதியாய் சொன்னவள் இத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் கண்களை மூடிக் கொள்ள

“அப்போ நீ யாரையாவது விரும்பறியா?” தோழி கேட்க

“ம்ம்ம்... அப்படித் தான் வச்சிக்கோயேன்” என்றவள் தோழிக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள் தென்றல்.

இப்படி கனவுடன் இருக்கும் தென்றலுக்கும் மனம் முழுக்க காதலுடன் இருக்கும் வேந்தனுக்கும் விதி என்ன வைத்து இருக்கிறதோ?...

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.