சாதி மல்லிப் பூச்சரமே !!! 15

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 15

இவர்கள் இருவரும் ஓட்டலில் உண்டு விட்டு வீட்டுக்கு வர, சற்று நேரத்திற்கு எல்லாம் மொத்த குடும்பமே இவர்கள் பின்னால் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. வந்ததும் ஐயாரு சொன்ன முதல் வார்த்தை “தென்றலுக்கு ஆறு மாசத்துல படிப்பு முடிஞ்சிரும்தேன மாறா? அப்போம் கையோட கையா கல்யாணத்த முடிச்சிருவோம்.


ஒன் பொண்ணு பொறந்ததும் வேந்தனுக்குதேன்னு சொல்லி முடிவாயிருச்சி. இன்னும் ரெண்டு நாள்ல நல்ல நாள் பாத்து ஒப்புத் தாம்பூலம் மாத்திக்கிடுவோம். போன் போட்டு மலரையும், சுந்தரத்தையும் வரச் சொல்லுடே. அதுக்கான சோலிய வெரசா எல்லாரும் ஆரம்பிங்கலே” என்று நிச்சயத்துகான வேலையைப் பற்றி அனைவருக்கும் கட்டளையிட


தன் மருமகனைப் பார்த்து புன்னகைத்து விட்டு வேலைகளைப் பார்க்க பரபரப்பானார் மாறன். வேந்தனுக்கும் சந்தோஷம். சிறுவயது காதல் நிறைவேறப் போகிறது இல்லையா!


அப்போது தென்றல் அங்கு தான் இருந்தாள். ஐயாருவின் பேச்சைக் கேட்டவள், “அப்பா! நில்லுங்க… எங்க போறீங்க?” இவள் தந்தையைக் கேட்க


“நிச்சயத்துக்கு நாள் பாக்கத்தேன். ஐயா சொன்னதை கேக்கல தாயி?” என்றவர் தங்கை தாமரையிடம், “மலருக்கு போன் போட்டு சொல்லிரு தாயி” மகளுக்குப் பதில் கொடுத்த மாறன் பின் தங்கையிடம் பரபரப்பாக முடிக்க.


“எல்லாத்தையும் நிறுத்துங்க ப்பா. என்ன நடக்குது இந்த வீட்டுல? அவர் இப்போ பேசினது உங்க மக கல்யாணத்தப் பற்றி. அதற்கு நீங்களும் சரின்னு ஓடுறீங்க... என் கிட்ட ஒரு வார்த்தையும் கேட்கத் தோணாதா?” எப்போதும் தென்றல் ஐயாருவை எதிர்த்துப் பேசுவாள் தான். ஆனால் இன்று மண்டபத்தில் நடந்த பிரச்சனையில் முழுமையாக அவரை எதிர்க்கத் தோன்றியது. அதான் இப்படி ஒரு பேச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.


“இதென்ன புது வழக்கம்! நாம எப்போம் பொட்டப்புள்ளைங்கள்ட்ட கேட்டுகிட்டு கெட்றவங்க கெடையாதுல்ல…” இது மூத்த தலைமுறையான பாட்டி கொடுத்த பதில்.


“இப்படி எல்லாம் வழக்கம், பழக்கம்னு வாழைப் பழம் மாதிரி கதை சொல்ல முடியாது அப்பத்தா. இந்த குடும்பத்தில் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்துக்கிட்டவங்களை நான் பார்த்து இருக்கேன்” தாமரையை ஒரு பார்வை பார்த்தபடி நம் நாயகி பதில் கொடுக்க


தன் தாயைச் சொல்லவும், வேந்தன் “ஏய்!” என்று எகிறிக் கொண்டு அவளிடம் செல்ல நினைக்க, தாமரை தான் அவனைத் தடுத்தார்.


குடும்பத்தில் நடப்பதைப் பார்க்க செண்பகவல்லிக்கும், கலையரசனுக்கும் சுவாரசியமாக இருந்தது.


“அதேல்லாம் வேத்து ஆளா புதுசா பேசுனாதேன் சம்மதம் கேப்பாக. இங்கனதேன் வேந்தனுக்கு நீ ஒனக்கு வேந்தன்னு ஆயிருச்சே... பொறவு என்ன?” சித்தப்பா என்ற முறையில் மூர்த்தி கேட்க


“இருந்தாலும் இப்போது நடத்தலாமானு என்ன ஒரு வார்த்தை கேட்கணுமா இல்லையா?” தென்றலும் விடுவதாய் இல்லை.


“அப்டி எல்லாம் கேக்க முடியாது!” ஐயாரு சொல்ல


அதே நேரம், “சரி… நீ தேன் ஒன் சம்மதத்தச் சொல்லு” என்று ஒரு தந்தையாய் மாறன் கேட்க


ஐயாரு சொன்ன பதிலில் கொதித்தவள், “எனக்கு இப்போ இல்ல எப்பவுமே மதிமாமாவை கட்டிக்க விருப்பம் இல்ல” ஆணித்தரமாய் இவள் பதிலைச் சொல்ல, ஒரு நிமிடம் அங்கு அமைதி நிலவியது.


“ஏன்? என் ராசாவுக்கு என்னட்டி? நாளைக்குப் பதினெட்டுப் பட்டியையும் கெட்டி ஆளப் போறவன் டி! இவன் நடந்து வார்ற நடைய பாத்தே ஊர்வசி ரம்பைனு தேவலோகத்து பொண்ணுகளே என் பேரன் பின்னாலயே சுத்துவாளுக. அவனுக்கு பொண்ணு கேட்டா எட்டு ஊர் ஜில்லாவும் வண்டி கெட்டிட்டு வந்து சம்மந்தம் பேச நிக்கும்வே” இவளுக்கு விருப்பம் இல்லாததால் பாட்டி தன் பேரனுக்காகப் பரிந்து வர


“அப்போ அந்த ரம்பையில ஒருத்தியையே கட்டி வை… எனக்கு வேணாம். உன் பேரனுக்காக இவ்வளவு பேசுறியே, எங்களுக்குள் என்ன பொருத்தம் இருக்குனு கட்டி வைக்கப் பார்க்கிற? நிறத்துல நான் கறந்த பால்னா அதைச் காச்ச உதவுற கரி பிடித்த பாத்திரம் உன் பேரன். நான் மேல் படிப்பு எல்லாம் படித்து இருக்கேன். உன் பேரன் ஒன்பதாம் கிளாஸ்.

நான் விதவிதமா ஆடை வடிவமைக்கிறவ, அதைப் போடறவ. உன் பேரனுக்கு மடித்துக் கட்டின வேட்டியும் வெள்ளைச் சட்டையும் தான் போடத் தெரியும். இதை எல்லாத்தையும் விட தினந்தினம் புழு பூச்சியோட இருந்துட்டு வேர்வை நாற்றத்தோட வர்ற உன் பேரன் எனக்கு வேணாம். இப்போ தெரியுதா உன் பேரனுக்கும் எனக்கும் எவ்வளவு பொருத்தம்னு?” தென்றல் முடிக்க, அடுத்த நொடி அவள் கன்னம் பழுத்திருந்தது.


அடித்தது அவள் தந்தை தான்... “ஒன்னைய படிக்கறதுக்காண்டி அனுப்பி வெச்சதுக்கு என்ன பேச்சு பேசுத!” மறுபடியும் அவர் மகளை அடிக்கச் செல்ல


“வாடி என் மாமன் பெத்த ரத்தினமே! நமக்குள்ள பொருத்தமாடி வேணும் பொருத்தம்? இந்த பொருத்தம் இல்லாதவனதேன் நீ ஊர் முழுக்க என் புருசன்னு சொல்லிக்கிடணும். இம்புட்டும் சொன்ன ஒன்னைய நான் சும்மா விட்டா… பொறவு நான் ஒன் மாமன் இல்லட்டி.


வேர்வை நாற்றம் புடிச்ச என் கூட தெனந்தெனம் ஒன்னைய குடும்பம் நடத்த வெக்குதேன் டி பாத்துக்க! எதுக்கு மாமா நாள் நட்சத்திரம் எல்லாம்? ஒரு மஞ்சக் கயித்தக் குடு மாமா. இந்த நிமிசமே ஒன் பொண்ணு கழுத்துல கெட்டி என் பொஞ்சாதியா ஆக்கிக்கிடுதேன்” வேந்தன் வேட்டியை மடித்துக் கட்டிய படி மீசையை முறுக்க தென்றலுக்கு சர்வமும் அடங்கிப் போனது.


அவளுக்கு மேற்கொண்டு படிக்க வேண்டும். அதைப் பற்றி தந்தையிடம் பேசத் தான் அவள் இங்கு வந்தது. அதற்கு அவர் சம்மதிக்காமல் போக, அந்த கோபம் இன்று திருமணத்தில் நடந்த பிரச்சனை எல்லாம் ஒன்று சேர, இப்போது இவர்களின் திருமணத்தைப் பற்றி பேசவும் தன் மனதில் இல்லாததைச் சொல்லி வேந்தனை அசிங்கப் படுத்தினால் இந்த திருமண பேச்சு நிற்கும் என்று இவள் நினைத்திருக்க, ‘இப்போது இவர் தான் நினைத்ததை நடக்க விடமாட்டர் போலவே...’ என்று இவள் நினைக்க


“அதேன் சரி.... எதுக்கு ஆறு மாசம்? இப்போம்வே கல்யாணத்த வெச்சிக்கிடலாம்... எலேய் மாறா... படிப்பு போதும் நிறுத்திருலே” என்று ஐயாரு சொல்ல, ‘ஐயோ! போச்சா.... போச்சா... என் வாயாலேயே என் படிப்புக்கு முழுக்கு போட்டுகிட்டனா?’ தென்றல் மனதில் நினைக்க, நான் இன்னும் முடிக்கவில்லை என்பது போல் ஐயாருவின் வார்த்தைகள் தொடர்ந்தது. “நாம இவள படிக்க அனுப்பி வெக்கோம். பொறவு இவளும் இவ சேக்காலி போல யாரோ ஒரு வேத்து சாதிப் பயல காதலிக்குதானு கூட்டியாந்து நிறுத்திருவா ஒன் பொண்ணு” ஐயாரு திட்டவட்டமாய் சொல்ல


“இப்போ மட்டும் நான் யாரையும் காதலிக்கலைனு உங்களுக்குத் தெரியுமா? நான் இன்னொருத்தரை மனதார காதலிக்கிறதால தான் இவரை கட்டிக்க முடியாதுன்னு சொல்றேன். பேரு ஹம்ஷானந்த். அவரும் என்னைத் தான் விரும்புறார்.


சின்ன வயசு முடிச்சினு நீங்க வேணா சொல்லிக்கங்க. என் மனசுல இன்னொருத்தர் வந்தது வந்தது தான். அவரைத் தான் கட்டிக்குவேன். வெளிநாடு போய் என் படிப்பு முடிந்ததும் சொல்லலாம்னு இருந்தேன்” இவளும் முதல் முறை சொல்கிறோம் என்ற அச்சம் இல்லாமல் இது தான் சமயம் என்று தன் காதலில் உறுதியாய் இருக்க


அவள் சொல்லச் சொல்ல ஒரு வினாடி அதிர்ந்து தன்னவளை ஆழ்ந்து நோக்கியவனோ பின் அவளை உறுத்து விழிக்க, தென்றல் தான் பயத்தில் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.


மறுபடியும் அங்கு அமைதி நிலவியது. “எம்புட்டு திமிர், ஏத்தம் இருந்தா எவனையோ காதலிக்குதானு சொல்லுவா?” தந்தை அடித்த அடியில் எங்கோ போய் விழுந்தாள் தென்றல். “அதுக்கு நாங்க சம்மதிக்கணுமாம்ல… முடியாது. மருமவனே, இப்பவே நீ கெட்டுடா தாலிய” மாறன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்க


“இப்டி ஒரு கல்யாணம் என் மகனுக்கு வேணாம் ணே” இடை புகுந்து சொன்னது தாமரை தான். “நான் காதலிச்சு கல்யாணம் செஞ்சவ. அதோட ஆழம் எனக்குத் தெரியும்ணே. அதுவும் இல்லாம இவ்ளோ பேசின பெறவு இவ என் மவனுக்கு வேணாம்ணே. இப்போ இல்ல எப்பவும் இவள நான் என் மருமகளா ஏத்துக்கிட மாட்டேன்” அவரின் கண்ணில் ஒரு துளி கண்ணீர் உருண்டு ஓடியது. தான் பெற்ற மகனை எந்த தாய் தான் விட்டுக் கொடுப்பார்?


“யம்மா...” வேந்தன் ஏதோ சொல்ல வர


அதே நேரம் “இப்டி தலைக்கு தல எல்லாரும் முடிவு எடுத்தா பொறவு இங்கன நான் எதுக்கு இருக்குதேன்?” ஐயாரு கோபப் பட


“என்னைய மன்னிச்சிடுங்க சித்தப்பா. என் முடிவு இதுதேன். வேந்தா! அம்மை வேணும்னு நெனச்சா நான் சொல்லுறதைக் கேளு. இல்லனா...” மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் தன் அறைக்குச் சென்று விட்டார் தாமரை.


“எனக்கு அப்பவே தெரியும்டே. கொஞ்ச நாளாவே இந்த பொடிசோட செய்கையே சரியில்ல... இன்னைக்கி மண்டபத்துல எதுத்து பேசுதப்பவே சீக்கிரம் இவளுக்கும் மூக்கணாங்கயிறு கெட்டி ஒக்கார வெக்கணும்னு நெனச்சேன். இன்னைக்கி காதல்னு வந்து நிக்கறவ மேக்கொண்டு எதுக்கும் இந்த வீட்டு வாசப் படிய மிதிக்காத நீ...” ஐயாரு தன் முடிவைச் சொல்லி விட்டு விலகி விட


“ஐயோ! யார் கண்ணு பட்டுச்சோ... தேன்கூட்டுக் கணக்கா இருந்த குடும்பம் இப்டி செதறிப் போகுதே… அம்மா மாரியாத்தா! வருசா வருசம் ஒனக்கு கூழ் ஊத்தி தீ மிதிச்சேனடி… ஒனக்கு கண்ணு இல்லையாடி…” பாட்டி ஒருபுறம் ஒப்பாரி வைக்க


“சந்தோசமா? இப்போம் ஒனக்கு சந்தோசமா? எப்போம் என் மாப்ளைய கெட்டிக்க மாட்டணு சொன்னுதியோ அந்த நிமிசமே ஒனக்கும் எனக்கும் எந்த ஒறவும் இல்ல. நான் செத்தாலும் இனி நீ என் மொகத்துல முழிச்சுராத…” மனம் தாங்காமல் ஆத்திரத்தில் மாறன் தந்தை மகள் உறவை வார்த்தையால் முறிக்க


“மாமா....” வேந்தன் தடுக்க


“பொண்ணுக்காக மற்றவங்க கிட்ட சண்டை போடற அப்பாவைத் தான் பார்த்து இருக்கேன். ஆனா நீங்க உங்க தங்கச்சி மகனுக்காக என்ன வேண்டாம் சொல்லிட்டிங்க இல்ல? இதுவரைக்குமே நீங்க எனக்கு அப்பாவ இல்ல. இனியும் நீங்க எனக்கு வேணாம்” தென்றலும் தன் மனக்குமுறலைக் கொட்டியவள்


தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பியவள் அங்கு நின்றிருந்த வேந்தனிடம், “சந்தோஷம் தானே?” என்று கேட்டவள் யாரும் தடுக்காமல் போக, ஊருக்குச் சென்று விட்டாள் தென்றல். அதன் பின் அந்த வீட்டுக்கே சூனியம் வைத்தது போல் ஆனார்கள் அந்த வீட்டு மனிதர்கள்.
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN