teaser

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அரண்மனைக்குச் செல்லாமல் தனிமையில் இருக்க நினைத்தவன் தனக்கென்று கட்டியிருக்கும் மாளிகைக்கு இவன் எந்த வித முன் அறிவிப்புமின்றி வர, அதேநேரம் இங்கு அடிக்கடி இவன் வர வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அந்த மாளிகையின் காவலாளியோ இயற்கை உபாதைக்காக சற்றே தூரமாக சென்றிருக்க, இவன் ஹாரன் அடித்தும் கதவைத் திறக்கவில்லை என்பதில் கடுப்பானவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் காரால் இவன் கேட்டை வேகம் கொண்டு இடிக்க, இவன் பக்கத்தில் அமர்ந்திருந்த யஜ்வனோ எந்த வித சலனமும் இல்லாமல் கையைக் கட்டி கொண்டு தன் முதலாளியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனுக்குத் தானே தெரியும் முதலாளி எவ்வளவு கோபத்தில் இருக்கிறார் என்று! காரைக் கூட இவனை ஓட்ட விடாமல் விஷ்ணுவே ஓட்டவும் விஷயம் பெரியது என்று அறிந்து அடங்கி அமர்ந்து விட்டான் இவன்.


யஜ்வன் விஷ்ணுவுக்கு காரோட்டி, அந்தரங்க உதவியாளர், பல நேரத்தில் அவனுக்குக் கையாள். மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் வரும் கமலின் பி.ஏவான பீம் பாயாக அசப்பில் இருப்பவன். விசுவாசத்தில் விஷ்ணு கழுத்தை அறுத்துக் கொண்டு சாகச் சொன்னாலும் தயங்காமல் செய்பவன். மொத்தத்தில் வம்சிவிஷ்ணுதரனுக்கு ஆல் இன் ஆல் இந்த யஜ்வன் தான்!


மூன்றாவது முறையாக விஷ்ணு கேட்டில் காரைக் கொண்டு போய் இடிக்க, அதே நேரம் மறு பக்கத்தில் இருந்து காவலாளி பதட்டத்துடன் கதவைத் திறக்க, இவன் வேகத்திற்கு காவலாளியையும் இடித்துத் தள்ளிக் கொண்டு படு வேகத்துடன் போர்டிகோவில் சீறிப் பாய்ந்து நின்றது இவனுடைய கார்.


காரிலிருந்து இறங்கியவன், “ஐயோ! அம்மா...” என்ற காவலாளியின் கூக்குரலோ அவனின் ஓலமோ இப்படி எதுவுமே இவனை எட்டாதது போல், ஏதோ எதுவுமே நடவாதது போல


“யஜ்வன்! விழுந்து கிடக்கிற அந்த நாயை என்னனு பாரு. உயிரோட இருந்தா பணத்தைக் கொடுத்து செட்டில் செய்து அனுப்பு. இனி இவன் வேலைக்கு வர வேண்டாம். வேற ஒருத்தனை சீக்கிரம் இவன் இடத்துக்குப் போடு. அதே செத்துப் போயிருந்தான்னா, வேலை நேரத்துல அதைச் செய்யாம ரோட்டில் தெரு நாய்ங்க கூட விளையாட்டிட்டு இருந்தான், அதான் அதுங்க கடித்து வைத்ததில் செத்துட்டான்னு சொல்லி கேஸைக் க்ளோஸ் செய்” என்ற நேரம் தற்போது காவலாளி வலி வேதனையால் தன் குரலை அதிகப்படுத்தவும்,


அதைக் கேட்டவன் ஒரு வித முக சுளிப்புடன், “முதலில் இந்த நாராசமான சத்தத்தை அவன் குரல்வளையை அழுத்தியாவது நிறுத்து டா. ச்சை! வலி வந்தா ஏதோ உயிரே போன மாதிரி கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்வானுங்களாம்” என்று அலட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாய் யஜ்வனுக்கு கட்டளை இட்டவன் வெகு அலட்சியத்துடன் கம்பீரமாய் படி ஏறினான் விஷ்ணு.


இது தான் இந்த சாம்ராஜ்யத்தின் அரசனான வம்சிவிஷ்ணுதரனின் குணம், இயல்பு. சக மனிதர்களின் உயிர் மதிப்பை அலட்சியம் செய்பவன். யாருடைய வலியும் வேதனையும் இவனை பாதிக்காது. அதற்காக மற்றவர்களைத் துன்புறுத்தி ரசிக்க மாட்டான். இவனை வீழ்த்த நினைத்தால் அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று நிறுத்துவான். அதிலும் கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்பது இவனுக்கே தெரியாது. சக மனிதர்களைப் போல் என்ன தான் இவன் ரத்தமும், சதையும், உணர்வுகளும் கொண்டு படைக்கப் பட்டிருந்தாலும் ஒரு விதத்தில் இவனும் எந்திரன் படத்தில் வரும் சிட்டியும் ஒன்று தான்!


💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖


பின்புற தோட்டத்தில் அமர்ந்திருந்த ஜுவிக்கு முகத்தில் பயம் கலந்த கவலையின் ரேகைகள்… இனி என்ன செய்வது, எப்படி புரியவைப்பது என்று ஒன்றும் புரியாத நிலை அவளுக்கு. ‘நேற்று வீட்டில் உள்ளவர்களிடம் தனக்குத் திருமணம் முடிந்து விட்டதாக சொன்னபோதே யாருடைய முகமும் சரியில்லை. நான் என்ன செய்ய? என் வாழ்வில் விதி விளையாடி விட்டதே! யாரை நான் நிந்திக்க? நேற்று திருமணம் முடிந்ததைப் பற்றி சொன்னதற்கே அப்படி இருந்தார்கள் என்றால் இப்போது நான் என் வயிற்றில் குழந்தை இருப்பதைப் பற்றி சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?


ஆனால் சொல்லித் தானே ஆக வேண்டும்? அதிலும் கழுத்தில் தாலி இல்லாமல் வயிற்றில் குழந்தையோடு வாய் மொழியாக நான் சொல்லுவதை நம்பி ஏற்று இல்லாத கணவனை நேரில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னால் நான் என்ன செய்வேன்? நடைமுறையில் நடக்காத ஒரு திருமணத்திற்கு இந்த உலகில் எங்கு தேடினாலும் கணவன் என்ற உறவே இல்லாமல் இருக்கும் எனக்கு எங்கிருந்து கணவனை தேடிக் கொண்டு வந்து இவர்கள் முன் நிறுத்துவது? இப்போது குழந்தை தங்கியிருப்பது எனக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் சொல்லாமல் மறைக்க நினைத்தாலும் இன்னும் இரண்டு மாதத்தில் என் வயிறு காட்டி கொடுத்துவிடுமே! அப்போ என்ன செய்ய?’ இப்படியான பல யோசனைகளில்…
சுற்றுப்புறம் அறியாமல் அமர்ந்திருந்த ஜீவியை உலுக்கினாள் ஆத்ரிகா.


“ஏய் ஜீவி! என்ன இது? கூப்பிட கூப்பிட இப்படியே அமர்ந்து இருக்க… கண்ணைத் திறந்துகிட்டே உன் வீட்டுக்காரரோட கனவுல டூயட்டா? இனி கனவு எல்லாம் காண வேண்டாம். உன் வீட்டுக்காரர் இங்கேயே உன்னைத் தேடி வந்துட்டார், எழுந்து வா” என்று அவள் அழைக்க


இவளோ, “என்னது என் வீட்டுக்காரரா!?” மாமன் மகள் சொன்னதை உள்வாங்க முடியாமல் அப்படியே அமர்ந்திருக்க


“நீங்க இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தீங்கனா வளவளனு பேசுவீங்களே! இப்போ அதற்கான நேரம் இல்ல, எழுந்து வா ஜீவி. உன் கணவர் எவ்வளவு நேரம்தான் உன்னை பார்க்க காத்துகிட்டு இருப்பார்?” சித்தி விஜயா ஜீவியை அதட்டி அழைக்க


‘என்னது! உண்மையாகவே என் கணவன் வந்திருக்காரா? அது எப்படி இந்த உலகத்திலே அப்படி ஒருவன் இல்லாதவன் வர முடியும்?’ என்று யோசித்தவள் அவர்கள் இருவரையும் தள்ளிக்கொண்டு இவள் வீட்டின் உள்ளே ஓட,


அதற்கும், “பாருங்க அத்தை! நீங்க வந்து கணவன்னு சொன்னதும் அவரைப் பார்க்கிற அவசரத்துல நம்மை எப்படித் தள்ளி விட்டு ஓடுகிறாள்னு!” என்று ஆத்ரிகா ஜீவியை வார


“இருக்காத பின்னே? எவ்வளவு நாள் கழித்து சந்திக்கிறாங்க இருவரும்” என்றபடி சந்தோஷத்துடன் சிரித்தார் விஜயா.


இதையெல்லாம் தன் காதில் வாங்கினாலும் மேல்மூச்சு வாங்க வேகமாக ஓடி வந்தவள், அங்கு அவனைக் கண்டதும் அதே இடத்திலேயே நின்று விட்டாள் ஜீவி!


அழகாய் பல் வரிசை தெரிய, “ஹா... ஹா... ஆமாம் பாட்டி! அவ கொஞ்சம் அமைதி. எல்லாம் என் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் தான் எதுவும் தகவல் சொல்லாம திடீர்னு கிளம்பி வந்தேன்” என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் நேற்று இவள் பார்த்த விஷ்ணுதரன்!


‘இவனா? ஐயோ! இவனுக்கு எதுவரை என்னை பற்றி தெரியும்? எதற்கு என் கணவன்னு நான் சொன்னதையே இவனும் சொல்லி கொண்டு அதையே உண்மை ஆக்க பார்க்கறான்?’ இவள் சிந்தனையைத் தடை செய்தது


விஷ்ணு “ஏய் தாருமா! மை ஸ்வீட் ஹார்ட்! என்ன டா அங்கேயே நின்னுட்ட? கம் டியர்...” உரிமையுடன் இரண்டு கையையும் விரித்துக் காதலுடன் ஜீவதாருணிகாவை அதாவது மனைவியை அழைக்க


அவளோ, ‘இவன் என்னைத் தான் அழைக்கிறானா? ஆமாம்.. என்னது தாருமாவா… ஏது இவன் ஸ்வீட் ஹார்ட் டா’ நிஜத்தை நம்ப முடியாமல் உடல் வெடவெடக்க, இவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வரவும் நின்ற இடத்திலேயே இவள் அப்படியே சரிய இருந்த நேரம்


அதை யூகித்தவனோ, “ஏய் தாரு! உன் வயிற்றில் பேபி இருக்கு டி… எக்குத் தப்பா விழுந்துடாத டி…” என்ற எச்சரிக்கையுடன் இவன் அவளை இரண்டே எட்டில் நெருங்கி கையில் தாங்கிக் கொள்ள


அதிர்ச்சியில் ‘எனக்கு மட்டும் தெரிந்த குழந்தை விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்?’ என்று குழம்பியவள் அந்த நிலையிலும் அந்நியன் ஒருவன் கையில் தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அவனிடமிருந்து திமிறி இவள் விலக முயற்சிக்க


“பேசாமா இப்படியே இரு. எல்லாம் உன் வயிற்றில் இருக்கிற என் பேபிக்காகத் தான் உன்னை என் கையில தாங்கினேன். இல்லனா உன்னை எல்லாம் என் நகம் கூட தீண்டாது” என்று வந்தவன் அவள் காதோரம் ரகசிய குரலில் ஒருவித அலட்சியத்துடன் எச்சரிக்க“என்னது இவன் குழந்தையா?!” என்று முணுமுணுத்தவள் அவன் கூற்றை நம்ப முடியாத அதிர்ச்சியில் அவன் கையிலேயே மூர்ச்சையாகி இருந்தாள் ஜீவதாருணிகா.
 
Last edited:
Ooooo.... Namba hero enna pa இப்படி இருக்கான்..... Avaluku ava kuzhanthai ku யாரு அப்பா nu தெரியலையா... விஷ்ணு அவன் தான் அப்பா nu solraan... எங்கட nadakuthu இங்க... Super Super Super maa... Semma teaser
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Ooooo.... Namba hero enna pa இப்படி இருக்கான்..... Avaluku ava kuzhanthai ku யாரு அப்பா nu தெரியலையா... விஷ்ணு அவன் தான் அப்பா nu solraan... எங்கட nadakuthu இங்க... Super Super Super maa... Semma teaser

love you chiththu maa Flying kiss Flying kiss Flying kiss
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN