சாதி மல்லிப் பூச்சரமே!!! 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 17

ஐயாரு சொன்ன பதிலில்… அங்கு இருந்தவர்கள் யாரும் வாயைத் திறக்க வில்லை… ஆனால் மூத்த தலைமுறையான பாட்டி…
“எலேய் ஆக்கங்கெட்டவனே... அந்த சிறுக்கி மவ சிண்ட புடிச்சி இழுத்து வந்து நம்ம கொட்டகையிலே அடைக்காம என் பேரனுக்கு வேற பொஞ்சாதி பாக்கறானாம்... என் மவராசன் இருந்தா என் பேரனை இப்டி விட்ருவாரா?” பாட்டி ஒரு பக்கம் மூக்கை சிந்த, அவருக்கு பேத்தி நிலவழகியைப் பிடிக்கும். ஆனால் அவளைப் பெற்ற தாய் செண்பகவல்லியைப் பிடிக்காது, அதான் இந்த புலம்பல்.


“ஒங்களுக்கு என்ன கூறு கீறு....” வேந்தன் குரலை உயர்த்துவதற்குள்


செண்பகவல்லியோ, “எளியவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மச்சினினு சொல்லுவாக... அப்டிதேன் ஒங்களுக்குத் தெரியறாளோ என் பொண்ணு....” என்று சபை நாகரிகம் அறியாமல் வாய் வெடிக்க, மூர்த்தி மனைவியை அதட்ட, ஐயாரு அசுவசையில் காதைப் பொத்திக் கொள்ள


விடுவேனா எதற்கும் அடங்குவேனா நான் என்ற ரீதியில் விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தார் அவர். “அவ இந்த வீட்டு வாரிசு மட்டும் இல்ல.... என் அப்பாரு மாணிக்க வேலுவோட வாரிசும்தேன். நீங்க யார் அவ விசயத்துல முடிவெடுக்க?” தன் கணவனை மட்டும் இல்லாமல் அங்கிருந்தவர்களையும் சேர்த்து கேள்வி கேட்டவர்


“மூத்தவர் பெத்த மக மட்டும்தேன் இந்த வீட்டு வாரிசா… ஏன் நான் பெத்த என் மக வாரிசு இல்லையா? இத்தனைக்கும் அவருக்கு முந்தி…. ரெண்டு வருசத்துக்கு முந்தியே நான் பொண்ண பெத்துட்டேன். அப்டி பாத்தா என் மவதேன் இந்த வீட்டு மூத்த வாரிசு. ஆனா நீங்க எல்லாம் அப்டியா நடத்தினீய என் மவள? அந்த தென்றல் பவுசுல என் மக எந்த விதத்துல கொறஞ்சி போய்ட்டா? எப்போம் அவ ஊருக்கு வந்தாலும் அவள தங்கம் மணினு கொஞ்ச வேண்டியது. இதே வீட்லயே இருக்க என் மவ அழகியை மட்டும் யாரும் திரும்பிக் கூட பாக்கறது இல்ல. எந்த பொருளா இருந்தாலும் மொதல்ல அவளுக்குதேன்.


ஏன்… என் புருசனே ஒரு துணி வாங்குனா கூட இதுல தென்றலுக்கு எதுப்பா நல்லா இருக்குமுன்னு கேட்டு மொதல்ல அவளுக்கு எடுத்து வெச்சிட்டுதேன் பெறவு இன்னொரு துணியை என் மகள்ட்ட குடுக்கறது...” பாசத்தைக் கொட்ட தென்றல் பக்கத்தில் இல்லாததால் எப்போதும் அந்த வீட்டில் யார் எந்த பொருளை வாங்கினாலும் முதலில் அவளுக்கு என்று எடுத்து வைத்து விடுவார்கள். அதைத் தான் இன்று வன்மத்துடன் கொட்டித் தீர்க்கிறார் செண்பகவல்லி.


“அதெல்லாம் பத்தாதுன்னு இப்போம் அவ காரித் துப்பி... ச்சீன்னு... எட்டி ஒதச்சிட்டுப் போனதை... இன்னிக்கு என் மக தலையில கெட்ட பாக்குறீய…” அம்மம்மா! அந்த பெண்மணி கொடுக்காய் விஷத்தைக் கக்க


இதைக் கேட்டு வேந்தன் ஒரு வினாடி கண்களை மூடி தன்னைக் கட்டுப் படுத்தியவன்... திரும்பி இதைத் தானே கேட்டீர்கள் என்பது போல் தாயைப் பார்க்க, அதற்கு வேதனையுடன் தலை குனிந்தார் தாமரை.


யாரும் அவரை அடக்கவில்லை என்றதும் “அறப்பு காலத்துல எலிக்கு அஞ்சு பொஞ்சாதினு சொல்லுவாக.... அப்டிதேன் இந்த குடும்பம் ரெண்டு பட்டா... இவளுக்கு கொண்டாட்டமா இருக்கு. இவளுக்கு பேச்சு வராமா நாக்கு இழுத்துகிட்டுப் போக... என் பேரனை என்ன பேச்சு பேசுதா! மாரியாத்தா... ஒன் சூலத்தால இவ நாக்க ரெண்டா கிழிச்சி போட்ருடீ” வேறு யார்? பாட்டி தான் தன் மருமகளுக்கு ஆத்திரத்தில் சாபம் கொடுத்தார்.


“எலேய் சின்னவனே... ஒன் பொஞ்சாதிய பேச விட்டு பாத்துட்டு இருக்கியாலே? வாய மூடிட்டு உள்ள போகச் சொல்லுலே” ஐயாரு அதட்ட


“ஏன் ஏன்? நான் ஏன் அடங்கிப் போகணுங்கிறேன்? என் மக கல்யாணத்தைப் பத்தி பேசுத உங்களை விட அத நிறுத்த ஒரு தாயா எனக்குதேன் எல்லா உரிமையும் இருக்கு. நான் ஏன் அடங்கணும்? கிழிசல் துணியை ஒட்டுப் போடற அவளுக்கே(தென்றலுக்கு) அந்த மெதப்பு இருக்கும் போது என் மக டாக்டர்க்கு படிக்குதா…. அப்போம் நாங்க எம்புட்டு மெதப்பு காட்டணும்?


என் அண்ணே மகன் லண்டன்ல டாக்டர்க்கு மேல் படிப்பு படிக்குதான். அவன் வந்ததும்... என் மவளுக்கும் அவனுக்கும்தேன் கல்யாணம் சொல்லிட்டேன். ஏதாவது தகிடதத்தோம் செஞ்சி என்னைய ஏமாத்தி எப்டியாச்சும் ஒங்க விருப்பத்துக்கு இவிங்க கல்யாணத்தை நடத்த பாத்தீய... பெறவு சீவி சிங்காரிச்சி சபையில ஒங்க மூக்கு அறுபட வச்சிருவா இந்த செண்பகவல்லி! சொல்லிட்டேன் அம்புட்டுதேன்....” என்று முடிக்க, இடி மின்னலுடன் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த இடமே.


“என்னலே ஒன் பொஞ்சாதிட்ட எதுவுஞ் சொல்லலையா?” ஐயாரு அடக்கப் பட்ட கோபத்துடன் மறுபடியும் ஆரம்பிக்க


“நிறுத்துங்க....” இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்தவன் தன் குரலை உயர்த்தினான் வேந்தன். பின் தன் சின்ன மாமனிடம் வந்தவன் “என்ன மாமா இதெல்லாம்? என்ன செய்ய இருந்தீய? அழகியை நான் அந்த கண்ணோட்டத்துல பாத்ததே இல்ல மாமா. நவீன் நரேன் போல தேன் அழகியும் எனக்கு. இன்னும் சொல்லப் போனா அதுக்கும் மேல. நான் இந்த வீட்டுக்கு வந்தப்போம் அண்ணேனு என்னைய கூப்ட்டு என் கூட வெளையாடின புள்ள. பொறவு நீங்கதேன் மச்சான்னு மாத்தினீய.


ஒரு தங்கச்சியப் போய்... இதுக்கு மேலையும் இப்படி எல்லாம் யோசிக்காத மாமா. ஒன்னோட மாப்பிள்ளைக்கு நிச்சயம் கல்யாணம் நடக்கும். அதுவுங்கூடி ஒங்க எல்லாத்தோட சம்மதத்தோடதேன் நடக்கும். இதுதேன் என் முடிவு. எல்லாத்துக்கும் புரியும்னு நெனைக்குதேன்” கடைசியாய் அவன் குரலை உயர்த்திக் கேட்டதில் தன் முடிவை சொன்னதில் அது அங்கிருந்த அனைவருக்குமானது என்பது புரிந்தது.


இப்போது தன் தாயிடம் வந்தவன் “என் பொஞ்சாதி என்னைய பேசுனதுக்கு அவ ஒறவே வேணாம்னு வெட்டிவிட்டியே... இப்போம் ஒன் மகனை ஒன் சொந்தமே கூடிப் பேசுதே... என்ன ம்மா... செய்யப் போகுத?” என கேட்டவன் அடுத்த நொடி வெளியே சென்று விட


மனதில் இடி தாக்கியதைப் போல் உணர்ந்தார் தாமரை. அவனை பொறுத்தவரை அவன் பொஞ்சாதி தென்றல்… அவளுக்கு அவனை பேச… திட்ட ஆயிரம் இருக்கும்… என்று முடிவில் இருந்தான். செண்பகவல்லியிடம் யாராலும் வார்த்தை ஆடவே முடியாது. எப்போதும் உறவை முறித்துக் கொள்வது போலவே எல்லோரிடமும் மட்டு மரியாதை இல்லாமல் தான் அவர் வாய் நீளும். முதலில் தாமரை அவருக்கு சரிக்கு சரியாக பேசினாலும் பின் தன் அண்ணனின் நிம்மதியை மனதில் வைத்து ஒதுங்கி விடுவார். அது தெரிந்ததால் தான் வேந்தன் அப்படி ஒரு வார்த்தையை தற்போது தன் தாயிடம் கேட்டு விட்டுச் செல்கிறான். யாரும் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு தர்மசங்கடமான நிலை அங்கு நிலவியது. இதில் அழகியின் நிலை தான் பரிதாபத்திற்கு ஆனது…


வேந்தன் களத்து மேட்டில் இருக்க, அழகியோ அங்கு அவனைத் தேடி வர. இவன் வந்தவளைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தன் வேலையில் இருக்க, “மச்சான்....” அவள் நைந்த குரலில் ஆரம்பித்த நேரம் “பேசாத… நீ எல்லாம் கடைசிவரைக்கும் என்ட்ட பேசக் கூடாது....” என்று கோபபட்டவன் அவள் முகம் அழுகையைத் தத்து எடுக்கவும் “இதுவரைக்கும் ஒன் மனசுலயும் அப்டி ஒரு எண்ணம் இல்ல என் மனசுலயும் அப்படி ஒரு எண்ணம் இல்ல. இதுக்குப் பொறவு அப்டி ஒரு எண்ணம் நமக்குள்ளாறயும் வாராது. இருந்தும் தியாகம் செய்றீயளோ தியாகம்... ஒன் மச்சான் ஆம்பள இல்ல. வளவி போட்ட பொ.... அப்டிதேன் நெனச்சிட்டீயளோ...” இவன் அமிலமாய் வார்த்தைகளைக் கொட்ட


அழுகையுடன் “மச்சான்....” என்று காதைப் பொத்திக் கொண்டாள் நிலவழகி.


என்ன தான் தன் கை வேலையில் இருந்தாலும் அழகியைச் சாடவும் நிறுத்தவில்லை அவன். “ஒன்னைய பேசாதன்னு சொன்னேம்ல. மூச்....” ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவன் “எனக்கு தெரியாம வீட்டிலே என்னனமோ பேசி முடிவு செஞ்சி ஒன்னைய வரச் வெச்சி இருக்காக. ஒனக்கு தெரியாதுன்னு மட்டும் சொல்லிராத. எல்லாம் ஒனக்கு தெரியும். எனக்கு தகவல் சொல்லி என்ட்ட பேசணும்னு ஒனக்கு தோணல இல்ல? அந்தளவுக்கு ஒன் மச்சான் ஒண்ணுத்துக்கும் ஒதவாதவனா போய்ட்டேன் இல்ல...” தன் கை வேலையை விட்டுட்டு அவள் எதிரே வந்து நின்றவன்


“படிக்காத இவனெல்லாம் இனி யோசிக்கவோ வாழ்க்கைய அமைச்சிக்கிறவோ முடியாதுன்னு முடிவே பண்ணிட்டியா?” என்று உறுமியவன் “இனி வீட்ல எது சொன்னாலும் மண்டைய மண்டையை ஆட்டு... ஒன்னைய கொன்னே போட்ருவேன்.... சாக்கிரத!” ஒரு மிரட்டலுடன் தலையில் கட்டியிருந்த முண்டாசை உதறி தோளில் போட்ட படி அழகி பேச வாய்ப்பே கொடுக்காமல் அங்கிருந்து விலகினான் வேந்தன்.


அழகிக்கு அழுகையால் நெஞ்சை அடைத்தது. அவனை விரும்பும் விஷயத்தை இப்போதாவது சொல்லலாம் என்று நினைத்து இவள் இங்கே வர, வேந்தனோ அவளுக்கும் சேர்த்து அப்படி ஒரு எண்ணமே தங்களுக்குள் இல்லை என்று முடிவே கட்டிவிட்டுச் சென்று விட்டான்.


அன்று தென்றல் செய்த கலவரத்திற்குப் பிறகு மூர்த்தி மகளை அழைத்து நடந்தவைகளைச் சொல்லி இவளை உடனே ஊருக்கு வரச் சொல்ல, எல்லோருடைய வீடு மாதிரி சிறு வயதிலிருந்து தென்றலுக்கும், வேந்தனுக்கும் முடிச்சிட்டு பேசியிருந்தாலும் தென்றலின் நடவடிக்கையால் இது நடவாது என்று தெரிந்த பிறகு தான் தன் மனதில் வேந்தனுக்கு இடம் கொடுத்தாள் அழகி. அதிலும் வேந்தனின் காதல் இவ்வளவு ஆழமாக இருக்கும் என்று இவள் அன்று அறியவில்லை.


இப்படி இருக்க அன்று நடந்த சம்பவத்தை தந்தை சொல்ல கேட்டவளுக்கு வேந்தனை நினைத்து ஒரு புறம் மனம் வலிக்கத் தான் செய்தது. ‘நான் இருக்கேன் மச்சான் ஒனக்கு’ என்று அவனிடம் சொல்லத் தோன்றியது. விஷயம் தெரிந்த அன்றே அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவள் தாய் குணம் அறிந்து தந்தையும் மகளும் போட்ட திட்டம் தான் இந்த விஜயமும்…. அதை தொடர்ந்து நடந்த வார்த்தைகளும். தாயிடம் முன்பே சொல்லாமல் அங்கு கூடத்தில் பேசும் போது எல்லோர் எதிரில் தன் மனதைச் சொன்னால், ஐயாரு தங்கள் திருமணத்தை நடத்தி முடிப்பார் என்று நினைத்து இவள் தந்தைக்கு உதவியாய் செயல்பட, செண்பகவல்லி காளி அவதாரம் எடுத்தார் என்றால் வேந்தன் இந்த விஷயத்துக்கு தன் பேச்சால் அழகியின் திருமண ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.


அழகி தான் பாவம்! தன் நெஞ்சில் உனக்கான அப்படிப்பட்ட இடம் இல்லை என்று வேந்தன் சொன்ன பிறகு, இவள் நெஞ்சில் உள்ள அவன் எண்ணத்தையும் இவள் அழித்துத் தானே ஆக வேண்டும்? அதற்கு காலம் தான் அவளுக்கு உதவி செய்ய வேண்டும்.


வேந்தன் தன் உறுதியில் பிடிவாதமாக இருந்ததால் நாட்கள் இப்படியே சென்றது...


அன்றைய தினம் கழனியில் நாற்று நடும் நாள். வேந்தன் இங்கு வந்த பிறகு அவன் ராசி தான் குடும்பத்தில் அனைத்தும் பல மடங்காகப் பெருகியதாக ஐயாரு நினைத்தார். அதனால் இன்று வரை எல்லாவற்றுக்குமே வேந்தனை தான் முன்நிறுத்தி நிற்க வைப்பார் ஐயாரு. இன்றும் சேற்றில் ஆட்கள் நிற்க, வரப்பில் நாற்றுக்கான பூஜை அனைத்தையும் தன் கையால் செய்தவன், முதல் நாற்று கட்டை கையில் வைத்து வானத்தைப் பார்த்துக் கும்பிட, “எல்லா வருசம் போல இந்த வருசமும் வானம் பொய்க்காம மழை பெய்து பூமி எல்லாம் நெல்லா வெளஞ்சி எல்லாரோட மனசும் வயிறும் குளிரனும் சாமி” என்றவன் தன் பாட்டியிடம் அக்கற்றைக் நீட்ட,


அதை வாங்கியவர் கைகூப்பி கண்மூடி
சந்திரரே சூரியரே

சாமி பகவானே
சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு
சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்
எடுத்த திரு அலவு

எழுந்து பறி ஏறனும்
என்று கடவுளை வாழ்த்திப் பாடியபின் சேற்றில் முதல் நாற்றை நட்டார் அந்த வயது முதிர்ந்த பெண்மணி.


அவரைத் தொடர்ந்து மற்றொரு பெண்,
தன்னானே னானே னன்னா னானேனா னானே னன்னா

தன்னானே னானே னன்னா னானேனா னானே னன்னா
னானானே னான்னே னன்னா தன்னானே
னா னானே னான்னே னன்னா தன்னானே
நாலு மூல சதுரத்திலே நடவு நடும் குட்டப்புள்ள
நாலு மூல சதுரத்திலே நடவு நடும் குட்டப்புள்ள
நானும் கொஞ்சம் ஏழை ஐயா கண்ணையா
நீங்க நடவு கொஞ்சம் கிட்ட போடு என்னம்மா
குட்டப்புள்ள நட்ட நாத்து குலுங்குதடி வைரச்சம்பா
குட்டப்புள்ள நட்ட நாத்து குலுங்குதடி வைரச்சம்பா
தன்னானே னானே னன்னா தன்னானே
னானே னானான்னே னானே னன்னா னன்னானே
சொல்லி நல்லாடிச்ச அருவா சொழட்டுதடி நெல் கருது
சொல்லி நல்லாடிச்ச அருவா சொழட்டுதடி நெல் கருது
தன்னானே னானே னன்னா தன்னானே
னா னானான்னே னான்னே னன்னா னன்னானே
ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பூ கொண்டக்காரி
ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பூ கொண்டக்காரி
வீதியில கல்லோரலாம் கண்ணையா
அவ வீசி வீசி குத்துறாளாம் என்னையா
இந்த மச்சான் புடி அரிசி இட்லி சம்பா நெல்லரிசி
இந்த மச்சான் புடி அரிசி இட்லி சம்பா நெல்லரிசி
கையப் புடிக்காதிங்க மச்சானே
கையப் புடிக்காதிங்க மச்சானே
எனக்கு கைவளவி சேதமாகும் மச்சானே
எனக்கு கைவளவி சேதமாகும் மச்சானே
தன்னானே னானே னன்னா னானேனா னானே னன்னா
னானானே னான்னே னன்னா தன்னானே

னா னானானே னான்னே னன்னா தன்னானே
என்று நாற்று நடும் களைப்பு தெரியாமல் இருக்க வழக்கமாகப் பாடும் இந்த நடவுப் பாட்டைப் பாடிய படி நாற்று நட, அனைவரும் அதை அனுபவித்த படியும் உடன் சேர்ந்து பாடியும் அந்த வேலையை முடித்தனர்.

எவ்வளவு அழகான பாட்டு.. நம் முன்னோர்கள் தான் எப்படி எல்லாம் ரசனை மிக்கவர்களாக இருந்து இருக்கிறார்கள்…


இப்படி எல்லாம் நடக்க, கொஞ்சம் எல்லோரும் பழைய மாதிரி மனநிலையில் மாறும் நேரம் நடந்தது அந்த துயரிய சம்பவம்...


அந்த ஊரில் பிரசித்தி பெற்ற கண்மாயைக் குத்தகை எடுப்பது எப்போதும் ஐயாரு தான். முன்பு எல்லாம் போட்டியில் நீயா நானா என்று லீஸ் தொகையை வைத்து கண்மாயை எடுத்தார்கள். பிறகு ஐயாருவை எதிர்க்க ஆள் இல்லாமல் அவர் கைக்கே வருடம் வருடம் கண்மாய் வந்தது. ஆனால் இப்போது புதிதாக பக்கத்து ஊரில் ஆளுங் கட்சி அரசியல்வாதிக்கு பினாமி ஒருவன் முளைத்தவன் அவனும் கண்மாயைக் குத்தகை எடுக்க தீவிரம் காட்ட, அவனுக்கு கையாளாய் கூட்டாளியாய் இன்னொருவனும் அவனுடன் கூட்டு சேர்ந்தான். எதிரிக்கெதிரி நண்பன் என்பது போல் வந்தவனும் ஐயாரு குடும்பத்திற்கு எதிரி...


ஒரு முறை ஐயாரு சாதிக்கார பையன், அதே ஊரிலிருந்த வேற்று சாதிகாரப் பெண்ணைக் காதலிக்க, அந்த பெண்ணும் அவனைக் காதலிக்க, இது எப்படியோ குடும்பத்தாருக்கு தெரிய வந்து நடந்த பிரச்சனைகளும் வெட்டு குத்துவும் கொஞ்ச நஞ்சம் இல்லை. வேல் கம்பும் வீச்சருவாலும் மோதிக் கொண்டு அந்த மண்ணில் ரத்த வெள்ளம் தான் ஓடியது. அதற்கு முழு முதல் காரணம் ஐயாரு தான். சாதி வெறியரான அவர் கடைசிவரை அந்த வேற்று சாதிப் பெண்ணைத் தன் சாதி பையனோடு சேர விடவில்லை.


இந்தனைக்கும் அந்த பெண் அப்போது இரண்டு மாதம் கரு ஈன்று இருக்க, தங்கள் வீட்டு வாரிசு என்று பையன் வீட்டாரும் பெண் வாழ்வு இப்படி ஆகி விட்டதே என்று பெண் வீட்டாரும் சமாதானத்தில் இறங்கி இருவருக்கும் திருமணம் செய்ய முன் வர...


ஐயாருவின் சாதிக் கொள்கையால் நேர்ந்த பிடிவாதமும் ஊர்க் கட்டுப்பாடும் அவரை மீற முடியாமல் அந்த குடும்பத்தை வைக்க, பிரிந்து போனார்கள் காதலித்த இருவரும்.


ஒரு வாரத்திலேயே அந்த பையன் பாம்பு கடித்து இறந்து விட, அந்த அதிர்ச்சியில் புத்தி சுவாதீனம் இல்லாமல் நின்றாள் அவனைக் காதலித்தவள். இதனால் குடும்பமே மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள, பாண்ட் மூலம் வெளிநாட்டில் வேலையிலிருந்த அந்த பெண்ணின் அண்ணனுக்கு விஷயம் தெரிய வர, அன்றிலிருந்து ஐயாருவைக் கொள்வதே தன்னுடைய லட்சியமாக எடுத்துக் கொண்டான் அவன்.


இப்போது ஊரிலிருந்து வந்தவன் அந்த பினாமி ஆட்களோடு கை கோர்த்தவன் இன்று ஐயாருவைப் போட்டுத் தள்ளுவது என்ற முடிவில் இருக்க.


இன்று லீசுக்கு எடுக்கக் கிளம்பிய ஐயாருவின் வண்டி ஒரிடத்தில் நின்று விட, “என்னலே வண்டி நின்றுருச்சு?” இவர் ஓட்டுனரைக் கேட்க


“ஏதோ ரிப்பேர் போல ஐயா...” ஓட்டுனர் பதில் தர


“இதெல்லாம் முந்தியே பாத்து வெச்சிக்கிட மாட்டியாலே?” என்றவர் காரை விட்டு இறங்கி அந்த வெட்ட வெளியில் சற்று ஒதுக்குப் புறமாக நின்ற நேரம்


திடீர் என்று ஓரிடத்தில் இருந்து ஆட்கள் பத்து பதினைந்து பேர் இவரை நோக்கி அருவாளோடு ஓடி வர, அதே நேரம் மற்றொரு இடத்தில் தழைகள் சூழ மறைவில் நிறுத்தி வைத்திருந்த ஜீப்பை ஓட்டி வந்து ஐயாருக்கும் ஓடி வந்த ஆட்களுக்கும் இடையில் நிறுத்தினான் வேந்தன்.


தங்களின் சதி அம்பலமானதில் ஓடி வந்தவர்கள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்க, “எலேய் மாப்ள! நீ வண்டியில இருலே. பதினஞ்சு பேத்துகிட்டாதேன் இருக்கானுவ... ஆளுக்கு கொஞ்ச பேர்னு ஒன் மாமனுங்க ஒரு கை பாத்துட்டு வரோம்லே” என்ற மாறனும் மூர்த்தியும் மீசையை முறுக்கிக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டியபடி ஜீப்பிலிருந்து குதிக்க...


அந்த இடமே கொஞ்ச நேரத்தில் களேபரம் ஆனது. அந்த வயதிலும் விடுவேனா என்ற எண்ணத்தில் ஐயாருவும் தன் பங்குக்கு களத்தில் இறங்கி விட்டார்.



வந்தவர்கள் ஒரு கட்டத்தில் இவர்களிடம் அடி வாங்கி ஓட ஆரம்பிக்க, அதில் ஒருவன் மட்டும் கத்தியுடன் யாரும் எதிர்பாராத நேரம் ஐயாருவை பின்புறமாக நெருங்க, அப்போதோ… அவருக்குப் பதில் நின்றிருந்த அவரின் குடும்பத்தில் ஒருவர் அந்த கத்திக் குத்தை இடையில் சென்று வாங்க... மயங்கி விழும் அந்த தருணத்திலும் “பூந்தென்றல்” என்ற பெயரை உச்சரித்த படி மயங்கி சரிதான் அந்த கத்தி குத்துப்பட்ட ஆண்!
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijaya

New member
வேந்தன் பூந்தென்றலை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பது அவனுடைய பேச்சில் இருந்து தெரிகிறது. கிராமங்களில் இன்னும் ஜாதி வெறி பிடித்த மனிதர்கள் உள்ளனர்.அது எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை. கிராமப்புறங்களில் வேலை செய்யும் போது பாட்டு பாடுவது அருமை. அழமான கிராமத்து கதை நன்றி சகோதரி வாழ்த்துக்கள் smile 23 smile 23 smile 23
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Maran paavam akka...Tendral yen ipadi pandra heroin konjam kandichu vainga

நீ சொல்லிட இல்லை டா..
இனி கண்டிச்சிடறன் மா...
நன்றி பா💖
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வேந்தன் பூந்தென்றலை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பது அவனுடைய பேச்சில் இருந்து தெரிகிறது. கிராமங்களில் இன்னும் ஜாதி வெறி பிடித்த மனிதர்கள் உள்ளனர்.அது எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை. கிராமப்புறங்களில் வேலை செய்யும் போது பாட்டு பாடுவது அருமை. அழமான கிராமத்து கதை நன்றி சகோதரி வாழ்த்துக்கள் smile 23 smile 23 smile 23

நீங்கள் ரசித்து படித்து...
கதை பற்றி என்னிடம் இரண்டு வரிகள் சொன்னதற்கு
நன்றி சிஸ்💝
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN