ஆழி சூழ்ந்த உலகிலே... 5

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"ஷிவ்... நான் சொல்லரத கேட்கல உன்கிட்ட கண்டிப்பா நான் பேசமாட்டேன்... ஒழுங்கா நான் சொல்லர பேச்ச கேட்டு நடந்துக்கோ... அதுதான் உனக்கு நல்லது..." வெகு நேரமாக சக்தி சிவரஞ்சனியிடம் பலவாறு கூறிப் பார்த்துவிட்டான் அவள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று. ஆனால் அவள் கேட்டபாடில்லை.
"நேத்து நைட் நீ ரொம்ப கஷ்டபட்டுட்ட... தயவு செஞ்சு வீட்டுல ரெஸ்ட் எடு. அதான் நாங்க எல்லாரும் இருக்கோம் இல்ல. நீ எதுக்கு வெட்டிய... ஒழுங்கா வீட்டுலயே ரெஸ்ட் எடுக்கிற வழிய பாரு..." என்று வீடியோ காலில் அவளிடம் பேசிக்கொண்டே மருத்துவமனையில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தவன் அங்கு அமர்ந்து இருந்த அர்ஜூனிடம் அவளை வரவேண்டாம் என்று கூற சொல்ல தொலைபேசியின் கேமராவை அவன் புறம் திருப்பினான்.
ஆனால் அவனோ அவளுடைய இஷ்டம் என்று கூறிவிட்டான். அதை தொலைபேசி வழியாக கண்டுகொண்ட சிவரஞ்சனி மருத்துவமனைக்கு கிளம்ப ஆரம்பித்தாள். லட்சுமி மற்றும் அர்ச்சனாவுடன் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே கிளம்ப ஆயுத்தமானாள் சிவரஞ்சனி. ராஜரத்தினம் இந்த நிலைக்கு இருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்ற வருத்தம் அவளை ஆட்கொண்டு இருந்தது.
சக்திக்கு அர்ஜூன் அவ்வாறு கூறியது சற்றும் பிடிக்கவில்லை... "மாமா... என்ன மாமா நீங்க... அவளே உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்கா. அவள வரவேண்டாம்ன்னு சொல்லி இருக்கலாம் இல்ல..."
"ம்ச்... சக்தி லிசன். உன் உடன்பிறப்பு ஒன்றும் சின்ன குழந்தை இல்லை. முடிஞ்சா வரட்டும். இல்லன்னா வீட்டுல இருக்கட்டும். அவளுடைய உடம்பை அவளால பார்த்துக்க முடியும்னு தான இங்க வரா... விடு..." என்று கூறியவன் அலுவலகத்தில் ஒருவாரம் விடுப்பு எடுக்கும் முயற்ச்சியில் இறங்கினான்.
நாளை மற்றும் அதற்கு மறுநாள் முக்கியமான மீட்டிங் இருப்பதால் அவ்வளவு எளிதாக விடுமுறை எடுக்க முடியவில்லை. அந்த டென்ஷனோடு சக்தியின் எதிர் பேச்சும் அர்ஜூனை இரிடேட் செய்ய அவனின் வார்த்தைகள் கொஞ்சம் காரமாகவே சக்தியிடம் வந்து விழுந்தன. ஒருவழியாக விடுமுறையை வாங்கியவன் பிறகே நிம்மதியாக அமர்ந்தான்.
சக்திக்கு தான் சுத்தமாக மனசு கேட்கவில்லை. சிவரஞ்சனியிடம் மீண்டும் கெஞ்ச பாவம் பார்த்து வீட்டில் இருக்க சம்மதித்தவள் லட்சுமி மற்றும் அர்ச்சனாவை அழைத்து கொண்டு காரை ஓட்டிச் செல்ல ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்யுமாறு கூறனாள்.
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவர்களை அழைத்து வர எதற்கு டிரைவர் என நினைத்தவன் அர்ஜூனிடம் தான் வீட்டிற்கு சென்று கிளம்பி வருவதாக கூறிவிட்டு தன் இருசக்கர வாகனத்திலேயே பத்து நிமிடங்களில் அவனின் வீட்டிற்கு சென்று குளித்து வேறுஉடை மாற்றி கிளம்பியவன் பிறகு சிவரஞ்சனியின் குடியிருப்பு பகுதிக்கு வந்து லட்சுமி மற்றும் அர்ச்சனாவை அங்கிருந்த அர்ஜூனின் காரிலேயே ஏற்றிக்கொண்டு சிவரஞ்சனியிடம் சொல்லிக்கொண்டு காரை கிளப்பிக்கொண்டு விரைந்தான்.
காலைவேளை என்பதால் வரும்போது காலியாக இருந்த சாலை தற்போது வாகனங்களின் நெரிசலில் இருந்த இடம் தெரியாமல் மூழ்கிபோய் இருந்தது. காலை எட்டரை அளவில் ராஜரத்தினத்தை நார்மல் வார்டிற்கு மாற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால் தாங்கள் செல்ல நேரம் ஆகிவிடுமோ என்று பயந்த சக்தி வாகனத்தை வேகமாக இயக்கினான்.
லட்சுமி ராஜரத்தினம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறிக்கொண்டே வாகனத்தை இயக்கியவன் ஒருவழியாக மருத்துவமனை வந்தடையவும்‌ அர்ஜூன் அவர்களை வரவேற்பு அறையில் இருந்து பார்த்துவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
"கண்ணா... அப்பா எழுந்தாராடா... நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்களா..."
"இப்போ தான்மா எழுந்தாரு... உங்கள கேட்டாரு... டாக்டர்ஸ் செக் பன்னிட்டு இருக்காங்க..." கேள்வி கேட்ட லட்சுமிக்கு பதில் கூறியவனின் கண்கள் காரினுள் அவளையே தேடியது.
"அவர நான் பார்க்கனும். விடுவாங்களா கண்ணா..."
"ம்... போயிட்டே இருங்கம்மா... நான் பில் கிளியர் பன்னிட்டு வரேன்..."
"அத்தை... வாங்க நான் கூட்டிட்டு போறேன்... அர்ச்சனா உள்ள வந்து மாமாவ பார்த்து அழ கூடாது சரியா... மாமா வருத்தப்படுவார்..." என்றபடி சக்தி அவர்களை கூட்டிக்கொண்டு செல்ல அர்ஜூன் தன் கைப்பேசி மூலமாக சிவரஞ்சனியை தொடர்பு கொண்டான்.
பாக்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேளை...
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை...
பாக்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேளை‌.‌..
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை...
பட... பட... படவென மாறும் வானம்
பட்டென நீயும் பார்த்தால்...
என் வானமே நீயேடா... நீயே... நீயேதானடா...
சிலு... சிலு.. சிலு-னு வீசும் காற்றில்
சிறிதாய் நீயும் சிரித்தாய்...
என் வாழ்க்கையே நீயேடா... நீயே... நீயேதானடா...

முதன்முதலில் அர்ஜூனின் கைப்பேசி எண்ணை சிவரஞ்சனி அவளின் கைப்பேசியில் பதிவு செய்யும்போது இந்த பாடலை பிரத்யேக அழைப்பு மணியாக வைத்திருந்தாள். தற்போது அந்த பாடல் ஒலிக்கவும் அவளிடம் தானாக அலட்சியம் வந்து குடிகொண்டது. இந்த அழைப்பிற்காக எவ்வளவு நாள் அவள் ஏங்கி இருப்பாள். கடந்தகாலத்தை நினைத்து கொண்டு எதிர்காலத்தை வீணடித்து கொண்டு இருக்கிறானே... என்ன ஒரு புத்திசாலித்தனம்... என நினைக்க ஆற்றாமையில் அவளிடம் சிரிப்பு தான் வந்தது. பச்சை நிற குறியீட்டை தள்ளி அவனின் அழைப்பை எடுத்தவள் ஒன்றும் பேசாமல் காதில் வைத்திருந்தாள். சில நொடி மௌனத்திற்கு பிறகு அவனே பேச ஆரம்பித்தான்.
"உங்களுடைய மாமனார் எப்படி இருக்காங்கன்னுலாம் விசாரிக்க மாட்டீங்க போல..." அவனின் குரலில் இருந்த கிண்டல் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று அவள் பட்ட பாட்டை அவன் எங்கே புரிந்து கொள்ள போகிறான்.
"நான் சக்திட்ட கேட்டுட்டு தான் இருக்கேன்... அங்க என்ன நடக்குதுன்னு அடிக்கடி அப்டேட் பன்னிட்டு தான் இருக்கான் "
‌ "நீ ஏன் வரல..." தற்போது ‌அவன் குரலில் என்ன இருக்கிறது என்று அவளால் கண்டறிய முடியவில்லை.
" சக்தி வரவேண்டாம்னு சொல்லிட்டான்..."
"ஏன்...?"
"ம்... சக்தி தான் நான் நேத்து பட்ட கஷ்டத்தை பார்த்தானே... எப்படி நான் வர ஒத்துப்பான். உங்கள மாதிரி எனக்கென்னன்னு இருக்கமாட்டான்...." என்றவள் வந்த கோபத்தை பல்லை கடித்து கொண்டு பொறுத்துக் கொண்டாள்.
"சக்தி... சக்தி... சக்தி... உன்னாலயே அவன எனக்கு பிடிக்காமல் போயிடுது... ம்ச்... சரி நேத்து அப்பாட்ட என்ன சொல்லி அவருக்கு ஹார்ட் அட்டாக் வரவச்ச..." அர்ஜூனின் கேள்வியில் சிவரஞ்சனி ஸ்தம்பித்து போனாள். தான் மட்டுமா காரணம் என்று இருந்தது அவளுக்கு.
"நான் ஹார்ட் அட்டாக் வரவச்சனா... ஹா ஹா குட் ஜோக்... உங்கள பத்தின கவலை தான் அவர இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருக்கு... உங்க வீண் பிடிவாதம் தான் அவரோட இந்த நிலைமைக்கு காரணம். விட்டுட்டு போன ஒருத்திய நினைச்சிட்டு பைத்தியம் மாதிரி உங்க வாழ்க்கையை கெடுத்துகிட்டது இல்லாமல் என்னையும் வார்த்தையால கொன்னு இருக்கீங்க.
கல்யாணம் தான் பன்னியாச்சே... நமக்குன்னு ஒருத்தி வந்துட்டாலே... ஏத்துகிட்டு வாழ்வோம்ன்னு இல்ல... நியாயமா சொல்லனும்னா நான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கேன்... ஆனா நீங்...." என முதல் முறையாக அவள் அவனிடம் இவ்வளவு நீளமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையில் தடுத்தான்.
"வெயிட்.. வெயிட்... என்ன சொன்ன. நீ எனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கியா... ஹா ஹா குட் ஜோக்..." என்று அவளை போலவே சொல்லி காட்டியவன் "நான் உன்கிட்ட சொன்னனே நியாபகம் இருக்கா... என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா அப்படின்னு. அதை காதுல வாங்கனயே அதுக்கு முன்னாடி உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கலன்னு சொன்னனே... அதை உன் காதுல வாங்கலையா... நீ சொன்னியே கல்யாணம் ஆகிடுச்சு, ஏத்துட்டு வாழ்வோம்... அதுலாம் உன்னைத் தவிர வேற எந்த பெண்ணை மேரேஜ் பண்ணி இருந்தேன்னாலும் கண்டிப்பா செய்து இருப்பேன். ஆனா என் நேரம் உன்னை கட்டிக்க வேண்டியதா போச்சு... என்ன இரிடேட் பன்னாமா அப்பாட்ட என்ன சொன்னன்னு சொல்லு..." என்றவன் அவளிடம் இருந்து பதில் வராததால் "ஹலோ... ஹலோ..." என இருமுறை அழைக்க தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல விழித்தவள் பிறகு நிதானத்திற்கு வந்து அவனுக்கு பதிலை அளித்தாள்.
"உங்ககிட்ட இருந்து எனக்கு டைவஸ் வாங்கிதர சொன்னேன்... தெரிஞ்சுடுச்சா... இப்போ நான் வைக்கலாமா..." என கூறியவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் கைப்பேசியை வைத்தாள்.
*******
"சக்தி அத்தான்... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." என்று சக்திக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த அர்ச்சனா அவனிடம் அனுமதி வேண்டி நிற்க தனது கைக்கடிகாரத்தை பார்த்தவன் கிளம்ப இன்னும் சிறிது நேரம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய,

"பிசியா இருக்கீங்கன்னா பரவாயில்லை..." அவசரமாக வந்தது அவளின் வார்த்தைகள்.
"இல்ல நீ உட்காரு. என்னுடைய டியூட்டி டைம் ஆக இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு..." என்றவன் எதிரில் இருந்த இருக்கையை காண்பிக்க அதில் அமர்ந்தவள் தன் கைகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள். அர்ஜூன் சக்தியிடம் ராஜரத்தினத்தை தான் பார்த்து கொள்வதாக கூறி இருக்க சக்தி விடுமுறை கூறாமல் தன் வேலையை தொடர ஆரம்பித்தான்.
அவள் விஷயத்தை கூறுவாள் என எதிர்பார்க்க அவள் கைகளை நோண்டிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு ஏதோ பிரச்சினை என நினைத்த சக்தி, என்னவொன்று விசாரித்தான்.
"அது எப்படி சொல்லரதுன்னு தெரியல. நான்... ஐம் இன் லவ் வித் யூ..." என்று திக்கித்தினரி தன் காதலை அவனிடம் கூறியள் அவனின் முகத்தை ஆராய அவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவளுக்கு சொல்லாமல் சொல்லியது அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று.
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே... 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN