மாயம் 21

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிச்சயிக்க வந்தவனை
நின் கண்ணசைவு
நிர்கதியாய்
நிற்கவைப்பது
நியாயம் தானா??

மூன்று மாதங்களுக்கு பிறகு....

விழாக்கோலம் பூண்டிருந்தது ஶ்ரீதான்யாவின் வீடு... வாசலில் வாழைமரம் கட்டப்பட்டு தோரணம், பூமாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது வாயில். .
ஆறு பேச்சஸ் நிலத்தில் இரண்டு மாடிகளுடன் நின்றிருந்த அந்த வீட்டில் வெளியலங்காரம் இன்னும் சில மீதமிருக்க ஆடவர்கள் சிலர் அதை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்தனர்....

ஒருபுறம் ஆடவர்கள் அலங்கரிக்கும் வேலையில் மும்முரமாய் இருக்க மறுபுறமோ பெண்கள் நிறைகுடம் வைப்பது, வாசல் நிலையிற்கு திலகமிடுவது, வாயிலில் வருபவர்களை வரவேற்கும் முகமாக வண்ண வண்ண நிறங்களில் கோலமிடுவது என்று பிசியாய் இருந்தனர்...இதனிடையே ஆண்கள் பெண்களை வம்பிழுப்பதும், பெண்கள் ஆண்களை வம்பிழுப்பதும் என்று அந்த இடமே களைகட்டியது....

வெளியே உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சற்றும் குறையாத வகையில் வீட்டினுள்ளும் அனைவரும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தனர்...
ஆண்கள் நடுச்சாலையில் அமர்ந்து அன்றைய நிகழ்வு சம்மந்தமாக உரையாடியபடியிருக்க பெண்களோ மற்றைய வேளைகளில் ஈடுபட்டிருந்தனர்..
இருவர் பூஜையறையை அலங்கரித்தபடியிருக்க மற்றவர்கள் சமையலறை மற்றும் மணப்பெண் அறையில் தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்ததனர்... இன்னும் ஒரு கூட்டம் நிச்சயத்திற்கான சீர்தட்டு ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்தது...

இங்கு ஶ்ரீயின் அறையில் இளம்பெண்கள் பட்டாளம் கூடியிருந்தது... ப்யூட்டிஷின் நிச்சயப்பெண்ணான ஶ்ரீயினை தன் கைவண்ணத்தால் இந்திரன் மயங்கிய ரம்பை ஊர்வசியின் வனப்பிலும் மிதமிஞ்சியதாய் அழகியாய் மாற்றிக்கொண்டிருந்தார்.... மறுபுறம் ஶ்ரீயின் நண்பர் பட்டாளம், உறவினர் பட்டாளமென்று இளம்யுவதிகள் அனைவரும் ஶ்ரீயை சூழ்ந்துகொண்டு வம்பழந்துகொண்டிருந்தனர்....

“ஏன் ஶ்ரீ எப்படி உன்னை பார்த்து அத்தான் கவுந்தாருனு தெரியலை... நீ பேச ஆரம்பிச்சாலே நம்ம பசங்க ஓடிப்போயிருவாங்க... அதுவும் உன்கிட்ட வாய் குடுத்தா சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிற மாதிரி.... இதெல்லாம் தெரிஞ்சும் எப்படி அத்தானுக்கு உன்மேல லவ் வந்துச்சுனு சத்தியமா இப்போ வரைக்கும் புரியலை... ஒரு வேலை ஊரு நல்லா இருக்கட்டும்னு அத்தான் இந்த ரிஸ்கை எடுக்குறாரோ??” என்று ப்ரீதா ஆரம்பிக்க சஞ்சு தொடர்ந்தாள்...

“ஆமா அக்கா.. எனக்கும் இதே டவுட்டு தான்... எனக்கு தான் இவ கூட சுத்தனும்னு தலைவிதி.... ஆனா ரிஷி அண்ணா எதுக்கு தெரிஞ்சே இவகிட்ட மாட்டிகிட்டாருனு தெரியலை..”

“இல்லை சஞ்சு அக்கா... அத்தான் இவளை சமாளிச்சிரலாம்னு கான்பிடன்ஸ்ல லவ்வுல விழுந்திருப்பாரு... ஆனா பாவம் மனுஷன் இப்போ எஸ்கேப்பாக முடியாம தடுமாறுறாரு....” என்று அனுவும் கைகோர்க்க

“ஓய்... என்ன என்னை பார்த்தா கொடுமைக்காரி மாதிரியா இருக்கு?? நான் என்னமோ அவரை வண்டை வண்டையா வேலை வாங்கி கொடுமை படுத்துன மாதிரியும் அதை நீங்க எல்லாம் கண்ணால பார்த்த மாதிரியும் சொல்லிட்டு இருக்கீங்க...??”

“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தானேடி உண்மை.... அந்த மனுஷனை அங்க வா இங்க வானு பாடுபடுத்துறது மட்டுமில்லாமல் அவரு பர்சையும் மொத்தமா காலி பண்ணி ஏப்பம் விடாட்டி தான் உனக்கு தூக்கம் வரமாட்டேங்குதே....” என்று சஞ்சு கூற

“நான் அவர் பர்சை காலி பண்ணதை நீ பார்த்தியா???”

“அப்போ அதெல்லாம் என்னடி???” என்று எதிரே இருந்த கபொர்ட்டை சஞ்சு காட்ட

“அது ரிஷி அத்தான் எனக்கு ஆசையா வாங்கிக்கொடுத்தது....”

“அவரு ஆசையா வாங்கிக்கொடுத்ததா இல்லை நீ அடிச்சுப்புடுங்கி வாங்குனதானு அவருக்கு தானே தெரியும்??” என்று ப்ரீதா கூற மற்றைய அனைவரும் சிரித்தனர்...

“ப்ரீதா டார்லிங்... நானாவது பரவாயில்லை... உங்க கைவரிசையால ஐம்பதாயிரமா இருந்த ஹரி அத்தானோட கிரெடிட் கார்ட் லிமிட் இப்போ எழுபத்தைந்தாயிரமா ஜாஸ்தியாயிருச்சே...அது எந்த கணக்குல சேர்த்தி.....???”

“அது அது..” என்று ப்ரீதா இழுக்க ஶ்ரீயோ

“எது எது...” என்றிழுக்க மீண்டும் அவ்விடத்தில் ஒரு சிரிப்பலை படர்ந்தது..

“ப்ரீதா அக்கா.... நாம எல்லோரும் நிச்சயத்துக்கு புடவை எடுக்க போனோமே அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா???”என்று அனு தொடங்க

“இவ கடையையே புரட்டிப்போட்ட கதையை தானே கேட்குற??” என்று ப்ரீதா கேட்க

“அது தான் தெரிந்த கதையே அக்கா.... நமக்கு தெரியாம ஒரு கதை ஓடிச்சு.... அதை நான் தெரியாமல் பார்த்துட்டேன்...”

“அப்படி என்ன நடந்துச்சு??”

“நாம் எல்லாம் புடவை செலெக்ட் பண்ணிட்டு இருந்தப்போ அத்தான் வந்தாரா???”

“ஆமா... அது வரைக்கும் அது சரியில்லை இது சரியில்லைனு சொல்லிட்டு இருந்தவ அவரு வந்ததும் இந்த புடவை நல்லாயிருக்குனு ஒரு பக்கா கேவலமான புடவையை எடுத்துக்கிட்டு பிட்டோன் ரூமிற்கு போனா....”

“அவ சும்மா போகலகா.. அத்தானுக்கு ஜாடையா கண்ணை காட்டிட்டு தான் போனா...”

“அப்படியா சங்கதி...??? அப்புறம்”

“பிட்டொன் ரூம் போனவ ரூமை லாக் பண்ணலை... அந்த கேப்புல அத்தான் சுத்தி முத்தி யாரும் பார்க்கலைனு கன்போம் பண்ணிட்டு பிட்டொன் ரூமுக்குள்ள நுழைஞ்சுட்டாரு...”

“அடியாத்தி... அத்தனை பேரும் இருந்தபோதேவா????”

“ஏய் அனு உனக்கு எப்படி தெரியும்??? உனக்கு யாரு இப்படி தப்பு தப்பா சொன்னது??” என்று ஶ்ரீ அனுவை தடுக்க முயல

“யாரு சொன்னதா... ஹாஹா... நா லைவ்வா பார்த்தது கேட்டது... அப்புறம் ப்ரீதாக்கா என்ன நடந்துச்சுனா???”

“அடியேய்.... அனு சும்மா ரீல் சுத்தாத... அதுக்கு பிறகு ஒன்னுமே நடக்கலை... அத்தானை வெளியே அனுப்பிட்டேன்... அவ்வளவு தான்..”

“அது தான் இல்லை... ப்ரீதா அக்கா சஞ்சு அக்கா இவ சொல்லுறத நம்பாதீங்க.... உண்மை கதையை நான் சொல்லுறேன்... பிட்டொன் ரூமுக்குள்ள வந்த அத்தான் இவகிட்ட ஹஸ்கி வாயிசில் ஏதோ சொல்ல இவளும் அதுக்கு ஏதோ சொல்ல இரண்டு பேரும் மெதுவா சிரிச்சுக்கிட்டாங்க..”

“அனு உனக்கு எப்படி பிட்டொன் ரூமில் நடந்தது தெரியும்???” என்று சஞ்சு கேட்க

“அத்தான் நுழைந்ததும் நானும் பக்கத்துல இருந்த பிட்டொன் ரூமுக்குள்ள நுழைஞ்சிட்டேன்...”

“அடிப்பாவி.. இப்படியா அடுத்தவன் பெட்ரூமிற்குள்ள என்ன நடக்குதுனு எட்டி பார்ப்ப??” என்று ஶ்ரீ அங்கலாய்க்க அனுவோ

“ஹலோ நீங்க பப்ளிக் பிளேசில் இருந்துகிட்டு ரொமெண்ஸ் பண்ணுறது தப்பு இல்லையாம்..நாங்க உங்களுக்கு பார்டி கார்ட் வேலை பார்த்தது தப்பாம்...”

“அனு எனக்கு ஒரு டவுட்டு...”

“சொல்லுங்க சஞ்சு அக்கா...”

“இதுல நீ எங்கமா பார்டிகார்ட் வேலை பார்த்த??”

“ஒரு கன்னிப்பொண்ணும் ஒரு கன்னிப்பையனும் தனியா இருக்கும் போது ஏதும் தப்பு தண்டா நடந்திடாமல் இருக்க பார்டிகார்ட்டா இருந்து கண்காணிச்சேன்..”

“அம்மாடி அனு தெய்வமே..... நீ எங்கயோ போயிட்ட...” என்று சஞ்சுகூற

“தாங்ஸ்கா .. அப்புறம் நடந்தத கேட்டீங்கனா மெர்சலாகிடுவீங்க....”

“அப்படி என்னமா நடந்தது??”

“ஹஸ்கி வாயிசில் பேசிட்டு இருந்தவங்க திடீர்னு சத்தத்தை காணோம்.... என்னடானு பார்த்தா ப்பசக், ப்பசக்னு சத்தம்....”

“ஐயோ...” என்று ப்ரீதாவும் சஞ்சுவும் ஒரு சேர கூற

“இதுக்கே ஐயோனா எப்படி..... இன்னும் வகை வகையா இருக்கு...” என்ற அனுவை மீண்டும் தடுத்தாள் ஶ்ரீ..

“அடியேய் அனு ஏன்டி இப்படி பண்ணுற???”

“இரு அக்கா முழுசா முடிச்சிர்றேன்...”

“ஆல்ரெடி என் மானத்தை பிச்சி உதறி தொங்க போட்டுட்ட... இன்னும் என்னடி பாக்கி இருக்கு....???”

“இரு அக்கா... பாரு சஞ்சு அக்காவும் ப்ரீதா அக்காவும் இன்டரெஸ்டா கதை கேட்டுட்டு இருக்காங்கல.....”

“ஆமா இது என்ன ஐ பட கதையா?? அவளுக கேட்குறாள்களாம்...இவ கதை சொல்லுறாளாம்...”

“இது சங்கர் டிரெக்ஷனை விட செம்ம ஹிட்டாக போற கதைகா...” என்று கூறிவிட்டு மீண்டும் தன் காதால் கேட்ட கதையை கூறத்தொடங்கினாள் அனு..

“எதுல விட்டேன்... ஆ.... நியாபகம் வந்திருச்சு.... அந்த பசக் பசக் சத்தம் முடிந்ததும் அத்தான் செம்ம ஸ்வீட் அம்லு எனக்கு புடிச்ச மைசூர்பாகைவிட உன் ஸ்வீட்டு செம்ம டேஸ்டு அப்படினு சொன்னாரு... அதுக்கு இவ அடிக்கடி ஸ்வீட் சாப்பிட்டா டயபடிக்ஸ் வந்திரும்... அதுனால எனக்கா தோணுனா தான் இந்த ஸ்வீட்டை கொடுப்பேன்னு சொல்லுற.... “ என்று அனு கூறியதை கேட்டு சஞ்சுவும் ப்ரீதாவும் சிரித்தனர்...ஶ்ரீயோ பாதி வெட்கமும் பாதி கோபமுமாய் அனைவரையும் முறைத்தாள்..

“ஆனா அக்கா இதுல என்ன காமடினா இவங்க ரெண்டு பேரும் ஸ்வீட்டு மைசூர்பாகுனு பேசுகிட்டதும் உண்மையாகவே இரண்டு பேரும் ட்ரையல் ரூமிலும் ஸ்வீட்டு சாப்பிடுறாங்களோனு நினைச்சேன்... அப்புறம் தான் முதல்ல கேட்ட சத்தம் நியாபகம் வந்ததும் அதைதான் இது இரண்டும் ஸ்வீட்னு கோட் வர்ட் வச்சி பேசிக்கிருதுங்கனு புரிஞ்சிக்கிட்டேன்...” என்று அனு கூற மீண்டும் அனைவரும் சிரித்தனர்...

“ஏன்டி எப்படிடி புதுசு புதுசா கண்டுபிடிக்கிற??? இதுல ஸ்வீட்டு சாப்பிட்டா டயபட்டீக்ஸ் வருமாம்.. நல்லா வரும்டி..” என்று ப்ரீதா வம்பிழுக்க மீண்டும் அவ்விடம் களைகட்டியது...

இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஶ்ரீயை வம்பிழுத்த வண்ணம் இருக்க ஶ்ரீயின் உறவுக்கார பெண்மணி மணமகன் வீட்டில் இருந்து வந்திருப்பதாகவும் அனுவையும் ப்ரீதாவையும் ஆராத்தியெடுக்க வரச்சொல்லிவிட்டு சென்றார்.. சஞ்சு மட்டும் ஶ்ரீயிற்கு துணையாய் இருக்க மற்றைய அனைவரும் மணமகன் வீட்டாரை பார்க்க வாசலிற்கு சென்றுவிட்டனர்...

வாசலில் சீர் தட்டுக்களுடன் இருந்தனர் ரிஷி வீட்டார். ரிஷி தவிர அவனது குடும்பத்தார் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்திருந்தனர்... மூன்று மாதங்களாக ரஷ்யாவில் இருந்த நேற்று நாடு திரும்பிய ரித்வி கூட பட்டு வேட்டி சட்டை சகிதம் அக்கூட்டதில் இருந்தான்... அவனுடன் ரவியும் சுந்தரும் இணைந்திருந்தனர்....
மணமகன் வீட்டாரை வாசலிலே நிறுத்தி ஆராத்தி எடுத்து பின்னே உள்ளே அழைத்துவரப்பட்டனர்..

உள்ளே வந்தவர்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தின் நடுவில் அனைத்து சீர்தட்டையும் அடுக்கிவைத்துவிட்டு அமர பெண்ணின் மாமன்வீட்டு சீர்வரிசை தட்டுகள் அனைத்தும் பெண்வீட்டு பெண்மணிகளால் கொண்டுவரப்பட்டு ஜமுக்காளத்தின் நடுவே ஒழுங்கு செய்யப்பட்டது.... இருவீட்டாரும் எதிரெதிர்புறம் அமர்ந்ததும் பெண்ணை அழைத்துவருமாறு மணமகன் புறமிருந்த பெரியவரொருவர் பணிக்க ராதா மற்றும் அனு துணையுடன் நடுச்சாலைக்கு அழைத்து வரப்பட்டாள் ஶ்ரீ...

இந்த சடங்குகளனைத்தையும் வீட்டிற்கு வெளியேயிருந்த காரிலிருந்து ரித்வியின் உபயத்தால் மெசென்ஜர் வீடியோ காலினூடாக பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி..
அழகுப்பதுமையாய் குனிந்த தலை நிமிராமல் அன்னநடையிட்டு வந்தவளை கண்டு அனைவரும் வாயை பிளந்து நிற்க ரித்வியின் இருபுறமும் அமர்ந்திருந்த சுந்தரும் ரவியும் ரித்வியின் காதை கடித்தனர்..

“அண்ணா பொண்ணு மாறிடிச்சுனு நினைக்கிறேன்...”என்று ரவி தொடங்க சுந்தரும்

“ஆமா அண்ணா எனக்கும் அப்படி தான் தோனுது. நான் அடிச்சு சொல்லுவேன்... இது நம்ம ஶ்ரீ இல்லை...”

“ஆமாடா... எனக்கும் அதே டவுட்டு தான்...நம்ம ஶ்ரீக்கு நிமிந்த தலை குனியாம நடக்குற பழக்கம் தான் இருக்கு... ஆனா இந்த பொண்ணு குனிந்த தலை நிமிராம நடக்குதே.... ஒருவேளை பொண்ணு மாறி போச்சோ...??” என்று ரித்வியும் சந்தேகமாய் ஶ்ரீயை நோக்க அப்போது தான் கவனித்தான் ஶ்ரீயின் அன்னை ராதா கைமறைவில் அவளது கையை கிள்ளுவதையும் ஶ்ரீயும் அதை தடுக்க போராடுவதற்காக தலை குனிந்தபடி நடந்து வருவதையும்...

அதை ரவி மற்றும் சுந்தரிடம் காட்டிய ரித்வி
“டேய் அது என் அண்ணியார் ஶ்ரீ தான்டா.... அங்க பாரு அத்தை அவகிட்ட ஏதோ சொல்ல இவ முடியாதுனு சொல்ல அவங்க கையை நருக்குனு கிள்ளிட்டாங்க போல.. இவ வலிதாங்கமுடியாம அதை மறைக்க தலை குனிஞ்சிட்டே வர்றா...”

“அட ஆமா... அதானே பார்த்தேன்... நம்ம ஶ்ரீயா இப்படி குனிஞ்ச தலை நிமிராம நடந்து வர்றதுனு... டேய் சுந்தர் இதை வீடியோ பண்ணி வச்சிக்கோடா... இந்த மாதிரியொரு காட்சியை எப்பவும் பார்க்கக்கிடைக்காது...” என்று ரவி கூற சுந்தரும் தனது மொபைலை எடுத்து வீடியோ எடுக்க வீடியோ காலில் இருந்த ரிஷி இவர்களது உரையாடலை கேட்டு சிரித்துக்கொண்டான்... வாய் மட்டுமே சிரிக்க மனமோ அன்னநடையிட்டு நடந்து வந்தவளின் காலடியில் சரணடைந்திருந்தது..

மயில் பச்சைநிற பட்டுசேலை மடிப்பு கலையாதவாறு அணிந்து தோளிரண்டை முட்டுமளவு அடுக்கடுக்கு பச்சைநிற ஜிமிக்கி காதில் ஊஞ்சலாட அதற்கு அடுத்ததாய் சங்கு கழுத்தில் மார்புவரை நீண்ட ஆரமொன்றும் கையில் சேலைக்கு பொருத்தமான வளையல்களும் இடுப்பிற்கு மெல்லிய ஒட்டியாணமும் காலிற்கு வெள்ளிக்கொலுசும் அணிந்து தேவதையாய் சபையிற்கு வந்தாள் ஶ்ரீ...
பார்ப்பவரை கிறங்கடிக்கும் பெண்ணவள் வதனமோ ப்யூட்டிஷனின் கைவண்ணத்தாலும் மணப்பெண்ணிற்கே உரிய வெட்கம், நாணல், காதலாலும் அளவில்லா தேஜஸ்சுடன் ஜொலித்தது...

நடு வகிடெடுத்து வாரப்பட்டிருந்த கூந்தல் இடுப்பிற்கு கீழே வரை சவரிமுடி வைத்து பின்னப்பட்டு மல்லிகை மொட்டு சரத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது... நடு வகிட்டின் இடைவெளியை நிரப்பியிருந்தது தட்டடுக்கு அரக்கு நெத்திச்சுட்டி....
முன்னெற்றியில் சில சிறு முடிகள் ஆங்காங்கே சில இடத்தில் படர்ந்திருக்க அது கூட அந்த அழகிய வதனத்திற்கு ஒருவித அழகை அள்ளிக்கொடுத்தது... வில்லாய் வளைந்திருந்த அந்த இரு புருவங்களும் சீர்படுத்தப்பட்டிருந்தது... அந்த இரு புருவ முடிச்சில் சிம்மாசனமிட்டு இது என் ஆசனம் என்ற ரீதியில் அமர்ந்திருந்தது சிவப்பு நிற பொட்டு... அதன் கீழே நான் உந்தன் அடிமை என்ற ரீதியில் வரையப்பட்டிருந்த வெள்ளை நிற பொட்டு....
கண்களிரண்டிலும் பல வர்ணஜாலங்கள்... இமை மூடும் போது மயில் பச்சைநிறமும் மயில் நீல நிறமும் கண்களுக்கு விருந்தாக கண்திறந்திருக்கும் போது வானவில்லின் ஏழு நிறங்களின் சேர்க்கையாய் ஒரு நிறம் விருந்தாகியது...

கண்ணிற்கு கீழே ஆழமாய் வரையப்பட்டிருந்த கறுப்பு நிற கண் மையும் ஜோடி சேர வர்ணங்கள் அனைத்தும் நிறைந்த அந்த கயல் விழி எதிரிலிருப்பவரை சுண்டியிழுத்தது.. அதை தொடர்ந்து மூக்கிலிருந்த அந்த வெள்ளைக்கல் மூக்குத்தியும் சேர்ந்துகொள்ள மன்மதன் மயங்கிய ரதியின் எழிலழகை மிஞ்சினாள் ஶ்ரீ..... கன்னமிரண்டிலும் செம்மையும் ஒப்பனையும் போட்டிபோட அது இன்னும் சிவந்திருந்தது... உதட்டு சாயத்தின் உபயத்தால் செக்கச்சிவந்து சித்தம் கலங்க வைத்தது இதழிரண்டும்...

இவ்வாறு அழகின் மொத்த உருவமாய் சபைக்கு அழைத்து வரப்பட்டவள் சபையோரிடம் ஆசி வாங்குமாறு பணிக்கப்பட்டாள்.. பெரியோரின் சொல்லிற்கிணங்க ஆசி வாங்கியவளை தனியே விபூதியிட்டு ஆசிர்வதித்தார் ஶ்ரீயின் தாய்மாமா ராமசந்திரன்.. ஶ்ரீ ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதும் அவளது கையில் நிச்சயப்புடவை அடங்கிய சீர்தட்டை கொடுத்து மாற்றி வரச்சொன்னார்கள்... சீர்தட்டை பெற்றுக்கொண்டவளை பெண்கள் அழைத்து செல்ல சபையில் நிச்சய ஓலை எழுதப்பட்டு சபையில் படிக்கப்பட்டது... ஓலை படித்துமுடிந்ததும் பெண்ணின் தாய்மாமனும் மணமகனின் தாய்மாமனும் நிச்சயத்தட்டு மாற்றிக்கொண்டனர்.....

( சில இனத்தினரின் சம்பிரதாயப்படி பெண்ணின் தாய்மாமனும் மணமகனின் தாய்மாமனும் நிச்சயத்தாம்பூலம் மாற்றிக்கொள்வர்.... இதன் மூலம் உணர்த்த முற்படுவது யாதெனின் பெற்றோரை விட தாய்மாமனுக்கே மணமகன்/ மணமகள் லில் உரிமை அதிகம்... தாய்மாமன் எதிர்ப்பு தெரிவித்தால் திருமணத்தை நடத்த முடியாது..... இந்த மரபு அறிமுகப்படுத்தியதற்கான காரணம் முன்னைய காலத்தில் அத்தை மகன்/மகள் மாமா மகன்/ மகள் ஐ திருமணம் செய்து கொள்ளும் வழமையே அதிகளவில் இருந்தது... உறவுகளுக்கிடையே பகையோ சண்டை சச்சரவுகளோ ஏற்பட்டு குடும்பங்கள் பிரிந்தாலும் இந்த சம்பிரதாய சடங்குகளால் ஒன்று சேர வேண்டும் என்றெண்ணியே இந்த நடைமுறைகளை உருவாக்கினர்..... அதோடு மணப்பெண்/ மணமகனின் நலனை அதிகம் விரும்பும் உறவுகள் தலைமையில் இப்படியான சடங்கு சம்பிரதாயங்களை நடாத்துவது இன்னும் சிறப்பானது என்றொரு நல்லெண்ணமும் இருந்தது ....)

நிச்சய தாம்பூலம் மாற்றியதும் மணமகளான ஶ்ரீ கூறை பட்டுடுத்தி சபைக்கு அழைத்து வரப்பட்டாள்.... சபைக்கு அழைத்து வரப்பட்டவள் மீண்டுமொருமுறை சபையினரை வீழ்ந்து வணங்கியதும் ஶ்ரீயின் தாய்மாமா சீர்தட்டிலிருந்த பூமாலையை அணிவித்தவர் அவளுக்கு விபூதி பூசி ஆசிர்வதித்தார்..
அவரைத்தொடர்ந்து சபையிலிருந்த அனைவரும் அதையே செய்தனர்......

பெரியவர்கள் அனைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிமுடிக்கும் முன் ஶ்ரீ ஒரு வழியாகவிட்டாள்.... அனைவரின் காலிலும் விழுந்து எழுந்தவளுக்கு இடுப்பு எலும்பு ஒடிந்துவிட்டது.... அதுவும் முகத்தில் வலியை காட்டாது சிரித்த முகமாய் இருக்க திண்டாடிப்போனாள்.... வெளியே சிரித்துக்கொண்டே மனதினுள் ரிஷியை காய்ச்சி எடுத்துக்கொண்டிருந்தாள்....

“சே இப்படி விழுந்தெழும்ப வச்சிட்டாங்களே.... ஒன்னு ரெண்டுனு பார்த்தா ஒரு ஊரே நிற்குதே... அடியாத்தி என் இடுப்பு எலும்பு ஒடஞ்சா தான் கூட்டம் குறையும் போல??? இதுலையும் பாரு ஓரவஞ்சனையை நிச்சயத்துக்கு மாப்பிள்ளை வரக்கூடாதாம்..... அதுனால அய்த்தான் தப்பிச்சிட்டான்... நான் தான் இவனை கட்டிக்கிறேனு சொன்ன ஒரே வார்த்தைக்காக இப்படி அல்லாடிட்டு இருக்கேன்.... இந்த அய்த்தான் ஹாய்யா காருல உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இருக்கும்.... நம்மளை மட்டும் ஏன் இப்படி வகையா வச்சி செய்றாங்க... இதுல பசி வேற வயித்தை பிசையிது.... கடவுளே..... என்னை காப்பாத்து....” என்றவளை காப்பாற்றவென வந்தார் ஶ்ரீயின் மாமா ராமச்சந்திரன்....

“அம்மாடி ராதா புள்ளையை அறைக்கு கூட்டிட்டு போ..... புள்ள ரொம்ப களைச்சுபோயிட்டா.... இன்னும் கொஞ்ச நேரத்துல ரெஜிஸ்ட்ரார் வந்திடுவாறு.... அதுக்குள்ள புள்ளைக்கு சாப்பாட்டை குடுத்துட்டு மற்றைய வேலையை பாரு....” என்று பணித்துவிட்டு நிச்சயத்திற்கு வந்திருந்தவர்களை ராஜேஷ்குமாரின் துணையோடு உணவருந்த அழைத்து சென்றார்...

ஶ்ரீயை அறையிற்கு அழைத்து சென்ற ராதா அவளுக்கு உணவை எடுத்து கொடுத்துவிட்டு சென்றார்..... ஶ்ரீயிற்கு துணையாய் சஞ்சுவும், ப்ரீதாவும், அனுவும் இருந்தனர்...
அப்போது தன் தந்தையின் அழைப்பிற்கிணங்க ஹரியோடு காரிலிருந்து இறங்கி வந்தான் ரிஷி.....
அவனை வரவேற்ற ராஜேஷ்குமாரும் ராதாவும் அவனை உணவுண்ண அழைத்து சென்றனர். உணவினை முடித்தவனுக்கு ஓய்விற்கென ஒரு அறையை ஒதுக்கிக்கொடுக்க அதில் ஹரி, ரித்வி என்று ஆண்கள் பட்டாளம் அனைத்தும் அடைந்து கொண்டு தங்கள் லூட்டியை தொடர்ந்தது....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN