சாதி மல்லிப் பூச்சரமே!!! 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 19

பூந்தென்றலுக்கு வேந்தனை சிறு வயதிலிருந்தே பிடிக்கும். அதனால் தான் அவன் கத்தி குத்துப் பட்டிருந்த போது அப்படி துடித்தாள். அதே மாதிரி அவன் ஒன்று சொன்னால் அதை செய்து முடிப்பான் என்பதும் அவளுக்கு தெரியும்.

அதனால் தான் வெளிநாட்டில் இருந்த ஹம்ஷானந்தை இவள் அழைத்து அவனை உடனே வரச் சொல்ல, அவனுக்கு சில வேலைகள் இருந்ததால் அதை முடித்துக் கொண்டு மூன்று மாதம் சென்று தான் ஊருக்கு வந்தான் அவன்.

வந்தவன் அவர்கள் சாதி இல்லை என்பதால் ஐயாரு எதிர்ப்பு தெரிவிக்க, பின் தென்றல் அவனும் தங்கள் சாதி தான் என்பதை நிரூபித்த பின்னரே தென்றல் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்க, அவர்கள் எங்கே சம்மதித்தார்கள்? வேந்தனின் பிடிவாதத்தால் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்க, ஹம்ஷானந்துக்கு தூரத்து உறவினர்கள் இங்கிருந்தாலும் அவர்கள் எதிலும் கலந்து கொண்டு எடுத்துச் செய்யமாட்டோம் கல்யாணத்திற்கு மட்டுமே வருவோம் என்று முன்னரே சொல்லி விட்டனர். எடுத்துச் செய்ய பெரியவர்கள் இல்லாததால், புடவை எடுப்பதிலிருந்து தாலி வரை அனைத்துமே தென்றல் வீட்டார் தான் செய்தார்கள். அதிலும் வேந்தன் தான் முன் நின்றான்.


ஆனால் தென்றல் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஏன்… திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்கே உள்ள மலர்ச்சியோ பேச்சோ ஆர்வமோ சிரிப்போ எதுவும் இல்லாமல் முகம் ஒரு வித யோசனையில் இருக்க, அடிக்கடி தனிமையை நாடினாள் அவள். இதையெல்லாம் கண்டாலும் வேந்தன் தென்றலிடம் எதுவும் கேட்கவில்லை. அவனே இல்லை என்னும்போது வீட்டில் வேறு யார் அவளிடம் கேட்பார்கள்? அப்படியும் ஒரு நாள் இவள் மாடியில் மல்லிகைப் பந்தலுக்கு கீழே யோசனையில் அமர்ந்திருக்க


“என்ன பாப்பு? அப்டி ஒரு பலத்த யோசனை! ஆனந்த் கிட்ட பேசுனியா?” அங்கு வந்த வேந்தன் அவளிடம் கேட்க


“ஹாங்.... ஒண்ணும் இல்ல மாமா... ஆனந்த் கிட்டவா? பேசினேன்...” இவள் குரலில் சுரத்தே இல்லாமல் பதில் தர


“எப்போம் பேசுன? நான் ஒரு விசயம் கேக்கறதுக்காண்டி ரெண்டு நாளா போன் பண்ணுதேன்… அவர் எடுக்கவே இல்ல!”


“ஓ...” அவனைப் பார்த்து பேந்தப் பேந்த விழித்தவள் “அதுவா? தெரியலையே மாமா. ஊருக்குப் போன பிறகு போய் சேர்ந்துட்டானானு நான் கேட்டதோட சரி. பிறகு நான் இதுவரை அவனுக்குப் போன் செய்யல மாமா....” தென்றல் என்ன மனநிலையில் இருந்தாலோ தன் மனதை மறையாமல் அப்படியே ஒப்புவிக்க


அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ஏன் பாப்பு... ஒனக்கு இந்த கல்யாணத்தில் முழுச் சம்மதம் தேன... நீ ஆசப்பட்டுத் தேன செய்யச் சொன்னவ?” இவன் ஒரு வித இறுகிய குரலில் கேட்க


“அதெல்லாம் சம்மதம் தான் மாமா. அதான் வெளிநாடு போகப் போறேனே....” கசந்த குரலில் சொன்னவளின் கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட


ஒரு வினாடி அதிர்ந்தவனோ அவளை அணைத்து ஆறுதல் படுத்த எழுந்த ஆவலை அடக்கியவனோ, ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்த படி அவள் பக்கத்தில் அமர, பெண்ணவளுக்கு அப்படி எந்த தயக்கமும் இல்லை போல! சட்டென அவன் மார்பில் தஞ்சம் அடைந்தவள் கதறி அழ, அவள் தலையை வருடியவனோ “ஏய் பாப்பு குட்டி! எதுக்கு டா அழற? மாமாவுக்கு கஷ்டமா இருக்கு பாரு...” இதை சொல்லும்போது அவனுக்குமே தொண்டை அடைத்தது.


“எனக்கு பயமா இருக்கு மாமா...” கேவல்களுக்கு இடையே அவள் சொல்ல, அவளின் பதிலில்


“எப்டியா பட்ட பொண்ணுக்கும் கல்யாணம்னா பயம் வரத்தேன் செய்யும்... வேணும்னா இந்தக் கல்யாணத்தை நிறுத்திறவா?” அவன் சமாதானத்திற்கு கேட்க


உடல் அதிர, வேண்டாம் என்று அவள் தலையை மறுப்பாய் அசைக்க, அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவனோ, “ஒன் சந்தோசத்துக்காண்டி இந்த மாமா என்ன வேண்ணாலும் செய்வேன் டா! அதைப் புரிஞ்சிக்க மொதல்ல” இதை சொல்லும்போதே இவன் குரலில் அப்படி ஒரு உறுதி இருந்தது. பின்னே சிறுவயதில் இருந்து காதலித்து… இவள் தான் தன் பொஞ்சாதி என்று வாழ்ந்து வந்தவன்…. இன்று அவள் சந்தோஷத்திற்காக தன் காதலை விட்டுக் கொடுத்து… இந்த திருமணத்தை நடத்துகிறானே… இந்த அன்பை என்ன வென்று சொல்ல


அதன் பிறகு இருவருக்குள்ளும் இது சம்பந்தமான பேச்சுகள் இல்லாமல் போக,திருமண வேலைகளும் வேகத்தில் நடந்தது.


அப்படி ஒரு வேகத்தில் நடக்க இருந்த திருமணம், இப்போது யாரால் தடை பட்டது? இதோ இன்றைய நிகழ்வு…


வீட்டு வாசலில் வேந்தனின் கார் வந்து நிற்கவும், பதட்டத்துடன் குடும்பத்தார் அனைவருமே வீட்டிலிருந்து வெளியே வர, கழுத்தில் தாலியுடன் இறங்கிய தென்றல் தான் அனைவரின் கண்ணிலும் முதலில் விழுந்தாள். மகளைப் பார்த்ததும் ஒரு தாயாய் மலருக்கு கோபம் வர, மகளைத் தன் பக்கம் இழுத்து கை வலிக்க நாலு அறை அறைந்தவர்.


“பாவி! பாவி! நீ என் பொண்ணாடி? இப்படி பட்ட விஷயத்தை செய்ய உனக்கு எப்படி டி மனசு வந்தது?” அவர் மகளை வெளுத்து வாங்க, “மம்மி....” என்று இவள் வலியில் துடிக்க


“என்ன அப்படி கூப்பிடாத... நீ அப்படி கூப்பிடவே கூடாது....” நடப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்தார்களே தவிர யாரும் தாய் மகளுக்கு இடையில் வரவில்லை. ஆனால் சுந்தரம் தான் மனைவியை வந்து தடுக்க, “என்ன விடுங்க... இவளை அடிச்சே கொல்லனுங்க.... நீ செய்ய இருந்த காரியத்த இப்போ நினைத்தாலும் என் ஈரக் குலையே நடுங்குது....” வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு சொன்னவர்


கணவன் பக்கம் திரும்பி, “இவளை நாம வளர்க்காம இருந்திருந்தா.... இப்படி ஒரு காரியத்தை இவள் செய்ய துணிந்திருக்க மாட்டா இல்லங்க.... அப்போ இவ என் பொண்ணு இல்ல என்றதால்தானே இப்படி செய்ய இருந்தா நான் இவளை சரியா வளர்க்கலையா?...” அவர் ஆதங்கத்தில் கண்ணீர் சிந்த


“மம்மி... அப்படி சொல்லாதீங்க....” தென்றல் துடிக்க


“அவள என்ன அப்படி கூப்பிட வேணாம்னு சொல்லுங்க....” என்றவர் கணவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டார்.


அங்கிருந்தவர்களில் யாருக்கு என்ன பேசுவது என்றே புரியாத ஒரு நிலை. மூத்த தலைமுறையான பாட்டி தான் முதலில் சுதாரித்தவர், “நடந்தது நடந்து போச்சு... இன்னும் எம்புட்டு நேரத்துக்கு இப்டியே நிக்க வெச்சி பாத்துகிட்டு நிக்கப் போறிய? பொண்ணையும் மாப்ளையும் ஆலம் சுத்தி உள்ளார கூப்ட்டு வாங்க...”


பாட்டி போட்ட போடில் வேந்தன் சற்று முன் தாலி கட்டி மனைவி ஆக்கிக் கொண்ட தன்னவளான தென்றல் பக்கத்தில் வந்து நிற்க, இருவருக்கும் ஆலம் சுற்றினார் மலர். ஆமாம்… இப்போது மதிவேந்தனின் மனைவி தான் பூந்தென்றல்!


“வலது காலை எடுத்து வெச்சி வா. நீ வர்ற நேரம் இந்த குடும்பம் அமுத கலசமா பொங்கணும்....” வேறு யாரு? பாட்டி தான் சொல்ல


அதே நேரம் தன்னவளின் கையை இறுக்கிப் பிடித்தான் வேந்தன். அதில் இவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவனும் தன்னவளைப் பார்க்க, ஒரு நொடி என்றாலும் இருவரின் பார்வையும் கவ்வி நின்றது.


விளக்கு ஏற்றி, பால் பழ சடங்குகள் எல்லாம் முடிய, இதுவரை வாயே திறக்காத மாறன் வேட்டியை மடித்துக் கொண்டு மகளிடம் நெருங்க, பயத்தில் ஒரே தாவாக தாவி கணவனின் பட்டு சட்டையை இறுக்க பற்றியபடி அவன் முதுகு புறம் நின்றவள் “மதிமாமா... மதிமாமா...” என்று அலற


மனைவியின் கையைப் பற்றி தட்டிக் கொடுத்தவன், “மாமா.... அவளே பயந்து கெடக்கா... இப்போம் எதுவுஞ் சொல்லாதிய…” என்க


“என்னலே பயந்து கெடக்கா? பயந்த புள்ள செய்ய இருந்த வேலையாலே என் மவ செய்ய இருந்தது? நீ இல்லனா இன்னேரம் என் மவ வாழ்க்கையே நாசமாகி இருக்கும்லே. என் குலசாமியவே காப்பாத்திக் குடுத்துருக்கலே நீ....” மருமகனின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டவர், ஒரு முடிவுடன் மகளை இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குப் போக, அங்கு கிழிந்த நாராய் ஒரு தூணில் கட்டப் பட்டிருந்தான் ஹம்ஷானந்த்.


“இப்போமாச்சு நெசத்த சொல்லுதியா?” என்று இவர் மகளிடம் கர்ஜிக்க,


சட்டென்று தந்தையின் காலில் விழுந்தவள், “நான் பெரிய தப்பைச் செய்ய இருந்தது உண்மை தான் ப்பா. ஆனா சத்தியமா இதுவரை நான் எந்த தப்பும் செய்யல ப்பா… வெளிநாட்டிற்கு படிக்கப் போகணும்னு ஒரு வெறி வேகம்.... அதான் இவனை பொய்யா என் காதலனா நடிக்கச் சொன்னேன் பா...” இதைச் சொல்லும்போதே குற்ற உணர்ச்சியில் அவள் முகமும் குரலும் தோய்ந்தது.


“அது மட்டுமா செஞ்ச? வேற எதுவுஞ் செய்ய நீ துணியலயோ?” ஐயாரு எகிற


“நான் வெளிநாடு போய் படிக்கணும்னு கேட்டப்போ... மாமா, நீ காதலிக்கறவனை கூட்டிட்டி வா கல்யாணம் செய்து அனுப்பறேனு சொன்னாரு. இல்லாத காதலனுக்கு எங்க போகனு யோசிச்சேன். ஏன்னா நான் அப்போ பொய் சொல்லி இருந்தேன். இவன் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என் கிட்ட காதலை சொன்னப்போ நான் மறுத்துட்டேன். இப்போ இவன் ஞாபகம் வரவோ பேசி நடிக்கச் சொன்னேன். ஆனா இவன், நாம கல்யாணமே செய்துக்கலாம் ஆனா… வா....ழ வே...ணாம். அங்கு வெளிநாடு போனதும் உனக்கு அந்த நாட்டுக் குடியுரிமை கிடைத்த உடன் நாம விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சிடலாம்னு சொன்னான். சரி… வாழத் தான் போகறது இல்லையேனு கொஞ்ச நாள் பழகின இவன் பேச்சை நம்பித் தான்....” பாதியிலேயே பேச்சு நிற்க அவமானத்தில் குறுகிப் போனாள் தென்றல்.


“ஆக்கங்கெட்ட கூவ! கோட்டி புடிச்சிருச்சா டி ஒனக்கு? ஒல வாய மூடுனாலும் ஊர் வாய மூட முடியாதுட்டி. இப்டி ஒரு காரியத்தை செய்ய என்னமா துணிஞ்சிட்ட நீ... இது நம்ம வம்முசத்துக்கு அழகா... தகுமா....” பாட்டி வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்ள


இப்போது வேந்தன் பேச ஆரம்பித்தான். “ஆனா அதுக்கு நீ தேர்ந்தெடுத்த ஆளுதேன் சரியில்ல தென்றல்....” ஒரு மாதிரி குரலில் சொன்னவன் “இவன் பொண்ணுங்களை ஏமாற்றி கல்யாணம் கெட்டி வெளிநாட்டுக்கு கூப்ட்டு போய் பணத்துக்காண்டி அவிங்கள விக்கறவன்... ஒன்னையும் அப்டிதாம்ல செய்யப் பாத்து கெடந்திருக்குதான்....”


“அப்டி இவன் செஞ்சா நான் பாத்துட்டு சும்மா இருப்பேன்னு நெனச்சியோ? இவனத் தேடிப் போய் கண்டந்துண்டமா வெட்டிப் போட்ருவேன்...” ஊர்க் காரர்களுக்கே உள்ள வீரத்தில் மாறன் துள்ளியவர், “ஒங்களப் போல பொண்ணுங்க இருக்கறதுனாலதேன் இவனப் போல, பொள்ளாச்சி திருநாவுக்கரசு போல பொறுக்கிங்க எல்லாம் வாழறானுவ... தல நிமிந்து தைரியமா ஒலாவுறானுவ... பெத்தவங்களை விட இவிங்கள நம்புதிய! எல்லாம் என் தப்புதேன். நான் ஒரு அப்பனா இல்ல...” மறுபடியும் அவர் தன்னை நொந்து கொண்டு குமுற…


வேந்தனோ… “மாமா....” என்று அவரை சமாதானம் செய்தவன் மறுபடியும் அவனே பேச ஆரம்பித்தான். “நீ காதலிக்குதேனு சொல்லும்போதே எனக்கு சந்தேகம்தேன். அதாம்ல ஒன்னைய காதலனை கூப்ட்டு வரச் சொன்னேன். ஆனா நீ இப்டி எங்களை ஏமாத்திருவனு நெனைக்கல. அப்புறம் எனக்குத் தெரிஞ்ச டிடெக்டிவ் சேக்காலி மூலமா இவனப் பத்தி நான் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துரும் இவனை கூப்ட்டு போக...” அவன் முடிக்க


எவ்வளவு பெரிய சுழலில் தான் மாட்ட இருந்தோம் என்பதை உணர்ந்ததும், கைகளில் முகம் புதைத்துக் கண்ணீர் விட்டாள் தென்றல்.


என்னதான் தென்றல் அவனுடைய தூரத்து சொந்தம் என்று இந்த ஊர்க்காரர்களைக் கண்டுபிடித்து நிறுத்தினாலும் வேந்தன் அவர்கள் யார் என்னவென்று தீவிரமாக விசாரிக்கவே செய்தான். அப்பொழுதே அவர்கள் லட்சணம் தெரியவர, காத்திருந்து அனைத்தையும் பொறுமையாக விட்டுப்பிடித்தான். இதெல்லாம் முன்பே தெரிந்ததால் தான் இன்று தனக்கு நம்பகமான ஆட்களை வைத்து தென்றலைக் கடத்தியவன், அவளிடம் ஆனந்தைப் பற்றி சொல்லாமல், அவன் நடிக்க வந்ததை மட்டும் தான் தெரிந்து கொண்டதைச் சொல்லி, இப்போது மிரட்டி தான் கோவிலில் வைத்து அவளுக்கு தாலி கட்டினான் வேந்தன். இந்த விஷயத்தை அவன் தாய், தென்றலின் தந்தை, அவளின் வளர்ப்புத் தாய் தந்தை வரை சொல்லி அவர்களின் அனுமதியோடு தான் தன்னவளுக்குத் தாலி கட்டினான் அவன்.


போலீஸ் வந்து ஆனந்தை அள்ளிப் போட்டுக் கொண்டு போக, தென்றலின் பெயர் வராமல் பார்த்துக் கொண்டான் வேந்தன். அன்றைய நாளோ ஒரு வித இறுக்கத்துடனே சென்றது அனைவருக்கும். அதிலும் தென்றலிடம் யாரும் பேசக் கூட இல்லை.


மறுநாள் ஊரறிய திருமணம் செய்ய குறித்திருந்த நேரத்தில் சொந்தங்கள் புடைசூழ, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மறுபடியும் தன்னவளின் கழுத்தில் ஊர் அறிய தாலி கட்டினான் வேந்தன்.


இன்றும் யாரும் தென்றலிடம் பேசவில்லை என்றாலும் அவளை ச்சீ.. என்று ஒதுக்கவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற பாசமும் வளர்த்த பாசமும் இருக்கும் இல்லையா?


குலதெய்வ கோவிலுக்குப் போய் பூஜை முடிந்து தான் மற்ற சடங்குகள் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் முடிவு எடுத்து விட, அன்றைய இரவு படுத்திருந்த வேந்தனுக்கு தூக்கம் வராமல் போக, தன்னவளைக் காண வழக்கம் போல யாருக்கும் தெரியாமல் இவன் பால்கனி பைப் வழியாக ஏறி மனைவியின் அறை பால்கனிக்குச் சென்று பின் இவன் குதூகலத்துடன் தென்றலின் அறையை எட்டிப் பார்க்க, அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியில் விக்கித்து நின்றான் அந்த மாவீரன்!
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 19
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijayalakshmi 15

New member
கதை மிகவும் அருமையாக உள்ளது நல்லவேளை வேந்தன் பூந்தென்றலை திருமணம் செய்து கொண்டான் இல்லை என்றால் வெளிநாட்டில் படிக்க ஆசை பட்டு ஒரு கயவன் இடத்தில் சிக்கி அவளுடைய வாழ்க்கை சிதைந்து இருக்கும் நன்றி சகோதரி😎😎😎
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதை மிகவும் அருமையாக உள்ளது நல்லவேளை வேந்தன் பூந்தென்றலை திருமணம் செய்து கொண்டான் இல்லை என்றால் வெளிநாட்டில் படிக்க ஆசை பட்டு ஒரு கயவன் இடத்தில் சிக்கி அவளுடைய வாழ்க்கை சிதைந்து இருக்கும் நன்றி சகோதரி😎😎😎

மிக்க நன்றிகள் சிஸ் 💖
 

Chellam

Member
இந்த தென்றல் ஏதாவது செய்து வேந்தனை கலங்கடிப்பதையே அவள் வேலையாக வைத்திருப்பாளோ.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இந்த தென்றல் ஏதாவது செய்து வேந்தனை கலங்கடிப்பதையே அவள் வேலையாக வைத்திருப்பாளோ.
கேடி பயப்புள்ள
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN