சாதி மல்லிப் பூச்சரமே!!! 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 20
வேந்தன் ஆனந்தை போலீசில் ஒப்படைத்து விட்டு எல்லாம் முடித்து வீட்டுக்கு வர, அங்கு யாரும் சாப்பிடாமல்... எதையும் செய்யாமல் ஒருவித இறுகிய மனநிலையிலே இருந்தனர்


“எய்யா பேராண்டி.. ஆக்கி வச்ச சோறு முச்சூடும் அப்டியே இருக்குயா. கொடல் தண்ணீ வத்த எல்லாம் சுருண்டுகிட்டு கெடக்குதுங்க.... செத்த எல்லாரையும் சாப்ட சொல்லு ராசா...” பாட்டி ஆற்றாமையால் சொல்ல


“பாப்பு சாப்ட்டாளா ஆச்சி?” இவன் மனைவியைக் கேட்க


“எங்கையா? சிட்டா பறந்துட்டு கெடந்த புள்ள... சோறு தண்ணி இல்லாம அவ அறையில அழுதுட்டு கெடக்கா. அத என்னனு கேக்கக் கூட இங்கன நாதி இல்ல...” பாட்டிக்கு தென்றல் செய்தது தவறு தான் என்று ஒத்துக் கொண்டாலும், பேத்தியை விட்டுக் கொடுக்க மனசு இல்லை அவருக்கு.


“சரி நான் பாத்துக்கிடுதேன்.... நீ சாப்டியா?”


“ஆச்சி... ஆச்சி.... நானும் சாப்டாம கெடந்தா என் பேத்திய யார் பாத்துக்கிடுவா?” அவர் பெருமூச்சு விட


இவன் சாதத்தை தட்டில் போட்டுக் கொண்டு மாமன் அறைக்குச் சென்றவன் “என்ன மாமா சத்தியாகெரகம் பண்ணுதியா... ஒன் மாப்ள நான் என்ன செத்தா போய்ட்டேன்? எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கிடுல... எப்பவும் நான் இருக்குதேன் மாமா...” என்றவன் பிசைந்த உணவை அவர் முன் நீட்ட


“மாப்ள....” என்று அவனைக் கட்டிக் கொண்டவர் “என் உசுரையே காப்பாத்திக் கொடுத்திருக்குதய்யா....” அவர் திணற


“இம்புட்டு நாள் அவ ஒன் உசுரு... இன்னைலயிருந்து அவ என் உசுரு... அத எப்டி பாத்துக்கிடணும்னு எனக்குத் தெரியும். நீ சாப்ட்டு தூங்கு” இவன் கோபமே இல்லாமல் குரலில் அழுத்தத்துடன் சொல்ல, மறுபேச்சு இல்லாமல் உண்டு முடித்தார் அவர்.


பின் ஐயாருவிடம் வந்தவன், “என்ன இன்னும் சாப்டாம இருக்கியலாம்... சேத்துல காலை வெச்சு நெல்லை வெளையவெக்குத நாமளே அத ஒதாசீனப் படுத்துனா எப்டி... அதேன் நான் இருக்கேனல்லோ? பேசாம சாப்டுங்க...” இவன் ஒருவித குரலில் அதிகாரம் செய்ய


“எய்யா வேந்தா... நீ உசுர மட்டும் காப்பாத்தித் தந்த என் அம்மை இல்ல யா... இன்னிக்கு நம்ம குடும்ப மானத்தையே காப்பாத்துன என் குலதெய்வம் யா....” உணர்ச்சிவசத்தில் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார் அவர்.


இப்போது அவன் தன் மனைவியின் அறைக்கு வர, கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள் தென்றல்.


“ஏய்... பாப்பு... எழுந்துரு டா....” இவன் அவளை உலுக்க, அவள் நிமிரவே இல்லை.


“கொலப்பசியில நான் வந்து இருக்குதேன்... இப்போம் நீ எழுந்து சாப்புடல... சாப்டாம நானும் ஒன் கூடவே படுத்துருவேன். அதுவும் நீ சாப்புடுதவரைக்கும் சொல்லிட்டேன்...” இவன் உறுதியாய் சொல்ல


மறுநிமிடம் அவள் எழுந்து அவனைக் கட்டிக் கொள்ள, “இந்த அழுகாச்சி மூஞ்சி எனக்கு வேணாம். போ... போய்... மொகம் அலம்பிகிட்டு வா. எனக்கு இருக்குத பசிக்கு ஒன்னைய கடிச்சி தின்னாலும் தின்ருவேன்...” இவன் கேலியாய் சொன்னாலும் கணவன் முகத்தில் சோர்வைப் பார்த்தவள், அதன்படியே செய்து வர, தனக்கு ஒரு உருண்டை என்றும் தன்னவளுக்கு ஒரு உருண்டை என்றும் உணவை ஊட்டி சாப்பிட்டு முடித்தவன் பின் மனைவியின் பக்கத்தில் அமர


அவன் மார்பில் முகம் புதைத்தவள், “என்ன மன்னிச்சிட்டியா மாமா...”என்க


“ஓய்.. என்னட்டி இது என்ட்ட மாப்பு கேக்கறவ! என் பாப்புவ மன்னிக்காம வேற யார நான் மன்னிக்குதேன்... அதும் அப்டி என்னைய புடிச்சிகிட்டு கதறி கேக்குதப்ப... நீ ஒன் தப்ப ஒணர்ந்துட்ட இல்ல டா?” இவன் கேட்க


“ம்ம்ம்.....” இவள் தலை அசைக்க


“ஒருத்தவிங்க தன் தவற ஒணர்ந்து வந்தா... அவுகள மன்னிக்கணும். அப்டி செய்யாம போறதால அவிங்களுடைய எதிர்காலத்தையே ஒரு விதத்துல குழி தோண்டி பொதைக்க நாமே காரணம் ஆயிருவோம். அப்டி இருக்குதப்போ நான் ஒனக்கு அதச் செய்வேனா?” இவன் மனைவியை சமாதானப் படுத்த


“ஆனா... அப்பா...” இவள் கேவ


“நான் ஒண்ணு சொல்லுதேன்… அதக் கேட்டுக்கிருவியா...” என்றவன் அவள் பதிலை எதிர் பார்க்காமல் “இந்த ஒலகத்துல ஒரு ஆம்பள தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு பொண்ணு மேல நம்பிக்க வெக்குதான்னா, அது அவன் மனசுலஅந்த புள்ள மேல காதல் வந்த பொறவு தேன். நட்பு என்ற பந்தம் வேற… நான் அதப் பத்தி சொல்ல வரல. ஆனா அதே ஒரு பொண்ணு காதலே இல்லாம ஒரு ஆம்பள மேல நம்பிக்க வெக்குதா, அதும் இந்த இருபதாவது நூற்றாண்டு கம்ப்யூட்டர் காலத்துல!


அப்டியா இன்னைக்கும் அவிங்க வீட்டு ஆம்பளைங்க கட்டுப்பாட்டுல பொண்ணுங்க இருக்காவ? இல்ல… பல பேத்துங்க சொல்லுத போல பொண்ணுங்களுக்கு மூளை இல்லையா? பொண்ணுங்க சந்திரமண்டலத்துக்கே போய் கால் பதிக்குற இந்த காலத்துல நூத்துல ஒரு பங்கு பொண்ணுங்க அவிங்க வீட்டு ஆம்பளைங்க கட்டுப்பாட்டுல இருக்குறது என்னமோ நிசம் தான் ஒத்துக்கிடுதேன். ஒண்ணு தெரிஞ்சிகிடு… இதச் செஞ்சா இப்டிதேன் வரும்னு தட்டிக் குடுத்து தட்டிக் கழிக்கறத விட இத நீ செய்யவே கூடாதுன்னு கட்டுப்பாட்டுல வெக்குறதத் தேன் நான் சொல்லுதேன்.


அப்புறம் பெண்களுக்கு மூளை நெசமாவே இல்லையா? அது இருக்கறதுனாலதேன் இன்னிக்கு கடக்கோடி கிராமத்துல சிமிழ் வெளக்கு வெளிச்சத்துல வாழுத பொண்ணுங்க கூட பல சாதனைகள படைக்குறாக. ஆனா அதப் பயன்படுத்தி யோசிக்கவோ செயல்படவோ முடியாமத்தேன் சில விசயங்க அவிங்கள சூழ்ந்துகிடுது. அந்த நேரத்துல கரையேறுத துரும்பா பக்கத்துல இருக்குத தேன் தடவுன ஒதட்டால சுத்தி வருத ஆம்பளைய புடிச்சிக்கிடுதாக.


அதோட வெளைவுதேன் பொள்ளாச்சி சம்பவம். அதாவது காதல் இருந்தும் இல்லாமலும் அங்கன அரங்கேறுன விசயங்க அதிகம்...” சற்று நேரம் அமைதிக்குப் பிறகு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன்


பின் தொடர்ந்து, “அதப் பாத்தவக, கேட்டவக யாரும் கண்ணீர் சிந்தாம இருந்துருக்க மாட்டாக. எதிர்கால இளம் பொண்ணுங்க ஒன்னைய போல அவசரத்துல முடிவெடுத்து மறுபடியும் பல திருநாவுக்கரசுவுகளை உருவாக்காம எப்பவும் சூதானமா இருந்துக்கிடணும். இதை மாமா எதிர்பாக்கறது சரிதேன?”


“எந்த ஒரு எடத்துலயும் சரி… நமக்கானவிங்கள்கிட்டேயும் சரி ஒங்க கருத்துக்கள வெவாதமாக வெய்யுங்க. அதுல நீங்க சொல்றது சரின்னா மமதைல திரியாதிய. தப்புன்னா அதையும் ஆர்ப்பாட்டம் இல்லாம ஏத்துக்கிடுங்க. என்ன பாப்பு... மாமா சொல்றது சரிதேன?” இவன் தன் கருத்தை சரியா என்று மனைவியிடம் கேட்க


ஒருவித ஆச்சரியத்துடன் தலையை ஆட்டினாள் அவள். “என்னடே படிக்காத மக்கு மாமா இம்புட்டு பேசுதான்னு நெனைக்குறியா?” அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன் “மாமா சீக்கிரம் ஒன்ட்ட பேசுவாக. அதுக்கு நான் பொறுப்பு… சரியா?” இவன் நம்பிக்கை தர, கண்ணீருடன் கணவனின் தோள் சாய்ந்தாள் தென்றல்.


அன்று முழுக்க இப்படி எல்லாம் அழுது ஓய்ந்த மனைவியை சமாதானப் படுத்தி, மறுநாள் திருமணத்திற்கு வேண்டியதைப் பார்த்து அந்த திருமணமும் இனிதே முடிந்தது. பின் தனியே இருந்த தென்றலிடம் வந்த பாட்டி, “அப்பத்தா சொல்லுதேன் நல்லா கேட்டுக்கிரு டி. வேந்தனைப் போல ஒருத்தன் ஒலகம் பூரா சல்லடை போட்டு தேடுனாலும் கெடைக்க மாட்டான். ஒனக்கு ஓரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. ஒன்னோட படிப்பு அது இதுன்னு சொல்லி அத கெடுத்துக்கிடாத. ஒழுங்கா ஒரு பொஞ்சாதியா அவன் மனசு கோணாம நடந்துக்கிரு. நீயும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு கல்யாணமான புதுப்பொண்ணா சந்தோசமா இருந்துக்கிரு. என்னட்டி நான் சொன்னது வெளங்குச்சா?” என்க


யாருமே தன்னிடம் பேசாத போது பாட்டியாவது தன்னிடம் பேசினாரே என்று மகிழ்ந்த தென்றல், “சரி அப்பத்தா! நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்கிறேன்” என உறுதி அளிக்க, அங்கிருந்து விலகினார் பாட்டி.


திருமணத்திற்கு பின் வரும் இந்த முறை அந்த முறை எல்லாம் முடித்து, வேந்தன் இரவு மனைவியுடன் பேசும் நேரத்திற்காக காத்திருக்க, இருவரையும் சில பூஜை முடியும் வரை பிரித்து வைத்தார்கள் பெரியவர்கள்.


தாங்குமா காதலனாய் இருந்து இன்று கணவனான வேந்தன் மனசு? எப்படியோ இவன் மனைவி அறைக்கு வர, கட்டிலில் பேத்தியுடன் சயனத்தில் இருந்தார் பாட்டி ராஜாத்தி.


அவரைப் பார்த்து பேய் முழி முழித்த மாவீரனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அப்போதும் இவன் விடாமல் கையில் கிடைத்ததை தூக்கி மனைவி மேல் வீச, அதுவோ பட வேண்டியவள் மேல் விழாமல் சரியாக பாட்டி மேல் விழுந்தது. “ச்சு.... இந்தா… எப்டி புள்ள இங்கன தூங்குத? ஏதோ மேலேயிருந்து கொட்டுது. ஒன் அப்பன்ட்ட சொல்லி தாரையச் சரி செய்யச் சொல்லு” பாட்டி தூக்கத்தில் பிதற்ற,


அவர் குரலுக்கு சற்றே இருளில் ஒதுங்கியவன், “எழுந்துருக்க வேண்டியவ என் பொஞ்சாதி நல்லா தூங்குதா. இந்த கெழவி என்னவோ பெனாத்துது...” என்று வாய்க்குள்ளே புலம்பியவன் இப்போது சரியாய் மனைவி மேல் ஒன்றைத் தூக்கிப் போட, பாட்டியின் குரலுக்கு விழிப்பு தட்டியவள் பின் அவள் மேல் விழுந்த பொருளுக்கு சுத்தமாக தூக்கம் கலைய எழுந்து அமர்ந்தாள் தென்றல். பின் இவன் மனைவிக்கு சில சத்தங்களை எழுப்பி சமிக்ஞை தர, அங்கு கணவனைக் கண்டு கொண்டவள் பாட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனிடம் எழுந்து வர, அவசரமாக மனைவியின் கையைப் பிடித்து இவன் பால்கனியின் இருளுக்கு அவளை இழுத்துச் செல்ல


அவளோ… “மாமா... இப்போ எதுவும் இருக்கக் கூடாதாம்... அவசரப் படாதிங்க...” இவள் முகம் சிவந்த படி கணவனுக்கு கட்டுப்பாடு இட


“அடிப் போடி… என் பொஞ்சாதிட்ட பேசறதுக்கு இவிங்க யார் நாள் குறிக்கறவுக?” என்றவன் “எனக்கு ஒன்னைய காந்தம் போல இறுக்க அணச்சிக்கிடணும்... மூச்சு முட்ட முட்ட ஒனக்கு முத்தம் தரணும்... எல்லாத்தையும் விட ஒன் மடில படுத்து விடிய விடிய தூங்கணும்... இதுக்கு யார் எனக்கு நாள் பாக்க?” இவன் தாபத்தைச் சொல்ல


‘ஐயோ! சும்மா வந்தவரை... நாம தான் உளறிட்டமோ!’ என்று நினைத்தவள் இன்னும் முகம் சிவந்தாள்


அவன் சொன்ன மாதிரியே மனைவியைக் காதலோடு அணைத்து, தாபத்தோடு முத்தமிட்டு, சேய் என தன்னவளின் மடியில் படுக்க.. கணவனின் ஆலிங்கனத்தில் மூச்சுத் திணறினாள் தென்றல்.


அவனோ மடியில் படுத்திருந்தாலும், தோன்றும் போது எல்லாம் நிமிர்ந்து மனைவியின் காதிலும் கழுத்திலும் உதடுகளால் சில்மிஷம் செய்ய… அதில் சொக்கித் தான் போனாள் பெண்ணவள். இப்போது மனைவியின் மடிக்கு வந்தவனின் தலை முடியை கெட்டியாகப் பிடித்தவள்... “சேட்ட கூடிருச்சு மாமா உனக்கு. சும்மா இரு....” என்க அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.


“நீ சொல்றத பாத்தா... நெசமாவே சும்மா இருன்னு சொல்லுத போல இல்லட்டி....” இவன் வம்பிழுக்க, இன்னும் சிவந்தாள் பெண்ணவள்.


இப்போது அவன் முகமோ தன்னவளின் வயிற்றில் இருந்தது. கணவனின் காதலில் அவனுடன் கரைந்தவள் “மாமா.... நான் படிக்க வெளிநாடு போகவா....” இவளோ இதான் நேரம் என்று திக்கித் திணறி கேட்டு விட


“ம்ஹும்.... முடியவே முடியாது. இந்த குட்டி வயித்துல எம்புட்டு சீக்கிரம் முடியுமோ அம்புட்டு சீக்கிரம் குட்டி மதிவேந்தனோ... இல்ல குட்டி பூந்தென்றலோ வந்தே தீரணும். மாமா அதுல அதி தீவிரமா இருக்குதேன்” என்றவன் மனைவியின் வயிற்றில் முத்தம் வைத்து விட்டு, எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்து, “அந்த ஆனந்த் கெட்டவன்னு எனக்கு முந்தியே தெரியும். சரி நீ எம்புட்டு தூரம் போறவன்னு பாக்கலாம்னு இருந்தேன்.


அன்னைக்கி மாடில கூட அதுக்குதேன் கேட்டேன். நீ வாயே தொறக்கல ஆனா அழுதவ. வீட்டுல அவன பத்தி சொல்லி அன்னைக்கே ஊரறிய ஒன்னைய நான் கல்யாணம் கெட்டி இருப்பேன். ஆனா நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி மறுத்து என்னைய விட்டுப் போயிறுவியோனுதேன் நேத்து அவசரமா ஒன்னைய மெரட்டி தாலி கெட்டுனேன். அதேன்… இனி என்னைய விட்டு இருக்கிறதை பத்தி யோசிக்காத. போதும் நாம பிரிஞ்சி இருந்தது” அவன் பிடிவாதமாய் மறுக்க, விக்கித்துப் போனாள் அவன் மனைவி.


“ஆமா... ஆச்சிய எதுக்கு ஒன் கூட தங்கச் சொன்னுத?”


“நானா சொன்னேன்? அதுவா வந்து பிடிவாதமா படுத்துட்டு இருக்கு...” இவள் சலித்துக் கொள்ள


மனைவியின் சலிப்பில் சிலிர்த்தவன், புன்னைகையுடன் தன்னவளின் மடியில் தலை சாய்த்துக் கதை பேச, கணவனின் தலை கோதி, ம்... கொட்டினாள் வேந்தனின் மனைவி.


நேரம் போவது தெரியாமல் இருவரும் இருக்க, திடீரென்று “பகல்ல பாத்து பேசு... ராவுல அதுவும் பேசாதனு சொல்லுவாக. இங்க என்னனா... ரெண்டும் கும்மி கொட்டி கூத்தடிச்சிகிட்டு கெடக்குதுங்க” பாட்டி எழுந்து வந்து ஒரு அதட்டல் போட


தென்றல் வெட்கத்தில் நெளிய, வேந்தனோ இன்னும் சட்டமாய் மனைவியின் மடியில் படுத்துக் கொண்டு “அதேன் கூத்தடிக்குறோம்னு தெரியுது இல்ல? போய் தூங்குவியா… சின்னஞ் சிறுசுங்கள அதட்டிகிட்டு...” இவனும் எதிர் பதில் தர


“வாரியல் (துடைப்பம்) பிஞ்சிரும். தொரைக்கு பொஞ்சாதிய கொஞ்சாம இருக்க முடியலையோ? இனி இங்கிட்டு வா… ஒன் கால ஒடைக்குதேன்”


“ஒடச்சிருவியா? எங்க ஒடையன் பாக்குதேன்...” இவன் வேட்டியை மடித்துக் கொண்டு எகிற


பின் தென்றல் தான் அவனை சமாதனப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தாள். பிறகு பாட்டியுடன் படுத்தவள், “ஏன் அப்பத்தா இப்படி செய்த? மாமா விடியற வரை பேசத் தான் வந்தார்... அதற்குள்ள அனுப்பிட்டியே...” இவள் கணவனுக்காய் பரிந்து பேச


“அடிப் போடி கோட்டிக்காரி... ஆம்பளைங்கள பத்தி எனக்கு தெரியாதா? நடு சாமத்துல புருசங்காரன் பேச வந்தான்னு சொல்லுத மொத பொஞ்சாதி நீ தேன் டி! என் பேராண்டி பகலையே ராவாக்க காத்துகிட்டு இருக்குதான். அதுக்குத்தாம்ல நான் ஒன் கூட படுக்க வந்தேன்” பாட்டி நீட்டி முழங்கி ஒரு கொட்டாவி விட


வெட்கத்தில் முகம் சிவக்க கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் அவள். ஆனால் சற்று நேரத்திலே அவள் முகம் யோசனையில் ஆழ்ந்தது. தென்றல் வெளி நாடு போக பொய்யாய் ஒரு காதலை சொல்லி… பின் அதில் இருந்து தப்பித்து… இன்று தன் மாமனையே கட்டி கொண்டவளுக்கு… பாட்டி சொன்ன புத்திமதிக்கு பிறகு இது தான் தனக்கான வாழ்வு என்பதை ஏற்று கொள்ள ஆரம்பித்தாள்… அப்பவும் தன் ஆசையை அவள் கணவனிடம் சொல்ல அவனோ அதை மறுக்க… தற்போது பாட்டி சொன்ன வார்த்தையால் வேறு ஒரு முடிவை எடுத்தாள் அவள்… இப்போது அவள் செய்ய இருக்கும் செயலால் குடும்பம் என்ன ஆகுமோ?...

 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 20
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Chellam

Member
அடுத்து என்ன முடிவு எடுத்து இருக்கிறாள் என்று தெரியவில்லையே.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அடுத்து என்ன முடிவு எடுத்து இருக்கிறாள் என்று தெரியவில்லையே.
💙
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN