மாயம் 25

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என் மனம்கவர்ந்தவள்
வலியால் துடித்து
வெம்பி நிற்பதை
கண்டு
தினம் தினம்
உதிரம்
வடிக்கிறது காதல்
கொண்ட
இதயம்..

மாலை ஹேமாவை டிஸ்சார்ஜ் செய்ய அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ.....ராஜேஷ்குமார் வந்ததும் ரித்வி சென்றுவிட கண்விழித்த ஹேமாவிற்கு ரித்வி அவளை அனுமதித்தது தெரியாது... ஶ்ரீயும் அது பற்றி தெரிவிக்கதாதால் ஹேமாவுக்கு தெரியவில்லை...

மயக்கத்தில் இருந்து எழுந்த ஹேமா மீண்டும் பயத்தில் புலம்ப, அவளை அமைதிப்படுத்திய ஶ்ரீ அவள் தற்போது தன்னுடன் பாதுகாப்பாய் இருப்பதை வார்த்தைகளால் உணர்த்தியவள் இனி அவளை எந்த ஆபத்தும் நெருங்காமல் தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தாள் ஶ்ரீ...

ஶ்ரீயின் வார்த்தைகள் சரியாய் ஹேமாவிடம் வேலை செய்ய ஹேமாவின் புலம்பலும் நின்றது... மாலை ஶ்ரீயின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டவள் ஶ்ரீயின் அறையில் தங்குவதாக முடிவு செய்யப்பட்டது...

ராதாவும் அனுவும் ஹேமாவிற்கு தேவையானவற்றை செய்து கொடுக்க ஶ்ரீயின் துணையுடன் ஹேமா தங்கியிருந்தாள்... இரவு உணவை முடித்துவிட்டு ஹேமா உறங்கத்தயாராக ஏதோ வயிற்றை பிரட்டுவது போல் இருக்க வாஷ் ரூம் சென்றவள் வாஷ்பேசனில் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டாள்...
அவள் வாஷ்ரூம் சென்றதும் பின்னாலேயே சென்ற ஶ்ரீ அவளது நெற்றியை பிடித்தபடி தலையை தாங்கிக்கொண்டாள்...

ஐந்துமுறை வயிற்றிலிருந்த அனைத்தையும் வெளியே எடுத்தவள் சோர்ந்து அரை மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்...அவளை தாங்கிக்கொண்ட ஶ்ரீ அவளை சுத்தப்படுத்திவிட்டு கைத்தாங்கலாய் வாஷ்ரூமிலிருந்து அழைத்து வந்து ஹேமாவை கட்டிலில்படுக்க வைத்துவிட்டு தன் அன்னையை அழைத்து வந்தாள் ஶ்ரீ....
ஶ்ரீயுடன் அறைக்கு வந்த ராதா ஹேவாவின் அருகில் சென்று அவளை ஆராய அவளது சோர்வு பற்றி ஶ்ரீயிடம் விசாரிக்க ஶ்ரீ அப்போது தான் ராதாவிடம் ஹேமா கர்ப்பாக இருக்கும் விடயத்தை கூறினாள்... அதை கேட்டதும் அவளை வையத்தொடங்கினாள் ராதா...

“ ஏன்டி அறிவு கெட்டவளே... இதை ஏன்டி முதல்லயே சொல்லலை.... வயித்து புள்ளைக்காரிக்கு மொதல் மூனு மாசம் மசக்கை படுத்தியெடுக்கும்.... அந்த நேரத்துல ரொம்ப சத்தான ஆகாரமா கொடுக்கனும்.... இப்போ டின்னருக்கு ஒரு இட்லியோடயே போதும்னு எழும்பிட்டா.... மொதல்லையே தெரிஞ்சிருந்தா வற்புறுத்தி அவளை நல்லா சாப்பிட வச்சிருப்பேன்... இப்போ பாரு சாப்பிட்டதெல்லாம் வெளிய வந்து மயக்கமாயிட்டா...இப்படி இருக்கது கருவுல வளர்ற குழந்தைக்கு சரியில்லை... இரு நான் போய் பால் ஆத்தி கொண்டு வர்றேன்... அதை மொதல்ல குடிக்க கொடுப்போம்..” என்றுவிட்ட அறையிலிருந்து சென்ற ராதா சிறிது நேரத்தில் ஒரு கையில் பால் கோப்பையுடனும் மறுகையில் பெருஞ்சீரகத்துடனும் வந்தார்...

ஶ்ரீயும் அனுவும் ஹேமா சாய்வாய் எழுந்து அமர உதவி செய்ய அவளருகே வந்தமர்ந்த ராதா பால் கோப்பையை நீட்ட
“வேணா ஆன்டி.... முடியலை... ஒரு மாதிரி கிறுகிறுனு இருக்கு...”

“அப்படி தான் மா இருக்கும்... வெறும் வயித்தோடு இருக்கக்கூடாது. இந்த பாலை குடிச்சிட்டு இந்த பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லு.. வாமிட் வராது....” என்று ராதா கூற அவரது கூற்றை மறுக்கமுடியாது பாலை கையில் வாங்க முயன்றவளுக்கு கை நடுங்கியது....

ராதாவே பாலை புகட்டிவிட அதை ஒருவாறு குடித்து முடித்தவள் எங்கே மறுபடியும் வாமிட் வந்துவிடுமோ என்ற பயத்தில் பெருஞ்சீரகத்தை வாங்கி வாயில் போட்டுக்கொண்டாள்.... சிறிது நேரத்தில் சரியாகிவிட சற்று தெம்பான ஹேமா தான் படுத்துக்கொள்வதாக கூற ராதா

“சரிமா படுத்துக்கோ.... உனக்கு ஹாட் பேக்குல கொஞ்சம் இட்லியும் பிளாஸ்கில் பாலும் எடுத்து வைக்கிறேன்... இடையில பசிச்சா எழுந்து சாப்பிடு.. முடியலைனா தான்யாகிட்ட சொல்லு... அவ போட்டு தருவா.... வயித்தை காயப்போட்டுராத.. இந்த நிலையில் வயித்தை காயப்போடக்கூடாது... எதுவும் தேவைனா ஒரு குரல் குடு நான் வர்றேன்... சரியா???” என்று கேட்க தலையாட்டினாள் ஹேமா

“தான்யா ஹேமாவை பார்த்துக்கோ.. எப்பவும் போல கும்பகர்ணன் மாதிரி தூங்கிறாத... சரியா??”

“கவலைப்படாதே தாய்க்குலமே... என் நட்பு போதும் போதும்னு என் காலில் விழுந்து கெஞ்சுற அளவுக்கு அவளை பத்திரமா பார்த்துக்கிறேன்.... போதுமா..??”

“இப்படி வக்கணையா மட்டும் நல்லா பேசு.... சரி ஹேமா நீ படுத்துக்கோ மா.....” என்றுவிட்டு அனுவையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார் ராதா..அவர் சென்றதும் கதவை அடைத்துவிட்டு வந்த ஶ்ரீ

“நீ தூங்கு பப்ளி ரொம்ப டயர்டா இருக்க....எனக்கும் தூக்கம் கம்மிங்... நைட்டு பசிச்சா என்னை எழுப்பு.... நீயா எழும்பு போயிராத.... சரியா...” என்று அருகில் படுத்தவளிடம்

“ஶ்ரீ உன்கிட்ட ஒன்னு கேட்கனும்....”

“சொல்லு பப்ளி???”

“நான் கன்சீவ்வா இருக்கேனா???” என்று ஹேமா கேட்க படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த ஶ்ரீ என்ன கூறுவதென்று தெரியாமல் முழிக்க

“ஏன் ஶ்ரீ இப்படி முழிக்கிற??? உண்மையை சொல்லு.. நான் கன்சீவ்வா இருக்கேனா....”

“ஆ....மா.... ஹேமா... ஆனால் ஹேமா...”

“ஶ்ரீ எனக்கு இந்த குழந்தை வேணாம்..... இதை நாளைக்கே அபார்ஷன் பண்ணிடலாம்....”

“ஏய் லூசாடி நீ... இது என்ன கடையில விற்கிற பொருளா வேணும்னா வாங்குறதுக்கும் வேணாம்னா தூக்கி வீசுறதுக்கும்... உயிர்டி.... இன்னமும் உருவமே வராத அந்த உயிரை கொல்ல போறேன்னு சொல்லுற???? என்ன பிரச்சனைனாலும் ஒரு உயிரை கொல்லுறது நியாயமா டி?? பேசாம தூங்கு... எதுனாலும் காலையில பேசிக்கலாம்.... ரொம்ப டயர்டா இருக்க. படுத்து தூங்கு...” என்றுவிட்டு லைட்டை அணைத்தவன் நைட் லேம்பை ஒளிரச்செய்துவிட்டு படுத்துவிட்டாள்....

ஏதோ பேச முயன்ற ஹேமாவை குட்நைட் சொல்லியே கடுப்பாக்கிவிட்டு உறங்கிவிட்டாள் ஶ்ரீ... ஆனால் ஹேமாவோ இரவு முழுவதும் தூங்கவில்லை... தாய்மை அடைந்ததை எண்ணி மகிழ்வதா அந்த தாய்மையை கொடுத்தவனை எண்ணி நோவதா என்று புரியவில்லை... இந்த தாய்மையை அடைய அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல... சுமப்பவள் தான் என்றாலும் அதை கொடுத்தவனையும் அதை கொடுத்த விதத்தையும் எண்ணியவளுக்கு மேனி நடுங்கியது... மூன்று மாதங்களாக அவள் அனுபவித்த கொடுமைகள் கண் முன் வந்து அவளை இன்னும் பயமுறுத்தியது.... தன் வாழ்வு இவ்வாறு சீரழிக்கபடுமென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.... என் குழந்தை என்று ஒரு மனம் மகிழ மறு மனமோ அவனது வாரிசு என்று உரக்க கூறி அவளை வதைத்தது... ஊரும் உலகமுமே அதை தான் கூறும் என்ற உண்மையையும் அவள் மனம் எடுத்துரைக்க தவறவில்லை....

அது கண்ணீரை வரவழைக்க தலையணையை கட்டிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள் ஹேமா... சத்தம் கேட்டு கண்விழித்த ஶ்ரீ ஹேமாவை பார்க்க அவள் அழுவது தெரிந்தது.... விரைந்து லைட்டை ஆன் செய்தவள்

“ஹேய் ஹேமா..ஏன் அழுற?? என்னாச்சு....???” என்று கேட்டபடி ஹேமாவை அணைத்துக்கொண்டவள் மெதுவாக தடவிக்கொடுத்தாள்....

அப்போது ஆதரவாய் ஒரு அணைப்பை வேண்டி நின்ற ஹேமாவோ ஶ்ரீயின் அணைப்பில் தன் மொத்த துயரத்தையும் அழுகையாய் வெளிப்படுத்தியவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து கண்ணீரை மட்டும் வெளியேற்ற தொடங்கியவள்

“ஏன்டி என்னோட வாழ்க்கையில விதி இப்படி விளையாடுச்சு??? நான் என்ன பாவம் பண்ணேன்...... என்னோட கருவில வளர்ற என்னோட குழந்தையை கூட வெறுக்கிற நிலைமை ஏன் எனக்கு உருவானது??? பல பேருக்கு ஏங்கியிருந்தும் கிடைக்காத தாய்மை எனக்கு கிடைச்சபோதும் அதை சந்தோஷமா அனுபவிக்கிற சந்தரப்பம் ஏன் எனக்கு அமையல??? சந்தோஷமா இருந்த என் வாழ்க்கையை ஏன் அந்த ராட்சசன் வந்து அழிச்சான்??? ஏன்டி என்னோட வாழ்க்கை இப்படி மீழமுடியாத புதைகுழியில விழுந்து அழிந்து போச்சு.... “ என்று கேள்வி கேட்டு அழதவளுக்கு ஆறுதல் கூறினாள் ஶ்ரீ...

“இங்க பாரு பப்ளி... உனக்கு எதுவும் நடக்கலை... இப்போ நீ பத்திரமா என் கூட இருக்க...இனியும் உன்னையும் உன் வயித்துக்குள்ள இருக்க குட்டி பாப்பாவையும் நாங்க எல்லாரும் பாத்துப்போம்...மறுபடியும் யாரும் உன்னை கஷ்டப்படுத்த விடமாட்டேன்... இது நான் உனக்கு பண்ணி தர பிராமிஸ் சரியா??? இப்போ எதை பத்தியும் நினைக்காமல் தூங்கு... நீ நல்லா இருந்தா தான் பாப்பாவும் நல்லாயிருக்கும்..... சோ எதை பத்தியும் நினைக்காமல் தூங்கு பப்ளி...” என்று ஶ்ரீ ஹேமாவை உறங்கக்கூற ஹேமாவோ

“இல்லைடி... அவன்... அவன் என்னை தேடி வருவான்.... என்ன.. என்ன... அவன்.....அவன் வந்தா என்னை திரும்ப அனுப்பிராத..... ப்ளீஸ் டி...” என்று குழந்தையாய் கெஞ்ச

“லூசாடி நீ.... உன்னை மறுபடியும் அவன் கூட அனுப்பிருவேனா?? அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போவேனே தவிர உன்னை அவன் கூட அனுப்ப மாட்டேன்.... புரியிதா??? இப்போ தூங்கு... “ என்ற ஶ்ரீயின் வார்த்தைகளில் சற்று அமைதியடைந்தவள் கட்டிலில் படுக்க முயல

“பப்ளி கொஞ்சம் சாப்பிட்டு படுக்குறியா?? பால் குடிச்சு ரொம்ப நேரமாச்சு.... பாப்புக்கு பசிக்கும்.. கொஞ்சம் சாப்பிடு...” என்று ஶ்ரீ கூற ஹேமா சரியென்று தலையாட்டினாள்...

கட்டிலிருந்து எழுந்த ஶ்ரீ அவளுக்கு உணவு எடுத்து கொடுத்துவிட்டு ஆபிஸில் நடந்த விஷயங்களை சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருந்தாள்... ஶ்ரீயின் பேச்சில் துக்கம் மறந்த ஹேமா பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்..

ஹேமா சாப்பிட்டு முடித்ததும் உணவு தட்டை கழுவி வைத்த ஶ்ரீ ஹேமாவை படுக்கச் சொல்லிவிட்டு தானும் அருகில் படுத்துக்கொண்டாள்....

ஶ்ரீ படுத்ததும் ஹேமா மெதுவா
“ஶ்ரீ.... ரா... ரித்வி எப்படி இருக்காரு...”

“நல்லா இருக்காருடி.. மூனு மாசம் ரஷ்யால இருந்துட்டு எங்க என்கேஜ்மண்டுக்கு முதல் நாள் தான் வந்தாரு... “

“ம்...” என்றவளுக்கு வேறு வார்த்தைகள் நியாபகம் வரவில்லை....

ஹேமா ரித்வியை பற்றி ஏதும் பேசுவாள் என்று ஶ்ரீ எதிர்பார்க்க அவளோ மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்... ஶ்ரீயிற்கோ ஹேமாவிற்கு நடந்தது என்னவென்று தெரியாமல் தூக்கம் வர மறுத்தது... ஹேமாவிடம் கேட்பதற்கும் பயமாய் இருந்தது... எங்கே மறுபடியும் அந்த நியாபகங்கள் வந்து அழத்தொடங்கி தன் உடல் நலத்தை கெடுத்துக்கொள்வாளோ என்று பயந்தாள் ஶ்ரீ...

ஆனால் நடந்ததென்ன என்பதை பற்றியறியாமல் தான் ஏதாவது கூறி அவள் வேதனைப்படுவாளோ என்ற பயமும் ஒருபுறம் இருக்க என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்திலேயே கண்ணயர்ந்தாள் ஶ்ரீ...

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையென்பதால் சற்று தாமதமாகவே கண்விழித்தாள் ஶ்ரீ..... நேற்றிரவு நடந்தவை நியாபகம் வர அருகில் திரும்பி பார்த்தவளுக்கு அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஹேமா கண்ணில் பட்டாள்.... மெதுவாக சத்தம் எழுப்பாது எழுந்தவள் மொபைலை எடுத்துக்கொண்டு அறையை கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தாள்... வெளியே வந்தவளை ஹாலில் அமர்ந்திருந்த ராஜேஷ்குமார் காலை வணக்கத்துடன் வரவேற்றார்...

“ஶ்ரீமா ஹேமா எழுந்துட்டாளா?? இப்போ எப்படி இருக்கா?? நைட் ஏதும் சாப்பிட்டாளா??”

“இல்லபா... அவ அசந்து தூங்குறா... நைட் இட்லி சாப்பிட்டாப்பா...”

“இப்போ எப்படி இருக்காமா... ??”

“நைட்டெல்லாம் ஒரே புலம்பல்பா... ரொம்ப கஷ்டப்பட்டு தான் தாஜா பண்ணி தூங்க வச்சேன்... அவளுக்கு தாலி கட்டுன அந்த பொறுக்கி மட்டும் என் கையில கிடைக்கட்டும்.. அவனை உண்டு இல்லைனு பண்ணிருவேன்... ரொம்ப கஷ்டப்பட்டுட்டா போலபா... அவன் வந்தா அவன் கூட என்ன அனுப்பிடாதனு பயத்துல அழுறா பா.. என்னால அதை பார்க்க முடியல... எப்பவும் சிரிச்சிட்டே இருந்தவ இப்படி அழுறத பார்க்கும் போது மனசே ஆறமாட்டேங்குது....”

“பாவம் தான்மா.. கஷ்டமே தெரியாம வளந்த பொண்ணு... இப்படி வாழ்க்கையே சூனியமாகி வந்திருக்கத பார்க்கிறபோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...ஹேமா அவளோட ஹஸ்பண்டை பத்தி ஏதாவது சொன்னாளா??”

“இல்லைபா வாயே திறக்கமாட்டேங்கிறா.... நான் நேரடியா கேட்கலை... ஆனா அவனோட பேச்சையே எடுக்கவிட மாட்டேங்கிறா..நானும் பொறுமையா கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்... ரித்வி அத்தான்கிட்ட அந்தாளோட ஊரையும் போட்டோவையும் குடுத்திருக்கேன்...அவர் விசாரிக்கிறதா சொல்லியிருக்காரு.. பார்ப்போம்பா....”

“சரிமா ஹேமாவோட அம்மா அப்பா....???”

“அங்கிளும் ஆண்டியும் எங்கயிருக்காங்கனு தெரியலைபா... அவங்களையும் தேட சொல்லியிருக்கேன்.. அவங்க இவ பக்கத்துல இருந்தா இன்னும் கொஞ்சம் தெம்பா இருப்பா... ஆனா என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்காம அவகிட்ட இதபத்தி பேச பயமா இருக்கு.... நைட்டு பேபியை அபார்ட் பண்ணிரலாம் அப்படினு ரொம்ப ஆர்ப்பாட்டாம் பண்ணிட்டா.. நான் தான் காலையில பார்த்துக்கலாம் அப்படினு ஆப் பண்ணிட்டேன்... இப்போ எழுந்ததும் அவள எப்படி சமாளிக்கப்போறேனு தெரியலை...”

“ஶ்ரீ அம்மாகிட்ட சொல்லு... அவ பார்த்துக்குவா... நானும் அம்மாவை ஹேமாகூட பேச சொல்லுறேன்.... நீ இதை பத்தி எதுவும் ஹேமாகிட்ட பேசாத... அப்புறம் அவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் புல் செக்கப் பண்ணனும்... அனுகிட்ட கேளு. அவ யாரு நல்ல கைனோகோலஜிஸ்ட்னு சொல்லுவா... அங்க கூட்டிட்டு போய் எல்லா டெஸ்ட்டும் எடுத்துக்கலாம்....நாளைக்கே அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணமுடியும்னா ரொம்ப நல்லது...”

“சரிபா... நான் அனுகிட்ட கேட்குறேன்... நான் ரித்வி அத்தான்க்கு ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்...” என்றுவிட்டு ஶ்ரீ வெளியே சென்றாள்...
ரித்விக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டது..

“சொல்லு ஶ்ரீ..”

“அத்தான் ஹேமா பத்தி ஏதாவது தெரிந்ததா அத்தான்... ??”

“இல்லைமா.. ஒரு டிடெக்டிவ் ஏஜன்சிக்கு நீ குடுத்த டீடெய்ல்ஸ் எல்லாம் குடுத்திருக்கேன்... அவங்க டூ டேஸ் டைம் கேட்டுருக்காங்க...”

“சரி அத்தான்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் கண்டுபிடிங்க அத்தான்..”

“சரி ஶ்ரீ.. அதை நான் பார்த்துக்கிறேன்... ஹேமா எப்படியிருக்கா??” என்று ரித்வி கேட்க நேற்றிரவு நடந்த அனைத்தையும் கூறினாள் ஶ்ரீ..
அதனை கேட்வனது மனது கனத்தது... எப்படியிருந்தவள் இப்படியாகிவிட்டாளே... என்று வருந்தினான்...

“சரி ஶ்ரீ.. ஒரு சின்ன வேலையா இருக்கேன்.. பிறகு கூப்பிடுறேன்..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்..
 

Vijayalakshmi 15

New member
ஹேமா வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது. பாவம் அவள் இப்படி பயப்படுகிறாள் !:unsure::unsure::unsure:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN