👀6👀 சிம்டாங்காரன்

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விடிந்த பின்னும்
விழிமூடிக்கிடக்கிறேன்...
உன் கனவின் தாக்கத்தால்...

❤️❤️❤️❤️❤️❤️

நான்கு நாட்களாகியும் நிறைமதி, மேகனிடம் பேசுவதாக தெரியவில்லை... மேகனும் blank call பண்றது நிறைமதி யாக இருப்பாளோ? என்ற சந்தேகத்திலாவது தங்களிடம் வந்து கேட்பான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

அங்கே! அவனுக்கு நிறைமதி தான் செய்திருப்பாள் என்று தோன்றியது.. ஆனால் ஏற்றுமதி சம்மந்தமான மீட்டிங் கில் கலந்து கொள்வதற்காக மேகன் சிங்கப்பூர் சென்றுவிட்டது நிறைமதி க்கும், தோழிகளுக்கும் தெரியவில்லை.

'முதலில் மேகன், நிறைமதி யை விரும்புகிறானா என்பது தெரிந்து கொள்ள என்ன செய்யலாம்?' என்று தீவிரமாகவே யோசித்தனர்.

இந்நிலையில், ஏதோ கல்யாண வீட்டில் நிறைமதியின் இரண்டாவது அண்ணனை பார்த்த உறவினர்கள், நிறைமதியின் பெற்றோர்களிடம் அவர்கள் பெண்ணை, இரண்டாவது அண்ணனுக்கு திருமணம் பேசினர்.
வயதுக்கு வந்த மகள் நிறைமதியை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணனுக்கு திருமணம் செய்வது நன்றாக இருக்காது என்று நிறைமதி வீட்டினர் கூறி விட்டனர்.

ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள், "நாம என்ன உடனேயா திருமணம் செய்துவிடப் போகிறோம்? ஜாதகம் கொடுங்கள் பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்போம்." என்று கூற,

மற்ற உறவினர்களும், "முதன்முதலில் வரும் சம்மந்தம் தடுக்க வேண்டாம். ஜாதகத்தைக் கொடுங்கள்" என்று கூற,

நிறைமதியின் அப்பா, "எம் பொண்ணுக்கு கல்யாணம் முடிந்த பிறகு தான் சின்னவனுக்கு கல்யாணம் பண்ணுவோம்" என்று கூறியே ஜாதகத்தைக் கொடுத்தார்.

ஜாதகமும் பொருந்தியது. "பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளட்டும், பிடிச்சிருந்தா சின்ன அளவில் நிச்சயதார்த்தம் பண்ணிக்குவோம். உங்க பொண்ணுக்கும் இந்த வருஷத்தோட படிப்பு முடியுது... அவளுக்கும் கல்யாணம் பேசிவிட்டால், ரெண்டு கல்யாணத்தையும் சேர்த்து வச்சிடலாம்..." என்று உறவினர்கள் கூறினர்.

அதற்கு நிறைமதியின் அப்பாவிற்கு சம்மதமில்லை என்றாலும் மனைவிக்கு அதாவது நிறைமதியின் அம்மாவிற்கு பெண்ணையும் பெண் வீட்டினரையும் பிடித்துப் போக எல்லோரையும் சம்மதிக்க வைத்தார்..

ஆனால், "வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடக்க வேண்டாம். ஏதாவது கோயிலில் வைத்து பொண்ணும், பையனும் பார்த்துக் கொள்ளட்டும். நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம்... ஏன் சொல்றேன்னா, இளையவனுக்கு நிச்சயதார்த்தம் பண்ணிட்டா அவனுக்கு கல்யாண பண்ணியாக வேண்டிய கட்டாயமாகும். அதனாலயே, நிறைமதியின் கல்யாணத்தை அவசர கதியில் பண்ண வேண்டி வரும். இத நான் விரும்பல. உங்களுக்கு என் பையனைப் பிடிச்சிருந்தால், நிறைமதிக்கு திருமணம் ஆகும் வரை பொறுத்திருக்க வேண்டும்... இதற்கு ஒத்துக்கொண்டால் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு பண்ணலாம்." என்று நிறைமதியின் அப்பா கண்டிப்பாக கூறிவிட்டார்.

பெண் வீட்டினர் சம்மதிக்கவே, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில், பெண் பார்க்க முடிவு செய்யப்பட்டது.

இந்த விஷயத்தை தோழிகளிடம் கூறினாள் நிறைமதி. "என் படிப்பு முடிந்ததும் எனக்கு கல்யாணம் பேசிடுவாங்க... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு பா..." என்று புலம்பினாள்.

"ஒரு ஐடியா!" என்றாள் ஒரு தோழி.

"என்ன? சொல்லு." என்று பரபரப்பாக கேட்டனர் நிறைமதியும், மற்ற தோழிகளும்.

"உங்க அண்ணனுக்கு, மேகன் குடும்பம் நிர்வாகம் பண்ற கோயிலில் தான பொண்ணு பார்க்க போறீங்க?"

"ஆமாம்!" என்றாள் நிறைமதி.

" அப்போ ரொம்ப வசதியா போச்சு...நீயும் உன் பெற்றோர்களும் மேகனின் தாத்தாவை ஃபங்ஷனுக்கு அழைப்பு வையுங்கள். அப்போ மேகனுக்கு உன் மேல் விருப்பம் இருந்தால் கட்டாயம் ஃபங்ஷனுக்கு வருவார். அங்கே கோயிலில் வச்சு உன் மனதில் உள்ள காதலை சோல்லிடு. அவர் வந்துட்டாலே பாதி வெற்றி தானே?" என்று கேட்டாள் தோழி.

"அப்படி சொல்லி விட முடியாது பா. நாம கோயிலில் புரோக்ராம் (program) பண்ணிய அன்னைக்கும் வந்தார்ல. .. என்னைய அவர் அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை... அது மாதிரி எதார்த்தமாகவும் வரலாம்ல பா?" என்று கேட்டாள் நிறைமதி.

"எல்லா பக்கமும் கட்டையைப் போடாதடி! சரி! நீ சொல்ற மாதிரி அவர் எதார்த்தமா வந்தா என்ன? பதார்த்தமா வந்தா என்ன? வந்தார்னா அவர்கிட்ட உன் மனசில இருக்கிறத சொல்லிடு. அவர் நிர்வாகம் பண்ற கோயில்ன்றதால எடாகூடமா திட்டவும் மாட்டார்."

"என்னது?!! ஏடாகூடமா திட்டுறதா? அப்படி கூட செய்வாரா பா?" என்று அரண்டு போய்க் கேட்டாள் நிறைமதி.

"ஏய்! உனக்கு ஏண்டி?... அவளே... சொல்லவும் மாட்றா. .. விடவும் மாட்றா... இதுல நீ வேற... " என்று மற்றொரு தோழி, ஐடியா கொடுத்த தோழியிடம் நொந்துவிட்டு, நிறைமதி யிடம், "அம்மா பரதேவதை! கோயிலில் வச்சு தான பேசபோற? அதுமட்டுமில்ல, அவர பார்த்தா பெண்கள்ட்ட மரியாதை இல்லாமல் பேசுறவர் மாதிரி தெரியல்ல...தைரியமா சொல்ல வேண்டியத சொல்லிடு." என்று தைரியம் கொடுத்தாள்.

நேராக அப்பாவிடம் சென்ற நிறைமதி, "அப்பா அந்த கோயில் நிர்வாகி எனக்கு காலேஜ் மூலமா தெரிந்தவர் ப்பா. அவரையும் நாம் ஃபங்ஷனுக்கு அழைக்கலாம்." என்றாள்.

"அவரெல்லாம் நம்ம வீட்டு விசேஷத்திற்கு வருவாராம்மா? அதுமட்டுமில்ல நாம சின்னதா தானே பண்றோம்." என்று கூறினார்.

"அப்பா!... எப்படியும் கோயிலில் அனுமதி வாங்கனும்ல? நிர்வாகியே நமக்குத் தெரிஞ்சவர்னா பல வகையிலும் நல்லதுதானேப்பா? என்று கூற,

இதை கேட்டபடி வந்த இளையவன், "அப்பா இவ சொல்றதும் சரிதான்பா. பொண்ணு வீட்டுக்காரர்களுக்கும் நம் மேல மரியாதை கூடும்." என்றான்.

"இப்படியெல்லாமாடா மரியாதையை தேடறது? மரியாதைங்கிறது அதுவா கிடைக்கனும்டா. .. "

"அப்படி இல்லப்பா! இந்த ஊர் பெரிய மனிதர்களெல்லாம் எங்க வீட்டு விஷேசத்துக்கு வர்றாங்க ங்கிறதே பெரிய விஷயமில்லையாப்பா?"

"என்னவோ சொல்றீங்க, சரி புறப்படுங்க." என்று கூறி மேகனின் தாத்தா விற்கு அழைப்பு வைக்க தயாரானார்.

மேகனின் வீட்டிற்கு, நிறைமதி, அப்பா, அம்மா, பெரிய அண்ணன் நால்வரும் சென்றனர்.

'இதுவரை எல்லாம் சரியாக நடக்கிறது, கடவுளே! இனியும் நல்லபடியா நடக்கனும்' என்று வேண்டியபடி மேகன் வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்தாள் நிறைமதி.

வரவேற்ற தாத்தா, மரகதம் இருவரிடமும், நிறைமதியின் அப்பா விஷேசத்திற்கு அழைப்பு விடுத்து பேசினார்.

" பிள்ளைக்கு நல்ல இடத்திலிருந்து வரன் வந்திருக்கு... ஜாதகமும் பொருந்தியிருக்கிறது. பொண்ணு பார்க்கும் விஷேசத்தை நம்ம கோயில்ல வச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம. பெருசா பண்ணலைங்க. .. முதல்ல பொண்ணுக்கும், பையனுக்கும் பிடிக்குதானு பார்த்துகிட்டு மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம் னு இருக்கோம். பெரியவங்க நீங்க வந்து ஆசீர்வாதம் பண்ணினா எங்களுக்கும் நிறைவாக இருக்கும்." என்றார், எந்த பிள்ளைக்கு வரன் அமைந்து இருக்கிறது என்பதை குறிப்பிட்டு சொல்லாமல்.

நிறைமதிக்கு தான் திருமண பேச்சு நடைபெறுவதாக நினைத்த மேகனின் தாத்தா, "அதுக்கென்ன? வந்துட்டா போச்சு! நம்ம கோயில்ல வச்சு விஷேசம் பண்றீங்க, வராம இருப்பேனா? கட்டாயம் வர்றேன்." என்று கூறியவாறு
நிறைமதியைப் பார்த்து,

"உனக்கு இதுதான் கடைசி வருஷமாம்மா?" என்று கேட்டார்.

"ஆமாம் சார்." என்றாள் நிறைமதி.

"படிப்பு முடியட்டுமே பொண்ணுக்கு? நல்ல புத்திசாலிப் பொண்ணு." என்று நிறைமதியின் அப்பா விடம் கேட்க,

" அதெல்லாம் கண்டிசனா சொல்லிட்டேன்யா. பொண்ணுக்கு படிப்பு முடிந்த பிறகு தான் கல்யாணம் வச்சுக்கனும் னு." என்றார் நிறைமதியின் அப்பா.

"அப்பறம் ஏன் அவசரமா பண்றீங்க?"

"எங்கேயோ கல்யாண வீட்டில வச்சு பிள்ளையைப் பார்த்து புடிச்சுப்போயி, ஜாதகம் பார்க்கலாம்னாங்க... அப்பவே சொல்லிட்டேன், என் பொண்ணுக்கு படிப்பு முடியட்டும்னு. பரவாயில்லை இப்போதைக்கு பொண்ணும் பையனும் பார்த்துக் கொள்ளட்டும்னாங்க. நம்ம வீட்லயும், பிள்ளைக்கு வந்த மொத சம்மந்தம் கேட்டு வந்திருக்காங்க, தட்ட வேணாம்னாங்க. .. அதான்...

" சரி! நான் கட்டாயம் வர்றேன்." என்று தாத்தா கூறவும்.

"குடும்பத்துல இருக்கும் எல்லோரும் வாங்க சார்." என்றாள் நிறைமதி!

அவர் சிரித்துக் கொண்டே தலையாட்ட, நிறைமதி குடும்பத்தினர் விடைபெற்றனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரிலிருந்து வந்துவிட்டான் மேகன்.

"நாளைக்கு எங்காவது பிக்னிக் போகலாமா தாத்தா?" என்று மேகன் கேட்டான்.

"இல்லய்யா! ஞாயிற்றுக்கிழமை, எனக்குத் தெரிஞ்ச பொண்ணு வீட்டில விஷேசம். குடும்பத்தோட வந்து சொல்லியிருக்காங்க."

"ஆச்சி! ஆச்சி!" என்று மேகன் அழைத்ததும் அங்கு வந்த மரகதம் யிடம்,

"தாத்தா வோட தோழி வீட்டில் விஷேசமாம்! ஆச்சி! இந்த வயசில தாத்தா விற்கு தோழி இருக்காங்க... அசால்டா விட்டுடாதீங்க..." என்று தாத்தா வை போட்டுக்கொடுத்தான் மேகன்.

"போடா சேட்டை! நீ கூப்பிட்டதும் நான் வேலையை விட்டுட்டு ஓடிவர்றேன்.... " என்று கூறி சிரித்தபடி உள்ளே சென்றார் மரகதம்.

"குடுத்து வச்சவர் தாத்தா நீங்க! இப்படி ஒரு பொண்ண பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க. ... கடைசி வரை பொண்ணுங்கள சைட் அடிக்கலாம்... தோழியாக பழகிக்கலாம்.... ஃப்ரீ லைஃப்! "என்று மேகன் சொல்லி முடிக்கும் முன்பே அடுப்படியிலிருந்து ஒரு கிண்ணம் பறந்து வந்தது.

"யாரு? யார கெடுக்குறானுங்க ன்னே தெரியல. வந்தேன்... ரெண்டு பேரையும் தொலைச்சுடுவேன் ராஸ்கல்." என்று மரகதம் அதட்டினார்.

"மரகதம்! கோபப்படக்கூடாது டார்லிங்!" என்று மேகன் கொஞ்சவே,

"இவன்தான் ஊரை அழைச்சு எனக்கு பேரு வச்சான்.... வந்துட்டான் பேர சொல்லி கூப்பிட," என்று சிரித்தார் மரகதம்.

பேரன் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருந்த, தாத்தாவிடம்,

" கட்டாயமா அந்த ஃபங்ஷனுக்கு போகனுமா தாத்தா?" என்று கேட்டான்.

"வீடு வரை குடும்பத்தோட வந்து கூப்பிட்டாங்கய்யா. .. இப்பல்லாம் யாரு இப்படி செய்றாங்க? செய்றவங்களுக்கான மரியாதையை நாம் கொடுக்கனும் ய்யா. .. "

தாத்தா சொன்னதில் உள்ள நியாயம் புரிந்து, மேகன் அமைதியானான்.

அவன் ஒன்றும் பேசாமல் இருப்பதை பார்த்தவர், "உனக்கு கூட அந்தப் பெண்ணை தெரியும் மேகா!"

"எனக்கா? யாரு தாத்தா?"

"போன வாரம் நம்ம கோயில்ல கதாகாலட்சேபம் நடந்ததே! அன்னைக்கு காலேஜ் பிள்ளைங்க ஏதோ நாடகம் பண்ணாங்க... எனக்கு அசதியா இருந்ததால, நீ மட்டும் போனியே. .. "

"ஆமா!"

"அந்த நாடகத்தில பூர்வ ஜென்ம ஞாபகம் வந்ததா நடிச்சுதாமே அந்த பொண்ணு!"

' தாத்தா நிறைமதியை சொல்றாரா?' என்று தோன்ற, "யாரு தாத்தா நிறைமதியா? " என்று கேட்டான்.

"பேரு சரியா ஞாபகத்தில இல்லய்யா... மாநிறமா, சிரிச்ச முகமா இருக்குமே அந்த பொண்ணு."

"என்ன விஷேசம் தாத்தா?" என்று ஆர்வமுடன் மேகன் கேட்க,

"அந்த பொண்ண, பொண்ணு பார்க்க வர்றாங்களாம்." என்று தாத்தா கூறவும், மேகன் தலையில் இடி விழுந்தது போலிருந்தது!

'அடிப்பாவி! எவ்வளவு தைரியம் இருந்தா என் தாத்தா வையே விஷேசத்துக்கு அழைச்சிருப்ப?' என்று கோபம் தலைக்கு ஏற, விறு விறுவென்று மாடிக்குச் சென்று விட்டான்.

ஞாயிற்றுக்கிழமை, நிறைமதி வீட்டினர் கோயிலுக்கு வந்துவிட்டனர். நிறைமதி அழைத்ததால் அவள் தோழிகளும் வந்துவிட்டனர்.

விஷேசத்திற்கு நிறைய பேர் வருவார்கள். மாப்பிள்ளை பையனைப் பார்த்த கையோடு குடும்பத்தினரையும் பார்ப்பார்கள். அவர்களில் நல்ல வரன் நிறைமதி க்கும் அமையலாம் என்று நிறைமதி யை யும் நன்றாக அலங்காரம் பண்ண சொல்லி அம்மா வற்புறுத்தவே, அம்மாவிடம் திட்டு வாங்குவதிலிருந்து தப்பிக்கவும், மேகனிடம் காதலை சொல்லப் போவதாலும் ஓரளவு நன்றாக அலங்காரம் பண்ணிக்கொண்டாள் நிறைமதி.

தோழிகளும், "மேகன் பார்த்ததும் அசந்துடனும், நீ காதலை சொல்லும்போது அவருக்கு மறுக்கவே தோன்றக்கூடாது" என்று சொல்லி, நிறைமதியை மேலும் மெருகேற்றினர்.

அழகான பட்டுரோஜா வண்ணத்தில் ஆங்காங்கே ரோஜா பூ இருப்பது போல் அமைந்த கிரேம் சில்க் சேலை உடுத்தி, காதுகளில் சின்னதாக ஜிமிக்கி அணிந்து, கழுத்தில், உள்ளங்கழுத்திலும் பிறகு பக்கத்திற்கு ஒன்றாக பூ வேலைப்பாடு கொண்ட கல் வைத்த அட்டிகை போன்ற நெக்லஸ்சும், கல் வைத்த டாலர் செயினும், கைகளில் இரண்டு கல் வளையல்களுக்கு நடுவில் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். தலையில் நீளமாக மல்லிகை பூவை இரண்டு சரங்களாக வைத்து இருந்தாள். இந்த அலங்காரத்தில் நிறைமதியைப் பார்த்த வீட்டினருக்கு, இவ்வளவு நாளும் இந்த அழகை எங்கே மறைத்து வைத்திருந்தாள் என்று தோன்றியது.

"பார்த்தியாடி எம் பொண்ண.."என்று மனைவியிடம் பெருமையாக கூறினார் அப்பா.

"ஆமா! அவள நீங்க மட்டும் தனியா பெத்துப் போட்டிங்க... " என்று நொடித்தாள் அம்மா.

நிறைமதியை நெருங்கி, அவள் அம்மாவும் அண்ணியும் திருஷ்டி கழித்துப் போட்டனர்.

"புதுநிறமான பெண்களுக்குத்தான் எந்த வண்ண சேலையும் அம்சமாக பொருந்தும் என்றும், சின்னதாக தங்கம் அணிந்தாலே பளபளப்பாக இருப்பார்கள் என்றும் சொல்வது எத்தனை உண்மை தெரியுமா?" என்று கூறினாள் அண்ணி!

பெண்வீட்டாரும், நிறைமதி குடும்பத்தினரும் எதிர் எதிரே அமர்ந்து சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்தனர். நிறைமதி கோயில் வாசலை யே பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த அம்மா, " நீயும் அண்ணியும் போயி பெண்ணை அழைச்சுக்கிட்டு வாங்க." என்று கூறவும், அடுத்த பிரகாரத்தில் இருந்த பெண்ணை அழைத்து வர நிறைமதி செல்வதற்கும், கோயில் வாசலில் மேகன் கால் வைப்பதற்கும் சரியாக இருந்தது.

நிறைமதியைப் தான் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று கோபமாக மேகனும்... மேகனிடம் தன் காதலைச் சோல்ல நிறைமதியும்... அடுத்து என்ன நடந்தது...

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!-------- ******** ----------
 

Author: meerajo
Article Title: 👀6👀 சிம்டாங்காரன்
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN