🌹மையலுடைத்தாய் மழை மேகமே.-பாகம் 13🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவன் மனதில் அவள் மேல் கொண்ட காதல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. மயூராவை பழி வாங்க வேண்டும் மென்ற எண்ணமே அவனுக்குள் தகிக்க ஆரம்பித்தது.

அவன் ஆண்மை சீண்டி விட்டவளை சும்மா விட அவனால் கண்டிப்பாக முடியாதுதான் தன்னை பகடையாக்க நினைத்தவளுக்கு காதல் வலி என்ன என்பதை உணர்த்த நினைத்தான். அதை மிக கொடூரமாக செயலாற்றியும் விட்டான்.நீர் பூத்த நெருப்பாமனது கனன்று எரிய, அதை வெளிக் காட்டாமல் வளைய வருவது அவனுக்கு எளிதுதான். தன்னை ஏமாற்ற நினைத்தவளை தான் ஏமாற்றிவிட நினைத்தான்.

அதன் பிறகு வந்த நாட்களில் மயூராவோடு நெருங்கி பழக ஆரம்பித்தான். அவளோடு சண்டைகள் போடுவது குறைந்து, இனிமையாக சிரித்துப் பேச ஆரம்பித்தான். கொட்டுவது கூட குறைந்து போய் நிறைய விஷயங்களை அவளுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். அவனின் இந்த இலகுத்தன்மை மயூராவிற்குள் நிஜமாகவே அவன் மேல் காதலை பூக்க செய்தது.

காதல் பெட் கட்டி வரும் செயல் இல்லை. அது உணர்வுபூர்வமானது. இதயத்தின் ராகமானது என்பதை மயூரா மனதார உணர உணர ருத்ரனுக்கு அவள் மேல் வெறுப்பு சைனா சுவர் போல் நீண்டு கொண்டே போனது. பாவம் இதை எதையும் மயூரா உணரவே இல்லை. அந்தரனிடம் தன் மனதை திறந்து சொன்னவள் அவனுக்கு மனதார நன்றி கூறினாள்.

"என்னை தெளிய வெச்சதுக்கு நன்றி அந்தரன். இல்லனா எவ்வளவு பெரிய தவறு செய்து இருப்பேன். என் சிவாவை நான்கஷ்டப்படுத்தியிருந்திருப்பேன்? இப்போ நான் மனசார ருத்ரனை நேசிக்கிறேன்.இனி என் வாழ்க்கை என் மாமாவோடு தான்''மயூரா மகிழ்ச்சியாக கூற அந்தரன் ,

"இது கடவுள் போட்ட முடுச்சு பெண்ணே.அதான் அதிக நாள் எடுக்காமல் ரெண்டு பேரும் உங்கள் மனசை புரிஞ்சிக்கிட்டிங்க. இனிமேல் என்ன டும் டும் டும் தான். அப்படியே என் மேட்டரைக் கொஞ்சம் கவனியுங்கள்''மதுவை மனதில் வைத்துக் கொண்டு அவன் கூற மயூரா ஆகட்டும் என்பது போல் தலையசைத்தாள்.

அரசல் புரசலாக விஷயம் வீட்டுக்கு தெரிய வர, அனைவருக்கும் சந்தோசமே. அந்த வாரமே அவர்களுக்கு நிச்சயம் பண்ணிவிட வீட்டில் அனைவரும் முடிவு எடுத்தனர். மயூராவிற்கு புடவை நகைகள் அனைத்தும் தன் தேர்வு என்று ருத்ரன் அறிவிக்க யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை. மயூராவின் மலர்ந்த முகம் ருத்ரனை இதயக் கனலை அணைக்கவே முடியாமல் போனது.

சந்தோசமாக தன்னவளுக்கு தானே தேடி எடுத்து வாங்க வேண்டிய பட்டும் நகைகளும் வேண்டா வெறுப்பாகவே வாங்கினான். மாங்காய் நிற மஞ்சளில் மெரூன் பார்டர் கரை வைத்த காஞ்சிபுரம் பட்டு அவள் நிறத்திற்கு தோதாக எடுத்து இருந்தான். அதிகமான உறவுகளை அழைக்காமல் சிம்பலாய் வீட்டுக்குள்ளே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னதும் அவனேதான். யாருக்கும் சிறிது கூட சந்தேகம் வர வில்லை. பூரணி கூட மயூரா நிஜமாகவே ருத்ரனை காதலிப்பதை அறிந்த உள்ளம் மகிழ்ந்துப் போனாள்.

நிச்சய நாளன்று வீடே குதூகலப்பட்டது. அந்தரனும் பூரணியும் உதவிக்கு வர, ரோஜா அந்த பக்கம் கூட எட்டிப் பார்க்க வில்லை. எல்லோர் முகத்திலும் சந்தோசம் குமிழிட, பவானிக்கும் சாம்பவிக்கும் தங்கள் கனவு பலித்ததை எண்ணி சந்தோசமாக இருந்தது.

மாலை வேளை நிச்சயம் ஆரம்பிக்க, கவனமாய் அலங்கரிக்கப்பட்ட மயூரா அந்த மஞ்சள் பட்டில் தேவதை போலிருந்தாள். அவளின் நீண்ட கூந்தல் பின்னப்பட்டு ஒரு கஜம் மல்லிகை அதன் மேல் சூட்டியிருந்தது. காதுக்கு பொருத்தமாய் ஜிமிக்கி, கழுத்து நகை ருத்ரனின் தேர்வு அமரிக்கையாக இருந்தது.

தங்க சிலைப்போல் நடந்து வருபவளைக் கண்டு ஒரு கணம் ருத்ரன் அசந்து விட்டான்.அவள் அணிந்து கொண்ட முதல் சேலை கூட அதுதான். ராஜா கணக்காய் சர்வானி உடுத்தி நின்ற ருத்ரனை கண் நிறைய கண்டு மயூரா இரசித்தாள். மோதிரம் அணிவிக்கும் வேளை வந்தது. ருத்ரன் விரலைப் பற்றி M என்ற எழுத்து மயிலிறகு டிசைன் பொறிக்கப்பட்ட மோதிரத்தை மயூரா அணிவித்தாள். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவன், பதிலுக்கு அவள் விரலை பற்றி மோதிரம் அணிவிக்க செய்யாமல் அப்படியே நின்றிருந்தான்.

மயூரா அதை உணர்ந்து அவனை பார்க்கும் பொழுது, ருத்ரன் முகத்தில் கடுமை பரவியிருந்தது.பற்றிய அவளது விரலை வேகமா உதறினான். "எனக்கு இந்த நிச்சயம் பிடிக்கல. இந்த ஏமாற்றுக்காரியையும் பிடிக்கல.எல்லோரும் கலைஞ்சு போங்கள்'' கோபமாக கூறியவன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி மயூரா முகத்தில் விசிறியடித்தான்.
அனைவரும் திடுக்கிட்டு நிற்க, யாரையும் சட்டை செய்யாமல் ருத்ரன் தன் அறைக்கு சென்று விட்டான்.ஸ்தம்பித்து நின்ற அனைவரும் ஒருவாறு சுயநினைவு பெற, பவானிதான் முதலில் ருத்ரனைத் தேடி சென்றார்.

மயூராவோ தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள்.தான் ஏமாற்றுக்காரியா? தன் மேல் என்ன தவறு? ஏன் இந்த பழி சொல்லுக்கு ஆளானோம்? அவள் மூளை யோசிக்க மறுத்துவிட்டது. நல்ல வேளை உறவினர்கள் என்று பெரிதாக யாரையும அழைத்திருக்கவில்லை. மேலே சென்ற பவானி ருத்ரனை சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளாரென்று அறைந்தார்.

"யாரை பார்த்து ஏமாத்துக்காரினு சொன்ன ருத்ரா? என் கண்மணி மனசு எனக்குதானே தெரியும்? உனக்கு பிடிக்கலனா எதுக்கு நிச்சயம் வரைக்கும் வந்து அவளை அவமானப்படுத்தின. உன்னை நான் இப்படியா வளர்த்தேன்? என்னால் நம்பவே முடியலையே '' பளார் பளாரென்று அவன் கன்னத்தில் அடித்தவாறே கதறினார்.

"போதும் நிறுத்துங்கமா. அவள் செஞ்சது உங்ளுக்கு தெரியாது.என் காதலை விளையாட்டு பொருளாக்கி பெட் வெச்சிருக்கா. அத நானே என் காதால் கேட்டேன்.அதான் அவளுக்கு தகுந்த பாடம் புகுட்ட இந்த ட்ராமாவை செஞ்சேன்.இப்போ உன் கண்மணிக்கு காதலோட வலி புரியும் இல்லையா.இனிமேல் காலம் முழுக்க அந்த வலியோட வாழட்டும். ருத்ரனை யாரும் எதுக்கும் அசைக்கவே முடியாதுனு அந்த முட்டாளுக்கு இப்போ புரிஞ்சிருக்கும் '' பேசியவன் கண்களில் அதுவரை மறைத்து வைத்திருந்த வன்மம் கனலாய் மின்னியது.

"முட்டாள் அவள் இல்லை ருத்ரா.நீதான் ''அறை வாசலில் மயூராவை கையோடு அழைத்து வந்திருந்த பரசுராம்தான் அவ்வாறு கூறினார்.

"நீ அவமானப்படுத்தியது உன் அத்தை மகளோ அல்லது உன் காதலி மயூராவை இல்லை. உன்னுடைய மனைவி திருமதி. மயூரா ஆர்யகனை''

"என்ன? மனைவியா''? ருத்ராவோடு சேர்ந்து மயூராவும் அதிர்ச்சியடைந்தாள்.
அவர் மேலும்,

"சின்ன வயசிலே உனக்கும் மயூராவிற்கும் நம்ம சிவன் கோவிலே திருமணம் முடிஞ்சாச்சு. அதற்கு சாட்சி உங்கள் கைல இருக்கற பச்சை தான். உன் கையில் மயிலிறகோடு பின்னியிருகற தேவி சூலம் ஆருஷி மயூரா தேவியோட பெயர் அடையாளம். அதே தான் அவள் கையில் இருக்க சூரிய சிவ சூலம். உன்னோட பேரு.''

"சிவன் மலையில் வாழற காட்டுவாசி சொன்ன குறி படி நடந்தது உங்க கல்யாணம். ரெண்டு பேருடைய கையை கீறி இரத்தக் கலப்பு செஞ்சிதான் உங்களுக்கு கல்யாணம் நடந்தது. அவள் உன் மனைவி.நீ அவளுக்கு புருஷன். இந்த காரணத்தால் மட்டும்தான் மென்சேஸ் டைம் அப்ப கூட அவள் கூட உன்ன இருக்க அனுமதிச்சது''

"இது சிவன் விருப்பபடி நடந்தது. நீ தொட்டால் மட்டும்தான் அவள் வலி தீரும்.அவளால் மட்டுமே உன் தலைவலியை போக்க முடியும். இப்படி ஒரு விசித்திர கணக்கு உங்க விதிப்பயன்ல இருக்கு. அப்போ அத நாங்க நம்ப கூட இல்லை. முழு மனசா கூட இதை நாங்கள் செய்யல. பின்னால சொல்லிக்கலாம்னு இருந்தோம். ''

"ஆனால் அந்த மலைவாசி சொன்ன மாதிரிதான் நீ அவள் வயசுக்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு மாசமும் அவளை பூ மாதிரி பார்த்துகுவே.உனக்கு தலை வலினா அவள் துடிச்சு போறதும் பார்த்துதான் நாங்கள் இதை நம்பினோம். ''


"நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னதும், உங்கள் நிச்சயம் முடிஞ்சி இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தோம். உன் அவசரத்தில் நீ மயூராவை காயப்படுத்திட்டே''பரசுராம் வேதனையாக கூற ருத்ரன் அதிர்ச்சியாகிவிட்டான்.
 
Last edited:

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே.-பாகம் 13🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN