மையலுடைத்தாய் மழை மேகமே.. 🌹பாகம் 14🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதிர்ச்சியிலிருந்து மீள ருத்ரனுக்கும் மயூராவிற்கும் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. ருத்ரன் அவளை ஏறேடுத்து பார்க்கையில் அவள் சுவடுகள் கூட அங்கே இல்லை. எதுவுமே பேசாமல் அவள் சென்று விட்டிருந்தாள். அனைவருக்கும் அவளை நன்கு தெரியும். கோவமோ வலிகளோ தீரும் வரை அவள் யாருடனும் பேச மாட்டாள் என்பது. யாரும் அவளையோ ருத்ரனையோ தொந்தரவு செய்யவில்லை. வந்த விருந்தினர்களும் அமைதியாக கலைந்து சென்று விட்டனர்.
பூரணியும் அந்தரனும் கூட பிறகு வருவதாய் கூறி விட்டு சென்றுவிட்டனர். அந்த இரவு அவர்களின் சந்தோசங்களை மொத்தமாக பறித்து விட்டு சூனியத்தை அந்த குடும்பத்திற்கு பரிசளித்து இருந்தது.

மயூராவின் வலியோ சொல்ல முடியாத ஒன்று. சிறு வயது முதல் தன்னை நம்பியும் நம்பாமலும் ருத்ரனோடு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அவளுக்கு அலுத்து விட்டது. தன் மேல் நம்பிக்கை இல்லாதவனையா தான் உருகி உருகி நேசித்தோம்? இவனுக்கு வலிக்கும் என்று பெட் வைத்ததில் கூட தோல்வியை ஒப்புக்கொண்டாளே அவளையா அவன் கிள்ளு கீரையாய் பாவித்தான்?
இடது கை மணிக்கட்டில் இருந்த பச்சை அவளைப் பார்த்து கேலியாய் சிரித்தது.மனதிற்குள் ஆறாத இரணங்களாய் ருத்ரனின் நினைவுகள்.அவனுடைய அந்த அன்பு கூட தன்னை பழி வாங்கத்தானா?சென்ற நாட்களில் அன்பை அருவி போல் பொழிந்தனே. வழக்கமான கொட்டுகள், கோபப்பார்வைகள் இல்லாமல் இன்பமாக கழிந்த அந்த நாட்கள், அத்தனையும் அவனின் நடிப்பா?

அவளால் அதை நம்பவே முடியவில்லை.உடலால் எவ்வளவு அடிகள் அடித்திருந்தாலும் அவள் தாங்கியிருப்பாளே. உள்ளத்தில் காதல் என்ற பெயரில் அல்லவா ருத்ரன் அம்பை எய்து அவளை வைதுவிட்டான். அந்த வலியை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலாது. இனிமேல் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு இங்கு இருக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை . எவ்வளவு சீக்கிரம் முடியுமே அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து கிளம்பவே மயூரா யோசித்தாள். ஆசையாய் அவன் வாங்கித் தந்த பட்டு மேனியில் தகித்தது.கழுத்தை அலங்கரித்த நகைகளோ அவளை இறுக்குவது போல் இருந்தது.

அனைத்தையும் உருவி வீசினாள்.கைகள் விடுவிடுவென இரண்டு கடிதங்களை எழுதியது.கண்ணீர் மல்க மல்க, விழிகளில் கொப்பளித்த உப்பு நீர் எழுதியிருந்த தாளையும் நனைத்து எழுத்துகளை மங்கச் செய்தது.அதையும் பொருட்படுத்தாமல் இரண்டு கடிதங்களையும் உறையிலிட்டு வைத்தாள்.

அதிகாலை வரை காத்திருந்தவள், மெல்ல அறையை விட்டு தன் தாய் அறைக்கு சென்றாள்.மௌனமாய் கண்ணீர் வழிய அவர்களை நமஸ்கரித்து விட்டு இறுதியாக ஒரு முறை தன் பார்வைக்குள் அவர்களை நிறைத்துக் கொண்டாள்.பின் தன் ஆருயிர் அத்தை பவானியை சென்று பார்த்தாள். அதிக நேரம் அங்கிருக்க அவளுக்கு அவகாசம் இல்லையே. தான் ராஜகுமாரி போல் வாழ்ந்த வீட்டை கடைசி முறையாக பார்த்தாள்.இனி எப்பொழுதும் அவள் இங்கே திரும்ப போவது இல்லையே.

எழுதி வைத்த கடிதங்களை ஹாலில் மேஜை மீது வைத்து விட்டு கனத்த இதயத்துடன் சூனிய மாகிவிட்ட தன் எதிர்காலத்தை எடுத்துக் கொண்டு மயூரா அங்கிருந்து போய் விட்டாள். முன்புறம் காவலாளி இருப்பான் என அறிந்து பின் புறமாக சென்று விட்டாள். அங்கிருந்து அவள் சென்று அடைந்த இடம் இன்பவனம்.யாரும் அவ்வேளையில் விழித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அதிகாலையில் யோகி தாத்தா தியானம் செய்வது வழக்கம். அவரது தியான மண்டபத்தில் மயூராவைப் பார்த்ததும் அவருக்கு சகலமும் விளங்கிவிட்டது.நேற்று நடந்த கூத்து அவருக்கும் தெரியும். வழக்கமாய் சிரிக்கும் மயூராவின் கண்களில் அப்பியிருந்த வலி அவரை ஏதோ செய்தது.

"தாத்தா நடந்தது எல்லாமே உங்களுக்குத் தெரியும்.என்னால அங்க இதுக்கு மேலே இருக்க முடியாது.இந்த வலி என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுது. என்னை எங்கயாச்சும் அனுப்பி வெச்சிடுங்க தாத்தா.இங்க இருந்தா இதை நெனைச்சு நெனைச்சு நான் பைத்தியம் ஆயிடுவேன். யாருக்கும் நான் பாரமா இருக்க விரும்பல. எங்க வீட்ல அவன்தானே ஒசத்தி.
என்னால தானே எப்பவும் பிரச்சனை வரும். ''

"இந்த சிவன் எனக்கு இப்படி ஒரு விதியை எழுதியிருக்க வேணாம்.ரொம்ப வலிக்குது தாத்தா.ப்ளீஸ் தாத்தா எங்கயாச்சும் என்னை அனுப்புங்க''மயூரா அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

யோகி தாத்தாவுக்கு அவள் வேதனை புரிந்தது.சிறிது காலம் எங்கயாவது இருந்தால் அவள் மனதிற்கும் நிம்மதி கிடைக்கும் என்று நம்பினார். அதிகம் பேசாமல் யாருக்கோ கால் செய்து எதையோ கூறி விட்டு அவளை தேற்றினார்.

"மயிலு கண்ணே உன்னை என் தங்கை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்.
யாருக்கும் இதை பற்றி தெரியாது.அவள் அவள் புருஷன் மட்டுமே அங்கயிருக்காங்க. அவளுக்கு குழந்தைகள் இல்லை. உன்னை நல்லா கவனிச்சிக்குவா.சொந்தமாக அவங்களுக்கு காபி எஸ்டேட் இருக்கு. உனக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்.''

"நீ எப்ப இங்க வரணும் நெனைக்கிறியோ, அப்ப தகவல் சொல்லு நானே வந்து உன்னை அழைச்சிக்கிறேன் ''அவர் கூற மயூராவின் கண்கள் நன்றியை தெரிவித்தன.

"தாத்தா யார் கேட்டாலும் நான் எங்க இருக்கேனு சொல்லிடாதீங்க.எனக்கு ஒரு மாறுதல் வேணும். ப்ளீஸ் தாத்தா ''மயூரா கரம் கூப்பினாள்.

"கண்டிப்பாக சொல்லமாட்டேன் மயூரா. உனக்கும் ஆறுதல் தேவை. இது என்னோடு புதைந்த இரகசியம்'' தாத்தா கூறினார். நம்பகதக்கமான ட்ராவல் ஏஜென்சியில் வாடகை கார் எடுத்து மயூராவை வால்பாறைக்கு வைகரையிலே அனுப்பி வைத்து விட்டார்.
மயூரா வீட்டிலோ நிலைமை அல்லோல் பட்டுக்கொண்டிருந்தது.

காலையில் அவள் அறையில் இல்லை என்பதை பவானிதான் முதலில் கண்டுப்பிடித்தார். சம்பவத்தில் தன் கண்மணி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாளே என்று காலையிலே அவளை காண அவள் அறைக்கு வந்தவரை காலி படுக்கையே வரவேற்றது.

சுற்றும் முற்றும் தோட்டம் வரை சென்று தேடியவர் மனதில் திகில் பிடித்துக் கொண்டு விட்டது.உடனே அனைவரையும் எழுப்பி விஷயத்தை கூறினார். ஹாலில் மதனிகா கண்களில் மயூரா எழுதி வைத்த கடிதங்கள் தென்பட்டது.விரைந்து சென்று அதை எடுத்தவள் ஒன்றை பரசுராமிடமும் மற்றொன்றை ருத்ரனிடமும் குடுத்தாள்.அவசரமாக அதை கிழித்து படித்தவர் இதயம் சுக்கு நூறாக கிழிந்தது.


அன்புள்ள மாமா அத்தைக்கு, என் அப்பா அம்மாவிற்கு, சித்தப்பா சித்திக்கு, என் பிரிய தங்கை மதுவிற்கு, நான் உங்களை விட்டுப் பிரிந்து செல்கிறேன். தயவு செய்து யாரும் என்னை தேடும் பணியில் இறங்க வேண்டாம்.இந்த வலியோடு இங்கே என்னால் இருக்க முடியாது. வேதனை என்னை செல்லரிக்க வைக்கின்றது.எனக்கு இப்போது தனிமை மட்டுமே தேவையாகி உள்ளது. என் இரணங்கள் ஆறியப்பின் நானே நம் இல்லத்திற்கு என்றாவது ஒரு நாள் வந்து விடுவேன்.

என் பொருட்டு யாரும் ருத்ரனை கோபிக்க வேண்டாம். நம்பிக்கை இல்லாத இந்த உறவு மேல் உரிமை கொண்டாட எனக்கு துளியும் விருப்பமில்லை. எதிர்காலத்தில் அவர் விரும்பும் யாரையும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம்.மயூரா இனி அவர் வாழ்க்கையில் எந்த இடையூறுகளையும் விளைவிக்க மாட்டாள். உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். அது என் வண்டுமுருகனுக்கு நம் மதுவை மணமுடித்து வைத்து விடுங்கள்.

அவனை போன்று ஒரு நல்லவன் மதுவிற்கு எங்கு தேடினாலும் கிடைக்காது. அவர்களாவது எந்த இடையூறும் இல்லாமல் மணவாழ்வில் ஒன்று சேர வேண்டும்.இதை மட்டும் எனக்காக செய்து விடுங்கள். அம்மா கவலை படாதே, உன் மகள் கோழை இல்லை. தவறான எந்த முடிவிற்கும் இந்த முட்டாள் செல்லமாட்டாள். அனைவரும் இயல்பாக இருங்கள். என்னை பற்றிய கவலை எதுவும் இனி வேண்டாம். நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கின்றேன். செல்கிறேன்....மயூரா


அதை படித்து முடிக்கும் பொழுதே பவானியும் சாம்பவியும் கதறி விட்டார்கள். தன் அருமை மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் என்பதை அவள் தந்தை சந்ரசேகரினால் தாங்கவே இயலவில்லை. பெரும் கேவலோடு அப்படியே சரிந்து விழுந்தார். அவரை அனைவரும் தேற்றும் வேளையில் ருத்ரன் தன் கையில் இருந்த கடிதத்தை பிரித்து படிக்கலானான்.
 
Last edited:

Author: KaNi
Article Title: மையலுடைத்தாய் மழை மேகமே.. 🌹பாகம் 14🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN