சாதி மல்லிப் பூச்சரமே !!! 30

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 30

என்ன தான் இவ்வூர் தென்றல் பிறந்த ஊராக இருந்தாலும் அவ்வப்போது அவள் வந்து போனதால் பிறந்த ஊர் அந்நிய ஊராகிப் போனது அவளுக்கு. அப்படி அவள் வரும்போது எல்லாம் அவள் மனதில் ஆறாத ரணமாகிப் போன விஷயம், அங்கு ஊரில் உள்ள சக மனிதர்களை வேறுபாடாய் நடத்துவது தான். கடந்த காலம் போல காலில் செருப்பு இல்லாமல், தோளில் துண்டு இல்லாமல், சக மனிதர்களின் காலில் விழுந்து மண்டியிடும் அளவுக்கு அங்கு மக்களைப் பட்ட வெளிச்சமாக இழிவாய் நடத்தவில்லை என்றாலும் சக மனிதர்களை மனிதர்களாக பார்க்கவில்லை அங்குள்ள பெரிய மனிதர்கள்.

அப்போதெல்லாம் ஐயாரு மேல் அவளுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வரும். ஆனால் யாரும் எதுவும் கேட்காத போது சிறு பிள்ளையான இவள் கேட்டு என்ன பயன்? அதிலும் ஐயாருவின் கருத்த அஜானுபாகு உடம்பும், காது வரை நீண்டிருக்கும் அவர் முறுக்கு மீசையும், எந்நேரமும் கோபத்துடன் ஜொலிக்கும் அவர் பார்வையைக் கண்டாலே தென்றலுக்கு குளிர் ஜுரம் வந்து விடும். அவரை எதிர் கொள்ளும் போதெல்லாம் அவள் மறைந்து கொள்ளும் ஒரே இடம் அவளின் மதிமாமாவின் முதுகு புறமாகத் தான் இருக்கும்.

அப்படிப் பட்டவளை மாற்றியவன் மதிவேந்தன். முன்பு அவர் முகம் பார்த்து இரண்டொரு வார்த்தை தைரியமாகப் பேசியவள், இன்று தன் பதவியால் ஐயாருவை அதிகாரமே செய்தாள் தென்றல்.

கணவனைத் தன் சொந்த பந்தமே தூற்றி வெளியே துரத்தும்போது, மனம் ஒரு பக்கம் கசந்தாலும் தன் சுயநலம் முக்கியம் என நினைத்து அவனைப் பிரிந்தவளுக்கு கடைசிவரை சுயநலமாகத் தான் இருக்க முடியவில்லை.

அதிலும் கணவன் மேலுள்ள காதலை உணர்ந்தவளுக்கு, அவன் இழந்த அதிகாரத்தைத் திரும்பப் பெறவைத்து அவனை உச்சியில் வைத்துப் பார்க்கத் தான் அவளின் காதல் மனதிற்கு தோன்றியது. கூடவே பிறந்த ஊரில் உள்ள சக மனிதர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று நினைத்தவளின் மனது இறுதியாக இப்படி அதிகாரத்துடன் கூடிய கலெக்டர் படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்தது.

ஐயாருவை மாற்ற கலெக்டர் படிப்பு தேவையா? அவரை எதிர்த்து நின்று பேசினாலே போதாதா… இல்லை கணவன் துணையோடு அவரை அடக்கத் தான் முடியாதா? இப்படி அவள் மனசாட்சி கேட்ட கேள்விக்கு, ஆனால் இது ஐயாரு மட்டும் காட்டும் வேறுபாடு இல்லையே? ஊரில் உள்ள சில இளைய தலைமுறையினரும் அப்படி தானே இருக்கிறார்கள்! கொள்ளி வைக்கிற ராஜாவுக்கு கொளுத்திக் கொடுக்க ஆயிரம் மந்திரிகள் சுற்றி இருந்தால், இங்கு செத்தவனுக்கு மட்டுமா கொள்ளி வைப்பார்கள்? உயிரோடு இருப்பவனுக்கும் சேர்த்து இல்ல கொள்ளி வைப்பார்கள்! அது தான் அந்த ஊரில் நடந்தது. அதை மாற்ற எடுத்த முடிவால் அவளுக்கு உதயமானது தான் இந்த கலெக்டர் படிப்பு.

வழக்கம் போல அன்று இரவு தன் பாட்டில் சகாக்களுடன் மோட்டார் ரூம் தளத்திற்கு வந்து விட்டான் மதிவேந்தன். அவனுக்கு நிறைய விஷயத்தை மறக்கவும், பல விஷயங்களை யோசிக்கவும் தனிமை தேவையாய் இருந்தது. ஐந்து... ஆறு கோப்பை சரக்குகள் அவன் வயிற்றுக்குள் இறங்கிய நேரம் அவன் மாமன் கந்தமாறன் அங்கு வரவும்...

“யோவ் மாமா, வாயா வாயா! சரக்கு ஊத்தவா?” இவன் கேட்க, அவர் வேண்டாம் என்று மறுப்பாக தலை அசைத்தவர்,

“மாப்ள, பனி கொட்டுது உள்ளார வாயா” அவர் கரிசனமாய் அழைக்க,

“ஹி.. ஹி... ஹீஈஈஈஈஹாஆஆ... மார்கழி மாச கொட்ற பனியில ஆத்துல நீச்சல் அடிச்சவன் நான். இந்த பனி என்ன செய்யும்? ஆமா… என் மனச பத்தி தெரிஞ்ச ஒனக்கு என் ஒடம்ப பத்தி தெரியாதா என்ன?” இவன் தன் மாமனை வம்பிழுக்க, அவரோ அமைதியாக இருந்தார்.

“யோவ் மாமா, என் பொஞ்சாதி… அதேன் ஒன் பொண்ணு, நம்ம ஊருக்கு கலெக்டரா வந்து இருக்குதா. என்ன ஒரு நிமிர்வு! அவ மொகத்துல அறிவுக்களை சொட்டுதுனா... பேச்சுல படிச்ச படிப்போட அதிகாரம் துள்ளி விளையாடுதுயா” இவன் மனைவியைப் பற்றி பெருமையாய் சிலாகிக்க, மாறன் இப்போதும் எதுவும் பேசவில்லை.

“யோவ் மாமா, கிட்ட வாயேன்...” இவன் போதையில் அவரை அருகே அழைக்க, அவரோ அசையவில்லை. “நீ வரலனா என்ன? தோ, நானே வரேன்” என்றவன் குழந்தையென நகர்ந்து சென்று அவர் பக்கத்தில் அமர்ந்தவன், “மாமா, சின்ன வயசுல ஒனக்குப் புடிச்ச எம்.ஜி.ஆர் படம் பாக்க என்னையும் நம்ப ஊர் டூரிங் டாக்கீஸ்கு கூப்ட்டு போவ இல்ல? அப்போ பார்த்த ஒரு படத்துல… என்ன படம்?” என்று தாடையை ஒரு விரலால் தட்டி யோசித்தவன்

“ஆஹ்! எங்கள் வீட்டுப் பிள்ளை. ஆமா, அந்த படத்துல ரெண்டு எம்.ஜி.ஆர் வருவார். ஒருத்தர் பயந்தவுக. அவரப் பாக்கும்போது நமக்கு எல்லாம் கோபம் வரும். அப்படிதேன்யா ஒன் பொண்ணு இருந்தா. ஆனா இன்னைக்கி எப்டி வந்தா தெரியுமா? அந்த படத்துல வர்ற தைரியசாலி எம்.ஜி.ஆர் அப்டியே ஸ்டைலாஆஆ படிக்கட்டுல எறங்குவாரே, அப்டி வந்து இன்னைக்கி கலெக்டரா எறங்குனாயா கார்லயிலிருந்து. அடேங்கப்பா! என்ன கம்பீரம்… எம்.ஜி.ஆருக்கு விசிலடிச்சாப்ல என் பொஞ்சாதிக்கும் விசிலடிக்க தோனுச்சியா”

“எலேய், போதும் நிறுத்து உன் பேச்ச. ஒன்னையப் படிக்காத முட்டாள்னு அசிங்கப்படுத்திட்டு போன என் மவளப் புகழ்ந்தது போதும்”

“மாமா, நிறுத்து நிறுத்து. அவ ஒன் பொண்ணா? இல்ல இல்ல… அவ என் பொஞ்சாதி மாமா. என்ன? அப்டி பேசினது யாரு… என் பொஞ்சாதிதேன? என்ன இருந்தாலும் அவ படிப்புக்கு நான் அவ பக்கத்துல கூட நிக்க முடியாது மாமா. நீங்க எல்லாம் என்னைய வானத்துல இருக்குத சூரியனா பாக்கறீய. அதே அவள என்னைய மறச்சு நிக்குத மேகமாத்தேன் நெனைக்குறீய. அது அப்டி இல்ல மாமா. ஒவ்வொரு ஆம்பிளையும் என்னதேன் சூரியனா இருந்தாலும் அவன வெறுமையா வானத்துல பாக்கறத விட அந்த மேகத்து மறவுல இருந்து பாரேன் அழகா இருப்பான். நீயும் என்னைய அப்டி பாரு மாமா” இவன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேச

காதலித்துத் திருமணம் செய்த அவருக்கே மதிவேந்தனின் காதலைப் பார்த்து வாய் அடைத்தது. இன்று தன் மகளைப் பார்த்துவிட்டு வந்து இவன் எந்த கவலையில் இருக்கிறானோ என்று ஆறுதலுக்காக இவர் மருமகனைத் தேடி இங்கு வர, இவனோ இங்கு மனைவி புகழ் பாடிக் கொண்டிருந்தான். அதில் கடுப்பானவர், “எலேய், போதை எறங்குனதும் நீயாவே கீழ வாடே” இவர் விலக நினைக்க

எட்டி அவர் கையைப் பிடித்தவன், “மாமா, ஒனக்கு ஒன் பொண்ணு மேல இன்னும் பாசம் இருக்கு மாமா. இந்த வளத்த பிள்ளைக்காண்டி நீ பெத்த பிள்ளைய ஒதுக்குத. ஒன் பொண்ணுட்ட… இல்ல இல்ல, என் பொஞ்சாதிட்ட பேசு மாமா” இவன் மறுபடியும் மனைவிக்காகப் பரிந்து பேசி நிற்க

“எலேய் மாப்ள, இம்புட்டு நேரம் அந்த புள்ள என் பொண்ணு... இப்போம் நானா போய் பேசணும்னா ஒன் பொஞ்சாதியா? நல்லா இருக்குடே. விடிய விடிய குடிக்காம கீழ வந்து சேருலே. இப்போ நான் போகலைனா ஒன் அம்மையே இங்க வந்துரும்” அவன் மகளைப் பற்றி சொன்னதற்குப் பதில் சொல்லாமல் விலகினார் அவர்.

இப்படி ஒரு ஆழமான காதலைத் தான் தன் மனைவி மேல் வைத்திருக்கிறான் மதிவேந்தன். அவளைப் பெற்ற தந்தையிடம் கூடத் தன் மனைவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை அவன். தன்னைக் காயப் படுத்தியவளை, அசிங்கப்படுத்தியவளை ஏனோ மனதால் அவளை விலக முடியாத அளவுக்கு அவனுடைய ஆழமான சுயநலமில்லாத தூய்மையான காதல் இருவரையும் பிணைத்திருந்தது.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பதை வெறும் பழக்கம் மட்டுமல்ல, நாம் கொள்ளும் காதலும் சுடுகாடு வரைக்கும் என்பதை நிரூபித்தது வேந்தனின் காதல். ஆனால் இதையெல்லாம் மறைத்து மனைவி முன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் தான் வலம் வருகிறான் இந்த காதல் கணவன்.

மாறன் விலகியதும், தலைக்குக் கீழே இரண்டு கைகளைக் கொடுத்துப் படுத்தவன், வானில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்த வட்ட நிலவில் தன் மனைவியின் முகத்தைக் கொண்டு வந்தவன், “ஏட்டி பொஞ்சாதி, ஒனக்கு என் மேல அன்பு பாசம் காதல் இல்லையாம்! ஒன் அப்பாரு சொல்றாரு. என்னைய விட என் மேல கொள்ளக் காதல் ஒனக்குதேன் டி இருக்கு. என்னதேன் நீ கம்பீரமா எறங்கினாலும் இந்த மாமனோட பார்வைக்காக தேடுனியே... அது மட்டுமா?

எல்லாரையும் அதிகாரம் செஞ்சாலும் என்ட்ட மட்டும் கொழையிற அந்தக் குரல் இருக்கே… அந்த நேரம் அந்த தொண்டக் குழியில முத்தம் குடுக்கணும் டி என் பொஞ்சாதி. ஆனா இப்போ இல்ல, முழுசா இந்த மாமன்ட்ட எப்போ ஒன் காதல சொல்றியோ அப்போதேன் டி” அவன் அடித்த சரக்கின் போதை தலைக்கு ஏறியதோ இல்லையோ, இது நாள் வரை மறைத்து வைத்திருந்த அவன் காதல் மனைவியைக் கண்டதும் தலைக்கு ஏற, அன்று இரவு முழுக்க பதினெட்டு வயது ஆண் மகன் போல் பிதற்றலில் இருந்தான் மதிவேந்தன்.

தென்றல் கலெக்டராய் சார்ஜ் எடுத்து மூன்று தினங்கள் சென்றிருந்தது. முதல் தினத்துக்குப் பிறகு அவள் மதிவேந்தனை சந்திக்கவில்லை. அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். இவளுக்கும் வேலை அதிகமாக இருந்தது. ஊருக்கு வெளியில் அரசாங்கம் அவளுக்குக் கொடுத்த வீட்டில் தான் தென்றல் தனியாகத் தங்கி இருந்தாள்.

மலரும் சுந்தரமும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள், உன் கணவன் வீட்டில் தங்குவதாக இருந்தால் நாங்களும் வருகிறோம் என்று. ஆனால் தென்றல் பிடிவாதமாக அதை மறுக்கவும், மகளின் பாதுகாப்பு வேந்தனின் பொறுப்பு என்று அவனிடம் விட்டுவிட்டு கணவன் மனைவி இருவரும் அங்கு ஊரிலேயே தங்கி விட்டார்கள்.

கணவனிடம் பேச இவள் எதிர்பார்த்திருக்க, அதற்கான வாய்ப்பாய் ஒரு நாள் இவள் வண்டி ஊருக்கு வெளியே பழுதாகி நின்றது. மதிவேந்தன் கார் அந்தப் பக்கம் வரவும், கணவன் முகத்தைத் தன்னுள் பதித்த படி கணவனின் காரில் ஏற இருந்தவள், அவனுக்குப் பக்கத்தில் முன் சீட்டில் சாமந்தி அமர்ந்திருக்க, வேறு வழியில்லாமல் பின் சீட்டில் அமர்ந்தாள் தென்றல். ஆனால் விழிகள் இரண்டையும் கணவனை விட்டு அகல விடவில்லை அவள்.

இந்த பயணத்தைத் தென்றல் சாதரணமாக எடுத்துக் கொண்டாலும் சாமந்தி அதற்கு விடவில்லை. “ஆத்தாடி ஆத்தா! மச்சான், இனி அக்கா ஊருக்குப் போறதா இருந்தா என்னைய தனியா அனுப்பிராத. அங்க ஊர்ல எல்லாரும் கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல. அத விட இந்த சர்க்காரு பஸ்ல என்னால வர முடியல. ஆத்தாடி ஆத்தா! கட்டைல போறவன்… அவன் இஷ்டத்துக்குப் போடுதான் பிரேக்கை. என்ன சர்க்கார் வண்டியோ!” வேந்தனிடம் புலம்பிய படி வந்தாள் இந்த வாயாடி.

சாமந்திக்கு ஒரு அக்கா செவ்வந்தி மற்றும் ஒரு தங்கை மரிக்கொழுந்தும் இருகிறார்கள். அக்கா பக்கத்து ஊரில் கணவனுடன் இருக்கிறாள். இப்போது அவள் நிறைமாதமாக இருப்பதால், சாமந்தி நேரம் இருக்கும்போது எல்லாம் சென்று பார்த்துவிட்டு வருவாள். இவள் தாய் தந்தையர் ஒரு தீ விபத்தில் இறந்ததால், அதையே இவள் ஊருக்குச் செல்லும்போது எல்லாம் ஊரில் உள்ளவர்கள் பேசி துக்கம் விசாரிக்கவும் தான் இவள் இப்படி புலம்பியது. அதிக வசதி வாய்ப்பின்றி பிறந்ததில் இருந்து சர்க்கார் வண்டியில் சென்று வந்த சாமந்திக்கு இப்போதெல்லாம் வேந்தன் வீட்டு காரில் சென்று வந்து பழகியதால், சர்க்கார் வண்டிக்கு இப்போது இப்படி ஒரு பாட்டு விழுகிறது.

“சரி சரி... நீ கால் கடுக்க நடந்து பஸ்ல இடி பட வேணாம். நானே ஒன்னைய கூட்டிட்டு போகுதேன். அப்டி எனக்கு வர நேரம் இல்லாதப்போ அம்மையோட கார்ல போய்ட்டு அவங்க கார்லயே வந்துரு” இவன் அவளுக்காய் பரிவாய் பேச

அதில் குதூகளித்தவள், “மச்சான்னா மச்சான்தேன்!” என்று அவள் சந்தோஷப் பட

கண்ணில் ஒரு வித கூர்மையுடன் தென்றல் கணவனைக் கண்ணாடி வழியாகப் பார்த்தவள் மூக்கை சுருக்கி புருவத்தைத் தூக்கி செல்லக் கோபத்துடன் உரிமையாய் கணவனிடம், ‘இவள் யார்?’ என்று விழியாலேயே கேட்க, அவனோ மனைவியின் உரிமையையும் கோபத்தையும் கண்டு உணர்ச்சியற்ற முகத்துடன் உள்ளுக்குள் ரசித்தவன் அவளின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.

கணவனின் அலட்சிய செயலால் இவள் கடுப்பில் இருந்த நேரம், “ஆத்தாடி ஆத்தா! ஏங்க கலெக்டர் அம்மா, இந்த சர்க்கார் ரோடெல்லாம் இப்டி கெடக்கே... அத நீங்க செத்த சரி செய்ய மாட்டீயளா?” தன் வழமையான துடுக்குத்தனத்துடன் சாமந்தி தென்றலிடம் கேட்டு விட

“ஆத்தாடி ஆத்தா! சர்க்கார் பஸ்ல போய் வர்றவங்க தான் சர்க்கார் ரோடு சரியில்லன்னு புகார் சொல்லணும். நீ தான் உங்க மச்சான் கார்ல போய் வரப் போறியே, பிறகு எதுக்கு கேட்கற? ஆத்தாடி ஆத்தா! அதுவும் இல்லாம நான் கலெக்டர். என்னமோ உங்க ஊருக்கு ரோடு போட வந்த என்ஜினீயர் மாதிரி கேள்வி கேட்குற! இனி பார்த்துப் பேசு… புரிஞ்சதா புள்ள?” தென்றலோ அவள் பாஷையிலேயே படபட பட்டாசாய் பதில் தர

அதில் வேந்தன் இறுக்கம் தளர வாய் விட்டுச் சிரிக்கவும், அவனை அதிசயமாய் பார்த்தவள், “ஆத்தாடி ஆத்தா! சிரிப்புனு சொன்னா, அதென்ன பருத்திக் கொட்டையா இல்ல புண்ணாக்கானு கேக்குத எங்க மச்சானையே சிரிக்க வச்சிட்டீய. ஒங்கள்ட்ட ஏதோ மாயம்தேன் இருக்கு. ஆமா... ஒங்க பேச்சுல அவர் கோவம் இல்ல படணும்? எதுக்கு சிரிக்குறாக?” சாமந்தி புரியாமல் வெள்ளந்தியாய் கேட்க

வேந்தன், சொல்லேன் என்பது போல் மனைவியிடம் கண்ணாலேயே சவால் விட, தென்றலோ ஒரு அசட்டு சிரிப்புடன் திணறித் தான் போனாள். இப்படியே சந்தோஷத்துடன் அன்றைய பயணம் இருவருக்கும் கழிந்தது.

வெள்ளி அன்று மறு பதிவை பதிவிடுகிறேன் தோழமைகளே...
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 30
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vijayalakshmi 15

New member
வேந்தன் தென்றலும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அதிகமான அளவில் அன்பு வைத்துள்ளனர் .வேந்தன் அவளாக செல்ல வேண்டும் என்றும், தென்றல் அந்த ஊரில் இருக்கும் ஜாதி வெறி மறைய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் awsome
 
சூப்பர்மா....என்ன ஒரு காதல்....படிக்கற ஆர்வத்த விட மனசில்லாம...மாமன்கிட்ட கோச்சிக்கிட்டு போனவ...இப்ப மாமனோட கவுரவத்த காப்பாத்த ,தான் விரும்புன படிப்ப படிக்காம...கலெக்டர் க்கு படிச்சி மாமன்கூட வாழ வந்திருக்கா,...செம்ம லவ்....
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வேந்தன் தென்றலும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அதிகமான அளவில் அன்பு வைத்துள்ளனர் .வேந்தன் அவளாக செல்ல வேண்டும் என்றும், தென்றல் அந்த ஊரில் இருக்கும் ஜாதி வெறி மறைய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் awsome
நன்றிங்க சிஸ்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சூப்பர்மா....என்ன ஒரு காதல்....படிக்கற ஆர்வத்த விட மனசில்லாம...மாமன்கிட்ட கோச்சிக்கிட்டு போனவ...இப்ப மாமனோட கவுரவத்த காப்பாத்த ,தான் விரும்புன படிப்ப படிக்காம...கலெக்டர் க்கு படிச்சி மாமன்கூட வாழ வந்திருக்கா,...செம்ம லவ்....
ஆமாம் சிஸ்...
நன்றி சிஸ்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN