சாதி மல்லிப் பூச்சரமே !!! 31

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 31

இன்று காலையில் எழுந்ததில் இருந்தே தென்றல் ஒரு வித படபடப்புடன் இருந்தாள். இன்று மதிவேந்தன் சொன்ன கோவில் விசேஷம். இவளை வரச் சொல்லி இருந்தான். கணவன் மனதில் காதல் இருப்பதால் அவனைத் தயக்கம் இல்லாமல் எதிர்கொண்டவளால் வீட்டில் உள்ள மற்றவர்களை அப்படி எதிர்கொள்ள முடியவில்லை. அதிலும் இன்று தந்தையை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவளுள் கோபத்தையும், தயக்கத்தையும் அதிகம் கொடுத்தது.

இந்த மூன்று வருடத்தில் தந்தையை அவள் சந்திக்க முயற்சிக்கவே இல்லை. அவரும் அப்படியே இருக்க, அவளுக்கு அதனால் கூட கோபம் இல்லை. அவள் கணவனே என்றாலும் அவனை விட்டுப் பிரியும் போது அவளுக்காக ஒரு தந்தையாய் அவர் பேசி இருக்க வேணாம்? ஆனால் த அதை அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு தந்தையாய் அடித்து உதைத்து இருக்கலாம்.

அதையும் செய்யாமல் வளர்த்த பிள்ளைக்காக பெற்ற மகளை நான் உயிரோடு இருக்கும் வரை முகத்திலே முழிக்காதே என்று சொன்ன தந்தையின் வார்த்தைகள் தான் இன்று வரை அவளை ரணப்படுத்தியது. அதற்காக வந்த கோபமும், தனக்காக அவர் யோசித்து அமைத்துக் கொடுத்த நல்ல வாழ்வை இப்படி இழந்து நிற்பதால் தந்தையைப் பார்க்க முடியாத தயக்கத்துடன் கிளம்பினாள் தென்றல்.

அது ஒரு முனீஸ்வரன் கோவில். சுற்றி மரங்கள் இருக்க, நடுவில் கோவில் இருந்தது. இவள் காரிலிருந்து இறங்கி வண்டியைத் திருப்பி அனுப்பி வைத்தவள், ஒரு வித படபடப்புடன் உள்ளே நுழைய, அங்கு வேந்தன் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இல்லை. கணவனைத் தேடிய படி இவள் இன்னும் முன்னேற, எதிர் வந்த தாமரையோ ஒரு நிமிடம் நின்றவர் பின் இவளைக் கண்டும் காணாத மாதிரி செல்ல, இவளுக்கு முகம் வாடிப் போனது.

இருந்தும் தன் அத்தையிடம் இவள் பேச நெருங்கிய நேரம், “ஏய் தென்றல், வா வா... எப்டி இருக்க? ஆளே மாறிட்டடி! நீ வரனு கூட மச்சான் சொல்லல... வரட்டும் இருக்குது அவருக்கு!” சந்தோஷத்தில் ஓடி வந்து தன் தங்கையைக் கட்டிக் கொண்ட நிலவழகி தென்றலைப் பேச விடாமல் இவள் மட்டுமே மூச்சு விடாமல் பேச, தென்றலுக்கு சந்தோஷமாக இருந்தது. இவளும் அழகியை அணைத்துக் கொள்ள, அப்போது “மருமகளே” என்று தாமரை அழைக்க

தன்னைத் தான் அழைக்கிறார்களோ என்ற எண்ணத்தில் கண்ணில் எதிர்ப்பார்ப்போடு தென்றல் தாமரையைப் பார்க்க, அவள் விழிகளைச் சந்தித்தவர், “மருமகளே, நல்ல நேரத்திலேயே வெறகு மூட்டி பொங்க வச்சிருமா. பொறவு சாவகாசமா வந்தவிங்களோட பேசு தங்கம்” தாமரை அன்பொழுக அழகியிடம் சொல்ல

“இதோ அத்தே...” என்று தாமரைக்குப் பதில் தந்தவள், “தென்றல், கோவில் விசேஷம் முடிஞ்சதும் போயிடாத. நான் உன்கிட்ட நெறைய பேசணும்” என்ற கோரிக்கையுடன் அழகி விலக

தென்றலுக்குக் கண்ணில் நீர் உதயமானது. கணவன் வேறு திருமணம் செய்ய மாட்டான் என்பதில் உறுதியாக இருந்தாள் அவள். தங்கள் காதல் மேல் அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு. அதனால் தான் கணவன் வாய் மொழியாகவே அதைக் கேட்க இவள் அவன் மனைவியைப் பற்றி விசாரித்தது. அவன் சொன்னதைக் கூட இங்கு வரும்வரை பொய் என்று தான் நம்பினாள். ஆனால் இன்று தாமரை அழகியை மருமகள் என்றழைக்க, அழகி பொங்கல் வைக்கச் செல்ல, அதில் இவளுக்குள் இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது.

“மருமகளே கல்லு வச்சி அடுப்பு மூட்டிட்டேன்... வந்து பொங்க வை” இப்படியாகச் சொன்ன சின்னத்தாய் அதிர்ச்சியில் நின்றிருந்த தென்றலைக் காட்டி, “யார் இவங்க?” என்று தாமரையிடம் கேட்க

“பெருசா சொந்தம் எல்லாம் இல்ல சின்னத்தாயி. இவுக நம்ப ஊர் கலெக்டர் அவ்வளவுதேன்” என்று தாமரை சொல்ல, இன்னும் நொறுங்கிப் போனாள் தென்றல்.

சின்னத்தாய் இந்த ஊருக்கு வந்த போது நடந்த பிரச்சனையில் அவர் கவனம் முழுக்க தன் மகனிடம் தான் இருந்தது. பெரிய குடும்பத்தில் தன்னால் பிரச்சனையோ என்று கவலையில் பதட்டத்தில் இருந்தவருக்கு மகனை விட்டுப் பிரிந்து செல்லும் மருமகளின் முகம் நினைவில் நிற்கவில்லை.


அதனால், “ஓ! காபி தண்ணி குடிக்கறீங்களா?” சின்னத்தாய் யாரோ மாதிரி தென்றலை உபசரிக்க

அவ்வளவு தான் முடிந்தது... என்ற முடிவில் இவள் அங்கிருக்கப் பிடிக்காமல் திரும்பிச் செல்ல எத்தனிக்க, அப்போது நண்பனான தர்மனுடன் எதிர்பட்டான் மதிவேந்தன்.

அவனைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை என்பது போல் இவள் கணவனின் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்தவளுக்கு தன்னையும் மீறி கண்ணீர் கொட்டியது. இவன் பதறி என்ன ஏது என்று விசாரிக்க விழைய, “மருமகளே தீய குறைத்து வை இல்லன்னா.. பொங்க கரி புடிச்சிரும்” என்று தாமரை அங்கு அழகிக்கு எடுத்துச் சொல்ல

மனைவியின் கண்ணீர் எதற்கு என்று புரிந்து கொண்டவனுக்கு, ‘என்னைய புரிஞ்சிகிட்டது இவ்ளோதேனா டி?’ என்று ஒரு பக்கம் கோபப் பட்டாலும் ‘நான் இருக்குதேன் டி’ என்பது போல் கண்ணாலேயே தன்னவளுக்கு தைரியம் சொல்லவும் மறக்கவில்லை அவன். “ஏலேய் தர்மா, ஒன் பொஞ்சாதி அங்கன தனியா பொங்க வெக்கா… நீ என்னடே இங்கன நிக்க?” கணவனின் கேள்வியில் தனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட, நிம்மதியானது இவளின் காதல் கொண்ட மனது.

“அதானே பார்த்தேன்... உங்க வீட்டம்மா வந்த பிறகு நான் பக்கத்துல நிக்கலாமா? தோ நான் என் பொஞ்சாதிய பார்க்க கெளம்பிட்டேன்” என்று நண்பனுக்குச் சிரிப்புடன் பதில் தந்த தர்மன், தென்றலிடம் இரண்டொரு வார்த்தை நலம் விசாரித்து விட்ட பிறகே சென்றான் அவன்.

இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிணைப்புகள் இன்னும் சரி செய்யாமல் அப்படியே இருக்க, மனைவியின் கலங்கிய முகத்தையும் அவள் கண்ணீரையும் கண்டு இவனால் ஆறுதல் சொல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியவில்லை. அதனால் அவசரமாக மனைவிக்கு வேண்டிய பதிலை சொல்லி விட்டானே ஒழிய, அதன் பின் அங்கிருக்க முடியாமல் யாரும் தன்னைப் பார்க்காத முடியாத தூரத்திற்குச் சென்று நின்றான் வேந்தன். இவனுடைய பார்வையும் சிந்தனையும் எங்கோ பதிந்திருக்க

தன்னவனின் முதுகில் தன் முகத்தைப் புதைத்தவளோ பின் தன் கைகள் இரண்டையும் அவன் தோள்களுக்கு இடையில் கொடுத்துத் தென்றல் கணவனை மென்மையாக அணைத்துக் கொள்ள, எதிர்பாராத இந்த தாக்குதலில் வேந்தனின் உடல் ஒரு வினாடி சிலிர்த்து அடங்கியது.

தன்னவளின் முதல் அணைப்பை இவன் ஆழ்ந்த மூச்செடுத்து உள்வாங்க, “நான் கொஞ்ச நேரத்துல ஏதேதோ தப்புத் தப்பா நினைச்சிட்டேன் மாமா” தன்னவனின் முதுகிலிருந்து முகத்தை விலக்காமலே பூந்தென்றல் தன் மனதிலிருந்த கலக்கத்தைச் சொல்ல

மனைவியின் வார்த்தை சொல்ல வரும் செய்தி புரிய, உடல் விறைக்க சுற்றுப்புறம் உணர்ந்தவன், “என்னையப் பத்தி எவ்ளோ ஒசந்த எண்ணம் ஒங்களுக்கு! நான் படிக்காத காட்டான்தேன். ஏன்... முரடன் கூடத்தேன். அதுக்காண்டி காதலிச்சவள மறந்துட்டு, தூக்கி எறிஞ்சிட்டு இன்னொருத்திய எம் மனசுல நெனைச்சி கூட பாக்க மாட்டேன். நீங்க பெரிய படிப்பு எல்லாம் படிச்சிருக்கீய. இப்டி தப்பு தப்பா யோசிக்கலாமா?” என்றவன் அவள் கையை விலக்க, அவள் பிடியோ அழுத்தமாக இருந்தது,

“நீங்க இந்த ஊர் கலெக்டர்... நாம இருக்கறது பொது இடம். அதனால...” என்ன தான் காதல் கொண்ட மனமாக இருந்தாலும் அவளால் ஏற்பட்ட ரணம் அப்படியே இருக்க, வார்த்தைகளைச் சற்று கடுமையாக உதித்தவன் அணைத்திருந்த மனைவியின் கையைப் பட்டென தட்டி விட்டு அவள் முகத்தைத் திரும்பியும் பார்க்காமல் இவன் தன் நடையை முன்னோக்கிப் போட

ஒரு வினாடி கணவனின் விலகலில் பெண்ணவளின் மனம் சுனங்கினாலும் அடுத்த நொடியே இவள், “மாமா… மாமா...” என்ற அழைப்புடன் அவன் பின்னே செல்ல, அந்த பிடிவாதக் காரனோ இவள் அழைப்பைக் காதிலேயே வாங்காமல் முன்னோக்கி நடக்க, “ஆ.... இஷ்.... மாமா!” மனைவியின் வலி நிறைந்த அலறலில் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர இவன் பதறியபடி,

“பாப்பு….” என்று ஓடி வந்து பார்க்க, அவளோ ஓரிடத்தில் அமர்ந்து தன் காலைப் பிடித்த படி முனங்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன டி… என்னாச்சி?” இவன் வார்த்தைகள் மனைவியிடம் இருந்தாலும் பார்வை முழுக்க சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. இவர்கள் தற்போது இருப்பது மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் ஏதாவது பாம்பு மனைவியைத் தீண்டி இருக்குமோ என்ற பயம் அவனுக்கு.

“பாதத்துல ஏதோ குத்துன மாதிரி இருக்கு மாமா” இவள் முனங்க


மனைவி பக்கத்திலேயே அமர்ந்து அவள் பாதத்தைத் தன் மடி மீது வைத்து ஆராய்ந்தவனோ “கோவிலுங்குறதால நீ செருப்பு போடலையா? ஒனக்குப் பழக்கம் இல்லாத இந்த எடத்துல எல்லாம் ஏன் டி வர? பாரு, எவ்ளோ பெரிய முள்ளு குத்தியிருக்கு! இனி பாத்து வா டி பாப்பு குட்டி” இவ்வளவு நாள் பன்மையில் இருந்த அழைப்பு இப்போது ஒருமையில் மாற தன்னை மீறி உரிமை கலந்த கரிசன குரலில் இவன் அதட்ட

பெண்ணவளுக்கு கண்ணைக் கரித்தது. சிறு வயதில் இப்படி தான் விளையாடும் போது இவள் விழுந்து விட்டால் அழகாய் அனுசரணையாய் பேசி இவள் மனதை மாற்றுவான். அன்று புரியாத அன்பு இன்று புரிந்தது பெண்ணவளுக்கு.

முள்ளை எடுத்துப் போட்டு பாதத்தைச் சரி செய்து சுத்தம் செய்தவன், “இந்த முள்ளு குத்துனா காலில் குடைச்சல் இருக்கும். அதனால நீங்க வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக்கிடுங்க” மனைவியின் பாதத்திலேயே தன் கவனத்தைப் பதித்தபடி இவன் சொல்ல, அவளிடம் பதில் இல்லை.

பேச்சில்லாமல் போகவும் இவன் நிமிர, கணவனையே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவள், “அந்த முள்ளு ரொம்ப கெட்ட முள்ளு மாமா. பாரு, அது என் கால்ல குத்தி இருக்கு. அதே என் உதட்டுல குத்தி இருந்தா... இந்நேரம் நீ எப்படி எல்லாம் வைத்தியம் பார்த்திருப்ப? ச்சை! எல்லாத்தையும் கெடுத்துடுச்சு” இவள் சலிப்பும் சரசமுமாய் சொல்ல, அவனுக்குள் புது ரத்தம் பாய்ந்தது.

இன்று தான் அவள் கணவனை உரிமையாய் அணைக்கிறாள், உரிமையாய் பார்க்கிறாள், உரிமையாய் பேசுகிறாள். எல்லாம் தன்னவன் தனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இத்தனை நாள் அவள் மனதிலிருந்த விலகலை தூர விலக்கியிருந்தது.

மனைவி சொன்ன வார்த்தைகளில் ஒரு வித ரசனை வந்து அவன் முகத்தில் குடியேற, அதை மறைத்துக் கொண்டவன், “வீட்டுக்குள்ளார கூட செருப்பபு போட்டுக்கிட்டு சுத்துறவுக நீங்க. இப்டி முள்ளு குத்துனதால கால் கடுக்குமேனு கரிசனத்துல சொல்ல வந்தா, கலெக்டர் அம்மா மறுபடியும் தப்புத் தப்பா யோசிக்கிறீய. கால் சரியாகிடுச்சு... நீங்க கெளம்புங்க” இவன் எழ

“என்ன மாமா இது... கால்ல குடைச்சல் இருக்கும்னு நீ தான சொன்ன? இப்போ நான் எப்படி நடக்க? தூக்கிட்டுப் போ மாமா” இவள் சிணுங்கலாய் சொல்ல

‘இன்னைக்கி என்னையப் படுத்தறதுனே இவ முடிவு செஞ்சிருக்கா போல’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாலும் “என் பொஞ்சாதியத் தவிர அப்டி எல்லாம் யாரோ ஒருத்திய நான் தூக்கிற மாட்டேன். இங்கனயே இருங்க… என் அம்மையையும் அழகியையும் வரச் சொல்லுதேன் கைத்தாங்கலா ஒங்கள கூப்டுகிட்டு போவாக” என்றவன் முன்னேற

“அப்படி யாரும் என்ன தாங்க வேணாம். இங்கு எல்லோருக்கும் நான் வேற தான? அது அப்படி இல்லை டி மக்கு! கலெக்டருக்கு படிச்சிருக்கியே தவிர உனக்கு அறிவே இல்ல. என்ன இருந்தாலும் நீ அநாதை தான்னு சொல்லு” கணவனிடம் ஆரம்பித்து இவள் தன்னிடமே முடிக்க, அவள் சொன்ன அநாதை என்ற வார்த்தையில் அடுத்த நொடி மனைவியைத் தன் கைகளில் பட்டும் படாமல் ஏந்தி இருந்தான் மதிவேந்தன்.

உடனே இவள் குறும்பாய் சிரிக்க, “இந்த எடத்துல அறுவது வயசு கெழவி இருந்தாலும் இதத்தாம்ல செஞ்சிருப்பேன்” இவன் உணர்ச்சி துடைத்த குரலில் சொல்ல

‘ஓ... அப்டியா’ என்று மனதிற்குள் சிலாகித்தவள், இது தான் சமயம் என்று இவள் கணவன் கழுத்தில் தன் கையை மாலையாக்க, இன்று இரண்டாம் முறையாக அந்த ஆண் மகனின் உடல் சிலிர்த்தது.

வேந்தன் தென்றலைத் தூக்கி வரவும், அதைப் பார்த்த அழகியும், தாமரையும் என்னவோ ஏதோ என்று பதற, சின்னத்தாயோ முதல் முறையாக மகனிடம் கோபம் கொண்டார். “டேய்... அவளக் கீழ விடுடா. இவ கலெக்டர்னா நீ தூக்கிட்டு வரணுமா? அங்க என் மருமவ உனக்காக அவ அப்பா வீட்டுல காத்துகிட்டு இருக்கா. இங்க நீ இவளத் தூக்கி சுமப்பியா?”

சின்னத்தாய் பேச்சில் தாமரையும், அழகியும் சூழ்நிலை மறந்து சிரித்து விட, “ஆத்தா, ஒன் மருமவளத் தவிர ஒன் மகன் எவளையோ கையில சொமப்பானு நெனைக்குதியா?” என்று வேந்தன் கோபப் பட, அதில் தாயின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டவன், “ஒன் மருமவளத்தேன் நான் இப்போ சொமந்துகிட்டு நிக்கேன்” என்று விளக்கிய படி மனைவியை அங்கு விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர வைத்தவன், பின் யார் முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து விலகிச் சென்றான் வேந்தன்.


சின்னத்தாய் சந்தோஷத்தில் தயங்கிய படி தென்றல் பக்கத்தில் வந்து அமர, முகம் அறியா தனக்காக மகனிடம் பரிந்து பேசிய அவரைக் கண்கள் மின்ன, “அத்தே!” என்று தென்றல் கட்டிக் கொள்ள

“அம்மாடி! அத்தேனா சொன்னீங்க? என் மவன் சொல்லுவான்... நீங்க எம்புட்டோ படிப்பு படிக்க உங்க அம்மா வீட்டுல இருக்கீங்கனு... கடைசியில நீங்க கலெக்டர்ஆஆ?” சின்னத்தாய் அங்கலாய்க்க

“அத்த, நான் உங்க மருமக தான? அப்பறம் என்ன வாங்க போங்க? மருமகளேன்னு கூப்பிடுங்க” இவள் ஏக்கக் குரலில் சொல்ல

“நீங்க...” தென்றல் முறைக்கவும், “இல்ல இல்ல… நீ என் மருமவ தான். ஆனா என்னைய உங்க மாமியாரா நீ ஏத்துகிட்டியா?” சின்னத்தாய் வெள்ளேந்தியாய் கேட்க

தென்றலுக்கு மட்டுமில்லாமல் அங்கு இதையெல்லாம் கண்டும் காணாமல் தூர இருந்து கேட்டுக் கொண்டிருந்த வேந்தனுக்கும் புரிந்தது. “அத்த... என்ன பேச்சு இது? முகம் அறியாத எனக்காக உங்க மகன் கிட்டவே சண்டை போட்ட நீங்களா இப்படி கேட்கறது? முதல்ல நீங்க என்ன மருமகளா ஏத்துக்குவீங்களா? அதச் சொல்லுங்க” இவள் பதில் கேள்வி கேட்க

“நீ தான் என் மருமவனு எனக்குத் தெரியல. அதான், ஒரு தாயா அவனக் கண்டிச்சேன்... ஆனாலும் நீ சினிமா நடிகை சௌகார்ஜானகி கணக்கா… ரோஜா பூ கலர்ல சும்மா தங்கம் மாதிரி மின்னுற! அதான்...” என்று இழுத்தவர் “க்கும்... என் மவனுக்கு என்ன? சும்மா சிறுத்த மாதிரி சீறிகிட்டு இல்ல இருக்கான்” மருமகளிடம் ஆரம்பித்து மகனை விட்டுக்கொடுக்காமல் இவர் பதில் தர

“அத்த, கரெக்டா சொல்லுங்க… நான் ரோசாப் பூவா இல்ல தங்கமா? ரோசாப் பூ எப்படி அத்த தகதகன்னு மின்னும்?” இவள் அவர் பாஷையிலே கேட்க

சந்தோஷத்தில் மருமகளை வாரி அணைத்துக் கொண்டார் அந்த வெள்ளேந்தி மனுஷி.

இதுவரை தென்றலின் புகைப்படத்தைக் கூட யாரும் அவரிடம் காட்டவில்லை. அவரும் தன் மருமகளை நேரில் காணவே விரும்பினார்.

கோவில் பூஜை முடிந்து அழகி தென்றலைத் தன் வீட்டுக்கே வரச் சொல்ல, அதற்கு சம்மதித்து மனைவியை அழைத்து வந்து அங்கு விட்டவன் பின் தானே வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லிச் சென்றான் வேந்தன்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 31
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN