சாதி மல்லிப் பூச்சரமே !!! 32

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 32

கணவன் அழைத்ததும் தென்றல் இங்கு கோவில் பூஜைக்கு வரக் காரணம், இங்கு வைத்து குடும்பத்தினருடன் பேசி பிறகு கணவனுடன் அவன் வீட்டுக்குப் போக நினைத்து தான். ஏனோ நேரடியாகப் போக அவளுக்குத் தயக்கம்.

ஆனால் அதை செயல்படுத்த முடியாதது போல் அழகி தென்றலைத் தன் வீட்டுக்கு அழைக்க, போக விருப்பம் இருந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகணுமே என்ற தயக்கமும் அவளுக்கு வர, என்ன செய்வது என்று யோசித்தவள் இப்போது தான் தோழியாகிப்போன தன் சின்ன அத்தையை மனதில் வைத்து காரியத்தை சாதிக்க நினைத்தவள்,

“அத்த, பேச்சுக்கு பேச்சு என்னை மருமகள்னு தான் சொல்றீங்க. அது உண்மைனா இந்நேரம் என்னை வீட்டுக்கு வா மருமகளேன்னு அழைத்து இருப்பீங்க” என்று குறைப்பட்டவள் “ஆனா நீங்க அழைத்தாலும் நான் வர மாட்டேன். ஏன், எனக்கு வரத் தெரியாதா? உங்க மகன் அழைச்சிட்டுப் போக, அவர் கூட ஜோடியா வர எனக்கு ஆசை இருக்காதா? சொல்லுங்க அத்த... கோவில்ல இருந்து வீட்டுக்கு என்னை அழைச்சிட்டு வரச் சொல்லி உங்க மகன்கிட்ட சொல்லுங்க அத்த” இவள் இருவரும் தனியா இருக்கும்போது முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தன் ஏக்கத்தை மூக்கை உறுஞ்சியபடி சின்னத்தாயிடம் சொல்லவும்

அவ்வளவு தான்… மனசு தாங்குமா சின்னத்தாய்க்கு? “தங்கம், நீ சொல்லிட்ட இல்ல… நான் பாத்துக்கிறேன். மாமியாரும் மருமகளும் கூட்டு சேர்ந்தா மகனோட நிலை என்னாகும்னு என் மகனுக்கு நாம காட்டலாம் டா” மகனுக்கு எதிராய் சதிசெய்ய மருமகளுடன் கூட்டணி அமைத்தார் அவர்.

எல்லோரும் கிளம்பும் நேரம் பார்த்து, சின்னத்தாய் தென்றலை வீட்டுக்கு அழைக்க, யாரும் அவளை வர வேண்டாம் என்று சொல்லவில்லை. அதேசமயம் வா என்றும் அழைக்க வில்லை. தாமரையிலிருந்து வேந்தன் வரை வேண்டாம் என்று போன அவளே திரும்ப வரட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

இப்போது தாய் அழைக்கவும், மனைவியின் முகத்தில் விருப்பத்தையும் ஏக்கத்தையும் பார்த்தவன், வேறு வழி இல்லாததுபோல் முகத்தில் விருப்பம் இல்லாததைக் கொண்டு வந்தவன் பின் தானே வந்து அழைத்துச் செல்லவதாகச் சொல்லி தர்மா வீட்டில் மனைவியை விட்டுச் சென்றான் மதிவேந்தன்.

தர்மாவுடைய தாத்தா செந்தில்நாதன் இறந்து விட, தற்போது அவருக்கான இடத்தில் இருந்து பொறுப்பாய் அவர் வழி மக்கள் அனைவரையும் வழி நடத்துவது மதிவேந்தன் தான். வீட்டில் அவரின் மனைவி பர்வதமும், சாமந்தியின் தங்கை மரிக்கொழுந்தும் இருந்தார்கள்.

தர்மனின் அத்தை மகள்கள் தான் சாமந்தியும் மரிக்கொழுந்தும். தாய் தந்தையர் இறந்துவிட, இன்னும் திருமணம் ஆகாததால் இருவரும் செந்தில்நாதன் பொறுப்பில் இருக்க இங்கு வந்து விட்டார்கள். அதில் மரிக்கொழுந்து பர்வதம் பாட்டிக்குத் துணையாக இங்கு இருக்க, சாமந்தி சின்னத்தாய்க்கு துணையாக இருக்க வேந்தன் வீட்டில் தங்கிக் கொண்டாள்.

நிலவழகி தற்போது ஒரு மகப்பேறு மருத்துவர். தர்மாவும் ஒரு பன்னாட்டுத் துறையில் பெரிய பொறுப்பில் இருக்கிறான். இருவருடைய வேலையும் டவுனில் இயங்குவதால் கணவன் மனைவி இருவரும் அங்கேயே ஒற்றை படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள்.

தர்மா வீட்டு வழியில் இன்று ஏதோ விசேஷம் என்பதால் இருவரும் தற்போது பாட்டி வீட்டுக்கு வந்து கோவில் பூஜையில் கலந்து கொண்டார்கள். தர்மா வெளியே கிளம்பியதும் அக்கா தங்கை இருவருக்கும் தனிமை கிடைத்தது.

“சொல்லு அழகி… தர்மா கூட உனக்கு எப்படி திருமணம் நடந்தது? வீட்டில் எப்படி ஒத்துக்கிட்டாங்க? அவர் நம்ப...” சமூகம் இல்லையே என்பதை வெளிப்படையாகக் கேட்க முடியாமல் பூந்தென்றல் தயங்கி நிறுத்த

தங்கையின் தயக்கத்தைப் புரிந்து கொண்டவள், “அவர் நம்ப சாதி சனம் இல்ல… பிறகு எப்படி? அதான கேட்க வந்த? நானும் அவரும் காதலிச்சோம்… திருமணம் செய்துக்கிட்டோம்... அதுக்கு வீட்ல யார் சம்மதம் வேணும் தென்றல்?”

தமக்கையின் பதிலில் அதிர்ந்து ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனாள் தென்றல். நிலவழகியா இது! என்ன தான் டாக்டருக்குப் படித்தாலும் எப்போதும் நிலவழகி வீட்டில் உள்ளவர்களுக்கு அடங்கிய பெண். இவர்கள் இப்படி மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு பார்ப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பெரியவர்களுக்காக அப்படிப் பட்ட வகுப்புத் தோழிகளை வீட்டுக்குக் கூட அழைத்து வர மாட்டாள். வெளி இடங்களில் நின்று கூட அவர்களிடம் எல்லாம் பேச மாட்டாள். அப்படிப் பட்டவளா இப்படி என்று ஆனது சின்னவளுக்கு. ‘மாமா விஷயத்தோடு இவர்கள் விஷயத்தையும் காதில் வாங்காமல் தவிர்த்தது தவறோ?’ என்று எண்ணினாள் அவள்.

தங்கையின் அதிசய முகத்தைப் பார்த்தவள், “ஆமாம் தென்றல்… காதல் தான்! ஆனா எங்கள் காதல் கொஞ்சம் வித்தியாசமானது. வீம்பிலும், பிடிவாதத்திலும், சுயமரியாதையாலும் உருவானது” என்றவள் தங்களுக்கு நடந்த திருமணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் அழகி.

அன்று அழகி விஷம் குடிக்க தோட்டத்தில் தயாராக, இதைக் கண்டு கொண்ட வேந்தன் வந்து அவள் குடிப்பதைத் தடுப்பதற்குள் அவள் கையிலிருந்த பூச்சி மருந்து பாட்டிலைத் தட்டி விட்டிருந்தான் தர்மா.

நிலவழகி கோபத்துடன் அதிர்ச்சியில் அவன் முகம் பார்க்க, “என்ன அம்மணி, டாக்டருக்கு படிக்கிற நீங்களே ஒரு உசுரோட மதிப்பு தெரியாம அதைக் கொல்ல பார்க்கிறீங்களா? நல்லா தெரிஞ்சிக்க… நீ கொல்லப் பார்த்தது ஒரு உசுர இல்ல ரெண்டு உசுர!” முதலில் பன்மையில் பேசியவன் பின் ஒருமையில் அவளை விளித்துத் திட்ட...

அவன் பேச்சின் பொருள் புரியாமல், “என்ன ரெண்டு?” என்று அழகி விழிக்க, தூரத்தில் வந்து கொண்டிருந்த வேந்தனோ அவனின் கூற்றைக் கேட்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அதிசயத்து நின்று விட்டான்.… இருவருக்கும் தெரியாமல் தான்.

“முதல்ல உனக்கு என்ன பிரச்சனைனு சொல்லு. அதுவும் இப்படி ஒரு முடிவை எடுக்கிற அளவுக்கு?” இவன் கோபமாக கேட்க

பெண்ணவளுக்கு இப்படி தன் செயலைப் பார்த்து விட்டானே என்றிருந்த பயம் விலக, “என்ன சும்மா மிரட்டுறீக? அதக் கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று இவள் கோபப் பட

“எனக்கு மட்டும் தான் உரிமை இருக்குனு சொல்ல மாட்டேன். ஆனாலும் எனக்கு உரிமை இருக்கு... நீ என் வருங்கால மனைவியா வருவ என்ற உரிமை இல்லனாலும், இப்போ என் நிகழ்கால காதலியா... நான் விரும்பின முதலும் கடைசியுமான பொண்ணா உன்னைக் கேக்க எனக்கு உரிமை இருக்கு” அவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அவன் சொன்னது புரியாமல் முதலில் புருவத்தை சுருக்கியவளுக்குப் பின் புரிந்ததும், கண்கள் விரிந்தது.

கோபத்துடன் இவள் ஏதோ சொல்ல வருவதற்குள், “முதல்ல நான் என்ன சொல்ல வர்றன்னு கேளு... அதப் புரிஞ்சிக்கிட்டு பிறகு திட்டு” என்றவன் “கடந்த அஞ்சு வருஷமா நான் உன்னை லவ் பண்றேன். இந்த ஊர்ல இருக்கிற செந்தில்நாதன் ஐயாவோட பையன் வழிப் பேரன் நான். என் தாத்தாவப் பார்க்க நான் இங்க வரும்போது எல்லாம் உன் மச்சான் மதிவேந்தனை பார்த்துட்டு தான் போவேன். நானும் அவனும் நல்ல நண்பர்கள்.

ஒரு நாள் அவனைத் தேடி இந்த தோப்புக்கு வரும்போது தான் உன்னை முதன் முதலா பார்த்தேன். மரத்திலிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிட்டு இருந்த நீ, கயிறு அறுந்து விழவும் பதட்டத்தோடு அழுகை கலந்த சோக முகத்தோட நின்றிருந்த… அப்போது அந்த முகம் ஏனோ என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சி. அதுக்கப்புறம் இங்க வரும்போது எல்லாம் உன்னைத் தூர இருந்து பார்க்காம போக மாட்டேன்”

அழகிக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவளுக்கு நினைவில்லை. அதிலும், ‘ஒரு ஆண்மகன் தன்னை நோட்டம் விட்டது கூடத் தெரியாமல் மக்கு மன்னாத்தை மாதிரி இருந்திருக்கோம்’ என்று தான் அவளுக்குத் தோன்றியது. ‘இவன் எந்த அளவுக்கு நல்லவன் தெரியலையே... இப்போதான் ஒரு பிரச்சனையில சிக்கி இருக்கேன்... உடனே அடுத்தவனா?’

அவள் முகத்திலேயே மனதைக் கண்டு கொண்டவன், “நான் உன்னத் தேடி வந்தது பார்த்தது எல்லாம் என் மனசக் கட்டுப் படுத்த முடியாம தான் நிலா”

‘நிலா!’ இதுவரை இவளை யாரும் இப்படி அழைத்தது இல்லை.

“நான் உன்ன காதலித்தேன்... இனியும் காதலிப்பேன் என்றதால நான் உன்னைய கட்டாயப்படுத்தி பிரச்சனை கொடுப்பேனோனு நெனைச்சி நீ பயப்பட வேணாம். நீ என்னைய காதலிக்கலனாலும் நீ நல்லா இருக்கணும். உன் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைய நீ வாழணும். நீ எங்கேயோ ஒரு மூலையில் உயிரோட இருக்க என்றதே எனக்குப் போதும். ப்ளீஸ் நிலா... உனக்கு என்ன பிரச்சனைனாலும் இந்த முடிவை மட்டும் எடுக்காத” அவன் உயிர் உருக்கும் குரலில் கெஞ்சலாய் கேட்க

அழகிக்கு என்னமோ போல் ஆனது. அவள் சுபாவம் எப்போதுமே அமைதியாக இருப்பது. மற்றவரிடம் அதட்டிப் பேசவோ இல்லை மற்றவர்களை அவளிடம் கெஞ்சிப் பேசவோ வைக்க மாட்டாள். ஆனால் இன்று முன்பின் தெரியாதவன் வந்து கெஞ்சும் போது, அதுவும் அவள் உயிருக்காக கெஞ்சும்போது அவளால் அவனை எதிர்த்துப் பேசவோ மறுத்துப் பேசவோ முடியவில்லை.

“சொல்லு நிலா... இனி இப்படி ஒரு விஷயத்தை உன் ஆயுசுக்கும் செய்ய மாட்டேனு எனக்கு சத்தியம் செய் நிலா” அவன் குரல் இப்போது மன்றாடியது. இதே உரிமை உள்ளவளாக இருந்திருந்தால் கன்னம் பழுக்க ஒன்று கொடுத்து, என்னை விட்டுப் போய்விடுவாயா டி என்று கேட்டிருப்பான். ஆனால் இப்போது அவன் இருக்கும் நிலையோ வேறு இல்லையா? தன் காதலியின் உயிருக்காக அவளிடமே மன்றாடினான் அவளின் காதலன்.

அவள் அமைதியாக இருக்க, “நிலா, இப்போ நீ சத்தியம் செய்யலனா… பிறகு நானும் இப்போ நீ செய்ய இருந்தத மதிவேந்தன் கிட்ட சொல்ல வேண்டி இருக்கும். அவன் கிட்ட மட்டும் இல்ல, உங்க வீட்டுல எல்லாரிடமும் தான்” தர்மா உறுதியாய் இறுதியாய் சொல்ல

அவன் உறுதியில் குரல் நடுங்க, “இனி இப்படி ஒரு தப்ப செய்ய மாட்டேன்” என்றாள் அவள்.

“சத்தியமா… எங்க என் கண்ணப் பார்த்துச் சொல்லு. இதை நீ மீறினா பிறகு போகப் போறது ரெண்டு உசுரு நிலா!” என்று எச்சரிக்க

‘ஆரம்பத்துலயிருந்தே ரெண்டு உசுருனு சொல்றானே!’ என்ற படபடப்பில் ‘யார் அந்த இன்னொன்னு?’ என்ற கேள்வி யோடு அவன் முகத்தை இவள் ஏறிட

“சாட்சாத் அந்த இன்னோர் உசுரு நான் தான். ஒரு உசுரோட மதிப்ப உனக்கு சொல்லி சாக வேணாம்னு சொன்னவன் தான். நான் அப்படி ஒரு முடிவை எடுப்பனானு யோசிக்கிறியா? நிச்சயம் எடுப்பேன். நீ எங்கேயோ உயிரோட வாழ்ந்தா கூட என்னால தாங்கிக்க முடியும். ஆனா நீ இந்த உலகத்துல இல்லனா அடுத்த நிமிடம் நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன் டி” இவன் உரிமையைத் தன் காதலில் வெளிப்படுத்த

மறுபடியும் அதிர்ந்து போனாள் அழகி. ‘இது என்ன மாதிரி காதல்? இதுவரை என்னிடம் பேசியது இல்லை. நானும் காதலை ஒத்துக் கொள்ளவில்லை, கட்டி அணைக்கவில்லை, இதழ் தீண்டவில்லை. அவன் உயிரை முன்னிறுத்தி என்னை பிளாக்மெயில் செய்யவில்லை. ஆனால் அவன் காதலில் தான் எவ்வளவு உறுதியாக இருக்கிறான். இது எப்படி?’

அவள் சிந்தனையைத் தடை செய்தது, “என்னை நிமிர்ந்து பாரு நிலா” என்ற அவன் குரல்.

ஒரு வித நடுக்கத்துடனே நிமிர்ந்து அவன் கண்களை சந்தித்தவளால் பொய் சொல்ல முடியாமாமல் போக, “உண்மையா தான் சொல்லுதேன். சத்தியமா இனி என் ஆயுசுக்கும் இப்படி ஒரு முடிவை நான் எடுக்க மாட்டேன்...” ஏனோ அவனிடம் ஒப்புக்கு கூட பொய்யைச் சொல்ல முடியாமல் உண்மையைச் சொல்லி சத்தியம் செய்தாள் அழகி.

“போய் முகம் அலம்பிட்டு வா… உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“எதைப் பத்தி?”

“நீ இந்த முடிவு எடுக்க என்ன காரணம்? உனக்கு அப்படி என்ன பிரச்சனை?” இவன் விடாமல் கேட்க

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்ல. அப்டியே ஏதாவதுனா நான் சமாளிச்சிப்பேன்”

“நீ சமாளிச்ச விதம் தான் தெரியுதே. உன் பிரச்சனைய தீர்க்கும் வரைக்கும் என்னால நிம்மதியா தூங்க முடியாது நிலா. ப்ளீஸ் மா! போ… போய் முகம் அலம்பிட்டு வா டா” அவன் மென்மையிலும் மென்மையாய் சொல்ல

மறுக்க முடியாமல் அவன் சொன்னதைச் செய்து வந்து, அவளின் பிரச்னையைச் சொல்ல ஆரம்பித்தாள் அவனின் நிலா.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 32
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN