சாதி மல்லிப் பூச்சரமே !!! 34

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 34

என் காதலும் கை கூட வில்லை, கடமைக்கு என்று இதோ ஏறவிருந்த திருமண மேடையும் இல்லை என்றாகி விட்டது. மனதும் உடலும் சோர்வாக அவமானத்தில் கண்ணில் நீர் முட்ட அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, காலில் முகம் புதைத்துக் கேவினாள் நிலவழகி.

கழிவிரக்கத்தில் அவளுக்கு அவள் மேலேயே சுய பரிசோதனை பட வைத்தது. ‘என் கிட்ட குணம் இல்லையா? நல்ல பண்பு இல்லையா? அழகு இல்லையா? இல்லை… படிப்பு தான் இல்லையா? இப்படி பெற்ற தாயிலிருந்து அனைவரும் ஏன் என்னை ஒதுக்குகிறார்கள்? எனக்கென்று யாருமே இல்லையா! உடனே, ஏன் இல்லை... என் நிழலைக் கூடத் தொடாமல்... என் கடைக் கண் பார்வைக்காகவும் சம்மதம் என்ற என் ஒற்றை வார்த்தைக்காகவும் இன்று வரை எனக்காக ஒரு ஜீவன் காத்துக் கொண்டிருக்கே!’

அவளுக்கு ஏனோ திடீரென்று தர்மாவின் ஞாபகம் வந்தது. அன்று எல்லா விஷயத்தையும் சரி செய்து விட்டேன் என்று சொல்லி அவன் விலகியதோடு சரி. இவள் திருமண விஷயம் தெரிந்த பிறகும் இன்று வரை இவள் முன் வந்து நிற்கவில்லை அவன். இப்பொழுதும் தன்னை விரும்புகிறாரோ என்ற எண்ணம் இவளுள் எழ

நேரம் காலம் பார்க்காமல் ஒரு முடிவுடன் இவள் அவனுக்கு அழைக்க, முதல் அழைப்பிலேயே அந்தப் பக்கம் எடுக்கப்பட்டது. “தூங்கலையா?” இவள் கேட்க

“தூக்கம் வருமா?” என்று எதிர் கேள்வி கேட்டவன், “என்னமா ஏதாவது பிரச்சனையா?” என்க

அவன் கேள்வியைத் தவிர்த்தவள், “இப்பவும் நீங்க என்ன விரும்புறீங்களா?” இவள் பதில் கேள்வி கேட்க

“விடிந்தா ஆறு ஏழரை முகூர்த்தம். ஏழரை மணிக்கு உன் கழுத்தில் தாலி ஏறும் வரை நான் உன்னை விரும்பிட்டு தான் இருப்பேன். அதற்கு பிறகு தான்...” இவன் நிறுத்த

அவன் பதிலில் தொண்டை அடைக்க, “அப்போ என்னை கல்யாணம் செய்துக்கோங்க”

“வாட்!”

இவள் நடந்ததைச் சொல்ல, “இந்த கல்யாணணத்தை நிறுத்தி உன் அம்மா கிட்டயிருந்து தப்பிக்கணும்னா அதற்கு நான் வேற வழி செய்றேன். அதற்கு ஏன் நம்ம கல்யாணம் நடக்கனும்?” காதலே இல்லாமல் பொய்யாய் அவசரத்திற்கு இப்படி ஒரு திருமணத்தை ஏற்க அவன் பிரியப்படவில்லை.

அதைப் புரிந்து கொண்டவள் “இப்போ உங்க மேல் எனக்கு காதல் இல்லை தான். ஆனா நிச்சயம் ஒரு நாள் காதல் வரும். உங்க காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. அது எனக்கு காதலைக் கொண்டு வரும்னு… இதை நீங்க நம்புனீங்கனா நம்ம கல்யாணத்துக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்ங்க” என்று தெளிவாக சிறு பிசிறு கூட இல்லாமல் இவள் உறுதியாய் சொல்ல

முதல் முறையாக இவ்வளவு உரிமையுடன் நம்ம என்ற வார்த்தையை இவள் இருவரையும் சேர்த்து வைத்துச் சொல்லவும், அடுத்த வினாடியே அதற்கான ஏற்பாட்டில் இறங்கினான் தர்மன்.

விடிந்ததும் மாப்பிள்ளையையும் பொண்ணையும் காணோம் என்ற செய்தியில் மண்டபமே பரபரப்பானது. “இவிங்க ரெண்டு பேத்துக்கும்தேன் கல்யாணம் நடக்கப் போகுதே... பொறவு எதுக்கு ஓடிப் போச்சுங்க?” என்று ஊர்க் காரங்களுக்கே உள்ள குசும்பில் சில பெருசுகள் சிரித்துக் கும்மாளம் இட்டார்கள்.

மணமகன் தன் கைப்பட இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டுச் செல்லவும், அழகியின் வாழ்வை ஊரார் கண்ணு காது மூக்கு வைத்துப் பேச ஆரம்பிக்க, சற்று நேரத்திற்கு எல்லாம் கழுத்தில் தர்மா கட்டின தாலியுடன், அவன் பைக்கிலிருந்து இறங்கினாள் அழகி.

பெண்ணையும் மாப்பிள்ளையும் பார்த்த செண்பகவல்லி மகளை அடிக்கப் போக, தர்மா தான் முன்னாள் வந்து நின்று தன் மனைவியைக் காக்க, அவனைத் தொட பிடிக்காமல் முகம் சுளித்தவர், வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு திருமண ஆன அன்றே மகளுக்கு சாபமிட்டார் அந்த பெரிய மனுஷி.

எல்லா வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டு தன் மாமனிடம் வந்தவள், “இந்த கல்யாணம் நின்றது உங்களுக்கு எந்தவித அதிர்ச்சியா இருக்காது மாமா. முன்னரே உங்க மகன் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு சொல்லி இருக்கார். அதனால் புதுசா அதிர்ச்சி ஆன மாதிரி நடிக்காதீங்க” என்றவள்

அடுத்த நொடி தன் தாயிடம் வந்தவள், “பெத்த பொண்ணுன்னு கூட நினைக்காமல் ஆடித் தீர்த்து சாபம் விட்டுட்டியா? நீ ஆயிரம் சாபம் விட்டாலும் அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. ஏன்னா நல்லவங்க விடற சாபம் தான் பலிக்குமாம். நீ தான் நல்லவங்க இல்லையே... அதுக்கும் மேல சொல்லனும்னா ராட்சஷி! அதனால் என்னை ஒண்ணும் செய்யாது. பார்க்கத் தான் போற… என் புருஷனோட பல காலம் நூறு பிள்ளைங்க பெத்து நான் வாழ்வேன்.

இன்னும் எத்தனை நாளைக்கு மா இப்படியே இருக்கப் போற? பொறந்த வீட்டில் உன் வார்த்தை சபை ஏறனுங்கிறதுக்காக பெத்த பொண்ண நாலு பேர் பார்க்க சபையில் அசிங்கப்படுத்த நெனச்ச இல்ல? அதனால் தான் உன்னை அசிங்கப்படுத்த இப்படி ஒரு முடிவை எடுத்தேன். சாதி சாதின்னு எத்தனை தடவை வேந்தன் மச்சான பல பேர் முன்னாடி நிற்க வெச்சு மூக்கறுத்துருப்ப? இப்போ உன் பொண்ணே வேற சாதிக்காரருக்கு சொந்தம் ஆகிட்டா. எங்க… இப்போ என்னையோ என் கணவரையோ இல்ல என் பிள்ளைகளையோ அப்படி மூக்கறுக்கற மாதிரி உன்னால பேச முடியுமா? பேசுவீங்க… நீங்க பேசுவிங்க. பெத்த பொண்ணையே கல்யாணங்கிற பேர்ல அசிங்கப்படுத்த நினத்தவர் தானே!

ஆனா அப்படி பேசினா கேட்டு சும்மா போக நான் ஒண்ணும் இப்போ மூர்த்தி பொண்ணு இல்ல. தர்மன் மனைவி! பேசின உங்க நாக்கை அந்த வினாடியே இழுத்து வைத்து அறுத்துருவேன்... வேற்று சாதி ஆளுன்னா அப்பப்பா! என்ன மாதிரி அசிங்கப்படுத்தி பேச வேண்டியது. இன்றைக்கு நான் செஞ்ச இந்த காரியத்தில் உங்க சொந்தம் பந்தம் எல்லாம் நீங்க பேசின வார்த்தைய உங்க காது பட திரும்ப பேசத் தான் போறாங்க பாருங்க. நல்லா காது குளிரக் கேட்டு அவமானப்படுங்க. அப்போ தான் சக மனுஷங்களோட அவமானம்னா என்னனு உங்களுக்குத் தெரியும். இதைத் தான் அரசன் அன்றே கொல்லுவான்... தெய்வம் நின்று கொல்லும்னு சொல்லுவாங்க.

இதற்கு மேலும் நீங்க திருந்துங்கனு சொல்லவோ வேண்டவோ மாட்டேன். ஏன்னா நீங்க சாகற வரை இப்படி தான்னு எனக்குத் தெரியும்.ஆனா ஒன்று வீணா என் வாழ்க்கையில் ஏதாவது தொந்தரவு கொடுத்தீங்க, பிறகு உங்க பொண்ணு தான் நான் என்றதை நிரூபிக்க வேண்டியிருக்கும்” என்று அழகி மூச்சு விடாமல் படபடவென பேசி தாயை எச்சரித்தவள்,

“அதேபோல் இந்த மண்டபத்தை விட்டு நான் போகும்போது கட்டின துணியோட தான் போறேன். இப்போ நான் உடுத்தியிருக்கிற புடவை முதற்கொண்டு போட்டிருக்கிற நகையிலிருந்து கழுத்தில் தொங்குற தாலி வரை என் மாமியாரோடது. இதோ நான் கட்டிட்டுப் போன புடவையக் கூட உங்க கிட்ட கொடுத்திடுறேன்” அவள் கையிலிருந்த புடவையைத் தாய் முன் வைத்தவள்.

“மனிதனை மனிதனா பார்த்து அன்பு, பாசத்தோட அரவணைத்து வாழுற குடும்பம் தான் எனக்கு வேணும். தன்னுடைய அகங்காரத்தால் சாதி வெறியால் தினந்தினம் குடும்பத்துக்குள்ளயே அரசியல் சூழ்ச்சி செய்கிற குடும்பம் எனக்கு வேண்டாம். இதுவரை நான் மூர்த்தி பொண்ணு... இனி தர்மன் மனைவி. நிச்சயம் சாகற வரை உன் பொண்ணா மட்டும் இருக்க மாட்டேன்”

ஊரே அவள் பேச்சில் அதிசயத்தது என்றால், செண்பகவல்லியோ ‘என் மகளா இவள்? இவ்வளவு பேசுவாளா? அதுவும் என் கிட்ட!’ என்ற படி அதிர்ந்து தான் போனார்.

உண்மை தான்… அழகி யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள். தந்தையின் சுபாவம் அப்படியே அவளுக்கு. தாய் செண்பகவல்லி கண்ணால் இடும் எந்த சமிக்ஞையையும் புரிந்து கொண்டு செய்யவோ, அடங்கியோ போகிறவள். ஆனால் இன்று அப்படிபட்டவளை இப்படி ஒரு நிலையில் நிறுத்தியதே அவளைப் பெற்ற தாய் தானே?

இறுதியாகத் தன் தந்தையிடம் வந்தவள், “மாமாவுக்கு வேற ஒரு பொண்ணு மேல் விருப்பம் இருக்குனு அம்மா கிட்ட சொல்லி இருக்கிறார் ப்பா. இவங்க அதையும் மீறி இந்த திருமணம் நடக்கனும்னு வற்புறுத்தவே, மாமா என் கிட்ட சொன்னார். நானும் அந்த நேரத்தில் இவரை விரும்பனதால, நம்ம ரெண்டு பேர் வீட்ட சமாளிக்க இப்படி ஒரு பிளான் போட்டோம். அம்மாவுக்கு தண்டனை கொடுத்து அவங்களை தலை குனிய வைக்கணும்னு நினைச்சேன் ப்பா. ஆனா இதில் நீங்களும் இப்படி அவமானப்பட்டு நிற்பது நான் யோசிக்கல ப்பா. என்ன மன்னிச்சிடுங்க ப்பா!” என்று கை கூப்பி மன்னிப்பு கேட்டவள் “உங்க மகளையும் மருமகனையும் ஆசிர்வாதம் செய்ங்க ப்பா...” என்றவள் திரும்பி கணவனைப் பார்க்க, அவன் புரிந்து கொண்டு மனைவியுடன் அவள் சொன்னதைச் செய்தான். மகளின் வார்த்தையில் உள்ளம் பதறியது அவருக்கு. பெற்ற மனம் இல்லையா? நடந்ததை ஏற்றுக் கொண்டவராக இருவரையும் மனதார ஆசிர்வதித்தார் அவர்.

உண்மையில் அழகி தன் தாயிடமிருந்து தனக்குக் கிடைக்கப் போகும் அசிங்க அவமானத்தில் இருந்து தப்பிக்கவும், தன்னையே உயிராய் நேசிப்பவனை கைப்பிடிக்கவும் தன் தாய்க்கு பதிலடி கொடுக்கவும் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தாள் அவள்.

அதன் பிறகு வேந்தன் வீட்டுக்கு வந்தவர்கள் கந்தமாறனிடமும் தாமரையிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அதன் பின் தான் தர்மனின் தாத்தா வீட்டுக்கே சென்றார்கள் இருவரும்.

அங்கு புதுமண தம்பதிகளுக்கே உள்ள சில சடங்குகளைச் செய்ய, திடீர் திருமணம் என்பதால் பகலில் சில உறவுகள் வருவதும் போவதுமாக இருந்தது. தர்மனின் தாத்தா இறந்து விட, பாட்டி மட்டுமே இருந்தார். அவர் வசித்ததோ ஒற்றை அறை கொண்ட சிறிய ஓட்டு வீடு. மாலை ஆனதும் அன்றைய இரவை இருள் சூழ, தம்பதிகளுக்குத் தனிமை கொடுத்து உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார் பாட்டி.

கணவன் மனைவி இருவர் மட்டும் தனித்திருக்க, திருமணத்திற்காக இரவு தர்மனிடம் அழகி பேசியதோடு சரி. காலையில் திருமணம் நடந்த கோவிலில் கூட மதிவேந்தன் மற்றும் மற்ற நண்பர்கள் உடன் இருக்க, இதோ இப்போது வரை சுற்றி உறவுகள் இருக்க, இருவருக்கும் தனித்துப் பேச, ஏன்... நிமிர்ந்து முகம் பார்க்கக் கூட முடியாத நிலை.

நேரம் சென்று கொண்டிருந்தது… பின்புறத் தோட்டத்தில் ஒரு கல் மேடையில் அழகி அமர்ந்திருக்க... மனைவியை உரசிக் கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்து அவள் வலது கையோடு தன் இடது கையைக் கோர்த்தவன், “என்ன என் மூன் ரொம்ப நேரமா தீவிர யோசனையில் இருக்காங்க… என்ன டா அப்பா ஞாபகமா?” மனைவியின் விரல்களை ஒவ்வொன்றாக பிரித்த படி இவன் சகஜமாக கேட்க

அவளிடம் மவுனம் மட்டுமே. உடனே இவன், “அது எப்படி இந்த பொண்ணுங்க மட்டும் அப்பா கிட்ட இப்படி ஒன்றிங்கனு தெரியல. என்னை மாதிரி கணவன் மார்களுக்கு எல்லாம் இந்த உலகத்திலே இரண்டு பேர் தான் மா எதிரி. ஒருத்தர் மனைவிய பெத்த அப்பா, இன்னொருத்தர் மனைவி பெத்தெடுக்கிற பையன். உனக்கு தெரியுமா நிலா? நான் அப்பா செல்லம்னு சொல்வதை விட அம்மா செல்லம்னு தான் சொல்லணும். அவங்க உயிரோட இருந்த வரை நானும் அம்மாவும் ரொம்பவே திக் ஃபிரண்ட்ஸ். அவங்க இறந்த பிறகு எல்லாம் போயிடுச்சி என் வாழ்க்கையில்.

தாத்தா பாட்டியை என்னோட இருக்க சொல்லி கூப்பிட்டேன். இருவருமே இந்த கிராமத்தது மண்ணை விட்டு வர மாட்டேனு சொல்லிட்டாங்க. அது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. சரி தனிமை தான் இனி என் வாழ்க்கைன்னு ஏத்துக்கிட்டேன். என் கூட நீ வருவதானே நிலா? இல்ல… நமக்குள்ள சுமூகமான வாழ்வு அமையறவரை இங்கேயே இருக்கப் போறேனு சொல்லிடுவியா?” ஏனோ காலையிலிருந்து தன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் இருக்கும் மனைவி அப்படி சொல்லி விடுவாளோ என்று பயந்து தான் போனான் அந்தக் காளை. ஆமாம்… பயம் தான் அவனுக்கு.

கணவனின் குரலில் அதை உணர்ந்து கொண்டாளோ பெண்ணவள்? கணவன் புறம் திரும்பி அவன் கண்களோடு தன் விழிகளைச் சந்திக்க வைத்தவள், “நீங்க அங்கே இருக்கும் போது எனக்கு இங்கு என்ன வேலை? நான் ஏன் அங்கே வர மாட்டேனு சொல்லப் போறேன்? இல்ல, அப்படி நீங்க போனாதான் உங்களை சும்மா விட்டுடுவனா?” அவள் தெள்ளத் தெளிவாய் பதில் தர

இதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டவன், வாகாய் மனைவியைத் தன் தோள் வளைவில் சாய்த்துக் கொண்டு, “பிறகு என் மனைவியின் ஆழ்ந்த சிந்தனைக்கு என்ன காரணமோ?” அவன் தங்களுடனான உரையாடலை இலகுவாக்க நினைக்க

கணவனின் தோளில் உரிமையுடன் சாய்ந்து கொண்டவள், “நான்... எனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்ததால் தான் உங்களைத் தேடி இந்தக் கல்யாணத்தை முடிச்சதா... என்னை சுயநலம் பிடிச்சவளா... எனக்கு உங்க மேலே கடைசி வரை காதலே வராது என்ற மாதிரி ஏதாவது நெனச்சீங்களா?” இது தான் என் மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயம் என்பது போல் கணவனிடம் கேட்டே விட்டாள் அழகி.

“என் பொண்டாட்டிக்கு இந்த விஷயம் தான் அவள் மண்டைக் குள்ள பாடாப் படுத்தியிருக்கா? அதென்ன இப்படி ஒரு சூழ்நிலையால் தான் தேடியதா சொல்ற? இந்த சூழ்நிலையில் என் ஞாபகம் வரலனா தான் எனக்கு கஷ்டமா இருந்திருக்கும். அப்புறம் என்ன கேட்ட? உனக்கு என்மேல் கடைசிவரை காதல் வரலனவா... அப்பவும் உனக்கும் சேர்த்து மூச்சுத் திணற திணற நான் மட்டுமே உன்னைக் காதலிப்பேன்” பதிலோடு பதிலாக மனைவியை இறுக்க அணைக்க நினைத்தவனின் கைகளோ தன்னவளின் வெற்று இடையில் எக்குத் தப்பாய் சற்று அழுத்தத்துடன் படர்ந்து விட

பெண்ணவளோ கணவனின் பதிலில் தன்னை மறந்து விலக நினைக்காமல் அவனை ஒட்டிய படியே நெளிய... அதை உணர்ந்தவனோ தன்னவளின் இடையில் இன்னும் இன்னும் கோலமிட்ட படி அவள் காதோரம் குனிந்து, “என்ன செய்து? கூச்சமா இருக்கா இல்லை வெட்கம் வருதா?” என்று இவன் கேட்க

கணவனின் கேள்வி ஏன் என்பதைப் புரிந்து கொண்டவள், “நான் கூச்சமா இருக்குனு சொன்னா என்ன செய்யப் போறீங்க இல்லை வெட்கமா இருக்குனு சொன்னா என்ன செய்யப் போறீங்க?” இவள் அவனிடமே எதிர் கேள்வி கேட்க

அவனோ வாய் விட்டு சிரித்தபடி, “கூச்சம்னா இன்னும் கூச்சம் மூட்டுவேன். வெட்கம்னா காலையில் உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு வந்த மாதிரி நம்ம நூறு பிள்ளைகளுக்கு இப்பவே அச்சாரம் போடுவேன்” இவன் காதலுடன் அவள் காதில் கிசுகிசுக்க

அதில் நெளிந்த படி கணவனின் நெஞ்சில் இன்னும் அழுத்தமாய் தன் முகத்தைப் புதைத்தவள், “அப்போ என் வீட்டுக்காரர் சத்தியமா இது கூச்சம் தாங்க” என்றவள், கூடவே “எனக்குக் கொஞ்ச நாள் அவகாசம் வேணும்” என்று கேட்க

மனைவியின் பதிலில் வாய் விட்டுச் பலமாக சிரித்தவன், “அவகாசத்தை இப்படி கணவன் நெஞ்சில் ஒட்டிகிட்டு கேட்கிற ஒரே பெண்மணி என் மனைவியா தான் இருப்பா. மனைவி கேட்ட பிறகு அப்பீல் ஏது? சரி… சீக்கிரமே உன் கூச்சத்தை வெட்கமா மாற்றிடுவான் பார் இந்த மாமன்” என்று சொல்லி மீசையை முறுக்கியவன், “ஓய் மூன், அப்போ அந்த கூச்சத்தை வெட்கமா மாற்ற தினமும் ஒண்ணு செய்யலாமா?” இவன் சரசமாய் கேட்க

பெண்ணவளோ முகம் நிமிர்த்தாமல், “சொல்லுங்க” என்று கிசுகிசுத்த குரலில் கேட்க

“இங்கு இருக்கறவரை தினமும் இரவு நீ தோட்டத்துக்கு வந்திடு... நான் உன்னைத் தூக்கிட்டு ரூமுக்குப் போறேன். அங்க போனதும் உனக்கு வெட்கம் வர்ற வரை சமத்தா உன்னையக் கட்டிப் பிடிச்சிட்டு தூங்கிடறேன்… போதுமா?” இவன் டீல் பேச

இவ்வளவு தானா என்பது போல் கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “அப்போ நம்ம வீட்டுக்குப் போய்ட்டா எங்கிருந்து தூக்கிட்டுப் போவீங்க?” என்று தன்னை மீறி கேட்டு விட்டுப் பிறகு பெண்ணவள் நாக்கைக் கடித்துக் கொள்ள

மனைவியின் இப்படி ஒரு கேள்வியில் அவளுடைய சம்மதத்தையும் நம் வீடு என்ற வார்த்தையையும் காதலோடு ஏற்றுக் கொண்டு மனைவியை ரசித்தவன்

“அது குட்டி ஃப்ளாட். ஒரு படுக்கை அறை, சின்னதா ஒரு ஹால், அதை விட சின்னதா ஒரு கிச்சன் அவ்வளவு தான் இருக்கும்” என்று இவன் சொல்ல

“அப்போ நான் தினமும் ஹால்ல இருப்பனா... நீங்க என்ன பெட் ரூமுக்குத் தூக்கிட்டுப் போவீங்கலாம்” தன்னவனின் கவலை புரிந்து இவள் டீல் பேச

காதல் பொங்க மனைவியை அணைத்துக் கொண்டவன், “தாங்க்ஸ் டி பொண்டாட்டி” என்ற படி தன்னவளைக் கைகளில் ஏந்த

வாகாய் அவனுக்கு இடம் கொடுத்தவள், “இது என்ன டி போடுறீங்க?” என்று போலியாய் இவள் சிணுங்க

“அப்படி தான் டி சொல்லுவேன் என் போண்டா… டீ....” என்றவன் இன்னும் அவளிடம் சரசமாய் ஏதேதோ சொல்லியபடி தூக்கிச் சென்றான் அவன்.

காதலை உணர்வதை விட ஒருவரால் அந்த காதல் உணர்த்தப் படுவது என்பது தனி வரம். இதோ தன் ஐந்து வருட காதலைத் தன்னவளுக்கு உணர்த்தத் தயாராகி விட்டான் தர்மன். அழகிக்கும் இன்று காலையிலிருந்து அவள் மனதில் சிறு குற்ற உணர்ச்சி இருந்தாலும் இப்போது கணவன் வார்த்தையால் அதைத் தெளிவு படுத்திக் கொண்டவள் இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் தன்னவனின் காதலுக்கு நிகராக தன் காதலை அவனுக்கு உணர்த்தத் தான் போகிறாள் அவள்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 34
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN