சாதி மல்லிப் பூச்சரமே !!! 39

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 39

எந்த ஒரு பொருளும் சுலபமாக கையில் கிடைத்தால் அதனுடைய மதிப்பு தெரியாதென்று பெரியவர்கள் சொல்வார்கள். பொருளுக்கே அப்படி என்றால் ஒருவர் நம் மேல் வைக்கும் காதலை என்ன சொல்வது? அதிலும் சிறுவயதிலிருந்து இவள் தான் தன் தேவதை என்று வாழ்ந்த வேந்தனின் காதலைப் பெற்ற தென்றல் அதனின் உன்னதத்தை உணராமல் இருந்தது தான் தவறு.

“என்னனா... என்ன தப்பு செஞ்சனா கேக்குத? ஆமா… ஒன்னையப் பொறுத்த வரைக்கும் பல விசயங்கள் ஒனக்கு தப்பா தெரியாதுதேன். அப்டி நீ செஞ்ச தப்ப ஒனக்கு ஒணர்த்த ஒனக்கு என் மேல் காதல் இருந்துருக்கணும். அது தேன் இல்லையே?” என்றவன்

“நீ பொறந்து ஒன்னைய என் கையில் கொடுத்தப்போ... தெனமும் நான் தோட்டத்திலே வெளையாடுத பூவாத்தேன் நீ எனக்கு தெரிஞ்ச. பூவான ஒன்ன நெதமும் ஓடி வந்து அணைச்சுக்கிடற பட்டாம் பூச்சியாதேன் நான் இருந்தேன். அத்தை கூட சொல்வாக... முன்னாடி வளர்ந்த கொழந்தைக்கு திடீர்னு புதுக் கொழந்தை வந்தா அதை அடிச்சிட்டு தூரயிருந்து பார்க்கும். ஆனா நம்ம வேந்தன் தென்றலை என்னையே ஒரு அதட்டல் போடவேணாமுன்னு சொல்லுதான்னு சொல்வாக. அந்த வயசுலையே ஒன்னைய வருத்திப் பார்க்க எனக்கு மனசு வரல டி.

பொறவு நீ பிரிஞ்சப்பவும் என் கையில் வெச்சி வெளையாண்டுட்டிருந்த பொம்மைய பிடிங்கிக் கொடுத்தாப்லதேன் ஒன் பிரிவு எனக்கு பட்டுச்சு. ஆனா மாமாவுக்கு நம்ம ரெண்டு பேத்தையும் புருசன் பொஞ்சாதியா பார்க்க ரொம்ப ஆச. அவருக்குன்னு சொல்றத விட அத்தைக்குதேன் அப்படி ஒரு ஆசை வந்துச்சுன்னு சொல்லணும். ரெண்டு பிள்ளைங்களை வளர்த்தோம்... ரெண்டும் நமக்கு ரெண்டு கண்ணு மாதிரி... இதுங்க ரெண்டுதுக்கும் கல்யாணம் செஞ்சுட்டா… நாம சாகற வரைக்கும் ரெண்டும் நம்ம கூட இருக்கட்டும்னு அத்தை நெதமும் சொல்வாகளாம். ஆனா அந்த ஆயுசு எதுவரைன்னு இல்லாம அவுகதேன் வெரசா போய்ட்டாக”

மாமா ஒன்னைய என் பொஞ்சாதினு சொல்லும் போது எல்லாம் ஒரு சிரிப்போட வெலகினவன் டி நான். ஆனா அதே எப்போ ஒன்னைய என் கையில ஏந்தி கற்பக்கிரகத்துல அமர வெச்சனோ... அந்த நிமிசமே முடிவு எடுத்தேன்... இந்த ஜென்மத்துல நீ தேன் என் பொஞ்சாதினு. அப்போ ஒனக்கு பதிமூணு வயசுன்னு யோசிக்காம ஒன்னையத் தேடி வந்து என் காதலைச் சொன்னேன்.

பத்தொம்பது வயசுமே எனக்கு காதல் சொல்ற வயசு இல்ல தேன்... அவசரப்பட்டுட்டேன். அது தப்புன்னு எனக்குப் பொறவுதேன் வெளங்குச்சு. அதனாலதேன் ஒன்னைய விட்டு தூரவே இருந்தேன். இல்லனா ஒன்னைய வந்து சந்திக்க எனக்கு எம்புட்டு நேரமாகி இருக்கும்? இல்ல… என்னையத் தடுக்கறவகதேன் யாரு?”

“என் மனசுல காதல் இருக்கற மாதிரி ஒன் மனசுலயும் காதல் இருக்கறதா நெனச்சேன். அப்படி இருந்ததாலதேன் ஒவ்வொரு வாட்டியும் நான் ஒனக்கு முத்தம் குடுக்கும் போதும் நீ அமைதியா இருந்த. இல்லனா என் செவுள் கிழிச்சிருக்க மாட்ட? அப்டிதேன் நான் நெனச்சேன். இதெல்லாம் இப்போ ஏன் சொல்லுதேனு பாக்கறீயா?” என்றபடி மனைவியை ஒரு வித வேதனையுடன் பார்த்தவன்,

“அப்பவும் சரி இப்பவும் சரி எப்பவும் சரி காதல் இல்லாம ஒன்னைய நான் தொடல டி. இனியும் தொட மாட்டேன்.” என்று உறுதி அளித்தவன் “இல்லாத ஒன் காதலை நடிப்புன்னு சொன்னதுக்கே ஒனக்கு கோவம் வருது. ஆனா இப்படியான என் காதலைத்தேன வெறும் சதப் பிண்டங்களுக்கு சமமா அன்னைக்கி சொல்லிட்ட இல்ல? புருசன் பொஞ்சாதிக்குள்ள நடக்கிற அந்த சின்னச் சின்ன சீண்டல் எல்லாம் காதலில் சேர்ந்தது தேன் டி” வேந்தன் குரல் நைந்து ஒலித்தது....

உண்மை தானே? அன்று அவசரப்பட்டு என்ன மாதிரி வார்த்தைகளை விடுத்தாள் தென்றல்? இப்போது கணவனிடம் என்ன பதில் சொல்வது என்றே புரியாத நிலை அவளுக்கு.

“ஆனா ஒன்ட்ட காதலே இல்லாம எப்டி டி என் தொடுகையும் அணைப்பையும் ஏத்துக்க முடிஞ்சது? அப்போ… நீ வெளிநாடு போக என் கூட எந்த எல்லைக்கும் எறங்கத் தயாராகிட்டீயளோ?” இவன் குரல் ஒருவித உஷ்ணத்துடன் ஒலித்தது.

கணவனின் வார்த்தைகளில் அர்த்தம் புரிந்தவளுக்கு அவனை விட உஷ்ணமான மூச்சை உள்ளிழுத்தவள் அதிர்ச்சியுடன் “மாமா!” என்று அதட்டினாள் தென்றல்.

கணவன் மனைவி உறவுகளுக்குள் இந்த தீண்டல்கள் சகஜம் என்று சொன்னவனுக்கு, ஒரு மனைவியாய் தான் இத் தீண்டல்களை ஏற்றுக் கொண்டாள் என்பதை என்ன சொல்லி புரியவைப்பாள் இவள்?

“நீ எத்தன வாட்டி மறுத்தாலும் இது தான் நெசம். காதல் இருக்கிறவ செய்ற காரியமாடி அது? பிள்ள அம்மையத் தேடுற மாதிரி அந்த கூட்டத்தில் ஒன் மொகத்த மொகத்தப் பார்த்தனே… அப்ப கூட வா என் ஏக்கம், என் சோகம், என் வேண்டுதல் ஒனக்குப் புரியல? இந்த ஊரே பாக்க என்னைய வேணாம்னு விட்டுட்டுப் போனீயே... அதே ஊர் முன்னாடி இன்னைக்கி எனக்கு என்ன பேர் தெரியுமா? பொஞ்சாதிய வெச்சி வாழத் தெரியாத பேடிப் பயல்! இவனுக்கு என்ன கொறையோ… விட்டுட்டு ஓடிப் போய்ட்டா! எம்புட்டு கவுரதியான பேர் பார்த்தியா? ஒன்னால எனக்கு கெடச்ச பேரெல்லாம் நல்லா இருக்கா?”

மனைவியைக் குத்திக் காட்ட என்று வேந்தன் இவ்வளவும் பேசவில்லை. ஊரார் முன் அவன் பட்ட அசிங்க அவமானம், மனைவியின் புறக்கணிப்பு இப்படி எல்லாம் இன்று இவனைப் பேச வைத்தது. இவ்வளவு செய்த மனைவியை இன்று தன்னையும் மீறி காதலோடு நெருங்கி விட்டானே... அதற்கு வடிகாலாய் தன்னவளையே மனமில்லாமல் விளாசினான் அவன்.

“மாமா” முகம் வேதனையில் கசங்க.. குற்றவுணர்வில் இப்போது தென்றலின் கண்ணிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது. இப்போதும் காதல் கொண்ட மனம் இவனுடையது என்பதால் அவளை அப்படி பார்க்க இவனுக்கு தான் வலித்தது. தன்னவளைப் அப்படி பார்க்கத் திறன் இல்லாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் வேந்தன்.

மீண்டும் அவனே, “ஒன்னோட லட்சியத்துக்காண்டி நீ சுயநலமா இருந்தது நியாயம்தேன். ஆனா நான் சுயலமானவன்னு எப்படி டி நீ யோசிச்ச?” சட்டென்று உள்ளே சென்று ஒரு தாளை அவள் முன் கொண்டு வந்து போட்டவன், “ஒன் வெளிநாட்டுக் கனவு நிறைவேத்த அன்னைக்கே அதுக்கான ஏறபாடு எல்லாம் செஞ்சிட்டேன். என்ன… எல்லாம் முடிஞ்ச பொறவு ஒன்ட்ட சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அப்டி நான் இருந்ததும் நல்லதா போச்சு. இல்லனா ஒன் நடிப்பு காதல்னு நெனச்சி இன்னும் ஏமாந்துருப்பேன்” இவன் கொட்டி முடித்து விட

உண்மை தான்… இவளின் ஆசைப் படி வெளிநாட்டில் மேல் படிப்பு தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தான் வேந்தன். அதற்கான தாள்கள் தான் அவள் முன் சிதறி இருந்தது.

அதை ஏறெடுத்தும் பார்க்காதவளாக, “திரும்பத் திரும்ப என் காதலை நடிப்புன்னு சொல்லாத மாமா. அன்று என் ஆழ்மனசுலே இருந்த காதலை நானே உணரல. இது தான் உண்மை.. அதனால தான் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன். தப்பு தான்... எனக்கு மன்னிப்பே இல்லையா மாமா? ஆனா இப்போ மனசு முழுக்க என் மாமா மேலே காதல் இருக்கு”

“ஓஹோ! அப்படியா? திடீர்னு ஒனக்கு வந்த அந்த காதலை நான் எப்படி நம்பறது?” இவன் தன்னவளின் விழிகளை நேருக்கு நேர் நோக்கி கேட்க, விக்கித்துப் போனாள் தென்றல்.

‘காதலை உணரத்தானே முடியும்? நம்பிகை வர நான் என்ன செய்ய?’ அவள் சிந்தனையைத் தடை செய்தது அவனின் குரல்.

“சொல்லு, எப்படி நம்ப? திரும்ப என்னைய விட்டுப் போக மாட்டேனு என்ன உத்தரவாதம்? அன்னைக்கு வெளிநாடு போகணும்னு ஆசப்பட்ட நீ நாளைக்கே வேறொண்னு மேல் ஆசப்பட்டா, அது வேணுங்கிறதுக்காக என்னைய விட்டுப் போக மாட்டன்னு என்ன உத்தரவாதம்?” திரும்பத் திரும்ப இதையே மதிவேந்தன் கேட்பதிலிருந்து இவள் செய்த தவறின் ஆழத்தையும், கணவனின் வலியையும் முதன் முதலாக உணர்ந்தாள் தென்றல்.

“முடியல டி... என் அம்மை நான் அவுக மகன் இல்லன்னு சொன்னப்ப நான் ஒடையல டி, ஐயாரு என்னைய வீட்ட விட்டுத் தொரத்துனப்பவும் நான் நொறுங்கிப் போகல டி, ஆனா நீ என்னைய விட்டுப் போனப்போ செத்துட்டேன் டி. இப்போ நான் வெறும் கூடு. இந்தக் கூட்டையும் அடக்கம் செய்ய நெனைக்காத” இவனின் குரலில் அப்படி ஒரு வலியும் வேதனையும் நிரம்பி இருந்தது.

அவனின் பயம் அவளுக்குப் புரிந்தது. கணவனின் பயத்தை எப்படி போக்குவாள்? நம்பிக்கையை எப்படி கொடுப்பாள்? எல்லாவற்றையும் விட கணவனுக்கு நிகரான தன் காதலை அவனுக்கு எப்படி உணர்த்துவாள்? இதெல்லாம் தெரியாமல் புரியாமல் குழம்பித் தான் போனாள் தென்றல்.

இவள் ஏதோ சொல்ல எத்தனித்த நேரம், “சின்ன ஐயா, வடக்கு பக்க காட்டுல வெளையாண்டுகிட்டிருந்த பிள்ளைங்களில் ரெண்டு பேரை பாம்பு தீண்டிடுச்சு... செத்த வாரீயளா?” வெளிவாசலில் யாரோ குரல் கொடுக்க

அடுத்த நொடியே தாங்கள் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மறந்தவனாக வெளிவாசலுக்கு விரைந்தான் வேந்தன். அதன் பிறகு இருவருக்குள்ளும் இது சம்மந்தமான பேச்சுகள் இல்லாமலே போனது.

ஆனால் தென்றல் மட்டும் ஊண் உறக்கம் இல்லாமல் முன்பிருந்த விளையாட்டுத்தனம் எல்லாம் மறைய, ஒருவித தேடலுடனே திரிந்து கொண்டிருந்தாள். அதனால் அவள் உடல் மெலிய ஆரம்பித்தது, தாமரை கண் பார்வையில் அவள் மெலிவு படவும், “எய்யா வேந்தா, இந்தப் பொண்ணு இங்கன வந்ததை விட இப்போ மெலிஞ்சிட்டே போகுதா. என்ன மேலுக்குனு தெரியல. செத்த ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டு போய் என்ன ஏதுன்னு தான் பார்த்திட்டு வாயா” தான் தூக்கி வளர்த்த அண்ணன் மகள் இல்லையா? அவரால் எப்படியோ போ என்று தென்றலை விட முடியவில்லை.

இவனுக்கும் அந்த எண்ணம் இருந்ததால், ஒரு நாள் உணவு இடைவேளையின் போது மனைவி அலுவலகத்துக்குச் சென்றவன் அவள் மெலிவை சுட்டிக் காட்டி மருத்துவமனைக்கு அழைக்க, அன்று மனைவியிடம் தன் மனதில் உள்ளதைக் கொட்டிய பிறகு இன்று தான் தன்னவளிடம் நேருக்கு நேர் பேசுகிறான் இவன்.

கணவனை நிமிர்ந்து பார்த்தவள் பின் தன் கை வேலையில் பார்வையைப் பதித்த படி, “நீங்க பயப்படற மாதிரி எனக்கு உடம்புக்கு ஒன்றும் இல்ல... வேலை அதிகம் அவ்வளவு தான்”

அவளின் பதிலில் கடுப்பானவன் “ஒடம்பு மெலிஞ்சு போற அளவுக்கு அப்படி என்ன வேலை பார்க்கிற? அப்படி ஒண்ணும் நீ வேலை பார்க்க வேணாம். நேரத்துக்கு சாப்ட்டு, ஒடம்பை பார்த்துகிட்டு வேலை பாரு. இல்லனா தெனமும் நானே வீட்லயிருந்து சாப்பாடு கொண்டு வரவா?”

அவள் வீட்டில் தங்கியிருக்கும் சமையல்கார அம்மாவின் சமையல் மனைவிக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணத்தில் இவன் கேட்க, அவளுக்கும் கணவனைத் தினமும் பார்க்க ஆசை தான். இருந்தாலும் “என்ன மாதிரி உணவா இருந்தாலும், எனக்கு எப்போ சாப்பிட தோணுதோ அப்போ தான் நான் சாப்பிடுவேன்... விடுங்க”

மனைவியின் விட்டேந்தியான பதிலில் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “என்னட்டி சாப்டாம சத்தியாகிரகம் செய்றியா?” ஒரு வித குரலில் இவன் அதட்ட

“நான் ஏன் சத்தியாகிரகம் செய்யணும்? எதுக்கு… என் காதலை நிரூபிக்கவா? அட போ மாமா… அப்படி எல்லாம் இருந்து நான் செத்துப் போய்ட்டா, பிறகு உன் கூட எப்படி ஆயிரம் வருஷம் வாழறதாம்? நான் விவசாயத்தை உயிர் மூச்சா நினைக்கிற மதிவேந்தன் மனைவியாக்கும். அப்படி எல்லாம் உணவை அலட்சியப் படுத்த மாட்டேன்.

நீ தைரியமா வீட்டுக்குப் போ... இனி நான் என்னைப் பார்த்துக்கிறேன். பார்த்து தான் ஆகணும்... என் மாமா கூட வாழணுமே!” கண் சிமிட்டி புறாக் குஞ்சாய் ஒருபக்கம் தலை சாய்த்த படி இவள் மறுபடியும் அழுத்தித் சொல்ல, தன்னவளை தன்னை மீறி ரசித்தவனோ பின் தன்னை நிலைப்படுத்தியபடி அங்கிருந்து விலகிச் சென்றான் மதிவேந்தன்.

மனசு முழுக்க காதல் இருந்தாலும், தன்னவளை நெருங்க முடியாமல் இவன் தவிக்க, இவனுக்கு கொஞ்சமும் குறையாத தவிப்புடன் தென்றலும் இருந்தாள். எதில் ஒற்றுமை இருக்கோ இல்லையோ கணவன் மனைவி இருவரும் காதலின் ஆழத்திலும் தவிப்பதிலும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

இவர்கள் இருவரின் பிரச்சனையே இப்படி இருக்க, நரேன் வேறு ஒரு பிரச்னையைக் கொண்டு வந்து நிறுத்தினான் இவர்கள் முன்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 39
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN