சாதி மல்லிப் பூச்சரமே !!! 41

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 41

மனிதனுக்கு மனிதன் சாதி என்ற கோடால் வைத்து மாறுபடுவது எங்கு எப்போது ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால்… விடை தான் இல்லை. ஆனால் இது கல் தோன்றா மண் தோன்றா காலத்திலிருந்து தொடர்கிறது என்பது மட்டும் நிச்சயமாக இல்லை. ஒரு சில விஷயங்களை ஆராயக் கூடாது என்பார்கள். அப்படி தான் இந்த விஷயத்தையும் ஆராயக் கூடாதோ...

சாதியால் ஒதுக்கப் பட்ட ஒருவன் பட்டணத்தில் மெத்தப் படித்து... பல சாதனைகளைப் படைத்து பேர் புகழோடு அவன் பிறந்த மண்ணுக்கு வந்தால்... அந்த மனிதனின் திறமையைப் பார்த்து போற்றாத சக மனிதர்கள் சாதியை வைத்து ஒதுக்குவது ஏன்? ஹூம்... செல்வ செழிப்பில் பல துறைகளில் முன்னிலையில் இருக்கும் வல்லரசு நாடுகளே நிறத்தை வைத்து இனப் படுகொலை செய்யும் போது... படிக்காத பாமர மக்கள் இவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்? அப்படியென்றால் இதற்கு முடிவு???

தன்னுடைய பதவியை வைத்து தென்றலும் தன்னுடைய புத்தி கூர்மையை வைத்து மதிவேந்தனும் அந்த வெறியர்களுக்கு எதிராக இவர்கள் பல விஷயங்களை செயல்படுத்த... அதில் இன்னும் வெறியானார்கள் அவர்கள்.

இதற்கிடையில் அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறு பெண் குளிக்கும் போது... சில விடல பையன்கள் அவளை வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் அதை அந்த பெண்ணிடம் காட்டி மிரட்ட... அந்த பதினாறு வயது குழந்தை பயத்தில்... மானத்திற்கு அஞ்சி தன்னை எரித்துக் கொள்ள, ஊரில் உள்ள எல்லோருக்குமே வயிறு பற்றி எரிந்தது. ஆனால் இந்த விஷயத்தை ஊரில் வேந்தனுக்கு எதிரானவர்கள் ஒன்றும் இல்லாமல் ஆக்கத் தான் பார்த்தார்கள். ஏனென்றால் இங்கு பாதிக்கப்பட்ட பெண் வேற்றுசாதியைச் சேர்ந்தவள். தென்றல் தன் பதவியை வைத்து மனித உரிமை ஆணையம் வரை செல்ல நினைக்க, அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர்கள் ஒத்து வரவில்லை.

தென்றலுக்கே ஆயாசமாக இருந்தது… இப்படி பயந்து எத்தனை நாள்.. அந்த அயோக்கியர்கள் வாழ விட்டு இருக்க போகிறார்கள்… அந்த பெண் மீதும் தென்றலுக்கு கோபம் வந்தது… ஒரு பெண்ணுடைய உடலில் தான்… மானம் அசிங்கம்.. அவமானம்… கற்பு எல்லாம் இருக்கா… அது வெறும் எலும்பு கூடுகளை போர்த்தும் ஒரு பை அவ்வளவு தான்… அதை ஒருவன் காட்டி மிரட்டினால்.. நீ என்ன வேணா செய்துக்கோ அதை எப்படி நீக்கனும்னு எனக்கு தெரியும்னு இவள் சொல்லி இருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு… இதுலே உழன்றவளுக்கு

“போதும்... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒரு கொடுமைகள் நடக்க அனுமதிக்கப் போறீங்க? தலைவர் என்ற பதவியில் இருப்பவர்களே இப்படி மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு நடந்தா... பிறகு தர்மம் நியாயம் எல்லாம் ஏட்டுல தான் படிக்கணும்” ஐயாரு தலைவராய் இருந்து இதற்கு எதுவும் செய்யவில்லையே என்ற கோபம் தென்றலுக்கு.

“உங்கள உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யச் சொல்லல... உங்கள யாரும் இங்கு ராஜாவா அமர வைத்து அழகு பார்க்க நினைக்கல. எனக்கு வேண்டியது எல்லாம் அப்பாவி மக்களுக்கும் நியாயம் கிடைக்கணும். அதுக்குத்தான் உங்கள ஐயார எதிர்த்துப் பஞ்சாயத்து தேர்தல்ல நிற்கச் சொல்றேன். ஒருவேளை அந்தப் பதவியில் நீ இருந்திருந்தா... அந்த சின்னப் பொண்ணு சாவுக்கு காரணமானவங்கள விட்டு வெச்சிருப்பியா மாமா?” தென்றலின் கண்ணில் நீர் கோர்த்தது. அவள் தன் கணவனிடம் ஆதங்கமாய் கேட்க

“ஏட்டி... இப்போ மட்டும் யார் அவிங்கள விட்டது? பாருட்டி… நான் என்ன செய்யுதேனு...” இவன் உண்மையை சொல்லி அவளை சமாதன படுத்த

“நீ விட மாட்ட… அது எனக்குத் தெரியும். ஆனா நாளைக்கே இன்னொருத்தன் முளைப்பான். அப்போ? எனக்குத் தெரியாது... நீ பதவியில் இருந்து ஒரு கலெக்டரா நான் சொல்ற மாதிரி சிலதைச் செய்... ஒரு மனைவியா முதல் முறையா நான் இதைக் உன் கிட்ட கேட்கிறேன்” மனம் ரணப்பட்டு இருந்ததால் கோபத்தில் கொட்டியவள் மேற்கொண்டு பேச முடியாமல் விலக நினைத்தவள்… பின் நின்று கணவனை ஆழ்ந்து பார்த்து, “நான் தான் உன் மனைவி இல்லையே... அதனால இதைக் கேட்பதும் கேட்காம போறதும் உன் இஷ்டம் மாமா...” என்றவள் இப்போது விலக

எட்டி மனைவியின் கையைப் பிடித்தவன், “யார் சொன்னா.. இந்த ஜென்மத்துல நீ தான் என் பொஞ்சாதி... நமக்கு நடந்த கல்யாணம்தேன் எனக்கு மொதலும் கடைசியுமானது... ஆனா அது ஒன்னைய பாதிக்கலையேங்கறதுதேன் என் கோவம்...” இவன் மனைவியின் விழிகளை ஊடுருவியபடி சொல்ல... ரொம்ப நாள் கழித்து கணவனின் கண்ணில் காதலைப் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ... அடுத்த நொடி தன்னவனின் நெஞ்சில் முகம் முதைத்தபடி இவள் கேவ

ஒன்றும் செய்ய முடியாமல் ஒரு நொடி இன்பமாய் அதிர்ந்தவனோ... மனைவியை அணைத்து அவள் கூந்தலை வருடி கொடுத்தவன், “ஏட்டி, ஒனக்காண்டி தேர்தல்ல நிக்குதேன்… போதுமா? இனி மனசப் போட்டு ஒழப்பிகிட்டு இப்டிலாம் அழக் கூடாது. ஒன் பதவிக்கு ஏத்தாப்ல நீ கம்பீரமா இருக்கணும்… என்ன வெளங்குச்சா?” இவன் செல்லமாய் மிரட்ட, அவளோ கணவன் சம்மததில் சிணுங்கலாய் தலை அசைத்தாள்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக மனைவியிடம் சொன்னபடியே பஞ்சாயத்து தேர்தலில் ஐயாருவை எதிர்த்து நின்றான் மதிவேந்தன். அதில் ஐயாருக்கு அவன் மேல் முன்பை விட கோபம் தான் அதிகமானது. சாடை பேச்சில், ‘வளத்த கெடா நெஞ்சுல பாயுது’ என்று கூட சொல்லிப் பார்த்து விட்டார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை வேந்தன். முன்பு அவருக்காக பார்த்தவன், இன்று ஊர் மக்களுக்காக களத்தில் இறங்கி விட்டான் அவன்.

தேர்தலும் நல்ல மாதிரி முடிய, அதில் வேந்தனே வெற்றி பெற... ஊரே அந்த சந்தோஷத்தைக் கொண்டாடியது என்றால் கந்தமாறன் மகிழ்ச்சியில் தன் மருமகனைத் தன் தோளில் சுமந்த படி வலம் வந்தாருனா பாருங்க... ஆனால் இந்த சந்தோஷம் எல்லாம் எதிரிகளுக்கு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு நெய் வார்த்தது போல் ஆக... “ச்சை! அவனை செயிக்க விடாம செஞ்சும் அவன் செயிச்சிட்டான்... இனி அவன் உசுரோட இருக்கக் கூடாதுலே” என்று திட்டம் போட்டார்கள் அவர்கள்.

இப்படி இவர்கள் போட்ட திட்டத்தையோ, கணவன் ஜெயித்ததையோ அறியாமல் முதல்வர் அழைத்திருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள் பூந்தென்றல். நடக்க போகும் விபரீதம் தெரியாமல்… மாலை மங்கும் நேரம்… ஓரிடத்தில் மாற்றுப் பாதையில் செல்லச் சொல்லிப் பலகை இருக்கவும், அதைப் பார்த்தவள் அவளுக்குப் பாதுகாப்புக்காக பின்னால் வண்டியில் வரும் காவலர்களை அழைத்து, “இன்னும் அரைமணி நேரத்துல நான் வீட்டுக்குப் போய்டுவேன்... சோ, நீங்க எதற்கு... நாளைக்கு ஆபிஸ்க்கு வந்துடுங்க பார்த்துக்கலாம்...” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவள் பின் இவள் மட்டும் டிரைவருடன் மாற்றுப் பாதை வழியில் செல்ல... ஓரிடத்தில் டயர் வெடித்து வண்டியும் நின்று போனது.

டிரைவரும் இவளும் இறங்கி என்ன எது என்று பார்க்க… “டம்...” என்ற சத்தம் கேட்ட அடுத்த நொடி... “அம்மா!” என்ற அலறலுடன் டிரைவர் மயங்கி விழ, அப்போது தான் அங்கு சூழ்ந்திருந்த ஆட்களையும் தனக்கு நடக்கவிருக்கும் விபரீதத்தையும் உணர்ந்தாள் தென்றல்.

“எம்புட்டு ஏத்தம் டி ஒனக்கும் ஒன் புருசனுக்கும்... இந்த ஊர திருத்த வந்துருக்கீயளோ... ஒங்கள எல்லாம் தடம் இல்லாம அழிச்சிருவோம்.. சாக்கிரதை” என்று ஒருவன் மிரட்டிய படி தென்றலை நெருங்க

“என்னலே வசனம் பேசிட்டு நிக்க.. அங்கிட்டு பஞ்சாயத்து தலைவனைப் போட்டிருப்பாய்ங்க... இங்கிட்டு இந்த கலைக்டர நீ போட்டுத் தள்ளுலே” என்று ஒருவன் சொல்ல

“கலெக்டரு, நீ பயப்படாத… ஒன்னைய பொசுக்குனு துப்பாக்கியால எல்லாம் போட்டுத் தள்ள மாட்டோம்… ஒன் சாவப் பாத்து ம்த்தவிங்களுக்கும் பயம் வரணும்… அந்தளவுக்கு ஒன் சாவு இருக்கும். நீ ஓடு.. எம்புட்டு தூரம் ஓடுதியோ ஓடு… ” என்று மற்றொருவன் சொல்ல

சுற்றி நின்றிருந்த அந்த ஆட்களைப் பார்த்தவள், இப்போது தான் எது செய்தாலும் ஆபத்து என்று புரிந்து கொண்டு இவள் ஓட்டமாய் ஒரு திசையில் ஓட, இவர்களும், “விட்ராதலே அவள…” என்ற குரலுடன் துரத்த, அந்த இடம் கல்லும் முள்ளுமாய் காடாய் இருந்ததால் தென்றலுக்கு ஓட சிரமமாகத் தான் இருந்தது.

அப்படியும் இவள் ஓட, ஓரிடத்தில் கால் செருப்பு தடிக்கி இவள் விழப் போக, அதைச் சமாளித்தவள்... பின் செருப்பைத் தூக்கிப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தாள் அவள். இறங்கும் போது கையில் கைப்பேசியுடன் இறங்கியதால் அவள் கையில் கைப்பேசி இருந்தது… அதுவும் ஐந்து சதவீத சார்ஜ் உடன். ஆனால் அந்தக் காட்டில் டவர் தான் இல்லை.

இவள் இன்று வருவதை கணவனிடம் சொல்லவில்லை. திடீர் என்று அவன் முன் சென்று நிற்க வேண்டும் என்று நினைத்து வந்தவளைத் தான் விதி இப்படி துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு நிலைக்கு மேல் இவளாலும் ஓட முடியவில்லை... துரத்தி வந்தவர்களும் விட்ட பாடில்லை.

பின் கொஞ்சம் தள்ளி வந்ததும் பெரிய பெரிய பாறைகள் தெரிய... அதனிடம் ஒன்றி மறைந்து நின்றால் வெளியில் யாருக்கும் தான் இருப்பது தெரியாது என்பதை யோசித்தவள், மூச்சைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்று ஒளிந்தவள்... துரத்தியவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகும் வரை இவள் வெளியே வரவில்லை.

கைப்பேசியை எடுத்துப் பார்த்தவள், எங்கோ ஒரு புள்ளியாய் டவர் இருப்பதைக் காட்டவும்... உடனே நம்பிக்கையுடன் இவள் கணவனுக்கு அழைக்க, அழைப்பு தான் போகவில்லை. பின் வெளியில் வந்தவர்களின் அரவம் சற்று தூரே சென்று அடங்குவதை அறிந்து கொண்டவள்... அங்கிருந்த படியே கணவனுக்கு mms அனுப்பினாள் அவள்.

“மாமா... நான் உன்னைத் திரும்ப பார்ப்பேனானு தெரியல. அப்படி உன்னைப் பார்க்க முடியாம எனக்கு எதாவது நடந்துட்டா... நான் உனக்கு செய்த துரோகத்துக்கு என்ன மன்னிச்சிடு மாமா. இன்னொன்னு... i love u மதிமாமா. இது மரண தருவாயில நான் கொடுக்கற வாக்குமூலமா நினைச்சிக்கோ... ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சாகத் தான் போறேன். அவனுங்க உன்னையும் கொல்லத் தான் ஆள் வச்சிருக்கானுங்க. ஆனா உனக்கு ஒன்னும் ஆகாது... அது எனக்குத் தெரியும்.

நீ நல்லா இருந்து இதோ இப்போ நான் அனுப்பற மரண வாக்குமூலத்தைக் கேட்கத் தான் போற... எனக்கு சாக பயம் இல்லா மாமா. மனசு முழுக்க உன் மேல காதல சுமந்துட்டு... கூடவே உனக்கு செய்த துரோகத்த நினைச்சி துடிச்சிட்டு... தினம் தினம் என் காதல நிரூபிக்க முடியாம நான் செத்துப் செத்துப் பிழைக்கறேன். அதுக்கு எனக்கு இந்த மரணம் வேணும் தான்.

கடைசியா ஒண்ணு மாமா... பதினைந்து வருஷமா என் மாமா என் மேல வைத்த காதலுக்கு நிகரா நானும் என் மாமா மேல காதல் வச்சிருக்கேன் என்ற கர்வத்தோட தான் மாமா நான் சாகப் போறேன்… எனக்கு அது போதும். i love u மதிமாமா...” என்று அழுகையுடன் தன் காதலைச் சொன்னவள் அந்தப் பதிவைக் கணவன் எண்ணுக்கு அனுப்ப, அதுவோ டவர் இல்லாததால் சண்டித் தனம் செய்தது.

“ப்ச்சு....” கண்ணீரைத் துடைத்தபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், பின் சிறிது அரவம் எல்லாம் அடங்கின பிறகு, வெளியே வந்து எங்கு செல்வது என்று தெரியாமல், கால் போன போக்கில் மறுபடியும் ஓட ஆரம்பித்தாள் தென்றல். அதற்குள் அவள் கையிலிருந்த போன் அவளுக்குப் பதில் அது உயிரை விட்டிருந்தது.

இரவு எட்டரை மணி மதிவேந்தன் வீடு...

வேந்தன் தன் புல்லட்டை வீட்டிற்குள் விட, மகனுக்காகவே காத்திருந்தார் போல், “வேந்தா, சித்தி அங்கைக்கு ஏதோ மேலுக்கு முடியலையாம்... நாங்க ரெண்டு பேரும் மாறன் அண்ணனோட அங்க போறோம்... திடீர்னு சாமத்துல அவளுக்கு முடியாம போச்சினா... வீட்ல உள்ள ஆம்பிளைங்களோட அவள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு நாங்க பொம்பிள பிள்ளைங்களுக்குத் தொணையா இருப்போம். அதேன் நாங்க ஒன்ட்ட சொல்லிட்டு கெளம்ப இருந்தோம். ஒன் போன்ல சார்ஜ் இல்லையோ? முதல்ல அதப் பார்... எத்தன வாட்டி ஒனக்குப் போன் பண்ண... சரி வீட்டப் பூட்டிக்கிடு, நாங்க கெளம்பறோம்...” என்ற தாமரை மகனின் பதிலை எதிர்பார்க்காமல் சின்னத்தாயை அழைத்துக் கொண்டு காரில் ஏறி கிளம்பியே விட்டார்.

அங்கையின் மகன், மருமகள்கள், மற்றும் சாமந்தியின் பாட்டி என்று எல்லோரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி அவர்கள் வீடு. மகன்கள் இரண்டு பேரும் தங்கள் பட்டணத்து வேலையை விட்டு விட்டு மனைவியின் ஆசைக்காக முழு நேர விவசாயத்தில் இறங்கி விட்டார்கள். கலையரசன் வீம்புக்கு என்று மனைவி பிள்ளைகளுடன் சேராமல் தனியே சமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வேந்தனுக்கு இன்று முழுக்க மனசே சரியில்லை. நேற்று தான் பஞ்சாயத்து தேர்தலில் அவன் ஜெயித்தான். அந்த சந்தோஷம் கூட அவனிடம் முழுமையாக இல்லை. முதல் காரணம்... அதைப் பகிர்ந்து கொள்ள மனைவி பக்கத்தில் இல்லை. இரண்டாவது… இன்று அவனுக்கு சில ஆபத்துகள் வர... அதை மீண்டு வந்தவனுக்கு, மனைவிக்கும் இப்படி ஏதாவது இருக்குமோ... பின் ஏன் அவள் போனை எடுக்கவில்லை என்ற யோசனையில் இருந்தவனுக்கு, தாய் சொன்னதோ... ஏன், வீடு வந்து சேரும்வரை அவனுக்கு சுற்றுப்புறம் கூட நினைவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“இல்ல… அவளுக்கு அப்டி எதுவும் வராது. என் காதல் அவளை மீட்டுக் கொண்டு வரும்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன். உண்மையிலேயே இவன் காதல் அங்கு அவன் மனைவியைக் காப்பாற்றியதா?
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 41
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN