சாதி மல்லிப் பூச்சரமே !!! 43

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 43

வேந்தன் மனதில் வைத்த வன்மப் படியே தன் மனைவிக்கு மரண பயத்தைக் காட்டியவர்களைத் தன் பாணியில் உண்டு இல்லை என்று தான் ஆக்கினான். அந்த அடி பட்ட டிரைவருக்கும் உயிருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தாலும்.. இவன் ஐயாருவிடமும் மனைவிக்கு நடந்த விஷயத்தைச் சொல்லி எச்சரிக்க... அவரோ முதல் முறையாக பதறித் தான் போனார்.

வேந்தனைத் தன் சாதி சனத்துடன் சேர்க்க மாட்டேன் என்று தான் அவர் பிடிவாதமாக இருந்தாரே தவிர வேந்தனையோ அல்லது தென்றலையோ அவர் கொல்ல வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை. முன்பு சாதிக்காக தன் மகளையே கொலை செய்தவர் தான்... ஆனால் எப்போது அவர் மனைவி அதில் பித்துக்கொள்ளியாய் மாறினாரோ அப்போதிருந்தே இந்த உயிர் எடுக்கும் பாவத்தை அவர் விட்டுவிட்டார்.

வேந்தன் எப்படி உங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நான் தான் நிற்பேன் என்று சொன்னானோ... அதே துடிப்புடன் இன்று அவரும் அது எப்படி என் வீட்டுப் பிள்ளைகள் மேல் அவனுங்க கை வைக்கலாம் என்று தான் அவருக்குத் தோன்றியது. ஆனால் வழக்கம் போல தன் குடும்பத்தார் எல்லோரிடமும் ஒதுங்கியே தான் இருந்தார் அவர்.

அதன் பின் தென்றல் தனக்கு அரசாங்கம் கொடுத்த வீட்டைக் காலி செய்து விட்டு பண்ணை வீட்டில் கணவனுடனே வந்து தங்கி விட்டாள் அவள். எல்லோரும் அவளிடம் பேசினாலும் அவள் தந்தை மட்டும் அவளிடம் பேசவில்லை. இவளும் அவரிடம் பேச முயற்சிக்கவில்லை. தந்தை மகள் இருவருக்குள்ளும் பனிப்போராக ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருந்தது.

நாட்கள் இப்படியே செல்ல... தனி மரமாய் இருந்த கலையரசனால் வீம்புக்கு என்று கடைசி காலத்தில் உடைந்த காலை வைத்து தனியாய் வாழ சிரமப் பட்டவர், தன் வீம்பை விட்டு மனைவி பிள்ளைகளுடன் வந்து விட்டார். ஆனால் வந்து விட்டாரே தவிர யாரிடமும் ஒட்டுதல் தான் இல்லை. அவருக்கு வேண்டியது நேரத்திற்கு சாப்பாடு, நோய் என்று படுத்தால் பார்த்துக் கொள்ள ஆட்கள். இது போதும் என்று நினைத்தார். இன்று இதை மட்டும் யோசிக்கும் கலையரசன் அன்று தனக்கு கவுரவம், தன் பேச்சுக்கு முதல் மரியாதை, அப்படி இப்படி என்று யோசித்து திரிந்தவரைத் தான் இன்று தனிமை இப்படி உட்கார வைத்திருக்கிறது.

இதற்கிடையில் குறித்த நாளில் கோவில் திருவிழா வர... மொத்த ஊருமே அங்கு களை கட்டியது. இருக்காத பின்ன? கும்பாபிஷேகத்துடன் கூடிய திருவிழாவாச்சே இந்த வருடம்... மாமியாரும் மருமகளும் ராசியாகி விட, இரண்டு அம்மைகளும் போட்டி போட்டு மனைவிக்கு செய்யும் அலங்காரத்தில் வேந்தனுக்குத் தான் திண்டாட்டம் ஆகிப் போனது. மகள் வாழும் வாழ்வைப் பார்த்து மலர் மற்றும் சுந்தரத்துக்கு கூட அளவு கடந்த சந்தோசம் தான். இன்னும் இரண்டு வருடத்தில் மொத்தமாக மகளுடனே வந்து விடுவது என்று முடிவு செய்து இருந்தார்கள் அவர்கள்.

திருவிழாவில் தென்றல் வைத்த பொங்கல் பொங்க... மறுபுறம் அழகி வைத்த பொங்கல் பொங்க... இன்னொரு புறம் சாமந்தியும் மரிகொழுந்தும் வைத்த பொங்கலும் ஒரே நேரத்தில் பொங்கியது. நிலவழகியோடும் தர்மாவோடும் அவள் தந்தை மூர்த்தி மற்றும் தம்பி கிரி மட்டும் தான் அவளிடம் பேசுகிறார்கள். செண்பகவல்லி மகளிடம் பேசுவது இல்லை. நீ என்ன பேசாமல் போவது... எனக்கும் ரோஷம் இருக்கு என்ற நிலையில் அழகியோ தாயைத் திரும்பியும் பார்ப்பது இல்லை.

ஊர் தலைவன் என்ற முறையிலும் கலெக்டர் ஆர்டர் என்ற முறையிலும்... மதிவேந்தன் தான் கோவில் விஷயத்தில் சகல மரியாதையும் ஏற்றான். சில பெருசுகளிடம் சலசலப்பு இருந்தாலும் பெரிதாய் அவன் கண்டு கொள்ளவேயில்லை.

பூரண கும்பம் முடியும் தருவாயில் இவன் காதலோடு மனைவியைப் பார்த்து “நீ சாதிச்சிட்டடி!” என்று உதட்டசைவால் சொல்ல.... அவளோ அவனுக்கு நிகரான காதலுடன், “சாதிச்சது நான் இல்ல… நம்ம காதல்” என்று அவனைப் போலவே உதட்டசைவில் சொன்னாள் இவள்.

ஜல்லிக்கட்டு ஆரம்பிக்க, வேந்தன் தலைவர் என்ற ஜபர்தசில் மேடையில் அமர்ந்திருக்க... அவன் மாமன்கள் மூர்த்தியும், மாறனும் அவனுக்கு இரண்டு பக்கமும் நிற்க... அதைப் பார்த்த தாமரைக்கு மனநிறைவுடன் கண்கள் கலங்கியது. அதை மேடையிலிருந்து பார்த்துவிட்ட வேந்தன், கண்ணாலேயே மனைவிக்குத் தன் தாயை சுட்டிக் காட்ட... அதைப் புரிந்து கொண்டவள் விழியாலேயே தன்னவனுக்கு சமாதானத்தை சொல்லி விட்டு தாமரையிடம் வந்தவள்,

“அத்தை, நல்லது நடக்கும்போது ஏன் கண்ணு கலங்குறீங்க... பாருங்க... உங்க புள்ள உங்க கண்ணுல தண்ணீய பார்த்தவுடனே அங்க அவர் முகம் சோர்ந்து போறார்” என்ற படி தாமரையை அணைத்தவள், “ஏற்கனவே உங்க புள்ளைய பார்க்க சகிக்காது. இப்போ வேற சோகமா இருக்கிறாங்க… பார்க்க முடியல... அதனால தான் சொல்றேன்” என்று தென்றல் கேலி செய்ய

அதில் ரோஷம் வந்தவராக, “என் மவனுக்கு என்னட்டி? அவன் ராசா கணக்கா இருக்கான்...” என்று தாமரை விட்டுக் கொடுக்காமல் சொல்ல

“அத்தை, ராசா கணக்கானு தான் சொன்னீங்க... ராசான்னு நீங்க சொல்லல பார்த்தீங்களா...” இவள் அவரை மடக்க

“போடி போக்கிரி” என்று மருமகளை அணைத்துக் கொண்டார் தாமரை. அப்போது அங்கு வந்த சின்னதாய்க்கு என்ன புரிந்ததோ... இவரும் மறுபுறம் நின்று மருமகளை அணைத்துக் கொள்ள, அந்தக் காட்சியை மேடையிலிருந்து பார்த்த வேந்தனுக்குத் தன் வாழ்வில் தனக்கு கிடைத்த சொர்க்கங்கள் இவர்கள் மூன்று பேரும் என்று புரிந்தது அவனுக்கு.

ஜல்லிக்கட்டில் நவீனும் நரேனும் தான் ஜெயித்தார்கள். பாட்டிக்கு வயது தள்ளாமை மற்றும் மனக் கஷ்டத்தின் காரணமாக அதிகம் உடலில் பாதிப்புகள் வந்தது போனது. அப்போதும் பிடிவாதமாகத் தன் பேரப் பிள்ளைகளின் குடும்பத்தினருடன் திருவிழாவில் கலந்து கொண்டார் அவர். ஆனால் ஐயாரு மட்டும் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய வளர்ப்பு மகனே என்றாலும் வேந்தனிடம் தேர்தலில் தோற்றதும், அவனுக்கு ஊர் மக்களால் கிடைக்கும் மரியாதையைப் பார்க்கும் அளவுக்கு அவர் மனதில் இன்னும் முதிர்ச்சி வரவில்லை.

பூஜைகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் தென்றல், “உங்க மருமவ புள்ளைய இந்த ஊரே பார்க்க... அவரு கவுரவத்தைக் கெடுத்துட்டுப் போனேன்னு தானப்பா நீங்க என் கிட்ட பேசாம இருந்தீங்க... இப்போ உங்க மருமவ புள்ள கவுரவமான இந்த ஊர் தலைவர். இப்போ கூட என் கிட்ட பேச மாட்டீங்களாப்பா... அப்போ கடைசிவரை உங்களுக்கு நீங்க பெத்த பொண்ணு வேண்டாம் இல்ல” தென்றல் பட்டென்று எல்லோர் முன்னிலையிலும் தன் தந்தையிடம் கேட்க

“ஆத்தா!” என்று கந்தமாறன் அதிர்ந்தார் என்றால் வேந்தனோ

“பாப்பு...” என்று அதட்டினான். மற்றவர் யாரும் அங்கு வாயே திறக்கவில்லை.

கணவனுக்கு மட்டும், “இது அப்பாவுக்கும் பொண்ணுக்கும் உள்ள பேச்சு நீ வராத மாமா” என்றவள், “சொல்லுங்க ப்பா... அப்போ என்னை விட உங்க மருமவ புள்ள தான் உங்களுக்கு முக்கியமா?” இவள் விடாமல் கேட்க.. எத்தனை வருட மன வேதனை அவளுடையது.

இரண்டே எட்டில் மகளை அணுகியவர், “தாயி, என்னமா பேச்சு இது... ஒரு அப்பனுக்கு தன் மகளைப் புடிக்காம போகுமா… இல்ல முக்கியம்தேன் இல்லாம போகுமா... அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் கோபத்தில் வந்த வார்த்தமா அது... அதைப் போய் பெருசா எடுத்துகிட்டு இன்னும் நீ அப்பாட்ட பேசாம இருக்கீயா தாயி...” அவர் தொண்டை அடைக்க கேட்கவும் தந்தையின் தோளில் சாய்ந்தவள்

“ஒரு பொண்ணுக்குத் தன் அப்பா தான் ப்பா முதல் ஹீரோ. ஆனா நீங்க மட்டும் ஏன் எனக்கு ஹீரோவா இல்லாம போனீங்க? இப்பவும் சொல்றேன்... எனக்கு பிள்ளைங்களே பிறந்தாலும் உங்களுக்கு நான் தான் ப்பா முக்கியம்” இவள் சற்றே கேவலோடு சொல்ல, மகளைத் தன்னுடைய ஒதுக்கம் எவ்வளவு தூரம் வாட்டி இருக்கிறது என்பதைப் புரிந்தவரோ,

“அது… வேந்தனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததிலேயும் ஒரு சுயநலம் இருக்கு மா...” என்று இவர் பதில் அளிக்க, இது என்ன புது கதை என்பது போல் இவள் தலை நிமிர்ந்து தந்தையைப் பார்க்க, “என் மருமவ புள்ளைய நான் தாஜா பண்ணி வெச்சிகிட்டா தேன என் மவள அவன் நல்லா பார்த்துக்கிடுவான்” இவர் உலக உண்மையைச் போட்டு உடைக்க,

“அட! ஆமா இல்ல?” என்ற படி தந்தை சொன்னதை ஒத்துக் கொண்டவள் பின் மறுபடியும் அவர் தோள் சாய்ந்து கொள்ள, இவரோ வேந்தனைப் பார்த்தவர், கண்ணைக் சிமிட்டி ‘சும்மா டா’ என்று சமிக்கை செய்ய, அவனோ சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டான்.

எப்படியோ அப்பாவும் மகளும் பேசினார்களே என்று இருந்தது வீட்டு ஆட்களுக்கு. இரவு தங்கள் அறைக்கு தென்றல் வர, பலத்த யோசனையில் இருந்தான் வேந்தன். இவள், “க்கும்...” என்று கனைத்து, தன் வருகையை தெரிவிக்க... அவனோ முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,

“அப்போ, ஒன்னைய நான் நல்லா பார்த்துக்கிடணும்னு தேன் என் மாமா என் மேலே பாசமா இருந்தாப்ல நடிச்சிருக்காக... இது தெரியாம அவர் பாசத்தை நெசம்னு இம்புட்டு நாள் நான் நம்பிட்டனே...” இவன் வருத்தமாய் சொல்ல

அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “இந்த முகர என்ன வேலை செய்யும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதனால சும்மா இப்படி மூஞ்சை வைத்துகிட்டா நான் நம்பிடுவனு நினைக்காதே”

தன்னவளின் பதிலில் இவன் ‘ஞே’ என்று அவளைப் பார்க்க, “விவாகரத்து அப்ளை செய்யாமலே பொய்யா பத்திரத்தை என் முன்னாடி நீட்டின ஆளு நீங்க... நரேனை விட்டு பொய்யா ஏதோ அத்தை கல்யாணத்துக்கு அவசரப்படுத்துற மாதிரி சொல்ல வெச்சிங்க... அப்புறம் என் மேலே இருந்த காதல் செத்துப் போய்ட்டதா சொல்லிட்டு... நாம விளையாடின பொம்மையை வெச்சிகிட்டு இன்று வரை கொஞ்சின ஆளு நீங்க. இப்போ, என் அப்பா கிட்டவே எனக்காகத் தான் உங்க மேல் பாசம் வெச்சதா சொல்லச் சொல்லிட்டு... இதுல வேற சமாதானத்துக்கு அவர் கண்ணு சிமிட்டுவாரம்... இவரு ஒன்னும் தெரியாத மாதிரி சிரிப்பாராம்... போங்கயா… இந்த போங்கு ஆட்டத்துக்கு ஒண்ணும் நான் வரல” இவள் உண்மையாகவே முறுக்கிக் கொள்ள

தன்னுடைய குட்டு வெளியானதில் சற்றே அசடு வழிந்தவன், “கோவமா பாப்பு?” என்று கேட்ட படி இவன் மனைவியை அணைத்துக் கொள்ள,

“பின்னே?” என்றவள் அவன் அணைப்பில் அடங்கித் தான் போனாள்.

தனக்காக மனைவி பார்த்துப் பார்த்துச் செய்யும் போது... அவள் ஏங்கும் அவள் தந்தையின் பாசம் அவளுக்கு மட்டும் தான் என்பதைக் காட்டத் தான் வேந்தன் தன் மாமனை அப்படி சொல்லச் சொன்னான். ஆனால் அதைத் தன் மனைவி கண்டு பிடித்ததும் இல்லாமல் இப்படி அவன் காலை வாரவும், “அவருக்கு ஒன் மேல பாசம் தேன் பாப்பு” என்று இவன் எடுத்துச் சொல்ல

கணவன் அணைப்பில் இருந்தபடியே, “அது இல்லன்னு யாரு சொன்னா... ஆனாலும் உங்க இரண்டு பேரையும் பார்த்தா எனக்கு பொறாமையா தான் இருக்கு” என்று இவள் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல

அது தாய்மாமன் என்ற உறவா... அல்லது பிறந்ததிலிருந்து தகப்பன் இல்லாமல் அவர் கையில் வளர்ந்ததா... என்னவென்று பிரித்து அறிய முடியாத ஒரு பாசம் மாமனுக்கும் மருமகனுக்கும் இருப்பது உண்மை தான் என்னும் போது அதை மறுக்கவோ இல்லை என்ன என்றே தெரியாத ஒன்றை விளக்கவோ அவனால் எப்படி முடியும்? அதனால் அவன் பேசாமல் இருக்க, புரிந்தது என்பது போல் தன் அணைப்பை இறுக்கினாள் தென்றல்.

ஊர் திருவிழா என்று மட்டும் இல்லாமல் அந்த ஊரில் எது நடந்தாலும் முதல் மரியாதை வேந்தனுக்கு என்றும் அவனைக் கேட்காமல் எதுவும் ஊரில் நடக்காது என்று மாறிப் போனார்கள் அந்த ஊர் மக்கள்.

நாட்கள் செல்ல... ஒரு நாள் காலை நேரத்தில் மயங்கி விழுந்தாள் தென்றல். என்னமோ ஏதோ என்று எல்லோரும் பதறிப் போய் மருத்துவச்சியை வைத்துப் பார்க்க.. அவள் கருவுற்று இருப்பது தெரிய வந்தது. பின் வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்? ஆனால் இந்த விஷயத்தைக் கேட்ட உடன் தென்றல் மட்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 43
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN