சாதி மல்லிப் பூச்சரமே !!! 44

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 44

அன்று கருக்கலிலேயே எழுந்து கழனி காடு சென்றிருந்த வேந்தனுக்கு மனைவியின் விஷயம் தெரியப்படுத்தப் பட... அடுத்த நொடி வீட்டில் இருந்தான் அவன். வேந்தன் வீட்டில் நுழைந்த நேரம் தென்றலைச் சுற்றி சொந்த பந்தங்கள் எல்லோரும் சூழ்ந்திருக்க... கணவன் மனைவிக்குத் தனிமை கொடுத்து விலகிச் சென்றார்கள் அவர்கள். மனைவி கட்டில் திட்டில் தலை சாய்ந்த படி அமர்ந்இருக்க... அவள் முகத்தையே இவன் காதலோடு இமை கொட்டாமல் பார்க்க.. முதலில் அவன் பார்வையின் வீழ்ச்சைத் தாங்கியவளோ பின் முகம் சிவக்க, “என்ன மாமா அப்படி பார்க்கிற?” என்று சிணுங்கிய படி இவள் தலை கவிழ...

விரைந்து வந்து கட்டிலில் அவள் எதிரில் அமர்ந்தவனோ தன்னவளின் முகத்தை இரு கைகளில் தாங்கித் தன் முகம் பார்க்க வைத்து, “நெசமா... இந்த நிமிசம் இதை என்னால் நம்ப முடியலடி... ஆயிரம் ஒறவுங்க என்னையச் சூழ்ந்து இருந்தாலும்... இப்படி ஒண்ணு அதும் ஒன் வயித்துல நம்ம பிள்ளைங்க...” அவனால் மேற்கொண்டு சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது.

பெண்ணவளுக்கும் புரிந்தது... எந்த அளவுக்கு முன்பு தான் தன்னவனுக்கு வலி வேதனையைக் கொடுத்திருந்தால்... இன்று தன்னவன் நிஜத்தை நம்ப முடியாமல் போவார் என்று... அந்த எண்ணமே அவளுக்குள் வேதனையைத் தர…. அவள் முகம் அதை பிரதிபலிக்க.. தன்னவளின் முகம் கசங்கவும், தன் தவறைப் புரிந்து கொண்டவன் அவள் முகமெங்கும் காதலோடு முத்தமிட்டவன் பின் தன் தோளில் சாய்த்துக் கொண்டு, “நமக்கு பிள்ளைங்க வரப் போறாங்க… இந்த நல்ல விஷயத்தைக் கொண்டாட… நாம் இன்னிக்கு ராவுலே பம்ப் செட் தளத்துக்குப் போவோமா பாப்பு?” என்று இவன் அவள் மனதை மாற்ற காதலோடும், சரசத்தோடும் தன்னவளிடம கேட்க

கணவனின் நோக்கம் புரிந்தவளோ, “அங்க போனா மட்டும் பெருசா என்னத்தை நீங்க கொண்டாடிடுவீங்க பாருங்க. என்ன… வாழை மரம் எந்த நாளில் குலை தள்ளும்... பருத்திக்கு எப்போ பூச்சி மருந்து அடிக்கணும்... அத்தி மரம் எப்போது பூ பூத்துக் காய் காய்க்கும்... இதானே சொல்லப் போறீங்க...” ஒரு நாள் அங்கு தன்னவளை அழைத்துப் போய் தங்களுக்கான தனிமையைக் காதலோடு கழிக்காமல் இதைத் தான் மனையாளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் வேந்தன். அதையே இப்போது மனைவி சொல்லிக் காட்டவும்,

வாய்விட்டுச் சிரித்தவனோ, “அந்தப் பாடம் மட்டுமாடி எடுத்தேன்... அப்டி தெரியலையே...” தீவிரமாகக் கேட்வன், “அந்தப் பாடம் மட்டும் எடுத்திருந்தா... இங்கன நம்ம பாப்பா எப்டி டி வந்துருக்கும்?” இவன் சிரியாமல் கேலியோடு தன்னவளின் வயிற்றில் விரல்களால் கோலமிட்ட படி கேட்க, தென்றல் தான் திணறிப் போனாள்.

ஒரு உறவு வீட்டில் இருந்தாலே… பிள்ளைத்தாச்சியை அப்படி தாங்குவார்கள். இங்கு நிறைய உறவுகள் இருக்க, அனைத்து சொந்தங்களும் அவளைத் தாங்கினாலும் தென்றலின் முகமோ தனிமையில் புருவம் சுழித்து யோசனையிலேயே கழிந்தது. மறந்தும் மற்றவர் இடத்தில் தன் யோசனை முகத்தைக் காட்டவில்லை அவள். மூன்றாம் மாதம் நடந்த ஸ்கேனில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் என்றார் டாக்டர். அதைக் கேட்டு முன்பை விட சந்தோசம் வீட்டில் குடி கொண்டது.

ஆனால் தென்றலின் முகமோ முன்பை விட யோசனையைத் தத்து எடுத்தது. அவளின் யோசனைகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவள் நினைத்த விஷயத்தை செயல்படுத்த தீவிரமானது. ஆனால் தன் தீவிரத்தைக் கணவனுக்குத் தெரியாமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள் அவள்.

மாதங்கள் உருண்டோட… அவளுக்கு வளைகாப்பும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியோர்களால் நடத்த நிச்சயக்கப் பட்டது. தென்றலுக்குத் தாய் வீடு, புகுந்த வீடு இரண்டும் ஒரே வீடு என்பதால் கோவிலில் விசேஷத்தை வைத்து விட்டு வீட்டிற்கு அவளை அழைத்து வந்தார்கள். கோவிலில் சடங்கு என்பதால் வேந்தன் சென்று ஐயாருவை முறையாய் அழைக்க, பார்க்கலாம் என்று அன்று சொன்னவர் பின் என்ன நினைத்தாரோ... மூன்றாவது மனிதர் போல் விழா சபையில் வந்து அமர்ந்தார் அவர்.

எல்லா சடங்குகளும் இனிதே முடிய, தென்றல் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க குனியவும், அவளைத் தாங்கிப் பிடித்தவர் “வயித்துப் புள்ளத்தாச்சி… அதுவுங்கூடி ரெண்டு உசுர சுமந்துட்டு நிக்கறவ... இப்படி சட்டு சட்டுன்னு யார் கால்லையும் விழாதே” என்றவர், “மவராசியா நல்ல மாதிரி கொழந்தைங்களைப் பெத்து எடு தாயி” என்று அவர் வாழ்த்த… கல்லுக்குள்ளேயும் ஈரமா என்று எல்லோரும் அதிசயித்துப் போனார்கள்.

என்ன தான் அவர் மனதிற்குள் ஆயிரம் கோபமும், பிடிவாதமும் அவரிடம் இருந்தாலும் அவர் தூக்கி வளர்த்த இரண்டு பிள்ளைகளின் வாரிசு என்பதாலே… இங்கு இவரை வர வைத்து இப்படி சொல்ல வைத்தது. அவர் என்ன மதிவேந்தனுக்கு எதிரியா என்ன… ஒரு நாள் அவர் மனதில் உள்ள பாசமே அவர் பிடிவாதத்தை வெல்லப் போகிறது என்பதை அறியவில்லை அவர்.

இங்கு விழாவிற்கு அவர் வர இன்னோர் காரணமும் இருந்தது. அது பாட்டி ராஜாத்தி… எப்போது தென்றல் சுமப்பது இரண்டு குழந்தைகள் என்று தெரிய வந்ததோ... அப்போதிலிருந்தே ராஜாத்தி பாட்டி தினமும் தன் போக்கில் மகனுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

“என் பேத்தி சொமக்கறது ரெட்டைப் புள்ளைங்கலாம். நம்ம வம்முசத்துல இது ஒன்னும் புதுசு கிடையாது. இருந்தும் மவராசி… நல்லா மாதிரி குழந்தைகளைப் பெத்தெடுக்கணும்” என்று ஒரு நாள் ஆரம்பித்தவர்,

இன்னோர் நாள் வெளியே சென்றுவிட்டு வந்து, “என்னத்த சொல்ல... கோடாங்கி ஜோசியக்காரன் சொன்னா... அது அம்புட்டும் சரியாதேன் இருக்கும். நானும் காலங்காலமா அவன்ட்ட கேட்டுகிட்டு தானே கெடக்கேன்...” இவர் பீடியையுடன் ஆரம்பிக்க, ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஐயாருவோ தாய் பேச்சைக் காதில் வாங்கியும் வாங்காத மாதிரி இருக்க... மகனை ஒரு உஷ்ணப் பார்வை பார்த்தவர், “ம்ஹும்... இந்த தள்ளாத வயசுல திரும்ப என் பேரப் புள்ளைங்களை நான் தூக்கணும்னு விதி இருக்கு போல.... செத்துப் போன என் சாமிங்க திரும்ப பொறக்கப் போறாங்களாம். என்னத்த சொல்ல… ஆத்தா மகமாயி, நல்ல மாதிரி அந்த புள்ளைங்களை.. என் கையில குடுத்துடு தாயி” இவர் மகமாயிடம் வேண்டுதலை வைத்த படி இப்போதும் மகனைப் பார்க்க, அவரோ தாயைக் கண்டு கொள்ளவே இல்லை.

“தான் புடிச்ச மொசலுக்கு மூணு காலுன்னு ஒக்காந்து நிக்கான் பாரு நான் பெத்த மவன்” என்று வாய்க்குள் புலம்பியவர், “எலே சிவகுரு... நான் இம்புட்டு சொல்லுதேன்... என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா?” தாய் சினந்துக் கொள்ள

“அதேன் இம்புட்டு சொல்லிட்டியே… அதையும் நீயே என்னனு சொல்லிடு” என்று இவர் அசட்டையாய் கேட்க

“ஹா… சொல்லுதேன்… சொல்லுதேன் அதுக்கு தேனே ஆரம்பிச்சேன். அது… நீ இந்த ஜென்மத்துல பெத்த ஒன் பையனும் ஒன் பொண்ணும்தேன்லே திரும்ப வந்து நம்ம வூட்ல பொறக்கப் போறாக...” தாய் மகிழ்வாய் சொல்ல,

“என்னது…” அதிர்ச்சியில் ஊஞ்சலில் இருந்து எழுந்தே விட்டார் ஐயாரு.

“என்ன ஒளருத...” இப்போது அவர் அதட்ட..

“நான் ஒன்னத்தையும் ஒளரல... ஒன் புள்ளைங்க செத்தப்பவே ஜோசியம் பாத்தேன். அதுங்க எங்கிட்டும் போகல… திரும்ப இந்த வூட்ல தேன் வந்து பொறக்குங்கனு அந்த கோடாங்கி ஜோசியன் சொன்னான். ஏன்... அப்போ நான் ஒனக்கு சொன்னது மறந்து போச்சோ?” தாய் அநிகாரமாய் கேட்க.. அன்று சொன்ன போது நம்பாமல் விட்டவருக்கு இன்று நினைவு வர அவர் தாயைக் கேள்வியாய் பார்க்க

அதைப் புரிந்து கொண்டவர் “எல்லாம் வேந்தன் பொஞ்சாதி... நம்ம தென்றல் வயித்துலே தேன் ஒன் புள்ளைங்க தங்கி இருக்காம்... அதுவும் ரெட்டப் புள்ளையா... இப்போதேன் ஜோசியம் பார்த்துட்டு வாரேன். இந்த நேரத்தில் பாக்க கூடாது தேன்... என்னையத்தேன் காடு வா வாங்குதே… அதேன் என்ன புள்ளைங்கன்னு தெரிஞ்சிக்கப் போனேன்... போனது நல்லதா போச்சு...” அவர் தன் போக்கில் சொல்லிக் கொள்ள, ஐயாருவின் மனதில் ஏதோ தடம் புரண்டது.

அதன் பிறகு ஒவ்வொரு முறையும் தாய் தன் போக்கில் சொல்லச் சொல்ல, அவரை அறியாமலே அனைத்தையும் தன்னுள்ளேயே உள்வாங்கிக் கொண்டார் ஐயாரு. அதன் விளைவு தான் அவரையும் மீறி இன்று வளைகாப்பு வரை அவர் வந்தது.

விழா சிறப்பாய் முடிய... அசதியையும் மீறி எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து விட்டு வரும் கணவனிடம் ஒன்று சொல்ல காத்திருந்தாள் தென்றல். தாமதமாக வந்த வேந்தன் தங்கள் அறைக்குள்ளே நுழைந்தவன், “பாப்பு, நான் வர தாமதமாகும்னு சொன்னனா இல்லையா… இந்த ஒடம்பை வெச்சிகிட்டு முழிச்சிகிட்டு இருக்காளாம்… நீ தூங்க வேண்டியது தேன?” என்று கரிசனமாய் கேட்டவன், அவளிடம் நெருங்கி அசதியில் சோர்ந்திருக்கும் தன்னவள் முகத்தைப் பற்றி பரிவாய் கூந்தல் ஒதுக்கி… கண்ணம் வருடி.. புருவம் இரண்டையும் நீவி விட.. தென்றலுக்கு கணவனின் இந்த தொடுகை ஏனோ மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

“அது வந்து மாமா… உங்க கிட்ட ஒன்று சொல்லணும் மாமா” இவள் பீடிகையுடன் ஆரம்பிக்க,

“என்னத்த சொல்லனும்… நான் வர்ற வரை காத்திருந்து இன்னைக்கே சொல்லுத அளவுக்கு அப்டி என்ன விஷயம் சொல்லப் போகுத?” இவன் கனிவாய் கேட்க

கணவன் கனிவான பேச்சில் கொஞ்சமே திடம் பெற்றவளாக அவன் முகம் நிமிர்ந்து பார்த்தவள்… பின் தலையைக் குனிந்து கொண்டு “என்ன ஆனாலும் என்னுடைய பிரசவம் ஐயாரு வீட்டில் தான் மாமா நடக்க வேண்டும்..” என்று இவள் சிறு குரலில் கோரிக்கை வைக்க, அதிர்ந்தே போனான் வேந்தன்.

“என்ன சொன்ன? திரும்ப சொல்லு…” இவன் உஷ்ணமாய் கேட்க

அவளோ திக்கித் திணறி மறுபடியும் சொன்னாள்.. ஆனால் உறுதியாக சொன்னாள்.

“ஒனக்கு என்ன கோட்டி புடிச்சிருக்காடி... ஒனக்கு எம்புட்டு பெரிய ஆஸ்பத்திரியில் பிரசவம் பாக்க நான் ஏற்பாடு செஞ்சிருக்கேன்... இவ என்னமோ.. கோட்டித் தனமா ஒளறிகிட்டு கெடக்கா… அதுவும் ரெண்டு உசுர வச்சிகிட்டு பேசுத.. வாயைப் பொத்திகிட்டு தூங்குடி...” இவன் எகிற

அவளோ.. “நான் சொல்லுறதைக் கேளு மாமா..” என்று கெஞ்சியவள்

கணவன் தோள் சாய்ந்து, அன்று ஐயாருவிடம் அவர் வீட்டில் தான் தங்கள் வாரிசுகள் பிறக்கும் என்று இவள் சவால் விட்டதைச் சொல்ல, “யாரைக் கேட்டு டி நீ சவால் விட்ட... இதுக்காண்டி தேன் இம்புட்டு அவசரமா குழந்தை பெத்துக்க ஆசப்பட்டீயோ” என்று அவன் தன்னிலை மறந்து கோபத்தில் சுள்ளென்று கேட்டு விட, அதில் அவள் கண்களோ கலங்கி விட்டது. அதைக் கண்டவனோ தன் தவறை உணர்ந்து பின் மனைவியை அணைத்துக் கொண்டவன், “வேண்டாம் பாப்பு… சொன்னா புரிஞ்சிக்கிடு... அவரையும் மீறி அந்த வீட்டுக்கு என்னால உள்ளார போக முடியும். ஆனா வேண்டாம்னு தேன் ஒதுங்கி நிக்கேன்”

“தெரியும் மாமா... அதனால் தான் நான் பிடிவாதமா இருக்கேன்” என்று மனைவி சொல்லவும், அவனுக்குத் தலையே வலித்தது.

“நான் சொன்னது கேட்கலை… பிறகு ஜென்மத்துக்கும் நீ என் கிட்ட பேச முடியாது டி” இவன் மிரட்ட, அவளோ எதற்கும் அசையவில்லை.. முதலில் மிரட்டிப் பார்த்தவன் பின் கெஞ்சியும் பார்க்க, அவள் தன் பிடிவாதத்திலேயே நின்றவள்,

“நம்ம குழந்தைகள் நல்ல மாதிரி பிறக்கும் மாமா...” என்று இவள் தைரியத்துடன், தன்னம்பிக்கையுடன் தன்னவனைச் சமாதனப்படுத்த

“ஆனா.. பத்தொம்பது வயசிலிருந்து ஒருத்தியை நெஞ்சில் சுமந்துட்டு இருக்கேன்... எனக்கு அவளும் வேணும்” என்று அவன் கண்ணீர் குரலில் சொல்ல...

“நானும் நல்ல மாதிரி இருப்பேன் மாமா” என்று உறுதி அளித்தபடி கணவனை அணைத்துக் கொண்டாள் அவள்.

வீட்டில் இந்த விஷயத்தைச் சொன்னதற்கு ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு கத்தினார்கள். ஆனால் தென்றல் தன் பிடிவாதத்திலேயே நிற்க... மற்றவர்கள் தான் வயிற்றுப் பிள்ளைக்காரி என்று விட்டுக் கொடுத்து இறங்கி வந்தார்கள்.

இதைத் தெரிந்து கொண்ட ஐயாரு, “என்ன… பிள்ளையக் காட்டி சாதிக்க நெனைக்கிறியளோ?” என்று ஒரு நாள் அவளைப் பார்த்துக் கேட்க

“ஆமாம் சாதிக்கத் தான் போறேன். உங்க வீடு என் பிள்ளைகளுக்கு உரிமை உள்ள இடம். உங்க கிட்ட அதை சாதாரணமா சொல்லிப் பார்த்துட்டேன்... அதிரடியா சில செயல்கள் செய்தும் சொல்லிப் பாரத்துட்டேன்... நீங்க அசையல. அதான் உங்களுக்கே செக் வச்சிட்டேன். இதனால் என் உயிருக்கு என்ன ஆபத்து வந்தாலும் எனக்கு கவலை இல்ல...” இவள் அவரிடமே உறுதியாய் சொல்ல

“ஆனா... நீ சொல்லி எல்லாம் நிக்குத விஷயம் ஒண்ணும் இந்தப் பிரசவம் இல்ல... அது இயற்கையா ஒரு கொழந்தையைப் பெத்தெடுத்தே தீரும்...”

“உங்களுக்கு ஒரு கதை தெரியுமா... தெரியலனா சொல்றேன் கேளுங்க. தி கிரேட் வீர சிவாஜின்னு ஒரு மன்னர் இருந்தார் தெரியுமா... அவர், இந்த நாள் நேரத்தில் பிறந்தா நாட்டை ஆளுற அம்சம் இருக்குனு ஜாதகத்தில் சொல்லப் பட... அப்படியே என் மகன் பிறக்கணும்னு தன் கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு தலை கீழே நின்றாராம் அவரைச் சுமந்த தாய்... வரலாறு சொல்லுது. முடிந்தா அதையும் செய்வா இந்த மதிவேந்தன் மனைவி” என்று அவள் திடமாய் சொல்ல, அவள் பதிலிலும் திடத்திலும் ஆடிப் போனவரோ, அதன் பின் அவள் பக்கம் திரும்பவே இல்லை அவர்.

நாட்கள் செல்ல… அவளுக்கான பிரசவ நாளும் வர, வீட்டில் அத்தனை உறவுகள் இருந்தாலும்... ஒரு டாக்டராய் தென்றல் பக்கத்திலேயே இருந்தாள் நிலவழகி. முதலில் தென்றலுக்கு விட்டு விட்டு வலி வர, அதை யாரிடமும் சொல்லாமல் சமாளித்தவள்… எங்கே வலி என்று சொன்னால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்களோ என்று நினைத்தவள்.. இப்படி செய்ய… பின் அதிக வலியின் போது பின் மாமனை ஐயாரு வீட்டிற்குத் தன்னை அழைத்துப் போகும் படி பிடிவாதத்திலேயே நிற்க வைக்க நினைத்தவள்… ஒரு கட்டத்தில் அவளையும் மீறி அவள் வலியில் துவள, வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்து விட்டது…

வேந்தன், மனைவிடம் வந்தவன், “நான் ஏன் பொறந்தேன்னு என்னைய நெனைக்க வெச்சிடாதடி பாப்பு” என்றவன் இறுகிய முகத்துடன் மனைவியை தன் கையில் ஏந்த...

கணவனின் நோக்கம் புரிந்தவளோ அந்த நிலையிலும், “இங்க இருந்து ஒரு அடி நீங்க எடுத்து வைத்தாலும் நான் செத்ததுக்கு சமம் மாமா” என்று அவள் அறிவிக்க... அடுத்த நொடி செத்தே போனான் அவன்.

இதை அனைத்தையும் அறிந்து கொண்ட பாட்டி அங்கே வந்தவர் தென்றலுக்கு எடுத்துச் சொல்ல... அவள் யார் சொல்வதையும் கேட்கவில்லை. தன் பிடிவாதத்தில் இருந்து மாறவும் இல்லை. அவள் முகத்தில் அப்படி ஒரு தீவிரத்தைப் பார்த்தவர், “இத இப்படியே விட்டா சரி வராது... நான் போய் அவனாச்சு நானாச்சு ஒரு கை பார்த்து கேட்டுட்டு வாரேன்...” என்ற படி டிரைவருடன் ஐயாரு வீட்டை நோக்கி கிளம்பியே விட்டார் அவர்.

இங்கு ஐயாரோ பாசத்தில் தென்றலின் நிலை அறிய வாசலுக்கும் வீட்டுக்கும் பதட்டத்தில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க... பாட்டி உள்ளே வந்தவர், “எலேய், எதுக்கு ஒனக்கு இந்த வறட்டுப் புடிவாதம்? அங்கிட்டு நம்ம குடும்ப வாரிசு கதறிகிட்டு கெடக்கு... இன்னும் எத்தனை பேரை கொல்றதுக்காண்டி ஒன் சாதியப் புடிச்சிகிட்டு நிக்கப் போகுத? என் பேத்தியை… அதேன் ஒன் மவள கொன்ன அன்னைக்கே ஒரு அம்மையா நான் ஒன்னையத் தட்டிக் கேட்டிருந்தா.. இன்னிக்கி நீ இப்டி ஒரு கொலைகாரனா ஆகிருக்க மாட்ட. ஒரு கொழந்தைக்கு அப்பா யாருங்கறதே அதைப் பெத்தடுத்த அம்மை சொல்லிதேன் தெரியும். அதே மாதிரிதேன சாதியும்? நாங்க சொல்லாம நீங்களா தெரிஞ்சிகிட்டீயளோ... சாதி ஒண்ணும் காலம் காலமா வந்தது இல்ல டே... ஊடால வந்தது ஊடால போயிரட்டும். என்னால் ஊரிலே இருக்கனுவங்கள மாத்த முடியாது ஆனா என் புள்ளைய மாத்த முடியும்…

என்னலே சும்மா என் பேரன் வேத்து சாதின்னு கெடந்து சலப்புத… அவன் பொறக்கும் போது ஒனக்கு தெரியாத சாதி.. இப்போ அவன் அம்மை சொல்லி ஒன் கண்ணுக்குத் தெரியுதோ? சரி… அப்டி பாத்தா ஒரு அம்மையா இப்போ நான் சொல்லுதேன்... நீயும் வேத்து சாதிலயிருந்து வந்தவன்தேன்லே. ஒன்னைய நான் பெத்தெடுக்கவே இல்ல... ஒரு வேலைக்காரிதேன் ஒன்னையப் பெத்து என் கையில் குடுத்தா...”

அவர் சொல்லி முடிப்பதற்குள் “ஆத்தா!” என்று அதிர்ந்தே விட்டார் ஐயாரு.

“ஆமா லே... இப்போ நான் சொன்னது அம்புட்டும் பொய்தேன்... ஆனா இம்புட்டும் நான் நெசம்னு சொன்னா ஒலகம் என்னைய நம்புமா இல்ல ஒன்னைய நம்புமா? இம்புட்டு தான்லே சாதி… நம்ம குடும்பத்துல நம்ம கையில வளர்ந்த புள்ளைய... ஊர் சாதி செனத்துக்குப் பார்த்துட்டு வெட்டி விட்டுட்டியே... இது சரியா.. ஒன் மனசுல அவன் மேல பாசம் இருக்குடே... அவன் நம்ப குடும்ப வாரிசுலே.. அது ஒன்னையப் பெத்தவளா எனக்குத் தெரியும். ஆனா நீ வறட்டுப் புடிவாதம் புடிக்க.

நான்தேன்லே ஒனக்கு இருக்க ஒரே ஒறவு... நான் செத்த பொறவு இந்த ஊர் ஒனக்கு வராதுலே. என் பேரன் வேந்தன்தாம்ல ஒனக்கு வருவான். இது சத்தியம்லே. அங்கிட்டு ரெண்டு உசுரோட ஒருத்தி மல்லு கெட்டிட்டு கெடக்கா... ஒன் காலில் வேணா உழுதேன்... அவளைக் கூப்ட்டு பிரசவம் பார்த்துட்டு பொறவு கூட நீ தொரத்தி வுட்ருலே.அதுக்கு பொறவு ஜம்பமா மீசைய முறிக்கிகிட்டு திரிடே.. ஒரு பொண்ணுக்கு பிரசவம் மறு ஜென்மம்லே சிவகுரு. இத நான் ஒனக்குச் சொல்ல வேணாம்...” என்று பாட்டி கை எடுத்துக் கும்பிட்டு மகனிடம் மன்றாடியவர் மகனின் காலில் விழப் போக, பதறிப் போனார் ஐயாரு.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 44
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN