மாயம் 59

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலால்
உன்னை
சிறைபிடிக்க
எண்ணினேன்...
ஆனால் நீயோ
உன் விழிகளால்
என்னை சிறைபிடித்து
உன் காதலுக்கு
என்னை
ஆயுள் கைதியாக்கினாய்...

ரண்டு நாட்களாக ஆஸ்பிடலே கதியென்று கிடந்த ரிஷியின் நினைவுகளில் ஶ்ரீ மட்டுமே..ரித்வியும் மற்றைய அனைவரும் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட அவனிருந்த இடத்திலிருந்து சற்றும் நகரவில்லை... இரண்டு நாட்கள் கழித்து ஶ்ரீ கண்முழித்ததும் அவளை கவனித்துக்கொண்டிருந்த நர்ஸ் டாக்டரை அழைத்து வர ஐ.சி.யூ வாசலிலேயே தவமிருந்த ரிஷி டாக்டர் விரைந்து செல்வதை பார்த்தவன் அவருக்காக வாசலில் காத்திருக்க ஶ்ரீயை பரிசோதித்துவிட்டு வெளியே வந்த டாக்டரிடம்
“ரேகா ஶ்ரீ...ஶ்ரீ...”
“பயப்படாதீங்க அண்ணா... தான்யா நல்லா இருக்கா.... அவ கண்ணு முழிச்சிட்டா.... அவளுக்கு இனி எந்த பிராப்ளமும் இல்லை... “
“ரொம்ப தாங்க்ஸ் ரேகா... என் உயிரையே என்கிட்ட திருப்பி கொடுத்திருக்க... இதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்...” என்று கண்களில் நீருடன் கூறியவனை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவள்
“காம் டவுண் அண்ணா... உங்க ஶ்ரீக்கு எதுவும் இல்லை... ஆனா அண்ணா ஶ்ரீயிற்கு இருந்த ஹார்ட் டிசோடருக்கு ட்ரீட்மெண்ட் இப்போதைக்கு ஆரம்பிக்கமுடியாது...”
“ஏன் ரேகா...??” என்று சற்று பதற்றத்துடன் ரிஷி கேட்க
“அண்ணா நீங்க பயப்படுற அளவிற்கு எதுவும் இல்லை... இப்போ அவளுக்கு ட்ரீட்மண்ட் எதுவும் தேவையில்லை.... இந்த ஹார்ட் டிசோடர் சிவியர் இல்லை... அதனால புட் டயட்டும் ரெகுலர் எக்சர்சைசுமே போதும்..இயர்லி வன்ஸ் அவளை புல் பாடி செக்கப்பிற்கு மட்டும் கூட்டிட்டு வாங்க... அது மட்டும் போதும்....” என்று டாக்டர் கூற அவரிடம் நன்றி உரைத்தவன்
“இப்போ நான் ஶ்ரீயை பார்க்கலாமா??” என்று கேட்க அவரோ அவளை அறைக்கு மாற்றியதும் சென்று பார்க்கலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஶ்ரீயை அறைக்கு மாற்றியதும் முதல் ஆளாய் அறைக்கு நுழைந்த ரிஷி கட்டிலருகே சென்று கண்மூடியிருந்த ஶ்ரீயின் கரம் பற்ற அவன் ஸ்பரிசத்தில் கண்விழித்த ஶ்ரீயின் உதடுகளோ அத்தான் என்ற வார்த்தைகளை உச்சரிக்க அதில் ஆறுதலடைந்த மனம் இப்போது தான் இத்தனை நாட்களாக அனுபவித்த துன்பமனைத்தையும் அழுகையாய் வெளியிட்டது ...
ஆணவன் அழுகையில் பெண்ணவள் மனம் கதற அதில் தன் வலி மறந்து படுக்கையிலிருந்து எழுந்தவள் அவனை அணைக்க முற்பட அவளது ஆறாத உடல் காயங்களோ அதற்கு ஒத்துழையாமல் சுருக்கென்று வலியை உண்டாக்க அது அவள் உணரும் முன்னே அவள் முகத்திலும், வார்த்தையிலும் வெளிப்பட்டது...
“அத்தான்... ஆ.....அம்மா...” என்று வலியில் ஶ்ரீ தன் வயிற்றினை பிடித்தபடி மீண்டும் படுக்கையில் விழ அதில் தன் கலைந்தவன் தன் துக்கம் மறந்து
“அம்லு... அம்லு... என்னாச்சுமா...” என்று அவள் கரத்தினை இறுகபற்றியபடி ரிஷி வினவ ஶ்ரீயோ
“வலிக்குது அத்தான்...” என்று கண்ணீர் வடிக்க
“ஐயோ ஏன் அம்லு ஸ்ரெயின் பண்ணிக்கிற?? காயம் இன்னும் ஆறியிறிருக்காது... சே... நான் வேறு இப்படி நடந்துக்கிட்டு உன்னை கஷ்டப்படுத்திட்டேன்...” என்று தன் கண்களை துடைத்துக்கொண்டவன் அவள் படுப்பதற்கு உதவி செய்தான்....
ஶ்ரீ வாகாக படுத்ததும் அவளரரையை இழுத்துபோட்டு அமர்ந்தவன் அவள் கையை பிடித்து தன் இதழ் ஒற்றினான்...
அதுவே ஶ்ரீயிற்கு போதுமாயிருக்க
“சாரி அத்தான்.... உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்....” என்று கூறியவள் பின் நியாபகம் வந்தவளாக
“அத்தான் பாப்பா..” என்று கேட்க அவள் நெற்றியில் தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் இதழ்களால் முத்திரை பதித்துவிட்டு
“நான் ஆசைபட்ட படி ஏஞ்சல் தான் பிறந்திருக்காங்க...” என்று கூற அவன் வார்த்தைகளில் மகிழ்ந்தவள் குழந்தையை பார்க்கவேண்டுமென கூற ரிஷியும் குழந்தையை இன்குபேட்டர் பெட்டியில் வைத்திருப்பதாக கூறினான்...
“அத்தான் பாப்பா நல்லா தானே இருக்கா...???”
“என்னோட ஏஞ்சல் சூப்பரா இருக்கா... அவ குறை மாதத்துல பிறந்ததால அவளோட சுவாசம் சீராக வரைக்கும் இன்குபேட்டரில் வச்சிருக்கனும்னு ரேகா சொன்னா.... நீ பயப்படவேண்டிய அவசியமே இல்லை அம்லு...”
“அத்தான் அத்தை மாமா....”
“ ரித்வியும் அனுவும் வெளியில இருக்காங்க... மற்றவங்க இப்போ கொஞ்ச முதல்ல தான் வீட்டுக்கு கிளம்புனாங்க...” to
“அத்தான்... உங்ககிட்ட...”
“அம்லு... நீ என்ன சொல்லப்போறனு எனக்கு தெரியும்... இப்போ எதை பத்தியும் யோசிக்காமல் நல்லா ரெஸ்ட் எடு... எதுனாலும் வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம்....” என்று அவளது பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்கமுடியாமல் போனது...
அதன் பின் இருவருக்கும் இடையில் வார்த்தைகளுக்கு வாய்ப்பில்லாமல் போக ஒருவரின் ஸ்பரிசத்தை மற்றவர் ஆறுதலாய் எண்ணியபடியே தத்தமது துணைகளை எண்ணி வருந்தியபடியிருந்தனர்....
சற்று நேரத்தில் சுபா, ராதா என்று அனைவரும் வந்துவிட ஶ்ரீயிற்கு தன் குடும்பத்தினருக்கு முகம்கொடுக்கமுடியவில்லை.... இரண்டு மாத காலமாய் தன் காரணம் தெரிவிக்காது குடும்பத்தை பிரிந்தவளுக்கு குற்றவுணர்ச்சியே மேலோங்கியிருந்தது.... அந்த நொடி தன் செயலால் அனைவருமே வருந்தியிருப்பர் என்று உணர்ந்தாள்...ஆனால் சுபாவோ ராதாவோ அதை பற்றி எதுவும் விசாரிக்காது அவளை கட்டித்தழுவி ஆறுதலடைந்தனர்...
அவளது உடல் நலத்தை பற்றி விசாரித்தவர்கள் குழந்தையை பற்றி அவளிடம் வர்ணிக்க ஶ்ரீயிற்கோ அந்த நொடியே தன் உதிரத்தில் உருவான அந்த ஜீவனை பார்க்க மனம் ஏங்கியது....
“அத்தான் ப்ளீஸ் அத்தான்... எனக்கு இப்போவே பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு.... என்னை அங்க கூட்டிட்டு போங்க ப்ளீஸ்...” என்று அடம்பிடிக்க அவளது ஆசை புரிந்தவன் வீல் சாரின் உதவியுடன் ஶ்ரீயை குழந்தையை பார்க்க அழைத்து சென்றான்..
குழந்தையை இன்குபேட்டர் பெட்டியினருகே சென்று பார்த்தவள்
“அத்தான் பாப்பா யாரு மாதிரி அத்தான்...”
“தெரியலையே அம்லு...”
“என்ன அத்தான் தெரியலைனு சொல்லுறீங்க?? நீங்க உங்க ஏஞ்சலை பார்க்கலையா அத்தான்??”
“இல்லை அம்லு... இப்போ தான் பார்க்கிறேன்...” என்று ரிஷி கூற ஶ்ரீயோ
“ஏன் அத்தான் பார்க்கலை?? எனக்கு டெலிவரி நடந்து இரண்டு நாளாச்சுனு அம்மா சொன்னாங்க.. ஆனா நீங்க பாப்பாவை பார்க்கலைனு சொல்லுறீங்க??”
“நீ கான்சியசே இல்லாமல் இருந்தப்போ என்னோட சிந்தை, செயல்னு எல்லாத்துலயும் என் அம்லு மட்டும் தான் இருந்தா... அப்போ எப்படி எனக்கு ஏஞ்சல் நினைவு வரும் அம்லு???” என்று ரிஷி அவளிடமே கேள்வி கேட்க வாயடைத்துப்போனாள் ஶ்ரீ....
எத்தகைய அன்பை இத்தனை நாட்கள் இழந்து தனித்து வாழ்ந்தோம்?? பிரிவு கூட அன்பின் அளவை கோடிட்டு காட்டுமென்று அந்த நொடி உணர்ந்தாள் ஶ்ரீ... அந்த நொடியில் ரிஷியிற்காக என்றெண்ணி அவனை பிரிந்து மிகப்பெரிய தவறிழைத்துவிட்டோம் என்று முழுதாய் உணர்ந்தாள்..
மனதால் உணர்ந்து ரிஷியின் கையினை பிடித்தபடி “சாரி அத்தான்..”
“விடு அம்லு... நடந்ததை மாற்றமுடியாது... அதையே நினைச்சிட்டு இந்த நொடியை பாழாக்கூடாது...” என்று அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் தன் மனையாளின் ஆசைப்படி அவளோடு நின்று குழந்தையை கொஞ்சிவிட்டு அவளை அழைத்துசென்றான்..
இரண்டு வாரங்களுக்கு பின் குழந்தையை அழைத்து செல்லலாமென டாக்டர் கூற ஶ்ரீ ரிஷியுடன் அவன் வீட்டிற்கு கிளம்பத்தயாராக ரிஷியோ
“அம்லு.. ஒரு பிசினஸ் விஷயமாக நான் ரஷ்யா போக இருக்கு... இவ்வளவு நாள் அந்த ட்ரிப்பை போஸ்ட் போன்ட் பண்ணியிருந்தேன்... இதுக்கு பிறகும் அதை தள்ளி போட முடியாது... அம்மாவல் ஒரே நேரத்துல உன்னையும் ஹேமாவையும் கவனிச்சுக்க முடியாது... அதனால நான் வரும்வரை நீ அத்தை மாமாவோட இரு... நான் திரும்பி வந்ததும் உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்... அங்கனா அத்தை மாமா அனுனு எல்லோரும் இருப்பாங்க...உனக்கும் இந்த நேரத்துல யாராவது ஒருத்தர் துணைக்கு இருக்கனும்... அதனால நீ அத்தை மாமாகூட உங்க வீட்டுக்கு கிளம்பு... நான் ரஷ்யா போயிட்டு வந்ததும் நீ இங்க வந்திடலாம்...” என்று ரிஷி கூற ஶ்ரீயோ தான் ரிஷி வீட்டிற்கு செல்வதற்காக அடம்பிடிக்க சுபாவும் ராதாவும் அவளிடம் பேசி அவளை சரி கட்டினர்...
பின் டிஸ்சார்ஜான ஶ்ரீயையும் குழந்தையையும் தனது காரிலேயே அவளது வீட்டிற்கு அழைத்து சென்றான் ரிஷி....
ராதா மூவரையும் ஆராத்தி எடுத்து வரவேற்றார்...
ரிஷி ஶ்ரீயை கைத்தாங்கலாய் அவளது அறைக்கு அழைத்து செல்ல மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்..
அறைக்கு சென்ற ஶ்ரீ அதன் அலங்காரம் கண்டு பிரமித்து நின்றாள்... அறை நிறம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்க சுவற்றில் விதவிதமான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது.. கட்டிலின் ஒரு புறமாக குழந்தைகளுக்கான பொம்மைகள் இருக்க கட்டிலுக்கு அடுத்ததாக குழந்தைக்கென்று ஒரு வாட்ரோப்பும் ஒரு தொட்டிலும் இருந்தது... இவ்வாறு அறை முழுவதையும் குழந்தைக்கென்று பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தனர் ரிஷியும் அனுவும்...
குழந்தையை கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த அந்த சிறிய விரிப்பில் கிடத்திய ஶ்ரீ குழந்தையை விரிப்பால் போர்த்திவிட்டு அருகே தலையணைகளை அடுக்கினாள்...
ஆனால் ஶ்ரீயின் வாரிசோ தான் ஶ்ரீயின் வாரிசு ஒன்று நிரூபிக்கும் முகமாக அதுவரை நேரம் அமைதியாயிருந்த குழந்தை அப்போது வீறிட்டு அழ ஆரம்பிக்க ஶ்ரீயோ அருகில் நின்றிருந்த அன்னையிடம்
“ஏன்மா அம்மு அழுறா??”
“புது இடம் தானே அதான்...நீ கொஞ்ச நேரம் கையில வச்சிக்கோ ஶ்ரீ... குழந்தை தூங்கியதும் கட்டில்ல படுக்க வை...” என்று கூற குழந்தையை தூக்கி நெஞ்சோடு அணைத்தபடி ஆட்டினாள்...
குழந்தை சற்று நேரத்தில் உறங்கிவிட மீண்டும் கட்டிலில் கிடத்த குழந்தை சிணுங்கத்தொடங்க ஶ்ரீயோ விழி பிதுங்கி நின்றாள்..
அவளை பார்த்து ரிஷி சிரிக்க
“என்ன சிரிப்பு.... வந்து உங்க குட்டி ஏஞ்சலை தூங்க வைங்க...” என்று அவன் கையில் கொடுக்க முயல ரிஷியோ
“கொஞ்சம் இரு அம்லு வர்றேன்...” என்றவன் வாஸ்ரூம் சென்று நன்றாக கைகளை அலம்பிவிட்டு வந்தவன் ஶ்ரீயின் உதவியோட கையில் குழந்தையை வாங்கியவன் தன் மார்போடு சேர்த்து குழந்தையை அணைக்க அது சத்தமிட்டாமல் அவன் அணைப்பில் உறங்கியது... குழந்தை உறங்கியதை உறுதிப்படுத்தியவன் தன் உறக்கம் கலையாத வண்ணம் கட்டிலில் கிடத்த குழந்தையோ எந்தவித சிணுங்கலும் இன்றி உறங்கியது...
இதனை விழிவிரித்து பார்த்தபடியிருந்த ஶ்ரீ
“ஏன்மா இத தானே நானும் செய்தேன்... ஆனா இந்த அம்மு ஏன் மா இப்போ அழவில்லை???”
“உன் பொண்ணு தானே தான்யா... அப்படி தான் இருக்கும்..”
“மேபீ.. இருக்கலாம்.. ஆனாலும் இந்த வயசுல இதெல்லாம் டூ மச்..” என்று ஶ்ரீ கூற ராதாவோ அவளை சிறிது நேரம் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு ரிஷி தவிர மற்றையவர்களை வெளியே அழைத்து சென்றார்..
அனைவரும் சென்றதும் கட்டிலில் அமர்ந்த ஶ்ரீ தன் குழந்தையையே பார்த்தபடியிருந்த ரிஷியிடம்
“அத்தான் உங்க ஏஞ்சல் ரொம்ப மோசம்...”
“என்னோட ஏஞ்சல் அவங்க அம்மா மாதிரி.... என்னை நெஞ்சோட கதகதப்புல தான் அவங்க அம்மா தூங்குவாங்க... அதே மாதிரி என்னோட ஏஞ்சலும் நான் அணைச்சு தட்டிக்கொடுத்தா சேட்டை பண்ணாமல் சமத்தா தூங்குறாங்க...”
“தூங்குவா தூங்குவா... இன்னைக்கு மட்டும் தானே அப்படி.. இன்னும் கொஞ்ச நாளைக்கு என்கிட்ட தானே தூங்கியாகனும்... அப்போ இருக்கு மேடமுக்கு...”
“எப்போ அத்தான் கிளம்புறீங்க..??”
"இன்னைக்கு நைட்...."
“இன்னைக்கு நைட்டா??”
“ஆமா அம்லு... உன்னோட டெலிவரி வரைக்கும் தான் இந்த ட்ரிப்பை போஸ்ட் போன்ட் பண்ணியிருந்தேன்... இதற்கு பிறகும் போஸ்ட் போண்ட் பண்ணமுடியாது.. அதான் இன்னைக்கு நைட்டே கிளம்புறேன்...”
“அத்தான்.. நான்... உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..”
“நீ என்ன பேச போறனு தெரியும்... ஆனா அதை பேசி இப்போ இருக்க சுமூக நிலையை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன்... எனக்கு கொஞ்சம் டைம் கொடு அம்லு...”
“அத்தான்... அப்போ.. நீங்க..”
“ப்ளீஸ் அம்லு புரிஞ்சிக்கோ... நான் கோப தாபம் உள்ள மனிதன் தான்.. எனக்கும் உணர்வுகள் பீலிங்ஸ் எல்லாம் இருக்கு... என்னோட கோபம் உன்னை காயப்படுத்திடக்கூடாதுனு தான் என்னை கட்டுப்படுத்திட்டு இருக்கேன்... அது கோபம் அப்படீங்கிறதை விட வருத்தம்னு தான் சொல்லனும்.... ஒரு வகையான ஏமாற்றமும் கூட.. உனக்கும் அதே அளவு வலினு என்னோட அறிவுக்கு புரியிது... ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது... ப்ளீஸ் அம்லு.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. என்னோட மனசு இவ்வளவு நாள் நடந்ததை ஏத்துக்கிட்டு சமாதானமடைந்தால் தான் என்னால பழைய காதலோட தாபத்தோட அன்போட உன்னை நெருங்க முடியும்... இல்லைனா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உன்னை நிச்சயம் காயப்படுத்திடுவேன்...அது வாழ்க்கை முழுவதற்கும் நமக்குள்ள விரிசலை ஏற்படுத்திடும்....”
“அத்தான்... நடந்ததை...”
“அம்லு... எனக்கு எல்லாமே தெரியும்... நடந்தது எதுவுமே நாம விரும்பியோ ஆசைப்பட்டோ நடக்கல...... இப்படி நடக்கும்னு கூட நாம எதிர்பார்க்கல... ஆனா... புரிஞ்சிக்கோ அம்லு... இது பேசி புரியவைக்கிற விஷயம் இல்லை.... மனசு தானா ஏத்துக்கனும்... அது நடந்த நமக்குள்ள எந்த கில்டி பீலும் இருக்காது....” என்றவன் அவள் பேச இடம் கொடுக்காது அறையிலிருந்து வெளியேறிவிட்டான்...
ஶ்ரீயிற்கு ரிஷியின் வார்த்தைகள் காதல் மனதை குத்திக்கிழித்தது.... அவன் கோபப்பட்டு திட்டியிருந்தால் கூட அவளுக்கு இத்தனை வலித்திருக்காது... ஆனால் மனதால் அவளை ஒதுக்கி வைத்தது போல் அவன் பேசிச்சென்றது அவளது காதல் மனதை ரணப்படுத்தியது...
ஶ்ரீயின் வீட்டிலிருந்து கிளம்பிய ரிஷியிற்கும் கூட தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவனை பெரிதும் பாதித்தது... இதற்காக தானே இத்தனை நாட்கள் ஶ்ரீ அந்த பேச்சை எடுக்கும் போதெல்லாம் தவிர்த்து வந்தான்....
மனம் முழுதும் ரணமிருந்த போதும் அது வெளிப்பட்டால் ஶ்ரீயின் மனது காயப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அந்த ரணத்தை மறைத்துக்கொண்டு எதுவும் நடவாதது போல் காட்டிக்கொள்வது எத்தனை கடினம் என்று இந்த சில நாட்களில் உணர்ந்திருந்தான் ரிஷி... அதுவும் அது தன்னை மீறி வெளிப்பட்டு ஶ்ரீயை பாதிக்கும் போது ஶ்ரீயை விட அவனுக்கே அது அதிக வேதனை அளித்தது.. ஆனாலும் இதற்கு காலம் மட்டுமே பதிலாகும் என்று எண்ணியவனுக்கு காதல் கூட இதற்கு தீர்வை கொடுக்கும் என்று தெரியவில்லை......
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN