ஆதித்யா சக்கரவர்த்தி-2

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்-2

ஆளுயர கண்ணாடி முன் நின்று தனது உடையை சரி செய்து கொண்டிருந்தான் அவன்...
தனது அடர்த்தியான கேசத்தை ஜெல் வைத்து படிய வாரி இருந்தான்.

ஆழமான அழுத்தமான விழிகள் ஆண்மைக்கு இலக்கணமாக நல்ல கட்டுமஸ்தான உடற்கட்டு... தோள் பகுதி நன்றாக விரிந்து அவனுக்கு பழனி படிக்கட்டுகள் போன்று உடற்கட்டு இருப்பதை அனைவருக்கும் உணர்த்தியது. அழுத்தமான உதடுகள்... புகை பிடித்ததன் அடையாளமாக லேசாக கருத்திருந்தது
ஆறடிக்கு மேல் நெடு நெடுவென வளர்ந்திருந்தான். கைகளில் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மின்னியது. அவனது மோதிர விரலில் A என்ற முத்திரை பதித்த நுண்ணிய வேலைபாடுகளுடன் கூடிய கனமான மோதிரம் ஒன்று ஜொலித்துக் கொண்டிருந்தது. அவனது விலை உயர்ந்த ஆழ்ந்த கருநீல நிற கோட் சூட் சொன்னது அவனது செல்வ நிலையை...
மீண்டும் கண்ணாடியை பார்த்து தனது டையை சரி செய்தவன்.... ஒரு கனமான மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த துப்பாக்கியை தனது உடைக்குள் மறைத்துக் கொண்டான்.
பின் இன்னொரு சிறிய பெட்டியை திறந்தவன் அதிலிருந்த பேனா போன்ற அமைப்புடைய கத்தியை திறந்து பார்த்துவிட்டு தனது மேல் சட்டையினுள் சொருகி வைத்துக் கொண்டான். மற்றவர்களின் பார்வைக்கு அது சாதாரண பேனா. ஆனால் அவனுக்கு மட்டும் தான் தெரியும் அதன் கூர்மை.
அவன்தான் ஆதித்யா சக்கரவர்த்தி. நிஜ உலகில் ஒரு பெரும் புள்ளி.
மல்டி மில்லியனர். அவன் செய்யாத பிசினஸ் இல்லை. ரியல் எஸ்டேட் முதல் பைனான்ஸ் கம்பெனி வரை என எல்லாவற்றிலும் அவனது பங்கு இருக்கும். அவனிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது போல அவன் முதன்முதலில் தொழில் தொடங்கியதே திருட்டு பணத்தில்தான். பின்பு எங்கிருந்து அவன் நேர்மையை வாங்குவான்.பெரிய பெரிய பணக்காரர்கள்,செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என எல்லாரையும் விரல்நுனியில் ஆட்டி படைப்பவன். தன்னை எதிர்ப்பவர்களை வேரோடு பிடுங்கி எறிந்து விடுவான். அதில் அவன் பெயர் இம்மியும் இருக்கவே இருக்காது.
ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவனை யாராலும் மாற்ற முடியாது.

ஆதித்யாவிற்கு இரண்டு தங்கைகள் . இருவருமே ஆதித்யாவின் உயிர் .அவர்கள் என்ன கேட்டாலும் மறுநிமிடம் அவர்கள் முன்னே கொண்டு வைத்து விடுவான்.

முதல் தங்கை சுவாதி. ஒருவனை காதலித்து மணந்ததை முதலில் ஏற்க முடியாமல் தவித்தவன். பின் தங்கையின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக்கொண்டான். ஆனால் அவளைப் பிரிய மனமில்லாமல் தங்கை கணவனின் தந்தையிடம் பேசி மிரட்டி எப்படியோ தன்னுடனே தங்கையையும் தங்கை கணவரையும் வைத்துக் கொண்டான். அவர்களுக்கு பிறந்த குழந்தையையும் தலைமேல் வைத்துக் கொண்டாடினான்.

இரண்டாம் தங்கை சௌமியா. திருமண வயதில் இருந்தாள். அவள் கல்லூரி பருவத்திலேயே ஒருவனை காதலித்தாள் போன வருடம் நிச்சயதார்த்தம் முடியும் நடந்தது தான். ஆனால் ஆதித்யா அவனை மறுத்துவிட்டான்.

சுவாதியின் கணவன் நல்லவன். பொறுப்புள்ளவன். ரொம்ப முக்கியமாக பிழைக்கத் தெரிந்தவன். அதனால் அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்து தன்னுடனேயே வைத்துக் கொண்டான்.

ஆனால் சௌமியா காதலித்தவன் அவளது பணத்திற்காக தான் நாய் போல் அவளை விரட்டி விரட்டி காதலித்தானாம். அதையும் குடிபோதையில் இருக்கும்போது அவன்தான் உளறி கொட்டியது. இதற்கு மேல் அவனை தங்கையின் கணவனாக ஏற்க ஆதித்யா என்ன வடிகட்டின முட்டாளா? என்ன? அவனை அவனது பாஷையில் நன்றாக கவனித்து விட்டு தங்கையின் புறம் திரும்பாமல் பார்த்துக் கொண்டான்.

அதிலிருந்தே சௌமியாவிற்கு அண்ணன் மீது ரொம்பவும் கோபம் தான்.

அடுத்து எப்படி எப்படியோ தங்கையே சமாதனப்படுத்தி அவளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடினான் ஆதித்யா. அவன் எதிர்பார்த்த தகுதிகளோடு நல்லவனாகவே சுதாகரன் கிடைத்தான். அவனது பெற்றோர்களுக்கும் சௌமியாவை பிடித்து விட்டது. சுதாகரனையும் வீட்டோடு மாப்பிள்ளையாக சம்மதம் தெரிவித்தனர்.ஆனால் சுதாகரன் ஏற்கனவே அலுவலகத்தில் உடன் பணி புரிந்தவள் உடன் காதல் உறவை வளர்த்து வந்துள்ளான். சுதாகரனின் பெற்றோர்தான் சௌமியாவை மருமகளாக்க மகனை மிரட்டி வைத்திருந்தனர். சுதாகரன் ஆதித்யாவை நேரில் சந்தித்து உண்மையைக் கூறி, திருமணத்தை நிறுத்துமாறு சொன்ன போது... முழுவதையும் கேட்ட ஆதித்யாவின் பதில் "அவளை மறந்துவிடு" என்பதுதான். அத்தோடு பிரச்சினை முடிந்தது போல் அலட்சியமாக அவன் நடந்துகொண்ட விதம் சுதாகரனை எரிச்சலடைய செய்தது. சுதாகரன் மீண்டும் பெற்றோரிடம் பேச முயற்சி செய்தபோது அவர்கள் ஆதித்யாவை பார்த்து பயந்து நடுங்கினர். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைத்த சுதாகரன் காதலியை கைப்பிடிக்க அவளோடு ஊரை விட்டே ஓடிவிட்டான்.

"அந்த சுதாகர் மாப்பிள்ளை சௌமியா மேடத்த வேண்டாம்னு இன்னொருத்தியை கூட்டிட்டு ஊரைவிட்டு ஓடிப் போயிட்டானாம்.."என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டிருந்தாள் அப்பெரிய வீட்டின் சமையல்காரி கண்ணம்மாள்.

"இதோட ரெண்டு நிச்சயதார்த்தம் நின்னு போச்சு.. பாவம் ...அந்த பொண்ணோட தலையெழுத்தை பாத்தியா.." என்று பரிதாப்பட்டால் வீட்டினை சுத்தம் செய்யும் சாந்தி.

"எல்லாம் தலையெழுத்து... நம்ம ஐயா கண்டிப்பா அவனை சும்மா விடமாட்டார் சாந்தி... என்ன ஆகப்போகுதோ?... என்ன செய்ய போறாரோ?" என்று ஒருவித பயத்துடன் பேசினால் கண்ணம்மாள்.

மேற்பார்வை செய்பவன் வெட்டி கதை பேசாமல் வேலையை பாருங்கள் என்று அதட்டிய பிறகுதான் வேலையை கவனிக்க சென்றனர்.

இதை ஜன்னலின் வழியே கேட்டுக் கொண்டிருந்த சௌமியா தனது அறைக்கு வந்து கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு அவமானமாக இருந்தது. வீட்டு வேலைக்காரர்கள் கூட தன்னை கேலி பேசுவது போல் இருந்தது ... எல்லாரும் தன்னை நக்கலாக பார்த்து சிரிப்பது போல கற்பனை செய்து கொண்டு மேலும் மேலும் தன்னையே ரணப் படுத்திக்கொண்டாள் சௌமியா.

சௌமியா ஒன்றும் சுதாகரனை உருகி உருகி விரும்பவில்லை என்றாலும் திருமணமான பின் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து அவனை தன் கணவனாக கற்பனை செய்து வந்தாள். இப்பொழுது அதுவும் முறிந்து விட துடித்து போனால் சௌமியா. சிறுவயதிலிருந்து கேட்டதெல்லாம் கொண்டுவர அண்ணன் இருந்தான். இப்பொழுதும் இருக்கிறான்.ஆனால் இருந்து என்ன பயன் ??அவளது வாழ்க்கை அந்தரத்தில் மிதப்பது போல் உணர்ந்தாள்.

ஒருவனை தான் நிராகரிப்பது வேறு... ஒருவன் தன்னை நிராகரிப்பது வேறு அல்லவா... !!!
அதுவும் ஒருமுறை அல்ல இருமுறை அல்லவா அவள் நிச்சயதார்த்தம் உடைக்கப்பட்டு விட்டது .

காலை உணவை மறுத்துவிட்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் சௌமியா. அவளது ஆத்திரம் எல்லாம் அவளது அண்ணன் ஆதித்யா மேலே பாய்ந்தது.
"இவனை யாரு எனக்கு மாப்பிள்ளை பாக்க சொன்னது..."என்று எண்ணியவள் அதற்கும் சேர்த்து விக்கி விக்கி அழுது கொண்டே இருந்தாள்.

காலை உணவை தங்கை மறுத்த செய்தி அறிந்து ஆதித்யா அவளைப் பார்க்க அந்த அறைக்குள் வரும் வரை அவள் அழுது கொண்டுதான் இருந்தாள்.
தங்கையை பார்க்க வந்த ஆதித்யா கண்களில் நெருப்பு குமிழ்கள்
குமிழ் விட்டுக் கொண்டிருந்தது.

அவனது வலுவான புஜங்கள் இறுகி தாடை புடைத்துக் கொண்டிருந்தது. தன் தங்கையை அழவைத்த சுதாகரனை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று வெறி கொண்டவன் போல் கூலிப்படை தலைவன் ஒருவனுக்கு கால் செய்து ..."அவன் எங்கிருந்தாலும் பிடித்து கொண்டு வாங்கடா" என்று கத்திவிட்டு மொபைலை அணைத்தான்.

"சௌமி மா... சாப்பிட்டு நேத்து நைட்டும் ஒழுங்கா சாப்பிடலன்னு சொன்னாங்க... காலைலயும் நீ சாப்பிடலையாம் ... மணி 12 ஆகப்போகுது... கொஞ்சோண்டு சாப்பிடுமா" என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் அவளது அண்ணன் ஆதித்யா.

வெளியில் காட்டு ராஜா சிங்கம் போல் கம்பீரமாக அலைந்தாலும் உள்ளுக்குள் தங்கைகள் தான் அவன் உலகம். அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்வான். யாரையும் கொல்வான்...!!!!

ஆதித்யாவை சிறிது நேரம் வெறித்து பார்த்த சௌமியா மீண்டும் தலையணையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"இங்கிருந்து போய்டு... கெட் லாஸ்ட் உன்னாலதான் நான் அவமானப் பட்டுட்டு இருக்கேன்..."என்று அழுகையின் ஊடே எரிந்து விழுந்தாள்.

"சௌமியா" என்று அதட்டியவன்.
பின் தணிந்த குரலில் ...

"நீ கவலையே படாத டா... அந்த சுதாகர் எங்கிருந்தாலும் என் ஆளுங்க அவன தூக்கிட்டு வந்துருவாங்க ...அவன்தான் இந்த வீட்டு மாப்பிள்ளை... உன்னோட புருஷன் கவலைப்படாத... கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாயிடும் ...ரெண்டு தட்டு தட்டினா தன்னால அடங்கி இருக்க போறான்" என்றவனை தீர்க்கமாக பார்த்தவள் "எனக்கு அவன் வேண்டாம்"என்றாள்.
"ஏன் வேண்டாம்"என்று ஆதித்யா கேட்பதற்குள் ...எங்கிருந்தோ தனது டெடி பியரை தூக்கிக் கொண்டு "மாமா" என்று கூவிக் கொண்டே ஓடி வந்தாள் ஒரு குட்டிப் பெண்.அவள் சுவாதியின் குழந்தை வானதி.

அவளைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்த சௌமியா கண்களை துடைத்துக் கொண்டாள்.
"சித்தி நீ எதுக்கு அழுற ... நீ அழாம இருந்தா சாக்லெட் வாங்கி தர்ற சரியா .."என்று தன் அப்பா தன்னை சமாதானப் படுத்துவது போல் சமாதன படுத்திவிட்டு பின் தன் பிஞ்சு விரலால் கண்ணீரை துடைத்துவிட்ட அக்குழந்தையை யாருக்குத்தான் பிடிக்காது.

"ஐயோ உங்க சித்தி அழுகல குட்டிமா" என்று அவளை கைகளில் தூக்கிக் கொண்டான் ஆதித்யா.

ஒரு விரலால் தாடையில் கைவைத்து யோசித்தவள்...
" அப்படியா அப்போ கண்ல தண்ணி வந்தா என்ன சொல்வாங்க மாமா??" என்று அவனிடமே சந்தேகம் கேட்டாள் .

சௌமியாவை ஒருபார்வை பார்த்தவன்..." அதவிடு... அம்மா ஞாபகம் வரலையா குட்டிக்கு..." என்று பேச்சை மாற்றினான்.

"அம்மாவ நா நொம்ப நொம்ப மிஸ் பண்றேன் மாமா அப்பாவையும் தான்.. எப்போ அவங்க வீட்டுக்கு வருவாங்க.." என்று சோகமாக கேட்டாள் வானதி.
குழந்தையின் தலையை வருடியவன்...

"இன்னும் ரெண்டே ரெண்டு நாள் தங்கம்.. அது முடியும் நீ சமத்தா சௌமியா சித்தி கூடவே இருப்பியாம்..." என்று குழந்தையை சௌமியா விடம் கொடுத்து விட்டு புயல் வேகத்தில் வெளியேறினான் ஆதித்யா.

அவனுக்கு அடுத்ததாக ஒரு முக்கிய தொழில் அதிபருடன் மீட்டிங் ஒன்று இருந்ததால் அங்கு செல்ல விரைந்தான் அவன் ...
அவனுக்குப் பின்னால்
கருப்பு நிற சீருடை அணிந்த பாடி கார்ட்ஸ் பக்கபலமாக சென்றனர். முதலில் நிறுத்தி இருந்த பெரிய காரின் கதவை ஒருவன் திறந்துவிட, அதில் கம்பீரமாக ஏறி அமர்ந்தான் ஆதித்யா... பின்னால் நின்ற கார்களில் பாடி கார்ட்ஸ் ஏறிக்கொண்டனர். கார்கள் மின்னல் வேகத்தில் அவ்வீட்டில் இருந்து பறந்தது.


"அம்மா... அப்பா... " என்று அரை மயக்க நிலையில் கூட புலம்பிக் கொண்டிருந்த தங்கையின் தலையை வருடியவாறு அமர்ந்திருந்தான் மகேஸ்வரன்.
அவனது அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்த சுவாதி, தன் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நம்ம எப்ப வீட்டுக்கு கிளம்புகிறது மகி" என்று கேட்ட மனைவியை தீ பார்வை பார்த்தான் மகேஷ்.

"என் தங்கச்சி பைத்தியம் புடிச்ச மாதிரி பொலம்பிட்டு இருக்கா... உனக்கு அதுல எல்லாம் அக்கறையே இல்லை அப்படித்தானே" என்று எப்பொழுதுமே அவளிடம் காட்டாத கோபத்தை முதன்முறையாக காட்டினான் மகேஷ்.

பின் சுவாதியின் முக மாற்றத்தை கவனித்து விட்டு குரலை தணித்தான்... "ப்ளீஸ் சுவாதி இப்போ என் தங்கச்சிக்கு என்ன விட்டா யாருமே இல்ல..." என்றவனை இடைமறித்து,
"அதான் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆகி பாதி புருஷனா ஒருத்தன் இருந்தானே... அவன் எங்கே??" என்றாள் எகத்தாளமாக...

நந்தனின் செல் நம்பர் சண்முக சுந்தரத்தின் மொபைலில் தான் இருந்தது அதுவும் விபத்தில் நொறுங்கி விட்டதால் அவனை தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. தங்கை தெளிந்தபின் தான் அவளிடம் எதுவும் கேட்க முடியும்...
அது தெரிந்தும் இப்படி கேட்பவளை என்ன செய்வது...??
மீண்டும் தெறித்து வந்த கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு ...
"லுக் சுவாதி ...உனக்கு உன்னோட வீட்டுக்குப் போகணும்னா தாராளமா நீ போகலாம் ...என்னால இப்போ என் தங்கச்சியை இந்த நிலைமையில விட்டுட்டு வரவே முடியாது" என்று சொல்லிவிட்டு தங்கையின் கையை ஆதரவாக தடவிக்கொடுத்தான் மகேஷ்.
அவனை சிறிது நேரம் வெறித்துப் பார்த்த சுவாதி ..மெதுவாக எழுந்து சென்று தன் அண்ணனுக்கு கால் செய்தாள்.

தனது எதிரில் நின்றவனை எரித்து விடுவது போல் பார்த்தவன்,
"எனக்கு நீ என்ன செய்வியோ தெரியாது... அவன் முழுசா வேணும் இல்லன்னா ...நீ முழுசா இருக்க மாட்ட" என்று கர்ஜித்து கொண்டிருந்தான் ஆதித்யா.

அப்பொழுது பார்த்து மொபைல் ஒலிக்க... அதில் சுவாதியின் பெயரைப் பார்த்ததும் சற்று தணிந்து ...
"எல்லாரும் அவங்கவங்க வேலைய பாருங்க இடியட்ஸ்..." என்று மற்றவர்களை சொன்னவன் ..

"நீ நான் சொன்ன வேலைய பாரு... இல்லனா நீ இருக்க மாட்ட ... மைண்ட் இட்" என்று தனக்கு முன்னால் நின்றவனை அதட்டிவிட்டு காலை அட்டென்ட் செய்தான்.

"அண்ணா நான் ஊருக்கு வர இன்னும் ஒன் வீக் ஆகும் ...அதுவர குழந்தைய கொஞ்சம் பாத்துக்கோங்க... "என்றாள் சுவாதி சுருக்கமாக

"ஏன் அங்க எல்லா காரியத்தையும் முடிச்சுட்டு சீக்கிரம் வந்து தொலைய வேண்டியதுதானே ..."என்று எரிந்து விழுந்தான் ஆதித்யா. நேற்று வானதி பெற்றோர்களை மிஸ் பண்ணுவதாக வேறு அவனிடம் சொல்லி இருந்தாள். அதனால் வந்தக் கோபம் தங்கையின் மீது பாய்ந்தது

"இல்லன்னா அவரோட தங்கச்சிக்கு இங்க கொஞ்சம் உடம்பு சரியில்ல... அதனால கூட ஒரு வாரம் ஆகும் நாங்க வர" என்றால் சுவாதி தணிந்த குரலில்...

மீண்டும் ஆதித்யாவிற்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கேறியது.
"இங்க உன்னோட தங்கச்சியும் உடம்பு சரியில்லாமல் தான் இருக்குறா... அவளுக்காக நீ சீக்கிரம் வர பாரு... அவளோட நிச்சயதார்த்தம் நின்னு போச்சு திரும்பவும் "
என்றான் மரத்த குரலில்...

"வாட்!!! என்னான்னா எப்படி விட்டீங்க... அந்த ராஸ்கல... நம்ம சௌமியாவிற்கு என்ன குறையாம்" என்றால் சுவாதி அளவுக்கதிகமான அதிர்ச்சி அடைந்த குரலில்...

"எல்லாத்தையும் நேர்ல தான் சொல்ல முடியும்... சீக்கிரம் உன் பாசமலர் புருஷன கூட்டிட்டு வீட்டுக்கு வந்து சேரு" என்று விட்டு பட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டான் ஆதித்யா.
மீண்டும் உள்ளே சென்ற சுவாதி அங்கு படுத்திருந்த நாத்தனாரை வன்மத்துடன் ஒரு நிமிடம் பார்த்து விட்டு தன் கணவனை தேடி சென்றாள்.

மலர்விழியின் கண்களில் இருந்து விடாமல் நீர் சொரிந்து கொண்டிருந்தது. அன்று காலைவேளையில் அப்பா அம்மா இருவரும் சிரித்த முகத்துடன் அவளை பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு டாட்டா காட்டிவிட்டு காரில் சென்றது நினைவு வந்தது. மாலையில் தொலைபேசி மூலம் அவளது பெற்றோர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி சொன்னவுடன் ...அளவுகடந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவளை அங்கு வேலை செய்யும் லட்சுமி அம்மாதான் முதலில் பார்த்து சுதாரித்து மகேஸ்வரனுக்கு கால் செய்து விஷயத்தை கூறி அழைத்தார்.

அதன்பிறகு அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தது. சண்முகசுந்தரம் சுமதி இருவரின் இறுதி சடங்கு முடிந்த பின்னும் மலர் தெளிவடைய வில்லை. சோறு தண்ணி இல்லாமல் மூலையில் ஒடுங்கிக் கிடந்தவளைப் பார்த்து மகேஷ்வரனும் துடித்துப் போனான்.

இறுதி சடங்கு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவளது நிலை மாறவில்லை. அப்பா அம்மா தவிர அவளது வாயிலிருந்து ஒரு வார்த்தையும் உதிரவில்லை.
மகேஸ்வரன் அரட்டி உருட்டியதால் நேரம் தவறாமல் இரண்டு வாய் உணவு மட்டும் உள்ளே சென்று கொண்டிருந்தது.
ஒருவாரம் ஆன பின்தான் மலர் சற்று தன்னிலை உணர்ந்து தெளிந்தாள். ஆனாலும் அப்பா அம்மா ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

சுவாதியும் கணவனுக்காக அவனது தங்கையை கவனித்துக் கொண்டாள். தன் அண்ணன் தனக்காக வேலையை விட்டுவிட்டு இருப்பதை கவனித்த மலர்விழி, மெல்ல மெல்ல தன்னை திடப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தாள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றாள்.

மறுநாள் சுவாதி மெதுவாக கணவனிடம் வீட்டுக்கு செல்வதை பற்றி மெல்ல பேச்சு கொடுத்தாள்.
வானதி தங்களை அதிகம் தேடுவதாக எடுத்துக்கூறி முயற்சி செய்தாள்.
அவள் கணவனும் உடனே ஒத்துக் கொண்டான்.
ஆனால் தன் தங்கையும் தன்னுடன் வர வேண்டும் என்றான். முதலில் அதிர்ந்த சுவாதி, பின் கோபத்துடன்...
"இது அவளோட வீடு தான ...இங்கே அவ சமாளிச்சுகுவா நீங்க வாங்க" என்றாள் விடாப்பிடியாக

"இங்க பாரு ஸ்வாதி ...வானதி ஒரு வாரம் நம்மல பிரிஞ்சு இருக்க முடியாமல் கஷ்டப்படுறது உனக்கு கண்ணுக்கு தெரியுது... ஒரு அம்மாவா உன்னால புரிஞ்சுக்க முடியுது... என் தங்கச்சியும் இப்போ அப்பா அம்மா இல்லாம தனியா கஷ்டப்படுவா... பாவம் சுவாதி அவ ப்ளீஸ்" என்றான் மகேஸ்வரன்.
மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும்... கணவனை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் சென்று விடவேண்டும் என்று நினைத்தவள் வேறு வழியில்லாமல் சரி என்று சொன்னாள்.

மகேஸ்வரன் மனைவியை சமாதானப்படுத்தி விட்டு தங்கையிடம் சென்று சொன்னால் அவளோ அடியோடு வர மறுத்து விட்டாள்.

தன் அப்பா அம்மா ஞாபகமாக இருக்கும் ஒரே இடம் இது ...இங்கு இருந்து எங்கே சென்றாலும் அவளால் இருக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டாள் தங்கை.

அவளின் மனதை கரைத்து தன்னுடன் அழைத்து செல்வதற்குள்... அவனுக்கு தலையில் சொட்டை விழாமல் இருந்தது கடவுள் புண்ணியம் தான்.

அண்ணன் தான் இங்கே இருந்தால் அங்கே அவனால் நிம்மதியாக இருக்க முடியாது என்று சொன்ன ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவள் தன் அண்ணனுடன் செல்ல சம்மதித்தாள்.

இந்த ஒரு வாரத்தில் சுவாதி மலர்விழியிடம் அவ்வளவாக பேசியது இல்லை. ஆனால் மலர் அடிக்கடி அழும் போது ஆதரவாக தலையை வருடி விடுவது ...கையை பிடித்து அழுத்தம் கொடுப்பது என்று பரிவுடன் தான் நடந்து கொண்டாள். அதனால் தான் அங்கு செல்வதால் அண்ணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்துதான் மலர் அங்கு செல்ல ஒப்புக்கொண்டது.

ஆனால் விதி என்ன எழுதி வைத்துள்ளதோ!!!

காரில் ஏறுவதற்கு முன் தங்கள் வீட்டை கண்கலங்க ஒரு முறை பார்த்தவள் காரில் ஏறி அமர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அடுத்து.... அவள் கண் திறக்கும் பொழுது கார் ஒரு பெரிய மாளிகையில் முன் நின்றது.
தன் அண்ணன் சூட்கேசை தூக்கிக்கொண்டு தனக்காக காத்திருப்பதை பார்த்ததும் வேகமாக இறங்கியவள் ...வீட்டின் செல்வ செழிப்பை பார்த்து மலைத்து நின்றாள்.

அவளது அப்பாவும் மத்தியதர பணக்காரர் தான்.ஆனால் இந்த அளவிற்கு பணத்தை தண்ணியாக செலவழித்து மாளிகை கட்டும் அளவிற்கு அல்ல... அளவாக வசதியாக இருக்கும் அவர்களது வீடு.
அவ்வீட்டின் முன்பகுதியில் கருப்பு நிற கோட் சூட்டுடன் பாடிகாட் போல நின்றவர்களை பார்த்தவுடன் மலர்விழிக்கு கை கால்கள் உதற ஆரம்பித்து விட்டது.
அண்ணன் அண்ணி முன்னால் செல்வதை பார்த்தவள் தயக்கத்துடன் தான் உள்ளே சென்றாள்.

ஆனால் தன் அண்ணன் மூலம் ...
தாங்கள் தங்க வேண்டியது அங்கு அல்ல ... பக்கத்து ஏரியாவில் இதேபோல் வசதியான இன்னொரு வீடு இருப்பதாகவும்... அதில் தான் தாங்கள் தங்கியிருப்பதாகவும்.. இப்பொழுது வானதியை கூட்டி செல்லவே இங்கு வந்ததாகவும் அவன் சொன்ன பின் தான் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

குழந்தை வானதியை சௌமியா வெளியில் கூட்டி சென்றிருப்பதாக வேலையால் ஒருத்தி சொன்னவுடன்.. மூவரும் அங்கிருந்து கிளம்பி அவர்களின் வீட்டுக்கு சென்றனர்.
அனைவரும் பயணக் களைப்பு தீர ஓய்வெடுத்தனர்.
உணவிற்கு பின் மகேஷ் முக்கிய வேலையாக இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.
சுவாதியும் வெளியே ஷாப்பிங் செல்வதாக அவளிடம் சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
மீண்டும் தனிமை கிடைத்தவுடன் பெற்றோர்களை நினைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் மலர்.


"சார் அந்த சுதாகரன் இப்போ அவனோட வீட்லதான் இருக்கானாம்... ஆனா முன்னெச்சரிக்கையா அந்த பொண்ணோட கல்யாணம் முடிச்சுட்டு வந்துட்டான் "
என்றான் ஆதித்யாவின் கையாள்...

டேம் இட்!!! என்று சீரிய ஆதித்யாவின் கார் வேகமாக சுதாகரின் வீட்டை அடைந்திருந்தது.

அவனது பின்னால் வந்த காரில் இருந்து அவனது பாடிகாட் அனைவரும் இறங்கினர்.
அவர்களை வெளியே நிற்குமாறு சைகை செய்துவிட்டு அவன் மட்டும் உள்ளே நுழைந்தான்.

சுதாகரனின் பெற்றோர்கள் ஆதித்யாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பயத்துடன் எழுந்து நின்றனர்.

"எங்க அந்த துரோகி சுதாகரன்...அவன உடனே வரச் சொல்லுங்க" என்று உறுமினான் ஆதி வெறி கொண்டவன் போல்...
சுதாகரின் பெற்றோர் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர்.

சரியாக அப்பொழுது ..."யார் துரோகி?" என்று அமைதியாக கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான் சுதாகரன் சாதரணமாக...
அவனை அடிக்க சென்ற ஆதித்யாவின் கை தானாக இறங்கி அவனது சட்டை காலரை சரி செய்தது...

"உனக்கு என்ன வேணும்?? சுதாகர்...ஹான் என்ன வேணும்?? என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க ???...நகை,பணம், பதவி செல்வாக்கு இதுல என்ன வேணும் சொல்லு" என்றான் ஆதித்யா அழுத்தமாக...

எதுவும் வேண்டாம் என்பது போல் தலையசைத்த சுதாகரன் ...
"எனக்கும் பத்மாவுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு ஆதித்யா... இனிமே அதைப் பத்தி பேசாதீங்க.. எங்களை யாரும் இனி பிரிக்கவே முடியாது"என்று விட்டான்.
"அதுக்கு இப்போ என்ன...? அவள உடனே டைவர்ஸ் பண்ணிட்டு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கோ" என்று உறுமினான் ஆதித்யா உக்கிரமாக...

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்த சுதாகரன் ...
"என்னோட மனைவி பத்மா இப்ப கர்ப்பமா இருக்கா" என்று கூடுதல் தகவலும் கொடுத்தான்.

அதைக் கேட்டதும்... ஆதித்யாவின் கண்கள் எரிமலையாக கொதித்தது. சுதாகரனின் கன்னத்தில் சூடாக அறைந்தவன்...
அங்கிருந்து வெளியேற வேகமாக நடந்தான்.
வாசல் வரை சென்றவன் திரும்பி சுதாகர் மற்றும் அவனது பெற்றோரை பார்த்து... "இதுக்கு நீங்க கண்டிப்பா தண்டனை அனுபவிப்பீங்க.." என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறி விட்டான்.

அந்த கோப கொதிப்புடன் இருந்தவனுக்கு சுவாதி கால் செய்யவும், தான் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும், அங்குவந்து மாற்றதை பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் பட்டென்று செல்லை அணைத்து விட்டான்.

லேசாக கண்ணயர்ந்து விட்ட மலர்விழிக்கு ...விழிக்கும் பொழுது தூரத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்கவும் கண்ணைத் திறந்தாள்.

அது அவளது அறையில் உள்ள தொலைபேசியின் சத்தம்தான்.
அதை அட்டென்ட் செய்தவள் எதிர் முனையில் அண்ணியின் குரல் பதட்டத்துடன் பேசவும் கூர்ந்து கவனித்தாள். சுவாதி ஷாப்பிங் முடித்து விட்டு வந்து கொண்டிருப்பதாகவும், அதற்குள் அவளது அண்ணன் ஆதித்யா வந்தால் சற்று சிரமம் பார்க்காமல் அவனை சற்று உபசரிக்க சொல்லி கால் செய்திருந்தாள்.
வேலை செய்பவர்கள் பலர் இருந்தாலும், வீட்டினர் போல் கவனிக்க முடியுமா??? என்று அவள் கேட்டது சரிதான் ...என்று தோன்றவே...
தான் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு தொலைபேசியை வைத்தாள் மலர்விழி.

தூங்கி வழிந்த தன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி துடைத்துவிட்டு சிறிய பொட்டிட்டு கொண்டவள். தனது நீள கூந்தலை கிளிப் கொண்டு அடக்கி விட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த வேலையாளை வெளியே அனுப்பிவிட்டு... தானே டீ போட்டவள் அதை கப்களில் ஊற்றி கொண்டிருக்கும்போதே... அவ்வீட்டில் யாருடைய குரலோ அதிர்ந்து ஒலித்தது.
டீ நிரம்பிய கப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள்... முதலில் பார்த்தது ஹாலின் வெளிப்புறம் பார்த்து திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு நெடியவனை தான்.

"என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது கருணா அவன் நிம்மதியா இருக்க கூடாது... அவனோட உடம்புல உயிரைத் தவிர எதுவுமே இருக்கக்கூடாது சரியா.."

"................."

"ஏய் இடியட் ...அவன தல தனியா முண்டம் தனியா ஆக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்... அப்படியெல்லாம் நான் செய்ய மாட்டேன் ...அவனுக்கு இந்த ஆதித்யா யாருன்னு தெரிய வேண்டாமா??... அவனோட கிரெடிட் கார்ட் பேங்க் அக்கவுண்ட எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணுங்க ..அவனோட வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் எப்பவுமே நம்ம ஆளுங்க அஞ்சாறு பேர நிக்க சொல்லுங்க... அவனோட வீட்டுக்குள்ள இருக்குற எல்லாருமே உயிர் பயத்தில தான் இருக்கணும்... அப்பதான் இந்த ஆதித்யா கிட்ட வச்சுக்கிட்டா என்ன ஆகும்னு தெரியும்..." என்று பேசிக்கொண்டே திரும்பியவன்...
தன் அழகிய கருவிழிகளை மேலும் விரித்து மருண்ட பார்வையுடனும் கைகளில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளை அப்போது தான் பார்த்தவன்...


" எல்லாம் நா சொன்ன மாதிரி சரியா நடக்கணும் கருணா" என்று சொல்லிவிட்டு செல்லை அணைத்தான்.

தனக்கு எதிரில் நின்றவளிடம்...
"நீ யாரு???" என்று அதட்டுவது போல் ஆதித்யா கேட்கவும்...
பயத்தில் வெட வெடத்தவள் கைகளில் இருந்த சூடான டீ கப்பை கீழே போட்டு உடைத்தாள்.

"யூ இடியட் அறிவு இருக்கா??" என்று அதட்டியவன் மீண்டும் அவளிடம்...

"நீ யார் ??இங்க எப்படி வந்த???"
என்று சந்தேகத்துடனேயே கேட்டான்.

"நான் மலர் ... மலர் விழி "என்றாள் திக்கித் திணறி...
"ஹேய் நான் அத கேக்கல... நீ எப்படி இங்க வந்த..." என்று கேட்டான் ஆதித்யா அதே அதட்டல் குரலில்...அவளைப் பார்க்கவே அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது .

"அண்...ணா.. அண்..ணி கூட்...டிட்டு வந்தா..ங்க" என்றாள் மீண்டும் குளிரில் நடுங்குவது போல்
நடுங்கிக்கொண்டே...

அவனுக்கு மீண்டும் கால் வர அவளை ஒரு பார்வை பார்த்தவன்... எதிர்முனையில் இருப்போரிடம் எரிந்து விழுந்து விட்டு காலை கட் செய்தான்.

மீண்டும் அவளிடம் ஏதோ கேட்பதற்குள் சுவாதி வந்துவிட்டாள்.

"அண்ணா" என்று வந்தவளை பாசத்துடனும் பார்த்தவன்... அவளிடம் நலம் விசாரித்துவிட்டு... அருகில் நின்றவளை யார்??? என்ன??? என்று விசாரித்தான்.

"என்னோட நாத்தனார்... அங்க இவளை தனியா விட மனசில்லாமல் மகி இங்க கூட்டிட்டு வந்துட்டார்" என்றாள் சுவாதி.


"ஓ கெஸ்டா டா.." என்று மலர்விழியை பார்த்தவன் பின் சுவாதியை தனியாக அழைத்து சென்று சௌமியாவின் நிலையை பற்றியும் சுதாகரன் செய்ததை பற்றியும் கூறினான்.
சௌமியாவை தான் பார்த்துக் கொள்வதாக சுவாதி கூறிய பின் தான் சற்று சமாதானம் அடைந்தான்.

அவன் சென்றபின் மலர்விழியின்
அறைக்கு வந்த சுவாதி அவள் அழுவதைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் அவள் அருகில் சென்றாள்.

சுவாதி மெதுவாக மலரிடம் கேட்கவும், "நான் இங்கு வந்தது அந்த அண்ணனுக்கு பிடிக்கலையோ அண்ணி... நான் எங்க வீட்டுக்கே திரும்பி போகட்டா "என்று அவள் கேட்கவும் ஒருவாறு விஷயம் புரிந்துவிட்டது சுவாதிக்கு.

"ஹே மலர்... அண்ணா எப்பவுமே அப்படித்தான் பேசும்... அதனால நீ எதையும் மனசுல வச்சுக்க வேண்டாம்... அதுமட்டும் இல்லாமல் இதுவும் எங்க அண்ணா வீடு தான்.. எனக்கு அண்ணா கிப்ட் பண்ணது தான் ...நீ கொஞ்ச நாள் பொறுமையா ரெஸ்ட் எடுத்துட்டு அதுக்கப்புறம் உன்னோட வீட்டுக்கு போகலாம்" என்று சொன்னாள் சுவாதி

அதாவது நீ உன்னோட வீட்டுக்கு போயிடணும் என்று மறைமுகமாக வலியுறுத்தினாள்.

அதைப் புரிந்து கொண்ட மலர்விழி எதுவும் பேசாமல் அமைதியானாள்.

அதன்பிறகு குழந்தை வானதி வந்ததையோ அவளை அத்தை என்று அழைத்துப் பேசிய எதையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

இரவு சாப்பாட்டின் போது தனக்கு இன் முகமாக பரிமாறிய அண்ணனை பார்த்தவள்...

உணவிற்குப் பிறகு அண்ணனை தனியாக சந்தித்து தான் இங்கே இருக்க விரும்பவில்லை என்று கூறினாள்.

ஏன் ?? என்றான் அண்ணன் மொட்டையாக ...
அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்துவிட்டு... எங்கோ பார்த்துக் கொண்டு "எனக்கு பிடிக்கல" என்றாள் தங்கை.

"சுவாதி ஏதாவது சொன்னாளா??" என்று கேட்டான் மகேஷ்.

"இல்ல அண்ணி சொல்றதுக்கு இதுல என்ன இருக்கு ... எனக்குத் தான் நம்ம வீட்டு ஞாபகம் அதிகமா வருது"என்று சொன்ன மலர்விழி வேதனையுடன் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

ஏதோ புரிந்து கொண்ட மகேஷ் கோபமாக சுவாதி என்று கத்திகொண்டே அறையிலிருந்து வெளியேறினான் .

அண்ணன் கத்துவதை கண்டு அதிர்ந்து மலரும் அவன் பின்னாடியே ஓடி அவனைத் தடுத்து நிறுத்தி அண்ணி எதுவும் சொல்லவில்லை என்றும் தான் அங்கேயே இருப்பதாக சமாதானம் சொன்னாள் மலர். தன்னால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்துதான் அவள் அப்படி செய்தது.

ஆனால் மறுநாள் காலையில் அவளது அண்ணியே சண்டையை ஆரம்பித்தாள்....!!!! அதில் அவளையும் உள்ளே இழுத்துவிட்டாள்.

தொடரும்....
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN