நெஞ்சம் 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“சாருகேசன் பங்களா”.. இதை பங்களா என்று சொல்வதை விட பெரிய மாளிகை என்று தான் சொல்லவேண்டும். ஒரு காலத்தில் மார்த்தாண்டத்திலும் சரி.. அதை சுற்றியுள்ள எந்த இடங்களாக இருந்தாலும் சரி... திரைத்துறையினர் படப்பிடிப்புக்கு என்று இங்கு வந்தால்... இந்த மாளிகையில் தான் படப்பிடிப்பு நடக்கும்.


பல பெரிய நட்சத்திரங்கள் கால் பதித்த இடம். பல ஊர்.. பல நாட்டு வாசிகள் திரையில் வாய் பிளக்க... கண்டு ரசித்த மாளிகை இது. இம்மாளிகையை வடிவமைத்து கட்டும் போதே... திரைத்துறைக்கு என்ற நோக்கத்தில் கட்டினார் சாருகேசன். அப்படி பட்ட இந்த மாளிகையில் இன்று வாழ்வது அவரின் மகன் குடும்பம்.


விடிந்தும் விடியாத அந்த காலைப்பொழுது வேளையில்... நுழை வாயிலில் காவலாளி வாயைப் பிளந்த படி அவனுக்கான இடத்தில் இருக்கையில் தூங்கிக் கொண்டிருக்க.. தோட்டக்காரன் துண்டை முண்டாசாய் தலையில் கட்டிக் கொண்டு... தன் வேலையை ஆரம்பிக்க ஆயத்தமாக...


மாளிகையின் உள்ளேயிருந்த எல்லா அறையிலும் இருள் சூழ்ந்திருக்க... மாடியில் உள்ள ஒரு அறையில் மட்டும்... விடிவிளக்கின் ஒளியில் அங்கிருந்த பாவை மட்டும்... அமைதியில்லாமல் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டிருந்தாள்.


“இந்நேரம் ப்ளைட் வந்திருக்குமே...” என்று கேட்டுக் கொண்டவள்...

“இல்ல இல்ல.. மணி இப்போ நாலு தானே ஆகுது.. ஐந்து.. ஐந்தரைக்கு தான் பிளைட் லேண்ட் ஆகும்... நான் தான் கூகுளில் சர்ச் செய்து பார்த்தனே...” தானே அதற்கு அவள் பதிலையும் சொல்லிக் கொண்டாள்.

தற்போது அவள் அவளுடைய உயர்தர மெத்தையில் மெத்தென அமர்ந்து கொண்டு... விரலில் உள்ள நகங்களைக் கடிக்க ஆரம்பித்தவளோ...

“ச்சே... ரொம்ப டென்ஷனா இருக்கு... அவர் கிளம்பினாரா இல்லையா... நல்ல மாதிரி இந்தியா வந்துட்டாரா.. இப்போ பிளைட்டிலிருந்து இறங்கி இருப்பார் தானே...” மறுபடியும் தானே கேள்விகளை அடுக்கிக் கொண்டவள்... பின் எழுந்து ஜன்னலின் திரைச்சீலைகளை விலக்கி... வான்வெளியை நோக்க.. அதுவோ மையிருட்டாய் காட்சி அளித்தது.

“ப்ம்ச்... இந்த ஆதவன் கொஞ்சம் சீக்கிரமா எழுந்தா தான் என்ன... இன்றைக்குன்னு பார்த்து இப்படி தூங்குது... எனக்கு தான் தூக்கமே இல்லை. இதோ இப்ப வரை புலம்பிட்டே இருக்கேன். எல்லாம் அவரால்.. என்னை இப்படி புலம்ப வைப்பதே அவருக்கு வேலை” இதை சொல்லும்போதே... தன்னை மீறி கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பினாள் அவள்.

பின், துக்கம் தாங்காமல் ஓடிச் சென்று கட்டிலில் விழுந்தவள், “என்னை தான் அவருக்கு பிடிக்காதே! என்னை யாருக்கு தான் பிடிக்கும்.. அவருக்கு பிடிக்க?.. நான் மட்டும் அவருக்காக அவரை நினைத்து இங்கே இரண்டு வருஷமா அழுதிட்டு இருக்கேன். ஆனா அவருக்கு என் முகம் ஞாபகம் கூட இருக்காது.. மறந்திட்டு இருப்பார்... மறந்தே போய்ட்டார்...” இன்னும் இன்னும் பிதற்றலில் அவளின் தளிர் மேனி நடுங்கியது. அதில் குலுங்கி குலுங்கி அழுதாள் அவள்.

உண்மையில் இந்த பாவைக்கு அழ மட்டும் தான் தெரியும். அதிலும் இருட்டில்.. யாரும் காணாத அந்தகார இருட்டில் அழத்தான் தெரியும்... இந்த பாவை இவ்வளவு நேரம் நினைத்த.. தன்னைத் தானே பித்துக் கொள்ளியாய் திரிய வைத்த அந்த “அவன்” இந்தியா வந்து இறங்கியிருக்க... இதை எதையும் அறியாமல் விசும்பலுடன் தன்னை மீறி தூக்கத்தில் ஆழ்ந்தாள் பாவை.

“ஊப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்ற பெரும் இரைச்சலுடன் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு திருவனந்தபுரத்தின் தரையை முத்தமிட்டது அந்த பன்னாட்டு விமானம். பன்னாட்டு விமானம் என்பதால் பலதரப்பட்ட தலைகள் அதிலிருந்து வெளியேற, அதில் தானும் ஒருவனாய் கம்பீரத்துடன், ஸ்டைலாக தான் அணிந்திருக்கும் கோட்டின் பட்டனைப் பூட்டியபடி வெளியே வந்தான் விதுனதிபாகரன்.

குடும்பத்தார், தொழில் இடத்தில் மற்றும் நண்பர்களுக்கு அவன் திபாகர். ஆனால் அவன் மனைவிக்கு? இவன் எல்லா சம்பிரதாயங்களும் முடித்து வெளியே வர.. மணி ஆறு என்று காட்டியது. இவனைக் கண்டதும்,
“வெல்கம் திபா” என்ற படி பூங்கொத்து ஒன்றை நீட்டினான் அவன் நண்பனும் அவன் தொழிலின் பங்குதாரருமான கார்த்திக்.

“ஹாய் டா!” என்றபடி நண்பனை அணைத்து விடுவித்தவன் பின் அதே உற்சாகத்துடன் காரில் ஏறி, “காரை பாக்டரிக்கு விடு டா” என்று சொல்ல

நண்பனின் குணம் தெரிந்திருந்தும், “என் கிட்ட நீ அடி வாங்கப் போற... நீ வெளிநாடு போய் ஒரு வருஷமாச்சு.. வீட்டில் இருக்கிறவங்களுக்கு உன்னை பார்க்க ஆசை இருக்காதா... என்னமோ பாக்டரிக்கு போக சொல்கிற.. வீட்டுக்குப் போகவா?” என்று இவன் கேட்க

விதுனதிபாகரனோ, “நான் சொன்னதைச் செய் டா” என்று உத்தரவியிட்டவன் அடுத்து தன் கைப்பேசியை எடுத்து அதிலுள்ள வால்பேப்பர் புகைப்படத்தில் தானும் தன் மனைவியும் மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் நிற்பதைப் பார்த்து இளநகை புரிய கண்டு ரசித்தவனோ, உதட்டைச் சிறியதாய் அசைத்து,

“வந்துகிட்டே இருக்கேன் ரிது டார்லிங்” என்றான் காதலுடன்.

‘ரிது டார்லிங்' இப்படி தான் மனைவியின் எண்ணைத் தன் கைப்பேசியில் பதித்து வைத்திருப்பான். ஆனால் திருமணம் முடிந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை தன்னவளுக்கு அதாவது அவனுடைய உயிருக்கு அழைத்திருக்கிறாய் என்று யாராவது கேட்டால், ‘இல்லை’ என்பதை கேட்பவரின் கண் பார்த்து தயங்காமல் ஒற்றுக் கொள்பவன். ஏனென்றால் அது தான் உண்மை. எதிலும் உண்மை விளிம்பி இவன்! இது தான் நம்ம விதுனதிபாகரன்.

‘கடலரசி ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் பாக்டரி’ என்ற பெயர் பலகையைப் பார்த்ததும், இவனுக்குள் மகிழ்ச்சி குமிழிட, கர்வம் தலை தூக்கியது. உள்ளே விரைந்து தன்னுடைய சீட்டில் சென்று அமர்ந்தவனுக்கு, தன் தாயின் கருவறைக்குள்ளே வந்து சேர்ந்த சந்தோஷம் நிறைந்தது. ஏதோ அவன் மூச்சுக் காற்று இங்கு தான் இருப்பது போல் ஆழ்ந்து சுவாசித்து அந்த அறையின் காற்றைத் தன் நுரையீரலுக்குள் நிரப்பினான் இவன்.

சிறு வயதிலிருந்து அவனுடைய லட்சியம், ஏன்… சுவாசமே இப்படி ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான். அதிலும் திருமணத்திற்குப் பிறகு அவனுக்குள் ஒரு வெறியே இருந்தது என்று கூட சொல்லலாம். அதனால் தான் தன் தாய் தங்கைகள் மேல் பாசம் இருந்தாலும்…. முதலில் பாக்டரியைக் காண இங்கு வந்து விட்டான்.

அந்நேரம் அவன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வர, அது சிறிய தங்கை தவமதியிடமிருந்து வந்தது என்று தெரிந்ததும் மலர்ந்த புன்னகையுடன் மடிக்கணிணியை உயிர்ப்பித்தவன், வீடியோ அழைப்பில் வீட்டில் உள்ளவர்களிடம் பேச, தாயிலிருந்து அவன் மூன்று தங்கைகள் வரை அனைவருக்கும் அவனைக் கண்டு பேசியதில் சந்தோஷம். நேற்று தான் ஜெர்மனியிலிருந்து விமானத்தில் ஏறுவதற்கு முன் வீடியோ அழைப்பில் அவர்களிடம் பேசியிருந்தான். ‘ஒரு நாளுக்குள் இவ்வளவு சந்தோஷமா இவங்களுக்கு!’ என்றிருந்தது அவனுக்கு.

‘இவர்களே இப்படி என்றால் எதுவும் சொல்லாமல் திடீரென்று தன்னவள் முன் நான் சென்று நின்றால் அவளின் சந்தோஷம் எப்படி இருக்கும்? வார்த்தை வராமல்... நேசத்தோடு பார்த்து... உதடு துடிக்க காதலோடு.. தன்னவள் கைகள் என்னைத் தழுவிக் கொள்ளாதோ…’ அதைக் காண ஆசைப்பட்டது இவன் மனது.

‘இந்தியா வந்துட்டேன் டார்லிங் உன் முன்னாடி சீக்கிரமே வந்து நிற்பேன். நீ, நான், என் அம்மா, தங்கைகள்னு நாம் எல்லோரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்க போகிறோம்’ என்று காதலோடு தன்னவளின் நினைவில் திளைத்துக் கொண்டிருந்தவனின் முன்பு ஒரு கவரை வைத்தான் கார்த்திக்.

தற்போது அதை படிக்க நேரம் இல்லாததால்... கவரை மடித்து கோட் பாக்கெட்டில் வைத்தவன்.... பின் பாக்டரியை பார்வையிட சென்று விட்டான்.

இவன் காலை பத்து மணிக்கு வீடு வந்தடைய... வாசலில் இவனை வரவேற்க இரு தங்கைகளும் சேர்ந்து சிரத்தையாய்... சாலையை அடைத்து வரைந்த கலர் கோலம் இவனை வரவேற்றது. அதை கண்டு புன்னகைத்தவன் தங்கள் வீட்டை நெருங்க.. வாசலிலே அண்ணன் கரத்தை ஓடி வந்து பற்றிக் கொண்டார்கள் குலமதியும்.. தவமதியும்.

“எப்படி ணா இருக்க..” இருவரும் ஒருசேர கேட்க...

மகனைக் காண, “ராசா... என் ஐயா... என் சாமி..” என்ற அழைப்புடன் விரைந்து வந்து அவனை கட்டிக் கொண்டார் அவனின் தாய்...

“ம்மா...” இவன் குரலோ பிரிவின் துயரத்தில் ஒலித்தது

“எப்படி ராசா இருக்க... என்ன ப்பா இப்படி துரும்பா இளைச்சிருக்க...” தாய்க்கே உரிய கேள்வியில் இவன் புன்னகைக்க

இந்த பாசக்காட்சிகளை அங்கிருந்த மற்ற குடுத்தனக்காரர்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். சிலர் சந்தோஷமாக... சிலர் பொறாமையாக...

“என்ன தமிழ்.. சீமைக்குப் போன உன் பையன் வந்துட்டான் போல...”

“வந்த பிள்ளையை என்ன இப்படி வெளியவே நிற்க வச்சிருக்க... உள்ளே அழைச்சிட்டு போ...”

“நீ இப்படி வர்றத பார்க்க உன் அப்பனுக்கு கொடுத்து வைக்கல. மூணு பொட்ட பிள்ளைகளையும்... உன் தாயையும் உன் தலையில் கட்டிட்டு.. அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான்... ஹும்... விதி யாரை விட்டது...”

“அட.. திபாகரனுக்கு என்ன ப்பா... கோடீஸ்வரன் வீட்டு மருமகன்.. பணத்திற்கா பஞ்சம்? எல்லாம் சமாளிப்பான்...”

இவ்வளவு நேரம் அங்கிருந்தவர்களின் பேச்சை இன்முகமாய் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு... கடைசியாய் பேசியவரின் பேச்சைக் கேட்டு இவன் உடல் இறுகியது. அதற்குள் அவனின் மூத்த தங்கை சித்ரா... ஆரத்தி தட்டுடன் வெளியே வந்து இவனுக்கு ஆரத்தி சுற்ற... பின் குடும்பமே தங்களது வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

“திபாகரா.. போய் குளித்துட்டு வாயா... காலை பலகாரத்துக்கு... உனக்கு பிடித்தது எல்லாம் செய்து வச்சிருக்கேன்... வந்து சாப்பிடு... ஒரு வருஷம் ஆச்சு என் பிள்ளைக்கு நான் பரிமாறி...” தாய் சொல்லவும்....

பின்புறமிருந்த குளியல் அறைக்குள் புகுந்தான் விதுனதிபாகரன்... இது பல குடும்பங்கள் குடியிருக்கும் காம்பவுண்டு வீடு தான். ஆனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் தனிமைக்கு ஏற்ப குளியலறை.. கழிவறை எல்லாம் அந்தந்த வீட்டுடனே அமைந்திருந்தது.

இவன் குளித்து விட்டு வர... சமையலறையில் உள்ள ஒரு ஷெல்பில் சில சாமி படங்கள் இருக்க... அதன் முன் ஒரு தட்டில் சில பூக்கள் வீற்றிருந்தது. இது திபாகரன்.. சிறுவயது முதலே பழகிய பழக்கம். கடவுளே சகலமும் என்பது போல்... தீவிர பக்தி கொள்ளாமல்... அதற்காக நாத்திக வாதியாகவும் அல்லாமல்... தங்களை ஆட்டுவிக்க ஒரு சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

அதன் விளைவே... தினமும் தெய்வப்படங்களுக்கு பூ இட்டு... அதன் முன் கரம் கோர்த்து.. ஐந்து நிமிடம் கண் மூடி நின்று விடுவான். அந்த வழமை போல... இன்று பூச்சூடி.. இமைகளை மூட எத்தவனின் பார்வையில் பட்டது.. சற்று தள்ளியிருந்த அவன் தந்தையின் புகைப்படம். அதற்கும் சந்தன பொட்டிட்டு பூச்சூடி தாய் ஊது பத்தி ஏற்றியிருக்க... தந்தை கடலழகனைப் புகைப்படமாய் கண்டவனுக்கு மனதிற்குள் பிசைந்தது.

‘நீங்க மட்டும் கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருக்கலாம் ப்பா... உங்க அவசரத்தால் என்ன கண்டீங்க... இப்போ நாங்க எல்லோரும் அனாதையா இல்ல இருக்கோம்..’ என்று தனக்குள் கேட்டு கொண்டவனின் விழிகளிலோ நீர் படர்ந்தது. மகனின் மனநிலை புரிய.. தமிழரசி மகனின் தோளை ஆதரவாய் தொட...

“ம்மா...” என்ற அழைப்புடன் அவரின் கையை இறுக்க பற்றிக் கொண்டான் திபாகரன்.

காலை உணவின் போது கார்த்திக்கும் வந்திருக்க.. “வாப்பா, நீயும் சாப்பிடு...” வந்தவனை தமிழரசி சாப்பிட அழைக்க

இங்கே சாப்பிடறது எனக்கு என்ன புதுசா... என்ற எண்ணத்தில்... சட்டென தரையில் சம்மணமிட்டு அமர்ந்து விட்டான் கார்த்திக்.

இந்த வீட்டில் உணவு மேஜை எல்லாம் கிடையாது. யாராவது பெரிய மனிதர்கள் வீடு தேடி வந்தால்... எங்கோ மூலையில் தூங்கும் நாலு நாற்காலிகளைப் பிரித்து... கூடத்தில் போடுவார்கள்... அவ்வளவு தான் இவர்கள் வசதி.

உணவை முடித்ததும் “கார்த்திக் இன்னைக்கு ஒரு நாள்... அம்மா... தங்கைங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றேன் டா.. நாளைலிருந்து கம்பெனிக்கு வரேன்... நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ டா..” என்று திபாகரன் நண்பனிடம் கெஞ்ச

“அடி வாங்கப் போற... எனக்கு தெரியாதா? நீ இரு.. நான் பார்த்துக்கிறேன்...” நண்பனுக்கு சொன்னவன் பின் தமிழரசியிடம்
“சரிங்க ம்மா... அப்போ நான் கிளம்பறேன்...” என்றவன்.. பொதுவாக எல்லோரிடமும் விடைபெறுவது போல் தலை அசைத்தவன்.. அங்கு சமையலறை வாயிலில் நின்று எட்டிப் பார்த்த தன்னவளிடம் மட்டும்... தன் விழி அசைவால் இவன் “போயிட்டு வரேன்...” என்க..

அதற்கு தன்னவனுக்கு தானும் விழியாலேயே பதில் தந்தாள் சித்ரா.

அதன் பின் திபாகரன் அனைவரிடமும் பேசி... தான் வாங்கி வந்த பொருட்களைப் பிரித்து.. குடும்பத்தார்க்கு தந்தவன்... பின் மதிய உணவையும் உண்டு முடித்து இவன் படுக்கச் செல்ல...

“சரி இப்போ எல்லோரும் படுக்கப் போங்க... சாயந்திரம் குடும்பமா நாம கோவிலுக்குப் போகணும்” என்று தன் பிள்ளைகளை தமிழரசி விரட்ட

கூடத்தில் பாய் விரித்து தங்கைகளும்.. தாயும் படுத்து விட... அந்த வீட்டிலிருக்கும் ஒரே படுக்கை அறையில் கட்டிலின் மேல் சயனித்த திபாகரனின் செவிகளில் தாய் சொன்ன ‘நாம குடும்பமா கோவில் போறோம்...” என்ற இவ்வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப வந்து மோதியது.

‘அது எப்படி அவ இல்லாம இவங்க மட்டும் என் குடும்பம் ஆக முடியும்.. அவ இப்போ எப்படி இருக்கானு தெரியல.. அவ இன்று இல்லாம தான் நாம் கோவிலுக்கு போகனுமா.... இந்த அம்மா ஏன் இவ்வளவு அவசரப்படறாங்க... இன்னும் ஒரு நாலு நாளில் அவளும் வந்திடுவா.. அவ வந்த பிறகு கோவிலோ எங்கேயோ போகலாம் இல்ல? ரிது சீக்கிரமா இங்க வந்துடு டி...” என்று தன் மனைவிக்காக தன்னுள்ளே வாதிட்டு.. அவளை மனதிற்குள்ளேயே அழைத்துக் கொண்டிருந்தான் இவன்.

விதுனதிபாகரனின் மனைவி.. பெரும் செல்வந்தரும் பரம்பரை பணக்காரருமான தொழிலதிபர் மகிழ்வரதனின் ஒரே மகள். மனைவி வசதிக்கு இந்த வீடு வசதிப்பட்டு வராது என்பதால்... ஜெர்மனியில் இருக்கும் போதே நண்பனான கார்த்திக்கிடம் சொல்லி... ஓரளவு வசதியான வீடே பார்க்க சொல்லியிருந்தான். இவன் தேடின மாதிரியே வீடும் கிடைத்து விட... தற்போது அந்த வீட்டு உரிமையாளரை நேரில் சந்தித்து... அட்வான்ஸ் தான் தர வேண்டும். அதையும் நாளைக்கு செய்து விடுவான்.

அதன் பின் வல்லவன் சாரிடம் பேசி தன் மனைவியை அழைத்து வர வேண்டும் என்பது தான் இவன் திட்டம். வந்த பிறகு... இதை நினைக்கும் போதே இவன் முகம் காதலைத் தத்தெடுக்க ‘ரிது டார்லிங்... வா.. வா.. இங்க வா.. அதன் பிறகு உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியாம பார்த்துக்கிறேன்...’ என்று தன்னுள் சொல்லிக் கொண்டவனின் இதழிலோ ரகசிய புன்னகை ஒன்று குடியேறியது.

பின் அவனைவரும் மாலை கோவில் சென்று திரும்பும் போது.. இரவு உணவை வெளியிலேயே முடித்துக் கொண்டார்கள். அப்போதெல்லாம் திபாகரனுக்கு மனைவியின் நினைவு தான்.
‘அவளும் இப்போ கூட இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்!’ என்று நினைத்தவனின் மனமோ ‘இனி அவ வந்த பிறகு தான்.. வெளியே குடும்பத்தோட போற நிகழ்வை பற்றியே யோசிக்கணும்’ என்று தீர்மானித்தது.

இரவு மூன்று தங்கைகளும் படுக்கையறையில் உள்ள கட்டிலில் படுத்துக் கொள்ள.. தமிழரசி சமையலறையில் ஒரு ஓரமாய் படுத்துக் கொள்ள.. தான் மட்டும் கூடத்தில் பாய் விரித்து படுத்துக் கொண்டான் திபாகரன். தந்தை உயிரோடிருந்த வரை அவரோடு தான் கூடத்தைப் பகிர்ந்து கொள்வான்.

கடந்த பதினைத்து வருடங்களாய் இந்த காம்பவுண்டு வீட்டில் குடியிருக்கிறார்கள் திபாகரனின் குடும்பம். எந்த ஆண் துணையும் இல்லாமல்.. தங்கைகளையும் தாயையும் விட்டு இவன் வெளிநாடு செல்ல முடிவு எடுத்த போது... இந்த காம்பவுண்டு வீட்டு வாசிகளை நம்பியும்.... அம்மாவும்.. தங்கைகளும் பழகிய இடம் என்பதால் தான் மனதில் சஞ்சலம் இல்லாமல் கிளம்பிச் சென்றான் இவன்.

படுக்கையில் சரிந்தவனுக்கு மனைவியின் நிகழ்வுகள் எழவும்.. அதில் தன் கைப்பேசியை எடுத்து அவளின் புகைப்படத்தைக் கண்டவன்,
“ஓய்.. ரிதும்மா.. என்ன செய்ற? தூங்கிட்டியா... எனக்கு தான் டி தூக்கமே வரல.. இங்கே வந்ததிலிருந்து உன் ஞாபகமாவே இருக்கு.. போனில் பேசுவதை விட நேரில் உன்னை பார்த்து.. இறுக்க அணைத்து பேசணும்னு ஆசையா இருக்கு. நாளைக்கே உன் அப்பா வீட்டுக்கு வரேன் டி...” என்று காதலோடு சொன்னவனின் இதழோ... தன்னவளின் பட்டு கன்னத்தில் பதிந்து விலகியது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN