teaser

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“சக்தி, எங்க டி இருக்க?”

“வி.ஐ.பி என்ட்ரன்ஸ் பக்கம் உள்ள தோட்டத்தில். ஏன் டா?”

“போன வைக்காதே... நீ அங்கேயே இரு… இதோ வரேன்”

“ஏன் டா? டேய்... டேய்...” இவளின் கத்தலில்,

“அம்மா தாயே, நீ இருக்கும் இடத்த தெரிஞ்சிக்கத் தான் லைன்லயே இருக்கச் சொன்னேன். ஆனா இப்படி கத்தியே கூப்பாடு போட்டு நீ இருக்கிற இடத்தை எல்லோருக்கும் காட்டிக் கொடுத்திருவ போல” என்று தமக்கையை வாரிய படி அங்கு வந்தான் ஜோஷித்.

“என்னை எதுக்கு டா இங்க நிற்கச் சொல்ற? R.V உள்ளே போய்ட்டார்… நான் போகணும்” இவள் கோபப் பட

அவனோ, “உன் ஹீரோவை நீ பார்த்திட்டியா? நானும் என் ஹீரோவைப் பார்த்திட்டு தான் டி உன்கிட்ட அதைப் பற்றி சொல்ல வந்தேன்” என்க

“டேய்! அவனை எல்லாம் ஹீரோனு சொல்லாதேன்னு சொல்லியிருக்கேன் இல்ல?” என்ற படி இவள் தம்பியை முறைக்க

“போடி! நீ என்ன… இந்த உலகமே அவரை ஹீரோ இல்லைனு சொன்னாலும் எனக்கு அவர் ஹீரோ தான் டி. என்ன ஹேண்ட்சம் தெரியுமா அவர்?” இவன் தன் ஹீரோவைப் புகழ

“டேய் டேய்… நிறுத்து நிறுத்து. அவனெல்லாம் ஹீரோவா டா? பொண்ணுங்களை கதறக் கதறத் தூக்கிட்டுப் போய் அசிங்கம் செய்றவனும், பொண்ணுங்க முகத்திலே ஆசிட் ஊற்றுபவன் எல்லாம் ஹீரோ வா? புல்ஷிட்! அவனும் அவன் மூஞ்சியும் நல்லா பொன்னம்பலத்துக்குத் தம்பி மாதிரி இருக்கான்… அவன் முகத்தை எல்லாம் கொஞ்ச நேரம் உற்று பார்க்க முடியுமா டா.. உவ்வ… அவன் போய் ஹீரோவாம்… நாளைக்கு அவன் மனைவி எப்படி தான் அவன் கூட ஜோடியா வெளியே போவா தெரியல” இவள் கோபத்தோடு சற்று இளக்காரமாய் தம்பி ஹீரோவை சொல்ல

“ஏய்... நிறுத்திறீயா… நீ எல்லாம் சினிமா துறை வாரிசு மாதிரியா பேசுற? அதெல்லாம் நடிப்பு டி. ஏன்? அதே அவர் ஹெலிகாப்டரிலிருந்து ஷிப்ல குதித்து ஃபைட் செய்தாரே… அதைச் சொல்ல வேண்டியது தானே?” தன் ஹீரோவை அக்கா திட்டிவிட்டாளே என்ற கோபம் அவனுக்கு.

“அவர் முகத்துக்கு என்ன டி.. திலீப் சார் மட்டும் ஹீரோவா நடிக்க ஆரம்பித்தா உன் ஹீரோ எல்லாம் அவர் பக்கத்திலே கூட நிற்க முடியாது. ஆனா அவர் தான் எனக்கு வில்லன் கேரக்டர் தான் பிடிக்குதுன்னு பிடிவாதமா அதையே நடிக்கிறார்” ஆண் பிள்ளைகளுக்கே உள்ள ஈர்ப்பில் இவன் தன் ஹீரோவைப் புகழ, மேற்கொண்டு என்ன பேசியிருப்பானோ? அப்போது அவன் நண்பன் ஒருவனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வரவும், “அக்கா, இங்கேயே இரு… இதோ வந்திடுறேன்” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து பறந்திருந்தான் அவன். தம்பியிடம் பேச இவள் ஒதுக்குப்புறமாக வரவும், இவ்வளவு சம்பாஷனைகள் நடந்தேறியது.

“ஹீரோவாம் ஹீரோ... யாரு? அவனா? நல்லா தார் ஊற்றி வைக்கிற பேரலுக்கு கை கால் முளைத்த மாதிரி இருப்பானே அந்த திலீப்… அவனா? அட கிரகமே!” தம்பி அங்கில்லை என்றாலும் தன் ஆதங்கத்தைக் கொட்டியவள் தன் தலையிலே அடித்து கொண்டு நடக்க

ஓரிடத்தில் அவள் அணிந்து இருந்த லெஹங்காவே அவளைத் தடுக்கி விட, “அம்மாஆஆ!’ என்றபடி இவள் விழயிருந்த நேரம், ஒரு வலிய கரம் அவளைத் தாங்கிப் பிடிக்க முயற்சித்தது.

அவளுடைய சமவயதுப் பெண்களுடன் ஒப்பிடுகையில் சக்திநிஹாரிகா சற்றே உயரமானவள். அதற்கேற்ற உடற்கட்டுடன் சினிமா தயாரிப்பாளரின் மகளாக அழகில் ஜொலிப்பவள். இவள் கீழே சாய, எதிர்பாராத இந்த சம்பவத்தால் இவளைத் தாங்க வந்தனும் தடுமாற, அதில் அவளின் இடுப்பைச் சுற்றித் தன் கையைப் படரவிட்டவனோ அவளின் வெற்று இடையில் தன் பலத்துடன் கூடிய அழுத்தத்தைக் கொடுத்து, கூடவே அவளின் கழுத்து வளைவில் பட்டும் படாமல் தன் உதடுகளை உரசிய படி தன் காலில் பலம் கொடுத்து இவன் நிதானித்து நிற்க, கண்களை மூடி பாதி விழப்போகும் நிலையில் இருந்தவளின் உதடுகளோ தாம் தப்பித்தோம் என்ற நிம்மதியில் அவளையும் மீறி,

“thanks sir… thanks sir” என்று முணுமுணுக்க

“ம்ம்ம்” என்ற படி அவளை ஸ்திரமாக நிற்க வைத்தவன், “இனி பார்த்து வாங்க” என்று சொல்ல

அடுத்த நொடி அவனின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது அவளின் விரல்கள். இவனோ, “ஏய்!” என்று பல்லைக் கடித்தபடி அவளை அடிக்க கை ஓங்க,

“how dare u r... u dirty fellow. தினமும் கூலிக்கு மாரடிக்கிற பிச்சைக்கார நாய் நீ. ஒரு மகாராணியான என்னைத் தொடுவியா? பிச்சிடுவேன் பிச்சி... ராஸ்கல்!” என்று தன் தம்பியின் ஹீரோவான, சினிமாவில் வில்லனான, அவளுக்கு காமுகனான திலீப் என்று அழைக்கப்படுகிற திலீப் ஆருஷனைத் தான் அடித்து எச்சரித்து விட்டு அங்கிருந்து அகன்றாள் அவள்.

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
மூன்று வருத்திற்குப் பிறகு…

இந்திய சினிமா துறையே அந்த மண்டபத்தில் கூடியிருந்தது. தன் வில்லன் நடிப்பால் எல்லோரையும் கவர்ந்து தங்கத் தாமரை, வெள்ளித் தாமரை, ஏன்… தேசிய விருது வரை இந்த இரண்டு வருடத்தில் வாங்கிக் குவித்து சாதனை படைத்த, ரசிகர்களால் செல்லமாய் ‘வில்லாதி வில்லன்’ என்று அழைக்கப்படும் தி கிரேட் ஆர்டிஸ்ட் திரு. திலீப் ஆருஷன் திருமண வைபவத்தைக் காணத் தான் இன்று எல்லோரும் கூடியிருக்கிறார்கள்.

ஐயர் மந்திரம் சொல்ல, அவர் முன் அதையே திரும்பச் சொல்லியபடி பாந்தமாய் அமர்ந்திருந்தான் திலீப் ஆருஷன். சற்று நேரத்திற்கு எல்லாம் பெண்ணை அழைத்து வரச் சொல்ல, சர்வ அலங்காரத்துடன் குனிந்த தலையை நிமிர்த்தாமல் மனதில் சொல்லொனாத வேதனை மற்றும் வெறுப்புடன் அடி மேல் அடி வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள் சக்திநிஹாரிகா.

மணமேடையை ஏறும் போது மட்டும் அவள் கால் தயங்க, “ஏய் லூசே, இவ்வளவு தூரம் வந்த பிறகு உனக்கு இன்னும் என்ன தயக்கம்? அப்பா உன்னையே பார்க்கிறார் பார்” என்று அவள் தம்பி சிறு குரலில் அதட்டி எடுத்துச் சொல்ல, இவளோ தந்தையைத் திரும்பிப் பார்க்க,

கம்பீரமாய் இருந்த அவரோ உடல் எல்லாம் ஒடுங்கிப் போக, செயலிழந்த தன் இடது கையை மார்பில் வைத்த படி சக்கர நாற்காலியில் அமர்ந்து, “போய் மணவறையில் உட்கார் டா” என்று தன் மகளிடம் அங்கிருந்த படியே மெதுவாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்திலும், ‘அப்பாவின் கம்பீரக் குரல் திரும்பக் கிடைக்குமா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள், ‘அதற்காக தானே வில்லாதி வில்லனான எனக்குப் பிடிக்காத இவனுடனான இந்த திருமணம்! என் அப்பா, அம்மாவின் பழைய சந்தோஷத்தை அவர்களுக்குத் திரும்ப கொடுக்கணும். எங்கள் சொத்துகளை மீட்கணும். தம்பியை நல்ல நிலைக்கு கொண்டு வரணும். அதற்குப் பிடிக்காத இவனின் தாலியை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை’ என்ற முடிவுடன் இவள் வந்து அமர, அடுத்த நொடி... தன் கையால் அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை ஏற்றினான் திலீப் ஆருஷன்.

என்ன தான் மனதை சமாதானம் செய்து கொண்டு வந்து இருந்தாலும்.. அவன் கையால் மாங்கல்யம் வாங்கும் போது அவளையும் மீறு அவள் கண்ணில் இருந்து கண்ணீர் தேங்கி… அவன் கையில் விழுந்தது… அவளின் அழுகையை கண்டு கொண்டவனோ.. “எதற்கு இந்த அழுகை.. உன் பாஷையில் சொல்லனும்னா உன்னை என்ன கதற கதற தூக்கிட்டு போய் கற்பழித்தேனா என்ன… பிச்சைக்கார நாயான நான் முறைபடி ஊர் கூட்டி தானே உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கேன்.. பிறகு என்ன? தாழ்ந்த குரலில் கணவன் அனல் பறக்க கேட்கவும்

ஏதோ ஒரு நினைவில் அந்த இருபது வயது பெண்ணவளுக்கு உடல் நடுங்கியது

தங்கள் குடும்பத்திலிருந்த பழைய சந்தோசம், கலகலப்பு, செல்வாக்கை மீட்க இவள் இவனைத் திருமணம் செய்ய... அவளையாவது அவனிடமிருந்து மீட்க விடுவானா இந்த வில்லாதி வில்லன்?
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN