ஆதித்யா சக்கரவர்த்தி-22

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 22

மலரை தள்ளிவிட்டு வெளியே வந்த ஆதித்யா தனது காரை எடுத்துக் கொண்டு எங்கோ சென்று விட்டான்.
அவன் வெளியே சென்றதும்.... கண்களைத் துடைத்துக்கொண்டு.... தெளிந்து எழுந்த மலரும் தன் வாழ்க்கை முழுவதும் சித்திரவதைகள் தான் போலும்... என்று மனம் வெதும்பி கொண்டே தான் கொண்டு வந்திருந்த சூட்கேசை திறந்து தனது உடைகளை எடுத்து வார்ட்ரோப்பில் அடுக்கினாள். அப்போது தான் ஆதித்யா உடைகள் இருந்த பகுதியில் தனது துப்பட்டா ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து... இது எப்படி இங்கே வந்தது? என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் நினைவு வந்தது.
அன்றொருநாள் சௌமியா வானதி உடன் தான் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஆதித்யா வந்து திடீரென்று கத்தவும் மயங்கி விழுந்தாள். அப்பொழுது இந்த துப்பட்டாவை தான் அணிந்திருந்தாள்....
ஆனால் இது எப்படி இவனது உடைகளுக்குள் இருக்கிறது? என்று புரியாமல் குழம்பினாள்.

சரி ...வேறு ஏதாவது கிடைக்கிறதா பார்க்கலாம் என்று அலசி ஆராய்ந்தவளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
ஒருவேளை எதேச்சையாக தான் தனது துப்பட்டா இங்கு வந்திருக்குமோ? இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் யாராவது... மாற்றிக் கொண்டு வைத்து விட்டார்களா? இதை எப்படி கவனிக்காமல் இருந்தான் அவன்... என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டவள்... நகரும் பொழுது தான் கீழே விழுந்து கிடந்த சாவி ஒன்றை பார்த்தாள்.
இது எதுக்குள்ள சாவி? என்று சுற்றுமுற்றும் பார்த்தவளுக்கு எதுவும் பூட்டி இருப்பது போல் தெரியவில்லை.... சாவியை டிராயரினுள் போட்டவள்... வார்ட்ரோப்பை மூடிவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

தன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே நந்தனை விரும்புகிறேன் அது இது என்று அவன் இஷ்டப்படி பேசுகிறான்...
இதில் ஐ லவ் யூ சொல்லு என்ற டார்ச்சர் வேறு ...இவன் கேட்டதும் சொல்லிவிட வேண்டுமா?என்ன? அது என்ன சாதாரண வார்த்தைகளா? இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளை இவன் ஆடர் போட்டதும் உடனே சொல்லிவிட வேண்டுமா? திமிர் பிடித்தவன்... பூச்சாண்டி... காட்டுமிராண்டி.... அரக்கன்... ஜாம்பி என்று தனக்குள் திட்டி கொண்டிருந்தவள்... கதவு தட்டும் சத்தம் கேட்டு யாரு? என்று கேட்டாள்.

"மேடம் உங்களுக்கு டீ கொண்டு வந்து இருக்கேன்" என்று பணியாளரின் குரல் வெளியே கேட்க... கதவைத்திறந்து, "நான் டீ கேட்கவே இல்லையே...." என்றாள்.
"இல்ல மேடம்.... சார் வெளியே போகும்போது உங்களுக்கு இந்த டைம்க்கு டீ கொடுக்க சொல்லிட்டு போனார்" என்றதும், சரி என்ற மலர் டீயை வாங்கிக்கொண்டு...
அவரை அனுப்பி விட்டு பால்கனிக்கு சென்று அமர்ந்தாள்.

இவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே? சிலநேரம் கண்களில் வித்தியாசமான உணர்வுடன் பார்ப்பவன்... சிலநேரம் எரிமலையாக வெடிக்கிறான்... சிலநேரம் வெறுப்புடன் கொதிக்கிறான்.... என்று யோசித்துக் கொண்டே டீயை பருகி முடித்தவள்...
மாலை நேர காற்றுக்கு இதமாக தோட்டத்திற்கு சென்று காலார நடந்து வரலாம் என்று தோன்ற கீழே இறங்கி சென்றாள்.

தோட்டத்தின் ஒரு முனையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிகளை பார்த்தவள்....
"வாவ் நம்ம இங்கே இருக்கும் போது இதெல்லாம் இல்லையே..." என்று யோசித்துக் கொண்டே, அதைப் பார்வையிட மனம் லேசானது போல் இருந்தது.
அவள் ஒரு முறை தோட்டக்காரர் இடம்...
"என்ன அண்ணா இந்த தோட்டத்தில் நிறைய மரம் நிறைய செடிகள் கொடிகள் இருக்கு... ஆனா பூக்களிலே அழகான ரோஜா செடி மட்டும் இல்லையே ஏன்?" என்று கேட்டிருக்கிறாள்....
"இல்லம்மா... அதெல்லாம் ஐயாவுக்கு பிடிக்காது" என்றதும்...
"ஏன் பிடிக்காது?" என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு நகர்ந்து விட்டாள் மலர்.

இன்று பல வண்ண ரோஜாக்கள் அணிவகுப்புடன் தோட்டம் மேலும் அழகாகவும்... ரம்மியமாகவும் இருப்பதை பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை அவளுக்கு....
அன்றுதான் சொன்னதற்காக தோட்டக்காரர் தான் வைத்திருக்க வேண்டும். காலையில அவரை பார்த்தால் அழகாக இருக்கிறது... என்று சொல்லி பாராட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தனது நீண்ட கூந்தலை முன்னால் போட்டுக்கொண்டு காற்றோடு கலந்து வந்த பூ வாசத்தை கண்களை மூடி அனுபவித்தாள் மலர்.

மனமோ அதன் பாட்டிற்கு சிந்தித்துக் கொண்டிருந்தது.
உண்மையில் இந்த ஐந்து மாதத்தில் தான் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அதெல்லாம் ஆதித்யாவின் முன்னால் செல்லாமல் போனது போல் இருந்தது....
அவனது மனதில் என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது? என்பது சுத்தமாக அவளுக்கு புரியவில்லை.
சரி இனி அவனுடன் தானே இருக்க போகிறோம்... சீக்கிரம் புரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவள் வீட்டிற்குள் வந்து விட்டாள்.
இரவு உணவை அறைக்கே வந்து கொடுத்துவிட்டு சென்றார் பணியாளர்.
அவளுக்கும் பசித்ததால் மறுப்பு சொல்லாமல் வாங்கி சாப்பிட்டாள்.
ஏதோ தனிமையாக இருப்பது போல் உணர்ந்தாள்...
இதற்கு முன்னாலும் இதே வீட்டில் இருந்திருக்கிறாள் தான். ஆனால் அப்போது சௌமியா, வானதி என்று யாராவது அவளுடன் இருந்து கொண்டே இருப்பார்கள்... அதனால் அவளும் இப்படி உணர்ந்ததில்லை.
தனிமை உணர்வை போக்குவதற்காக...
தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சில புத்தகங்களில் தனக்கு பிடித்த நாவல் ஒன்றை எடுத்தவள் சோபாவில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் அதில் மூழ்கிப் போன மலர்... ஆதித்யா வந்ததையும், கதவருகே நின்று அவளையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்ததையும், பின் தலையில் உதறி கொண்டு வெளியே சென்றதையும் கவனிக்காமல் விட்டு விட்டாள்.

ஆதித்யா சாப்பிட்டு விட்டு மேலே வரும்பொழுது.... மலர் சோபாவிலேயே படுத்து தூங்கி இருந்தாள். அவளது சிறிய உடம்பிற்கு அந்த சோபாவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது.
புத்தகத்தை நெஞ்சின் மீது வைத்துக்கொண்டு உதட்டைப் பிளந்து சிறு குழந்தை போல் தூங்கிக்கொண்டிருந்தவளை நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு....

அமைதியாக அவளை நெருங்கியவன், புத்தகத்தை எடுத்து டீபாயில் வைத்துவிட்டு... அவளை கைகளில் ஏந்தியவன் படுக்கையில் படுக்க வைத்து விட்டு அவளருகில் நெருங்கி அணைத்தபடி படுத்துக் கொண்டான்.

ஏற்கனவே ஆதித்யா தூக்கும் போதே... பாதி தூக்கம் கலைந்தவள் அவன் அவளை அணைத்தபடி படுத்ததும் முழுவதுமாக தூக்கம் களைந்து கண் விழித்து விட்டாள்.
மலரின் முகம் ஆதித்யாவின் நெஞ்சில் பொதிந்து இருந்ததால் அவனுக்கு அவள் கண் விழித்தது தெரிய வாய்ப்பில்லை....
ஆனால் ஆதித்யாவின் இந்த திடீர் நெருக்கத்தில் மலரால் நிம்மதியாக மூச்சுக் கூட விட முடியவில்லை.... அவனது இதயத் துடிப்பை கூட நன்கு உணர முடிந்தது அவளால்...
அதே இதயம் தான் அவளது பெயரை நொடிக்கு நொடி உச்சரிப்பதை உணர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

மலரோ மனதிற்குள் இப்பொழுது தான் எழுவதா? வேண்டாமா? எழுந்தால் திட்டுவானோ... இப்படியே இருந்தால் தூக்கம் வேறு வந்து தொலையாதே... தான் நகர்ந்து படுத்தால் கண்டிப்பாக அசைவு ஏற்படும் கண்விழித்து விடுவானே... என்று யோசித்துக்கொண்டே விழித்து கிடந்தவள்...
தூக்கத்தில் அசைவது போல நகர்ந்து அவனுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்து விடுவோம் என்று ஐடியா தோன்றவும்...
தூக்கத்தில் பிறழ்வது போல் லேசாக அசைய பார்த்தால்..ம்ம்க்கும் அவனது இறுகிய பிடியிலிருந்து ஒரு மில்லி மீட்டர் கூட நகர முடியவில்லை அவளால் .....
நொடிகள் நிமிடங்களாக நகர மலருக்கு ஒரு பொட்டுத் தூக்கம் கண்ணில் வரவில்லை.... ஆதித்யாவின் சீரான மூச்சு அவன் தூங்கி விட்டதை காட்ட... அவனது பிடியும் லேசாக தளர்ந்தது போல் இருந்தது. அதை பயன்படுத்திக் கொண்டு லேசாக தூக்கத்தில் புரள்வது போல் புரண்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள் மலர். அவனை விட்டு நகர்ந்த பிறகு தான் கண்கள் சொருகி லேசாக தூக்கம் வர ஆரம்பிக்க தூங்கியும் விட்டாள். சிலபல நிமிடங்களிலேயே தன் கைக்குள் மலர் இல்லாததை உணர்ந்த ஆதித்யா தூக்க கலக்கத்துடன் கையால் தேடி தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த மலரை அலேக்காக தூக்கி தன் மார்பின் மீது போட்டுக் கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்து விட்டான்.

அந்தோ பரிதாபம்...!!!

மீண்டும் தூக்கம் பரிபோனது மலருக்கு....
"அடேய் பூச்சாண்டி!! நான் என்ன கங்காரு குட்டியா... ஆனா ஊனா கங்காரு தன் குட்டிய தூக்கி பாக்கெட்டுக்குள்ள போட்டு வச்சிக்கிற மாதிரி... என்ன நெஞ்சுக்கு மேல தூக்கி போட்டு வச்சிக்கிற.... ஒருவேளை இது புதுவிதமான வியாதியா இருக்குமா? கல்யாணமான புதுசுல நான் கீழ படுத்ததால எனக்கு தான் தெரியலையோ!!" என்று மனதிற்குள் நினைத்தவள்...
நிம்மதியாக தூங்குபவனின் தூக்கத்தை கலைக்க மனம் வராமல் அமைதியாக அவன் மேலேயே கிடந்தாள்.

தூக்கத்தை தொலைத்து இரவெல்லாம் விழித்து கிடந்த மலர்
விடியற்காலை நேரம் அவளையும் மீறி தூங்கி போனாள்.
இரவில் சீக்கிரம் தூங்கியதால் மலர் எழுவதற்கு முன்பே ஆதித்யா எழுந்துவிட்டான்.
தன் சட்டையை பிடித்து கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்த மலரை கண்ணிமைக்காமல் பார்த்தவன்...
"மொசக்குட்டி நீ என்ன மட்டும் விரும்பி இருந்தா... எவ்வளவு நல்லா இருந்திருக்கும்... இப்பவும் உன் மனசுல அந்த நந்தன் தானே இருக்கான்... நீ உன் அண்ணனுக்காக தானே என் கூட கட்டாயத்துக்காக வாழ வந்திருக்க... உன்ன பக்கத்துல வச்சிக்கிட்டு என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல மொசக்குட்டி. உனக்கு ஒன்னு தெரியுமா? எங்கப்பா சொன்னார் ஒரு பொண்ணோட மனசுல இன்னொருத்தன் இருந்தா...
அந்தப் பொண்ண திரும்பி கூட பார்க்காதனு... ஆனா என்னோட காதல பாத்தியா ஏற்கனவே நிச்சயமாகி ஒருத்தன மனசுல வச்சிட்டு இருந்த ஒருத்தி மேல வந்து இருக்கு... அதுவும் அவளை நான் கல்யாணம் பண்ணியும் அவ இன்னும் இன்னொருத்தனை மனசுல வெச்சுட்டு இருக்கா" என்று வெறுப்பாக நினைத்து விட்டு அவளை விட்டு எழுந்து சென்றான் ஆதித்யா.

அவன் உடற்பயிற்சியை முடித்துவிட்டு தோட்டத்தில் உலாவி விட்டு தனது அறைக்கு வரும்போதும் மலர் தூக்கத்திலிருந்து எழவில்லை அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஏன் இப்படி தூங்குகிறாள்? இவ்வளவு நேரமெல்லாம் தூங்க மாட்டாளே... என்று யோசித்துக்கொண்டே தனது வார்ட்ரோப்பை திறந்தான் ஆதித்யா. அன்று அவனுக்கு ஒரு முக்கியமான அரசியல்வாதியுடன் மீட்டிங் ஒன்று இருந்தது. அவன் ஒரு கடாமுடா பார்ட்டி ... அவனிடம் பேசினால் டென்ஷன்தான் ஏறும் .... தன்னை கோபப்படுத்தாத வரை அவனுக்கு நல்லது என்று நினைத்தவன்.... ஆழ்ந்த கருப்பு நிற கோர்ட்டையும் அதே நிறத்தில் ஃபேண்டையும் வெள்ளை நிற முழுக்கை சட்டையும் உடுப்பதற்காக எடுத்து வைத்தவன்... அப்பொழுதுதான் மலரின் துப்பட்டா இன்னும் தனது ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். இந்த ஐந்து மாதங்களில் இரவில் அவன் தூங்கும் பொழுதெல்லாம் ... அவளது இந்த துப்பட்டா தான் அவனது நெஞ்சில் தஞ்சமாகி இருக்கும். அவளை வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் அதை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் ஏதோ டென்ஷனில் மறந்துவிட்டான்.
அவளது உடைகள் எல்லாம் வார்ட்ரோப்பில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன்... "ஒருவேள இதை எல்லாத்தையும் அடுக்கி வைக்கும்போது இதைப் பார்த்திருப்பாளா...?" என்று சந்தேகத்துடன் மலரை பார்க்க... அவளோ நிர்மலமான முகத்துடன் உறங்கிக்கொண்டிருந்தாள்.
"ச்சே... அதெல்லாம் பார்த்திருக்க மாட்டாள்...." என்று நினைத்தவன் அவளது துப்பட்டாவை சுருட்டி தனது துணிகளுக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டு குளிக்க சென்றான்.

ஆதித்யா குளிக்க சென்றதுதான் மலர் லேசாக கண் விழித்து மணியைப் பார்த்தாள்.
மணி எட்டு முப்பது என்று காட்டவும்... அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் மலர்.

மலர் தனக்கு உடம்பு சரியில்லை எழ முடியவில்லை என்றால் மட்டுமே தாமதமாக எழுவாள்...மற்ற நாட்களில் எல்லாம் அவளது அம்மா சிறுவயதிலிருந்து பழக்கப்படுத்தி இருந்த ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் எழுந்து விடுவாள்.
ஆனால் இன்றோ... இரவு தூக்கம் தொலைத்து தாமதமாக எழுந்து இருக்கிறாள். தான் தாமதமாக எழுந்ததற்கு காரணமான ஆதித்யாவிற்கு உள்ளுக்குள் வஞ்சனையில்லாமல் திட்டுக்களை வாரி வழங்கியவள் கடுப்புடன் முகம் கழுவ பாத்ரூமை நோக்கி சென்றாள். இன்னும் கண்களில் தூக்கம் மீதமிருந்தது.... கண்ணை கசக்கிக்கொண்டே சென்றவள்... அவளுக்கு எதிரே குளித்துவிட்டு இடுப்பில் டவல் மட்டும் கட்டிக்கொண்டு...வெற்று உடம்புடன் வந்த ஆதித்யாவின் மீது மோதி அவன் மேலேயே விழுந்தாள்.
ஆதித்யாவும் யோசனையிலேயே வந்ததால் அவனும் அவளை கவனிக்கவில்லை....

ஒருவரின் மீது ஒருவர் இருக்க... மலருக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை... அவனைப்பார்த்து திருதிருவென்று தனது முட்டைக் கண்ணை வைத்து
விழித்தவள்... பதிலுக்கு
ஆதித்யா பார்த்த பார்வையில் வயிற்றுக்குள் ஏதோ காலியாவது போல் உணர்ந்தாள்.
அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்திருந்த ஆதித்யாவின் மேனியிலிருந்து வந்த வாசனையோ... அவளது நாசிக்குள் புகுந்து புதுவித மயக்கத்தை ஏற்படுத்தியது.
அவன் மேலிருந்த நீர்த் துளிகளின் குளிர்ச்சியை உணர்ந்த மலருக்கு குளிர் காய்ச்சலே வருவது போல் இருந்தது.

தன்னையே விடாமல் பார்த்த
அவனது கண்களை சந்திக்க முடியாமல் திண்டாடி போன மலர்...
நெஞ்சம் தடதடக்க அவன் மேல் இருந்து எழ முயன்றாள்.
அவளது சுடிதார் துப்பட்டா அவனது முதுகுக்கு அடியில் மாட்டிக் கொண்டிருந்ததால் எழவும் முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் பாவமாக ஆதித்யாவை பார்த்தாள் மலர்....
அவளது கண்களையே விடாமல் பார்த்த ஆதித்யா... அதில் தெரிந்த பலவித உணர்ச்சிகளின் குவியலை
தான் கவனித்து கொண்டிருந்தான்.
அவனது கண்களை பார்ப்பதை தவிர்த்த மலர்

"ப்ளீஸ்ங்க என்னால எந்திரிக்க முடியல... என்னோட துப்பட்டா உங்க முதுகுக்கு அடியில மாட்டிட்டு இருக்கு... கொஞ்சம் நீங்க நகர்ந்தா அதை எடுத்துட்டு எழுந்துடுவேன்..." என்று குழந்தைபோல் கெஞ்சி கேட்டவளை கண்ணிமைக்காமல் பார்த்தவன்...
அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு...
அப்படியே எழுந்தான்.

"ஹையா... ரெண்டு பேருமே ஒரே டைம்ல எழுந்துட்டோம்... சூப்பருங்க" என்று குதூகலித்தவள்... சிரித்துக்கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள் மலர்.
அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வர.... உதட்டை அழுத்தமாக மூடி எப்போதும்போல் சிரிப்பை மறைத்தவனின் மனதிலோ, தனக்கு ஏற்படும் உணர்வுகள் எல்லாம் இவளுக்கு ஏற்படவில்லையா...? தன் அருகாமை அவளை பாதிக்கவில்லையா? நந்தன் தானே அவளது மனதில் இருக்கிறான்... அதனால்தான் தனது நெருக்கம் அவளை பாதிக்கவில்லையா? என்று அவளைப்பற்றி நினைத்தே குழம்பிப் போனான்.

அந்த குழப்பத்துடனே கிளம்பியவன் முன்னால் வந்து தயக்கத்துடன் நின்றாள் மலர்....
என்ன? என்பது போல் ஒற்றை புருவத்தை ஏற்றினான் ஆதித்யா.
"அ ...அது... அது எனக்கு வீட்ல தனியா இருக்க ரொம்ப போர் அடிக்கும். நான் முன்னாடி வேலை பார்த்த ஸ்கூல்லயே திரும்பவும் ஜாயின் பண்ணிகட்டா...? ப்ளீஸ்ங்க" என்று கண்களை சுருக்கி கெஞ்சி கேட்டாள் மலர்.

"நான் முடியாதுன்னு சொன்னா என்ன செய்வ?" என்று ஆதித்யா கேட்கவும்...
ஒண்ணும் செய்யமாட்டேன் என்பது போல் உதட்டைப் பிதுக்கி கைகளை விரித்து இடம் வலமாக தலையை ஆட்டினாள் மலர்.

எப்போதும் போல் அவள் தலையை ஆட்டும் பொழுது அவளது காதில் இருந்த ஜிமிக்கியும் ஆடியது.
அதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே விறைப்பாக...
"சரி போய்ட்டு வா... ஆனால் கார்ல போயிட்டு கார்ல தான் வரணும்... உன் பின்னாடி எப்பவுமே ரெண்டு பாடிகார்ட்ஸ் இருப்பாங்க" என்று அவளது மகிழ்ச்சிக்கு ஆப்பு வைத்தான் ஆதித்யா.

தான் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பொழுது தனது இரு பக்கங்களிலும் இரண்டு தடியர்கள் நிற்பது போல் நினைத்து பார்த்தவள் வேகமாக தலையை உலுக்கிக் கொண்டு.... "அது ஸ்கூல் அங்கே எல்லாம் பாடி கார்ட்ஸ் வரக்கூடாது" என்று நினைத்ததை சொல்லிவிட்டாள் மலர்.
அவளை பார்த்து முறைத்தவன், "அப்ப நீ போக வேண்டாம்" என்று தோளைக் குலுக்கிக் கொண்டு நகர்ந்தான்.

"ஏங்க ஏங்க ப்ளீஸ் ப்ளீஸ்ங்க... ஸ்கூலுக்கு வெளில வந்தா பரவால்ல... உள்ள மட்டும் வரக்கூடாது..." என்று விடாமல் கெஞ்சினாள்....

" சரி நாளையில இருந்து நீ போகலாம்..." என்றவன்...தனக்கு தாமதமாவதை உணர்ந்து அவளிடம் விடை பெற்று சென்றான்.

நேற்றைய மன நிலைக்கு இன்று இருவரும் ஓரளவு நெருங்கியது போல் இருந்தது... யாரும் யாரது மனதையும் புண்படுத்தவில்லை...
அவன் வேலைக்கு செல்ல சம்மதித்தது மலருக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

தலையணையை கட்டி பிடித்தபடி... மெத்தையில் அமர்ந்தவள்...
"பூச்சாண்டி நீ ஒன்னும் அவ்ளோ மோசமில்லை..." சிரித்துக்கொண்டே "சோ ஸ்வீட்" என்று தலையணைக்கு முத்தமிட்டாள் மலர்.

"மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்....
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ..."


இங்கு சுவாதியோ... மகேஷின் பாராமுகத்தால் படு பயங்கர கோபத்துடன் இருந்தாள்.
அவளுக்கு இந்த சிறிய வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.... அவளுக்கு ஆதித்யா வாங்கிக்கொடுத்த வீடு தான் மிகவும் பிடிக்கும். ஆதித்யா அவளுக்கே அவளுக்கென்று அவளது ஆசைப்படி கட்டிக் கொடுத்திருந்த வீடு அது... அதை விட்டுவிட்டு இங்கு வந்து இருப்பது எரிச்சலாக இருந்தது.
எல்லாமே தன் கை விட்டு சென்றுவிட்டது... இதற்கெல்லாம் காரணம் மலர்.. அவள் மட்டும் சந்தோஷமாக இருக்கலாமா?
ஆதித்யா அவளை விருப்பப்பட்டு வாழ்வதற்காக கூட்டிச் செல்லவில்லை என்பது அவளுக்கு தெரியும்...
மலரின் மனதில் இன்னும் நந்தன் இருக்கிறான் என்று ஆதித்யா நினைத்துக் கொண்டிருக்கும் வரை இருவரும் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை...

ஆனால் அது மட்டும் போதுமா? என்று நினைத்தவள் மனதில் புதிய திட்டம் உருவாக... "மலர் நீ செத்த டி" என்று நினைத்துக்கொண்டாள்.
"ஆதித்யா கோபம் உன்ன நிம்மதியா இருக்க கூடாது" என்று சிரித்தவளின் சிரிப்பில் அரக்கத்தனம் தான் இருந்தது....

தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN