ஆதித்யா சக்கரவர்த்தி-23

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 23
சுவாதியின் திட்டத்தை நிறைவேற்ற அவளுக்கு தேவையான நபர் நந்தன் தான்....

மருத்துவமனையிலேயே அவனது கண்களில் தெரிந்த காதலையும்... மலரை விட மாட்டேன் என்று பிடிவாதமாக நின்ற நிலையையும் கவனித்து கொண்டுதான் இருந்தாள். இருந்தாலும் தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள மலர் ஆதித்யாவுடன் வாழ்ந்தாக வேண்டும் என்ற காரணத்திற்காக அண்ணனை சமாதனப்படுத்தி எப்படியோ இருவரையும் சேர்த்தும் வைத்து விட்டாள்.

ஆனால் இப்பொழுது தன் கணவன் தன்னிடம் இருந்து விலகி இருக்க.... அதற்கு காரணமான மலர் மட்டும்...
தன் அண்ணனின் அரண்மனை போன்ற வீட்டில் சந்தோஷமாக வாழலாமா? விடக்கூடாது.... விடவே கூடாது... என்று நினைத்தாள் சுவாதி.
மகேஷின் உடல்நிலை ஓரளவு தேறி இருக்க.... அவனும் வேலை விஷயமாக நண்பன் ஒருவனை சந்திக்க காலையிலேயே சென்று விட்டான். ஸ்கூலுக்கு சென்றிருக்கும் வானதி வருவதற்கும் நேரம் இருந்தது. வேகமாக கிளம்பியவள்.... சென்று நின்றது அவர்களின் எதிர் வீடான நந்தனின் வீட்டில்தான்....
இங்கு மலரோ சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள். ஆதித்யாவின் நேற்றைய நெருக்கம் ஏனோ அவனுடன் நீண்ட நாட்கள் அவனுடன் பழகியதை போன்ற உணர்வை கொடுத்தது. அதுவும் அவனது நேற்றைய நெருக்கத்தில் தொடுகையில் ஒரு துளி கூட காமம் இல்லவே இல்லை. ஏதோ தனக்கு மட்டுமே சொந்தமான பொம்மையை குழந்தை ஒன்று கட்டிக் கொண்டு தூங்குவது போல் தான் இருந்தது. கண்டிப்பாக அது தூய அன்பு தான்....
அவனது கண்கள் பேசும் மொழி புரியவில்லை என்றாலும் அவனுக்கு தன்மீது அன்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை இப்பொழுது உறுதியாக நம்பினாள் மலர். ஆனால் அதை சொல்ல விடாமல் ஏதோ ஒன்று அவன் மனதை உறுத்துகிறது என்று புரிந்துகொண்டாள்.

அது என்ன உறுத்தல்? என்றுதான் அவளுக்கு புரியவில்லை...
தன் மீது அன்பு வைத்திருக்கும் ஆதித்யா பாசத்திற்காக ஏங்குவதை அறிந்தால் அன்பினை வாரி வழங்குவாளா மலர்?....

இங்கு மீட்டிங்கில் இருந்த ஆதித்யாவின் மனதையும் மலர்தான் முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தாள். தனது நெருக்கத்தினால் தடுமாறி அலைபாய்ந்த அவளது மீன் விழிகள் இன்னும் மன கண்ணிலேயே நின்றது. அவளிடம் சகஜமாகப் பேசி பழக ஆசையாக இருந்தது. ஆனால் அவன் தாய் மீது இயல்பாக கொண்டிருந்த வெறுப்பு மலரின் மனது நந்தனுக்கு தான் என்று மீண்டும் மீண்டும் சொல்லி காட்டி வெறுப்பேற்றி கொண்டிருந்தது.
"முடியாது என் மலர் எனக்குத்தான் எனக்கு மட்டும்தான்..." என்று தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தான் அவன்....

பக்கத்தில் இருந்த சரத் அவனிடம் ஏதோ கேட்கவும், லேசாக தெளிந்து அமர்ந்தவன்
பின் தன்னையே சமன்படுத்தி கொண்டு கடிகாரத்தை பார்த்தான்....
மீட்டிங் என்று சொல்லியிருந்த நேரத்தை கடந்திருக்க... இவ்வளவு நேரமாகியும் அந்த எம் பி சுடலைமணி இன்னும் வராமல் இருக்கவும்... கோபம் தலைக்கேறியது ஆதித்யாவிற்கு....
ஏற்கனவே ஒரு முறை மீட்டிங் ஒன்றில் ஆதித்யாவை டென்ஷன் ஆக்கி இருந்தார். இதில் இன்று தாமதமாக வேறு வந்து நன்றாக வாங்கி கட்டிக் கொள்ள போகிறார் என்று அவனது பக்கத்தில் இருந்த சரத் நினைத்தான்.

"சரத் அவனுக்கு போன் பண்ணு.... எங்க வர்றானு கேளு... நான் யாருக்காகவும் வெயிட் பண்ண முடியாது" என்று கடுகடுத்து விட்டு எரிச்சலுடன் எழுந்தான் ஆதித்யா.

"பாஸ் ஒன் மினிட் ..."என்ற சரத்தும் அந்த அரசியல்வாதியின் பி ஏ குமாருக்கு கால் செய்ய... அது முழு ரிங் போய் கட் ஆகியது.
"பாஸ் போனை அட்டென்ட் பண்ண மாட்டுக்கான்..." என்று சரத் தயங்கிக்கொண்டே சொல்ல...
டேபிளின் மீது இருந்த நீர் நிறைந்த கண்ணாடி டம்ளர் ஒன்றை தூக்கி போட்டு உடைத்தான் ஆதித்யா.

"ஆனா ஊனா பிரகாஷ்ராஜ் மாதிரி எதையாவது தூக்கி உடைக்கிறது..." என்று மனதிற்குள் புலம்பிய சரத் மீண்டும் முயற்சி செய்தான்.

இம்முறை காலை அட்டெண்ட் செய்த பிஏ குமார்... தாமதமாவதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ....கார் டயர் பஞ்சர் என்றும் இப்பொழுதுதான் சரிசெய்து அவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.
பக்கத்தில் அந்த அரசியல்வாதியின் குரலும் கேட்டது.
"எதுக்குல நீ மன்னிப்பு கேக்குத.. கொஞ்சம் தாமதம் ஆனா ஒன்னும் குடி முழுகி போவாதுல.. அவனுகள காத்திருக்க சொல்லு லே... பெரிய இவனுவோ..." என்று தனது பிஏ குமாரிடம் கட்டை குரலில் கூறினார்
எம் பி சுடலைமணி.
"சரிதான் இன்னைக்கு கண்டிப்பா ... இவருக்கு ஒரு சம்பவம் இருக்கு..." என்று அப்பவே முடிவு செய்து கொண்டான் சரத்.

"சரி குமார் சீக்கிரம் வாங்க... பாஸ் ரொம்ப கோவமா இருக்கார்" என்று வைத்து விட்டான் சரத்.
"பாஸ் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துருவாங்க... அது வரைக்கும் கூல் கூல் ..."என்று ஆதித்யாவை சமாதனப்படுத்தி அமர வைத்தான் சரத்.
சிறிது நேரத்திலேயே அவனது மியாவ்விடம் இருந்து அழைப்பு வந்தது.
"இவ என்ன இப்போ கால் பண்ணுறா?" என்று நினைத்த சரத்...
"பாஸ் என் வைஃப் பேசுறா பேசிட்டு வந்துடறேன்..."என்று சொல்லிவிட்டு அங்கிருந்து லேசாக நகர்ந்து சென்றான்.
ஆனால் அவனது பேச்சு குரல் ஆதித்யாவிற்கு தெளிவாகவே கேட்டது.

"மியாவ்... ஏன் இப்படி? நான் வேலையா இருக்கும்போது என்ன டிஸ்டர்ப் பண்ணாத ன்னு சொல்லி இருக்கேன்ல..."

".............."

"என்னது கைல காயம் ஆகிட்டா... என்ன பண்ணின நீ ?"என்று பதற்றப் பட்டான் சரத்...

"................"

"ஐயோ அதெல்லாம் பார்த்து செய்ய மாட்டியா? நீ என்ன சின்ன பிள்ளையா..."

"................"

"சரி சரி கோபப்படாத... வலிய பொறுத்துக்கோ.... ஒரு காட்டன் துணிய வச்சி காயத்துல கட்டி வை...
பாஸ் கிட்ட இப்பவே கேட்டுட்டு உடனே வீட்டுக்கு வரேன். ஹாஸ்பிடலுக்கு போகலாம்... அழாத... சரியா" என்றவன் அவ்வளவு நேரம் அவனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதித்யாவின் அருகே வந்தான்.

"பாஸ் சௌமியா வெஜிடபிள்ஸ் கட் பண்ணும் போது கைல காயம் ஆகிட்டு.. நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்.... எனக்கு இன்னைக்கு லீவ் வேணும்" என்று சரத் படபடப்பாக சொன்னான்.
அவனை முறைத்த ஆதித்யா கோபத்துடன்.....
"வீட்ல வேலையாள் வைக்க வேண்டியதுதானே... என் தங்கச்சிக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே ... பாரு இப்போ கைல கட் பண்ணி வச்சு இருக்கா... பாவம்" என்று எண்ணெயில் போட்ட கருவேப்பிலை போல் பொரிந்து தள்ள...
"பாஸ் உங்களுக்கு இந்த விஷயத்துலலாம் கொஞ்சம் அனுபவம் கம்மிபோல.... நம்ம வீட்ல உள்ள பெண்கள் அன்பா.. பாசமா... சமைச்சு போட்டா... அது தனி ருசி பாஸ்... அதுவும் எனக்கு என்னோட பொண்டாட்டி கையால சாப்பிட்ட தான் ரொம்பவும் புடிச்சிருக்கு... ஆரம்பத்துல சொதப்ப தான் செஞ்சா இப்போ அவளே குக்கிங் ஷோ நடத்துற அளவுக்கு ரொம்ப அருமையா செய்றா..." என்று மனைவியை பாராட்டிய சரத்,
"பாஸ் அப்புறம் ஒரு ஃப்ரீ அட்வைஸ்.... எப்பவுமே வெறப்பா திரியாதீங்க.... கொஞ்சம் மனசு விட்டு பொண்டாட்டிகிட்ட பேசுங்க... ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசிக் கிட்டா நிறைய பிரச்சனைய தீர்த்துக்கலாம்...சண்டை வந்தாலும் பரவாயில்ல... சண்டைக்கு முடிவுல சமாதானம் ஆகிடலாம்... அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பாஸ்... எங்க அப்பா எனக்கு சொன்னத... நான் உங்களுக்கு சொல்கிறேன்.
'பொண்டாட்டி கிட்ட தோத்து போறவன் தான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்...' இதான் எங்க அப்பா டயலாக்... எங்க அப்பா எவ்வளவு பெரிய கிடா மீசைக்காரர்... எவ்வளவு பெரிய டெரர் பீஸ் ன்னு உங்களுக்குத்தான் தெரியும்ல... அவரே இந்த டயலாக் சொல்லும்போது எனக்கு என்ன வந்துச்சு பாஸ்.... ஃபுல்லா சரண்டர் ஆகிட்டேன்... உங்க தங்கச்சி கிட்ட..." என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னவன்,

" அச்சோ பாஸ் பாஸ் டைம் ஆயிட்டு பாஸ்... அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்... போயிட்டு வந்துடறேன் சீக்கிரம்... அந்த எம் பி சுடலைமணி ஏடாகூடமா ஏதாவது பேசினா சட்டுனு கோபப்பட்டு அவரோட சொட்ட மண்டைய பொளந்துடாதீங்க பாஸ்... கொஞ்சம் பொறுமையாவே பேசுங்க..." என்று படபடவென்று பொரிந்தவன்... ஆதித்யாவை பதில் பேச விடாமல் அவசரமாக விடை பெற்றுக் கொண்டு அவனது பைக்கை வீட்டை நோக்கி பறக்க விட்டான் சரத்.

அவன் சொன்ன மற்ற எதையும் கவனிக்காத ஆதித்யாவின் மனது... தன் தங்கை அவனுடன் சந்தோஷமாக தான் இருக்கிறாள்... என்று தெரிந்ததும் நிம்மதியாக உணர்ந்தது.
வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் சௌமியாவின் வாழ்வைப் பற்றி லேசாக பயம் இருக்கத்தான் செய்தது. இன்று அந்த பயமும் இல்லாமல் சந்தோஷமாக உணர்ந்தான் ஆதித்யா.

சௌமியாவின் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசியதே இல்லை ஆதித்யா. எதுவென்றாலும் சரத்திடம் மட்டுமே சொல்லுவான்.... இன்று ஏனோ அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது.
இதற்கு முன்பும்... சௌமியாவின் மீது அவனுக்கு கோபம் எல்லாம் இல்லை... வருத்தம்தான்... ஒரு வார்த்தை தன்னிடம் சொல்லி இருந்தால் போதுமே!! எதற்கு தேவையில்லாமல் டிராமா செய்து அவளது வாழ்க்கையை அவளே இப்படி மாற்றிக்கொண்டால் என்றுதான் வருத்தம்... இப்பொழுது அதுவும் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது... தன் தங்கை சரத்துடன் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தான். தனது தந்தையின் ஆன்மா கண்டிப்பாக குழந்தைகள் நலமாக வாழ்வதை எண்ணி சந்தோஷப்படும் என்று நம்பினான்.

சிறிது நேரத்திலேயே ஆதித்யாவின் பாடிகார்ட் ஒருவன் வந்து, "சார் எம்பி சுடலைமணி வந்துட்டார்..." என்று தகவல் தெரிவித்தான்....
"ஹம்ம் வர சொல்லு..." என்றவன் தன் கையில் வைத்திருந்த மொபைலின் மீது கவனத்தை வைத்திருந்தான்.
வெள்ளை கர வேட்டி சட்டை அணிந்து ஒரு பெரிய கூட்டமே அந்த மீட்டிங் நடக்கும் அறைக்குள் நுழைந்தது.
அதில் நடுநாயகமாக வந்த சுடலை மணி ஆதித்யாவின் எதிர்ப்புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். ஐம்பதின் கடைசியில் இருக்கும்... அவர் தலையில் ரோடு போடலாம் என்ற அளவிற்கு வெட்ட வெளியாக இருந்தது.அதன் பளபளப்பு கண்களைக் கூசியது. அதனால் சரத் அவருக்கு வைத்திருக்கும் பெயர் சொட்டை மணி.... அவருக்குப் பின்னால் அவரது கட்சியின் தொண்டர்களும் அவரது பிஏ குமார் என்பவரும் பவ்யமாக நின்றிருந்தனர்.

அவர் வந்தது தெரிந்தும்...
ஆதித்யா மொபைலில் இருந்து பார்வையை திருப்பவில்லை. அலட்சியமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான்.

தனது பி ஏ குமாரை அருகில் அழைத்த சுடலைமணி,
"என்னல குமாரு... நான் வந்து ரொம்ப நேரம் ஆகுதுல இன்னமும் அந்த பொட்டிய பார்த்துட்டு இருக்கான்..." என்று ஆதித்யாவின் காதில் விழுமாறு எரிந்து விழுந்தார் அவர்....
அவர் கத்தியதை சட்டை செய்யாமல் ஆதித்யா தனது மொபைலில் கேம் விளையாட... உச்சகட்ட ஆத்திரத்துடன்.....
"ஏலேய் ஆதித்யா என்னல நீ விளையாண்டுட்டு இருக்கியா... என் கூடவே தைரியமா மோதுறல நீ.... உன் நல்லதுக்கு தான்ல சொல்றேன்... என்கிட்ட வம்பு வெச்சுகாதல... அப்புறம் இந்த சுடலைமணி யாருன்னு காட்ட வேண்டியிருக்கும்ல..." என்று அவர் எரிச்சலுடன் கத்தினார்.

அவர் கத்துவதை அலட்சியப்படுத்திய ஆதித்யா.. மொபைலை டேபிளில் வைத்து விட்டு, ஏளனமாக அவரைப் பார்த்து...
"நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாம இங்க வந்து இருக்கல... என்ன காக்க வைக்கணும்னு நீ வேணும்னே... உன்னோட வப்பாட்டி வீட்டுக்கு போயிட்டு என்ன பாக்க லேட்டா வந்து இருக்க... அப்படி தானே" என்று கண்கள் சிவக்க அழுத்தமாக கேட்டவனை பார்த்து அதிர்ந்து தான் போனார் அவர்...
இங்கிருந்து கொண்டே இவனுக்கு எப்படி தெரிந்தது? என்று அவர் குழப்பமாக பார்க்க....

"என்ன முழிக்கிற.... உன்னோட கூட்டத்துல கூட என்னோட ஆளுங்க இருக்கத்தான் செய்றாங்க...." என்றவன், அவரை ஏளனமாகப் பார்த்து....
"நீ ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட ஏழைகளை ஏமாத்தி வளைச்சு போட்டுருக்கிற அந்த இடம் எனக்கு தேவைப்படுது.... அதனால அதை என்கிட்ட தந்திடு" என்றான் ஆதித்யா கட்டளையாக....

அதைக்கேட்டு கொதித்த சொட்டை மணி சாரி சுடலைமணி....
"ஏலேய் எதுக்குல நான் உன்கிட்ட தரனும்..."என்று எகிரி கொண்டிருந்தவரை கூர்மையாக பார்த்தவன்.....
"எலக்ஷன் டைம்ல இதே வாய் தான் என் கிட்ட வந்து உதவின்னு வந்து நிக்கும்... நிக்க வைப்பேன்... அப்படியும் இல்லனா உன்ன தோக்க வைப்பேன் " என்றவன் மீண்டும் கோபத்துடன்...
"என்ன பத்தி உன் கட்சிக்காரங்க கிட்ட நல்லா கேட்டு வச்சுக்கோ... அப்புறம் நீ பண்ற அநியாயம் எல்லாத்தையும் நானும் பாத்துட்டு தான் இருக்கேன்... அதை தட்டிக் கேட்கிற அளவுக்கு நான் ஒன்னும் நேர்மை நீதி ன்னு சுத்துறவன் இல்ல தான்.... ஆனா அதே மாதிரி காசு இல்லாதவங்க கிட்ட சுருட்ட மாட்டேன்... பணத்தை வைக்க இடம் இல்லாம சுவத்துல வைக்கிறவங்க கிட்ட மட்டும்தான் சுருட்டுவேன் ... ஆனா நீ ஏழைங்க வயித்துல அடிச்சுட்டு உன் வப்பாட்டி வீட்டுக்கும் பொண்டாட்டி வீட்டுக்கும் சொத்து சேர்த்து வைக்கிற.... அதுல கொஞ்சம் இழந்தா பரவாயில்ல மரியாதையா... அந்த இடத்தை எனக்கே முடிச்சி கொடுத்துடு..." என்று அதிகாரமாக சொன்னவன் கூலிங் கிளாசை எடுத்து கண்களில் போட்டுக்கொண்டு அவரை அலட்சியமாகப் பார்த்துவிட்டு கம்பீரமான தோரணையுடன் வெளியே சென்றுவிட்டான்.
போகும் அவனையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவரை பார்த்த அவரது பி ஏ குமாருக்கு லேசாக சிரிப்பு வந்தது...

சுடலைமணி வரும்பொழுது அவனிடம்... "ஏலே குமாரு அந்த ஆதித்யா பொடி பய நம்மள எதுக்கு கூப்பிட்டு இருக்கானு தெரியலல ....போன தடவையே நான் கோபப்பட்டு கை வச்சி இருந்தா ரச பாசமா ஆக இருக்கும்ல.... இந்த தடவை நான் கண்டிப்பா கோபப்படுவேன்... அப்பதான் இந்த சுடலைமணி யாருன்னு அந்த ஆதித்யா பயலுக்கு தெரியும் நீதான்ல நா அடிதடியில் இறங்காமல் பார்த்துக்கணும்" என்று வீராப்பாய் பேசிவிட்டு வந்தவர் இங்கு தலையில் துண்டு போடாத குறையாக அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து,
"ஏலே குமாரு ..அவன் என்னையே நோண்ட ஆள் வச்சிருக்கானோ? இனி அவனை நான் நோண்ட ஆரம்பிக்கிறேன்ல... இந்த சுடலைமணியவே மிரட்டிட்டு போறான்... இந்தப் பொடிப் பய... அவன் வயசுதாம்ல... என்னோட அனுபவம்... என்கிட்டயே மோதுகிறான்ல நான் யாருன்னு அவனுக்கு காட்டனும்ல்ல" என்றவர் ஆதித்யாவிற்கு எதிராக என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.


திடீரென தனது வீட்டிற்கு வந்த சுவாதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் வாங்க... என்று வரவேற்றான் நந்தன்.

ஹாஸ்பிடலில் மலரை சுவாதி தள்ளி விட்டிருந்ததால்.. அவளின் மீது கோபம் இருக்கத்தான் செய்தது... இன்னும் ஒரு வாரம் மட்டுமே இங்கு... அதற்குப் பிறகு
அமெரிக்காவிற்கு செல்லப் போகிறான் தேவையில்லாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? என்று நினைத்து தான் அவன் முகத்தில் எதையும் காட்டாமல் அவளை உள்ளே விட்டது.
வரும்போதே கண்களை கசக்கி கொண்டும்.... கர்ச்சீப்பால் கண்களை ஒத்திக்கொண்டு தான் உள்ளே வந்தாள் சுவாதி.

அவளை அமர சொல்லிவிட்டு தனக்கு தெரிந்த அளவில் காபி போட்டுகொண்டு கொடுத்தான்.
அதை மறுக்காமல் வாங்கி கொண்ட சுவாமியிடம் ... "சொல்லுங்க சுவாதி எதுக்கு வந்திருக்கீங்க?" என்று கேட்டான் நந்தன்.

காபியை டீப்பாயில் வைத்துவிட்டு...
மீண்டும் கர்ச்சீப்பை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் அவள்...
அவள் வெகுநேரம் அழுதது போல் இருக்கவும்... "மகேஷ் சாருக்கு ஒன்னும் இல்லையே" என்று லேசான பதட்டத்துடன் கேட்ட நந்தனிடம் ...இல்லை என்று தலையசைத்தாள் சுவாதி...
"அப்ப எதுக்கு அழுகுறிங்க?" என்று நந்தன் கேட்க...
சுவாதி விடாமல் அழுதுகொண்டே ...
சௌமியா அவனை திருமணம் செய்ய ஆசைப்பட்டது முதல் மலரின் மீது சந்தேகம் வர வைக்க ஆதித்யா செய்தது வரை... சொல்லிவிட்டு,
"பாவம் மலர் திரும்பவும் என் அண்ணன் ராட்சசன் கிட்ட மாட்டிக்கிட்டா..." என்று வராத கண்ணீரை வரவழைத்து கொண்டு குமுறி குமுறி அழுதாள் சுவாதி.

நந்தனுக்கு பயங்கர அதிர்ச்சி தான் ...
"மலர் என்ன மட்டும் தான் விரும்பி இருந்திருக்கா... ஐயோ என்னோட அவசர புத்தியால எல்லாத்தையும் நான் கெடுத்துட்டேனே.... மலர் எவ்வளவு கஷ்டப்பட்டானு தெரியலையே.... சௌமியா இவ்வளவு தரம் கெட்டவளா... அவளைப் போய் என்னோட தோழியா நெனச்சேனே ...மலருக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணியிருக்கா... ஆனால் தண்டனை கிடைக்காம புருஷன் கூட ஜாலியா இருக்கா... ஆனா மலர் மட்டும் கஷ்டப்படனுமா? அப்புறம் அந்த ஆதித்யாவ நெனச்சாலே கோவமா வருது அவனெல்லாம் மனுஷனா...ச்சை" என்று ஆத்திரத்துடன் நினைத்தவனின் முகம் கோபத்தால் சிவந்தது.

பின் ஏதோ யோசித்து சட்டென்று நிமிர்ந்து அமர்ந்த நந்தன், கண்களில் கூர்மையுடன்...
"ஆனா ஹாஸ்பிடல்ல அவகிட்ட நீங்கதான் ஹார்ஷா நடந்துக்கிட்டிங்க... அவளை கீழே தள்ளி விட்டு ...எவ்வளவு அசிங்கமா பேசினீங்க?" என்று அவளை சந்தேகமாக பார்த்துக்கொண்டே கேட்டான் நந்தன்.

அவ்வளவு நேரம் அவனது முக மாற்றத்தை கவனித்துக்கொண்டு உள்ளுக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்த சுவாதி, அவனது இந்த திடீர் கேள்வியில்.....ஒரு நொடி திணறினாலும்...
"இந்த விஷயம் எல்லாம் எனக்கே புதுசுதான் நந்தன். நேத்து சௌமியா மூலமா தான் எனக்கும் விஷயம் தெரியும். அதுவரைக்கும் நானும் மலர தப்பா தான் நினைச்சுட்டு இருந்தேன். இப்போ உண்மை தெரிஞ்ச அப்புறம் என்னாலேயே தாங்க முடியல ..அந்த படுபாவி சௌமியா என்கூட பிறந்தவளா போய்ட்டா இல்லனா அவ்ளோதான்.... மலருக்கு பால் போல மனசு ஒரு வார்த்தை யாரையும் எதிர்த்து கூட பேச மாட்டா... அவளை எங்க அண்ணன் என்ன கொடுமை பண்றான்னு தெரியலையே... என்னாலயும் எதுவும் அவனை தட்டி கேட்க முடியாது... எவ்வளவு கொடுமை பண்ணினாலும் மலர் கண்டிப்பா வெளில எதுவும் சொல்லவும் மாட்டா?"என்று முதலைக் கண்ணீர் வடித்தாள் சுவாதி.

"மலரை கொடுமைப்படுத்துவானா ஆதித்யா... ???எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்... நான் அவ மேல நம்பிக்கை வைக்காம என்னென்னவோ பேசி அவளையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப் படுத்திட்டேன் ... மலர் உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் சீக்கிரம் அந்த அரக்கன் ஆதித்யா கிட்ட இருந்து உன்ன கூட்டிட்டு வந்து உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறேன்" என்று மனதிற்குள் சபதம் எடுத்த நந்தன்...

அப்பொழுதும் விடாமல் அழுது கொண்டிருந்த சுவாதியை பார்த்து....
"அழாதீங்க சுவாதி.... மலருக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் அழைச்சுட்டு அமெரிக்காவுக்கு போயிடுறேன்" என்று ஆறுதல் அளித்தான்.
வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று நினைத்த சுவாதி... "இந்த விஷயத்தை நான் தான் உங்க கிட்ட சொன்னேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம் நந்தன். அப்புறம் எனக்கு பெரிய பிரச்சனை ஆகிடும் ...இப்ப கூட மலர் கஷ்டப்படுறத உங்ககிட்ட சொன்னா அவளுக்கு ஒரு விடிவு காலம் வரும்னு தான் சொல்ல வந்தேனே... தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா... இதான் என்னோட போன் நம்பர் கால் பண்ணுங்க ... உங்க ஃபோன் நம்பரையும் தாங்க.." என்று கேட்டு வாங்கிக் கொண்ட சுவாதி அவனிடம் விடைபெற்று சென்றாள்.

மீட்டிங் முடிந்து அலுவலகத்திற்கு சென்ற ஆதித்யாவிற்கு இருப்புக்கொள்ளவில்லை.
மலரை பார்க்கவேண்டும் போல் உள்ளம் பரபரத்தது... மதிய உணவின்போது வீட்டு லேண்ட் லைனுக்கு கால் செய்து மலர் சாப்பிட்டாளா? என்று விசாரித்துக் கொண்டவன்.... மாலை 4 மணி ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
அவன் வீட்டிற்கு வரும்பொழுது மலர் தோட்டத்தில் இருப்பதாக பணியாளர்
ஒருவர் சொல்ல, தன் அறைக்கு சென்று அலுவலக உடையை மாற்றிவிட்டு ரெப்ரெஷ் ஆகி தோட்டத்திற்கு சென்றான் ஆதித்யா.
அங்கு அவன் பார்த்த காட்சியில் ஒரு நொடி மலைத்து நின்று விட்டான்....
அவன் புதிதாக வைக்க சொல்லி இருந்த ரோஜா செடிகளின் வரிசையை.... அதன் பூக்களின் நிறத்திற்கு ஏற்ப அழகாக அடுக்கிக் கொண்டிருந்தாள் மலர்....

சேலையை இடுப்பில் செருகிக்கொண்டு அவள் வேலை செய்வது தனி அழகுதான் என்றாலும்... அவள் வேலை செய்வது பிடிக்காமல், மலர் என்று கத்தினான் ஆதித்யா.

எப்பொழுதும் போல அவனது கத்தலில் அதிர்ந்தவள்.... கையில் வைத்திருந்த ரோஜா செடியை கீழே போட்டு விடுவோமோ... என்ற பயத்தில் இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அதை கவனித்தவன்
"அதைக் கீழே வெச்சிட்டு இங்க வா..." என்று கூப்பிட்டான்.
அருகில் வந்தவளிடம்,
"உன்னை யார் இதெல்லாம் செய்ய சொன்னது?"என்று ஆதித்யா கேட்க....
"எனக்கு ரொம்ப ரொம்ப போர் அடிச்சது... அதனாலதான் வீட்ல இருக்குற கொஞ்சம் கொஞ்சம் வேலைய பார்த்தேன்" என்று பாவமாக சொன்னாள் மலர்.

"போரடிச்சா டிவி லேப்டாப் எல்லா இருக்கே அதுல மூவி பாக்கலாம் சாங் கேட்கலாமே... "

"ஒரு நாள் ஃபுல்லா அதையே வா ...பாக்க முடியும்???" என்று மலர் தயங்கிக்கொண்டே கேட்க....

ஆதித்யா அவளை முறைத்துக் கொண்டே,
"நாளைக்கு தான் நீ ஸ்கூலுக்கு போய்டுவியே... இன்னைக்கு ஒரு நாள் உன்னால சும்மா இருக்க முடியாதா?" என்று கேட்டான்
இதற்கு என்ன பதில் சொல்ல? என்று தெரியாமல்,
"நான் வீட்டுக்குள்ள போறேன்" என்று மலர் நழுவ பார்க்க, அவளை செல்லவிடாமல் அவள் முன்னே கைநீட்டி தடுத்தவன்...

"நான் தோட்டத்துக்கு வந்ததும் நீ வீட்டுக்குள்ள போறியா?"என்று விடாமல் அவளை வம்புக்கு இழுக்க...

"இவன் கூட குப்பை கொட்டுறதுக்கு பேசாம சன்னியாசியாக போய்டலாம் போலயே மலரு" என்று தனக்குள்ளேயே நினைத்தவள்...
"நான் போகவே இல்ல... இதோ இங்கதான் உட்கார போறேன்" என்று தோட்டத்தின் ஓரத்தில் இருந்த கல் மேடைக்கு சென்று அமர்ந்து கொண்டாள் .

வேலை செய்ததினால் உடலில் வியர்வை வழிந்து கசகசவென்று இருந்தது அவளுக்கு.... அவன் வர தாமதமாகும் அதற்குள் வேலை செய்துவிட்டு குளித்து விடலாம் என்று எண்ணி இருந்தாள் அவள்.
அதற்கு ஆப்பு வைப்பது போல் சீக்கிரம் வந்து நிற்கிறான்...

தான் வம்புக்கு இழுப்பது கூட கூட தெரியாமல் குழந்தைபோல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்தவன் சிரித்துக் கொண்டே அவள் அருகில் சென்று நெருங்கி அமர்ந்தான் ஆதித்யா.

அவன் தன் அருகில் இடிப்பது போல் நெருங்கி அமர்ந்ததும் லேசாக நகர்ந்து அமர்ந்து கொண்டாள் மலர்.
அவள் மனசாட்சியோ,
"மலரு அடக்கி வாசி... இல்லனா அவனுக்குள்ள இருக்கிற பூச்சாண்டி வெளியே வந்துவிடுவான் ...அப்புறம் ஆகுற சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பு இல்ல" என்று எச்சரிக்க....
அதற்கு ஏற்றாற்போல் ஆதித்யாவும்....
"நான் ஒட்டி உட்கார்ந்து உன்ன ஒன்னும் கடிச்சு திண்ணுற மாட்டேன் நம்பி உட்காரலாம்" என்று எரிச்சலாக கூறிவிட்டு மீண்டும் நெருங்கி அமர்ந்தான்.

இந்தமுறை மலர் நகர்ந்து அமரவில்லை. ஆனால் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
அவனை ஏறெடுத்தும் பார்க்கமுடியாமல் உதட்டை கடித்துக்கொண்டு கண்கள் அலைபாய அமர்ந்திருந்தாள் மலர்.

திடீரென அவளது கையை பிடித்தான் ஆதித்யா...
திக்கென்று இருந்தாலும் அவனைப் பார்க்க கூச்சம் தடுக்க மறுபுறம் திரும்பி கொண்டாள்.
லேசாக கன்னங்கள் சிவப்பது போல் இருந்தது...

ஆதித்யாவோ அவன் பிடித்திருந்த மலரின் கையில் எதையோ வைக்க... என்ன? என்பதுபோல் அப்போதுதான்... அவனை திரும்பி பார்த்தாள் மலர்.
ஆதித்யா அவளது கையில் புத்தம்புதிய நியூ மாடல் செல்போன் ஒன்றை வைத்திருந்தான்.

"இது எதுக்கு?" என்று மலர் கேட்க...
"உன்கிட்ட செல்போன் இல்லல்ல... இனி நீ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுடுவ... உன்ன எப்படி நான் காண்டாக்ட் பண்ண? அதான் இது..." என்று காரணம் சொன்னான் ஆதித்யா.
ஆனால் அவளுக்கு தான் கடந்து போன நாட்களின் ஞாபகம் நெஞ்சில் வந்து தாக்க... கண்கள் கலங்கியது....

நந்தன் வாங்கி தந்த அந்த மொபைலை அவனிடமே கொடுத்து விட்டாள் தான்.... இருந்தாலும் அவளது நெஞ்சத்தில் கடந்த காலத்தில்... மிஞ்சிய காயத்தின் தழும்புகள் இருக்கத்தான் செய்தது. நினைவுகளாக மட்டுமே.....!!!

பழசை நினைத்த மலருக்கு அழுகை வருவது போல் இருக்கவும்...
"தேங்க்ஸ்ங்க" என்று மட்டும் ஆதித்யாவிடம் சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டாள் மலர்.

மொபைலை கொடுத்துவிட்டு...
அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று ஆதித்யா நினைத்திருக்க,
ஆனால் அவளோ அதை வாங்கி கொண்டு... கண்கள் கலங்க சென்றதை பார்த்தவன் அமைதியானான்.

மீண்டும்... மீண்டும்... அவள் மனதில் தனக்கு இடமில்லை என்று சாட்டை அடித்ததுபோல் உணரவும் ஆதித்யாவின் உள் மனம் மிகவும் கலங்கிப் போனது.

அன்று இரவு உணவினை இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர் ஆனால் பேசிக்கொள்ளவில்லை.
மலர் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றுவிட, ஆதித்யா எப்போதும்போல் தாமதமாகத்தான் வந்தான்.

நேற்றுப் போல் மலர் சோபாவில் படுத்திருக்கவில்லை பெட்டில்தான் படுத்திருந்தாள். அதுவும் தலையணைகளின் அணிவகுப்புடன்... மூவர் படுக்கும் அளவிற்கு பெரிய கட்டில் தான் என்றாலும் நேற்றைய தூக்கம் போனது போதாதா? அதனால் இன்று முன்னெச்சரிக்கையாக சரி சமமாக பெட்டை பிரித்து தலையணையால் பாலம் அமைத்து இருந்தாள்.

ஆதித்யா அறைக்குள் வரும்பொழுது மலர் தூங்குவது போல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.
விழித்திருந்தால் என் அருகில் படுத்தால் உன்னை கடித்து தின்று விட மாட்டேன் என்று சொல்லி தூக்கத்தை கெடுத்து விடுவான்....
ஆதித்யா சிறிதுநேரம் மலரை வெறித்து பார்த்துவிட்டு மறுபுறம் சென்று படுத்து கொண்டான். அவன் கண்ணில் தெரிந்த வலியை மலர் பார்த்திருந்தால் தலையணையை எடுத்து இருப்பாளோ? என்னவோ?

மறுநாள் சீக்கிரமே எழுந்து அமர்ந்த மலர் தன் அருகில் படுத்து இருந்த கணவனை பார்க்க... அவனது இடமோ காலியாகக் கிடந்தது.
சீக்கிரம் எழுந்து சென்று விட்டான் போல சீக்கிரம் வந்து விடுவான் என்று நினைத்துவள்... முகம் கழுவிட்டு யோகா செய்தாள்.
ஆனால் அவள் பள்ளிக்கு கிளம்பும் வரை ஆதித்யா அவள் கண்ணில் படவேயில்லை.... வேலை செய்பவர்களிடம் கேட்டதற்கு அவன் காலையிலேயே எங்கோ சென்றுவிட்டான் என்று விட்டனர்.
மலருக்கு தான் எதையோ இழந்தது போல் அன்றைய நாள் இருந்தது....
ஆதித்யா ஏற்பாடு செய்திருந்த படி காரில் தான் பள்ளிக்கு சென்றாள் மலர். ஆனால் வழியனுப்ப தான் ஆதித்யா வரவில்லை... "சொல்லாம கொள்ளாம எங்க போனான்" என்று அவளது மனம் சுணங்கியது... பாடிகார்ட்ஸ் இருவரும் மலரின் காருக்குப் பின்னால் பைக்கில் ஃபாலோ செய்தனர்.
பள்ளிக்கு சென்ற பின் ஓரளவு நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு கடமையை கண்ணாக செய்தாள் மலர். மதிய இடைவேளையில் வானதியை பார்த்து கொஞ்சிவிட்டு வந்தாள். இருந்தும் மனதின் ஒரு ஓரத்தில் வெறுமையாக தான் இருந்தது.

மீண்டும் மாலையில் வீடு திரும்பிய மலர் ஆதித்யாவிற்காக காத்திருக்க...அவனோ அவளது கண்களில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.
இரவு வரையிலும் அவனுக்காக காத்திருந்தவளுக்கு தெரியாது அவன் அதே வீட்டில் மற்றொரு அறையில் இருந்தான் என்று....

மறுநாள் காலையில் கண்டிப்பாக அவன் தோட்டத்தில் இருப்பான் என்று மலரும் அங்கு சென்றாள்.
செயற்கை குளத்தின் அருகே இருந்த டேபிளில் சாய்ந்து நின்று வானத்தை வெறித்தவாறு நின்று கொண்டிருந்தான் ஆதித்யா.
அவன் அருகே சென்று நின்றவள், என்ன பேச என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள்...
தன் அருகில் அசைவு தெரியவும் திரும்பியவன்.... மலரை பார்த்ததும் நகர பார்க்க... அவனது கையை பிடித்துக் கொண்டாள் மலர்.
அவன் எதற்கோ கோபமாக இருக்கிறான் என்பது வரை அவளுக்கு புரிந்தது ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை??

"என்னங்க எதுக்கு கோபம்?" என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தவன்...

"நான் தீண்டத்தகாதவன் மலர் ...என்ன தொடாத..." என்று அவளது பிடியிலிருந்த கையை உருவிக் கொண்டான் ஆதித்யா.

"யாருங்க அப்படி சொன்னா?" என்று மலர் கேட்க....

"என்னோட பொண்டாட்டி" என்று பட்டென்று பதில் வந்தது...

"ஓஓஓ... அப்படியாங்க" என்றவளுக்கு அப்பொழுதுதான் அவன் தன்னை சொல்கிறான் என்று புரிந்தது.

"நான் எப்போங்க அப்படி சொன்னேன்?" என்று பதறிப் போனாள் மலர்

"நீ அத தனியா வேற சொல்லனுமா? உன்னோட செய்கைகள் போதாதா காட்டுறதுக்கு? "என்று ஆதித்யா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள...
அப்பொழுதும் மலருக்கு ஒன்றும் புரியவில்லை...

"நா என்ன பண்ணேங்க??" என்று பாவமாக தான் கேட்டாள் மலர்.

"நீதான நம்ம படுக்குற கட்டில்ல... நான் உன்ன தொடக்கூடாதுன்னு பில்லோவ வச்சு பிரிட்ஜ் கட்டி வச்சிருந்த... நான் என்ன தீண்டத்தகாதவனா? நான் உன்னோட புருஷன் தான... இதுவரைக்கும் உன்ன நான் ஏதாவது கஷ்டப்படுத்தி இருக்கேனா... எதுக்கு அப்படி பண்ணின?" என்று மூக்குக்கு மேல் நின்ற கோபத்துடன் நியாயம் கேட்டான் ஆதித்யா.

"அடங்கொப்புரானே... இதுக்கா இத்தனை அக்கப்போர்... "
என்ற மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட மலர் அவனின் பின்னாடியே சென்றாள்.

"இப்ப எதுக்கு? என் பின்னாடியே வார..." என்று சிடு சிடுத்தான் ஆதித்யா.

"அது வந்து... ரொம்ப சாரிங்க நான் தூக்கத்துல உருண்டு உருண்டு உங்களை தூங்க விடாம பண்ணிடுவேன். உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு அப்படி பண்ணிட்டேன்.... அதுக்காகவா கோபம்" என்று மலர் கேட்டதும் அவள் முகத்தை உற்று பார்த்தான் ஆதித்யா.

"இது என்ன பார்வை ராசா..." என்று மனதில் நினைத்தவள், உதட்டை கடித்துக்கொண்டு தலைகுனிந்து நின்றாள் மலர்.

அதற்குமேல் அவனாலும் கோபத்தை பிடித்து வைக்க முடியாமல் போக....
"எனக்கு காபி போட்டு கொண்டு வா... அப்ப தான் என்னோட கோபம் போகும்" என்றான் ஆதித்யா.
"ஓகேங்க..." என்று சந்தோஷமாக அவனுக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள் மலர்.

காபியை ரசித்து குடித்த ஆதித்யா
ஞாபகம் வந்தவனாக...
"நேத்து நான் ஒழுங்காவே தூங்கல... என்னோட ரூம்ல படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்... நேத்து உன் மேல உள்ள கோவத்துல வேற ரூம்ல போய் படுத்துக் கிட்டேன்... அதனால என்னோட தூக்கம் போச்சு... எல்லாத்துக்கும் காரணம் நீதான்" என்று மீண்டும் கோபத்துடன் திட்டி விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான் ஆதித்யா.

"விட்டா அவருக்கு கொசு கடிச்சா கூட என் மேல தான் பழி போடுவார் போல..." என்று மனதிற்குள் புலம்பிய மலர்... பள்ளிக்கு தயாராக உள்ளே சென்றாள்.

மலர் பள்ளிக்கு தயாராகி... நிலைக்கண்ணாடியில் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பின்னால் வந்து நின்ற ஆதித்யா...
"இன்னைக்கு என்னோட ஹேர் ஒழுங்காவே செட்டாக மாட்டுக்கு.. கொஞ்சம் சரி பண்ணி விடு" என்று தலையை குனிந்து அவளிடம் காட்டினான்.

அவனைப் பார்த்து திருதிருவென முழித்த மலர்,
"எனக்கு அது பத்தி எல்லாம் தெரியாது..." என்றாள்.
"ஆமா நீ டீச்சர் தான... இது கூட தெரியாதா உனக்கு? நீ எல்லாம் எங்க பசங்களுக்கு பாடம் நடத்தி பாஸ் பண்ண வைக்கப் போறியோ..." என்று அலுத்துக் கொண்டவன்... தானே தலை முடியை சரிசெய்து கொண்டு நகர்ந்தான்.

மலருக்கு தலையை எங்கே சென்று முட்டலாம் என்பது போல் இருந்தது.... எந்த ஊரு பள்ளியில் தலைமுடியை செட் செய்ய சொல்லி தருகிறார்களாம்....!!! என்று நினைத்தவளுக்கு....இன்று ஏதோ ஒன்று அவனிடம் மாறுதலாகவே தெரிந்தது.. அது என்ன?என்று யோசித்துக்கொண்டே
கிளம்பி முடித்தவள்... கீழே வரும் பொழுது ஆதித்யா ஏற்கனவே தயாராகி நின்று கொண்டிருந்தான்.

"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது... சீக்கிரம் கிளம்ப மாட்டியா?" என்று ஆதித்யா திட்டியதும்...
"நான் சீக்கிரம் தான் கிளம்பி வந்து இருக்கேன்... கார் ரெடியா இருக்கா... சேகர் அண்ணன்... அசோக் அண்ணன் எங்க? வந்துட்டாங்களா?" என்று ஆதித்யாவின் பின்னால் மலர் தேட....

" நான் உன்னோட முன்னாடி நிக்கும் போது... அவங்களலாம் நீ எதுக்கு தேடுற?" என்று ஆதித்யா ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

"பின்ன அவங்க தானே... எனக்கு பாடி கார்ட்ஸ்... என் கூடவே நேத்து ஸ்கூலுக்கு கூட வந்தாங்களே... இன்னைக்கும் வருவாங்க தானே" என்று மலர் ஆதித்யாவிடம் கேட்க...

" அவங்க எல்லாம் இன்னைக்கு வர மாட்டாங்க... நானே உன்ன ஸ்கூல்ல டிராப் பண்றேன் ...குயிக் குயிக்..." என்று அவளை அவசரப்படுத்தி காரில் ஏற்றினான் ஆதித்யா.

நேற்று இதைத்தான் எதிர்பார்த்தாள் மலர்...
இங்கிருந்து முதல்நாள் ஸ்கூலுக்கு செல்வதால்... தன்னை ஆதித்யா ட்ராப் செய்வான் என்று ஆவலாக எதிர்பார்த்தாள். ஆனால் நேற்று முழுவதும் கண்களிலே படாமல் ஆட்டம் காட்டிவிட்டானே இந்த காட்டுமிராண்டி... என்று நினைத்தவள்...
ஸ்கூல் வரும் வரை எதுவும் பேசவில்லை... அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.

ஸ்கூல் அருகே வந்து கார் நின்றதும், வேகமாக காரை விட்டு இறங்கிய மலரை... அதே வேகத்துடன் மீண்டும் காருக்குள் இழுத்தான் ஆதித்யா.
அவனது இந்த திடீர் செயலை எதிர்பார்க்காதவள் நிலைதடுமாறி அவள் அமர்ந்திருந்த சீட்டிலேயே விழுந்தாள்.

"ஹையோ இப்போ என்ன சொல்லப் போறானோ...?" என்பது போல் மலர் அவனைப் பார்க்க...

அவனோ அசால்டாக ,
"எனக்கு ஒரு கிஸ் வேணும் மலர் அத மட்டும் தந்துட்டு நீ போகலாம்" என்று அவள் முகத்தை பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு சொல்ல....

"அடி ஆத்தாடி இது வேறயா.." என்று மனதிற்குள் சலித்த மலர்... "அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லைங்க..." என்று மீண்டும் கார் கதவை திறந்து வெளியேறப் பார்க்க...
மீண்டும் அவளை இழுத்து அமர வைத்தவன்...

"நீ வானதிக்கு கிஸ் பண்ணிருக்கல நான் நிறைய தடவை பார்த்திருக்கேன்... நீ என்ன பழக்கம் இல்லைன்னு பொய் சொல்ற?" என்று ஆதித்யா நியாயம் கேட்கவும்...

"இவனோட பெரிய அக்கப்போரா போச்சே... இப்ப என்ன பண்ண?" என்று மனதில் யோசித்தவள்,
"நான் வீட்ல வச்சு தர்றேங்க.... இப்போ நான் ஸ்கூலுக்கு போறேனே... ப்ளீஸ்" என்றாள் மலர் கெஞ்சலாக....

"ம்ம்... சரி நீ போ...ஆனா நீ காலைல என்கிட்ட சாரி கேட்டல்ல அதை இப்பவே கேன்சல் பண்றேன்... இன்னும் நான் தீண்டத்தகாதவன் தான?" என்று முக இறுக்கத்துடன் கேட்ட ஆதித்யாவை பார்த்தவளுக்கு இவ்வளவு பிடிவாதம் எதுக்கு? என்றுதான் தோன்றியது.

"ப்ளீஸ்ங்க இப்படியெல்லாம் பேசாதிங்க.... நான் அப்படியெல்லாம் நினைக்கல..." என்று மலர் சமாதானப்படுத்தியும் அவன் முகம் இறுகியே இருந்தது.

ஆதித்யாவின் முக இறுக்கத்தை பார்த்ததும் நேற்றைய அவனது பாராமுகம் நியாபகம் வர.... கண்களில் நீர் முட்டியது
அவளுக்கு .... இன்றும் அப்படியே பேசாமல் முகம் காட்டாமல் இருந்து விடுவானோ? என்ற பயத்தில்...அவனது கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டுவிட்டு வேகமாக காரைவிட்டு இறங்கி நடந்தாள் மலர்.

கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்துக் கொண்டே அவள் உள்ளே செல்வதை... பள்ளியின் எதிர்ப்புறம் இருந்த மரத்தடியில் நிறுத்தியிருந்த ஒரு காருக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் நந்தன்.....
சுவாதிக்கு வானதி மூலம் மலர் மீண்டும் வேலைக்கு வருகிறாள் என்று தெரிந்ததும்... அதை உடனே நந்தனிடம் சொல்லிவிட்டாள்.
தகவல் தெரிந்ததும் நந்தனும் காலையிலேயே இங்குவந்து காத்திருக்கிறான்....

ஆதித்யாவின் கார் வந்து நின்றதும் மலர் வேகமாக பயந்து இறங்கியதையும்... மீண்டும் யாரோ உள்ளே அவளை இழுத்ததையும்... மீண்டும் அவள் வெளியே வரும்பொழுது அவள் அழுதுகொண்டே செல்வதையும் பார்த்தவனுக்கு மனபாரம் ஆகியது.

"பாவம் என்னோட மலர் எவ்வளவு கஷ்டப் படுறாள்.. எல்லாம் என்னால தான்" என்று நினைத்தவனுக்கு உள்ளம் புண்ணாகி வலித்தது.
இன்று எப்படியாவது மலரிடம் பேசி ஆதித்யாவை விவாகரத்து செய்ய சொல்ல வேண்டும் என்று நினைத்தான் நந்தன்....

இங்கு காரில் அமர்ந்திருந்த ஆதித்யாவோ மலரின் மென்மையான இதழ் முத்தத்தில் தன்னையே தொலைத்துக் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தான்......
தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN