தீராக் காதல் திமிரா-7

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கையில் உள்ள ஃபைலை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வம்சி கிருஷ்ணா.

அதில் அந்த பூங்காவின் வாட்ச்மேன் கொடுத்த கார் எண்ணிலிருந்து அது யாருடைய கார் ..அவரின் முகவரி புகைப்படம் அனைத்தும் தெள்ளத் தெளிவாக இருந்தது.

ஆனால் அவனால் தான் நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப இவளா? இவளா? என்று அவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்...

பின்னே அதிலிருந்தது அதிதியின் புகைப்படம் ஆயிற்றே...

அவனைப் பொருத்த வரை அவள் பஜாரி சண்டைக்காரி அவ்வளவு தான்...ஆனால் அவள் ஏமாற்றுக்காரி ஒருவனை காதல் வலையில் வீழ்த்தி துரோகம் செய்தவள் ஆக இருப்பாள் என்பதை அவன் மனது ஏனோ ஏற்றுக்கொள்ள மறுத்தது.

தனது மொபைலில் யாருக்கோ அழைத்து மேலும் அவளைப் பற்றிய விவரம் சேகரிக்க சொன்னவன், அந்த ஃபைலில் இருந்த அதிதியின் புகைப்படத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் புகழ்பெற்ற பார்லருக்கு சித்தி சுகுணா உடனும் ராகினி உடனும் வந்திருந்தாள் அதிதி. இன்று தான் அவளைப் பெண் பார்க்க வருவதாக இருந்தனர்.
அதனால் அவளுக்கு பேஷியல் செய்வதற்காக கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தார் சுகுணா.
முதலில் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தவள்...
மங்களம், "அதான் அவ வர மாட்டேன்னு சொல்றாளே விடு சுகுணா..." என்று அவளுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசியதும்...
அவரை ஒரு பார்வை பார்த்தவள்,
"சரி சித்தி நா வாரேன்" என்று விட்டாள்.

மங்களத்தின் கண்கள் வன்மத்துடன் அதிதியை முறைக்க... அவளோ 'நீ புலி என்றால் நான் சூரப்புலியாக்கும்' என்பதுபோல் அலட்சியமாக அவரை பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

பின்னே எப்பொழுதும் தனக்கு எதிராக பேசுபவர்...இன்று தனக்கு ஆதரவாக பேசினால் மயங்குவதற்கு அதிதி அவ்வளவு பெரிய முட்டாளா என்ன?

மங்களத்திற்கோ,
அதிதி அந்த பெரிய பணக்கார குடும்பத்திற்கு மருமகளாக போய்விடுவாளோ? என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது. அது தடுப்பதற்கு தான் வழி தேடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே அதிதி சுத்தமாக அவரையும், அவர் பேத்தியையும் மதிக்க மாட்டாள் இதில் பெரிய குடும்பத்து மருமகளாக சென்றுவிட்டால் அவ்வளவுதான்... அவளை அடக்கவே முடியாது என்று நினைத்தவர், எப்படியாவது தன் பேத்தியை அந்தப் பெரிய வீட்டு மருமகள் ஆக்கவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

அவரது பேத்தி ராகினி அதிதியை விட ரொம்பவே அழகு என்பதால் அதில் அவருக்கு ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. ஆனால் அதிதி இப்பொழுது பார்லர் சென்று அலங்கரித்து வந்து விட்டால் தன் பேத்தி அளவிற்கு அழகாக தெரிவாள் என்ற அச்சம் வேறு மண்டைக்குள் குடைய இந்த சம்மதத்தை எப்படி தட்டிப் போக வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்,
தன் பேத்தியிடம் திரும்பி...
"ராகி மா நீயும் பார்லர் போயிட்டு உன்ன அலங்கரிச்சுட்டு வா" என்று சொல்ல சரியென்று சந்தோஷமாக தலையசைத்தாள் ராகினி.

சுகுணா தன் தாயிடம்,
"என்னமா பொண்ணு பாக்க வர்றது அதிதிக்கு தான ராகினி எதுக்கு பார்லருக்கு வரணும்?? அவ வீட்லேயே இருக்கட்டும்." என்று சொல்ல...
மகளை முறைத்த மங்களம்,
"பொண்ணுக்கு தங்கச்சி தானே ராகி.. அவளும் பாக்க அழகா இருக்க வேண்டாமா? சும்மா கூட்டிட்டு போ.. வீட்லருந்து அவளுக்கும் போரடிக்கும்" என்று கடுகடுப்பாக சொன்னதும் தாயை எதிர்த்துப் பேச முடியாமல் சுகுணா ராகினியையும் பார்லருக்கு அழைத்து வந்திருந்தார்.

பார்லருக்கு வந்ததும் ராகினி தன் தோழி ஒருத்தியை அருகில் இருக்கும் ஷாப்பிங் மாலில் பார்த்துவிட்டு வருவதாக சுகுணாவிடம் சொல்லிவிட்டு செல்ல...செல்லும் அவளையே ஒற்றை புருவத்தை தூக்கியவாறு சந்தேகம் கலந்த வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் அதிதி.

ராகினிக்கு அலங்காரம் செய்வது அவ்வளவு பிடிக்கும் வீட்டில் இருக்கும் பொழுதும் மேக்கப்,ஸ்கின் கேர்,ஹேர் ஸ்டைல் என்று எப்பொழுதும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள நினைப்பவள்...

ஆனால் இன்றோ பார்லர் வரை வந்தவள் உள்ளே கூட வராமல் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றால் எனில் ஏதோ தில்லுமுல்லு செய்கிறாள்...என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த அதிதியை சுகுணா பார்லருக்குள் அழைத்து வந்திருந்தார்.

அவர்கள் உள்ளே வந்ததும் சிரித்த முகத்துடன் வரவேற்று அமர வைத்த பெண் ஒருத்தி யாருக்கு என்ன செய்யவேண்டும்? என்று சுகுணாவிடம் விசாரித்துவிட்டு அதிதியை மட்டும் உள்ளே அழைத்து சென்றாள்.

உள்ளே பூதங்கள் போல்(அதிதியின் கண்களுக்கு) முகத்தில் எதை எதையோ அப்பிக்கொண்டு
சில பெண்கள் அமர்ந்திருக்க...

அதிதியை உள்ளே அழைத்து வந்திருந்த பெண்,
அவளிடம்..
"கோல்ட் பேஷியல், ப்ரூட் பேஷியல், டைமண்ட் பேஷியல்,ஃபியல் பேஷியல்..." என்று சில வகைகளை கூறி, "எந்த பேஷியல் உங்களுக்கு பண்ணனும்??" என்று கேட்க...
ஒன்றும் புரியாமல் திரு திருவென விழித்தாள் அதிதி.

அவளுக்கு தான் அதைப் பற்றி எதுவும் தெரியாதே? ஏன் அதையெல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை அவள்... இருந்தும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மனம் இல்லாமல்,
"சும்மா சிம்பிளா ஏதாவது ஒன்னு பண்ணி விடுங்க சிஸ்டர்"என்று அதிதி சமாளிக்க முயல...

அவளை வித்தியாசமாக பார்த்த அப்பெண், "உங்க ஸ்கின் டைப் என்ன?மேம்" என்று கேட்டாள்.

தனது முகத்தை நன்றாக தடவி பார்த்த அதிதி, "எல்லாருக்கும் மாதிரி எனக்கு மனுஷங்க ஸ்கின் டைப் தான் சிஸ்டர் .. எதுக்கு கேக்குறீங்க? உங்களுக்கு எப்படி தெரியுது? ஏதாவது வித்தியாசமா தெரியுதா?" என்று அப்பெண்ணிடமே சந்தேகமாக கேட்டு வைக்க... பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் தன் கண்களிலிருந்த வெள்ளரிக்காயை அகற்றிவிட்டு, 'யார்யா இவ' என்பதுபோல் பார்த்தார்.

பொறுமையை இழுத்து பிடித்த அந்த பார்லர் பெண், "உங்க ஸ்கின் ஓய்லி ஸ்கினா? ஆர் ட்ரை ஸ்கினா? இல்லனா நார்மல் ஸ்கினா? என்று தெள்ளத்தெளிவாக கேட்க,
புரிந்தும் புரியாமல் விழித்த அதிதி "நார்மல் ஸ்கின்" என்றவுடன் அதற்கேற்ற ஃபேசியல் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிதியை சமாளித்து அவளுக்குப் போட்டு முடிப்பதற்குள் ஒருவழி ஆகி விட்டாள் அந்தப் பெண்.

அதன் பிறகு அதிதியின் நகங்களை சீராக வெட்டி நகச் சாயம் பூசி விட்டவள் ...அவளது தலைமுடியை வெட்டப் போக அதற்கு அதிதி விடவில்லை மறுத்துவிட்டாள். மற்ற விஷயத்தில் எப்படியோ அவளது தலைமுடி என்றால் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.அதுவும் அவளது தாய்க்கும் அவளைப் போலவே நீண்ட கூந்தல் என்று கேள்விப்பட்டதில் இருந்து அதை வெட்ட மட்டும் அவளுக்கு சுத்தமாக மனம் வரவில்லை.

முழுதாக மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த அதிதியை பார்த்த சுகுணாவின் முகம் மலர்ந்தது.

"ரொம்ப அழகா இருக்கடி என் செல்லமே" என்று சுகுணா அவளுக்கு நெட்டி முறிக்க, அவருக்கு லேசாக புன்னகை பரிசளித்த அதிதியின் மனமோ
இதெல்லாம் எதற்கு?? வாழ்வு முழுவதும் இப்படியேவா தினம் அலங்காரம் செய்ய முடியும்? தூங்கி எழுந்ததும் இருக்கும் முகம்தானே உண்மையான முகம் அப்படியே பெண் பார்த்துவிட்டு சென்றால் என்ன ? என்று கேள்வி எழுப்பியது.

அவளது மூளையோ, 'இப்ப நீ என்ன கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன? எப்படி நாளும் வர்றவன ஓட ஓட துரத்த தான் போற அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு' என்று கேட்டு வைக்க.. அது உண்மையே என்பதால் சித்தி சுகுணா உடன் சிரித்த முகமாகவே பார்லரில் இருந்து வெளியே வந்தாள் அதிதி.

இங்கோ, அவளின் அலங்காரத்தையும் சிரிப்பையும் வெளியே நின்ற காரில் அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வம்சி.

அவனுக்கு கிடைத்த தகவலின் படி இன்று அதிதியை பெண் பார்க்க வருவது அவனுக்கு தெரிய வந்தது. அத்துடன் அவள் ராகவேந்திரன் கன்ஸ்டிரக்ஷன் முதலாளியின் மூத்த மகள் என்று தெரிய வந்ததும் அவனுக்கு பெரிய அதிர்ச்சி.

பார்த்த முதல் நாளில் அவளது உடையும் நடவடிக்கையும் அவளைத் தர லோக்கலாக தான் காட்டியது.
ஆனால் இன்றோ தன்னை உயிர்க்குயிராய் நேசித்தவனை தற்கொலைக்குத் தூண்டி விட்டு இன்னொருவனை திருமணம் செய்வதற்கு அழகாக அலங்கரித்துக் கொண்டிருக்கும் கொடூரமானவளாக தெரிந்தாள் அதிதி.

இவளை சும்மா விடுவதா?? என்று வம்சியின் மனம் கொந்தளிக்க... அவனது மூளை வேகவேகமாக திட்டம் போட ஆரம்பித்தது.

பார்லரில் இருந்து வெளியே வந்த அதிதிக்கு தன்னை யாரோ வெகுநேரம் பார்ப்பதுபோல் உணர்வு ஏற்பட சுற்றும்முற்றும் கண்களால் நோட்டம் விட்டவள் ...சுகுணாவை காரில் அமர சொல்லிவிட்டு வம்சி அமர்ந்திருந்த காரின் அருகில் வேகமாக வந்து அவனின் கார் கண்ணாடியை தட்டி இறக்கச் சொன்னாள்.

அவளுக்கு வம்சியின் கார் நன்றாகவே அடையாளம் தெரியும் என்பதால்,அவளின் செயலுக்கு வம்சியும் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை.

அவன் கண்ணாடியை கீழே இறக்கியதும்.. உள்ளே அமர்ந்திருந்தவனை பார்த்தவள், "என்னப்பா அப்பாடக்கரு... எப்டி இருக்க ??ஆளையே பாக்க முடியல. இங்க என்ன பண்ற? நீயும் முகத்துக்கு வெள்ளை அடிக்க வந்தியா? ஆல்ரெடி நீ வெள்ளையா தானே இருக்க?" என்று வரிசையாக கேள்வி கேட்க,
அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்த வம்சி முறைப்புடன்,
"என் தம்பி கூட வந்தேன்" என்று சொல்ல, "ஐயையோ அந்த ஒட்டடைக் குச்சி வெள்ளை அடிச்சாலும் ஓணான் மாதிரி தானே இருக்கும்" என்று இதழ் சுழித்து அதிதி சொன்ன விதத்தில் வம்சியின் கண்கள் அவளை இதழில் பதிந்து மீள,
அதை உணராத அதிதி," உன்னோட கார் ஏதாவது ரிப்பேர் ஆச்சுன்னா எங்க கடைக்கு வந்துடு.. பழசெல்லாம் மனசுல வெச்சுகாத அப்பாடக்கரு" என்று அவள் வேலை செய்யும் கடையின் விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட வம்சி அவளிடம் நேரடியாகவே விசாரிக்கும் நோக்குடன், "xxxxxx குறிப்பிட்ட கார் எண்ணை சொல்லி இது உன்னோட காரா?" என்று கேட்க...
"ஆமா அப்பாடக்கர்" என்று பதில் சொல்லி கொண்டிருந்தவளை அவளது சித்தி சுகுணா நேரம் ஆகிவிட்டது என்று கூப்பிட,
"ஹான்ன் வரேன் சித்தி..."என்று பதில் கொடுத்தவள்,
"உனக்கு எப்படி என்னோட கார் நம்பர் தெரியும்" என்று வம்சியிடம் சந்தேகமாக கேட்டாள்.
ஆனால் அவனோ அதற்கு பதில் சொல்லாமல், "அருண் தெரியுமா?" என்று கேட்டான்.

வம்சிக்கு இவள் அவள் தானா? என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் அவனால் அதிதியை ஏனோ தவறாக எண்ண முடியவில்லை.

வம்சி மனமோ,
இப்பொழுது அவன் அருண் தெரியுமா? என்று கேட்ட கேள்விக்கு அதிதி தெரியாது என்று பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க...
அவளோ அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி," இவ்ளோ நாளா ஒன்னும் மண்ணா பழகுன எனக்கு அருண தெரியாதா?? அப்பாடக்கரு" என்றவள்...
"அதிதி சீக்கிரம் வா ராகினி கூட அப்பவே வந்துட்டா.. நீ இவ்ளோ நேரம் என்ன பண்ற??" என்று சுகுணா கோபத்துடன் கத்தியதும்,
"அப்றம் பாக்கலாம் அப்பாடக்கரு சித்தி ஆங்கிரி காலிங்.." என்று சிரிப்புடன் விடை பெற்றுக் கொண்டாள்.

பாவம் செல்லும் அவளின் முதுகை வன்மத்துடன் முறைத்துக் கொண்டிருந்தவனுக்கு தெரியாது அதிதி அருண் என்று சொன்னது அவள் உயிர் தோழி அருணாவை என்று ...

"அதிதி யார் கிட்ட பேசிட்டு இருந்த ??எவ்ளோ நேரம் கூப்பிடுறது உன்ன??" என்று சுகுணா கடிந்து கொள்ள,
"அவ்வ் சாரி சித்தி எங்க ஷாப் கஸ்டமர் கிட்ட தான் பேசிட்டிருந்தேன்... வாங்க போகலாம்" என்ற அதிதியை பார்த்த ராகினிக்கு மயக்கம் வராதது தான் குறை.
அவ்வளவு மாற்றம் அவளிடம்... 'ரொம்ப அழகா இருக்காளே' என்று ராகினிக்கு ஒருபுறம் பொறாமையாக இருந்தாலும்...'இன்னொருபுறம் இவ கல்யாணம் முடிச்சுட்டு வீட்ட விட்டு போனா நமக்கு நிம்மதிதான்' என்றும் நினைத்தாள்.

"சரி பேசினது போதும்.. அம்மா வேற அப்பவே வச்சு தொடர்ந்து கால் பண்ணிட்டே இருக்காங்க.. சீக்கிரம் வீட்டுக்கு போகணும் வாங்க..." என்ற சுகுணா ராகினி உடன் முதலில் காரில் ஏற, அடுத்ததாக ஏற போன அதிதி என்ன நினைத்தாலோ வம்சியின் காரைப் பார்த்து புன்னகையோடு கையசைத்துவிட்டு ஏறினாள்.

வம்சி அதிதியின் புன்னகையை பார்த்து குழப்பத்துடனும் யோசனையுடனும் அமர்ந்திருந்தான்.

பார்த்த முதல் நாளிலேயே சண்டை... அதன் பிறகும் இருவரும் சுமுகமாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் இன்றோ அவளே வந்து தோழமையுடன் பேசியது மட்டுமில்லாமல் புன்னகையோடு கையசைத்து சென்றது வம்சியை ரொம்பவே குழப்பமடைய செய்தது.

கமல் படம் டயலாக் போல் அவன் மனமும் 'இவள் நல்லவளா? இல்ல கெட்டவளா? இரண்டும் இல்லையென்றால் தன்னிடம் நடிக்கிறாளா??' என்று யோசனையில் மூழ்க,

அதைக் கலைப்பது போல்...
"என்ன ப்ரோ டே ட்ரீம்ஸா? ஃபர்ஸ்ட் என்ன பாரு என்னோட நியூ ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு??" என்று கேட்டுக் கொண்டே காருக்குள் ஏறி அமர்ந்த தன் தம்பியை எரிச்சலுடன் பார்த்த வம்சி அவனது ஹேர் ஸ்டைலை பார்த்து மேலும் கடுப்பாகி, "ரொம்ப கேவலமா இருக்கு... இதுக்குத்தான் இவ்வளவு நேரமா?" என்று விட்டு காரை ஸ்டார்ட் செய்ய, "ப்ரோ உனக்கு என்னோட ஹேர் ஸ்டைல் பார்த்து பொறாமை" என்று எப்பொழுதும் போல் ராகம் பாடிய சுஜித் கண்ணாடியில் தன் தலை முடியை அப்படியும் இப்படியும் காட்டி ரசித்துக் கொண்டிருக்க,
அவனது அலப்பறையைக் கண்டுகொள்ளாமல் அதிதியை பற்றிய யோசனையுடனே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் வம்சி கிருஷ்ணா.

தொடரும்...💞
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN