தீராக் காதல் திமிரா-6

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 6:

"அதிதி மா உன்ன நாளைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க நாளைக்கு எங்கேயும் போயிடாத..." என்றார் சுகுணா.


காலையில் வேலைக்கு கிளம்பி வந்தவளுக்கு அந்த செய்தி எரிச்சலைக் கிளப்பியது.


ஆனாலும் சுகுணாவிடம் முகத்தை காட்ட விரும்பாமல் வெறுமனே தலையசைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள் அதிதி.


சோபாவில் அமர்ந்திருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த மங்களம், சும்மா இருக்க முடியாமல்,
"நீ வேணா பாரு சுகுணா... நாளைக்கும் இவை அழுக்கு மூட்டை மாதிரி மாப்பிள வீட்டு முன்னாடி நிக்க போற நம்ம கேவலப்பட்ட போறோம்" என்று சொல்ல,


அவரை ஒரு பார்வை பார்த்தவள்.. சித்தி சுகுணா சூடாக தட்டில் போட்ட தோசையை சட்னியில் தோய்த்து வாயில் வைத்துக்கொண்டே,
"ஒரு பிரச்சினையும் இல்ல பாட்டி. எனக்கு பதிலா நீங்க போய் நில்லுங்க. உங்க அழக பாத்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மயங்கிடுவாங்க" என்றாள் நக்கலாக,


அவளது நக்கலில் வெகுண்டெழுந்த மங்களம்,
"எனக்கு என்னடி குறைச்சல். நாலு முடி நரைச்சி இருக்கு அவ்வளவுதான். அத மட்டும் டை அடிச்சுட்டு வந்து நின்னா நீங்க எல்லாம் கால் தூசி தான் எனக்கு. அந்த காலத்து ஐஸ்வர்யா ராய் நானு.." என்றவர் தன் காதோர கூந்தலை ஒதுக்கி கொண்டார்.


'தாய்க்கிழவிக்கு என்னா கான்ஃபிடன்ஸ்' என்று சிரித்துக் கொண்ட அதிதி,
"அப்ப சூப்பர் எனக்கு தெரிஞ்ச தாத்தா சிங்களா இருக்காரு... அவருக்கும் நாலு முடி மட்டும்தான் நரைச்சி இருக்கும் அவரை உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணிடலாம்" என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்.


"என் புருஷன் உயிரோடு இருக்கும்போது நான் எதுக்கு டி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கணும்??" என்று மங்களம் வரிந்துகட்டிக்கொண்டு வர...


அதிதியோ கூலாக,
"அதான் தாத்தா உங்களுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிட்டாரே ...அதனால இன்னொரு தாத்தாவுக்கு சீக்கிரமே ஏற்பாடு பண்ணிடலாம்" என்றாள் கிண்டலாக,


அதைக் கேட்டு நெஞ்சில் கைவைத்த மங்களம்,
"அடியே சுகுணா இவ பேசுறத கேட்டியா டி..? குடும்பத்துப் பொண்ணு மாதிரியா இவ பேசுறா? எல்லாம் நீ கொடுக்கிற இடம் ...வைக்க வேண்டிய இடத்துல வச்சா, இவ இப்படி பேசுவாளா? என் பேத்தியை விட பெரிய குடும்பத்து மருமகளா போறதுக்கு இவளுக்கு என்ன தகுதி இருக்கு?" என்று சீறிக் கொண்டு வர


"ஸ்ஸ்ஸ் அதிதி காலையிலேயே பாட்டி கிட்ட வம்பு பண்ணாத.." என்று சுகுணா கண்டிப்பது போல் அதட்டினாலும், கண்களால் கெஞ்ச சிரித்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு நகர்ந்தாள் அதிதி.


"அம்மா ராகினி எங்க? நேரம் ஆகிட்டு இன்னும் சாப்பிட கூட இறங்கி வரல. ஒரு வாரமா முகமும் சரியில்ல. கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறா.." என்று சுகுணா மங்களத்திடம் புலம்ப,


உடனே முகம் மாறியவர்,
"ராகிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல சுகுணா. நான் பாத்துக்குறேன் அவள... என் பேத்தியை நான் பாத்துகிட மாட்டேனா? என்றவர் இப்பவே அவள கூட்டிட்டு வரேன் நீ போ" என்று விட்டு ராகினியின் அறைக்கு சென்றார்.


கட்டிலில் கவிழ்ந்து விழுந்து மொபைலை நோண்டி கொண்டிருந்த ராகினி, பாட்டியின் வருகையை உணர்ந்து மொபைலை தலையணைக்கு கீழ் மறைத்து வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள்.


"ராகி வந்து சாப்பிடு எதுக்கு வீம்பு புடிச்சிட்டு இருக்க?"


"வேண்டாம் பாட்டி கொஞ்சம் கழிச்சு வந்து சாப்பிடுறேன்" என்று ராகினி முகத்தை திருப்ப...


அவளது முகவாயை தன் பக்கம் திருப்பியவர்,
"ராகி பாட்டி என்ன பண்ணாலும் உன்னோட நல்லதுக்கு தான் பண்ணுவேன் அது உனக்கு தெரியும் தான??" என்று கேட்க,


ஆம் என்பது போல் தலையை அசைத்த ராகினி,
"ஆனா பாட்டி இந்த விஷயத்துல மட்டும் என்னால உங்க பேச்சை கேட்க முடியல... ஏதோ தப்பு பண்ற மாதிரியே கில்டியா ஃபீல் ஆகுது" என்று கெஞ்சுவது போல் பார்த்தாள்.


"நீதான் ஏற்கனவே அவன வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டல்ல..பின்ன எதுக்கு அத பத்தி பேசுற?" என்று சந்தேகத்துடன் கேட்ட மங்களம் தனது பேத்தியை உறுத்து விழிக்க,
ராகினியின் கண்கள் அலைபாய்ந்தது.


"திரும்ப அவன பாக்க போனியா?" என்று மங்களம் உக்கிரமாக கேட்டதும், இல்லை என்று வேகமாக தலையசைத்த ராகினி,
"ஆனா அவன் எனக்கு கால் பண்ணான்" என்றாள் மெதுவாக.


"எப்போ??" என்று கேட்ட மங்களத்தின் முகம் படுபயங்கரமாக மாறியது.


"நேத்து சாயங்காலம் பண்ணினான்.. ஆனா நான் கட் பண்ணி தான் விட்டேன் பாட்டி ... ரொம்ப நேரம் தொடர்ந்து கால் பண்ணிட்டே இருந்ததால நான் ஒரே ஒரு தடவை மட்டும் பேசிட்டு விட்ரலாம்னு அட்டென்ட் பண்ணினேன்" என்றாள் லேசான பயத்துடன்...


"ம்ம்ம் அப்புறம்?" என்று மங்களம் கோபத்துடன் மிரட்டுவது கேட்க,


"அட்டன்ட் பண்ணதும்
இனிமே எனக்கு கால் பண்ணாதன்னு சொல்லித் திட்டினேன்.." என்றவளை நம்பாத பார்வை பார்த்தார் மங்களம்.
அவரால் இப்பொழுதெல்லாம் எல்லாம் தன் பேத்தியை முழுவதுமாக நம்பவே முடியவில்லை. தன் பேத்தி தன்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள் என்ற இறுமாப்பான நம்பிக்கை அவள் காதலிக்கும் விஷயம் நெருங்கிய உறவினர் ஒருவரின் மூலம் ரகசியமாக தெரியவந்ததும் சுக்குநூறாக உடைந்து போனது. அதுமட்டுமா? அவன் யாரென்று விசாரித்ததில் பேத்தியை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என்றுதான் தோன்றியது எத்தகைய குடும்பத்தில் பிறந்து விட்டு இப்படி ஒன்றுக்கும் உதவாத ஒருவனை போல் காதலிக்கிறாள் என்று?


"ஆனா பாட்டி நான் அவ்வளவு திட்டியும் அவன் நான் இல்லன்னா தற்கொலை பண்ணிப்பேன்னு சொல்லி அழுதுகிட்டே தான் பேசினான் . நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அவன் கேட்கவே இல்ல. நானும் கோபத்துல என்ன வேணா பண்ணிக்கோன்னு வச்சுட்டேன். ஆனா அதுக்கப்புறம் அவன்கிட்ட கிட்ட இருந்து எந்த போனும் வரவே இல்ல. நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அவனோட போன் நாட் ரீச்சபிள்னு வருது. என்னமோ மனசுக்கு பயமா இருக்கு. பாட்டி தப்பு பண்றோம்னு தோனுது" என்று அழுதாள் ராகினி.


"ப்ச்ச் ராகி அழாத.. முக்கியமா அந்த நாய்க்காக அழாத.. கோபமா வருது எனக்கு. யாரு அவன்?? எங்க இருந்து வந்தான்? அவனுக்குனு என்ன ஸ்டேட்டஸ் இருக்கு? உன்ன காதலிக்க என்ன தகுதி இருக்கு அவனுக்கு அந்த குப்பத்து காரி எவ்வளவு பெரிய வீட்டுக்கு மருமகளா போக போறான்னு தெரியுமா? அவளுக்கு இருக்கிற புத்தி உனக்கு இல்லையே
ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத மட்டும் கேளு... அவன மறந்திடு நீதான் இந்த குடும்பத்தோட உண்மையான வாரிசு.
நீ எப்படி ஒன்னுத்துக்கும் உதவாத ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க முடியும்?"என்று ஏதேதோ சொல்லி ராகினியின் மனதை மாற்றிய மங்களம் அவளை சாப்பிட அழைத்து சென்றார்.


ஆனால் ராகினியின் ஒரு மனமோ பாட்டி சொல்வது சரியென்று ஒத்துக்கொண்டாலும், அவளின் மற்றொரு மனமோ அவளை உருகி உருகி காதலித்தவன் பாவம்! என்று பரிதாபப்பட்டது... முயன்று அதை மறைத்தவள் தன் பாட்டியின் பின்னே சென்றாள்.


*******
மெக்கானிக் ஷாப்பில்...


அன்று அதிதிக்கு வேலையே ஓடவில்லை அவளின் தோழி அருணா அன்று விடுப்பு எடுத்திருந்தாள்.


"இந்த அருணு எதுக்கு சொல்லாம கொள்ளாம லீவ் போட்டா? சொல்லியிருந்தா ...நானும் லீவ் போட்டு இருப்பேனே "என்று புலம்பிய அதிதி அருணாவிற்கு மொபைலில் அழைப்பு விடுத்தாள்.


"ஹலோ" என்று அருணா சொல்வதற்குள்...
"ஏய் அருணு எதுக்குடி வேலைக்கு வரல ??நீ இல்லாம ரொம்ப போரடிக்குது மச்சி .எங்க இருந்தாலும் சீக்கிரம் வா "என்று ஓட்டேரி நரி போல் படபட பட்டாசாக பொறிந்தாள் அதிதி.


ஆனால் எதிர்ப்பக்கமோ எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவளுக்கு பதில் சொன்னது.


"கொஞ்சம் வீட்ல வேலை டி. என்னால இப்போதைக்கு வேலைக்கு வர முடியாது"
என்று அமைதியாக சொன்ன அருணாவின் குரல் ரொம்பவே கரகரப்பாக இருந்தது.


"உன் வாய்ஸ் சரியில்லையே வீட்ல எதாட்டும் பிரச்சனையா? எப்பவும் போல அப்பா குடிச்சிட்டு வந்து அம்மா கூட சண்டை போட்டாங்களா?" என்று அதிதி கேட்க,


இல்லை என்று சொன்ன அருணாவிற்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது. இருந்தும் தோழியை தனது பிரச்சினைக்குள் இழுக்க மனம் வராமல்
முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள்,
"கொஞ்சம் ஜுரமா இருக்குடி சுத்தமா பேச முடியல. அதான் அப்படி கேக்குது ...வேற எந்த பிரச்சனையும் இல்ல" என்று சமாளித்தாள்.


"ஓ அப்படியா! ஒரு நாள் முன்னாடி வர நல்லா தான டி இருந்த? திடீர்னு என்ன ஜுரம்? என்று அதிதி விடாமல் கேட்க,


"நேத்துல இருந்தே உடம்பு சரியில்ல.. இன்னைக்கு சுத்தமா முடியல" என்று கூறிய அருணாவிற்கு தன்னையும் மீறி அதிதியிடம் அனைத்தையும் உளறி விடுவோமோ? என்று பயமாக இருந்தது.
அதனால் அதிதி அடுத்த கேள்வி கேட்பதற்குள்,
"நான் அப்புறம் பேசுறேன் டி. அம்மா கூப்டுறாங்க "என்று பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டாள்.


'என்னாச்சு இவளுக்கு வாய்ஸும் சரியில்ல.. பேச்சும் சரி இல்ல. இந்த பக்கி என்னத்தையோ மறைக்கிற மாதிரியே ஃபீல் ஆகுதே" என்று யோசித்த அதிதியை அதற்கு மேல் யோசிக்க விடாமல் அவளுடன் வேலை செய்யும் ஒருத்தி உதவிக்காக கூப்பிட குழப்பத்துடனேயே தனது வேலையை பார்க்கச் சென்றாள் அவள் .


பாவம் அவளுக்கு தெரியாதது என்னவென்றால் அவளது தோழி அருணாவிற்கு நாளை மறுநாள் விடிந்தால் திருமணம் என்று...!


இங்கோ காரை புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான் வம்சி கிருஷ்ணா.


அவனது கோபத்திற்கு ஏற்ப அவனது காரும் சீறும் சிங்கத்தின் வேகத்தில் சாலையில் பாய்ந்தது.


அவன் அருகில் எனக்கு என் உயிர் முக்கியம் என்று நினைத்து சீட் பெல்ட் போட்டு பல்லி போன்ற சீட்டோடு ஒடுங்கி அமர்ந்திருந்த சுஜித், அவ்வளவு நேரம் மனதிற்குள் குடைந்த கேள்வியை தன் அண்ணனிடம் கேட்டான்.


"ப்ரோ இதெல்லாம் நமக்கு தேவையா? நம்ம வந்தது பிஸ்னஸ் விஷயமா... தேவை இல்லாம நம்ம எதுக்கு டிடெக்டிவ் மாதிரி அந்த பையன் யார லவ் பண்றான்னு விசாரிக்கணும்??? அவன பெத்த அம்மாவுக்கு கூட அவங்க பையன் யார லவ் பண்றான்னு தெரியல.. இந்த லட்சணத்துல நம்ம எப்படி அந்த பொண்ண கண்டுபிடிக்க போறோம்? அப்படியே கண்டு பிடிச்சாலும் அந்த பொண்ண நம்மளால என்ன பண்ண முடியும்?" என்று சுஜித் ஒரு வித எரிச்சலுடன் கேட்க,

அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து வைத்த வம்சி,


"இப்ப யாரு உன்ன என் கூட கூப்ட்டது? உனக்குதான் ஆயிரத்தெட்டு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே... அவங்க கூட அவுட்டிங் போக வேண்டியது தானே? உன்னை யாரு என் பின்னாடி வர சொன்னது? அத்தோட அந்த பொண்ணு பண்ணது சாதாரண தப்பு இல்ல நம்பிக்கை துரோகம்... அந்த வலியில தான் அவன் தற்கொலைக்கு முயற்சி பண்ணி இருக்கான். அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது சோ வாய மூடிட்டு இரு. இல்லனா தம்பின்னு கூட பாக்காம ஓடுற கார்ல இருந்து தள்ளி விட்டுட்டு போயிடுவேன்.." என்று கடுப்புடன் எரிந்து விழ... சுஜித் தன் அண்ணனை வித்தியாசமாக பார்த்தான்.

எப்பொழுதும் அடுத்தவரின் விஷயத்தில் தலையிட மாட்டான் வம்சி. ஆனால் இம்முறை ஏன் யாரோ ஒருவன் தற்கொலைக்கு முயன்றதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறான்?? என்பது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.


இன்னும் மருத்துவமனையில் இருப்பவன் கோமாவிலிருந்து கண் விழிக்கவில்லை. அவனது தாயும் அவனை நினைத்தே அழுது கரைக்கிறார்.அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும் அவனின் அண்ணன் வம்சி ரொம்பவே அதிகமாக அவர்களின் பிரச்சனைக்குள் நுழைவது போல் இருந்தது சுஜித்திற்கு... அதனாலே தன் அண்ணனுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ? என்று நினைத்தவன் அவனைப் பாதுகாக்கும் பொருட்டு அவனை விட்டுப் பிரியாமல் அவனுடனேயே இருந்தான்.


ஆனால் இப்பொழுது ஆண் சந்திரமுகி அவதாரத்தில் இருக்கும் தன் அண்ணனிடம் அடுத்தவரின் விசயத்தில் தலையிடாதே என்று சொன்னால் தன்னைத் தூக்கி துவைத்து தோரணம் கட்டி விடுவான் என்பதை உணர்ந்து சற்று அடக்கியே வாசித்தான் சுஜித்.


"ப்ரோ ...என்ன ப்ரோ... இப்படி சொல்லிட்டீங்க? நம்ம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம். எனக்கு ஆயிரம் கேர்ள் ஃபிரண்ட்ஸ் வருவாங்க போவாங்க... ஆனா நீங்க அப்படியா? இப்ப கூட எல்லாத்தையும் விட்டுட்டு உங்க சேஃப்டி காக தான் ப்ரோ நான் உங்க கூடவே வாரேன்"என்று தன் அண்ணனுக்கு ஏற்றவாறு செண்டிமெண்டாக பேசினான் சுஜித்.


ஆனால் 'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா' என்பதுபோல்
"என்ன எனக்கு பாத்துக்க தெரியாதா?? நான் என்ன சின்ன பிள்ளையா? இல்லனா நீ என்ன விட பெரிய ஆளா? "என்று சிடு சிடுத்த வம்சி அதற்கும் கேட் போட ,


'ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே' என்று நினைத்த சுஜித்,
"இல்ல ப்ரோ நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க.. உங்களை கூல் பண்றதுக்காக உங்க கூடவே வாரேன்" என்று சமாளித்தான்.


"நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் மூடிட்டு இருந்தா போதும் ..."என்று அதற்கும் திட்டிய வம்சி,
சுஜித் பாவமாக பார்க்கவும் எரிச்சலுடன் காரின் வேகத்தை கூட்டினான்.


இதற்கு மேல் தான் என்ன பேசினாலும் தனக்கு ஆப்பு உறுதியே..!!என்று நினைத்த சுஜித் இயர் ஃபோனை காதில் செருகிக் கொண்டு தனக்கு பிடித்த குத்து பாடல்களை மொபைலில் ஒலிக்க விட்டான்.


அரை மணி நேரத்தில் அந்த உணவகத்தின் முன் வந்து நின்றது அவர்களின் கார்.


இங்குதான் தற்கொலைக்கு முயன்ற அருண் என்றவன் வேலை செய்திருக்கிறான். எனவே இங்கிருக்கும் மற்ற பணியாளர்களிடம் விசாரித்தால் அவன் காதலித்த பெண் யாரென்று தெரியலாம் என்று நினைத்தே வம்சி இங்கே வந்திருந்தான்.


காரை பார்க் செய்துவிட்டு வம்சி வேக நடையுடன் உணவகத்திற்குள் செல்ல, அவன் பின்னே வேகமாக செல்லப்போன சுஜித் கவனிக்காமல் ஒரு பெண்மணியின் மீது மோதி விட்டான்.


சுஜித் சாரி கேட்டுவிட்டு நகரப் பார்க்க, அவரோ அவனின் சட்டையின் காலரை பிடித்தவர்..
"எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு பொண்ண வேணும்னே வந்து இடிப்ப??" என்று கோபப்பட சுஜித் திருட்டு முழி முழித்தான்.


'என்னாதுஉஉ பொண்ணா.. இந்த ஆண்ட்டிக்கு இப்பதான் பதினெட்டு வயசு பொண்ணுன்னு நினைப்பு போலயே' என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன்,


வெளியில் விரைப்பாகவே,
"நான் வேணும்னு இடிக்கல ஆண்ட்டி தெரியாமத்தான் இடிச்சுட்டேன் சாரி" என்று விட அவ்வளவுதான் வந்ததே அவருக்கு கோபம்...


"யாருடா ஆண்ட்டி??? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.. எவ்வளவு தைரியம் இருந்தா என்ன பார்த்து ஆண்ட்டின்னு சொல்லுவ ராஸ்கல் ..என்னையே கிண்டல் பண்றியா.." என்று ஆவேசமாக அவனின் சட்டை காலரோடு அவனை கொத்தாக அவர் தூக்கிட, ஒரு நொடியில் அந்தரத்தில் மிதந்தான் சுஜித்.


"ஆஆஆ ஆண்ட்டி கீழே விடுங்க ஆண்ட்டி ...ஆண்ட்டின்னு தெரியாம சொல்லிட்டேன் ஆண்ட்டி" என்று சுஜித் அப்பொழுதும் ஆண்ட்டி ஆண்ட்டி என்று பதற்றத்தில் உளற ,
கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அந்த பெண்மணி.


அதற்குள் அங்கு நின்றிருந்த ஓரிருவர் என்னமா பிரச்சினை? பிக்பாக்கெட்டா? ஏதாவது வம்பு பண்ணினானா? என்று கேட்டுக்கொண்டே அங்கு கூடிவிட... சுஜித் மனமோ,
'செத்தடா குமாரு' என்று எச்சரிக்கை மணி அடித்தது.


தனக்கு ஆதரவாக நின்றவர்களிடம், "சும்மா போயிட்டு இருந்த என்னை இடிச்சது மட்டுமில்லாமல அசிங்கமா கிண்டல் வேற பண்றான் இவன்.." என்று அந்தப் பெண்மணி கோபத்துடன் சொல்ல...


"இவன எல்லாம் சும்மா விடக்கூடாது பொண்ணுங்கள இடிக்கிறதுக்குனே வாரானுங்க... வெளங்காதவனுங்க ஈவ்டீசிங் கேஸ்ல இவனெல்லாம் உள்ள தூக்கி வைக்கணும்" என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தனர்.


'ஆத்தி விட்டா இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்கு பார்சல் பண்ணிடுவாங்க போலயே... ஆல்ரெடி ப்ரோ என் மேல செம கடுப்புல இருக்கார். இப்ப மட்டும் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டா என்ன பெயில எடுக்க கூட வர மாட்டாரே...' என்று உள்ளுக்குள் மிரண்டுபோன சுஜித்,
"அய்யய்யோ ஆண்ட்டி ச்சே ச்சே தப்பு தப்பு எக்கா என்ன விட்டுடுங்கக்கா தெரியாம அப்படி சொல்லிட்டேன்கா.. நீங்க யூத்ன்னு தெரியாம பழைய டெலிபோன் பூத்ன்னு நெனச்சு ஆண்ட்டின்னு சொல்லிட்டேன். அதுக்காக கிண்டல் பண்றேன்னு எல்லாம் சொல்றீங்களே?? இது நியாயமா? இது தர்மமா?" என்று அவன் கதற,


"உனக்கு இன்னும் கொழுப்பு குறையல. உன்னையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் அனுப்பனும். அப்பதான் நீ சரிபட்டு வருவ" என்று அப்பெண்மணி விடாமல் அவனை மிரட்ட... சுற்றியிருந்தவர்களும் அதுதான் சரி என்பது போல் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


அப்பொழுது
"அவர பார்த்தா ஊருக்கு புதுசா தெரியுது தெரியாம சொல்லிட்டார் போல ...விட்டுடுங்க பாவம் அவர்" என்று ஒரு அழகான பெண் குரல் கேட்க அனைவரின் கவனமும் அந்தக் குரலுக்குச் சொந்தமான பெண்ணை நோக்கி திரும்பியது.


சுஜித், 'யார் அந்த தேவதை' என்று ஸ்லோமோஷனில் திரும்பி அவளைப் பார்க்க...
அவளோ கண்களில் கருப்பு கண்ணாடியுடன் ஒரு பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.


"என்னம்மா இவன மாதிரி பொம்பளை பொறுக்கி எல்லாம் சும்மா விடக்கூடாது.. நாளைக்கு உன்னை இடிச்சுட்டு கூட இவன் பிரச்சனை பண்ணலாம்... நீ என்ன அவனுக்கு போய் சப்போர்ட் பண்ற?" என்று கூட்டத்தில் ஒருவர் அந்தப் பெண்ணுக்கு எதிராக குரல் கொடுக்க... மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல், "என்னம்மா நீ தப்பு பண்றவனுக்கு போய் பண்ற?" என்று கேட்டனர்.


அதை உடனே தலையசைத்து மறுத்தவள்,
"இல்லங்க நான் சப்போர்ட்லாம் பண்ணல ... எனக்கு பிறவிலேயே கண்ணு தெரியாது.நான் ஒருத்தங்க குரலை வச்சே அவங்க எப்படினு கண்டுபிடிச்சிடுவேன். இவரோட குரல வச்சு பார்த்தா இவருக்கு வாய் மட்டும் தான் நீளம் மத்தபடி நல்லவர்தான்" என்று பொறுமையுடன் சுஜித்திற்காக பரிந்து பேசினாள் அந்தப் பெண்.


சுஜித்தின் கண்கள் விரிந்தது. 'எவ்வளவு அழகா இருக்குது இந்த பொண்ணு ..இவளுக்கு போய் கண்ணு தெரியாதா ஓ மை காட் உனக்கு உண்மையிலேயே கல்நெஞ்சம் தான்' என்று தான் இருக்கும் நிலையை மறந்து மனதிற்குள்ளேயே கடவுளை வறுத்தெடுத்தான் அவன்.


"கண்ணு தெரியாத குருடி நீ சொல்றது எல்லாம் சரியாகிடுமா?? தேவையில்லாம என்னோட பிரச்சினைல தலையிடாம உன் வேலைய பாத்துட்டு போ ...இன்னிக்கு இவன விடறதா இல்ல" என்று சுஜித்தை பிடித்து வைத்திருந்த பெண்மணி அவளிடம் எரிச்சலாக பேச,


சுஜித்திற்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ,
"குருடினு சொல்லி அவங்க மனசு கஷ்டபடுத்தாதிங்க" என்றான் வெடுக்கென்று.


"ஓஹ்ஹ் நீ மட்டும் என்ன ஆண்ட்டினு கிண்டல் பண்ணலாமா.." என்றவர் அவனின் காலரைப் பிடித்து இழுத்து அடிக்கப் போக...
அவ்வளவு நேரம் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் நின்ற ஓரிருவர் அவரை தடுத்தனர்.


"எம்மா உன்னோட பேச்சும் சரியில்ல. நடவடிக்கையும் சரியில்ல. இப்போ உன் மேலயும் தப்பு இருக்குனு தோணுது தம்பி இடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டு போய்கிட்டே இரு" என்று அங்கு பெரிய மனிதன் தோரணையில் நின்ற ஒருவர் சொல்லவும், அந்த பெண்மணியின் முகம் கருத்துப் போனது.


சுஜித், 'அப்பாடி பிரச்சனை முடிந்தது' என்ற நிம்மதியுடன் மன்னிப்பு கேட்க, அந்த பெண்மணியோ அவனை எதுவும் செய்ய முடியாத கோபத்தில் முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றது.


கூட்டம் கலைந்தவுடன் தனக்கு உதவி செய்த பெண்ணை சுஜித் தேட அவளோ அதற்குள் மாயமாகி இருந்தாள்.


"ப்ச்ச் ஜஸ்ட் மிஸ் அந்த ஏஞ்சல மிஸ் பண்ணிட்டேனே" என்று ஏமாற்றத்துடன் காலை தரையில் உதைத்த சுஜித், தன் அண்ணனை தேடி உணவகத்திற்குள் சென்றான்.


அங்கோ உணவகத்தில் வேலை செய்யும் மற்றவர்களிடம் விசாரித்த வம்சிக்கு அருணின் காதலியை பற்றி பெரிதாக ஒன்றும் தகவல் கிடைக்கவில்லை.
சொல்லப்போனால் அருண் தனது காதல் விஷயத்தை தனது நண்பர்களுடன் கூட அவ்வளவாக பகிர்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்த அரைகுறை விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் அவனைப் பார்க்க தினமும் மாலை பூங்கா ஒன்றிற்கு காரில் வருவாள் என்று மட்டுமே...!


வம்சி அடுத்து என்ன செய்வது? என்ற யோசனையுடன் டேபிள் ஒன்றில் அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்று அமர்ந்த சுஜித்
"என்ன ப்ரோ ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சுதா?" என்று கேட்க...


"ப்ச்ச் ஒன்னும் கிடைக்கல டா... ஏதோ பார்க்ல தான் டெய்லி ஈவ்னிங் ரெண்டு பேரும் அடிக்கடி மீட் பண்ணி இருக்காங்க... அந்தப் பொண்ணு டெய்லி கார்ல வருவா போல. வேற எந்த இன்ஃபர்மேஷனும் எனக்கு கிடைக்கல..." என்றான் வம்சி.


"அப்போ மிஷன் கேன்சல்ட் தான ப்ரோ" என்று கேட்ட சுஜித்தின் குரலில் உற்சாகம் குமிழ் விட்டது.


பின்னே வம்சி தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்துவிட்டால் அவனுக்கு நிம்மதி தானே...!


ஆனால் அவனின் நிம்மதியில் கொள்ளிக்கட்டையை வைப்பதுபோல் வம்சி சொன்னான்.
"மிஷின் கேன்சல் ஆகல இப்பதான் பிகின் ஆகியிருக்கு" என்று...


"என்ன ப்ரோ சொல்றீங்க ??"என்று சுஜித் வாய்பிளக்க,

அவனை அழுத்தமாக பார்த்தவன்,
"இங்க வேலை பாக்குற அருணோட ஃப்ரண்ட் ஒருத்தர் அந்த பார்க்ல ஒர்க் பண்ற வாட்ச்மென் கிட்ட விசாரிச்சு அந்த பொண்ணு வர்ற கார் நம்பர் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கார். பாக்கலாம் அந்தப் கார் நம்பர் மட்டும் நம்மளுக்கு கிடைச்சா போதும் அவள ஈசியா கண்டு பிடிச்சுடலாம்"என்றான் வம்சி உறுதியாக.


"சூப்பர் ப்ரோ" என்று முயன்று புன்னகைத்த சுஜித்,
"பட் எனக்கு ஒரு டவுட் ப்ரோ
இவ்ளோ கஷ்டப்பட்டு அந்த பொண்ண கண்டுபிடிச்சு அப்படி என்னதான் செய்யப் போறீங்க?" என்று குழப்பத்துடன் வம்சியிடம் கேட்க அவனோ மர்மமாக சிரித்து வைத்தான்.


அந்த சிரிப்பின் பின் மறைந்திருக்கும் ரகசியம்???


தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN