உன்னுள் என்னைக் காண்கிறேன் 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 5

மரத்திலிருந்து உதிரும் சருகாக இருக்கிறது நம் வாழ்க்கை. அப்படி விழும் நாம் மற்றவர் பாதத்தில் மிதிப்படுகிறோமோ நெருப்பில் எரிந்து சாம்பல் ஆகிறோமோ இல்லை குப்பை மேட்டில் சேர்ந்து குப்பையோடு குப்பையாக கலந்து மக்கிப் போகிறோமோ? நமக்குத் தெரியாது! அதைக் காலம்தான் முடிவு செய்யும். அப்படி ஓர் நிலையில் தான் நம் கதாநாயகி வாழ்க்கையும் இருக்கப் போகிறது.

விஷ்வாவிடம் பேசிய தேவ் பின் தூங்காமல் தன் அலுவலக அறையில் அமர்ந்து சிந்திக்கலானான். தான் செய்யப் போவது சரியா இல்லை தவறா?இப்படிச் செய்வதால் அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாகும்... அவளால் இதை ஏற்க முடியுமா. மேலும் இதில் என் எதிர்காலம் மட்டும் இல்லாமல் என்தாய், மகளின் எதிர்காலமுமில்ல அடங்கியிருக்கு. அது மட்டுமா ருத்ராவின் வாழ்வு இந்த குடும்பத்தின் கவுரவம் இதெல்லாம் அந்தப் பெண்ணால் என்னாகுமோ...”

வெகு நேரம் சிந்தித்தும் தெளிவு கிடைக்காததால் மேஜை மேலிருந்த சிகரெட் டப்பாவிலிருந்து ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துத் தன் மூச்சை உள்ளிழுத்துப் பின் நிதானமாக வெளியிட்டான்.

தேவ்விற்குத் தினமும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. அவன் வாழ்வில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்தில் அல்லது தன்னைச் சூழ்ந்திருக்கும் சிக்கல்களிலிருந்து வெளி வர வேண்டிய நேரங்களில் மட்டும் தான் பிடிப்பான். ஒன்றுக்கு இரண்டு சிகரெட் பிடித்தும் தீர்வு கிடைக்காததால் பிரபுவால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதை நினைத்து அவனுக்கு எதிரிலிருந்த கண்ணாடி டீபாயை ஓங்கி ஓர் குத்துவிட அது உடைந்து சிதறியது. கையில் காயத்தைப் பார்த்தப் பிறகே தான் செய்த மடத்தனத்தை உணர்ந்தவன் வேக மூச்சை வெளியிட்டுத் தன் இடது கையால் கேசத்தைக் கோதிக் கொண்டவன்,

இறுதியில் தான் உருவாக்கிய காயங்களுக்குத் தானே மருந்திட்டுக் கட்டு கட்டி வலி நிவாரணி மாத்திரையும் போட்டுக் கொண்டு தூங்கினான்.

மறுநாள் காலையில் வீட்டில் முதல் ஆளாகக் கண் விழித்துத் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு கீழே வந்தவன் எதிரே வந்த முனியிடம் “இப்போ என்ன இருக்கோ சாப்பிட அதை மட்டும் கொடுங்க. புதுசா எதுவும் செய்ய வேண்டாம் எனக்கு நேரமில்ல” என்றான்.

அவன் சொல்வதைக் கவனிக்காமல் அவன் கையிலிருந்த கட்டைப் பார்த்து “ஐயோ தம்பி என்னாச்சு” என்று பதற“ ஒன்றுமில்லை சின்னகாயம் தான்” என்று சமாதானப்படுத்தியவன் மேலே அலுவலக அறையைச் சுத்தம் செய்து அங்குப் புது டீப்பாயை வாங்கிப் போடச் சொன்னான்.

அவரோ அரை குறை மனதுடன் “ம்ம்ம் சரிப்பா. இப்போ பாப்பாவுக்குச் செய்த பொங்கல்தான் இருக்கு. இன்னும் உங்களுக்குப் பூரி ரெடி ஆகல” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“பின்ன காலையில் ஏழு மணிக்கெல்லாம் வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்துட்டு டிபன் கேட்டா அவர் என்ன சொல்லுவார்.”

“பரவாயில்லை அதையே கொடுங்க” தேவ்.

மீண்டும் அவர் அங்கேயே நின்றுத் தயங்க, “எனக்கு பொங்கல் பிடிக்காதுதான், ஆனா இப்போ எனக்கு டைம் இல்ல. அதனால் இருக்கறதக் கொடுங்க. பிறகு வெளியில் போனா எனக்குச் சாப்பிட நேரம் இருக்காது” என்றான் சோர்வடைந்த குரலில்

இப்படிச் சொன்ன பிறகும் நிற்பாரா? சமைத்த அனைத்தையும் கொண்டு வந்து டேபிளில் வைத்தவர் பிளேட்டில் பொங்கல் வைத்து அதில் கொஞ்சம் அதிகமாக நெய் இட்டு வடை சாம்பார் சட்டினி என்று பரிமாறினார்.

அவர் வைத்த உணவை பசிக்கும் ருசிக்கும் என்றில்லாமல் கடமைக்காக கல்லையும் மண்ணையும் சாப்பிடுவது போல் சாப்பிட்டு எழுந்தான் தேவ்.

பின் அன்றைய பேப்பர்களை எடுத்துக் கொண்டுத் தன் செல்லமகள் ருத்ராவின் அறைக்குச் செல்ல அவளோ மலர்ந்த தாமரை முகத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் தூக்கம் கலையா வண்ணம் நெற்றியில் முத்தமிட்டு மெதுவாக அறைக் கதவை சாத்தியவன் பின் காரில் ஏறிச் சென்று விட்டான்.

அன்றைய மீட்டிங்கையும் மற்ற வேலைகளையும் முடித்தவன் விஷ்வாவின் மருத்துவமனை நோக்கித் தன் காரைச் செலுத்தினான்.

விஷ்வாவின் ஓய்வறைக் கதவைத் திறக்கையில் அவனுக்கு முன்பே அறையில் தேவ்வுக்காக காத்துக் கொண்டிருந்தான் அவன்.

“வாடா” என்று அழைத்த விஷ்வாவின் கண்களில் முதலில் பட்டது அவன் காயம்பட்ட கைதான். அவசரத்துடன் அதற்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டே “தெரியும்டா டென்ஷன்ல நீ இப்படித்தான் ஏதாவது மடத்தனமா செஞ்சி வைப்பனு, ஆமா காலையே வருவேனு நினைச்சேன். நீ என்னடானா மதியம் வர “ என்று அவன் கோபப்பட,

“காலையில் தான்டா கிளம்பினேன். ஒரு சில வேலைகள் இருந்தது. அதை முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சி” என்றவன் மீட்டிங்கிற்காகத்தான் அணிந்திருந்த கோட்டைக் கழற்றி அங்கிருந்த ஸோஃபாவில் வீசி எறிந்தான். பின் டையைச் சற்றுத் தளர்த்தி விட்டு காலர் மற்றும் கையின் பட்டன்களைக் கழற்றி விட்டவன் இடது கையால் தலையைக் கோதிக் கொண்டே தொப்பென ஸோஃபாவில் அமர்ந்து தலையைப் பின்னுக்குச் சாய்த்து விட்டத்தைப் பார்த்தபடி கண்களை மூடிக்கொள்ள.

ஒரு மருத்துவராக அவனுடைய காயத்திற்குச் செய்ய வேண்டியவற்றை செய்தவன் பின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த குளிர்பானத்தை ஊற்றிக் கண் மூடியிருந்த அவனைத் தொட்டு “தேவ் என்னடா உடம்புக்கு என்ன ஏதாவது சாப்டியா இல்லனா கேன்டீன்ல இருந்து சாப்பாடு அனுப்பச் சொல்லவா” என்று கேட்டுக் கொண்டே இண்டர்காமை நோக்கிச் செல்ல நினைக்க.

கண்களைத் திறக்காமலே அவன் கையைப் பற்றிய தேவ் “வேணாம்டா... இப்போதான் மீட்டிங்கில் சாப்பிட்டு வரேன். ஸோ வேண்டாம்”

“சரி அப்ப இந்த ஜுசையாவது குடி பிறகு பேசலாம்” விஷ்வா.

கண்களைத் திறந்து அவனை நேருக்கு நேர் வெப்பப் பார்வையுடன் இப்போ இதுவா முக்கியம் என்பது போல் பார்க்க. அவனோ இப்ப இதைக் குடிக்கலனா வேற எதுவும் பேச நான் தயாராயில்லை என்பது போல் பதில் பார்வைப் பார்க்க, நிமிர்ந்து அமர்ந்து ஜுசை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தான் தேவ்.

“இப்ப சொல் என்ன தான் உன் பிரச்சனை ” விஷ்வா

“அந்தப் பெண் கண் முழிச்சதில் ஏதாவது சொன்னாளா” தேவ் ஆர்வத்துடன் கேட்க

“இல்லடா கண் முழிச்சா ஆனா எதுவும் பேசல. மறுபடியும் மயக்கத்துக்குப் போயிட்டா. அதான் நீ சொன்ன மாதிரி எந்த விவரம் கேக்கவோ பேப்பர்ல கையெழுத்தோ வாங்கமுடியல. பட் நார்மல், ஐ. சி.யூவில் இருந்து இரவே நார்மல் வார்டுக்கு மாத்திட்டன். சகஜ நிலைக்கும் வந்தாச்சி. ஆனா ரொம்ப வீக்கா இருக்கா. சுத்தமா ஸ்டெமினாவே இல்ல. ஃபுல்ரெஸ்ட் வேணும்டா” இவை அனைத்தையும் நிதானமாகக் கூறி முடித்தான் விஷ்வா.

”என்னைப் பற்றி ஏதாவது சொன்னியா தேவ்.”

“இல்ல நீ தான் சொல்ல வேண்டாம்னு சொன்னியே“

“ம்ம்ம்...நீ கேட்காமலே அவளைப் பற்றி அவளே ஏதாவது சொன்னாளா.”

“இல்லை பட் நான் பெயர் மட்டும் கேட்டேன் .“

“என்ன பெயராம்” என்ற சுவாரஸ்யத்துடன் கூடிய கேள்விப் பார்வை தேவ்விடம்.

அதைப் புரிந்து கொண்ட விஷ்வாவோ வேண்டுமென்றே அவன் காதில் விழாதவாறு மெதுவாக முணுமுணுக்க ”டேய்...என்னடா முணுமுணுக்குற? இப்ப ஒழுங்கா சொல்லப் போறியா இல்ல என் கையால ஒரு பன்ச் வாங்கறியா” என்று குத்துச் சண்டை போடுவது போல் கையை வைத்துக் கொண்டு தேவ் கேட்க.

அதைப் பார்த்துப் போலியாகப் பதறியவன் “டேய் கட்டவுட், உன் பாக்ஸிங் திறமையெல்லாம் என் கிட்ட காட்டாத” என்று அவனைத் தடுத்தவன் “மித்ரஹாசினி” என்று கத்த உடனே அவன் வாயைத் தன் கையால் பொத்திய தேவ் “அதற்கு ஏன்டா கத்தற” என்று கோபப்பட்டான்.

ஆனால் அதைக் கேட்டவுடனே தேவ்வின் கண்ணில் ஓர் மின்னல் மின்னி மறைந்தது. அது உண்மையா என்று விஷ்வா அறியும் முன்பே அந்தப் பார்வை விலகி யோசனைப் பார்வை இருகத் தன் பிரீஃப்கேசைத் திறந்து அதிலிருந்து சில பேப்பர்களை எடுத்தவன் “நான் நேற்றே சொன்னமாதிரி இதில் அனைத்திலும் அவள் கையெழுத்து வாங்கிடு. முக்கியமா அவளுக்கே தெரியாம, புரிஞ்சிதா...” என்று கூறிசில பேப்பர்களை அவன்முன் வைக்க. அதை வாங்கிப் பார்த்ததில் அனைத்தும் வெற்றுப் பேப்பர், பத்திரங்கள் மற்றும் சில நோட் பேட் பேப்பர்ஸ். பார்த்த விஷ்வாவுக்கோ அதிர்ச்சி! அது அப்பட்டமாக அவன் கண்களில் தெரிய.

”என்னடா ஏன் இதெல்லாம்? அதுவும் முன்னே பின்னே தெரியாதப் பொண்ணுகிட்ட“விஷ்வா

”டோன்ட்வொர்ரி இதில் உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது தேவ்.”

“ச்சே நான் எனக்காக வாடா சொன்னன்? நீ பிரச்சனை வர மாதிரி செய்ய மாட்டனு எனக்குத் தெரியாதா? அப்படியே வந்தாலும் என்னை விலக்கி இதன் முழு பொறுப்பையும் நீயே ஏற்றுக் கொள்வனு எனக்குத் தெரியும்டா விஷ்வா.”

“பின்னே வேற” என்ன என்பது போல் தேவ் பார்க்க…

“அந்தப் பெண் தான், அவள் உன்னையோ இல்லை என்னையோ நாளைக்கு நிற்க வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது பார் அதற்குத் தான் யோசிக்கறன் விஷ்வா.”

தன் கண்களை ஒரு நொடி இறுக்க மூடித் திறந்துப் பின் தன் முழு உயரத்துக்கு எழுந்தவன் நடந்து சென்று அங்கிருந்த ஜன்னலின் கண்ணாடி வழியே தன் பார்வையை வெளியே செலுத்தியவனோ,

“கேட்பா தான் டா. அவ நிச்சயம் கேட்பா. ஏன்னா நான் செய்யப் போகும் காரியம் அப்படி. கேள்வி மட்டும் இல்லடா கண்ணகி மாதிரி நாளைக்கு என்னை எரித்தாலும் எரிப்பா” என்றான் உடைந்த குரலில் தேவ்.

விஷ்வா அவனைக் கேள்வியாகப் பார்க்க.

“இது எதற்குனு தான பார்க்கற? எனக்கு வேற வழி தெரியலடா. இதை விட்டா எனக்கு வேற வாய்ப்பும் இல்ல” என்றான் கசந்த குரலில் தேவ்

“உனக்கும் பிடிக்காத விஷயத்தை ஏன் செய்யனும் தான் யோசிக்கிறேன். சரி விடுடா இந்த விஷயத்தில் நீ என்ன உதவி கேட்டாலும் நான் செய்றேன்டா மச்சி” என்று கூறி அவன் கையைத் தன் கைக்குள் வைத்துக்கொள்ள,

“தாங்க்ஸ்டா மச்சி“ என்று அவனை அணைத்துக் கொண்டான் தேவ்.

“நார்மல் பில் போடாத. நான் சொல்ற அமௌண்டுக்குப் போடு. இன்றே அவள் சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் எனக்கு வரனும். அதே போல் நாளைக்கு மறுநாள் காலையில் நான்அவள சந்திக்க ஏற்பாடு பண்ணு. அவளைக் காப்பாற்றியவனா இல்லை இந்த மருத்துவமனையின் பார்ட்னரா! என்ன புரிஞ்சிதா...”

“சரிடா“ என்று விஷ்வா தலையாட்ட.

‘ஓகே இப்ப நான் கிளம்பறேன். ஞாபகம் இருக்கட்டும் இன்றிரவுக்குள் அவள் சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் எனக்குவரனும் தேவ்.”

“சரிடா இது நீ சொல்லித்தான் தெரியனுமா? ஓ.கே டன். “

அன்றைய வேலைகளை முடித்து மாலை வீடு திரும்புகையில் விஷ்வாவிடமிருந்து அழைப்பு வந்தது தேவ்வுக்கு

“சொல்லுடா

“......“

“நான் சொன்னபடி எல்லாம் முடிச்சிட்டியா? “

”......“

“சரி அந்த பேப்பர்ஸ் மற்றும் அவள் டீடெய்ல்ஸ் அனைத்தையும் கௌதம் வருவான் கொடுத்துடு. ம்ம்ம் சரி நான் இப்பவே சொல்லிடறேன்“ என்று அவன் அழைப்பைத் துண்டித்துப் பின் கௌதமை அழைக்க.

“சொல்லுங்க அண்ணா“

“கௌதம் என் முக்கியப் ஃபைல் ஒன்று விஷ்வாவிடம் இருக்கு. அதில் ஒரு பெண் சைன் பண்ண பேப்பர்ஸை மட்டும் பத்திரமாக வச்சியிருந்து நாளைக்கு எடுத்துட்டு வந்து கொடுத்திடு. இன்னோர் ஃபைலில் ஒரு பெண்ணின் புகைப்படமும் அவள் சம்பந்தப்பட்ட தகவலும் இருக்கும். அதைப் படித்து அவ எந்த ஊர், யார் என்றதையெல்லாம் நாளைக்கு நீ நேரில் போய் விசாரிச்சி எனக்கு மாலைக்குள்ள தகவல் கொடுத்திடு. எல்லாம் ரகசியமாக இருக்கனும் அதனால்தான் உன்ன அனுப்பறேன். பாத்து ஜாக்கிரதையா விசாரித்து நமக்கான விஷயத்தை வாங்கி வா“ என்று கூறி வைத்தான்.

இந்த விஷயத்தை இவனிடம் கொடுக்கக் காரணம் கௌதம், “விழித்திரு” பத்திரிக்கையின் நிர்வாகி. அவனால் சுலபமாக எந்தஒரு சந்து பொந்திலும் போய்விஷயத்தை வாங்கி விட முடியும் என்பதால்.

மறுநாள் மாலை அவன் கேட்ட அனைத்துத் தகவல்களும் தேவ் முன் இருந்தது. அதை முழுவதும் படித்துப்பார்த்த பின் தான் எடுத்த முடிவு சரியே என்று தேவ்வுக்குப்பட, அலைபேசியில் விஷ்வாவை அழைத்து நாளைகாலை அவளைச் சந்திப்பதை உறுதிப்படுத்தினான் தேவ்.

மறுநாள் காலையில் விஷ்வாவின் முன்னிருந்த தேவ் “என்னடா எல்லாம் சரியாயிருக்கா? போகலாமா...“ என்று கேட்க,

”எஸ்லெட்ஸ் கோ” விஷ்வா.”

மித்ரஹாசினியின் அறைக்குள் இவர்கள் நுழையும் போதே அவள் செவிலியர் உதவியுடன் நடந்து கொண்டிருந்தாள்.

“ஹலோ மித்ரஹாசினி ஹௌஆர்யூ? ஆர் யூ நார்மல் விஷ்வா.”

“குட் மார்னிங் டாக்டர். ஐ யம் ஃபைன். கால்ல தான் நடக்கும் போது இன்னும் வலி இருக்கு. தென் கால் மீ மித்ரா டாக்டர். ஏன் ஃபுல் நேம் சொல்லி கூப்பிடறீங்க? நான் தான் நேற்றே அப்படி கூப்பிட வேண்டாம்னு சொன்னனே? “ என்றுஅவள் சினேகப் புன்னைகையுடன் கூற.

“கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும். டேப்லெட்டை சரியா சாப்பிட்டு வந்தாலே சரியாகிடும். பை த வே ஹீ இஸ் மிஸ்டர் தேவேந்திர பூபதி. ஒன்ஆஃப்த பார்ட்னர் ஆப் திஸ் ஆஸ்பிட்டல் என்று தன்னுடன் வந்த தேவ்வை அறிமுகப்படுத்த, அதுவரை அங்கு இன்னொருவன் இருக்கிறான் என்பதையே கண்டு கொள்ளாமல் விஷ்வாவிடம் தன் பார்வையை வைத்திருந்த மித்ரா அப்போதுதான் தேவ் பக்கமே திரும்பினாள்.

அடேங்கப்பா ஆறடி உயரத்தில் கட்டவுட் போல நின்றிருந்தான் தேவ். அவன் உயரதிற்கேற்ற அளவான உடல் எடை. பரந்து விரிந்த தோள்கள். கருப்பும் அல்லாத சிவப்பும் அல்லாத கோதுமை நிறம். கூர்மையான கண்கள். வசீகரிக்கும் புன்னகை முகம். அவன் கேசமோ அலை அலையாய் நெற்றியில் புரண்டு விளையாடியது. மொத்தத்தில் சினிமா ஹீரோவை நேரில் பார்ப்பது போல் பிரமிப்பு. அவனை முதல் முறையாக பார்க்கும் யாராயிருந்தாலும் இப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் அவளோ கொஞ்சம் கூட அவனிடம் மயங்காமல் ரொம்ப நார்மலா நீ பார்ட்னரா இருந்தா எனக்கு என்ன?” என்ற அலட்சிய பாவனையுடன்

“ஹலோ சார்” என்று சொல்ல, தேவ் காதில் அது விழவில்லை. அவளைக் காப்பாற்றியதே அவன் தான் என்றாலும் பரபரப்பான சூழ்நிலையால் அவள் முகம் கூட அன்று அவன் மனதில் பதியவில்லை. இன்று தான் அவளை அமைதியான சூழலில் சந்திக்கிறான்.

சராசரியான ஐந்தடி உயரம். அளவானதை விட சற்று மெல்லிய உடல்வாகு. சற்று கூடுதலான சிவப்புநிறம். கருமையான கூந்தல் அது இடைவரை நீண்டது. கண்களில் துறுதுறுப்பு எடுப்பான மூக்கு. வட்டமான முகம் அழகான புன்னகை. கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் அம்சமான தோற்றம். இதெல்லாம் அவளைப் பார்த்தவுடன் தேவ்வின் மனதில் தோன்றியது.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN