நெஞ்சம் 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கடலழகன் – தமிழரசி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.. மூத்தவன் விதுனதிபாகரன்... இவனைப் பெற்றெடுக்க அத் தம்பதிகள் ஏறாத கோவில் இல்லை... செய்யாத பூஜை இல்லை... வேண்டாத நேர்த்திக்கடன் இல்லை... திருமணம் நடந்து... ஐந்து வருடம் வரை பிள்ளைப்பேறு இல்லாமல்.. மாமியார் வீட்டில் பல ஏச்சு பேச்சுகளை வாங்கி... உறவுகளின் பல நக்கல் பார்வையை சகித்து.. மனம் நொந்து நின்ற பிறகு தான் தமிழரசியின் வயிற்றில் தங்கினான் இவன்.அதனாலேயே எல்லோருக்கும் அவன் செல்லப்பிள்ளை என்றால்... அவன் தாய்க்கு மட்டும் என் மகன் என்ற உரிமை நிலைப்பாட்டில் முதலில் நிற்பவன். என் மகன்... அவன் எனக்கு மட்டுமே பொக்கிஷம் என்ற உரிமை இன்றளவும் தமிழரசிக்கு உண்டு. மொத்தத்தில் தமிழரசி தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை விதுனதிபாகரன்.அவனுக்கு பிறகு மூன்று வருடம் சென்று பிறந்த பெண் சித்ரா.. தற்போது இளங்கலை முடித்து வீட்டில் தான் இருக்கிறாள். அவளுக்கு பிறகு இரட்டையர்கள்... குலமதி.. தவமதி.. இருவரும் தற்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள்.இவர்களுடையது நடுத்தர வர்க்க குடும்பம். கடலழகன் ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்தவர். ஆஹா... ஓஹோ என்று வாழவில்லை என்றாலும்... கைக்கு வந்த வருமானத்தைக் கொண்டு சிக்கனமாய் மன திருப்தியில் வாழும் குடும்பம் இவர்களுடையது. அதற்கு முழு முதல் மூல காரணம்.. தமிழரசி தான்... கட்டுக்கோப்பாய் குடும்பத்தை வழி நடத்துவதில் கை தேர்ந்த நிதி அமைச்சர் அவர்.காலை உணவுக்குப் பிறகு குலமதியும்... தவமதியும்... பள்ளிக்கு சென்று விட... தன் வேலைகளை முடித்துக் கொண்டு... உணவுக்கு வந்து அமர்ந்தான் திபாகரன். தாய் பரிமாற உண்டவன்,“ம்மா... பேக்டரி பக்கம் வீடு பார்த்திருக்கேன்... இன்னும் இரண்டு நாளில் கிளம்ப வேண்டியிருக்கும்... ஆட்களை அனுப்புறேன்.. முடிந்த வரை தேவை உள்ளதை மட்டும் ஒதுக்கி எடுத்துப்போம்... புது வீட்டுக்கு வேணுங்கிற மற்ற பொருட்கள் எல்லாம் ஷோரூமிலிருந்து வந்து இறங்கிடும் மா...” என்க“இப்போ வீட்டை மாற்ற என்ன டா அவசரம்...”“என்ன ம்மா இப்படி கேட்கறீங்க... எனக்கு கம்பெனி அங்கே தானே...”“அதற்கு நீ மட்டும் தினமும் போயிட்டு வா டா... நாங்க இங்கேயே இருக்கோம்...”“விளையாடாதிங்க ம்மா.. இங்கிருந்து போக பதினைந்து கிலோமீட்டர்... வர பதினைந்து கிலோமீட்டர். அப்போ தினமும் என்னை முப்பது கிலோமீட்டர் அலைய சொல்றீங்களா... அந்த நேரத்திற்கு பேக்டரி வேலையை இன்னும் கொஞ்சம் அதிகமா பார்ப்பேன்...”மகனின் பதிலில் உடனே தன்னுடைய பாணியை மாற்றினார் தமிழரசி.

“அதற்கு இல்ல டா.. பதினைந்து வருஷமா... தாயா.. பிள்ளையா... இந்த காம்பவுண்டில் வாழ்ந்துட்டோம்.. இங்கே இருந்தே உன் தங்கைகளுக்கு ஒரு திருமணத்தை முடிச்சிட்டனா நல்லா இருக்கும்... நமக்கும் இந்த இடம் பழகிடுச்சு பாரு அதான் சொல்றேன்...”உண்டு முடித்து கை கழுவி வந்தவன், “அங்கே போயும் தங்கைகளுக்கு ஒரு நல்லது செய்யலாம்... அதனாலே கிளம்புங்க..” மகன் கட்டளையிடமகன் இப்போது எதற்காக புது வீடு பார்த்திருக்கிறான் என்று தாய்க்கு தெரியாதா... அதில் கோபம் வர, “எதுக்கு டா.. சும்மா சும்மா இப்படி கிளம்பு கிளம்புன்னு சொல்லிட்டு இருக்க... நீ வேணும்னா அங்க போய் இருந்துக்க... நீ வெளிநாடு போயிருந்தப்போ... நாங்க எப்படி இங்க இருந்தமோ அப்படியே இருந்துக்கிறோம்...” இவரும் உறுதியாய் மறுக்க“அதெல்லாம் சரி வராது ம்மா... நான் இல்லாதப்போ நீங்க தனியா இருந்தது வேறு. இப்போ நான் இங்கு வந்த பிறகு... உங்க யாரையும் நான் தனியா விட முடியாது...” அந்த “யாரையும்” என்ற வார்த்தையில் மகன் அழுத்தம் கொடுக்கவும்தமிழரசியின் முகமோ இன்னும் அக்கினி பிழம்பாய் மாறியது.. “ஏன்... இந்த வீட்டுக்கு அப்படி என்ன டா குறைச்சல்...”“குறைச்சல் எதுவும் இல்ல... வசதி படாதுன்னு தான் ம்மா.. சொல்றேன்...”“யாருக்கு...” தாய் கத்தரித்தார் போல் கேட்க“இது என்னம்மா கேள்வி... நம்ம எல்லோருக்கும் தான்... முக்கியமா தன்யாவுக்கு...”“அது யாரு தன்யா?” இதை கேட்கும் போதே... தமிழரசியின் முகம் அஷ்ட கோணலானது.தாயை ஆழ்ந்து பார்த்தவன்,

“ஹும்... என் மனைவி.. உங்க மருமக... அதுவும் உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு வந்த ஒத்த மருமக..” இவன் ஒவ்வொரு வார்த்தையாய்... நிறுத்தி நிதானமாய் சொல்லஅதில் மகனை முறைத்த தமிழரசி, “இன்னும் பழசை எல்லாம் நினைச்சிட்டு இருக்கியா..... அது பொம்மை கல்யாணம் டா.. தூக்கி தூர போடு...” ஆங்காரமாய் பதில் தர“எது.. சொந்த பந்தம் கூடி... அக்னி வார்த்து... அம்மி மிதிக்க… மந்திரம் சொல்லி... அவ அப்பாம்மா... எனக்கு அவளை கன்னிகாதானம் செய்ய... நீங்களும் அப்பாவும்.. அதை கண் குளிர பார்த்து எங்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தியதையா.. பொம்மை கல்யாணம்னு சொல்றீங்க?...”மகனின் கேள்வியில் இவரின் மனதிற்குள் இன்னும் இன்னும் தீ பரவியது... ‘இவன் எதையும் மறக்க மாட்டானா..’ தன்னுள் கேட்டுக்கொண்ட தமிழரசி முகத்தை சுளிக்க...“ம்மா... நீ மறந்திட்டியோ என்னமோ.. இப்போ ஞாபகப்படுத்தறேன் கேட்டுக்கோ... தன்யாவை நான் காதலித்து... உங்க யாருக்கும் தெரியாம.. எங்கோ ஓடிப்போய் கட்டிக்கல... நீங்களும் அப்பாவும் எனக்காக பார்த்த பெண் அவ. இன்னும் சொல்லனும்னா... அவ கழுத்தில் தாலி கட்டுற வரைக்குமே அவ முகத்தை நான் பார்த்தவன் இல்ல...”“ஆமாம் டா... நாங்க பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான் இது.. அதான் நானே இப்போ வேண்டாம்னு சொல்றேன் இல்ல.. பேசாம அவளை தலை முழுகு டா...”“முடியாது ம்மா... இந்த ஜென்மத்திலே அது நடக்காது... என் வாழ்க்கையில் திருமணம் ஒரு முறை தான்.. அது தன்யாவோட எனக்கு நடந்து முடிஞ்சிடுச்சு. இனி இப்படி உங்க வாயில் வரக்கூடாது. நான் எப்படி உங்களையும்.. என் தங்கைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டேனோ... அப்படி தான் என் மனைவியும். யாருக்காகவும்.. எதற்காகவும்... ஏன்.. அவளுக்காகவுமே என்னால் அவளை விட்டுக் கொடுக்க முடியாது. அதனால் நான் சொன்ன மாதிரி வீட்டை ஒதுக்குங்க ம்மா...” என்று அழுத்தம் திருத்தமாய் தன் முடிவை சொன்னவன்.. தான் கிளம்ப உள்ளே சென்று விட..அங்கிருந்த தாயும், மகளும்.. திபாகரனின் பேச்சால் அதிர்ந்து நின்றார்கள். வீடு மாறப் போகும் விஷயத்தை திபாகரன் ஜெர்மனியில் இருந்த போதே தாயிடம் சொல்லி அது பற்றிய தகவலை இந்த வீட்டு ஓனரிடம் பேச சொல்லி விட்டான். ஆனால் அதற்கு தமிழரசி தான் இதுவரை பிடி கொடுக்கவில்லை. அதான் இன்று பேச வேண்டியது எல்லாம் பேசி தாயின் வாயை அடைத்து விட்டான் திபாகரன்.கம்பெனி செல்ல கிளம்பி வந்தவன், “ம்மா நான் கிளம்பறேன். மதியம் லஞ்சுக்கு என்னால் வர முடியாது. இரண்டு பேரும் கவனமா இருங்க ம்மா.. ஏதாவது வேணும்னா போன் செய்ங்க...” என்றவன் தங்கையிடம் ஒரு தலை அசைப்புடன் விலகியிருந்தான் அவன்.“என்ன டி சித்ரா இவன்! அவளை தலை முழுக மாட்டான் போலவே!” மகனின் தலை மறைந்ததும்... தமிழரசி தன் பேச்சை ஆரம்பிக்க..“ஆமாம் ம்மா.. இப்பவே இந்த அண்ணா இப்படி ஆடுது... அந்த திமிர் பிடிச்ச கோடீஸ்வரி மட்டும் அண்ணனோட வாழ்ந்துட்டா... பிறகு அண்ணன் அவ பக்கம் தான் ம்மா... அப்புறம் உன் பிள்ளையை நீ மறந்திட வேண்டியது தான்...” சித்ரா இன்னும் கொஞ்சம் தாய்க்கு தூபம் போட“எவ அவ... அவ சிண்ட கொத்தா பிடிச்சு அறுத்து வீசிட மாட்டேன்... இந்த தமிழரசியை என்னனு நினைச்சிட்ட... அவ பணம் அவளுக்கு.. அதெல்லாம் என் கால் தூசிக்கு சமமாகுமா டி”“இல்ல தான்.. ஆனா நீ தவமா தவமிருந்து பெத்த பிள்ளைய இல்ல அவ வளைத்து போட்டுகிட்டா? பார்த்த இல்ல.. அண்ணன் பேசிட்டு போறத...”“அதுக்கு?... நான் பத்தியம் இருந்து... நோவு தாங்கி... மூச்சு பிடிச்சிட்டு பெத்த எம்மகனை... இருபத்தி ஐந்து வருஷம் கழித்து... மருமகள்னு ஒருத்தி வந்தா.. இந்தா ம்மா.. நீ வச்சிக்கோன்னு நான் தூக்கி கொடுத்துடனுமா?” தானும் தன் மாமியாரிடமிருந்து அவர் மகனை முந்தியில் முடித்துக் கொண்டு வந்தோம் என்பதை மறந்தவராக ஏக வசனத்தில் பேசினார் தமிழரசி.“நீ கொடுக்க வேண்டாம்.. அவ எப்பவோ எடுத்துகிட்டா. சும்மா இப்போ வாய் அளக்காத... ஏன் மா உனக்கு உலகத்திலே பெண்ணா கிடைக்கல.. அந்த திமிர் பிடிச்சவளை போய் மருமகளா கொண்டு வந்தியே...” சித்ரா தன் ஆற்றாமையை வெளிப்படுத்தமகளின் கேள்வியில் தமிழரசியின் கண் முன் அக்காட்சிகள் நகர்ந்தது...

“தமிழரசி, என்னை மன்னிச்சிடு... பேராசையால் நான் செய்தது தப்பு தான். அது... அது என் மகனின் வாழ்க்கையை காவு வாங்கும்னு நான் நினைக்கல... ஆனா இதை விட்டா வேற வழியில்ல அரசி.. நான் என்ன செய்ய?” அன்று கணவர் கெஞ்சிய கெஞ்சல் இன்றும் இவரை வாட்டி எடுத்தது.“என்னம்மா... ஏன் ஒரு மாதிரி இருக்க...” தாயின் வெறித்த பார்வையைக் கண்டு மகள் கேட்க“ஒன்றும் இல்ல சித்ரா.. நடந்தது நடந்து போச்சு... அந்த திமிர் பிடிச்சவளை எப்படி விரட்டுவதுன்னு சொல்லு...”“அதெல்லாம் சட்டுன்னு நடக்காதும்மா... கொஞ்ச நாள் அண்ணன் போக்கில் விடுங்க.. பிறகு பார்த்துக்கலாம்...” என்று சித்ரா இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க... ஏதாவது செய்யணும் என்ற நினைப்பில் அமைதியானார் தமிழரசி.“சாருகேசன்” பங்களா..

வழமை போல இரவு தூக்கமில்லாமல்... விடியலின் போது கண்ணயர்ந்த தன்யா... துயில் கலைய காலை பதினோரு மணியானது. இப்பவும் எழுந்திருக்க மனமில்லாமல்.. படுக்கையில் புரண்ட அவளின் மனமோ... கணவனை சுற்றியே வந்தது.“நேற்றே அவர் கைக்கு கவர் கிடைக்கிற மாதிரி செய்ய சொல்லி இருந்தேன்... இந்நேரம் கிடைத்திருக்கும். பார்த்திருப்பாரா.. இல்லையா.. பார்த்திருந்தால் என்ன முடிவு செய்திருப்பார்...” இதுபோல் நேற்றிலிருந்து எண்ணிலடங்கா... அவளுள் எழுந்த பல கேள்விகள்... இப்போதும் அவளைத் தாக்கியது.“என்ன சொல்லுவார்... என் முடிவுக்கு சம்மதம் சொல்லி.. கையெடுத்து கும்பிட்டு.. என் முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லாமல்... விலகி போயிட்டே இருப்பார். என்னை தான் அவருக்கு பிடிக்காதே! அவர் வாழ்வில் வந்த சுமை நான்... பிறகு எப்படி என்னை பிடிக்கும்?” கேள்வியும் நானே பதிலும் நானே என்பது போல்... தானே கேள்வியையும் கேட்டு.. தானே பதிலையும் சொல்லிக் கொண்டவளின் விழிகளிலோ... நீர் தேங்கியது.அருகிலிருந்த கைப்பேசியை எடுத்து அதிலுள்ள கணவனின் புகைப்படத்தைக் கண்டவள், “ஏன்… என்னை உங்களுக்கு பிடிக்கல.... எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்ததுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?.. இதில் என் தப்பு இல்லையே... இப்படியாக எனக்கு ஒரு குறை இருக்க… என்னைப் படைத்த அந்த ஆண்டவன் தானே காரணம்...” விசும்பலுடன் மொழிந்தவளின் இதழ்களோ கணவனின் கன்னத்தில் பதித்து மீண்டது.“u know.. நீங்க என்னை விரும்பலனாலும்... I love u so much...” என்று காதலோடு பிதற்றினாள் பாவை.அந்நேரம் அவள் அறையிலுள்ள இன்டெர்காம் ஒலிக்கவும்... அதை எடுத்து தன் காதுக்கு கொடுத்தவள், “yes..” என்க“மேம்... நீங்க இன்னும் எழுந்திருக்கவில்லயானு பாஸ் கேட்டாங்க... அதான் உங்களை எழுப்ப...” அங்கு பணிபுரியும் சோனியா பவ்வியமாய் சொல்ல“yes... i woke up...” இவள் பட்டும் படாமல் பதில் தர“ஓகே மேம்.. அப்போ ப்ரேக்பாஸ்ட்... நான் மாடிக்கு அனுப்பி விடுறேன்...”“வேண்டாம்.. தலை வலிக்குது ஒரு கப் டீ.. அனுப்பு...”“yes.. மேம்..” என்ற பணிவுடன் அழைப்பைத் துண்டித்தாள் சோனியா.இதற்குள் மேல் படுத்துக் கொண்டிருந்தால் சரிப்படாது என்ற எண்ணத்தில்... எழுந்த தன்யா.. செருப்பை அணிந்து கொண்டு.... தோளிலிருந்து வழிந்த நைட் சூட்டை இழுத்து முடிச்சிட்டவள்... பின் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்து... உடலை இப்படியும் அப்படியும் வளைத்தவளின் கரமோ... பட்டு போல் விரிந்து தவழ்ந்த அவளின் கூந்தலை வாரி தூக்கி கிளிப்பில் அடக்கியது.பின் அன்னம் போல மெல்ல நடந்து.. இவள் குளியல் அறைக்குள் நுழைய.. அங்கிருந்த கண்ணாடியோ... இவளின் அழகை இவளுக்கே காட்டியது. தன்யா.. சாமுத்ரிகா லட்சணத்துடன் மிளிர்பவள்.உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை கொட்டிக் கிடக்கும் அவளின் அழகைப் பார்க்கையில்.. ஏதோ பிரம்மன், தான் சூடிக் கொள்ளவே சிரத்தையாய் நேரம் எடுத்து... தன் கையாலேயே தொடுத்த பூ மாலையோ இவள் என்னும் அளவுக்கு இருப்பாள்...இதற்கெல்லாம் சிகரம் போல் அவளின் நிறம்… பூமி தொடாத பிள்ளையின் பாதம் எப்படி இருக்குமோ.. அப்படி ஒரு மாசு மறுவற்ற சிவந்த நிறம் தான் இவளுடையது. தும்மினால் கூட அவளின் மூக்கு நுனியும்… கன்னங்களும் தக்காளியாய் சிவந்து விடும்… ஆனால் இவளோ தன்னுடைய அழகைப் பற்றி துளியும் கர்வம் கொள்ளாதவள். ஆம்.. இப்படியான இவள் தான் விதுனதிபாகரனின் மனைவி தன்யரித்விகா.ஒரு புறம் ஷவர் இருக்க.. இன்னோர் பக்கம் பாத் டப் இருக்க... இன்று டப்பில் இறங்கி குளிக்க தான் இவளின் மனம் ஏங்கியது. உடனே அதில் அமிழ்ந்து... தன் மனக்காயம் தீர குளித்தவள்... பின் அங்கேயே அலமாரியிலிருந்த டவலை எடுத்து தன் உடலில் சுற்றிக் கொண்டு.. இவள் ட்ரெஸ்ஸிங் அறை சென்று ஆடையை மாற்றி கொண்டு வெளியே வர.... அப்போது அவள் அறைக்கான அழைப்பு மணி ஒலிக்கவும்... இவள் ரிமோட்டால் திறக்க...அணிந்திருந்த ஹீல்ஸில் தரை அதிர.... சந்தன நிற சட்டையும்.. கரு நீல நிற பேண்டும் அதே நிறத்தில் கோர்ட்டும் அணிந்து.... கேசம் விரிந்து ஆட.. அதீத ஒப்பனையில்... உதட்டு சாயம் பளீரிட... கையில் ஐபேடுடன் உள்ளே நுழைந்தாள் சோனியா.“மேம், உங்களுக்கு ஜூஸ்..” என்று சொன்ன அந்த நவநாகரீக பருவ மங்கையோ.. திரும்பி வாசலைக் காண... இவளைப் போல உடை அணிந்திருந்த இன்னோர் நங்கையோ.. பல பழரச குவளைகள் அடுக்கியிருந்த உணவு வண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.“ஆனா.. நான் டீ கேட்டேன்...” தன்யா நினைவுபடுத்த“மேம் டைம் ஆகிடுச்சாம்.. பாஸ் உங்களை... இப்போ ஜூஸ் குடிச்சிட்டு பிறகு லஞ்ச் சாப்பிட சொன்னார்...” சோனியா தன் மொழிபெயர்ப்பு கடமையை செவ்வனவே செய்ய.. அமைதியானாள் தன்யா.அவள் தற்போது பழரசம் குடிக்க வேண்டும் என்பது தான் கட்டளை. ஆனால் அவள் விரும்பும் எந்த பழரசத்தை வேண்டுமானாலும் குடிக்க அனுமதி என்பதால் தான்... அவள் முன் பல குவளைகளில் பல பழரசங்கள் நிரம்பி வழிந்தது. அதில் ஒன்று அவளுக்குப் பிடித்த சப்போட்டா மில்க் ஷேக் இருக்க.. அதை எடுத்து இவள் ஒரே மூச்சில் குடித்து முடிக்கவும்.... அதன் பிறகே அங்கிருந்த பணிப்பெண் விலகினாள்.“மேம், இன்னைக்கு ஈவினிங்.. உங்க ஃபிரெண்ட் பேர்த் டே பார்ட்டி இருக்கு...” சோனியா அங்கிருந்தவளுக்கு நினைவு படுத்தவும்சோபாவில் அமர்ந்து பிஸினஸ் (பெண்கள்) மாத இதழை புரட்டிக் கொண்டிருந்தவளோ, “but.. i am not intrested..” இப்போதிருக்கும் மனநிலைக்கு தன்யாவுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை.“மேம், நீங்க அவசியம் போகணும்னு.... பாஸோட உத்தரவு...”“ஓகே... டைம் ஷெட்யூல் பிறகு சொல்லுங்க...” இவள் உடனே தன் சம்மதத்தை தரவும்... பணிவுடன் விலகினாள் சோனியா.இது தான் தன்யா... தனக்கு விருப்பமானதை... தனக்கு வேண்டும் என்று நினைப்பதை... அவளால் செயல்படுத்த முடியாது. அவள் சிறிதே தன் பிடிவாதத்தைக் காட்டியிருந்தால்... யாரும் அவள் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க மாட்டார்கள்.ஆனால் அப்படி பிடிவாதத்தைக் காட்டவோ... அதன் மூலம் தன் விருப்பத்தை அடையவோ அவளுக்கு விருப்பம் இல்லையோ என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தான் இல்லை. ஏனென்றால் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து வாங்க தெரியாத... விரும்பாத இருபத்தோர் வயது பாவை தான் இந்த தன்யா.இவளின் வீடு மாளிகை என்றால்.. இவளின் அறையோ... சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர அறையை கொண்டது. இப்படியான தங்க கூண்டில் தான் இவளின் இருபத்தோர் வருடங்களின் வாழ்வு கழிந்தது. இனி..
 
Last edited:
Super Super Super maa... Semma episode..... யாரு avanga boss அவரு solrathu thaan தான்யா கேக்க numaa.... Ava husband enna annuppi vechi இருக்கா.... Avaluku enna aachi..... Enna குறை avaluku....... அவன் அப்பா vaala thaan avanga கல்யாணம் நடந்து இருக்கு.... அவன் அம்மா vuku avala pidikala போல ஏன்..... Avangala பிரிச்சிடனும் கங்கணம் கட்டிகிட்டு இருக்காங்க போல...
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super Super Super maa... Semma episode..... யாரு avanga boss அவரு solrathu thaan தான்யா கேக்க numaa.... Ava husband enna annuppi vechi இருக்கா.... Avaluku enna aachi..... Enna குறை avaluku....... அவன் அப்பா vaala thaan avanga கல்யாணம் நடந்து இருக்கு.... அவன் அம்மா vuku avala pidikala போல ஏன்..... Avangala பிரிச்சிடனும் கங்கணம் கட்டிகிட்டு இருக்காங்க போல...
ஆமாம்... ஆமாம்... சித்து ம்மா💞💞💞💞 நன்றிங்க💌💌💌💟💟💟
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN