பூ 42

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

காலை முதலே பரபரப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தாள் தேவா… "பாட்டி போதும் போதும் நீங்க பண்ற அலும்புல அவரு என்னை விட்டுட்டுதான் போகப்போறாரு" என்றபடி அவரை அவசரப்படுத்திக்கொண்டு இருந்தாள் தேவா.


"சித்த இரு கண்ணு நீ சாப்பிட்டது என்னத்த காணும் இதையும் சாப்பிட்டு போ" என்றபடி இரண்டு மூன்று இட்லிகளை சேர்த்து வைத்து இருந்தார் தில்லை.


"பாட்டி…. சத்தியமா முடியல…. இவ்வளவு தாங்காது ப்ளீஸ்".... என்று இறைஞ்சியபடி இருந்தவளின் அருகில் வந்து அமர்ந்த விசாகன், "ஒழுங்கா சாப்பிடு" என்று ஒரு அதட்டல் போட்டான்.


அவனை முறைத்தபடியே இட்லிகளை சன்னமாக பிய்த்து எடுத்துக்கொண்டு வாயில் வைக்கவே அரைமணி நேரமாக்கி இருந்தாள் .


"இப்படி எடுத்தா எப்போ முடியறது?... ஆஸ்பிட்டல் போகனும் கவனம் இருக்கா, இல்லையா???" என்றபடி அவள் புறம் இருந்த தட்டை நகர்த்தி தன் புறம் இழுத்தவன் இட்லியை பிய்த்து சாம்பாரில் முக்கி அவளுக்கு ஊட்டிக்கொண்டு இருக்க அங்கு வேலை செய்து கொண்டு இருந்த அனைவரின் கண்களும் அவர்களைத்தான் பார்த்தது..


பேரனின் கைங்கரியத்தில் பேத்தியின் வயிறு நிறையவும் பார்வையை சுற்றுப்புறத்தில் பதியவைத்தவர் "அட இங்க என்ன படமா காட்டுறாங்க??? புருஷன் பொஞ்சாதிக்கு ஊட்டுறதை பார்த்தது இல்ல?? போய் வேலைய பாருங்கடா போக்கத்தவங்களா…" என்று ஒரு அதட்டல் போடவும் சட்டென அங்கிருந்து ஆளுக்கொரு பக்கம் நகர்ந்து விட்டனர்.


"அடியேய் பொன்னி, சோத்துக்கு போடுறதும், ஒரப்புக்கு போடுறதையும் சித்த கொண்டாடி" என்று கூற பொன்னி எடுத்து வந்ததும் அதை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சுத்தி போட்டார். "கல்லடி பட்டாலும் படலாமே தவிற, கண்ணடி படக்கூடாதுத்தா" என்றபடி அதனை அடுப்பில் போட படபடவென்று வெடித்து இருந்தது.


இதை எதையும் கருத்தில் கொள்ளாதவர்தள் தங்கள் உலகில் சஞ்சரித்தபடி இருக்க, கண்கள் அவனிடம் சண்டை போட்டாலும், வாய் அவன் ஊட்டிய இட்லிகளை உண்டுக் கொண்டு இருந்தது. பத்து நிமிடத்தில் 3 இட்லிகளும் காலியாகி இருக்க, கை கழுவிட்டு எழுந்தவன் அவளுடைய மருத்துவ கோப்புக்களை எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துகொண்டு காருக்கு விரைந்து இருந்தான்.


பின்னாடியே அமுதாவும் தில்லையும் வர தேவாவுடன் காரில் ஏறிய விசாகன், அப்பத்தா "அமுதா பாட்டுக்கு கிளம்பி மில்லுக்கு போயிட போகுது சொல்லி வை… எங்கேயும் போக வேண்டாம் கல்யாண பொண்ணு அங்க இங்க அலையற வேலை வேண்டாம்" என்றான்.


"என்ன அமுதா, புரியுதா... எதுனாலும் நான் வந்து பாத்துக்குறேன்…. அங்க போய் வேலைய இழுத்துப் போட்டுக்காத… கல்யாண பொண்ணு ரொம்ப அலட்டிக்காத" என்று சொல்லும்போதே வெக்கச்சிவப்பு அவள் கன்னங்களை தீண்டியிருந்தது.


அவளிடம் கல்யாணத்தை பற்றி பேசிய பின் யாரும் அவளை வற்புறுத்தவும் இல்லை... வேண்டாம் என்று கூறவும் இல்லை... அவள் போக்கில் விட்டனர். அடுத்த நாள் காலை வழக்கம் போல் அனைவரும் வேலையில் ஆழ்ந்து விட விசாகனுக்கு மட்டும் மனதின் ஓரத்தில் அமுதா சம்மதம் கொடுத்து விடுவாள் என்று ஒரு குரல் ஒலித்துக்கொண்டு இருந்தது.


தேவாவின் சொல்லை கேட்டவளுக்கு அன்று முழுவதும் மனதில் போராட்டம் தான் போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தவளுக்கு ஒரு நிலைக்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை கண்களை மூடி தனக்கு சுந்தரனை பிடித்து இருக்கிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியவளுக்கு தெள்ள தெளிவான விடை கிடைக்க ஒரு நிலையான மனதுடன் இருந்தாள்.


மாலை அனைவரும் சுந்தரன் வீட்டிலிருந்து வரவும் அவர்களின் முன் அலங்காரம் செய்து நின்றவளின் அழகு தில்லையின் மனதை நிறைய செய்திருக்க, அவளின் சம்மதம் என்ற வார்த்தை அனைவரது மனதையும் மகிழச்செய்து இருந்தது... குறிப்பாய் சுந்தரனை தன் வசம் இழக்க வைத்து இருந்தது.. அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவளின் ஒற்றை விழி அசைவுக்கு காத்திருந்தவனை அதிக நேரம் ஏங்க வைக்காமல் கடைக்கண் பார்வையினை அருளி சந்தோஷக்கடலில் நீந்த வைத்திருந்தாள்.


வந்தவர்கள் அன்றே பூவை வைத்து பெண்ணை உறுதி செய்தே சென்று இருந்தனர். இதில் தில்லைக்கு ஏக சந்தோஷம் அன்றிலிருந்து 40 நாட்களில் திருமணம் என்று முடிவாகி இருக்க அதன் பொருட்டே இந்த பேச்சு.


அந்த கேலிப்பேச்சில் சிரித்தபடியே இருந்த தில்லை, "போதும் யா.. அவ சொல்றதை கேட்டாதானே... அம்புட்டு வேலையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யும்… சொல் பேச்சை கேக்காதவ" என்று அமுதாவை வாரியவர்


"ஏய்யா... நீயும் கொஞ்சம் பாத்து போயா.. இந்தா இதுல சாத்துக்குடி ஜீசும், சுடு தண்ணியும் இருக்கு தேவைப்பட்டா கொடு.. வெளியே எங்கேயும் சாப்பிடாதிங்க, வீட்டுல சமைக்க சொல்லி இருக்கேன்... புள்ளைக்கு வெளிச்சாப்பாடு ஒத்துக்காது... பாத்து சூதானமா இருக்கனும் யா" என்று விசாகனிடம் கூறியவர் , "போய்ட்டு வாடா கண்ணு" என்று தேவாவிடமும் கூறி இருந்தார்.


"வறேன்" என்றபடி இருவரிடமும் கூறிட கார் நகரத்தை நோக்கி பயணித்தது. மருத்துவமனைக்கு வந்தவர்கள் மருத்துவரை சந்திக்க அனுமதி வாங்கி காத்திருக்க தேவாவிற்கு தான் அங்கு இருக்கவே பிடிக்கவில்லை "ஆஸ்பிட்டல் ஸ்மெல்லே நல்லாவே இல்ல, நான் சொன்னா கேட்டாதானே... நான் நல்லா தான் இருக்கேன் உங்களுக்கு தான் அது தெரியவே மாட்டங்குது" என்றாள் முகத்தை சுணக்கியபடி


"அதை டாக்டர் சொல்லட்டும்... நீ கொஞ்ச நேரம் அமைதியா உக்காரு... சரியா சாப்பிட மாட்டங்கற, முகம் டல்லடிக்குது, உடம்பு வேற உருக்கிடுஞ்சி" என்றபடி அவளின் வாயை அடக்கியவன் போனை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.


"ஆமா எதை சொன்னாலும் ஒத்துக்கவே ஒத்துக்காதிங்க" என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள ஒரு பெரும் மூச்சை வெளியேற்றியவன் அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்.


அது வார நாட்கள் என்பதால் கொஞ்சம் மக்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு ஐந்து வயது பெண் குழந்தையுடன் அமர்ந்து இருந்த பெண்ணுக்கு அவர்களை பார்த்ததும் கண்கள் இரண்டும் கலங்கி விட்டது.


அவர்கள் கவனம் கவரா வண்ணம் அந்த இடத்திலிருந்து பின்பக்கம் போய் அமந்து கொண்டவள் அவர்களையே பார்த்து இருந்தாள். அவர்களின் நெருக்கம் மனதை பிசைந்தது உதட்டை கடித்து அழுகையை அடக்கியவள் அவர்களையே பாரத்துக்கொண்டு இருந்தாள்.


தேவாவிற்கு வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது கஷ்டமாகி போக "ஹீரோ, ரொம்ப போர் அடிக்குது கொஞ்சம் நேரம் நடக்கவா"


"எங்கயேயும் வேணாம்...பேசாம உட்காரு" என்று.பக்கத்தில் இருத்திக்கொள்ள


"ப்ளீஸ் ஹீரோ, முடியல... இடுப்பு வலிக்குது... இதோ இந்த பக்கமா போயிட்டு, இப்படியே வந்துறேன்... ஒரே இடத்துல உட்காரது வலிக்குது" என்று முகத்தை சுருக்கி கேட்கவும் மனது இறங்கி வந்தவன்


"சரி போயிட்டு வா சனா... ஆனா என்னை தாண்டி எங்கேயும் போகக் கூடாது... இங்கேயே தான் இருக்கனும்" என்று கூறியதும் சரி என்றவள் அங்கே போடப்பட்ட இருக்கைகளை கடந்து பின்பக்கம் சென்றாள். அவளை கண்டதும் தலை குனிந்துக் கொண்ட அந்த பெண்ணின் கண்களில் மட்டும் நீர் நிற்கவே இல்லை


தேவா முதலில் எதுவும் நினையாதவள் தன் போக்கில் அங்கிருந்தவர்களை எல்லாம் நோட்டம் விட்டவாறே நடந்து சென்றவள் இப்போது அவளை கடந்து திரும்பி விசாகனிடம் வரவும் ஏதேச்சையாக பின்னாள் திரும்பி பார்த்தாள்.


இவளை கவனியாத அங்கு அமர்ந்து இருந்த பெண்ணோ விசாகனையே பார்ப்பது போல இருந்தது... அந்த பெண்ணை பார்த்தவாறே மறுபடி திரும்பி நடக்கவும் பார்த்துக் கொண்டிருந்த பெண் இவளைக் கண்டதும் மறுபடி தலையை தாழ்த்திக் கொள்ளவதை பார்த்ததும் மனதுக்குள் ஏதோ நெறுடியது…


உள்ளுக்குள் சொல்ல முடியாத கோபம்... முடிந்தால், நீ யாரு? உன் பெயர் என்ன? என்று கேட்டு இருப்பாள். ஆனால் இவ்வளவு பேர் முன்னிலையில் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாதவள் சட்டென்று கணவனிடம் சென்று அவனின் கைகளை இறுக்கி கட்டியவாறு அமர்ந்துக்கொண்டாள். இது எப்போதாவது நடக்கும் நிகழ்வு என்பதால் அவனும் அவளை எதுவும் கேட்காமல் அவளை அணைத்தார் போன்று அமர்ந்துக்கொண்டான்.


அவனுடன் அமர்ந்து இருந்த தேவா, பின்னால் திரும்பி பார்க்க இப்போது அந்த பெண்ணின் பார்வை விசாகனையே பார்ப்பது போல இருந்தது. யார் அவள்? கழுத்தில் இருக்கும் தாலியும், நெற்றியில் இருக்கும் குங்குமம், வேறு ஒருவனின் மனைவி என்று சொல்லாமல் சொல்லிட, கையில் இருக்கும் பிள்ளை அவளையே கொண்டு இருக்க, அந்த குழந்தை அவளுடைய குழந்தை என்பதில் துளியும் சந்தேகமில்லை... அப்படியிருக்க அந்த ஏக்கமான பார்வையும், அவளின் கலங்கிய கண்களும், கொஞ்சம் யோசிக்க வைத்தது.


அடுத்த அழைப்பு அவளுடையதுதான் போலும் நர்ஸ் வந்து டோக்கன் எண்ணை கூறவும் "வா சனா" என்று அவளை கைபிடித்து உள்ளே சென்றான்.


முழுசெக்கப்பிற்கு பின் நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்துக்கொண்டு அவளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சத்து டானிக் என்று அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டவன் அறையை விட்டு அவளுடன் வெளியேற தன்னிச்சையாக தேவாவின் கண்கள் அந்த பெண்ணிடம் சென்றது.


இப்போதும் அந்த பெண்ணின் கண்கள் இவனை சுற்றியே இருக்க மெல்ல தன் கணவனின் கையை சுரண்டியவள் "உங்களுக்கு அவங்கள யாருன்னு தெரியுமா? என்று அந்த பெண்மணியை சுட்டிக் காட்டவும், இதை சற்றும் எதிர்பாராது அதிர்ந்திருந்த அந்த பெண் தன் தலையை வேறுபுறம் திருப்பிக்கொள்ள, அவளை கண்டவனின் விழிகளில் எந்த மாற்றமும் இல்லை இதை தேவா கவனிக்கவும் தவறவில்லை


"அவங்களா?... அவங்க என் கூட படிச்சவங்க மா" என்றான் அவன் முகத்தில் சற்றும் உடன் படித்த பெண்ணை பார்த்த அறிமுக சிரிப்பு கூட இல்லை, ஏதோ தேவையில்லா பொருளை கண்டது போல் ஒரு அலட்சியம் அவன் கண்களில் ஒட்டி இருந்தது.


"சரி வா... சனா, நாமா போகலாம்" என்றான் மனைவியின் புறம் திரும்பி


தயங்கியபடியே "இல்ல அவங்க அழுகுறாங்க" என்றாள் தேவா


"அவங்க எல்லாம் அழமாட்டங்கடா.. யாரையாவது அழவைச்சிதான் பழக்கம்... நமக்கு எதுக்கு… வா, நாம கிளம்பலாம்" என்றான் கொஞ்சம் கூட இளகாமல்


"எனக்கு, அந்த மாதிரி" என்று ஆரம்பிக்கவும் "யாரை பத்தியும் உனக்கு தெரியாது சனா, முகத்தை வைச்சி மனசை எடைபோடாத... பூவுக்குள்ள தான் பூ நாகம் இருக்கும்" என்றவன் வெளியேறி விட


வேறு வழியின்றி அவன் பின்னயே தேவாவும் சென்று இருந்தாள்.


💐💐💐


அன்று மரகதத்தின் வீட்டில் இருந்து வந்த மேகலா சந்திரன் கண்களுக்கு சிக்கவே இல்லை இதுவரை திருமண பேச்சே எடுக்காதவரிடம் எதை எதையோ உளறிவிட்டு சென்றவள் மேல் கடுங்கோபத்தில் இருந்தவனுக்கு அவளை கண்டாள் உண்டு இல்லை என்று பண்ணிவிடும் ஆத்திரத்தில் இருந்தான் சந்திரன்.


ஒரு நாள் மாலை அவன் வீட்டிற்கு செல்லும் நேரத்தில கையில் பூக்கூடையுடன் வழியில் அவளை பார்க்கவும் பைக்குடன் முன்னால் சென்று நின்றான்.


தன் முன்னால் வந்து கொலைவெறியுடன் நின்றவனை பார்க்க சற்று பயமாகத்தான் இருந்தது மேகலாவிற்கு, இருந்தாலும் 'இவரு என்னடா, எப்போ பார்த்தாலும் தீடீர் தீடீர்னு வந்து நின்னு பயமுறுத்துறாரு... இப்போ என்ன கண்றாவியோ தெரியலையே' என்றபடி தன்போக்கில் யோசித்துக்கொண்டு நின்றாள்.


அவள் ஏதோ யோசனையில் சிலைபோல் இருப்பதை பார்த்தவனுக்கு இன்னும் கடுப்பாகி போக "ஏய்" என்று சொடுக்கிட்டு அழைத்தவன் "எங்க வீட்டுக்கு எதுக்குடி போன" என்றான் கொஞ்சம் கண்டிப்புடன் இதில் அவன் டி என்று அழைத்ததை கூட கருத்தில் பதியவில்லை அவ்வளவு ஆத்திரம் அவள் மேல்


"இது எப்போ!!!! உங்க வீட்டுக்கா" என்றபடி யோசிக்க


"ஏய்" என்றபடி அவன் பற்களை கடித்து "என்னடி ஒன்னும் தெரியாத மாதிரியே நடிக்கிற"


"என்னது நடிக்கிறனா!?!?!... என்ன பேசுறிங்க கொஞ்சம் விட்டா, உங்க இஷ்டத்துக்கு பேசுறிங்க"


"பேசுறேனேன்னு சந்தோஷப்படு இல்ல நாலு அறை விட்டு முகரைய பேத்து இருப்பேன்" என்று அவன் சீறவும்


'அப்படி இவன் கோவப்படுற அளவுக்கு என்ன செய்தோம்... எப்போ போனோம்' என்று யோசித்து அஹ்... "அது ஒரு 10 நாளுக்கு முன்ன பலகாரம் கொடுக்க போனேம்... அவ்வளவுதானே, அப்படி என்ன பண்ணிட்டேன்னு இப்படி கோவப்படுறிங்க" என்றாள்


"என்னன்னு தெரியாதா? எதுக்கு திட்டுறேன்னு தெரியாதா? இன்னும் எதுவும் தெரியாத மாதிரியே நடிக்காத டி? என்று மறுபடி அதே வார்த்தையை கூறவும்


சுல்லென்று அவளுக்கு கோபம் வர "கொஞ்சம் நிறுத்துறிங்களா…. எதுக்கு இப்படி நடிக்கிற, நடிக்கிறன்னு... அதே வார்த்தையே சொல்றிங்க... ஏன் திட்டுறிங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க" என்று அவளும் பதிலுக்கு பதில் பேசிட


"வீட்டுக்கு வந்தியா, பாத்தியா, பலகாரத்தை கொடுத்தியான்னு, போக மாட்டியா??? எதுக்கு தேவையில்லாம என் கல்யாணத்தை பத்தி பேசின" என்றான் எரிச்சலாய்.


"பச்.. 'அதுதான் சாருக்கு, இம்புட்டு கோவமா... முடியலடா என்னால சுத்தமா முடியல…' என்று நினைத்தவள் "தப்புத்தான் என்னைய எதை கொண்டு அடிக்கிறதுனு தெரியல" என்று தலையில் தட்டி கொண்டு இரண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்தி பெரிய கும்பிடு ஒன்றை போட்டவள் "அய்யா சாமி, தெரியாம வாய விட்டுட்டேன்…. இனி நீங்க இருக்க திசை பக்கம் கூட திரும்ப மாட்டேன்… ஏதோ ஆளு வளந்துக்கிட்டே போறியே, அத்தை வேற கஷ்டப்பட்டாங்களேன்னு ஒரு யோசனை சொன்னது குத்தமாய்யா..? அதுக்கு இப்படி நிக்க வைச்சி கேள்வியா?? ஆளை விடு சாமி…" என்று சத்தமாக கூறி "ஏதோ வாய்தவறி வந்த சொல்லுக்கு எத்தனை பேச்சி... என்னமோ என்னையே கல்யாணம் பண்ணிக்க சொன்னாமாதிரி" என்று முனுமுனுத்தவள் அவனை கடந்து போய் கொண்டிருந்தாள்.


போகும் அவளின் முனுமுனுப்பு காதில் கேட்டலும் அதை புறந்தள்ளியவன் "இனி ஏதாவது பேசி பாரு உனக்கு இருக்கு…. நடு ரோடுன்னு கூட பாக்கமாட்டேன், நாலு இழுப்பு இழுத்து விட்டுவேன்டி" என்று கருவிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN