4. என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலைச்சூரியனின் மரகத மஞ்சள் ஒளி என் மீது படர நான் மெது மெதுவாக கண்களைத் திறந்தேன் . அமர்ந்த வாக்கிலேயே தூங்கி விட்டிருக்கிறேன் போல . மெதுவாக எழுந்துஎங்கள் அறையில் உள்ள பெரிய சாளரத்தின் திரைச்சீலையை விலக்கினேன் சிலுசிலுவென்ற வாடைக்காற்று என் மேனியில் மோதியது . பரம சுகமாக இருந்தது . கோத்தகிரியின் காலை வேலையின் ரம்மியமான காட்சிகள் சாளரத்தின் வழியே கண்டு ரசிக்கையில் இதமாக இருந்தது . நேற்றைய நிகழ்வுகள் யாவும் ஏதோ சொப்பனம் கண்டது போல இருந்தது . அவற்றையெல்லாம் ஹரியிடம் சொல்லிவிட மனது உந்தினாலும் புகுந்த வீட்டிற்கு வந்த இரண்டாம் நாளே கணவரின் சொந்தங்களை கணவரிடமே குறை கூறுவதற்கு எனக்கு சங்கடமாக இருந்தது . என் சந்தேகம் முழுக்க முழுக்க நந்திதாவின் மேல் இருந்தாலும் இவையெல்லாம் செய்தது அவள்தான் என்பதை நான் எதை வைத்து நிரூபிப்பது . அவளின் ஆட்டம் எதுவரைதான் போகிறது என்று பார்த்துவிடலாம் என்ற புதுத் தைரியம் கொடுத்த தெம்புடன் குளியலறைக்குச் சென்றேன் .


நான் குளித்து முடித்து வெளிவரும் சமயம் ஹரி அவரின் மொபைலில் இன்ஸ்ட்டாகிராமை பக்கத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார் . நான் வந்ததை உணர்ந்தவுடன் அதை விடுத்து என் முகத்தை ஆராய ஆரம்பித்துவிட்டார்.

“ என்ன வானு ? என்ன ஆச்சு …? ஏன் உன் முகம் இவ்வளவு வாடிப்போய் இருக்கு ? அழுதியா என்ன ? “ என்று பதட்டத்துடன் என் அருகில் எழுந்து வந்தார்.


“ ப்ச்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்ல ஹரி. எனக்கு இது புது இடம் இல்லையா ? அதான் சட்டுன்னு தூக்கம் பிடிக்கலை . தூக்கம் இல்லாததனால இப்படி இருக்கும்”.


“ என்னமோ சொல்ற … நானும் நம்பறேன். ஆனா ப்ளீஸ்டா வானு உனக்கு ஏதாச்சும் இன்கன்வீனியன்ட்டா ஃபீல் ஆனா தயவு செஞ்சு என்கிட்ட சொல்லுடா … எனக்கு உன் சந்தோஷம்தான் எல்லாத்தையும் விட முக்கியம் “. என்று கூறியபடி என் நெற்றியில் முத்தமிட்டார். நான் அதை மிகவும் இரசித்தேன். ( இரசிக்காமல் இருக்க முடியுமா ? 😍)


பிறகு அவர் குளியலறைக்குச் சென்றார். சிறிது நேரம் அங்கேயே உலவிக்கொண்டிருந்த எனக்கு ஒரு அரை மணி நேரமாவது லைப்ரரிக்குச் செல்லலாம் என்று தோன்றவே நான் குளியலறை வாயிலிலேயே நின்று அவரிடம் லைப்ரரிக்குச் செல்வதாக கூறிவிட்டு எங்களறையிலிருந்து வெளிவந்தேன் .


நூலகத்தின் அறைக்கதவு ஏற்கனவே திறந்துதான் இருந்தது . உள்ளே இருந்த பெரிய மேசையில் தினசரிகள் பரவியிருக்க என் மாமியார் அன்றைய ஹிண்டுவைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

நான் வரும் அரவம் கேட்டவுடன் ஹிண்டுவைப் புரட்டுவதை நிறுத்திவிட்டு என்னை நோக்கினார். என்னைப் பார்த்த அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார் . இவரின் பாராமுகம் எனக்கு வருத்தத்தை அளிக்கத்தான் செய்தது . அதுசரி நாங்கள் செய்ததும் தவறுதானே!!! …அங்கிருந்து நான் சென்றுவிடலாமா? வேண்டாமா என்று எனக்குள் ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்ததுகொண்டிருந்தது… இறுதியில் அவர்களின் முன் நின்று என் மனதில் இருப்பதை சொல்வதே சரி என்று எண்ணம் உதிக்க ஒரு கணம் கூட தாமதிக்காமல் அதை செயல்படுத்தியும் விட்டிருந்தேன்.

“ அத்தை … ஒரு நிமிஷம் … நான் உங்க கூட கொஞ்சம் பேசனும்..." என்ற என்னை ஒரு முறை கூர்மையாக நோக்கினார். அவருடைய முகத்திலிருந்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய இயலவில்லை . இவர் இப்பொழுது என்னை பேச சொல்கிறாரா இல்லையா? … இந்த வெற்றுப்பார்வைக்கு என்ன அர்த்தம்" என்று குழம்பிக்கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த நாற்காலியை நோக்கி நகர்ந்தவர் அதில் அமர்ந்தார்.

என் பேச்சை மேற்கொண்டு கேட்க அவர் தயார் என அவரின் செய்கை எனக்கு உணர்த்த என் தைரியத்தை எல்லாம் ஒன்று சேர்த்து அவரிடம் பேச ஆரம்பித்தேன் .


“ அத்தை நானும் உங்க மகனும் காலேஜ் டேஸ்ல இருந்தே பழகிட்டு இருந்தோம். இந்த விஷயம் எங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சு என்னை வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைச்சுட்டாங்க … அதுமட்டுமில்லாமல் என் விருப்பத்துக்கு மாறா வேற கல்யாணத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டாங்க உங்க மகனைத் தவிர வேற யாரையும் மனசளவுல கூட நினைக்க என்னால முடியல. …எங்க வீட்ல எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேன் ஆனா கொஞ்சம் கூட மனசிரங்கல .நாங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் நீ எங்க பொண்ணுண்ற அந்தஸ்துல இருக்க முடியம் அப்படியில்லாம உன் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு இந்த வீட்டிலயும் சரி சொத்துலயும் சரி இம்மியளவு கூட உரிமையில்லை ஏன் எங்க வாழ்க்கையிலயும் உனக்கு இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. வீட்ட விட்டும் அனுப்பிட்டாங்க … நான் நடந்த எல்லா விஷயத்தையும் ஹரிகிட்ட சொன்னேன் .


இத நான் சொல்லும் போதும் கூட எங்க வீட்ல வந்து பேச ஹரி தயாரதான் இருந்தார் . ஆனா எங்க வீட்ல இவர் பேச்சை கேட்க தயாராவே இல்லை. அதுவும் இல்லாம எங்களோட காதலை தப்பா பேசவும் என்னை அழைச்சிட்டு வந்துட்டாரு.


என்னை கல்யாணம் பண்ணாம கூட்டிட்டு வருவதை விட கௌரவமா அவரோட மனைவியா கூட்டிட்டு வர்றதுதான் உங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் மரியாதைன்னு நினைச்சி என்னை கல்யாணம் பண்ணி எனக்கு மனைவிங்கிற ஒரு ஒரு அங்ககீகாரத்தோட அவர் இங்க அழைச்சிட்டு வந்தார் . அவர் மேல எந்த தப்பும் இல்லை அத்தை . என்னையும்.இந்த குடும்பத்துல ஒருத்தரா சேர்த்துக்குங்க அத்தை ப்ளீஸ்... எங்களைப் புரிஞ்சிக்கோங்க" என்று என் தரப்பு நியாயத்தை விளக்கினேன்.


இதுவரையிலும் நான் சொல்வதை செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர் இறுதி வார்த்தையில் போதும் என்று நிறுத்து என்று எழுந்து நின்றிருந்தார். அவர் தோரணை எனக்கு சற்று மிரட்சியைத் தர அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


“ஹரி தப்பு செய்யமாட்டான்னு எனக்கு தெரியும். ஏதோ ஒரு அவசர நிலையில் தான் இந்த கல்யாணம் நடந்து இருக்கும்னு நான் நினைச்சேன் . என் யூகம் சரியாதான் இருக்கு. இருந்தும் ஒரு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கனும். எங்களுக்கும் இதுல வருத்தம் இருக்கத்தான் செய்யும் அந்த கோபத்தை எல்லாம் சட்டுன்னு போக்கிட முடியாது அந்த கோபம் நியாயமானது காலம் அதை மறக்க செய்யும். எப்போ என் மகன் உன்னை இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்தானோ அப்ப இருந்து நீதான் இந்த வீட்டுக்கு மருமக... இதை யாரலும் மாத்தவும் முடியாது , மறுக்கவும் முடியாது”. என்றவர் இத்துடன் பேச்சு முடிந்தது என்ற பாவனையில் அங்கிருந்து அகன்று விட்டார்.

அவரின் அந்த கடைநிலை வரிகள் எனக்கு மகிழ்ச்சியையே ஏற்பத்தியது . காலம் காயத்தை ஆற்றும் ஆகச்சிறந்த மருந்து என்ற வரிகள் என் நினைவுக்கு வரவே எல்லாம் கூடிய விரைவிலேயே சுமூகமாகிவிடும் என்ற நம்பிக்கை கீற்று ஒளிவீச உற்சாகமான மனநிலையிலேயே எங்களறைக்குச் சென்றேன்.

ஹரி வாட்ரோபில் அவரின் உடுப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார் . அவரை அப்படியே சென்று பின்பக்கத்திலிருந்து அணைத்துக்கொண்டேன் . ஒரு விநாடி சற்று அதிர்ந்தவர் பின் அது நான்தான் என்பதை உணர்ந்து “ என்ன மேடம் ரொமான்ட்டிக் ஸ்டோரி படிச்சீங்களா …. மார்னிங்கே ஒரே ஹக்கிங்கா இருக்கு என்றபடி என்னை நோக்கி திரும்பியவர் என்னை இன்னும் இறுக அணைத்தார்.

“ப்ச்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்ல… “ என்றபடி லைப்ரரியில் எனக்கும் அவரின் அம்மாவிற்கும் இடையில் நடைபெற்ற சம்பாஷணைகளை கூறிமுடித்தேன்.

“ ம்ம்ம்… பரவாயில்லையே… இதைத்தான் நேத்து என் அம்மாக்கிட்ட நானும் சொல்ல போனேன் … எங்க நான் சொல்றதைக் கேட்க அவங்க ரூம விட்டு வந்தாங்க ? நான் போய் கதவைத் தட்டினாலும் “கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க… நான் எதையும் கேக்குற மனநிலையில இல்லை” ன்னு சொல்லி கதவைத் திறக்கவே இல்ல …. ஆனா இப்ப என்னடான்னா மாமியாரும் மருமகளும் இவ்வளவு பேசியிருக்கீங்க … பேஷ் பேஷ்” என்று நக்கலடித்தார் .

“ வெய்ட் ஃபார் சம் மினிட்ஸ் பாஸ் … இன்னும் அவங்க நம்மை முழுசா மன்னிக்கலை … ஓவரா நக்கலடிக்காதீங்க “ என்று அவரின் கிண்டல் பேச்சிற்கு அணைக்கட்டி எங்கள் அணைப்பைத் தளர்த்தினோம் .

சிறிது நேரத்திற்கெல்லாம் நாங்கள் கீழே சென்றுவிட்டோம் வழக்கம்போல் டைனிங் டேபிள்லுக்கு அவரின் அத்தை , மாமா ,அத்தை மகன் , அண்ணா, அண்ணி , அண்ணனின் பத்து வயது பெண் குழந்தை , ஆறு வயது ஆண் குழந்தை , சித்தி , சித்தப்பா , அவர்களின் மகன், மகள் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர் . ஆனால் அவர்களில் முகத்தில் நேற்றிருந்த அந்த முகச்சுளிப்பு சற்று மட்டுப்பட்டிருந்தது. நந்திதா சற்று தாமதமாகத்தான் வந்தாள் . அவளைப்பார்த்தவுடன் அதுவரை மறந்துவிட்டிருந்த நேற்றைய நிகழ்வுகள் நினைவிற்கு வந்தன. அவளைப் பார்க்கும்போது கோபம் வந்தாலும் அடுத்தமுறை அவள் என்ன செய்தாலும் கையும் களவுமாக பிடித்துவிடவேண்டும் என்று கறுவிக்கொண்டேன் . அடுத்த சில விநாடிகளில் அவரின் அம்மாவும் சாப்பிடும் அறைக்கு விஜயமானார் . பெரிய மேசையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார் . “ உங்க எல்லார்கிட்டயும் முக்கியமான விஷயத்த பத்தி பேசனும் . சீக்கிரம் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சிட்டு ஹாலுக்கு வந்துடுங்க “ என்று கூறிவிட்டு சாப்பிடத் துவங்கிவிட்டார் .


அனைவரின் முகத்திலேயும் இவர் என்ன விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மின்னியது . அதற்காகவே வேகவேகமாக உணவருந்தியவர்கள் உடனே ஹாலிற்குச் சென்று ஆஜர் ஆகினர் . எனக்கும் ஆர்வம் அதிகப்படியாகவே இருந்தது . நானும் என் உணவினை அவசர அவசரமாக சாப்பிட்டேன் .

சற்று நேரத்திற்கெல்லாம் கூடத்திற்கு வந்த என் மாமியார் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார் .


ஒருமுறை அமைதியாக அங்கிருந்த அனைவரின் முக பாவங்களையும் கண்களால் அளந்து கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே மாமனார் அமர்ந்திருந்தார். மாமனார்,"சுபத்ரா…ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு எல்லாரையும் வரச் சொல்லிட்டு இப்ப அமைதியா இருக்கியே… எல்லாரும் எவ்வளவு ஆவலா உன்னையே பார்த்துட்டு இருக்காங்க பாரு"என அவரைப் பார்த்துக் கூறினார்.


மாமனாரின் சொல்லிற்கு தலையசைப்பையே பதிலாகத் தந்தவர் அனைவரையும் நோக்கி. “ உங்க எல்லாரையும் இங்க வரச்சொன்னது நம்ம ஹரியோட கல்யாணத்தைப் பத்திப் பேசத்தான் . என்னதான் அவன் நமக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த கல்யாணம் கல்யாணம்தான் . அதை யாராலும் மாத்த முடியாது . அதனால ஹரிக்கும் வான்மதிக்கும் வெட்டிங் ரிஷப்ஷன் அரேன்ஜ்ச் பண்ண முடிவு பண்ணிருக்கேன் . நம்ம சொந்தக்காரங்க , தெரிஞ்சவங்க , கம்பெனில வேளை செய்றவங்கன்னு எல்லாரையும் அழைச்சு ரொம்ப கிராண்டா இந்த ஃபங்ஷனை நடத்தனும் . நான் பண்டிதர் கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் அவர் வர 24 ந் தேதியைக் குறிச்சு கொடுத்துருக்காரு . இன்னும் இரெண்டு வாரம்தான் இருக்கு . அதுக்குள்ள எல்லா வேலைகளும் முடிஞ்சிருக்கனும் “. என்று கூறிவிட்டு அனைவர் முகத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மற்றவர்களின் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
 

Author: Sankaridayalan
Article Title: 4. என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN