பாகம் 14

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சில்லென்ற சாரல் முகத்தில் பட,கடந்த காலம் மறைந்து நிஜ உலகிற்கு வந்தாள் அர்மிதா. மையிட்ட விழிகளில் நீர் கோடுகளாய் இறங்கியிருப்பதை உணர்ந்தாள்.அப்பொழுது அருகில் வந்த ரேயன் அர்மியின் முக வாட்டத்தில் அனைத்தையும் புரிந்துக்கொண்டான்.
"அர்மி,இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல, உன் மனசு இன்னமும் அரவிந்தனைதான் நெனைச்சிட்டு இருக்கு,ரெண்டு பேர் மனசிலும் காதல் அப்படியே இருக்கு.உன் பிடிவாதத்தை விட்டு அரவிந்தன் கூட பேசலாம் இல்லையா?" தன்மையாய் உரைக்க, அர்மிதா அவனை ஏறிட்டாள்.

"வேண்டாம் ரேயன், முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்" பட்டென சொல்லி விட்டு அர்மிதா அவ்விடம் விட்டு அகன்றாள்.
மறுநாள் மங்கல வாத்தியங்களுடன் காலை புலர, நிலாவின் திருமணம் களைக்கட்ட தொடங்கியது.பெண்கள் பட்டு புடவைகளில் ஜொலிக்க, அவர்களுக்கு இணையாய் ஆண்களும் பட்டு வேஷ்டி, சட்டையில் களமிறங்கினர்.

காலையில் சிம்மி தன் அறையில் தான் எடுத்து வைத்த சேலைக்கு பதிலாய் அன்று கடையில் அவள் ஆசையாய் பார்த்து வைத்து விட்ட அதே பிங்க் நிற காஞ்சிபுரம் மெத்தை மேல் இடம்பிடித்திருப்பதைக் கண்டாள் . அதற்கு உரிய நகைகளும் அடக்கமாய் அதன் பக்கவாட்டிலிருக்க, இது கண்டிப்பாய் அனீஷின் வேலை என்பது சிம்மிக்கு புரிந்துப் போயிற்று.மனதிற்குள் உற்சாகம் பரவ ஆவலாய் அந்த பட்டை உடுத்திக்கொண்டாள்.

இடையில் வந்த தோழிகளும் பொன்னிற பட்டிலும்,அரக்கிலும் அசத்த , சிம்மிக்குள் சந்தோசம் குமிழிட்டது.தன் திருமணத்தைக் கூட மன நிறைவாய் இரசிக்காமல் இருந்தவள், நாத்தனார் நிலாவின் கல்யாணத்தை வெகுவாய் இரசித்தாள்.இது போல தன் தோழிகளுக்கும் விரைவில் கல்யாணம் நடக்க இறைவனை வேண்டிக் கொண்டாள்.

வழக்கம் போல் இவர்களை ஜொல்லு விட அனிஷ் அண்ட் தி கேங்க் ரெடியாக, சிரிப்பும் கேலியுமாய் கல்யாணம் நிறைவாய் நடந்தேறியதுஅடுத்ததாக நிலாவின் தேன் நிலவு பயணம் பற்றி பேச்சு எழ, அனைவரும் ஒருமனதாய் விஸ்லரை தேர்ந்தெடுத்தனர்.
நிலா அண்ணன்கள் வந்தால் ஒழிய, எங்கும் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க, புதிதாய் திருமணம் முடித்த அனிஷ்-சிம்ரதி தம்பதியும் தேன் நிலவு சென்றது போல் இருக்கும் என்று தன் அன்பு அண்ணனுக்காய் நிலா யோசித்து சொன்னது அனைவருக்கும் பிடித்திருந்தது.

தோழிகள் வந்தால்தான் தான் வருவதாய் சிம்மி அடம் பிடிக்க, ஒருவழியாக மாயாவையும் அர்மியையும் நிலா சம்மதிக்க வைத்தாள். இதில் அதிகம் உற்சாகம் கொண்டது என்னவோ, மிஸ்டர் அரவிந்தன் அண்ட் அவன் இளவல் விஸ்வாமித்திரனும்தான்.
தனிமையில் மூன்று தோழிகளும் "ஹேய் மாயா அர்மி, நாம மூவரும் ஒரு காட்டேஜ்ஜில் தங்கிக்கலாம். அனிஷ் அவர் தம்பிங்க கூட தங்கிக்கிட்டும். நிலாவுக்கு ஹனிமூன் காட்டேஜ் கொடுத்திடலாம்.ரொம்ப நாளாச்சுடி இப்படி நாம நமக்காய் நேரம் செலவிட்டு," ஏக்கமாய் சிம்மி சொல்ல மற்ற இருவரும் மௌனமாய் தலையாட்டினர்.சிம்மி சிப்ஸ் எடுக்க கிச்சனுக்கு சென்றதும், மாயாவும் அர்மிதாவும் வேறு ஒரு திட்டம் தீட்டினர்.

சிம்மியும் அனிஷும் ஒரு காட்டேஜில் தங்கும்படியாகவும், இவர்கள் ஃபேமிலி காட்டேஜில் தங்குவதாய் ஏற்பாடு செய்ய அர்மிதா மித்திரனிடம் சொல்லி விட்டாள். மாயா கூட வருதாய் கேட்ட நாளிலிருந்து மித்திரன் மது உண்ட வண்டாய் இருக்க, உற்சாகமாய் தலையாட்டினான்.மறுநாள் எல்லோரும் விஸ்லருக்கு பயணமாயினர். விண்டர் சீசன் ஆரம்பம் என்பதால் எங்கும் பனிப் போர்வையாய் நிலத்தை மூடியிருந்தது.

இவர்களின் காட்டேஜ் இரவில் ஒளி விளக்கில் இரம்மியாய் ஜொலிக்க, மாயா-மித்திரனின் கை வண்ணம் குடிலின் உள்ளே வெளியே தெரிந்தது.அதன் அழகில் சிம்மி சொக்கித்தான் போனாள். மாயாவை மனம் திறந்து பாராட்டவும் செய்தாள்.எது எப்படி இருந்தாலும் மித்திரனின் கைங்கரியத்தால் சிம்மி அனிஷுடன் தங்கும்படியாய் நேர்ந்தது.

மாயாவும் அர்மியும் ஓர் அறையிலும், மித்திரன் அரவிந்தன் மற்றொரு அறையிலும் தங்கிக் கொண்டனர். குளிர் உடலை வாட்ட, பயண களைப்பும் சேர அனைவரும் இரவு உணவிற்கு பின் கம்பளிக்குள் சுருண்டனர். மறுநாள் தோழிகளை சந்திப்பதாய் சொல்லி விட்டு சிம்மியும் அனிஷுடன் உறங்க சென்று விட்டாள்.மறுநாள் காலைப் பொழுது இரம்மியமாய் விடிந்தது அனைவருக்கும்.காலை வெய்யில் இதமாய் இருந்தது. மாயாவும் அர்மிதாவும் முன்பே பேசி வைத்தது போல சிம்மிக்கு முன்பாகவே கிளம்பிவிட்டிருந்தனர்.

அர்மிதா ஐஸ் ஸ்கேட்டிங்கும் மாயா கொண்டோலாவில் விஸ்லரை சுற்றிப் பார்க்கவும் கிளம்பிவிட,தான் தனித்து விட்டதை சிம்மி மாயாவின் கையெழுத்தில் இருந்த குறிப்பு மூலம் அறிந்தாள்.எப்பொழுது தன்னை விட்டு விட்டு இந்த மந்திகள் ஊர் சுற்றக் கற்றுக்கொண்டன என தெரியாமல் சிம்மி விழித்துக் கொண்டிருக்கையில் பின்னிருந்து ஒரு குரல் மெலிதாய் காதில் கசிவதை உணர்ந்து திடுக்கிட்டாள். திரும்பினால் அவளுடைய உத்தம கணவன் அனிஷ் நின்றிருந்தான்.

"என்னமா மகாராணி,எங்கே உங்கள் தோழிகளைக் காணவில்லை, அந்தப்புரத்தில் எங்கும் மறைந்திருக்கின்றார்களா?
அன்றி மனதை அள்ளும் பனிக் குளிருக்கு தங்கள் கண்களில் இடம் தந்து மஞ்சத்தில் புரண்டுக் கொண்டிருக்கின்றார்களா?"

புராண காலத்து பாணியில் அனிஷ் பேசியது சிம்மிக்கு சிரிப்பை வரவழைத்தாலும் தன்னை மகாராணி என்று எதை வைத்து குறிப்பிடுகின்றான் என்பது தெரிந்து நாசி சிவந்தது.

"போதும் உங்கள் கிண்டலும் கேலியும்.இந்த மந்திகள் என்னை விட்டுட்டு எங்கயோ போயிட்டாளுங்க"கோவமாய் வார்த்தைகள் வர அனிஷ் அட்டகாசமாய் சிரித்தான்.

"இரு..இரு.. மந்திகளா?மந்தினா குரங்கு.. அப்படினா மாயா அண்ட் அர்மி குரங்குகள். குரங்குகளின் தோழி நீ?
அப்போ நீயும் குரங்கா சிம்மி? போயும் போயும் ஒரு குரங்கிட்கா நான் மாலையிட்டேன்?"
அப்பாவியாய் அனிஷ் கேட்க சிம்மி சிம்ம ரூபம் எடுத்தாள்.


"போதும் நிறுத்துங்க, நான் மந்தினா எனக்கு மாலையிட்ட நீங்கள் என்ன மகாராஜாவா? மந்திக்கு ஜோடி இன்னொரு மந்தியாகத்தானே இருக்க முடியும்?அனிஷ் மங்கி...தாடி வெச்ச கேடி மங்கி.. " அமர்த்தலாய் விளக்கி முடித்தாள்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN