மாயம் 36

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாமிருவரும்
இருபுறமிருக்க
நம் ஜீவனிரண்டு
ஒன்றாய்
கலந்து
நம் உயிர்ப்பிற்காய்
தவம் கிடக்கிறது.....

வீட்டிற்குள் வந்த ஹேமா ஹாலில் அமர்ந்திருந்தவர்களை கண்டு அதிர்ந்துவிட்டாள்... ஹாலில் ராதா மற்றும் ராஜேஷ்குமாருடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர் ஹேமாவின் பெற்றோரான ராஜரட்ணமும் சிவரஞ்சனியும்...

தன் அன்னை தந்தையை கண்டதும் அவர்களது அருகில் ஓடிச்சென்றவள் தன் அன்னையை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினார்... சிவரஞ்சனி ஹேமாவை இறுக அணைத்துக்கொள்ள ராஜரட்ணமோ அவளது தலையை தடவியபடியிருந்தார்... பலநாள் ஹேமா தவித்திருந்த அவள் அன்னையின் அணைப்பு எதிர்பாராது அவளுக்கு இன்று கிட்டியது.... சில நிமிடங்கள் அழுதவளை கண்ட பெற்றவரிருவருக்கும் கண்கள் கலங்கியது....

ஹேமாவிற்கு எதிர்பாரா விதத்தில் திருமணம் நடந்ததும் அவளது வாழ்க்கையை எண்ணி நொந்தவர்கள் அங்கிருந்து உடனே கிளம்பியவர்கள் தாங்கள் குடியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு தலயாத்திரை சென்றுவிட்டனர்... தன் மகளின் வாழ்வை கடவுளை தவிர வேறு எவராலும் காப்பாற்ற முடியாதென எண்ணி கோயில் குளமென்று சுற்றிக்கொண்டிருந்தவர்களை டிடெக்டிவ் ஏஜென்ட் மூலம் கண்டுபிடித்த ரித்வி அவர்களிடம் ஹேமாவிற்கு நடந்தவற்றை கூற அவர்களோ முற்றாக உடைந்துவிட்டனர்... தங்களது செல்லமகளின் வாழ்வு இவ்வாறா சீர்கெடவேண்டுமென்று எண்ணி அழுதார்கள்... அழுதவர்களை ஆறுதல் படுத்தியவன் ஹேமா இப்போது ஶ்ரீ வீட்டில் பாதுகாப்பாய் இருப்பதை தெரிவித்தவன் ஹேமாவின் பாதுகாப்பிற்கு தான் பொறுப்பேற்பதாக கூறி அவர்களை ஶ்ரீயின் வீட்டிற்கு வரவழைத்திருந்தான்..

அவர்களுக்கு தனிமை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக ராஜேஷ்குமார் ஶ்ரீயிடம் அவர்களை அறைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.. ஶ்ரீயும் அவர் சொல்படி தனதறைக்கு அழைத்து சென்றவள் குடிக்க எடுத்துவருவதாக கூறி கதவை அடைத்துவிட்டு வெளியே வந்தாள்..... ஶ்ரீ வெளியில் சென்றதும் ஹேமாவை அணைத்தபடியே அவளது அன்னை அவளது நலம் விசாரிக்கத்தொடங்கினார்..

“டாக்டர்ட செக்கப்பிற்கு எல்லாம் போனியா மா... ?? டாக்டர் என்ன சொன்னாங்க?? குழந்தை நல்லா ஹெல்தியா இருக்கா??”

“ஆமாமா... இப்போ ராஜ் கூட செக்கப்பிற்கு போயிட்டு தான் வந்தேன்.... வர்ற வழியில...” என்றவள் நடந்ததனைத்தையும் ஒரு நடுக்கத்துடன் கூறி முடித்தாள்...

அதை கேட்டிருந்த ஹேமாவின் தந்தை
“அந்த ராஸ்கலுக்கு இன்னமும் பழிவெறி அடங்கலையா?? உன்னை இவ்வளவு நாள் கஷ்டப்படுத்துனது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டான...?? எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை கொன்னுபோட்ட கூட என்னோட ஆத்திரம் தீராது...” என்று கண்களில் கோபத்துடன் உறுமியவரை அணைத்துக்கொண்ட ஹேமா..

“நீங்க டென்ஷன் ஆகாதீங்கபா... அவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்... ராஜ் நிச்சயம் அவனை சும்மாவிட மாட்டாரு...” என்று தெளிவாய் உரைத்தவளின் தலையை தடவியபடி

“தெரியும்மா.... ஆனா என் கண்ணுமுன்னாடியே என்னோட பொண்ணு வாழ்க்கையை சிதைச்சவனை என் கையால தண்டிச்சா தான் என்னோட மனசுக்கு நிம்மதி... நீ அனுபவிச்ச எல்லா கஷ்டத்துக்கும் அந்த அயோக்கியன் பதில் சொல்லியே ஆகனும்...” என்று குறையாத கோபத்துடன் உரைத்தவரை அமைதிப்படுத்த எண்ணி ஹேமா

“ஏன்பா என்னையும் உங்க பேரக்குழந்தையும் பார்க்க வந்தீங்களா??? இல்லை அந்த அயோக்கியவனை பத்தி பேச வந்தீங்களா??? உங்களுக்கு என்மேலயும் உங்க பேரக்குழந்தை மேலும் கொஞ்சம் கூட பாசமே இல்லை போங்க...” என்று போலியாய் முறுக்கிக்கொண்டவளின் எண்ணம் புரிந்த அவள் தந்தை

“எனக்கு என் பொண்ணும் அவளோட பொண்ணும் தான் முக்கியம்...... எனக்கு அவங்க தான் உலகம்.. என்றைக்கும் என் பொண்ணுக்கும் அவளோட பொண்ணுக்கு நான் துணையா இருப்பேன்... என்னோட பாசம் மொத்தமும் உங்க இரண்டு பேருக்கும் தான் சரியா??” என்று ஹேமாவின் தலையை கோதி அவளது தந்தை உரைக்க அவளோ

“பார்த்தியாமா..எனக்கும் என்னோட பாப்பாக்கும் மட்டும் தான்... உனக்கு ஒரு பீஸ் கூட இல்லைனு அப்பா சொல்லிட்டாரு.... நல்லா நியாபகம் வச்சிக்கோ..” என்று ஹேமா கூற ராஜரட்ணமோ பரிதாம முழிக்க அவரது பார்வையில் ஹேமா சிரிக்கத்தொடங்கினாள்... நெடுநாட்களுக்கு பிறகு தன் மகளின் சிரிப்பை கண்ட பெற்றவர்களுக்கு மனதிலிருந்த பெரும் பாரமொன்று கீழிறங்கியதாய் உணர்ந்தனர்.. இவ்வாறு மகிழ்ந்திருந்தவர்களை உணவருந்த வருமாறு அழைத்தாள் ஶ்ரீ...

ஹேமா குளித்துவிட்டு வருவதாக கூற ராஜரட்ணம் மட்டும் உணவருந்த செல்ல ஹேமாவுடன் வருவதாக கூறி சிவரஞ்சனி அறையிலேயே இருந்தார்...
ஹேமா வந்ததும் அவளை உணவுண்ண அழைக்க அவளோ தான் ராஜுடன் உணவருந்திவிட்டு தான் வந்ததாக கூற அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு சிவரஞ்சனியும் அறையிலிருந்து வெளியேறினார்..

வெளியே ராஜரட்ணமும் ராஜேஷ்குமாரும் உணவருந்திவிட்டு ஹாலில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்க டைனிங் டேபிளில் ஶ்ரீயும் அனுவும் உணவருந்திக்கொண்டிருக்க அவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார் ராதா....

சிவரஞ்சனி வந்ததும் ஹேமாவை விசாரிக்க அவள் உணவருந்திவிட்டு வந்ததாய் கூற அவரையும் உணவருந்த அமரச்சொன்னார் ராதா... சிவரஞ்சனியோ தான் ராதாவுடன் உணவருந்துவதாக கூற இளசுகள் இரண்டும் தம் உணவை வேகமாக முடித்துவிட்டு எழுந்து செல்ல ராதாவும் சிவரஞ்சனியும் உணவருந்த அமர்ந்தனர்.

உணவருந்திக்கொண்டே சிவரஞ்சனி ராதாவிடம்
“ உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுனு எனக்கு தெரியல ராதா...நீயும் உன் குடும்பமும் இல்லாட்டி என் பொண்ணோட நிலையை நினைச்சிகூட பார்க்கமுடியல..”

“என்ன ரஞ்சு நன்றி அது இதுனு.... அவ உனக்கு மட்டும் பொண்ணு இல்லை.. எனக்கும் பொண்ணு தான்... இதே ஶ்ரீயிற்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருந்தா நீயும் அண்ணாவும் அவளை பார்த்துக்கிற மாட்டீங்களா??”

“ராதா அப்படியெல்லாம் சொல்லாத... நல்லது நடக்கப்போற வீட்டுல ஏன் இப்படி சொல்லுற??? உன்னோட நல்ல மனசுக்கு அப்படி எதுவும் நடக்காது.... நாங்க எந்த ஜென்மத்துல பண்ண பாவமோ இப்போ எங்க பொண்ணை இப்படி போட்டு வாட்டுது...”

“ரஞ்சு... அப்படியெல்லாம் இல்லை ரஞ்சு.. ஏதோ நேரம் சரியில்லை.. அதான் இப்படி நடந்துடுச்சி.. ஆனா உங்க ரெண்டு பேரோட நல்ல மனசால தான் ஹேமா நம்மகிட்ட பத்திரமா திரும்பிவந்துட்டா.... இனிமே எல்லாம் நல்லதா தான் நடக்கும்.... நீ எதுக்கும் கவலைப்படாத....”

“நீ சொல்லுறமாதிரி நடந்தா அதை விட எனக்கு வேறொரு சந்தோஷமும் இல்லை... என் பொண்ணு சந்தோஷமா இருக்கனும்... அதுதான் என்னோட ஒரே ஆசை....”

“நடக்கும் ரஞ்சு.... நம்ம ஹேமாவிற்கு நாம இன்னொரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுத்து அவளும் புருஷன் குடும்பம் குழந்தைனு சந்தோஷமா இருக்கதை நாம பார்க்கத்தான் போறோம்...”

“எனக்கும் அந்த ஆசை தான்.... அந்த தம்பி ஹேமாகிட்ட பேசுறேனு சொன்னாரு.... ஆனா இவ ஒத்துப்பாளானு தெரியலையே...”

“அதெல்லாம் ஒத்துப்பா ரஞ்சு.. அப்படியே ஒத்துக்காட்டியும் நாம ஒத்துக்க வைப்போம் ரஞ்சு... நீ கவலைப்படாத...”

“இல்லை ராதா.. உனக்கு இவளை பத்தி தெரியாது... இவ ஏதாவது முடிவெடுத்துட்டா இவளை மாத்துறது கஷ்டம்... ஏதாவது தப்பா யோசிச்சிட்டானா?? அதுவும் இந்த மாதிரி நேரத்துல.... அது தான் கொஞ்சம் பயமா இருக்கு...”

“அதெல்லாம் தப்பா எதுவும் நடக்காது.... நீ எதுக்கும் பயப்படாத.... காய்ச்சல் வந்தா கசப்பா இருந்தாலும் கசாயம் குடிச்சிதான் ஆகனும்... அதுனால அவ பிடிவாதம் அது இதுனு நீ பயப்படாத பார்த்துக்கலாம்...” என்று ராதா கூற அதை ஏற்றுக்கொண்ட சிவரஞ்சனியும் உணவை உண்டு முடித்தனர்...

இவ்வாறு ஒரு வாரம் கடந்திருக்க அன்று காலையிலிருந்தே ஹேமாவிற்கு ஒரு வித இனம்புரியாத சஞ்சலம்... ரஷ்யா செல்வதாக கூறிச்சென்ற ரித்வியும் இந்த ஒரு வாரமாய் தொடர்புகொள்ளவில்லை.... இவள் முயற்சித்தபோதுமே அவனை தொடர்புகொள்ளமுடியவில்லை... ஶ்ரீயிடம் விசாரிக்கலாம் என்றால் அவளோ குதர்க்கமாய் கேள்விகேட்டு திணறடித்துவிட்டாள்... ஆதலால் அவளிடமும் கேட்கமுடியவில்லை... ரித்வியின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஹேமாவும் அவளது பெற்றோரும் ஶ்ரீயின் வீட்டிலேயே தங்கியிருந்தனர்... சிவரஞ்சனியும் ரித்வி பற்றி ஹேமாவிடம் விசாரிக்க ஹேமாவால் சரியான பதிலொன்றை கூறமுடியவில்லை.. ரித்வி கூறி சென்ற காரணத்தை கூறியவளுக்கு அதற்கு பின் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியவில்லை....

இந்த ஒருவாரகாலமாய் ரித்வியின் அழைப்புக்காக ஏங்கியிருந்தாள் ஹேமா.. ஆனால் அழைப்பு தான் வந்தபாடில்லை.. இன்று இவ்வாறு மனச்சஞ்சலமாய் இருக்க தன் அன்னையை துணைக்கு அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றாள் ஹேமா..

ஶ்ரீயை அழைக்க அவளோ ஏதேதோ காரணங்களை சொல்லி வரமறுத்துவிட்டாள்.. வழமைக்கு மாறாக அவள் முகத்தில் ஏதோ பதட்டம் தெரிய அதை விசாரிக்க முயன்ற ஹேமாவிடம் ஏதேதோ காரணங்கள் அவளை கோயிலுக்கு செல்லுமாறு கிட்டத்தட்ட விரட்டினாள்... அவளது செயற்பாடுகளில் சந்தேகம் எழுந்தபோதிலும் கோவிலுக்கு சென்று வந்ததும் விசாரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் தன் அன்னையுடன் கோவிலுக்கு புறப்பட்டாள்..
ஆட்டோவில் செல்லும் வழியில் ஹேமாவிற்கு தலை சுத்தலாய் இருக்க அதை தன் அன்னைக்கு கூறியவள் மறுபடியும் வீட்டிற்கு செல்லலாம் என்று கூற ஆட்டோ மீண்டும் ஶ்ரீயின் வீட்டை நோக்கி சென்றது..

வீட்டிற்கு வந்தவள் வாசலில் ஒரு ஓரமாய் போனில் யாருடனோ மும்முரமாய் பேசிக்கொண்டிருந்த ஶ்ரீயின் அருகில் சென்றவளுக்கு காதில் விழுந்த வார்த்தைகள்
“இப்போ ரித்வி அத்தான் எப்படி இருக்காரு...?? டாக்டர் என்ன சொன்னாங்க???” என்பவையே இதை கேட்டவளுக்கு ஒரு கணம் தலை கிறுகிறுக்க அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாள் ஹேமா....

தன் பின் ஏதோ விழும் சத்தம் கேட்டு திரும்பிபார்த்த ஶ்ரீ ஹேமாவின் அருகில் செல்ல ஹேமாவின் அன்னையும் அருகில் வந்திருந்தார்... உடனேயே இருவரும் சேர்ந்து ஹேமாவை எழுப்பமுயல அவளிடம் அசைவில்லாமல் போக அவளை உடனேயே ஆஸ்பிடலிற்கு அழைத்து சென்றனர்... ஆஸ்பிடல் செல்லும் வழியில் ஶ்ரீ அனுவிற்கு அழைத்து விவரத்தை சொல்ல அவளும் அவர்களை உடனடியாக தான் இன்டர்னாய் வேலை செய்யும் ஆஸ்பிடலுக்கு வரசொன்னவள் அங்கு அனைத்தையும் தயார் செய்தாள்..

ஆஸ்பிடலில் ஹேமா அனுமதிக்கப்பட்டதும் விரைந்து ட்ரீட்மண்ட் ஆரம்பிக்கப்பட்டது... ஒருபுறம் சுயநினைவின்றி ஹேமா ஆஸ்பிடலிலிருக்க மறுபுறம் ரித்வி அடிப்பட்டு ஆஸ்பிடலில் இருந்தான்..

விரும்பிய இதயங்கள் இரண்டின் வாழ்விலும் இனி நடக்கப்போவது என்ன???
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN